தீவட்டி நிறுவனம் வழங்கும் புதுமைஜித்தன் நசிவிலக்கிய விருது – அறிஞர் ச.க.தி. பெறுகிறார்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

நா.சா. கூதலன்


தீவட்டி தமிழிலக்கிய கூப்பாட்டு நிறுவனம் – டிசம்பர் 23, 2004

விளக்கு நிறுவனத்தின் புதுமைப்பித்தன் இலக்கிய விருதுக்குப் போட்டியாக தீவட்டி நிறுவனத்தின் சார்பில் இந்த ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள புதுமைஜித்தன் நசிவிலக்கிய விருது போஸ்ட்கார்ட் இலக்கியவாதி அறிஞர் ச.க.தி. அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை பிற இன்லாண்டு லெட்டர் இலக்கியவாதிகளின் வயிற்றெரிச்சலை ஆவலுடன் எதிர்நோக்கி பெரு மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

தீவட்டி நசிவிலக்கிய விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுள் ஒருவர் எழுத்தாளரும் ச.க.தி.யின் உற்ற தோழருமான வெள்ளிக்கன்னன் ஆவார். இரண்டாமவர் புறம்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவரான செந்தேள் நாற்றன். இலக்கியத்துடன் சற்றும் சம்மந்தமில்லாத ஒருவர் இத் தேர்வுக் குழுவில் இருந்தே தீர வேண்டும் என்ற விதியின் காரணமாக நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்த இன்னொருவர் மாஜி துணைவேந்தர் முனைவர் செ.வா. பாப்பாசாமி.

இந்த மூவரின் ஒருமித்த பரிந்துரையின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

போஸ்ட்கார்ட் எனப்படும் அஞ்சலட்டை இலக்கியத்துக்கு ச.க.தி. அவர்கள் செய்துள்ள வாழ்நாள் சேவையைப் பாராட்டி இவ் விருது வழங்கப்படுகிறது.

அஞ்சலட்டை இலக்கிய உலகின் பன்முகங்களுடனும் அஞ்சல் வில்லை (ஸ்டாம்ப்) போல தமது வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்டு சற்றொப்ப கடந்த அரை நூற்றாண்டுகளாக நசிவிலக்கியப் பணிபுரிந்து வரும் ச.க.தி.யின் அஞ்சலட்டைப் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை பல்வேறு படைப்பாளிகளுக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டவை என்பதால் அவற்றை நசிவிலக்கிய ஆர்வலர்கள் படிக்க முடியாமல் போனது வெளிநாடு வாழ் தமிழர்களின் துரதிஷ்டமே. எனினும், விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதில் இந்தப் படைப்புகளே பெரிதும் கருத்தில் கொள்ளப்பட்டன என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அஞ்சலட்டை நசிவிலக்கியத்துடன் நெருங்கிய தொடர்புள்ள பொலிட் பீரோ வாதத்திலும் இவரது பணி குறிப்பிடத்தக்கது. இவரது அஞ்சலட்டை நசிவிலக்கியங்கள் அல்லி பத்திரிகை தவிர வங்கி மற்றும் பிற மத்திய மாநில அரசு ஊழியர்களால் தங்கள் அலுவலக நேரத்தில் நடத்தப்பட்டு அற்ப ஆயுளில் மண்டையைப் போட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்களையும் அலங்கரித்துள்ளன. நாசமணி போன்ற மார்வாடி நாளிதழ்களிலும் இவரது அஞ்சலட்டை நசிவிலக்கியப் படைப்புகள் வெளிவந்துள்ளன என்றாலும் என்றுமே ஏழு வரிகளுக்கு மேற்பட்டு எந்த ஓர் அஞ்சலட்டை இலக்கியத்தையும் ச.க.தி. அவர்கள் படைத்ததில்லை என்பதைக் கருத்தில் கொண்ட நடுவர் குழு, இவ் விருது பெற ச.க.தி.யை விட்டால் தமிழ் நசிவிலக்கிய வரலாற்றிலேயே வேறு யாருமே கிடையாது என்ற முடிவுக்கு வந்தது.

ச.க.தி. அவர்கள் வெண்ணை இணைய நசிவிலக்கிய இதழுக்கு மூன்று வரிகளில் எழுதி அனுப்பிய ஒரே ஒரு மின் அஞ்சலட்டையை வெளியிடாமல், குறைந்த பட்சம் மூவாயிரம் வரிகளாவது எழுதினால்தான் வெண்ணையில் பிரசுரிப்பதைப் பற்றிப் பரிசீலிப்போம் என்று ஆசிரியர் குழு சொன்னதால் சீற்றமடைந்த அவர், பின்னர் வலைப்பதிவு ஒன்றின் கருத்துப் பகுதிக்கு அனுப்பிய அஞ்சலட்டையில் ‘பொலிட் பீரோ வாதம் வெற்றி பெறும் போது அந்த யுகப் புரட்சியின் வெம்மையில் வெண்ணை போன்ற நசிவிலக்கிய இதழ்கள் உருகி ஆவியாகி விடும் ‘ என்று எழுதியதாகத் தெரிகிறது. ச.க.தி.யின் இத்தகைய தார்மீக சீற்றங்களையும் நடுவர் குழு கருத்தில் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்காலத் தமிழ் நசிவிலக்கியத்தின் சீரண மண்டலமாகக் கிடக்கும் படைப்பாளிகளையும் படைப்புகளையும் பரவலாக அறியச் செய்யும் தீவட்டி தமிழிலக்கிய கூப்பாட்டு நிறுவனத்தின் முயற்சிகளுக்கு இந்தத் தெரிவு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

நடுவர்கள் வெள்ளிக்கன்னன், செந்தேள் நாற்றன், முனைவர் செ.வா. பாப்பாசாமி ஆகியோருக்கு தீவட்டி நன்றிக் கடன்பட்டுள்ளது.

தீவட்டி நிறுவனத்தின் லெமூரியாக் கண்ட தொடர்பாளரான திரு வேலி வெள்ளாடன் அவர்களது பல்கடி(த்)த உதவிகளை தீவட்டி நன்றியுடன் பாராட்டுகிறது. ச.க.தி.யின் எடைக்கு எடை அஞ்சல் அட்டைகளை வழங்கும் பரிசளிப்பு விழா விரைவில் சிகாகோவில் நடக்க உள்ளது.

நா.சா. கூதலன்

தீவட்டி அமைப்பாளர்

அமெரிக்கா

goodhal@verizon.net

Series Navigation

நா.சா. கூதலன்

நா.சா. கூதலன்