உயிர்பெற்ற சிற்பங்கள் கலாப்ரியாவின் “நினைவின் தாழ்வாரங்கள்”

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

பாவண்ணன்


கலாப்ரியா தமிழ்மொழியின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவர். தன் எழுத்தின் வழியாக பரவலான வாசகதளத்தை அடைந்தவர். அவருடைய பல கவிதைவரிகளை உத்வேகத்தோடு மனப்பாடமாகச் சொல்கிறவர்களை நான் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் கவிதைத்தளத்திலிருந்து ஏதோ ஓர் உணர்வு அவரை உரைநடையின்பால் செலுத்த, குன்றாத மனஎழுச்சியோடு வரிசையாக நாற்பத்தொன்பது கட்டுரைகளை எழுதிவிட்டார். புதிதாக உருவாகிவரும் இணையதளயுகம் அவரை வரவேற்று அணைத்துக்கொண்டது. அந்திமழை என்னும் இணையதளம் இக்கட்டுரைகளை ஒவ்வொரு வாரமும் பதிவேற்றி வெளியிட்டது. அச்சு ஊடகத்தில் அவருக்குக் கிடைத்த அதே அளவு வாசக ஆதரவு, இணைய ஊடகத்திலும் கிடைத்தது என்றே சொல்லவேண்டும். எந்த முன்திட்டமும் இல்லாத ஒரு மனம் உத்வேகத்தின் காரணமாக, தன் நினைவிலிருக்கும் மனிதர்களைப்பற்றியும் நிகழ்ச்சிகளைப்பற்றியும் தன்னிச்சையாக எழுதியவையாகவே இக்கட்டுரைகள் காணப்படுகின்றன. பெரிதும் தன்வரலாற்றுச்சாயல் பொருந்திய இக்கட்டுரைகளில் ஐம்பதுகள் தொடங்கி எழுபதுகள்வரையிலான முப்பதாண்டுகால இடைவெளியில் காலமும் மனிதர்களும் மாற்றமடைந்த விதத்தின் தடம் அழுத்தமாகப் பதிந்திருப்பதைப் பார்க்கலாம்.

மொழியை தவிர்க்கமுடியாத ஒரு பேசுபொருளாக மாற்றிய திராவிட இயக்கத்தின் தாக்கம் பற்றிப்படர்ந்த முக்கியமான காலகட்டம் என்று ஐம்பதுகளையும் அறுபதுகளையும் சொல்லலாம். அந்த உணர்வால் ஈர்க்கப்படாத இளைஞர்கள் மிகவும் குறைவு. தேசியம் பேசிய காங்கிரஸ் இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் ஈர்க்கமுடியாத அளவுக்கு திராவிட இயக்கம் சமூகத்தை தன்னைநோக்கி ஈர்த்துத் தக்கவைத்தது. மொழியை முன்வைத்து திரட்டப்பட்ட இளைஞர்கள் அணியை, மொழியின் ஆழத்தையும் சாரத்தையும் மொழிக்கும் சமூகத்துக்குமான இணைப்பையும் ஆய்ந்து உணர்த்துகிற அறிவியக்கமாக வளர்த்தெடுப்பதற்கு மாறாக, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற உதவும் சக்தியாக மாற்றி வார்த்தெடுக்கவே அதிக ஆர்வம் காட்டியது. ஒரு மாற்றத்துக்கான கனவோடு அரசியல் தளத்தைநோக்கிப் பலரும் திரண்டெழுந்த அதே காலத்தில், தன்னிச்சையாக தமிழின் ஆழத்தைநோக்கிப் பயணம் செய்தார்கள் சிலர். இப்படி பயணம் செய்தவர்களே பிற்காலத்தில் நல்ல படைப்பாளிகளானார்கள். சா.கந்தசாமி, விக்கிரமாதித்யன், கலாப்ரியா ஆகியோர் முக்கியமான எடுத்துக்காட்டுகள்.

கலாப்ரியாவின் பல கவிதைகள் நுட்பமான சித்திரத்தன்மை கொண்டவை. மிகக்குறைந்த கோடுகளைமட்டுமே துணையாகக் கொண்டு உருவத்தின் சாயலை நெஞ்சில் பதியவைப்பவை. அவருடைய கட்டுரைகளிலும் அந்தத் தன்மை வெளிப்படுகிறது. கவிதைகளில் சிற்சில வரிகளிடையே கருவறைச் சிற்பங்களாகக் காணப்பட்ட மனிதர்கள், பல கட்டுரைகளில் தம் உண்மையான ஆகிருதியுடன் வெளிப்படுகிறார்கள்.

கலாப்ரியாவின் கவிதைகளில் காணப்படும் மௌனம் பல கட்டுரைகளிலும் சிறப்பானவகையில் தன் பங்கை ஆற்றுகிறது. வகுப்பில் பதின்மூன்றாம் வாய்ப்பாடு சொல்லும்போது தப்பும் தவறுமாகச் சொல்லி வகுப்பாசிரியரிடம் தண்டனை பெறும் பையன்களையும் சிறுவனான கதைசொல்லியையும் பார்த்து வகுப்பில் உள்ளவர்கள் அனைவருமே சிரிக்கும்போது, சிரிக்காமல் மௌனம் காக்கிற மீனாட்சி என்னும் சிறுமியைப்பற்றிய குறிப்பு மிக அழகாக இருக்கிறது. எது அவளை சிரிக்கவிடாமல் தடுத்தது? கலாப்ரியா அந்த உணர்வை வாத்சல்யம் என்ற சொல்லால் அடையாளப்படுத்துகிறார். சிரிக்க மறுத்த அந்த முகம் இன்று அவர் எழுத்தில் ஒரு சிற்பமாக நிற்கிறது. அரையணாகூட கொடுக்காத அண்ணன் அண்ணாவின் இறுதிஊர்வலத்தைக் காணச் செல்கிற தம்பிக்கு முப்பது ரூபாய் கொடுத்தனுப்பும் காட்சி இன்னொரு சிற்பம். வாடகைக்குக் குடியிருந்தவனுடன் கொண்டிருந்த தொடர்பு அம்பலப்பட்டுப் போனதால், ஊரைவிட்டே மாற்றல் வாங்கிக்கொண்டு சென்ற குடும்பத்தைச் சேர்ந்த பெண், சில ஆண்டுகளுக்குப் பிறகு தூய உடைகளுடன் துறவிமடத்தில் காணப்படும் தோற்றம் மற்றுமொரு சிற்பம். இப்படி கலாப்ரியா எழுத்தில் வடித்திருப்பவை ஏராளமான சிற்பங்கள்.

கலாப்ரியாவின் சித்தரிப்பில் ஏராளமான பெண்பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். பெரும்பாலானோர் துன்பமயமான வாழ்வை ஏற்றிருப்பவர்கள். கசப்புகளையும் சலிப்புகளையும் புன்னகையோடும் ஒரு துளி கண்ணீரோடும் கடந்துபோகும் சக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள். அம்மாவின் காதலனை வரவேண்டாம் என்று சொல்லித் தடுக்கப் பார்த்து, பிறகு அவனால் அடிபட்டு மரணமடைந்துபோகிற பெண்டீச்சர். தன் குழந்தைக்குச் சுரக்கும் பாலை பிறர் குழந்தைகளுக்கும் அருந்தக் கொடுக்கும் பலகாரக்கடை அம்மா. பாம்புக்கடிபட்ட மகனுக்கு சங்கரன்கோயில் புத்துமருந்தை எடுத்து வந்து பள்ளிக்கூட வகுப்பறையில் அவனைச் சந்தித்துக் கொடுக்கிற அம்மா. தன் தாயின் படம் ஏதேனும் இருந்தால் கொடுக்குமாறு கேட்டுவரும் மகனிடம் அப்படி ஏதும் இல்லையென்று சாதித்து மறுத்துவிட்டு, அவள் இடம்பெற்றிருக்கிற ஒரு குடும்பப்படத்தை பெட்டியிலிருந்து தேடியெடுத்து, கிழித்து நெருப்பிலிட்டுவிட்டு, நினைவைப் பொசுக்கமுடியாமல் தவிக்கிற அம்மா. நண்பனைத் தேடிவந்த பையனிடம் “என்னத்த தொறக்க? தொறந்த ஊட்டுல நாய் நொழஞ்சமாரி நொழஞ்சிட்டியா?” என்று திட்டியபடி புடவையைச் சரிப்படுத்திக்கொள்ளும் இளம்பெண். சூடான கொழுக்கட்டைகளை துணியால் மூடியெடுத்துவந்து கோயில் சிலையருகே காத்திருப்பவனிடம் கொடுத்துவிட்டு வேகமாகக் கடந்துபோகும்போது, கொழுக்கட்டையின் சூட்டால் இடுப்பு கன்றிவிட்டதாக சைகைகாட்டிவிட்டுச் செல்லும் பெண். ஒவ்வொரு சொத்தாக விற்கவிற்க, கணவன் சொன்ன இடங்களில் கையெழுத்து போட்டுப்போட்டுக் கொடுத்தே கைசலித்துவிட்டதாகச் சொல்லும் பாட்டி. ஒரு ரயில்பெட்டி அடுக்கு செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டு, அதைப் பார்க்காமலேயே போய்விடும் அம்மா. வாங்கி கடனுக்குரிய தொகையைக் கட்டிவிட்டு, சைக்கிளை எடுத்துக்கொண்டு போகலாம் என்று சொல்பவனை வழிக்குக் கொண்டுவரும் தந்திரமாக “ஒழுங்கா தரிங்களா இல்ல போலீஸ்க்கு போகட்டுமா என்று அச்சுறுத்தியதுமே, எதுக்குங்க வம்பு? குடுத்துத் தொலையுங்க..”என்று கணவனை வற்புறுத்தும் பர்மா அகதிப்பெண். இப்படி ஏராளமான பெண்களை நம் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் கலாப்ரியா. எல்லாருமே ஒருவகையில் பாவப்பட்டவர்கள். அவர்கள் உலகம் மிகச்சிறியது. சுற்றியிருக்கிறவர்கள் அவர்களை மிகவும் உதாசீனமாக நடத்துகிறார்கள் அல்லது கொடுமைப்படுத்துகிறார்கள். எல்லாக் குடும்பங்களிலும் அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வுக்கு ஏங்குகிறவர்களாகவே பெண்கள் இருக்கிறார்கள். ஏமாற்றங்களையும் அவமானங்களையும் இல்லாமையையும் சகித்தபடி நாட்களைத் தள்ளுகிறார்கள். காலம் அவர்களை ஒவ்வொருமுறையும் குழியில் தள்ளிவிட்டு பகடி செய்கிறது. தன் மனஉறுதியால் நிமிர்ந்து காலத்தைப் பார்த்து பகடி செய்கிறார்கள் பெண்கள்.

இளைஞர்களுக்கே உரிய அரசியல் ஈடுபாட்டையும் திரைப்படநாட்டத்தையும் அடிக்கடி நினைவுபடுத்தியபடி நகர்கின்றன பல கட்டுரைகள். அதே சமயத்தில் அந்த இளைஞர்களிடையே உள்ள நெருக்கத்தையும் விலகலையும் எரிச்சலையும் கோபத்தையும் பதிவு செய்கின்றன. அண்ணாவின் இறுதி ஊர்வலம், எம்.ஜி.ஆர்.மன்ற நடவடிக்கைகள், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டம் என பல முக்கியமான சமூகச் சம்பவங்கள் கலாப்ரியாவின் கட்டுரைகளில் பதிவாகியிருக்கின்றன. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு வடிவமாக புகைவண்டி நிலையத்திலும் அஞ்சல் நிலையங்களிலும் வைத்திருக்கப்படும் பெயர்ப்பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை அழிப்பது தமிழகமெங்கும் மேற்கொள்ளப்பட்டது. 1965ல் நடைபெற்ற அந்தப் போராட்டத்தை உயிர்ப்போடு சித்தரிக்கிறார் கலாப்ரியா. ஆயிரக்கணக்கில் கூட்டம்கூட்டமாகக் கிளம்பிய அந்தப் படையில் அவரும் இருக்கிறார். ஒவ்வொரு நிலையத்திலும் ஆரவாரத்தோடு இறங்கி, பெயர்ப்பலகை எழுத்துகளை அழிக்கும் வேலையில் ஈடுபடுகிறார். இறுதி நிலையத்தை அடைந்தபிறகு, ரயில் திரும்பும்போது ஒற்றைப்படை எண்ணிக்கையில்மட்டுமே மாணவர்கள் இடம்பெறுகிறார்கள். புறப்படும்போது இருந்த ஆயிரக்கணக்கான கூட்டம் போன இடம் தெரியவில்லை. பாதுகாப்புக்காக வைத்துவிட்டுச் சென்ற இடத்திலிருந்து மிதிவண்டியை எடுப்பதில் புதுப்புதுப் பிரச்சனைகள். தார்ப்புள்ளிகளால் அழுக்கடைந்த உடையோடும் அழுக்கான உடலோடும் இரவில் யாருக்கும் தெரியாமல் வந்து மாடியில் படுத்து உறங்கிவிடுவதோடு அப்பகுதி முடிவடைகிறது. ஒரு சிறுகதைக்குரிய நுட்பத்தோடும் கலைஅமைதியோடும் சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்த நிகழ்ச்சி இத்தொகுப்பின் முக்கியமான பகுதி.

தேரோட்டத்தின்போது வெடிக்கிற வன்முறையின் விவரணை நுட்பமாக இருக்கிறது. இளைஞர்கள், காவலர்கள் இருவரையுமே அவரவர் வரையறைகளில் வைத்துக் காட்டுகிறார் கலாப்ரியா. நிலையைவிட்டு வெளியே கிளம்பும் தேரை எல்லாத் தெருக்களுக்கும் இழுத்துச் சென்றுவிட்டு மறுபடியும் நிலைக்கே இழுத்துவருவதில் முக்கியப் பங்காற்றுவது இளைஞர்கள் சக்தி. தம் முக்கியத்துவம் உணரப்படவேண்டும் என்பதற்காகவே அவர்கள் உரத்த குரலில் முழக்கமிடுகிறார்கள். மனத்தில் தோன்றுவதையெல்லாம் பேசுகிறார்கள். வழியில் பலரோடு வார்த்தையாடி வம்புக்கிழுக்கிறார்கள். காவலர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். எல்லாவற்றையும் பொறுமையாகச் சகித்துக்கொள்ளும் காவலர்கள் தேர் நிலையை நெருங்கும் தருணத்தில் ஓடித் தப்பிக்க முடியாதபடி குறுகலான இடம்பார்த்து இளைஞர்களை அடிக்கத் தொடங்குகிறார்கள். எவ்விதமான மிகையுணர்ச்சிக்கும் இடமளிக்காமல் கலாப்ரியா இத்தருணத்தை முழுவலிமையோடு தீட்டியுள்ளார்.

வாழ்வில் முக்கியமான எல்லாத் தருணங்களையும் மனிதர்களையும் அந்தந்த காலகட்டத்துத் திரைப்படப்பாடல்களோடு பொருத்தி நினைவின் அடுக்கில் தேக்கிவைத்திருக்கிறது கலாப்ரியாவின் மனக்கிடங்கு. தன் தந்தையின் மறைவைக் குறிப்பிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாளை நமதே திரைப்படம் பார்த்ததற்கு மறுதினம் என்றே எழுதுகிறார். தம் வீட்டுவேலைகளை, கிராமத்தைக் கடந்துசெல்கிற புகைவண்டி அல்லது பேருந்தின் பெயர்களையொட்டியும் வீட்டுநிகழ்ச்சிகளை கோயில் திருவிழா, ஆற்றுவெள்ளம், அறுவடை, பொங்கல் என விசேஷங்களையொட்டியும் நினைவுவைத்துச் சொல்கிற கிராமியப்பண்பாகவே இதைப் பார்க்கத் தோன்றுகிறது. திரைப்படம் என்று கலாப்ரியா குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் அதில் இடம்பெற்றிருக்கும் கலைநயம் மிக்க பாடல்வரிகள், வசனவரிகள், அதற்காகத் தீட்டப்பட்ட புதுமையான சுவரொட்டிகள் ஆகியவற்றைப்பற்றியே அதிகமும் குறிப்பிடுகிறார். இசையையும் ராகத்தையும்கூட திரைப்பாடல்களின் துணையோடுதான் மனத்தில் நிரப்பிவைத்திருப்பவராக இருக்கிறார். எல்லாவிதமான நாட்டங்களிலும் பொதுவாக இழையோடும் அம்சம் கலைவிருப்பம். ஆழ்ந்த கலைவிருப்பமே திரைப்படநாட்டமாக இயங்கியிருப்பதாகச் சொல்லலாம். கலைவிருப்பம்கூட ஒருவகையில் கிராமியப்பண்புதான். கலாப்ரியா நம் காலத்தில் வாழும் மகத்தான கிராமியக்கலைஞர். பார்த்ததையும் கேட்டதையும் நயமாகச் சொல்லிப் பகிர்ந்துகொள்ளும் கிராமியக்கலைஞர். எடுத்துக்காட்டாகச் சொல்ல “எம்பாவாய்” முதல் “திறங்கெட்டு” வரை ஏராளமான பல கவிதைகள் உண்டு. இப்படி அவருடைய கவிதைகள்மட்டமே இன்றுவரை சாட்சியாக இருந்தன. இன்று கட்டுரைகளும் தோன்றியிருக்கின்றன.

( நினைவின் தாழ்வாரங்கள். கட்டுரைகள். கலாப்ரியா. சந்தியா பதிப்பகம். ப.எண்57, 53வது தெரு, 9வது அவென்யு, அசோக் நகர், சென்னை-83.விலை. ரூ225)

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்