வளர்ந்த குதிரை (3)

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

கிருஷ்ணா வெங்கட்ராமா


புல் மேய்ந்து விட்டு ஓடப் பார்க்கிறேன் . . .

என் மனக் குதிரை இடது பக்கம் இரு அடி, நேராக ஒரு அடி என்று மாறி, மாறி பாய்ந்து செல்வதால் படிப்பவர்களும் அவ்வண்ணமே பயணம் செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன் ! எனக்கு இரு கண்கள் இருப்பதால் “ஒன்றரைக் கண்ணனுக்கு ஒரே வழி !” என்று நீங்கள் கூற முடியாது. கடிவாளங்களைப் பற்றுங்கள்! கொடுங்கள் ஒரு உதை இடுப்பில் . . .

பாய்கிறேன் . . .!

பானர்மேன் குதிரைகளில் அமர்ந்து பீரங்களின் மூலம் ஈட்டிய வெற்றி, நாடு முழுவதும் பரவியது. ராபர்ட் கிளைவ் குதிரைகளில் உட்கார்ந்து நமது ஊர் கொய்யாவைக் கடித்துக் கொண்டே சென்னை, கல்கத்தா போன்ற இடங்களில் பிரிட்டிஷ் காலை (குதிரையின் கால்களின் மூலமாக) வேறூன்றச் செய்தார்.

அமெரிக்காவிலும் ஜார்ஜ் வாஷிங்டன் தன் நெல்சன் மற்றும் மெக்னோலியா குதிரையின் மேல் அமர்ந்து கொண்டு பொடாமக் நதியின் ஓரம் தன் படைத் தலைவர்களுடன் விவாதிக் கொண்டிருந்தார். அக்குதிரைகளின் மூலமாகப் பெயரும், புகழும் போர்களில் ஈடுபட்டுச் சம்பாதித்தார்.

கூவன் நதிக்கரையினில் ஆற்காடு இளவரசர், குதிரையில் உட்கார்ந்து கொண்டு அடுத்த மாதம் எப்படியும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து நமக்கு கேளிக்கைகளுக்காக உதவிப் பணம் வந்து விடும் ! கவலையில்லை ! என்று “கூலாகச் சிந்தித்தார்!”. சமாதானமாகப் போனால் இந்நதிக்கரையின் ஓரங்கள் தென்னங்கீற்றுக்களாட, குயில்கள் கூவ சென்னப்பட்டினம் அமைத்திப் பூங்காவாக இருக்கும்” என்று சிந்தித்த வண்ணம் வலம் வந்தார்.

ஜார்ஜ் வாஷிங்டன் பிரிட்டன் ஆர்மியில் இருந்தாலும் அவர்களிடமிருந்து பிரிந்து பிறகு அமெரிக்காவினைப் பிரிட்டனிடமிருந்துச் சுதந்திரமாகச் செயல்பட வைத்தது அக்குதிரைகளின் மூலமாகத் தான் !

இவன் என்ன சொல்றது ! நாம் என்ன கேட்கிறது ! கப்பல்களில் எலுமிச்சை நக்கும் இங்கிலாந்து கடற்படைவீரர்களா நம்மை வெற்றி கொள்வது ? ஒரு கை பார்ப்போமென்று துணிந்தார்.

துணிந்த, வளர்ந்த குதிரைகளால் தான் மனிதர்கள் சொந்தக் கால்களில் நிற்க முடியும்.

“பெண் பார்க்க அரபிக் குதிரை மாதிரி இருக்கிறாள். அவளை ஏறி அடக்க ஒரு ஆண் மகன் வருவான்” என்று பெற்றோர்கள் அறிவுரை சொல்ல சிண்ட்ரெல்லாக்கள் (பெண்கள்) தங்கள் இளவரசரின் வரவை நோக்கி வாசலில் உள்ள வீட்டுக் கூரைகளைப் பார்த்து வழி மேல் விழி வைத்து வந்தனர். குதிரை லாயத்தில் வேலை பார்த்து வந்த ஒரு நகுலன் வந்தான். இளவரசே வருக ! வருக !

“உங்களுக்கு எவ்வளவு குதிரைகள் இருக்கும் ?”

“உங்களுக்கு நிலன் புலன் ஆடு, மாடுகள் இருக்கும் ?”

“இருந்தால் திருமணம். இல்லையென்றால் மறுமணம் ?”

“சொந்தக் காலில் நிற்கத் துப்பில்லை ! பெண் கேட்கிறதாடா உனக்கு ?” பெண்ணின் பெற்றோர்கள் மனப்பாடம் செய்திருக்கும் வசனமிது.

“அப்பா ! எனக்குக் குதிரையோட்டக் கற்று கொடுங்கள் !” நான் போகிறேன் என்று கேட்ட மகளின் வாயை அடைத்து வீட்டுக் குதிரைகளுக்குப் புல் கட்டு போட்டு கழனி நீர் வைக்கப் பயிற்சி கொடுத்து விட்டு, மனப்பாடம் செய்தும் வாய் விட்டு பேசாமல் மெளனம் சாதித்து, பெண் குதிரைகளைக் கோவேறுக் கழுதைகளாக்கிவிடும் சோனிக் குதிரைகள் அனேகம்.

படையெடுத்து, நாகரீகங்கள் நிறுவிய அலெக்ஸாண்டர், மாற்றோரை வெற்றி கொண்ட மொகலாயர்கள், மங்கோலியர்கள், ரோமர்கள், ஸ்பானியர்கள் போன்ற பல்வேறு ஆட்களும் தங்கள் குதிரைகளின் கால்களின் வலிமை கொண்டு இப்பூமியை வளரவைத்துள்ளனர். சாப்பாடு இல்லாத வறிய சூழ்நிலையில் குதிரைகளைச் சுட்டுக் கொன்று சாப்பிடக் கூடச் செய்தனர்.

குதிரையைக் கொன்று அதன் மாமிசத்தைச் சாப்பிடுவது அமெரிக்காவில் குற்றமல்ல. சுவையாக இருக்குமென்று கூட சிலர் கூறுவார்கள். ஆனால் அதைக் கசாப்புக் கடையில் வைத்துக் கொன்று பிறகு விற்பது சட்டப்படி குற்றம். குதிரைகள்(http://www.spectator.org/dsp_article.asp?art_id=7423) மேல் அப்படி என்ன பாசமோ ? இந்துக்கள் பசுக்களைக் கும்பிடுவதும், கோமியத்தை கையில் வாங்கி தலையில் தெளிப்பதும், அதை புசிப்பது பாவம் என்று கருதுவதும் ஒருவகையில் இப்படித் தான். ஜப்பான், செவ்விந்தியர்கள், ஐரோப்பியர்கள் போன்ற பல்வேறு தரப்பட்ட மக்கள் தங்களுக்குழைத்த குதிரைகளை வெளியில் கொட்டிலில் கட்டிவிட்டு, உள்ளே உல்லாச வேடிக்கை மாளிகைகளில், தட்டுக்களில் “சுடச் சுடச்” பறிமாறப்பட்ட குதிரை உணவினை உண்டு களித்தனர்.

கொன்றால் பாவம் தின்றால் போச்சு ! போடி தங்கச்சி ! ( கண்ணதாசன்)

வறிய சூழ்நிலையில் உழவு செய்யும் மாட்டினையேக் கொன்று தின்றும் அவலக் கட்சிகள் உலகில் நடந்தன. வறுமை சூழ் நிலையில் பசுவாவது ! வதையாவது ! வளர்த்த நெல் மற்றும் கோதுமை கொழுத்த குதிரைகளின் கொட்டியலில் கிடந்தன. அரசாங்கங்களும் எடுத்து வேண்டியவர்களுக்கு அளிக்க முயற்சி செய்யாமல் முடங்கிப் போனதால் “பஞ்சம்” வர, ஐ.நா. சபையும் வருத்தம் தெரிவித்து முடங்கி போனது.

போர்க்குதிரைகள் கொட்டிலில் அடைக்கப்பெற்று அமைதி காத்து வந்தன.

மனிதனின் வெற்றிக்குப் பின்னால் குதிரைகள் இருந்தன. வெற்றி பெறும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் உண்டு என்ற நமது நைந்து போன வார்த்தைகள் இல்லை இவை !

“உன்னால் தாண்டா நான் இன்னிக்கு அந்த அரசரின் தலையக் கொய்து அரசாட்சியைக் கைப்பற்றினேன். இந்தா பரிசு ! “ குதிரையத் தடவிக் கொடுக்க அந்த “பேக்கு” வாயில்லாத அப்பிராணி தொண்டைக் கமறலுடன் கனைத்தது.

“ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண்” இந்த நைந்து போன வார்த்தைகளைக் கேட்டு புளகாங்கிதமடைந்த “பேக்கு” வாயில்லாத மனைவியைத் தடவிக் கொடுக்க, அவள் தொண்டைக் கமறலுடன் வாய் தழுதழுக்க, வாயில் முத்தம் கொடுத்து குதிரைய அணைத்துக் கொண்டான் ஆண்.

மகாராணா ராஜா ராணா பிரதாப் சிங் சேடக் என்ற தன் குதிரையில் கம்பீரமாகப் படை வீரர்கள் சூழ ஜெஹாங்கீர் (சலீம்) படையுடன் மோதினார். போரின் போது சாகக் கிடந்த சமயத்தில், தன் எஜமானைக் காப்பாற்ற சமயோசிதமாகப் போரிலிருந்து தப்பி ராணாவைக் காட்டிற்கும், கூடாரத்திற்கும் அழைத்துச் சென்ற அதிசயப் புரவி குறித்து பலரும் வியப்பு கலந்த கதைகளைப் புனைந்துள்ளனர்.

என்ன தான் எஜமான் புல் கட்டு போட்டாலும், தன் கழுத்தைக் கொடுத்து ராணா பிரதாப்பைக் காப்பாற்றீய சேடக்கை நினைத்துப் பார்க்கிறேன். இந்த மாதிரி எத்தனை மனிதக் குதிரைகள் போர் வீரர்களாய் வாழ்ந்து, மீண்டு, அழிந்து, துவண்டு போயிருக்கின்றன ?

சலவைத் தொழிலாளிக்கு மாடாய் உழைத்த கழுதைகளும், பொதி சுமந்த கோவேறுக் கழுதைகளும் எண்ணிலடங்காது ! அழுக்கு மூட்டைகளுடன் போராடிக் கழைத்த சலவைத் தொழிலாளி அவற்றின் நெடி தாங்காமல் கீழே மயக்கம் போட்டு விழ, அவன் செல்லமான கழுதை வந்து அவன் காதில் கர்ண கடூரமாகக் கத்தி அவனை எழுப்பி அவனை வாழ வைத்தது. அந்தச் சத்தம் தாங்க முடியாமல் தாணன் என்னவோத் துணிகளை ஓங்கி கல்லில் அடித்து துவைக்கின்றார்கள் போலும்.

சீ கழுதை ! உன்னை உதைத்தால் கூட கர்ண கடூரமாகக் கத்துவாய் ! அன்பாய் தடவினாலும் அப்படியே செய்கின்றாய். குதிரையைப் பார்த்துக் கற்றுக் கொள்ளேன் !
சீரிச் சிங்காரித்த குதிரையத் தடவிக் கொடுத்தால், எப்படி கம்பீரமாகக் கனைக்கின்றது பார் !

எஜமானிற்கு விசுவாசமாக உழைத்த பெருமாள், எதிரி அரிவாளை வீச “எஜமான் ! நீங்க போங்க நான் இந்த ரெளடிப் பசங்களை பார்த்துக்கிறேன் . . .: என்று உயிருகுயிரான தன் எஜமான் உயிர் காத்தான். கழுத்தில் அரிவாள் வெட்டு வாங்கி உப்பிட்டவருக்கு உழைத்துப் பரிதாபமாகச் செத்தான்.

“விசுவாசி” என்று உச் கொட்டினர்.

சமீபத்தில் தேர்தலில் கூட “விசுவாசமாக” உழைத்த தொண்டர்கள் எவ்வளவு பேர் ?

விசுவாசிடா ! பதவி கூட கேக்க மாட்டான் ! அதனால தான் அவனுக்கு பதவி கொடுக்கலை. கடுக்காய் கொடுக்கப்பட்டது.

“அவனுக்கு ஒரு பதவி போட்டுக் கொடுக்கணும்டா !. அவனில்லாமல் இந்தத் தொகுதி இல்லை !” காது பட பேசிவிட்டு, வேலை வாங்கிக் கொண்டு, கடைசியில் குடும்பத்து தூரத்து சொந்தத்திற்கு காசு அள்ளும் பதவியை விட்டுக் கொடுத்தார் ஓர் தலைவர்.

தான் திருத்த வேண்டிய பரீட்சை விடைத்தாள்களை சின்ன பையனிடம் கொடுத்து விட்டு, “நல்ல சமர்த்து பயன். வருஷக் கடைசியில் நல்ல ஒரு “அவார்டு” கொடுக்க வேண்டும்.” என்று ஐஸ் வைத்து சின்ன பையனிடம் டீச்சர் வேலை வாங்கினாள். கடைசியில் அவார்டும் கிடைக்கவில்லை. மண்ணும் கிடைக்கவில்லை.

சோழ மன்னர் பார்திபனுக்கு உழைத்த பொன்னன் என்ற படகோட்டி ஞாபகம் வருதல்லாவா ? ( நன்றி: பார்திபன் கனவு, கல்கி). பொன்னாக நடித்த எஸ்.வி.சுப்பையா ஞாபகம் வருகின்றது.

விசுவாசி !

அனுமன் கஷ்டப்பட்டு, இலங்கையில் அரக்கர்களுடன் போராடி ராமனையும், இலக்குமனனையும் தன் தோள்களில் தாங்கி பணி புரிந்து, பிறகு பட்டாபிஷேகத்தின் போது சீதை தனக்களித்த மாலையினைக் கடித்துப் பார்த்து, தன் இதயத்தில் ராமன் இருப்பதை உலகிற்கு வெளிக்காட்டி காலடியில் விழுந்து கிடந்தான். என்னே எஜமான் பக்தி ?.

நீ சிரஞ்சீவியாக இருப்பாய் என்று வாழ்த்து கிடைத்தது.

விசுவாசிகள் இல்லையென்றால் உலகமில்லை. மதங்கள் இல்லை. “பரலோகத்தில் இருக்கும் பரிசுத்தமான பரமபிதாவை விசுவாசியுங்கள்” ! சொர்க்கம் கிட்டும் !
நம்ப வேண்டும். அது வாழ்க்கை. குதிரை போன்று ஓட வேண்டும். பாரம் தனைக் காலில் தாங்க வேண்டும். நொண்டித்தால் சுடப்படலாம். அல்லது தீயில் பொசுக்கி தின்பார்கள். பரவாயில்லை. நம்பிக்கையோடு இப்போதைக்குப் புல் தின்று உயிர் வாழலாம்.

விசுவாசிகள்.!

அவள் இல்லயேல் உலகமில்லை. மனைவி மேலுலகம் போனபின்பு புலம்பும் கணவன்மார்கள் அனேகம்.

விசுவாசி !

(மேலும் பாய்ந்து ஓடும் . . . நிற்கும் . . . நடக்கும் . . .)

kkvshyam@yahoo.com

Series Navigation

கிருஷ்ணா வெங்கட்ராமா

கிருஷ்ணா வெங்கட்ராமா