‘வாசந்தி கட்டுரைகள்’ தரும் புதிய தரிசனங்கள்

This entry is part [part not set] of 24 in the series 20090101_Issue

வே.சபாநாயகம்


பெண் படைப்பாளிகள் என்றில்லாமல் இருபாலர்க்கும் பொதுவாக, இன்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எழுத்தாளர்களில் திருமதி.வாசந்தி முக்கியமானவர். பெண் படைப்பாளிகள் என்றாலே இளக்காரமாய் நினைத்த முன் தலைமுறையினரால் கூட மிகச் சிறந்த படைப்பாளியாக ஏற்று மதிக்கப்பட்டவர். தான் பெண் என்பதால் பெண்ணியவாதியாகக் கருதப்படுவது தவிர்க்கப்பட முடியாதது என்று அவரே சொன்னாலும், அதையும் தாண்டி அவர் மிகச்சிறந்த மனிதாபிமானி, பொறுப்புணர்ந்த சமூகச்சிந்தனையாளர், உண்மையைக் கண்டடைவதிலும் அதை நேர்மையுடன் பதிவு செய்வதிலும் மனசாட்சிக்குத் துரோகம் செய்யாத பத்திரிகையாளர் என்பதை ‘எனிஇந்தியன் பதிப்பக’ வெளியீடான ‘வாசந்தி கட்டுரைகள்’ என்கிற நூல் காட்டுகிறது. அது காட்டும் ‘புதிய தரிசனங்கள்’
சிலிர்ப்பானவை.

ஆரம்பத்தில் அவர் ஒரு சிறந்த சிறுகதை மற்றும் நாவலாசியராகவே அறியப்பட்டவர். திருமணத்திற்குப் பின் கணவரின் பணி நிமித்தமாய் நேபாளத்தில் நான்கு ஆண்டுகள் வாழ நேர்ந்தபோது வித்தியாசமான கலாச்சாரம் கொண்ட அப்பிரதேச மக்களின் வாழ்வு மற்றும் அரசியல் நெருக்கடிகள் போன்றவை, அவருள் கல்லூரிநாள் முதலே கருக்கொண்டிருந்த அரசியல் மற்றும் சமூகவியல் சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவரை ஓர் அரசியல் விமர்சகராகவும் பத்திரிகையாளராகவும் மாற்றின. தமிழ்நாட்டுக்குத் திரும்பியதும் அவர் ‘இந்தியா டுடே’ வார இதழின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராகப் பணியாற்றிய பத்தாண்டுகளில் எழுதிய தலையங்கங்களும், மற்ற பத்திரிகைகளில் எழுதிய அரசியல் விமர்சனங்களும், இலக்கியக் கட்டுரைகளும், சொற்பொழிவுகளும் ‘வாசந்தி கட்டுரைகள்’ என்ற நூலாக இப்போது வந்துள்ளது.

அவரது கதைகளிலும் நாவல்களிலும் புதுமைக் கண்ணோட்டமும், ரசமான உரையாடல்களும், அறிவார்ந்த சிந்தனையோட்டமும், பாவனையற்ற சரளமும், அலுப்புத்தட்டாத வாசிப்பு சுகமும் தென்படுவது போலவே அவரது கட்டுரைகளும் அமைந்துள்ளன. மேல்நாட்டுக் கட்டுரையாªர்களுக்குச் சமமாகத் திகழ்ந்த முன் தலைமுறை எழுத்தாளர் ‘தி.ஜ.ர’வின் வாரிசாய், கட்டுரை இலக்கியத்தில் இன்று அவர் திகழ்கிறார்.

இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் சமகாலப் பிரச்சினைகளை, நிகழ்வுகளை உடனுக்குடன் சூடு ஆறாமல் தெளிவான குழப்பமற்ற மொழியில் அவ்வப்போது பதிவு செய்யப்பட்டவை. பதிப்புரையில் திரு.ராஜாராம் குறிப்பிட்டிருப்பதுபோல ‘தன்னைச் சுற்றி
நிகழும் அவலங்களைப் பார்வையிடும் சாதாரண மனிதனின் அச்சத்தையும் அவநம்பிக்கையையும் அவை எதிரொலிக்கின்றன’.

மே ’96 முதல் ஜனவரி ‘2006 வரை ‘இந்தியா டுடே’யில்’ ‘சிந்திக்க ஒரு நொடி’ என்ற தலைப்பில் வெளியான 40க்கும் மேலான சின்னச் சின்னக் கட்டுரைகள் பல்வேறு பிரச்சினை களையும் அவற்றின் தாக்கங்களையும் அலசுகின்றன. கறாரான, தாட்சண்யமற்ற விமர்சனங் கள் சாட்டையடியாய் அரசியல்வாதிகளின் சிறுமைகளின்மீதும், மதவாதிகளின் மக்கள்விரோதப் போக்குகள்மீதும், விற்பனையையே குறிக்கோளய்க் கொண்ட பாரபட்சமான பத்திரிகையாளர் மீதும் விழுகின்றன. அன்றாடச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள செய்திகளாய் – ஜனநாயகத் தன்மை இல்லாத ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கு அவரே காரணமாய் இருப்பது பற்றியும், ‘ஆரியமாயை’ பற்றி இன்னமும் பேசிக் கொண்டிருக்கிற கருணாநிதியின் சந்தர்ப்பவாத அரசியல் மற்றும் தமிழீழப் பிரச்சியினையில் அவர் அடிக்கும் பல்டிகள்பற்றியும், அன்னை தெரசாவிற்கு ‘புனிதர்’ பட்டம் வழங்கிய வாட்டிகன் திருச்சபை, போப் சொல்படி நடக்கும் கத்தோ¡லிக்கர்கள் ஆணுறை உபயோகிக்கத் தடை விதித்ததால் எழும் எயிட்ஸ் பரவும் அபாயம் பற்றியும், ஜனநாயத்தின்மீது விழுந்த சம்மட்டியாய் ‘இந்து’, ‘முரசொலி’ பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறைத் தண்டனைபற்றியும், ஓரினத் திருமணம் பற்றிய சர்ச்சைகள் பற்றியும், நதி நீர்ப் பங்கீட்டில் மக்கள் நலனைவிட அரசியல் ஆதாயமே குறியாய் உள்ள அரசுகளின் ‘காவிரி நாடகம்’ பற்றியும், தலைவர்களுக்காக தற்கொலை செய்து கொள்ளும் தமிழ்நாட்டுத் தொண்டர்களின் வித்தியாசமான உளவியல் பற்றியும், போலிசாரையும் நீதிமன்றங்களையும் தன் விளையாட்டுப் பொருட்களாக்கிய ஜெயலட்சுமி தரும் பாடம் பற்றியும், காஞ்சிமடாதியின் கைது பற்றியும், வீரப்பனைக் கதாநாயகனாக்கி தமக்குச் சமாதி கட்டிக் கொண்ட பத்திரிகைகள் மற்றும் அரசுகளின் நச்சு அரசியல் பற்றியும், சுனாமி சோகத்தையும் தமது சுயநலத்துக்குப் பயன்படுத்திக்
கொண்ட அற்பர்கள் பற்றியும், கற்பு பற்றிய குஷ்புவின் கருத்துக்குச் சாமியாடிய -தமிழ்தேசீயம் பேசுபவர்களின் சகிப்பற்ற போக்கு பற்றியும், பாரதத்தின் புதிய பாஞ்சாலியாய் அபத்தமாகச் சபதமிட்ட சுஷ்மா ஸ்வராஜின் ஆங்காரம் பற்றியும் இன்னும் பல கவலை
யளிக்கும் வெளிப்பாடுகள் பற்றியுமான – சுதந்திரச் சிந்தனையாளரின் உரத்தசிந்தனைகளாய் இவை அமைந்துள்ளன.

அடுத்து வரும் ‘பெண்ணியச் சிந்தனைகள்’ கட்டுரைகள் அவரது ஆரோக்கியமான, நியாயமான பெண்ணிய வாதங்களைக் காட்டுபவை. இன்றைய கலகக்கார இளம் பெண் கவிஞர்கள் போல் பெண்களது உடல் அரசியலைப் பேசுவதுதான் பெண்ணியம் என்று
முரட்டடி வாதம் பேசவில்லை. பெண்ணியவாதிகளுக்கு அவர் சொல்வதெல்லாம் ‘முதலாவதாக பெண்ணைப் பற்றிய மரபுச் சிந்தனையை நாம் உடைக்க வேண்டும். அதற்கு மேல் ஆணுக்கு மேலாகத் தகுதி பெற்றவர்கள் நாம் என்று நிரூபிக்க வேண்டும்- வெற்றிக்குக் குறுக்கு வழி எனக்குத்தெரிந்து வேறு இல்லை’ என்பதுதான்.

‘சீனா எனும் சிகரம்’ என்கிற அவரது பயணக் கட்டுரை ஒரு முன் மாதிரியானது. கடந்த காலங்களில் ‘ஆனந்தவிகடன் மணியன்’ போன்றவர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வந்து, ‘எங்கு யார் வீட்டில், நாக்கு செத்துப் போன தங்களுக்கு உணக்கையாய் தமிழ் நாட்டு சாப்பாடு போட்டார்கள், என்னென்ன கிளுகிளுக்கும் கேளிக்கைகள் எங்கெங்கு இருக்கிந்றன’ என்று எழுதியதுபோல் அல்லாமல் வாசிப்பவர் கண்ணகல, புருவம் உயர்த்தும் படியான – தான் சீனாவில் கண்ட புதுமைகளை, மாவோ காலத்துக்குப் பின் மக்களிடையே ஏற்பட்டிருக்கிற சிந்தனை மாற்றம், நடைமுறை வாழ்வில் புதிய கண்ணோட்டம், அபார பொருளாதார வளர்ச்சி, தீவிரமான மேற்கு நாகரீக ஈர்ப்பு, ‘வெளியுலகத் தொடர்புக்கும் வேலைவாய்ப்புக்கும் ஆங்கிலம் அவசியம்’ என்கிற புரிதல் பற்றியெல்லாம் பதிவு செய்திருக் கிறார். ‘இன்னும் நூறாண்டு ஆனாலும்கூட நம்மால் சீனாவின் தரத்தை எட்ட முடியாது’ என்கிற ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். அவர் பயணம் போகும் இடங்களுக்கு நாமும் உடன் செல்வது போலவும் அவர் காண்பவற்றை நாமும் காண்பது போலவும் பிரமையை ஏற்படுத்துகிறது கட்டுரை.

‘எது பத்திரிகை தர்மம்?’ என்கிற கட்டுரை அரசியல்வாதிகளுக்கும் பத்திரிகையாளர் களுக்கும் பதில் சொல்வதாக அமைந்துள்ளது.

பெண்களுக்கு அரசியல் தெரியாது என்கிற ஆண்களின் கருத்துக்குச் சவால் விடுபவை அவரது அரசியல் கட்டுரைகள். ‘இன்றைய எல்லா கேட்டிற்கும் அரசியல்வாதிகளே காரணம்’ என்கிற அவரது தீர்மானமான குற்றச்சாட்டு அவருக்கு எல்லா பக்கங்களிலிருந்தும் எதிரிகளைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் அதுபற்றியெல்லாம் கவலைப்படாத
சத்தியத்தைத் தேடும் பயணம் அவருடையது.

பின் பகுதியில் உள்ள அவரது இலக்கியக் கட்டுரைகளும் ரசமானவை. ‘நானும் என் எழுத்தும்’ என்கிற கட்டுரை துவக்க எழுத்தாளர்க்கு மட்டுமின்றி, மூத்த எழுத்தாளர்களுக்கும் பல சுவையான தவல்களைச் சொல்வது. இசையரசி எம்.எஸ் பற்றிய ‘உன்னதத்தின் உறைவிடம்’ என்கிற கட்டுரை ஒரு அரிய சித்திரப் பிரதிமை. படிக்கத் திகட்டாத உள்ளத்தை உருக்கும் ஓவியம்.

ஹங்கேரிய எழுத்தாளர் ‘ஸாண்டர் மராயி’ன் அற்புதப் படைப்பான ‘கனல்’ என்கிற நாவல் பற்றிய அவரது நூல்விமர்சனம் அவரது இன்னொரு இலக்கிய முகத்தைக் காட்டுவது. ஒரு நல்ல படைப்பாளி செய்யும் விமர்சனமும் ஒரு அற்புத இலக்கியமாகிவிடமுடியும் என்பதற்கு இந்த விமர்சனம் நல்ல எடுத்துக்காட்டு.

நூல் முழுவதுமான இவரது எழுத்தில் – அது இலக்கியக் கட்டுரையாகட்டும் அல்லது அரசியல் விமர்சனமாகட்டும் – தென்படும் சுகமான நடையோட்டம், கலைத்திறம், சொல்லாட்சி, உவமை நயம், மிகைப் படுத்தாத வருணைகள். ‘சகதர்மிகள்’ போன்ற
சொல்லாக்கங்கள், இலக்கியங்களிலிருந்து பொருத்தமாய் எடுத்தாளும் நளினம், ராஜம் கிருஷ்ணனைப் போல் ஆதாரபூர்வமான களப்பணியின் பதிவு, சிறுமைகண்டு சீறும் அறச்சீற்றம், அரசியல் அங்கதம் ஆகியவை மீண்டும் மீண்டும் படித்து ரசிக்க வைப்பவை.

அவரது இலக்கிய நயமிக்க எழுத்தாளுமைக்கு ஒன்றிரண்டு உதாரணங்களை சுட்டிக் காட்டமல் இவ்விமர்சனத்தை முடிக்க எனக்கு மனமில்லை.

திருமதி.எம்.எஸ் பற்றிய கட்டுரையில் ஒருஇடம்: ‘நீ அர்த்தம் உணர்ந்து பாடினா ஜனங்க உன் பக்கம் வருவா’ என்றார் சதாசிவம். வந்தார்கள். திரள் திரளாக கன்னியாக் குமரியிலிருந்து தில்லிவரை. கல்கத்தாவிலிருந்து மும்பைவரை. அவர் ‘சம்போ மஹாதேவா’ என்று பாடியபோது நாஸ்திகர்களும் நெகிழ்ந்தார்கள். ‘செந்தமிழ்நாடெனும் போதினிலே’ என்று ஆரம்பித்ததுமே பாமரர்கள் சிலிர்த்தார்கள். ‘குறையொன்றுமில்லை’ என்று உருகி உருகிப் பாடுகையில் சாமான்யர்களும் கரைந்தார்கள்.’

‘கனல்’ நாவல் பற்றிய விமர்சனத்தில்: ‘மராயின் கதைக்களம் மத்திய ஐரோப்பா. கதையின் காலம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம். இருந்தும் கதை மாந்தருடன் என்னால் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடிந்தது. பல சமயங்களில் வினோதமாக உபநிஷத்
காலத்துக்குச் சென்றாற்போல, நசிகேதனின் நிலையில் அமர்ந்திருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. வாழ்வியலைப்பற்றி, தர்மத்தைப்பற்றி, பொய்மையைப்பற்றி, மனித உறவுகள் அவை கொடுப்பதாக நாம் நினைக்கும் உரிமைகள்பற்றி கேள்விகள் துளைத்தன’. இதை வாசிக்கும்போது எனக்கு புதுமைப்பித்தன் ‘அன்று இரவு’ கதையில், அரிமர்த்தன பாண்டியன் பொற்பிரம்பால் ஈசனை அடித்தபோது அந்த அடி எவற்றின்மீதெல்லாம் விழுந்தது என்று அடுக்கிக் கொண்டே போகும் அழகு நினவுக்கு வருகிறது.

வாசந்தியின் இக்கட்டுரைத் தொகுப்பைப் படிக்கும் புதியவாசகர்களுக்கு எழுத்துக்கலை பற்றி புதியதரிசனங்கள் கிட்டும் என்று திடமாக நம்புகிறேன்.

நூல் விவரம்:

நூல்: வாசந்தி கட்டுரைகள்.
வெளியிட்டவர்’: ‘எனி இந்தியன் பதிப்பகம்’, சென்னை.
பக்கங்கள்: 240.
விலை: ரூ.120.

(டிசம்பர் ’08 ‘ ‘வார்த்தை’யில் வெளியானது’)


Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்