வெள்ளமும் நிவாரணமும்

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

குசும்பன்


(அனைவருக்கும் முன்னோடியாய் திகழ்வதாய் பீற்றிக்கொள்ளும் அமெரிக்காவின் அரிதாரம் கலைய ஆரம்பித்து விட்டது. ஆட்டோமேடிக் ஓட்டு இயந்திரங்களை இந்தியாவில் வந்து ஆராய்ந்து விட்டு ‘நம்மால் முடியாது சாமி ‘ என்று பேக்கடித்தது. கேத்ரீனா, ரீட்டா பிறகு வில்மா என்று மாறி மாறி ரவுண்டு கட்டிய சூறாவளிகளை சமாளித்த விதம் பலரது புருவங்களை உயர வைத்தன…. புயல் வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்கள் இந்தியாவிற்கு புதிதல்ல. வரலாறு காணாத வெள்ளம், இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக ஆழிப் பேரலை என்று தமிழ்நாட்டில் பரபரப்பிற்கு பஞ்சமில்லை. இருப்பினும் அனைத்தையும் விரைவில் துடைத்துப் போட்டு விட்டு நிமிர்வது தமிழனின் அசாத்திய குணம். இதெல்லாம் எப்டிங்க முடியுதுன்னு ஆராய்ந்து அறிய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் முடிவு செய்து அதற்காக ஒரு உண்மை அறியும் குழுவை அமைக்கின்றார். தலைவராக தனது தம்பியும் புளோரிடாவின் கவர்னருமான ஜெப் புஷ்ஷை நியமிக்கின்றார். கூடவே தொண்டரடிப்பொடிகளான கொண்டலீனா ரைஸும், டொனால்டு ரம்ஸ்பெல்டும். அமெரிக்க குழு தமிழ்நாடு வருகின்றது. வழக்கம் போல் வரவேற்க முதல்வர் போகவில்லை. பிரஸிடெண்ட் புஷ் வராததால் கடுப்பாகி அவர் வெக்கேஷனில் போய்விட்டதாய் திராட்சைத் தோட்டத்திலிருந்து வதந்தி. வந்தவர்கள் தமிழ்நாட்டுப் புள்ளிகளை சந்தித்து மூன்று நாள் வட்டமேசை மாநாடு நடத்துவதாய் உத்தேசம். காரணம் கருதி தமிழ்நாட்டுப் புள்ளிகளின் பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது (கேஸ் போட்டுட

ாதீங்கப்பா 🙂 இதோ வட்டமேசை மாநாடு தொடங்குகின்றது)

(முதல் நாள்)

ஜெப்: தமிழகத்தை ஆளும் தானைத் தலைவர்களே வணக்கம். உங்களது திறமை, சுறுசுறுப்பு, பொறுப்பு எங்களை வியப்பில்லாழ்த்துகின்றது. எப்படி முடிகின்றது உங்களால் ?

(தமிழ்ப்புள்ளிகள் ஜெப் வஞ்சப்புகழ்ச்சி செய்கின்றாராவென்று குழப்பமடைகின்றார்கள்)

Slowசனா: (மனதிற்குள்) அய்யோ… கவர்னரு ஜெப் நம்ம அம்மா மாதிரியே எவ்ளோ செகப்பு. ஆனா ரைஸ் பாக்க சகிக்கலியே. முள்ளு முடி மாதிரி தெரியுதே…

லக்கலக்லா: அதெல்லாம் ஒண்ணிமில்லீங்க எல்லாமே அம்மாதாங்க காரணம்.

ரைஸ்: அதெப்படிங்க ரெண்டே நாளில சென்னைக்கு கரண்ட் கொடுக்க முடிஞ்சது ? வில்மா புயல் முடிஞ்சு ஒரு வாரமானாலும் புளோரிடாவுல இன்னமும் இருட்டு கட்டுது.

முந்திரன்: இதென்னங்க பிரமாதம் ? அம்மா நெனைச்சா உலகத்துக்கே கரண்ட் மட்டுமா ஷாக்கே கொடுக்க முடியும்.

ஜெப்: அரசுக்கட்டுப்பாட்டில் இயங்கும் மின்துறையில இவ்வளவு நன்மைகளா ? நம்ம தனியார் துறைய விட வேலை சூப்பரா நடக்குதே

லக்கலக்லா: என்னது தனியார் துறையா ? அப்ப இன்னும் ஈஸியாச்சே (கைவிரல்களை மடக்கி விஷ்க் விஷ்க் என்று நடப்பது போல் பாவனை செய்கின்றார். அமெரிக்க குழு குழம்புகின்றது)

ரம்ஸ்பெல்டு: இவங்க என்ன சொல்றாங்க ?

முந்திரன்: (டேபிளுக்கு அடியில் கையை ஆட்டுகின்றார். குனிந்து பார்த்த அமெரிக்க குழு இன்னமும் குழம்புகின்றது)

ஜெப்: குழப்புறய்யா

முந்திரன்: யோவ் பேசாம எண்ணெய் விக்கப் போய்யா. இதெல்லாம் தெரியாத புறம்போக்கா நீ ? சரியான பேக்குவேர்டுயா…

ரைஸ்: (மனதிற்குள்) ஹூக்கும். எண்ணெய் விக்கிறதுல தெறமை இல்லேன்னுதானே இவங்கப்பா ரெண்டு பேரையும் அரசியலுக்கே கூட்டிட்டு வந்தாரு

முந்திரன்: ரைஸம்மா. நீங்க நெனக்கிறது எனக்குப் புரியுது.

ரைஸ்: அதெப்பிடி What Women Wants மெல்கிப்ஸனா நீங்க ?

முந்திரன்: அடப்போம்மா விசில் பட விவேக் மாதிரியான்னு கேளுங்க

(விசில் விவேக்கா ? ரைஸிற்கு லேசாக தலை சுற்ற ஆரம்பிக்கின்றது)

ரைஸ்: சரி சரி எமர்ஜென்ஸிக்காக எங்கவூரு பெமா மாதிரி ஒரு நிறுவனம் இங்குள்ளதா ?

Slowசனா: (குழம்பியபடி) எமர்ஜென்ஸின்னா கூட அம்மா சொன்னாத்தான் நாங்க பெமினா படிப்போம்

ரம்ஸ்பெல்டு: வெள்ளம் வடிய வடிகால் திட்டத்தை எங்களுகும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்.

முந்திரன்: சரியான அப்பிராணியா இருக்கியேய்யா. மரத்தை வச்சவன் தண்ணிய ஊத்துவான். தண்ணிய ஊத்தறவன் வடிக்கவும் செய்வான். இப்ப சுனாமிய எடுத்துக்கங்க. இன்னொருமுறை சுனாமி அடிச்சா தண்ணி ஊருக்குள்ள வராம இருக்க சுனாமி தொட்டித் திட்டம் அறிமுகம் பண்றோம். இதன் மூலம் சுனாமி நீரை தொட்டிகளில் சேகரித்து ஏதோ ஆஸ்த்துமாஸிஸ்ஸாமே. அது மூலம் சுனாமி நீரை குடிநீராய் மாற்றி பாதிக்கப்பட்டோர்க்கு சப்ளை செய்வோம். இதெல்லாம் செய்ய சில கோடி கோடிகள் ஆகலாம். ஆமாம் காண்டிராக்ட் வேணுமின்னா டிக் சென்னிய கேட்டுச் சொல்லுங்க. மத்ததை நான் பாத்துக்கிறேன்.

(குழம்ப வேண்டியது இப்ப ரம்ஸ்பெல்டு முறை)

(இதற்கு மேல் தாங்க முடியாது என்ற முடிவுடன் முதல் நாள் முடிவடைய, இரண்டாம் நாள் தொடங்குகின்றது. இன்றைய தானைத்தலைவர் ஊட்டியில் விளக்கவுரை எழுதச் சென்றுவிட்டார் என்று ரகஸிய செய்தி. மற்றவரோடு வட்டமேசை…)

ஜெப்: வணக்கம் கூட்டணித் தலைவர்களே! கண்டிப்பாக உங்களின் பங்களிப்பை நீங்கள் தெரிவித்தால் எங்கவூரு டெமாக்ரெட்டிக் கட்சிகிட்ட நாங்க கச்சை கட்ட முடியும்.

(ஏற்காடு என்னமோசாமி நகங்களைக் கடித்தவாறு வந்தவர்களின் அட்டெண்டென்ஸ் எடுக்கின்றார். தமிழ்தாஸை தூரத்தில் பார்த்ததும் நிம்மதிப் பெருமூச்சு)

சரிதி: அடபோங்கப்பா… கொரலு வுட்டாவே தூக்கிக் கடாசிறாங்கோ. எதிர்க்கட்சியெனில் எதிரிக்கட்சியென்று கண்ணோட்டத்திலேயே கோளாறப்பா.

(தூக்கிக்கடாசப்படுவதற்கு செயல்முறை விளக்கம் கொடுக்கப்பட, ஜெப்புக்கு ஆப்படித்தாற் போல் இருந்தது)

ரம்ஸ்பெல்டு: அட இது நம்ம மிலிட்டரி பாணி போலருக்கே. வெரி இண்டரெஸ்டிங்.

தமிழ்தாஸ்: மன்னிக்க வேண்டும். இங்கே ஆங்கில கமெண்டிற்கு அனுமதியில்லை.

ஜெப்: அப்ப ஸ்பேனிஷ்ல பேசவா ?

பாவம்கோ: (விசித்து அழ ஆரம்பிக்கின்றார்) ஐயா அதற்கு ஆங்கிலமே பரவாயில்லை.

அரைமுருகன்: (மனதிற்குள்) அட அழுவுறதுல இன்னைக்கும் இந்த ஆளு முந்திக்கிட்டாரே. (சவுண்டாக) நள்ளிரவு நடவடிக்கைகளின் நாயகியை எதிர்த்து இந்த வட்டமேசை மாநாட்டின் நடுவே உண்ணாவிரதம் இருக்கப் போகின்றோம். (பின்னர் ஜோராக மிமிக்ரி செய்து மற்றவரை குஷிப்படுத்துகின்றார்)

(அமெரிக்க குழு வாயடைத்துப் போகின்றது)

பாவம்கோ: சேது சமுத்திரத் திட்டம் வரலாறு காணாதது. இன்று எங்களின் பிள்ளைக்கு வேறொருவர் இனிஷியல் போட்டுக் கொண்டாலும் பரவாயில்லை. நிறைவேற்றப்படவேண்டிய திட்டமிது.

ஜெப்: ஐயா இந்த கிரைஸிஸ் மேனேஜ்மெண்ட் பத்தி… ?

Stolein: அட நீங்க வேற… பாலம் கட்டினத்துக்கே பாத்தி கட்டி அடிச்சாங்க. கிரைஸிஸாவது மேனேஜ்மெண்ட்டாவது ? அப்புறம் பெர்ஸனல் கிரைஸிஸ்க்கு யாரு மேனேஜ்மெண்ட் பண்றது ?

இளகியகோவன்: கிரைஸிஸ் மேனேஜ்மெண்ட்னா அதுக்கு பலவழிகள் உண்டு.

தோசன்: இதை நான் வன்மையாக எதிர்க்கின்றேன்.

சோளசுப்பிரமணியன்: அதை நான் வழிமொழிகின்றேன்.

ரைஸ்: (மனதிற்குள்) என்ன தப்பான எடத்துக்கு வந்துட்டோமா ?

ரைட்லெப்ட் ‘இஸ்ட்: மேலாண்மை என்பதெளிது.

(அமெரிக்க குழு நிமிர்ந்து உட்காருகின்றது)

ரைட்லெப்ட் ‘இஸ்ட்: நிலக்கிழாரிய குமுகாயத் தத்துவங்களை கட்டுடைத்து, ஏற்றத்தாழ்வுகளை தாராளமயமாக்கல் என்னும் பெயரில் அந்நியருக்கு தாரைவார்த்துக் கொடுத்துக் கெடுக்கும் கொள்கைகளிலிருந்து சற்றே விடுபட்டு, சமுதாயத்தைச் சமன்சீராக்கும் சீரிய சிந்தனைகளில் நமது எண்ணக்குதிரைகளை கவனமாகக் கட்டவிழ்த்து விடுவோமென்றால் அது செப்பனிடப்பட்ட செஞ்சாலையில் செழிப்பாய் செல்லும்.

(புரிந்ததா ப்ரோ என்ற பார்வையை ஜெப் ரம்ஸ்பெல்டு மேல் வீச, அவர் தலை குனிகின்றார். இன்னும் சில பல குழுக்கள் சப்தமின்றி சவுண்ட் கொடுக்க இரண்டாம் நாள் வட்ட மேசை முடிகின்றது.)

(முக்கி முக்கி அமெரிக்க குழு முக்கியமான மூன்றாம் நாளை அடைகின்றது. அமெரிக்க குழுவின் கதியினை அறிய காத்திருக்கவும்.)

—-

podankho@yahoo.com

Series Navigation

குசும்பன்

குசும்பன்