கிறுக்குத்தனமேறியிருத்தல் பற்றி

This entry is part 1 of 4 in the series 19991217_Issue

டபிள்யூ. ஈ. பி. டு புவா


(W E B Du Bois ஒரு கறுப்பு எழுத்தாளர்)

ஒரு மணி. எனக்குப் பசி. ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்து, உட்கார்ந்து உணவுப் பட்டியலை எடுத்தேன். என் மேஜையில் உட்கார்ந்திருந்த இன்னொருவர் எழுந்து விட்டார்.

‘அய்யா ‘ என்றார் அவர். ‘உங்களுடன் உட்கார விரும்பாதவர்களைக் கட்டாயப் படுத்துவீர்களா ? ‘

இல்லை என்றேன். நான் சாப்பிடத் தான் வந்தேன்.

‘இது சமூக சமத்துவம் என்று உங்களுக்குத் தெரியுமா ? ‘

அதெல்லாம் ஒன்றுமில்லை இது வெறும் பசி தான் என்று நான் சாப்பிட்டேன்.

வேலை முடிந்து நாடகக் கொட்டகைக்குப் போனேன். என் இருக்கையில் நான் அமர்ந்தவுடன் என் அடுத்த இருக்கையில் இருந்த பெண்மணி இன்னமும் கூனிக் குறுகி முனகினாள்.

மன்னிக்கவும் என்றேன்.

‘உன்னை விரும்பாத இடத்தில் இருப்பது உனக்குச் சந்தோஷமா ? ‘ என்று இறுகிய குரலில் அவள் கேட்டாள்.

இல்லையே என்றேன் நான்.

‘இங்கே நீ இருப்பதை விரும்பவில்லை. ‘

எனக்கு ஆச்சரியம். உங்களுக்குப் புரியவில்லை என்றேன். எனக்குச் சங்கீதம் மிக விருப்பம். சங்கீதமும் கூட என்னை விரும்புகிறது என்று நினைக்கிறேன்.

‘காவலாளி ‘ என்றாள் பெண். ‘இது தான் சமூக சமத்துவம் ‘

‘இல்லையம்மா ‘ என்றான் காவலாளி. ‘பீதோவனின் ஐந்தாவது சிம்பனியின் இரண்டாவது பல்லவி இது. ‘

என் பெட்டி படுக்கைகளை முன்னமே அனுப்பியிருந்த தங்கும் விடுதியை நான் அடைந்தேன். அங்கே வரவேற்பு ஊழியன் முகம் சுளித்தான்.

‘என்ன வேண்டும் ? ‘ என்றான்.

ஓய்வு என்றேன் நான்.

‘இது வெள்ளை விடுதி ‘ என்றான் அவன்.

நான் சுற்று முற்றும் பார்த்தேன். அப்படிப் பட்ட நிறச் சுவர்களை தூய்மையாய் வைத்திருப்பது கஷ்டம் தான். ஆனால் எனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை என்றேன்.

‘நாங்கள் ஆட்சேபிக்கிறோம். ‘ என்றான் அவன்.

அப்படியென்றால் ஏன் என்று நான் தொடங்கியதை அவன் தடுத்தான்.

‘நீக்ரோக்களை நாங்கள் விடுவதில்லை. ‘ என்றான் அவன்.

‘எங்களுக்கு சமூக சமத்துவம் வேண்டாம். ‘

எனக்கும் அது ஒன்றும் வேண்டாம் என்றேன். எனக்கு வேண்டியது ஒரு படுக்கை தான்.

சிந்தனையுடன் புகைவண்டிநிலையம் அடைந்தேன். எனக்கு டெக்ஸாஸ்க்கு ஸ்லீப்பர் பெட்டியில் போகலாம் என்று எண்ணினேன். இந்த நகரம் எனக்குத் திருப்தியாயில்லை.

‘உனக்கு விற்க முடியாது ‘

ஓரிரு இரவுகளுக்கு நான் வாடகைக்குத் தான் கேட்கிறேன் என்றேன்.

‘டெக்ஸாஸில் ஸ்லீப்பரில் போக முடியாது. அது சமூக சமத்துவமாம். ‘

அது காட்டுமிராண்டித் தனம் என்றேன். நடக்கலானேன்.

நடக்கும் போது இன்னொரு பாதசாரியைப் பார்த்தேன். உடனே அவன் எதிர்ப்புறம் சகதியாயிருந்த நடைபாதைக்குப் போனான். நான் காரணம் கேட்டேன்.

‘நீக்ரோ அழுக்கு ‘ என்றான்.

சகதியும் தான் அழுக்கு என்றேன். நான் ஒன்றும் உன்னை மாதிரி இப்போ அழுக்காயில்லையே என்றேன்.

‘ஆனால் நீ நீக்ரோ தானே ? ‘ என்று அவன் கேட்டான்.

என் தாத்தாவை அப்படித் தான் கூப்பிட்டார்கள்.

‘சரி தான் ‘ என்று வெற்றிகரமாக அவன் சொன்னான்.

நீயும் தெற்கத்திக் காரனா என்று மென்மையாகத் தொடர்ந்தேன்.

‘ஆமாமாம். ‘ என்று அவன் உறுமினான். ‘ அங்கே தான் பட்டினி கிடக்கிறேன் ‘

எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் நீயும் நீக்ரோக்களும் சேர்ந்து வாக்களித்து பட்டினியை விரட்ட வேண்டும்.

‘அவர்களை நாங்கள் வாக்களிக்க விடுவதில்லை. ‘

நாங்கள் ? ஏனில்லை ? என்று வியந்தேன்.

‘நீக்ரோக்களுக்கு வாக்களிக்கும் அளவு புத்தியில்லை. ‘

ஆனால், உன்னைப் போல நான் ஒன்றும் புத்தியில்லாதவன் அல்ல என்றேன்.

‘ஆனால், நீ நீக்ரோ தானே ? ‘

ஆமாம், நீ சொல்கிறபடி தான் நான்.

‘சொன்னேனா இல்லையா ‘ என்று எந்தப் பொருளுமற்ற ஒரு வெற்றிக் குரலில் அவன் சொன்னான். ‘அது மட்டுமில்லை. என் தங்கை ஒரு நீக்ரோவைக் கல்யாணம் செய்து கொண்டால் எனக்குப் பிடிக்காது. ‘

நான் அவன் தங்கையைப் பார்த்ததில்லை. எனவே முணுமுணுப்பாய்ச் சொன்னேன். அவள் வேண்டாமென்று சொல்ல வேண்டியது தானே.

‘கடவுள் மேல் ஆணை. அவள் ஆமாம் என்றாலும், நீ அவளைக் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது. ‘

ஆனால்-ஆனால் நான் ஒன்றும் அவளைத் திருமணம் செய்யப் போவதில்லை என்றேன், தனிப்பட்ட விவகார்ங்களில் பேச்சு நுழைந்ததில் சற்று எரிச்சலுடன் .

‘ஏன் மாட்டாய் ? ‘ என்று முன்னை விடக் கோபமாகக் கத்தினான்.

ஏனென்றால் எனக்குக் கல்யாணம் ஆகி விட்டது. என் மனைவியையும் எனக்குப் பிடித்துத் தானிருக்கிறது.

‘அவளும் நீக்ரோ தானே ? ‘ என்று சந்தேகத்துடன் அவன் கேட்டான்.

மறுபடி நான் சொன்னேன், அவள்பாட்டியை அப்படிக் கூப்பிடுவது உண்டு தான் என்று.

‘சரிதான் ‘ என்று ஏதோ ஒவ்வாத முறையில் அவன் கத்தினான்.

என்னால் அதற்கு மேல் தாங்கவில்லை.

மேற்கொண்டு பேசு, நீ பைத்தியமோ நான் பைத்தியமோ என்றேன்.

‘இரண்டு பேரும் தான் ‘ என்று சொன்னபடியே அவன் சகதியில் தடுமாறி நடந்தான்.

Thinnai 1999 December 17

திண்ணை

Series Navigationவையாபுரிப்பிள்ளை >>

டபிள்யூ. ஈ. பி. டு புவா

டபிள்யூ. ஈ. பி. டு புவா