நான்காவது கொலை முயற்சி!!!

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

திண்ணைக்குழு


**

கணினிக்குள்ளிருந்து ஒரு குரல் ‘அண்ணே இங்க யாருண்ணே திண்ணை ஆசிரியரு ? ‘

ஒரு விவரம் கெட்ட ஆள்: ‘என்னப்பா எதேனும் ஸ்பீச் புரோகிராம் ஓட உடுறியா கம்ப்யூட்டருள்ளார ? இந்த ஏழைத் திண்ணை சைட்டிலே பிராட்பாண்ட அகலம் இதுக்கெல்லாம் பத்தாது. பேசாம டெக்ஸ்டைப் போட்டோமா, வேணுங்கற திட்டை வாங்கிக் கட்டிக்கிட்டோமான்னு இருப்பா. ‘

இன்னொரு விவரம் கெட்ட ஆள்: ‘இல்லையே இது ஏதோ வைரஸ்போலக் காணுதே. ‘

மற்றுமொரு விவரம் கெட்ட ஆள்: ‘நாகர்கோவில் வட்டாரத்திலேர்ந்து வர்ரதெல்லாம் விஷம்னு அப்பவே சொன்னேன், கேட்டாத்தானே, இப்பபாரு வைரஸ் கூட வர ஆரம்பிச்சிருச்சி. அனுப்பறது தான் அனுப்பறாங்க ஏதாவது சிலுக்கு படம், சிம்ரன் படம்னு அனுப்பறாங்களா , கிடையாது, திண்ணைன்னாலே ஏதோ சீரியஸ்னு நினைச்சு புரியாத விஷயத்தையெல்லாம் அனுப்பிடறாங்க. இங்கே அப்லோட் பண்ற ஆளுங்க மண்டை காயுதப்பா. ‘

மீண்டும் கணினிக்குள்ளிருந்து ‘யோவ் நான் கேக்கறதுக்குப் பதில்… யாருண்ணே இங்க திண்ணை ஆசிரியரு ? ‘

‘ஹோ…ஹோ.. ஹோ.. ‘

‘என்ன சிரிப்பு ? ‘

முதல் வி.கெ.ஆ: ‘இவ்வளவு நாளா திண்ணையில வேலை செய்யற எங்களுக்கே தெரியாது.. துப்பறியும் கதை எழுதற பெரிய எழுத்தாளர்களுக்கே தெரியாது.. தம்மாத்தூண்டு கிருமி நீ… ஒன்னால கண்டுபிடிச்சிற முடியுமா ? ‘

கிருமி: ‘ஓ மை காட்.. ஹூ ஈஸ் த எடிட்டர் ? ‘

திண்ணைக்களம் மேற்பார்வையாளர்: ‘எவண்டா அது ஆங்கிலத்துல பேசுறது ‘

‘போச்சு திண்ணைக்களம் மேற்பார்வையாளர் வந்துட்டார்..அதுவும் டெலீட் பட்டனை பட்டு பட்டென்று தட்டிக்கொண்டு… ‘

‘ஆ அய்யோ ‘ என்று ஈனக் குரலெழுப்பி டெலீட் பட்டனில் மடிந்தது கிருமி.

***

ஆக நான்காவது கொலையைச் செய்தது திண்ணைவிவாதக்களம் மேற்பார்வையாளர். ஆனால் நான்காவது கொலையை திட்டமிட்டது யாரென்பது வாசகர்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும்.. அன்பர்களே நண்பர்களே வாசக நெஞ்சங்களே ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களே, எலும்பின் எலும்பான கால்ஸியம் கார்பனேட் சோடாக்களே, கவனித்துக்கொள்ளுங்கள்

***

பின் விளைவின் முன் விளைவு:

**

விவரம் கெட்ட ஆட்கள் 1, 2, 3, 4 எல்லோரும் கற்பனை செய்த வாசகர் கடிதங்கள் : இவை திண்ணை ஆசிரியர் கருத்தல்ல.

ரோஸா வசந்த் : என்னய்யா இது, திண்ணை விவாதக் களமே ஒரு கொலைக் களம் போலப் பண்ணிக் கொண்டிருக்கிறோம் . கொலைக்கே மரியாதை இல்லாமல் போய்விட்டது. பெரியார் திருமணம் சரியா இல்லையா, சி க , ம ந, அ நீ என்ற பிரகிருதிகளின் யோக்கியதை என்ன, மார்க்ஸ் கையில் (இது அந்த மார்க்ஸ் இல்லை, இந்த மார்கஸ்) பின் நவீனத்துவ ஏ கே 47-ஆ, தலித் கலாசார உள்ளூர் வெட்டரிவாளா என்றெல்லாம் விவாதத்தை முடிக்காமல் திண்ணை ஆசிரியரைக் கொலை செய்ய முயன்றது, ஜெயமோகனின் சனாதன, வர்ணாசிரம தர்மத்தை வெட்ட வெளிச்சமாக்கி காட்டுகிறது. பெரியார் வழி வந்த பார்ப்பன எதிர்ப்பாளர்களின், கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோடு கஸ்மாலம் பேசுகிற எங்கள் குரல் இங்கே எதிரொலித்தது தான் இதற்குக் காரணமா ?

அனாதை ஆனந்தன் : பின் தொடரும் கொலையில் திண்ணை ஆசிரியரின் குரல்வளையைக் கூட சரியாய் நெறுக்கிக் கொல்ல முடியாமல் என்னய்யா பெரீய்ய எழுத்தாளன் நீ ? நீ படித்த ரிக்வேதம் , யதி , நாராயண குரு எல்லாம் சொல்லிக் கொடுத்தது இதைத் தானா ? செத்து விழுந்தாலாவது, முகத் திரையை நீக்கி, திண்ணைக்குப் பின்னால், முன்னால், அடியில் , கட்கத்தில் யார் என்று பார்க்கலாம் என்று காத்திருந்த்தேன். நாடகத்தை மாத்துங்கப்பான்னா, எழவு ஆளையே ஏப்பம் விட்டுட்டாங்களா ? ஏமாற்றிவிட்டார்களே பாவி.

அரவிந்தன் நீலகண்டன்: பரம பூஜ்யனீய குருஜி கோல்வால்கர் அடியொற்றி வந்த நான் எழுதிய கட்டுரைகளை வெளியிட்டது தாங்கமுடியாமல், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கைக்கூலியான ஜெயமோகன் செய்யவிருந்த இந்தக் கொலை முயற்சியில் திண்ணை ஆசிரியர் பிழைத்துவிட்டார் என்று அகமகிழ்கிறேன். காந்தி கொலைக்கு ஆர் எஸ் எஸ் பொறுப்பில்லை என்ற இமாலய உண்மையை காட்டுவது போலவே, திண்ணை ஆசிரியர் கொலை முயற்சிக்கு ஆர் எஸ் எஸ் பொறுப்பில்லை என்று அடுத்த கட்டுரையில் ஆதாரங்களுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

செங்கள்ளுச் சித்தர் : 1927-ல் க்ரையாபட்டியிலிருந்த்து வெளியிடப்பட்டு என் பரணில் கரையானுக்கு இரையாகிக் கொண்டிருக்கும் ‘ முக்காலே மூணுவீசம் திண்ணைப்பேச்சு ‘ என்ற நூலில் சொல்லியபடி, அதன் ஆசிரியர் திட்டமிட்டபடி , திண்ணை ஆசிரியர் கொலை முயற்சி செய்யப் பட்டது பற்றி நேரம் இருந்தால் பின்னால் எழுதுகிறேன்.

டி சே தமிழன், ரமணீதரன் : கருத்துச் சுதந்திரம் தராத திண்ணை ஆசிரியரைத் தீர்த்துக் கட்ட முயன்றது பற்றி இனி நாங்கள் திண்ணை விவாதக் களத்தில் எழுதப் போவதில்லை.

மாலன் : கலாசாரம் பற்றி ஜெயமோகனுக்கு எதுவுமே தெரியவில்லை என்பதன் நிரூபணமே திண்ணை ஆசிரியர் கொலை முயற்சி. இந்த அவதூறுகளை நிறுத்தியாக வேண்டும்.

சரவணன் 1978 : 14 வாரம் தொடராக அண்ணன் ஜெயமோகன் தெளிவாக. அட்சர சுத்தமாக , புரியாததைப் புரிவிக்கும் பொறுமையுடன் எழுதியதைப் படித்தபின்னாலும், அவதூறு என்றால் என்ன அர்த்தம் ?

ஜீவா: உலகம் பூரா கொலை, கொள்ளை, பாருங்கள் திண்ணை ஆசிரியர் மீதும் கொலை முயற்சி. மக்களுக்கு இது பற்றிக் கவலை இல்லை. ‘ ஜெயமோகனா ? யார் அது ? ஜெயமாலினி மார்க்கெட் எல்லாம் போய் ரொம்ப நாளாச்சே. ரம்பா, மும்தாஜ், கும்தாஜ் எல்லாம் நடிச்சு, எட்டுப் பட்டி எஜமானருக்கு எல்லோரும் அடிமைங்கற படத்திலே , கோவணம் கட்டிகிட்டு அந்தம்மா ஆடுனதைப் பார்க்கலியா ‘ என்று கேட்கும் மக்களிடையே நான் இருக்க தயாரில்லை. மக்கள் டி வி பார்த்து சந்தோஷமாய் இருக்கிறார்கள். எனக்கு வெறுத்துவிட்டது. வேர்க்கடலை தின்று ரொம்ப நாளாகிவிட்டது. எனவே விடை பெறுகிறேன் நண்பர்களே.

திண்ணை விவாதக்களம் மேற்பார்வையாளர் (இவர்தான் அதிகமாக திண்ணை விவாதக்களத்தில் எழுதிய ஆசாமி) அட்மின் : வேர்க்கடலை பற்றி இங்கே எழுதவேண்டாம். சமையல் குறிப்புகளில் எழுதி அனுப்பவும்.

**

Series Navigation

திண்ணைக்குழு

திண்ணைக்குழு