பின்-நவீனத்துவ புனைவிலக்கியம் இறந்து விட்டதா ?

This entry is part 1 of 2 in the series 19991031_Issue

காஞ்சனா தாமோதரன்.


சமீபத்தில் ரேமண்ட் ஃபெடர்மன் என்னும் பின் நவீனத்துவ எழுத்தாளர் எழுதிய ‘Critification ‘ என்ற கட்டுரைத் தொகுப்பைப் படிக்க நேர்ந்தது. பின் நவீனத்துவ புனைவிலக்கிய விமர்சனம். அதன் மரணத்தைப் பற்றி ஆய்வு. அடுத்து என்ன என்ற கேள்வி. வார்த்தைகளுள் ஊடுருவும் எள்ளல் சுவையோடு சிந்தனையைத் தூண்டுவதாய் அமைந்துள்ளது இத்தொகுப்பு.

நாற்பது வருடம் மேற்கே உயிர்த்திருந்த பின் நவீனத்துவம் மேற்கே தற்போது உயிரோடில்லை என்பது ரேமண்ட் ஃபெடர்மன் போன்றோரின் தீர்ப்பு. பல்வேறு துறைகளிலும் ஏற்கெனெவே நீடித்திருந்த அமைப்புகள் இதை விழுங்கி மாற்றி விட்டன என்பது இவர்கள் கணிப்பு. இலக்கியத்தில் பின் நவீனத்துவம் ஒரு புரட்சிகரமான காலம் என்று போற்றுவோர் சிலர். எதையும் சரியென்று ஒப்புக்கொண்டு, மையமின்றித் தொலைந்து போனவர்களென பின் நவீனத்துவ எழுத்தாளர்களைச் சாடி, அவர்களது நாற்பது வருடத்திய கணிசமான எழுத்தையும் முழுதாக ஒதுக்குவோர் சிலர். இப்படி ஒதுக்குவோரை அறிவற்றவரென்றும், புதுமையின் வித்தியாசம் உண்டாக்கும் சங்கடத்தை எதிர்கொள்ள இயலாத பழமைவாதிகளென்று நாமகரணம் செய்வோர் சிலர்.

இலக்கியமும் மொழியும் பிறவற்றைப் போல் மாறிக் கொண்டேயிருப்பவை. மாறுதலுக்கு வழி வகுப்பது புரட்சி–சில சமயங்களில் மெளனமாய், சில சமயங்களில் அதீத சப்தத்துடன். பின் நவீனத்துவம் அதீத சப்தமுண்டாக்கிய ஒரு புரட்சி. உலகைப் பற்றிப் புரிந்தது அனைத்தையும் எழுதியாயிற்று, இனிமேல் எழுதப்பட ஒன்றுமில்லை என்று ஒரு பக்கத்திலும், எழுத்தாலும் எண்ணத்தாலும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவோ அதை முழுதாய் வரைந்து வழங்கவோ முடியாது என்று இன்னொரு பக்கத்திலுமாய், இலக்கியமே இலக்கியத்தின், மொழியின், மனித எண்ணத்தின் குறைபாட்டை விரித்துக் காட்டிய புரட்சி. இந்த இயக்கம் அடங்கியதால், அடுத்து வருவது என்னவென்று தேடிக் கொண்டிருக்கிறது இன்றைய மேற்கத்திய இலக்கிய உலகம். இன்றைய அமெரிக்க இலக்கியப் பத்திரிகைகள் பெரும்பாலும் neo-realistic/புது-யதார்த்தக் கதைகளையே வெளியிடுவதாக எனக்குத் தோன்றுகிறது.

இன்றைய தமிழ் எழுத்துலகின் குறிப்பிட்ட இலக்கிய வட்டாரங்களில் பின் நவீனத்துவம் என்பது அன்றாட வழக்கிலுள்ள சொற்றொடர். பின் நவீனத்துவம் என்ற பெயரில் கதைகளும் கவிதைகளும் எழுதப்பட்டு வருகின்றன; அவை உண்மையான பின் நவீனத்துவமா இல்லையா என்ற அலசல்கள் உடன் தொடர்கின்றன. மேற்கத்திய வரலாற்று, கலாச்சார, சமூக, பொருளாதாரப் பின்புலத்தையுடய இந்த ‘இஸம் ‘ தமிழ்ச்சூழலுக்கு எந்த அளவு பொருந்தும் என்ற முக்கியமான கேள்விக்கான பதில் தேடல் ஒரு புறம். பின்புலப் பொருத்தம் எப்படியிருப்பினும், தமிழிலக்கியத்திலும் மொழியிலும் ஒரு தீவிர புதுமையைப் புகுத்த இந்த ‘இஸம் ‘ ஒரு தூண்டுகோலாக அமையலாமென்ற எதிர்பார்ப்பு மறுபுறம். ஆக, தமிழிலக்கிய உலகின் ஒரு பகுதியில் ஒரு சலனம்.

மேற்கத்திய பின் நவீனத்துவத்தில் ஆர்வம் காட்டும் தமிழ் எழுத்தாளர்/வாசகர்/விமர்சகர் மேற்கில் அதன் இன்றைய நிலை பற்றியும் அதன் ‘இறப்பின் ‘ அடிப்படைக் காரணங்களையும் புரிந்து கொள்ளுதல் அவசியம். வரலாற்றையும், மனித மையத்தையும் (மனித நேயத்தையும் கூட), அர்த்தத்தையும், தத்துவத்தையும் மறுதலித்த பின் நவீனத்துவத்தின் வரலாறு மனிதனுக்குக் காட்டும் அர்த்தமும் தத்துவமும் என்னவென்பதை ஆராய்ந்தால் அது தமிழ்ச் சூழலுக்குப் பொருந்துமா என்பதும், தமிழிலக்கியத்திலும் மொழியிலும் தீவிர புதுமைகளுக்கு வழி வகுக்க அதுதான் தலைசிறந்த வழியா என்பதும், அப்படியேயெனில் எந்த அம்சங்களை எந்த அளவுக்கு எடுத்து, எதை விடுக்க வேண்டுமென்பதும் தெளியும். இந்த ஆய்வு நோக்கின் ஒரு படியாக ஃபெடர்மன் கட்டுரையைின் சில பகுதிகளைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன் இங்கு. இது எந்தவொரு விவாதத்தின் தொடர்ச்சியோ முடிவோ அல்ல.

காஞ்சனா தாமோதரன்
நவம்பர் 1999.


ரேமண்ட் ஃபெடர்மனின் ‘பின் நவீனத்துக்கு முன்னும் பின்னும் ‘: சில பகுதிகள்


இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு சில மாதங்களுக்கு முன், நான் எனது இருபது நண்பர்களுக்கு (எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள்) பின்வரும் இந்த இரு கேள்விகளுக்குப் பதில் கேட்டு ஒரு கடிதம் எழுதினேன்:

1. பின் நவீனத்துவம் இறந்து விட்டது என்று நினைக்கிறீர்களா ?

2. அப்படியெனில், அதைச் சாகடித்தது எது ?

எனக்குப் பெருமகிழ்ச்சியூட்டும் வகையில், அனைவரும் பதிலளித்தனர், தம் பெயரை வெளியிடக்கூடாதென்ற நிபந்தனையுடன். இதோ அந்த இருபது பதில்களும்:

1. பின் நவீனத்துவம் என்பது தொடங்கிய நாளிலிருந்தே சாகும் வரம் வாங்கியது. ஏனெனில் அது விரிசல், உடைதல், மாறுதல், மாற்றுச்சேர்க்கை, தொடர்ச்சியற்றமை என்பவற்றைப் பற்றியது.

2. எல்லா புதுமைகளையும் போல், பொருளாதார அமைப்புக்குள் இடம் பெற்று அடக்கமானதும் பின் நவீனத்துவமும் தானாகவே முடிந்து விட்டது.

3. உடை, உணவு, இருப்பு என வேறுபட்ட பல துறைகளிலும் பின் நவீனத்துவத்தின் அடையாளங்கள் தெரிய ஆரம்பித்து விட்டன, புரிந்து கொள்ளக் கூடிய வடிவத்தில். இனி முடிவு வெகு தூரத்தில் இல்லை.

4. பின் நவீனத்துவம் என்பது உண்மையான இலக்கிய இயக்கமாகத் தொடங்கி வெறும் பேரங்காடிக் காட்சிப்பொருளாக முடிந்து விட்டது.

5. பின் நவீனத்தைப் பற்றிப் பல்கலைக்கழகப் பண்டிதர்கள் வாதப் பிரதிவாதங்கள் ஆரம்பித்ததுமே அந்த வாதத்தின் அடிப்படைச் சாரம் இறந்து விடுகிறது.

6. ஒரு நாளின் வெற்றியில், பின் நவீனத்துவம் தோற்று விடுகிறது, நிச்சயமாக.

7. பின் நவீனத்துவம் என்பது இயக்கமாகவும் நறுமணப்பொருளாகவும்; அறிவுஜீவித்தனமாகவும் கிண்ணத்துப்பழமாகவும்; இப்படி இருமுகத்தோடு பார்க்கப் பட்டதால் அது பிழைப்பதற்கு வாய்ப்பு இருந்ததே இல்லை.

8. இலக்கியரீதியாக பின் நவீனத்துவம் உருவானதன் காரணம் இரண்டாம் உலகப்போரில் யூதர்களின் மொத்த அழிவான ஹோலோகாஸ்ட்டை எதிர்கொள்வதற்காகவே. போருக்கு முற்பட்ட காலத்திய இலக்கியத்தின் பொருள்-வடிவப் பிரிவினையால் ஹோலோகாஸ்ட் ஏற்படுத்திய moral crisis-ஐ எதிர்கொள்ள இயலவில்லை. எனவே சாமுவேல் பெக்கெட், வால்ட்டர் அபிஷ், ரானல்ட் ஸுகெனிக், ப்ரீமோ லீவி, ரேமண்ட் ஃபெடர்மன், ஜெர்ஸி கோஸின்ஸ்கி மற்றும் பலர் பின் நவீனத்துவத்தை உருவாக்கினர்…….சடலங்களினூடே தேடலாக, ஒட்டுமொத்த சவக்குழிகளை மீண்டும் தோண்டித் திறப்பதற்காக, தொலைந்து காய்ந்த குருதியையும் கண்ணீரையும் மீண்டும் உயிர்க்க வைப்பதற்காக……அல்லது சாவை விட சுவாரஸ்யமான ஒன்றைப் படைப்பதற்காக.

9. தருக்கம், ஒழுக்கம் ஆகிய இரண்டும் காட்டும் பாதையில் பயணம் முடிந்ததும், இப்பயணியைப் பூட்டிய பெட்டகத்திலிட்டு வழிபடுவதே மரபு, பழந்தவஞானிகளைப் போல், அதே முறையில், அதே உபயோகமற்ற முடிவுடன். பின் நவீனத்துவமும் இது போலவே.

10. விமர்சகர் வாதங்களின் தொனி தருக்கத்திலிருந்து ஒழுக்கக்கூறுக்கு மாறும்போது, பின் நவீனத்துவம் இறந்து விட்டது என்று நமக்குத் தெரிகிறது.

11. எதன் இறப்பும் அதன் இறப்பைப் பற்றிய கூற்று அல்ல. அதன் உபயோகம், பயன் பற்றிய கூற்றாகும். பின் நவீனத்தால் இப்போது பயனில்லை.

12. ஓர் இயக்கம் என்பது அவசியத்தேவை என்பதன்றி ஒரு தேர்ந்தெடுப்பு என்றாகும்போது அந்த இயக்கத்தின் இறப்பை உணர்த்துகிறது. பின் நவீனத்துவத்தின் நிலை இதுதான். ஒன்றின் இறப்பைப் பற்றி நிகழ்காலத்தில் பேசுவதில்லை….இறப்பைப் பற்றி அதன் நிகழ்வுக்குப் பின்னரே பேச முடியும்…..இப்போது பின் நவீனத்தின் இறப்பைப் பற்றி எங்கும் எல்லோராலும் பேசப்படுகிறது.

13. பின் நவீனத்துவத்தின் அடிப்படை முதுகெலும்பாகும் இலக்கியவாதப் புத்தகங்கள்: Texts for Nothing, The Library of Babel, Cosmicomics, Lost in the Funhouse, The Voice in the Closet. இப்புத்தகங்கள் பின் நவீனத்துவத்தின் துவக்கமாக நடித்துக்கொண்டே அதன் முடிவையும் அறிவித்து நடத்தி வைத்து விட்டன.

14. இன்றைய புரட்சிகரமான இலக்கிய உலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட எழுத்துக்களை விட, கலைகளுக்கு விலையை நிர்ணயிக்க பொருளாதாரச் சந்தை கொண்டிருக்கும் பலமும் அதன் நீட்சியுமே பின் நவீனத்துவத்தின் இறப்பை உணர்த்துவன.

15. இலக்கிய பாதிப்புப்போக்கு (trends/fashion) என்பது அந்த இலக்கியத்தின் படைப்பை விட அதன் அங்கீகரிப்பைப் பற்றியது, அதாவது அதன் பிறப்பை விட முடிவைப் பற்றியது.

16. ஒரு கோணத்திலிருந்து அணுகினால், இன்றைய இலக்கிய உலகம் ஜீவனற்றதாய்த் தெரியலாம். உண்மையென்னவெனில் அது உழப்பட்டு விதைக்கப்படாமல் கிடக்கும் நிலம் போன்று ஆணைக்குட்படவும் எதையும் அங்கீகரிக்கவும் எதனுடனும் சமரசம் செய்து கொள்ளவும் தயாராக இருப்பது. இத்தகைய சமரசத்துக்கு உடன்படாததால் பின் நவீனத்துவம் இறந்து விட்டது.

17. பின் நவீனத்துவத்தின் இறப்பு முடிவானது 1960-இல்…அது பிறந்த வருடத்தில்.

18. எந்த காலகட்டத்தின் அரும்பெருங்கலைகளும் தோன்றியது தனிப்பட்ட அத்தியாவசியத்தினால் மட்டுமே. காலப்போக்கில் அதுவே இந்த theory அந்த theory என்று நாமகரணம் செய்யப்பட்டு பெரிதாக்கப்படுகிறது, அக்கலைகளை மக்களிடையே பெருமளவில் பரப்பும் பொருட்டு. பின் நவீனத்தைக் கொன்றது theory; இதில் வேடிக்கை என்னவென்றால் theory என்பதுமே பின் நவீனத்துவம்தான்.

19. பின் நவீனத்துவம் என்பது சில முடிவுகளின் எதிர்விளைவு…இரண்டாவது உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவின் முடிவுக்கு எதிர்விளைவு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ‘தானாகப் புலப்படும் உண்மை ‘ என்பதன் முடிவுக்கு எதிர்விளைவாக நவீனத்துவம் தோன்றியது போல். பின் நவீனத்துவம் இன்மையயும் இறப்பையும் பற்றி விரிந்துரைக்கையில், தன் இன்மையையும் இறப்பையும் பரிந்துரைத்து விட்டது.

20. பின் நவீனத்துவம் இறந்து விட்டது என்று கூறி விட முடியாது. ஆனால் அடையாளப்படுத்தக் கூடிய, அர்த்தமுள்ள எந்தவொரு இயக்கத்தையும் போல்–இம்ப்ரெஷனிஸம், டாடாயிஸம், ஸர்ரியலிஸம், மாடர்னிஸம், அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்ப்ரெஷனிஸம், முதலியன போல்– பின் நவீனத்துவமும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மேல் தளத்தில் பொங்கி நுரைத்து, பின் அடித்தளத்துக்கு மூழ்கி, அங்கிருக்கும் பிறவற்றோடு சேர்ந்து, வளமான கலாச்சார-கலைக் கலவையின் ஒரு பகுதியாகிறது. இந்த முழுகி, அழுகும் கணமே அந்த இயக்கத்தின் மரணம் என்று அழைக்கப் படுகிறது. ‘

இந்த இருபது பதில்களிலிருந்தும் நமக்குப் புலப்படுவது பின் நவீனத்துவம் நிச்சயமாக இறந்து விட்டது, முடிந்து விட்டது என்பதுதான்: அதைப் பொருளாதார அமைப்பு விழுங்கி, ஜீரணித்து, அதன் கழிவுகளை கலாச்சாரக் குழம்பில் மீண்டும் சேர்த்து விட்டதால்; பல்கலைக்கழக பண்டிதர்களின் அர்த்தமற்ற சண்டைகளின் காரணமாக ஒடுக்கப் பட்டதால் (முக்கியமாக அமெரிக்காவில்).

கேள்வி கேட்கும் முறையிலேயே தொடர்ந்து நாம் இந்தக் கேள்வியைக் கேட்கலாம்: ஏன் ? ஏன் பின் நவீனத்துவம் தன்னைப் பிற சக்திகள் விழுங்க அனுமதித்தது ?

பதில் பின் நவீனத்துவ புனைவிலக்கியம் தொடர்ச்சி, நீரோட்டம், தொகுப்பு, நேர்கோடு ஆகியவற்றிலிருந்து விலகி தொடர்ச்சியின்மை, சிதறல், முடிவின்மை, மையமின்மை, புனைவு பற்றிய மேம்பட்ட புனைவு (metafictionality), பன்முகத்தன்மை ஆகியவற்றிற்குச் சென்றது. காலப்போக்கில், பின் நவீனத்துவ புனைவிலக்கியம் தொடர்பற்ற நிலைகளின் தொடுப்பாக, கணங்களின் கூட்டலாக, சம்பந்தம் புரியாத பட்டியல்களாக, வார்த்தைக் கிறுக்கல்களாக மாறி, இறுதியில் தன்னைத் தானே அழித்துக் கொண்டது.

கேள்வி இலக்கியம் என்பது மொழியும் அல்லவா ? மொழி என்பது அழிய முடியுமா ?

பதில் இலக்கியமென்பது மொழியால் உருவாகியது. ஆனால் மொழியென்பது நிச்சயிக்கப்பட்ட அடிப்படை அணுக்களாலும் அவை சேரும் விதிகளாலும் தளையிடப்பட்டது. பின் நவீனத்துவ இலக்கியத்தின் சுவையும் முக்கியமும் (அதன் பலவீனமும் கூட) என்னவென்றால், அது மொழியின் இயற்கையான தளைகளை மீறி, மொழிக்கு அப்பாற்பட்டதைக் கூற முயன்றதுதான். சொல்ல இயலாததைப் சொல்ல முடியாது; இந்த இயலாமையைப் பற்றிப் பின் நவீனத்துவம் பேச முயல்கிறது.

கேள்வி இலக்கியம் என்பதே ஒரு படைப்புதானே. அது தனக்கென்று கூடவே ஒரு மொழியையும் படைத்துக் கொள்ள முடியாதா என்ன ?

பதில் இலக்கியம் என்பது படைப்பு அல்ல. அது ஒரு மறுபடைப்பு; புதிதாய் ஒன்றையும் படைக்காமல், புதிதல்லாதை மீண்டும் மீண்டும் படைக்கிறது–சூரியன் எப்படி வேறு வழியில்லாமல் தினம் தினம் புதிதல்லாததன் மேல் கண்விழிக்கிறதோ அது போல். பின் நவீனத்துவப் படைப்பிலக்கியம் நமக்கு அளித்தது அதுவரை தனிப்பட்ட அல்லது ஒட்டுமொத்த ஞாபகங்களிலிருந்து மறைக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, விரட்டப்பட்டவற்றையே. அதனால்தான் பின் நவீனத்துவ புனைவிலக்கியத்தை இலக்கியக் களவு (plagiarism) என்றும் தனக்கே எதிரியாவது என்றும் பலர் கூறியிருக்கின்றனர்.

கேள்வி இலக்கியமென்பது அதை எழுதியவரினின்றும் தனிப்பட்டதல்லவா ?

பதில் இலக்கியம் அப்படிப் பாசாங்கு செய்து கொள்ளலாம். ஆனால், எழுத்தென்பது அதை எழுதுபவரின் ப்ரக்ஞைக்குள் ஆழ்ந்திருக்கும் obsession, அவர் வாழும் சமூகத்தின் obsession ஆகியவை பற்றியது. பின் நவீனத்துவ இலக்கியத்தில் இது இன்னும் கொஞ்சம் முக்கியமாகிறது.

கேள்வி எழுத்தாளர் எழுத்தின் மூலம் தெரிவிக்க முயலும் உணர்வுதானே விமர்சனத்தின் திசையை நிர்ணயிக்கிறது ?

பதில் எழுதுவதற்கும் அதைப் படிப்பதற்கும் இடையே உள்ள எல்லைக்கோடு எப்போதும் தெளிவாக வரையப் படுவதில்லை. பின் நவீனத்துவ எழுத்தை ஒருவர் படிக்கும் விதம்தான் அதன் மோசமான விமர்சனத்தை நிச்சயிக்கிறது. தனது ‘The Pleasure of the Text ‘ புத்தகத்தில் ரோலண்ட் பார்த்தெஸ் சுட்டிக்காட்டுவது போல் ‘தன் எழுத்திலிருந்து உணரக் கூடாதது என்னவென்பதை எழுத்தாளரால் தேர்ந்தெடுத்து எழுத முடியாது ‘.

பின் நவீனத்துவ காலத்தில் (நான் பின் நவீனத்துவ காலத்தை இறந்த காலத்திலேயே அழைக்கிறேன் என்பதைக் கவனிக்கவும்) எழுதுவதென்பது ஒரு வித்தியாசத்தைப் படைப்பதே; புனைவு யதார்த்தத்தின் பிம்பம் என்று நம்ப வைக்கும் உபகரணமல்ல எழுத்து. இது நான் முன்பு சொன்னதற்கு முரணாகத் தோன்றலாம். புனைவிலக்கியம் என்பது மறுபடைப்பு அல்லது சொன்னதையே மீண்டும் சொல்வது என்று சொல்லியிருந்தேன். நான் இங்கு சுட்டிக்காட்ட முயலும் வித்தியாசம் எழுத்தின் பொருள்/கருவில் அல்ல. சொல்லும் விதத்தில், வடிவமைப்பில் உள்ள வித்தியாசம். இங்கு படைப்பு என்பது தெரிந்தவற்றைப் புதிதாய்ச் சீர்ப்படுத்த புதிய விதிமுறைகள் வகுப்பதேயாகும். தெரிந்து பழகிய விளையாட்டை அதே விதிமுறை கொண்டு ஆடுவதற்குத் தேவை வெறும் திறமை மட்டுமே, கலைத்திறன் அல்லவே.

எழுபதுகளில் மிஷெல் ஃபூக்கோ: ‘வித்தியாசத்தை விடுவிக்க நமக்கு ஒரு வேறுபட்ட சிந்தனை வேண்டும். இச்சிந்தனை தருக்கமும் மறுப்பும் அற்றது; பன்மையை வரவேற்பது; அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து விலகும் பாதைகளை உள்ளடக்கியது; ஒப்புதல் உள்ளது, அதே நேரத்தில் தனிப்படுத்துவதை உபகரணமாகக் கொண்டது; பாண்டித்திய விதிகளுக்குள் கட்டுப்படாது, தீர்வில்லாத கேள்விகளை எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் விளையாடும் வேறுபட்ட சிந்தனை. ‘

பின் நவீனத்துவ புனைவிலக்கியத்துக்கு இதை விடப் பொருத்தமான விளக்கவுரை இருக்க முடியாது. தன்னையே ஒரு விளையாட்டுப் பொருளாய் வாசகருக்குச் சமர்ப்பித்துக் கொள்கிறது பின் நவீனத்துவப் புனைவிலக்கியம்; வாசகரை எழுத்தினுள் பிணைத்து, ஒரு கண்டுபிடிப்பு உணர்ச்சியையும் ஒரு excitement-ஐயும், அங்கீகரிக்கப்பட்ட கலாச்சார, அழகியல் அமைப்புகளைக் கடப்பதால் ஒரு வினோதமான சங்கடத்தையும் விளைவிக்கிறது, வாசகருக்குள்.

இத்தகைய பின் நவீனத்துவத்தின் இறப்பினால் இன்றைய இலக்கிய உலகின் விதிமுறைகள் மாறி விட்டன. ஆனால், பரிசோதனை முயற்சிகளுக்கோ புதுமைகளுக்கோ இது முடிவல்ல. நானும் என் சக பின் நவீனத்துவ எழுத்தாளர்களும் புதுமைகள் தேவையில்லை என்று சொல்லி, வெகுஜன மீடியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் புது-யதார்த்தத்துக்கு (neo-realism) இலக்கியத்தைத் தாரை வார்க்கப் போவதில்லை. உண்மையைப் புரிந்து கொள்ள இயலாத குறைபட்ட மொழியும் எண்ணமும் தொடர்கிறது இன்றும்; இலக்கியம் இன்றும் பேச இயலாததைப் பற்றியே பேச முயல்கிறது. புது வடிவங்களின் தேடல்கள் மூலம் இலக்கியமென்பது மீண்டும் மீண்டும் இயலாதவற்றுக்கு உயிர் கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

நன்றி: ரேமண்ட் ஃபெடர்மனின் ‘க்ரிட்டிஃபிக்கேஷன்: போஸ்ட்-மாடர்ன் கட்டுரைகள் ‘

தமிழாக்கம்: காஞ்சனா தாமோதரன்.

-Thinnai-October 31 1999

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigationஉறைந்த கணங்கள் >>

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்