இவர்களது எழுத்துமுறை – 3 அகிலன்

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

வே.சபாநாயகம்.


1. நான் பகலில் முக்கியமாக அதிகாலையில் எழுதும் பழக்கமுள்ளவன். எழுதும்போது
கண்டிப்பாகத் தனிமை வேண்டும். அந்த வேளைகளில் மட்டும் யாருடைய குறுக்கீடும்
எனக்குப் பிடிப்பதில்லை. காப்பியும் தண்ணீரும் எனக்கு உற்சாகம் தருபவை.

2. அதிகாலையில் 5 மணி முதல் எழுகிறேன். ஒரு நாளைக்கு 5,6 பக்கங்கள் எழுதுவேன்.
மறுநாள் எழுதியதைப் படிப்பேன். அடிப்பேன். திருத்துவேன். சரியில்லாவிட்டால்
கூசாமல் கிழித்து எறிந்துவிட்டு, வேறு ஒன்று எழுதுவேன். பத்திரிகைக்குப் போகும்
வரை, நான் எழுதியவைகளைப் பன்முறை படித்துத் திருத்துவதுண்டு.

2. சில நாட்களில் மணிக்கணக்காகச் சிந்தித்தும்ஒரு வரிகூட எழுத முடிந்ததில்லை.
கற்பனைத் தேவியின் ஊடல், மிகுந்த தாபத்தைத் தருவதுண்டு. ஆனால் மறுநாளே அனுதாபம்
கொண்டு என் வயப்பட்டுப் பல பக்கங்களாக உருவாகிச் சிரித்திடுவாள்.
பத்திரிகாசிரியர்களின் தந்திகளும் அவசரத் தூதுவர்களும் கற்பனை ஓட்டத்தைத்
தூண்டிவிடுவதும் உண்டு.

3. கதாபாத்திரங்களுக்காக நான் எங்கும் தேடிப் போய்ச் சிரமப்படும்
வழக்கமில்லை.என்னைச் சூழ்ந்திருக்கும் மனிதர்களில் என்னைப் பாதிjfபவர்கள் என்
கதாபாத்திரங்களாகிவிடுவார்கள்! வழக்கமான மனிதர்களைவிடச் சிற்சில விஷயங்களிலாவது
குண மாறுதல்கள் உள்ளவர்களே என்னை மிகவும் கவர்ந்து விடுகிறார்கள். அவர்களை நான்
தப்ப விடுவதில்லை.

4. தினமும் இத்தனை பக்கங்கள் என்று நான் கணக்குப் பார்த்து கதை எழுதுவதில்லை.
அச்சு இயந்திரங்கள், பத்திரிகை வெளிவரும் தேதி இவைகள் என்னை நெருக்கினாலும்
என்கற்பனை என்னவோ இயந்திர ரீதியில் கட்டுப்பட மறுக்கிறது. ஒவ்வொரு வாரமும், சில
தினங்கள் அதன் போக்கில் விட்டுவிட்டு, திடீரென்று அதை வளைத்துக் கொள்வேன்.
முதலில் அது என்னிடம் கண்ணாமூச்சி விளையாடும். பிறகு அகப்பட்டுக் கொள்ளும்.
கற்பனை மனத்தின் ஊடலில் எழுத்தாளர் தவிக்கும் காலம், மிகவும் விந்தைக்குரிய
காலந்தான். இளம் காதலர்களின் ஏக்கம் நிறைந்த காலத்துக்கு அதனை ஒப்பிடலாம்.

5. வாழ்கையில் சந்திக்கிற அல்லது பழகுகிற ஒரு சிலரை நான் மாற்றியோ அல்லது
கற்பனைக் கலப்புடனோ கதாபாத்திரங்களை அமைக்கிறேன். சொல்ல விரும்பும் கதையைப்
பற்றி மேலெழுந்தவாரியாக ஒரு உருவம்
(Outline) அமைத்துக் கொள்ளுவேன். கதையை எழுதப்போகும் சமயத்தில்,
கதாபாத்திரங்களுக்குரிய பண்புகளும், குணங்களும், நிகழ்ச்சிகளும் கதையின்
ஓட்டமும் தாமாகவே அமைந்துவிடுகின்ற என்றுதான் சொல்ல வேண்டும்.
அதாவது எழுதும் நிலையில் (Semi conscious or Unconscious) அரை நினைவோ அல்லது
நினைவற்ற நிலையில் இருந்தோதான் என்னுடைய கதைகள் அநேகமாக எழுதப்படுகின்றன.
உலகத்தின் ஓரத்துக்கே சென்று ஓரளவு என்னை மறந்து எழுகிறேன் என்றுகூடச்
சொல்லலாம். கொஞ்சமும் சத்தம் இல்லாத இடத்திலிருந்துதான் எழுதுவேன். நான்
எழுதும்போது என்னை மறப்பதால், யாரும் என்னை எழுதும் நேரத்தில் பார்ப்பது
இயலாது.

6. சிறுகதைகளுக்குக்குறிப்பு எடுப்பதில்லை. நாவல்களுக்கு எழுதுவதற்கு முன்பாகவே
எழுதவேண்டிய விஷயங்களைச்(Raw materials) சேகரித்துக் குறிப்பில் சேர்ப்பேன்.
நான் எழுத நினைக்கும் பாத்திரங்களோடு பழகி, அவர்களுடைய இயல்புகளையும்
குணங்களையும் எழுதப்போகும் நிகழ்ச்சிகளில் பொருத்திப் பார்ப்பேன்.
பெரும்பாலும் கதை மனத்தில் உருவானதும், தலைப்பும் உருவாகிவிடுகின்ற காரணத்தால்
தலைப்புகளை முன்னதாகவே நான் வைக்கிறேன். 0

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்