காசும் கரியும் !

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா



கரி என்று நான் சொல்வது நிலக்கரியாகும். நாம் போனால் ஒரு பிடி மண் என்பதைப் போன்று பட்டாசுக்களை வெடித்து முடித்தால், குப்பையும் ஒரு பிடிக் கரியும் மிச்சமாகும்.

தீபாவளி வந்து முடிந்தாலும் முடிந்தது, அடுத்த நாள் குப்பை கூட்ட வந்த ஆரஞ்சு நிற உடைக்காரரைப் பார்க்க பாவமாக இருந்தது. தெருக்கோடியில் இருந்த சேட்டுக்காரர் 20,000 வாலா ஒன்றைப் பற்றவைத்ததால் தெருவே நேற்று நின்று வேடிக்கைப் பார்த்தது. குப்பையும் கூடியது. நம்பர் 1 முதல் 20 வரை இருந்த வீட்டுக்களுக்கு முன்னால் அப்படி ஒரு குப்பை !

லஷ்மி வெடி நார்நாராக சிதறி காகிதத் தாள்களாக மாறியிருந்தது. குருவி வெடியின் பச்சை நிறமும், சிங்கம், ரெட் ·போர்ட்டின் சிவப்பு நிறமும், காகித மலைகளாய் மாறியிருந்தது. இது மட்டுமில்லாமல் புஸ்வாணங்கள், சிதறிய ராக்கெட்டுக்கள், கரிந்த ஏரோபிளேன்கள் ( எரிந்து விழுந்த எம்.ஐ.ஜி. விமானங்கள் இல்லை ! சிவகாசிச் சமாசாரம் தான் !) என்று எங்குமெங்கும் கரிந்த வளைந்த கோடுகள்.

பாதியில் நின்று போன புஸ்வானங்கள் ! வெடிக்கலாமா, வேண்டாமா என்று சந்தேகத்தில் மழையில் நசுநசுத்துப் போனச் சின்ன சிவப்பு “பிஜிலி” வெடித் துண்டுகள். சிறு ஆடை உடுத்தி கம்பி மத்தாப்பு போஸ் கொடுத்த கவர்ச்சிக் கன்னிகள் !

கவர்ச்சிக்கன்னி நமிதாவிற்கும் கம்பி கலர் மத்தாப்பிற்கும் என்ன தொடர்பு ! கலர் கனவு காணும் ரசிகர்கள் தான் கூற வேண்டும் ! பத்து வயது என் மகன் தான் கம்பி மத்தாப்பு டப்பாவினைத் திறந்து நமிதாவைப் பிரித்து கம்பிகளைக் கையில் எடுத்தான்.

அது என்னமோ தெரியவில்லை ! வெடிகள் மீதும், பட்டாசுக்கள் மீதும் ஒன்று இந்துக் கடவுள்கள் காட்சியளிக்கின்றனர். விஷ்ணு சக்கரத்தோடு நான்கு கைகளோடு, காட்சியளிக்கின்றார். லெட்சுமி அம்மாளும் அப்படியே ! கிருஷ்ணர் வெடி ! சரஸ்வதி வெடி ! பிரம்மா வெடி ! சிவன் ஆட்டம் பாம் ! குருவி வெடி ! குருவி அழகாக சிறிதாக இருக்கும் பறவை ! அதற்கும் பட்டென்று சத்தத்துடன் வெடிக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை ! சிங்கம் மார்க் பட்டாசு புரிகிறது ! கர்ஜனை செய்யும் சத்தத்துடன் வெடிக்கலாம் ! மயில் மார்க் எதற்கு ராக்கெட்டுக்கும், ஆட்டம் பாமிற்கும்,
புரியவில்லை ! சேவல் பட்டாசு அதை விடத் தமாஷாக இருக்கின்றது.

காளி பயர் வொர்க்ஸ், காளிப் படங்கள் பயமாக உள்ளன. பயங்கரமாக வெடிக்கும் போலும்.

அய்யன் பட்டாசு யாரையோ குறிப்பது போலுள்ளது. அய்யன் “டக்கர்” டா ! சும்மா தூள் கிளம்புது !

அணில் பட்டாசுகளில் பெரிய வெடி விற்றால் சிரிப்பு வருகின்றது. அணில் கேப் வெடி தான் சூப்பர் !

தெருவில் தள்ளு வண்டியில் பெயர் தெரியாதப் பட்டாசுக்கள் விற்றனர். அதில் கோடம்ப்பாக்க அழகிகள் பலர் சிரித்தவண்ணம் பட்டுப் புடவையில் மின்னி தரைச் சக்கரங்களைக் கொளுத்தினர்.

யேசு, மேரி வெடி இருப்பதாகத் தெரியவில்லை !

வெடி விற்கும் போது மெர்குரி வேப்பர் லாம்ப் போட்டு ஜெகஜோதியாக விற்றாலும் வாங்க ஆசையாக இருந்தது. வாங்கி வந்தால் தீபாவளியன்று நல்ல மழை ! அனைத்தும் “பிசு ! பிசு !”

பக்கத்து வீட்டுக் காரன் வெடி பிசு பிசுத்து, நாம் பற்ற வைத்த வெடி வெடித்தால் சந்தோஷம், மகிழ்ச்சி எண்ணிலடங்காது ! மழை அவனை மட்டும் பாதித்து நம் வெடியைப் பாதிக்காமல் அது “டம்”மென்று வெடித்தால் டபிள் பிரமோஷன் சந்தோஷம் நிச்சயம்.

அடுத்தவன் வைத்த வெடிக்கு நாம் பற்ற வைத்தாலும் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அவன் கடையில் நின்று கை காசு செலவழித்து, வீட்டில் பிரித்துத் திரியைக் கிள்ளி, நடுத்தெருவில் செங்குத்தாக நிற்க வைத்து விட்டு, கை நடுங்க நான்கு தடவை அருகே சென்று, வந்து, சென்று வந்து, சென்று வந்து . . .

அப்ப நாம் சட்டென்று பற்ற வைத்து அவர் முகத்தில் “ஹி ! ஹி !” வந்து சென்றால் ஆகா “கரியைப் பூசிட்டோமில்ல ! ” என்று என் முகம் தீபாவளியானது.

அடுத்தவன் காசில் வாங்கும் பட்டாசுக்களை ஓசியாக நாம் வாங்கி, “ராக்கெட்டா, அப்படி வைக்க் கூடாது ! இப்படி கையில் தாங்கி ஜம்மென்று தாழ்வாகப் பிடித்து உயரேத் தூக்கி அடிக்கவேண்டும்!” என்று உதார் விட்டு, ஒரு டஜன் ராக்கெட்டுக்களை விட்டு பக்கத்து வீட்டுப் பெண்மணிகளிடம் “ஹீரோ” பட்டம் பெற்று வாங்கினவன் முகத்தில் கரியைப் பூசினால் அதுவும் தீபாவளி தான் !

“கோஆப்டெக்ஸிலா வாங்கினீர்கள் ? அடடா ! என் கிட்டச் சொல்லக்கூடாதா ? நான் காசிசெட்டி தெருவில் தெரிந்த “ஹோல்சேல் டீலரிடம்” வாங்கி குருவிக் கட்டு பண்டில் 48 இருக்கும், 25ரூ வாங்கியிருப்பேன் !” என்று சொல்லி வயிற்றெரிச்சலை அதிகமாக்கினால் அதுவும் தீபாவளியாகும்.

பணக்காரவீட்டிற்குப்பக்கத்தில் நின்று கொண்டு அந்த வீட்டுப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் ஒடுப்பதாகக் கூறிக் கொண்டு அருகே நின்று மெதுவாக ஆட்டம் பாம், ஆட்டம் பாம் பாக்கெட்டுக்களை உஷார் படுத்தி, நாம் அன்று இரவு நம் வீட்டருகே விட்டு “உதார்!” விட வேண்டும். சரியாகப் பெயர் உச்சரிக்காவிட்டால் நம் நண்பர்கள் “மாமு ! சுட்டுக்கின்னு வந்திட்டாண்டா !” என்று கரியை அப்பினாலும் அப்புவார்கள் !

காசைக் கரியாக்காதீர்கள் ! என்று எவ்வளவு தான் மனைவிகள் எச்சரித்தாலும் வாங்கி விடவேண்டும் !

கரியானால் பெருமை தான் ! எவ்வளவுப் புகை நம் வீட்டிலிருந்து வருகின்றதோ அவ்வளவு பெருமை !

அடுத்த நாள் குப்பையை வாரப்போவது யாரோ கார்ப்பரேஷன் காரன் தானே !

அம்மாக்கள் குப்பை பக்கம் மட்டும் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள் ! புடவைகள் புரளக் கரியாகுமே ! எல்லாம் அப்பா பார்த்துக் கொள்வார் !

“டேய் ! வெடித்தது போதும் ! போய் வெடிக்குப்பைகளை அள்ளு !” என்றால் நம் பிள்ளைகளும் அக்கம் பக்கம் அனைவரும் “கே…” மாதிரி என்னைப் பார்த்தார்கள் ! திரும்பிப்பார்க்காமல் போவார்கள் !

அப்பா இருக்கின்றார் ! அள்ளுவார் !

அப்பாவாக நான் வந்தேன் ! பார்த்தேன் ! நமக்கு இந்தக்குப்பைகளை அள்ளினால் முதுகு பிடித்துக் கொள்ளும் ! நமக்கேன் வம்பு !

கார்ப்பரேஷன் காரன் வருவான் ! அள்ளுவான் !

கார்ப்பரேஷன் காரன் வந்தான் ! இந்தத் தெருவில் இருக்கும் நூறு வீட்டுக்களுக்கு அள்ளினால் ஒரு நாள் ஆகும் ! யார் வந்து பண்ணுவது ! தெருக்கோடி சேட் தான் மனமிரங்கி ஐம்பது ரூபாய் கொடுத்தான் ! அவனுக்கு அள்ளுவோம் ! மற்றவர்கள் கரியானால் எனக்கென்ன ?

போனான்.

ஆக மொத்தம், குப்பைகள் அள்ளப்படாமல் ஒரு வாரம் மக்கி,மண்ணாகி காற்றில் சேட் வீடு பக்கம் ஒதுங்கி அள்ளப்பட்டு ஒரு வழியாக மெதுவாகக் கண் காணாமல் போயிற்று !

நாமும் போய்ச் சேர்ந்தால் கரியாகி இப்படி தான் பத்து நாட்களுக்குள் அனைவரும் நம்மைப் பற்றி மறந்து அவரவர் வேலையைப் பார்க்க போவோம்.

அதற்குள் அனைத்து அல்ப மகிழ்சிகளையும் கொண்டாடுவோம் !

வெடிக்காமல் ஒரு ஒற்றை வெடி ஒன்று வீட்டின் தாழ்வாரம் அருகே இருந்தது.

யாருக்கும் தெரியாமல் அதை பற்ற வைத்தேன் ! நல்ல சத்தத்துடன் வெடித்தது !

திருட்டு “தம்” அடித்த திருப்தியில் நகர்ந்தேன் !

வீட்டருகே, கொஞ்சம் மிச்சம் சொச்சம் குப்பை இருந்தது. காலால் பக்கத்து வீட்டுக்காரன் “கேட்” கிட்டே தள்ளினேன். வேலை முடிந்தது ! அவன் பாங்கில், என்னிடம் அஸிஸ்டெண்ட் வேலை பார்க்கிறான். அப்பாவி !

அவன் காசு கரியாகும் ! குப்பை அள்ளப் படும் !

என் வேலை இனிதே முடிந்தது !

ஆபிசிற்குப் புறப்பட்டேன் !

“உங்க அஸிஸ்டெண்ட் வரலையாம் ! இன்னிக்கு ! தீபாவளியில் வயிற்றுக் கோளாறாம் ! அவன் வேலையும் நீங்க தான் செய்யணும் !” பாங்க் மேனேஜர் உத்தரவிட்டார்.

என் முகம் கரியானது !

kkvshyam@yahoo.com

Series Navigation

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா