கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘அபராதி’ எனும் குற்றமிழைத்தவன்

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

எம். ரிஷான் ஷெரீப்,இலங்கை.


01.
கால ஓட்டத்தில் எதையும் நின்று இரசிக்கவிடாதபடி கணங்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. தாண்டிவந்த ஒவ்வொரு கணத்திலும் ஏதாவதொரு பாதிப்பு இல்லையெனில், அக் கணங்கள் நினைவுகளில் தேங்கிவிடுவதுமில்லை. கவிதைகளாகி விடுவதுமில்லை. ஒரு கவிஞன் எனப்படுபவன் தான் காணும் எல்லாவற்றிலும் கவிதையைத் தேடுகிறான். காண்கிறான். கண்டடைகிறான். பழைய நினைவுகள் பாரமாக உணரும்வேளை அவற்றை கவிதையாக இறக்கி வைத்துவிட்டு அடுத்தடுத்த நினைவுகளில், நிகழ்வுகளில் அவன் மூழ்கி விடுகிறான். அவையும் பின்னாட்களில் கவிதைகளாகி விடும்.

அவ்வாறு நினைவுகளாலும், நிகழ்வுகளாலும் உணர்வுபூர்வமாக எழுதப்பட்ட கவிதைகளால் பூரணம் பெற்றிருக்கிறது கவிஞர் ஃபஹீமா ஜஹானின் இரண்டாவது கவிதைத் தொகுதியான ‘அபராதி’. குற்றமிழைத்தவனெனப் பொருள் தரும் ‘அபராதி’யில் சிறு வயது முதல் தன்னைப் பாதித்த, தனது நினைவுகளில் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் கணங்களில் பலவற்றைக் கவிதைகளாக்கியிருக்கிறார் கவிஞர். தொகுப்பிலுள்ள கவிதைகளனைத்துமே நேரடியாக அக்கணங்களுக்குள் நம்மை இழுத்துச் செல்பவை. அந்தக் கணங்களில் கவிஞர் உணர்ந்தவற்றை நாமும் உணரச் செய்பவை.

ஒரு பெண் என்பவள் சமூகத்தால், தன்னைச் சூழ இருப்பவர்களால் பல வகை இன்னல்களுக்காளாக நேரிடுவதால் அதனைச் சாடியே அனேக கவிதைகள் முந்தைய தொகுப்பான ‘ஒரு கடல் நீரூற்றி’யில் உள்ளவை போல இத் தொகுப்பிலும் உள்ளன. ஆனால் வேறு வேறு பரிணாமங்கள். வேறு வேறு துயரங்கள். முன்னர் எழுதப்படாதவற்றின் மிச்சங்கள். யாரும் இன்னும் தொட்டுக் காட்டி விடாதவை புதுவிதமான, தனக்கேயுரித்தான கவிதை மொழியில் வெளிப்பட்டிருக்கின்றன.

‘ஆதித் துயர்’ தலைப்பே அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரை பெண்கள் அனுபவிக்கும் துயரங்களைச் சொல்கிறது. காலங்காலமாக அதிகாரமிக்கவர்கள் காட்டும் வழியில் பெண் பயணிக்க வேண்டியவளாகிறாள். அவ் வழியில் ஏற்படும் இடர்களை அவள் பொறுத்துக்கொள்ள வேண்டும். அவளாக வேறு வழி தேடிக் கொள்வாளாயின் சமூகத்தை இழிவுபடுத்துபவளென பல வேறு பெயர்களால் முத்திரை குத்தப்பட்டு விடுகிறாள். அக் கவிதையில்

வெய்யில்
மிகப் பெரும் தண்டனையை
வழி நீளப் பரவவிட்டுள்ளது

இங்கு வெய்யில், இயற்கைக் காரணிகளால் பெண்கள் படும் துயரங்களையும்,

வேட்டை நாய் போல
அவள் முன்னே
ஓடிச் செல்கிறது நிழல்

இங்கு வேட்டை நாய், சமூகத்தாலும் சூழ்ந்திருப்பவர்களாலும் ஏற்படும் துயரங்களையும் குறிப்பதாகக் காண்கிறேன். ஏதேனுமொரு முன்னேற்றப் பாதையில் பெண்ணானவள் தன் பாதங்களை எட்டிவைக்கும்போதெல்லாம் வேட்டை நாயைப் போல அழியா நிழல் அவளை வழி மறிக்கிறது. குறுக்கிடுகிறது. அதையெல்லாம் பொறுமையாகத் தாண்டி அவள் நடைபோட வேண்டியவளாகிறாள். அக் குறுக்கீடுகள் வழிவழியாகத் தொடர்வதை கவிதையின் இறுதிப்பகுதி இப்படிச் சொல்கிறது.

பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும்
தேங்கி நடுநடுங்குகிறது
ஆதியிலிருந்து தொடரும் துயரம்

அம்மா எனும் ஒற்றைச் சொல், ஒரு வெளிச்சப் புள்ளியாக நம் ஒவ்வொருவருடனும் என்றென்றும் கூடவே வருவது. இடர் சூழும் கணம் தோறும் வாய் தவறியேனும் அம்மா என்று உச்சரித்து விடுகிறோம். வலியகற்றும் மருந்து போல அந்தச் சொல்லுக்கே அவ்வளவு வலிமையிருக்கிறது.

வாழ்க்கை முழுதும் நாம் கடந்துபோகும், நம்மைக் கடந்துபோகும் ஜீவன்களில் தாய் மட்டுமே இதயத்தின் அடித்தளத்தில், முதல் தடமாக, என்றென்றும் நம்மால் மறக்கமுடியாதபடி வீற்றிருப்பாள். நம் மனதின் மகிழ்வு கண்டு உண்மையாய் பூரிக்கவும், துயரம் கண்டு உண்மையாய் வருந்தவும் அவளால் மட்டுமே முடியும்.

அன்பு முழுவதற்கும் ஒரு உருவம் கொடுக்க நினைத்தால், அது அம்மா என எழுந்து நிற்கும். ஆனால், நம்முடன் கூடவே இருக்கையில் அந்த முழுமையான அன்பை நாம் கண்டுகொள்ளத் தவறி விடுகிறோம். ஒளி மிக்க சூரியனை அருகில் வைத்துக் கொண்டு, வெளிச்சத்தைத் தேடி அலைவது போல வேறெங்கெங்கோ எல்லாம் அன்பைத் தேடி அலைந்தபடி இருக்கிறோம்.

கவிஞர் ஃபஹீமா ஜஹானின் ‘அம்மா’ கவிதை சொல்லும் செய்தியும் அதுதான்.

இருக்கும் இரு கரங்களும்
போதாதெனப் புலம்பும் அம்மாவின் முதுகின் பின்னால்
எப்பொழுதும் துரத்திக் கொண்டிருக்கும்
இரக்கமற்ற சொற்களும்
இங்கிதமில்லாக் கட்டளைகளும்
ஓய்ந்திருக்கும் இடந்தன்னைப் பறித்துக் கொண்டிருக்கும்
ஓராயிரம் பணிவிடைகளும்

என ஆரம்பிக்கும் கவிதையானது நமது எல்லோர் வீடுகளிலும் நிகழும் பல விடயங்களை வெளிப்படையாகச் சொல்கிறது. வீடுகளில் இல்லத்தரசி என எளிதாக வகைப்படுத்தப்படுபவள் வீட்டிலாற்றும் பணிகளெதுவும் எவராலும் பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதேயில்லை.

வருத்தம் கவிழ்ந்த உடலுடன்
என்றாவது அவள் வீழ்ந்து தூங்கும்
ஆழ்ந்த உறக்கத்தை அதிரவைத்துக் கலைக்கும்
தண்ணீர்க் குவளையொன்றுக்காகவோ
அற்பச் சொல்லொன்றுக்காகவோ
கூச்சலிடும் ஒரு குரல்
நடைப்பிணம் போல எழுந்து வரும்
அவளது பாதங்களில் பின்னும்
யுகங்களாகச் சிதைக்கப்பட்டுவரும் நிம்மதியொன்று

என்றோ விதியாகித் தொடரும்
நியதிகளில் நசுங்குண்டவாறு
இரவு நெடு நேரம் வரைத்
துயிலை விரட்டி விரட்டிக் காத்திருப்பாள்
எல்லோரும் உண்டு முடித்து எஞ்சும்
குளிர்ந்த உணவுக்காக

என நிதர்சனங்களை வெளிப்படையாகச் சொன்னபடி தொடர்கிறது கவிதை.

02.
இலட்சியங்கள் பலவற்றைக் கொண்ட பெண்ணை, பல பொறாமைக் கரங்கள் வழி மறித்து நிற்கும். பறக்கவென நாடும் அவளது சிறகுகளைப் பிடுங்கி எறியவெனக் காத்துக் கிடக்கும். அவளது நடைபாதைகளை முட்களால் நிரப்பிவிட்டு, தடுக்கிவிழுகையில் கைகொட்டிச் சிரிக்கும். ஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகள் சமூகக் கட்டமைப்பு, காதல், கலாச்சாரம் எனப் பலவற்றாலானது. அவ்வாறாக பலவகையான தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன தொகுப்பிலுள்ள ‘அவளை வழியனுப்பிய இடம்’ , கிரீடங்களை அவமதித்தவள்’, ‘காட்டுமிராண்டியிடம் சிக்குண்டவள்’, ‘தற்கொலை’, ‘எல்லைக்கோட்டில் தடுக்கப்பட்டவள்’ ஆகிய கவிதைகள்.

பாதைகள் அழைக்கின்றன
ஆசைகள் நிரம்பிய உள்ளம் அழைக்கிறது
ஆனாலும்
அவளை ஆழிக்குள் புதைக்கிறாய்

எனத் தொடங்கும் ‘அவளை வழியனுப்பிய இடம்’ கவிதையானது,

அதிகாலையில்
தூய அருவியொன்றிலிருந்து
அவளது எளிய குடிசை நோக்கிச்
சுமந்து வந்த தெள்ளிய நீர்க்குடத்தை -நீ
கல்லெறிந்து உடைத்த வேளை
தவத்தில் மூழ்கியிருந்த
அவள் கானகத்து மான்கள்
திகைத்தோடித் திசை மறந்தன

எனத் தொடர்கிறது. இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் தெள்ளிய நீர்க்குடம் எனும் அழகிய குறியீடு, சலனமேதுமற்றிருக்கும் பெண்களின் இளகிய மனதிற்கு மிகப் பொருத்தமாகக் கையாளப்பட்டிருக்கிறது. தூய அருவியிலிருந்து அவளேந்திச் சென்ற தெளிந்த நீரைச் சிதறடிப்பதன் மூலம் அவளை தாகத்திற்குள்ளாக்கி தன்னிடம் கையேந்தச் செய்வது உடைத்தவனின் திட்டமாக இருந்திருக்கக் கூடும்.

மீளவும் உடைத்திட முடியாக்
கலயம் சுமந்து புறப்பட்டவளைக்
கலங்கிய நீர் ஓடைகளில்
திரும்பத் திரும்ப இறக்கிவிட்டாய்
வீடடைய முடியாத
இருள் வழியெங்கும்
அவளது பாதங்களை அலைக்கழித்தாய்

அவள் நீர் ஊற்றிக் காத்திருந்த
செழிப்புமிகு பயிர் நிலங்களில்- உனது
அடங்காப்பிடாரி ஆட்டுக் குட்டிகளை
விளையாட அனுப்பினாய்

அடுத்ததாக அவளைப் பட்டினியில் ஆழ்த்துவதற்காக, அவளது பயிர் நிலங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளில் மிகுந்த வன்மத்தோடு இறங்குகிறான். தாகத்திலும் பட்டினியிலும் அவளைத் தள்ளிவிடுவதன் மூலம் அவளது முழுவதுமான வாழ்வாதாரங்களைச் சிதைப்பது அவன் நோக்கமெனில், இது பல பெண்களின் வாழ்வினை அடியொற்றிய கவிதைதானே ?!

இதே போன்றதொரு இன்னுமொரு கவிதைதான் ‘எல்லைக்கோட்டில் தடுக்கப்பட்டவள்’ கவிதையும்.

முறைப்பாடுகளுக்கு அஞ்சிய
எல்லாக் காவலரண்களும்
அவளை வெளியே துரத்துகின்றன

எனத் தொடங்கும் கவிதை, தனக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து முறையிடச் சென்ற இடத்திலும் அநீதியிழைக்கப்படுவதை ஆரம்பவரிகளில் உணர்த்துகிறது. தொடர்ந்து பெண் வாழ்வின் பல அவலங்களைச் சொல்லி,

இன்று…
கின்னரர் தம் இசையிழந்த
நிலமெங்கும்
அவளது ஒப்பாரி அலைகிறது
அரசனைத் துதிபாடிச் செல்வோரின்
கால்களின் கீழே
பேரவலத்தின் ஓசை மாண்டொழிகிறது

என முடிகிறது. ‘காட்டுமிராண்டியிடம் சிக்குண்டவள்’ கவிதையில் சிறுவயது தொட்டே ஒரு பெண்ணின் வாழ்வில் கொடூர ஆட்சி செலுத்தும் அதிகாரங்கள் நிறைந்த, நேரடியாக தீய நடவடிக்கைகள் கொண்டவரைச் சாடுகிறார் இப்படி.

உனது காலடியோசைகளில்
அவளது பாடல்கள் மெளனித்துப் பதுங்கிக் கொண்டன
தீவைத்த மலரெனப் பொசுங்கிவிழும்
அவளது புன்னகையை மிதித்தவாறு
நித்தமும் வலம் வந்தாய்
அவள் ஒளியினைத் தரிசித்த
எல்லா வாசல்களையும்
வாளேந்தியவாறு அறைந்து சாத்தினாய்
மலையென அழுத்தும் இம்சைகளை
அந்த வீடெங்கும் அவிழ்த்து விட்டிருந்தாய்

………….
………….
அந்தச் சிறுபெண்
உணர்வுபெற்றெழுந்த ஒவ்வொரு வேளையிலும்
உன் கோரப்பற்களால் தீண்டித் தீண்டித்
துடிதுடிக்க விட்டாய்
எக்காலத்திலும் கருணையைச் சிந்தாத கண்களில்
தீயினைக் காவித்திரிந்தாய்

‘தற்கொலை’ கவிதையில் இதே கருத்து வேறு விதமாக வெளிப்பட்டிருக்கிறது.

அற்பப் புழுதான் – நீயெனினும்
வலுத்த குரலுடனும்
ஓங்கிய கரங்களுடனும்
எப்பொழுதும் அவளை விரட்டினாய்
ஆதித்திமிரின் அடங்காத ஆங்காரத்துடன்
எளியவளின் தேவைகளை
எட்டி உதைத்தாய்

03.
காதல் இரு பார்வைகளின் சங்கமத்தில் பிறக்கிறது. பார்த்துக் கொள்ளும் வேளையில் பேரழகென மிளிரும் அது, எதிர்காலமும், தம்மைப் பார்த்திருக்கும் சுற்றுச் சூழலும், சமூகமும் குறித்த சிந்தனை எழும்போது அச்சத்தைத் தந்துவிடுகிறது. அது விருப்பமின்றி ஒரு பிரிவுக்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறது. இவ்வாறாக ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் பரஸ்பர நேசம் பார்வைகளால் பகிரப்படும் தருணங்கள் நிறைந்த மழை நாளின் பயணமொன்றை அழகுறச் சொல்கிறது ‘காட்டில் பெய்த மழை’ கவிதை.

மழை முகில்கள் தொங்கிக் கிடந்த அதிகாலையில்
நெடுந்தூரம் கடந்தோம்
உடனிருந்த சிறுவர்களின் சேட்டைகளில்
ஒருவரையொருவர்
எண்ணிப் பயணிக்கும்
கனவுகளில் இருந்து மீண்டோம்

எனத் தொடரும் கவிதையில் மலையையும் ஏந்தும் தைரியமும் பலமும் பெற்றவனாக ஆணையும், வீழ்ந்து சிதறி நீரோடு கலந்து பயணிக்கும் மழைத்துளியாக, இன்னொன்றுடன் சார்ந்து பயணிக்கவேண்டியவளாக பெண்ணையும் சித்தரித்து, ஆணின் பலம் வாய்ந்த நிலையையும், பெண்ணின் பலவீனமான நிலையையும் இப்படிப் பிரித்துக் காட்டுகிறார் கவிஞர்.

வழி நீளப் பேரிடிகள் முழங்கி அச்சுறுத்தச்
சிறியவர் எதிரே
உனது தைரியம் எனையும் தொற்றியது
மலையை ஏந்தும் வல்லமையுடன் நீ
வீழ்ந்து கொண்டிருக்கும்
மழைத் துளியொன்றன்றி வேறேது நான்?

வல்லமைகள் கொண்டவனாகவும், தனக்குப் பிடித்தமானவனாகவும் ஒருவனைக் கண்டுகொள்ள நேர்ந்த போதிலும், பெண்ணுக்கென காலங்காலமாகத் தொடரும் சமூகக்கட்டமைப்புக்களாலும், சூழ்நிலைகளாலும், நாணத்தாலும் அவள் அவனை நிராகரிக்கவேண்டியிருக்கிறது. அதை மிகவும் அருமையாகச் சொல்கிறது கவிதையின் இறுதி வரிகள். பெண்களைச் சூழ மூடியிருக்கும் அனைத்தையும் ‘ஆண்டாண்டு காலப் போர்வைகள்’ எனும் சொற்றொடர், அருமையாக வெளிப்படுத்துகிறது.

ஓய்ந்திருந்த இசையும் ஓசையும்
மீள வலுத்தது
நுழைவாயிலருகே
எனை விடுவிக்கும் வேளையில்
ஆழ்ந்து ஊடுறுவுமொரு பார்வையை எறிந்தாய்
இப்போது
அடர் வனத்தினுள்ளே பெரு மழையாய் நீ
எனதான்மாவினுள் நுழையத் தொடங்குகையில்
ஆண்டாண்டு காலப் போர்வைகள் கொண்டு
எனை மூடிப் போகிறேன் நான்

இதையெழுதும் இக் கணத்தில் கூட எத்தனை எத்தனையோ இல்லங்களில் முதிய ஆத்மாக்கள் தாங்கள் விட்டுவந்த, தங்களைக் கை விட்ட வழித் தோன்றல்களை எண்ணி எண்ணிக் காத்துக் கொண்டிருக்கின்றன. தங்களை ஆதரிக்க நீளும் கரமொன்றினை எதிர்பார்த்து வழி பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவர்களிடம் அன்பினையும் எஞ்சியிருக்கும் உயிரையும் தவிர்த்து வேறேதும் இல்லை. அதனாலேயே அநாதரவாகவும், கைவிடப்பட்டவர்களாகவும் அவர்கள் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். ‘மரணத்தை யாசித்தவள்’ கவிதையானது தனது அந்திமக் காலத்தில் உறவுகளால் நிராகரிக்கப்பட்டு கூற்றுவனை எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு முதிய ஆத்மாவின் கதையைச் சொல்கிறது.

நீ
இறைவனின் தோற்றமொன்றை
எதிர்பார்த்துக் காத்திருந்தாய்
தீண்டத் தகாத பொருளாக்கி
இருளின் மூலையொன்றில்
உனைக் கிடத்தியிருந்தது முதுமை

அந்த வீட்டில் முதியவளின் அருகமர்ந்து அவளது வேதனைகளை, வலிகளை அன்பாக விசாரித்து, பணிவிடை செய்ய யாருமற்ற நிலையை மிகத் தெளிவாக விவரிக்கின்றன கீழுள்ள வரிகள்.

உன் வாழ்வு முழுதும் சேகரித்த
வேதனைகளைப் பகர்ந்திட
எந்தச் செவியுமே
அவ்வீட்டில் இல்லாதிருந்தது

பேரன்புடன்
அவதரிக்கச் செய்து ஆளாக்கி வளர்த்த
உருவங்களுக்குள்ளிருந்து
திரும்பி வரவே இல்லை
உனக்கான பரிதவிப்புகளும் பாசங்களும்

எனினும், அவளது மரணத்தின் பின்னர், அவள் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் நீருற்றி நட்டு வளர்த்த மரங்கள் மட்டும் அவளை நன்றியோடு தேடிக் கொண்டிருப்பதை இறுதிவரிகள் இப்படிச் சொல்கின்றன.

நீ நீரூற்றியதால்
வளர்ந்தோங்கிய மரங்களெல்லாம்
இன்று
உன் கருணையின் காலடிகளைத்
தேடியவாறு
தலைகவிழ்ந்து நிற்பதைக் காண்

இங்கு ‘நீரூற்றியதால் வளர்ந்தோங்கிய மரங்களெல்லாம்’ எனும் சொற்றொடரானது நேரடியான ஒரு அர்த்தத்தைக் குறிப்பதோடு, அந்த முதியவள் பிரதிபலன் எதிர்பாராமல் வளர்த்து, பின்னர் அவளைப் போல அன்பு காட்ட யாருமற்று நிராதரவாக்கப்பட்ட அனைத்து உயிர்களையும்தான் குறிப்பிடுகின்றன.

ஒரு மழை என்னவெல்லாம் செய்யும்? அடாது பெய்யும். எல்லா இடங்களையும் நனைத்துப் போகும். வெள்ளமெனப் பெருக்கெடுத்துச் சென்று நீர்வாழ்ப் பிராணிகளின் வாழ்விடங்களை மாற்றும். சிலவற்றை அழகாக்கும். சிலவற்றை அவலட்சணப்படுத்தும். இன்னும் தான் வந்துபோனதை உறுதிப்படுத்த இலைகளிலும் குட்டைகளிலும் தெருக்களிலும் தேங்கி நின்று ஈரம் காட்டும். இவையெல்லாவற்றையும் செய்து கொண்டிருந்த மழை, நின்று போன காரணத்தை கவிஞர் ஃபஹீமா ஜஹான் ‘மழை’ கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார். இங்கு ஒரு பெண்ணின் விழிநீரின் சக்தி, மழையை நிறுத்திவிடப் போதுமானதாக இருக்கிறது.

ஓய்ந்திட மாட்டாமல்
இன்னொரு
வெப்ப மழை பெய்து கொண்டிருந்த
அவள் முகத்தில் வீழ்ந்த கணத்தில்
தனது ஆவேசமெலாம்
ஒடுங்கிப் போய்விடப்
பெய்வதை நிறுத்திப்
பெருமூச்செறிந்து போயிற்று
அந்த மழை

‘மழை’யைப் போலவே ‘வெயில்’ கவிதையானது காடுகள் அழிக்கப்படுவதால் விளையும் சுற்றுச் சூழலின் வெப்ப அதிகரிப்பையும், அதன் காரணமாக நிகழும் பறவைகளின் இடப்பெயர்வுகளையும், இன்னும் தீவுக்களத்தில் இரத்தம் காயாத நிலையையும் ஒரே கவிதையில் தெளிவாகச் சொல்கிறது.

04.
தொகுப்பிலுள்ள ‘நொந்த உடலுக்கான நஞ்சு’, ‘ஊற்றுக்களை வரவழைப்பவள்’ ஆகிய இரு கவிதைகளும் கவிஞரின் சிறுவயதில் அவருக்கும் அவரது அம்மம்மாவுக்குமிடையிலான சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. தனது நினைவுகளில் ஆழமாக வேறூன்றியிருக்கும் நிகழ்வுகளை, கிளைகளாக கவிதைகளில் விரித்திருக்கிறார்.

‘நொந்த உடலுக்கான நஞ்சு’ கவிதையில், பால்யத்தின் பருவங்களில் எல்லாக் குழந்தைகளையும் போலவே, நோய் கண்டு வாய் கசக்கும் குழந்தையாகக் கவிஞர் தனது நோய் தீர்க்கத் தரப்படும் மருந்தினை வெறுக்கிறார்.

காற்றில் திரிதலாகா
தண்ணீர் அளைதலாகா
ஓயந்திருக்க வேண்டுமன்றி ஓடிவிளையாடலாகா
காய்ச்சலின் உச்சகட்டத்தில்
டாக்டர் தாத்தாவின் கட்டளைகள் நீளும்
நாடு கொளுத்தும் ராசாவுக்கு நெருப்பெடுக்கும் மந்திரியாக
நின்றிருப்பாள் அருகே அன்னை
நிறைவேற்றவியலாக் கட்டளைகளைக் கேட்டவாறு
சின்னஞ் சிறுமி மௌனமாக அமர்ந்திருப்பேன்

இங்கு மருந்து குடிக்க வைக்கும் அன்னையை ‘நாடு கொளுத்தும் ராசாவுக்கு நெருப்பெடுக்கும் மந்திரியாக’ விவரித்திருக்கிறார். தாய் தனது ஆரோக்கியத்துக்காகப் பாடுபடுகிறார் என்ற உண்மையை அறியாது தாயை எதிரியாகப் பார்க்கும் சிறு குழந்தையின் மனோபாவத்தை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அத்தனை மனிதருக்கும் இவ்வனுபவம் தவறாமல் வாய்த்திருக்கும்.

விளையாட்டும் முற்றமுமெனை
வந்தனங்கள் கூறியழைக்க
வயல் காற்றுலவும் வெளியெங்கும்
அலைந்து திரிவேன்
இசைவானதொரு தருணம் வாய்ப்பின்
காகித ஓடங்களை
வயலோர வாய்க்காலில்
மிதந்து போகவிட்டு மீள்வேன்
மருந்துண்ணும் வேளையதில்
பெரியம்மா, அண்ணன்மார்களெனும்
அயல்வீட்டு இராணுவமெனைக் கைப் பற்றிக்
கொண்டுவரும் அம்மாவினெதிரே

காய்ச்சல் கண்டிருக்கும் குழந்தையை முற்றவெளி விளையாட அழைக்கிறது. நீரோடும் வாய்க்கால்கள் கப்பல் விடக் கூப்பிடுகின்றன. காற்றில் திரியக் கூடாதென்றும், தண்ணீரளையக் கூடாதென்றும் மருத்துவர் விதித்திருக்கும் கட்டளைகளை அலட்சியப்படுத்தி விளையாட்டில் நோய் மறந்த குழந்தையை மருந்து கொடுக்கவென கதறக் கதற தூக்கிவருகிறார்கள் உறவினர்கள்.

மாத்திரைத் துண்டொன்றையும் சீனியையும்
கரண்டியில் இட்டுக்
கரைத்தெடுத்துவரும் கொடுமை கண்டு
எனதழுகை உரக்கத் தொடங்கும்
……………………
……………………
கசக்கும் பிசாசு வாய் நோக்கி வரும் போது
தாரை தாரையாய் வழிந்தோடக் கண்ணீர்
இறுக மூடிக் கொள்வேன் உதடுகளை
கடும் பிரயத்தனத்துடன் அம்மா
கரைசலை வாய்க்குள் இடச்
சிந்தியதும் உமிழ்ந்ததும் போக
ஒரு துளியை விழுங்கிய பின்
அனைத்துக்குமாக
ஆரம்பத்திலிருந்து அழத்தொடங்குவேன்

தொடரும் இவ் வரிகளில் மருந்துண்ண அடம்பிடிக்கும் சிறு குழந்தைகளின் அழுகையும் ஆர்ப்பாட்டமும் கண்முன்னே தெரியும்படி மிக அருமையான விவரிப்பு.

அப்போது வருமென் காவல் தேவதை
தூக்கி அணைத்திடுவாள்
வாய் கொப்பளிக்க வைத்துக்
கசந்த நாவில் வெல்லமிட்டு
ஆறாகப் பெருகுமென் கண்ணீர் துடைத்திடுவாள்
தோளிலே படுக்க வைத்துச்
சேலைத் தலைப்பைப் போர்வையாக்கித்
தோட்டமெங்கும் சுமந்தலைவாள்
கதைகள் நூறு சொல்லி
அழ வைத்தவர்களைப் பேசி
அழுகையை ஓய வைப்பாள்
நானுமொரு பறவையென
மாமரக் கிளைகளில் தத்திப் பாயும்
புள்ளினங்களில் இலயித்திருக்கையில்
மீண்டுமெனைப் படுக்கையில் கிடத்திக்
காவலிருப்பாள்

அக் குழந்தையின் அழுகையை நிறுத்தும் மந்திரங்களறிந்த அம்மம்மாவை இங்கு தன்னைக் காத்த காவல் தேவதையெனச் சொல்லியிருக்கிறார் கவிஞர். செல்லக் குழந்தையின் அழுகையை பொறுமையுடன் ஆற்றும் வித்தையை பாட்டிகள் எப்போதும் அறிந்திருக்கிறார்கள். பாட்டிகளின் அன்பும், அவர்களது சேலை வாசங்களும் இன்னும் இனிய நினைவாய் நெஞ்சுக்குள் உறைந்திட அக்காலம் பொற்காலமென்போம்.

‘ஊற்றுக்களை வரவழைப்பவள்’ கவிதையிலும் இதே போன்று அம்மம்மாவுடன் தோட்டத்தில் திரிந்த தனது சிறுபராயக் காலங்களை நினைவு கூர்ந்திருக்கிறார் கவிஞர். இங்கும் சிறுமியினதும், முதியவளினதும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் காட்சிப்படிமங்களாய் கண்முன்னே விரிகின்றன.

அம்மம்மாவின் கவனம் பிசகும் கணமொன்றில்
பதுங்கிப் பதுங்கி நோட்டம்விட்டுத்
தோட்டம் பார்த்து ஓட்டமெடுப்பேன்.
அச்சம் தவிர்த்திடவும் கொய்யா பறித்திடவுமாய்
கையிலே ஓர் தடி
அத் தடியையும் செருப்பொரு சோடியையும்
மரத்தடியில் விட்டுக்
கிளையொன்றில் அமர்ந்து கொள்வேன்.
கற்பனையும் பாடலும் தோட்டமெங்கிலும் பரவி
பள்ளத்தே பாய்ந்தோடும் ஆற்றிலும் கரைந்தோடும்

அம்மம்மாவின் பார்வைக்குத் தப்பிய கணங்களில் சிறுமியின் குறும்புகளைச் சுட்டித் தொடரும் இக் கவிதையானது கோடை பற்றிச் சொல்லி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

மாலைப் பொழுதொன்றில்,
தாம்பூலமிடித்து வாயிலேதரித்து வீட்டைப் பூட்டிச்
சேலைத் தலைப்பில் சாவியை முடிந்து சொருகி இடுப்பில்
தீர்க்கதரிசனத்துடன் புறப்படுவாள் அம்மம்மா
மண்வெட்டியை ஊன்றி ஊன்றி.
காரணம் கேட்டு நிற்கும் என்னிடமோ
புதையல் அகழ்ந்திடப் போவதாய்க் கூறி நடப்பாள்.
நானும் தொடர்வேன்

அம்மம்மாவின் குணவியல்புகளை, பழக்கவழக்கங்களை மேலுள்ள வரிகள் சொல்வதோடு, தோட்டத்தில் வாடிய பயிர்களை நோக்கி நீர் செல்லவென, ஆற்றின் கரையிலிருந்து அம்மம்மா கால்வாய் வெட்டிவிட்டதையும், அதனைப் பின்னர் குளிக்கவென வந்துசெல்பவர்கள் சிதைக்க, மீளவும் மீளவும் அம்மம்மா கால்வாய் வெட்டியதையும் அருமையாகச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.

ஆற்றோரத் தோட்டமொன்றில் மிக ஆவலாக செடிகள் வளர்க்கும் சிறுமியொருத்தியின் ஒருநாள் நிகழ்வினை ‘அவள் வளர்க்கும் செடிகள்’ எனும் கவிதை மிக அருமையாக விவரிக்கிறது. அவள் வளர்க்கும் செடிகளுக்கு ஊற்றிடவென ஆற்றிலிருந்து நீரள்ளி வருகிறாள் சிறுமி.

சலசலத்தோடும் தெள்ளிய நீரைச்
சிறிய வாளிக்குள் பிடித்து வருவாள்
வாளி கொள்ளா உற்சாகத்துடன்
துள்ளிப் பாயும் தண்ணீர்
மீன்கள் நிரம்பிய அவளது
சின்னச் சட்டையை
நனைத்து நனைத்துக் கூத்தாடும்

வழமையாக தண்ணீரைத் தேடும் மீன்களுக்கு மத்தியில் மீன்களைத் தேடி நீர் துள்ளும் அதிசயத்தைக் கவிதையில் அழகாகச் சொல்லும் கவிஞர்,

செடிகளின் வேரடியில் அவள்
தண்ணீரைப் பாய்ச்சும் வேளை
இசையுடன் பாய்ந்தோடும்
வரும் வழி நீள
நதி நனைத்துச் சுமந்து வந்த
பல்லாயிரம் வேர்களின் மொழிகள்

என அந் நதி நனைக்க வளர்ந்து வரும் கரையோரப் பெருமரங்களைப் போல, தான் வளர்க்கும் செடிகளும் வளரவேண்டுமெனத் தண்ணீர் ஊற்றியதையும் நினைவுபடுத்திக் கொள்கிறார். வேர்களுக்கென்று தனி மொழி இருக்கின்றதா? எப்பொழுதும் கரையோர வேர்களின் உச்சரிப்புகளை நதி திருடிக் கொண்டு வேர்களை மௌனமாக்கி விடுகிறது.

05.
காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் வாழ்வில் விரிசல் விழுவதையும், அவர்களது மனங்களிடையிருந்து விலகிச் செல்லும் காதலைப் பற்றியும், அவ்வாறாக ஆத்மார்த்த அன்பை இழந்து நிராதரவாக்கப்பட்ட ஒரு மனைவியின் நிலையையும் தெளிவாகச் சித்தரிக்கிறது ‘பேய்களால் தின்னப்படுபவள்’ கவிதை.

………………….
………………….
எப்பொழுதும் ஆறுதலையும்
அலைததும்பும் காதலையும் எடுத்துக் கொண்டு
இல்லம் மீள்வாய்
பற்றியிருக்கும் கரங்களுக்குள்
அன்பினைப் பத்திரப் படுத்தி
என் பிரார்த்தனைகளுடனும்
செல்ல மொழிகளுடனும்
புறப் பட்டுச் செல்வாய்

சமையல்காரியாகவோ
சலவைக்காரியாகவோ அன்றி
உனதுயிராகவோ அதனிலும் உயர்வாகவோ
எனைக் காத்திருந்தாய்

காதலிக்கும் காலங்களில் காதலனின் அன்பின் வெளிப்பாடுகள் பலவாறாக இருக்கும். அவற்றைக் குறித்து மேலுள்ள வரிகள் தெளிவுபடுத்துவதோடு ,

சாட்சிகளை முன்னிருத்தி
வேதவசனங்களை ஒப்புவித்து
கணவனாக மாறினாய்
நீ அழைத்து வந்த பேய்களிடம்
உன் காதலியைக் குதறிடக் கொடுத்தாய்

இனி என்றுமே ஒழுங்குபடுத்த முடியாத
கண்ணீர் பிசுபிசுக்கும் இல்லத்தினுள்
கவனிப்பாரின்றி வீழ்ந்துகிடந்த
காதலையும் வாழ்வையும் அள்ளியெடுத்துக் கொண்டு
வெளியேறிப் போய்விட்டது
எங்களைப் பிணைத்திருந்த ஏதோவொன்று…..

என திருமணத்திற்குப் பிறகான காதலனின் நேசம் மாறுபடுவதையும், காதலின் அவல நிலையையும் தெளிவாகச் சொல்லி முடிகிறது இக் கவிதை.

நம்மெதிரே வீழ்ந்து கிடக்கிறது
காலத்தின் பிறிதொரு முகம்

என ஆரம்பித்திருக்கும் ‘கடைசிச் சொல்’ கவிதையும் இதே போல காலம் பிரித்துப் போட்ட நேசர்களின் கதையொன்றாகத்தான் பாடப்பட்டிருக்கிறது.

மகத்தான பொறுமையொன்றின்
காத்திருப்பைக் கண்டு கண்டே
புறக்கணிப்புக்களை வளர விட்டிருந்தாய்
மனதில் பதிந்த உனது நிழல்
சிதறிய வாசனைத் திரவியம் போல
மெல்ல மெல்ல மறைந்தே போயிற்று

நீ உரிமை கொண்டாடிய
எல்லாவற்றிலிருந்தும்
எனை விடுவித்துக் கொண்டேன்
துயரத்தில் பதை பதைத்த சொற்களையும்
துரோகத்தால் நசுங்குண்ட சத்தியங்களையும்
உனது சுவர்களுக்குள்ளேயே விட்டு விட்டு
வெளியேறிப் போகிறேன்

பரஸ்பர அன்புக்குள் துரோகமும் புறக்கணிப்பும் சந்தேகமும் தலைதூக்கும்போது அன்பும் பொறுமையும் வெளியேறிவிடுகிறது. பின்னாட்களில் காலம், நினைவுகளில் பதிந்திருப்பவற்றையும் அழித்துவிடுகிறது.

கருங்கற் பாறைகளெனத் தொடர்ந்திருக்கும் மலைகளை நாம் ஒரு பார்வையில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் கவிஞரோ மலையை ஒரு மூதாட்டியுடன் ஒப்பிட்டு, மலையின் குணவியல்புகளை மிக அருமையாக விவரித்திருக்கிறார். மலை, அது வழிய விடும் நீர்வீழ்ச்சிகள், எப்பொழுதாவது கீழே விழும் சிறு பாறைகள், இடுக்குகளில் வளர்ந்திருக்கும் மூலிகைச் செடிகள், மலையோடு பிணைந்திருக்கும் மர வேர்கள், மலையின் விம்பம் தாங்கும் மலையடிவார நீர் நிலைகளெனப் பலவற்றை நினைவுறுத்துகிறது ‘மலைகளின் மூதாட்டி’ கவிதை. நிச்சயமாக இனி மலைகளைக் காண நேரும் பொழுதெல்லாம் இக் கவிதை நினைவுக்கு வரும்.

அதைப் போலவே கட்டுமானங்களைத் தன் வேர்கள் மூலமாகத் தகர்ப்பதாலும், அடர்ந்து வளர்ந்திருக்கும் தன் கிளைகள் விஷப் பிராணிகளின் சுதந்திர நடமாட்டங்களுக்கு இடமளிப்பதாக இருப்பதாலும் வேருக்கு நஞ்சூட்டப்பட்டு அழிக்கப்பட்ட ஒரு பெரிய நிழல் மரத்தைப் பற்றி ‘நஞ்சூட்டப்பட்ட மரம்’ கவிதையில் மிகக் காத்திரமாக விவரித்திருக்கிறார்.

தொகுப்பிலுள்ள ‘தீவில் தனித்த மரம்’, ‘உயிர் வேலி’, ‘மீட்டெடுக்க முடியாமற் போன விம்பம்’ ஆகிய கவிதைகள் அநாதரவாக்கப்பட்ட ஒரு பறவை, கண்ணாடி, மரம் ஆகிய குறியீடு, படிமங்களைக் கொண்டு தனித்து விடப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை தெளிவுபடுத்தியிருக்கின்றன.

பறவைக்கு பயணப்பாதையென்று ஒன்று இல்லை. அதற்கு வானமே எல்லை. பெண்களுக்கும் அப்படித்தான். எதிர்காலத்தில் அவர்களது பாதைகள் எங்கெங்கு விதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாராலும் எதிர்வுகூற முடியாது. சிறுவயதில் தனது வீட்டோடும், குடும்பத்தாரோடும் மகிழ்வோடு கழிக்கும் காலங்களெல்லாம், பெண்களால் பிறிதொரு இட்த்துக்கு பிரிந்துசெல்லப் போகிறோம் என்ற மெல்லிய திரையால் மூடப்பட்டே கொண்டாடப்படுகின்றன. அவ்வாறாக தான் கடந்துவந்த காலங்களை, கவிதைகளாக மீட்டிப் பார்த்திருக்கிறார் கவிஞர் ஃபஹீமா ஜஹான். அவரது மொழியாளுமையும், சொற்செழுமையும் அவரது நினைவுகளையும் உணர்வுகளையும் வாசிப்பவர்களும் தெளிவாக உணரும்படி கையாளப்பட்டிருக்கின்றன. ‘அபராதி’ எனும் தொகுப்பு, நிச்சயமாக குற்றமிழைத்தவர்களைச் சுடும். சுடட்டும் !

– எம். ரிஷான் ஷெரீப்,இலங்கை.

mrishanshareef@gmail.com

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்