“உயிர் எழுத்து” ஓராண்டு பயணம்

This entry is part [part not set] of 33 in the series 20080724_Issue

சுப்ரபாரதிமணியன்



படைப்பிலக்கியத்தில் சிறுகதைகளுக்கான பிரசுர வெளியை இன்றைய வெகுஜன இதழ்கள் வெகுவாக அலட்சியப்படுத்தி வருகின்றன. இலக்கிய இதழ்களிலும் மாதம் ஒரு சிறுகதை என்ற அளவிலேயே இடம் பிடிக்கிற நிலையில் வருடத்திற்கு ஒரு இலக்கிய இதழில் 10 முதல் 15 சிறுகதைகளே இடம்பெரும் வாய்ப்புள்ளது. அதுவும் அந்த இலக்கிய இதழின் குழு சார்ந்தவர்களின் படைப்புகளாகவே பெரும்பாலும் அவை இருக்கும். இந்நிலையில் “உயிர் எழுத்து” கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை வெளியிட்டிருப்பது ஒரு சாதனையாகவே நிகழ்ந்துள்ளது. படைப்பிலக்கியத்தளத்தில் சிறுகதைப் படைப்பாளிகளுக்கான மேடையாகி உள்ளது.

வெகுஜன இதழ்களில் சிறுகதைக்கான பக்கங்கள் சிறுத்துவிட்டன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் ஹைதராபாத்தில் வசித்த போது ஒரு தெலுங்கு பத்திரிக்கை “இன்லெண்ட் லெட்டர்” சிறுகதையொன்றை வெளியிட்டது. கடித வடிவ கதை. கதையை லே அவுட் செய்த ஓவியர் ‘இன்லெண்ட் லெட்டர்’ வடிவில் அதை வெளியிட்டிருந்தார். அடுத்த வாரம் ‘இன்லெண்ட் லெட்டர்’ கதைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அதைப் பார்த்த அதன் ஆசிரியர் எழுத்தாளரிடம் “இன்லெண்ட் லெட்டரில்” எழுதப்படும் கதைகளை வரவேற்பதாக எழுதினார்.பிறகு இன்லெண்ட் லெட்டர் கதைகள் அதில் வெளிவந்தன.
அதில் இருந்த சௌகரியம் சிறுகதைக்கான பக்க அளவை குறைத்து விட்டார். தொடர்ந்து அவ்வகைக் கதைகள் அந்த இதழில் பிரசுரமாகின. பிறகு கொஞ்ச நாள் கழித்து “போஸ்ட் கார்ட்” கதைகளை எழுத்தாளர்களிடமிருந்து வரவேற்பதாக அந்த ஆசிரியர் அறிவித்தார். பிறகு நிறைய இன்லெண்ட் லெட்டர் கதைகளை அடுத்து போஸ்ட் கார்டு கதைகள் பிரசுரமாகின.அப்போது கல்கியில் “ஹைதராபாத் பக்கம்” என்றொரு பத்தி எழுதி வந்த நான் அதில் இதைக் குறிப்பிட்டிருந்தேன். தமிழிலும் இன்லெண்ட் லெட்டர் கதைகள், போஸ்ட் கார்டு கதைகளை வெகுஜன இதழ்கள் வெள்யிட்டன. இப்போது 20 செகண்ட் கதைகள் என்றும் வந்துவிட்டன. சிறுகதைக்கான இடம் என்ன என்பதை அவை நிர்ணயித்துவிட்டன. இச்சூழலில் ” உயிர் எழுத்து ” கடந்த ஒரு ஆண்டில் மட்டும் வெளியிட்டிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பற்றி யோசித்துப் பார்க்கலாம். சிறுகதைக்கு அது தரும் இடம் குறிப்பிடத்தக்கது.

இதில் இடம்பெரும் படைப்புகள் பெரும்பாலும் விளிம்புநிலை மக்களைப் பற்றியதாகவே உள்ளன. பின்நவீனத்துவ சமூகத்தில் பெண்கள், தலித்துகள், அரவாணிகள், லும்பன்கள் என்ற நிலையிலான விளிம்பு நிலை மக்களைப் பற்றியே அவை பெரும்பாலும் பேசுகின்றன. அதை எழுதியிருப்பவர்கள் விளிம்பு நிலை மக்களைப் பருந்துப் பார்வையாகப் பார்க்கிறவர்களாக இல்லாமல் விளிம்பு நிலை மக்களிடமிருந்து வந்தவர்களாகவும், அவர்களின் இயக்கங்களோடு தொடர்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளிம்புநிலை மக்களின் படைப்புகளை பிரதானப் படுத்துகிற பின்நவீனத்துவமும், அதன் அடித்தள கோட்பாடான மார்க்சியம் குறித்த விவாதத்திற்கான களத்தையும் உயிரெழுத்து விவரித்துள்ளது. இடதுசாரி கவிஞர்களின் கலாச்சார. அரசியல் தள பங்களிப்பை பல்வேறு கட்டுரைகள் தொடர்ந்து வெளிப்படுத்துகின்றன. உலகமயமாக்கல் சூழலில் மார்க்சிய தத்துவ புணருத்தாரணத்தின் அவசியம் பற்றிய விவாதங்களையும் அவை உள்ளடக்கியுள்ளன.

உலகமயமாக்கல் பத்திரிக்கைத் துறையிலும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை இந்தியாவில் தொடங்கிவிட்டது. நிறுவனப்பட்டிருக்கிற பெரிய வணிக இதழ்களுக்கே அவை சவாலாக அமைந்துவிட்டிருக்கின்றன. இச்சூழலில் சுதிர் செந்தில் என்ற தனி மனிதனின் சேமிப்பு முதலீடும். உழைப்பும் உயிர் எழுத்தாய் நிறுவப்பட்டிருக்கிறது. இடதுசாரி இயக்கங்கள் மூலம் தனது ஆரம்ப கால நடவடிக்கைகளுடன் கலாச்சார தளத்தில் நிழைந்த சுதிர் செந்தில் ஒரு தேர்ந்த வாசகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்.குறிப்பிடத்தக்க கவிஞராகவும் இரு கவிதைத் தொகுதிகள் மூலம் நிறுவியவர். இந்த இதழின் மூலம் தன்னை ஒரு பத்திரிக்கை ஆசிரியராகவும் நிருபித்திருக்கிறார். இன்றைய பன்னாட்டு நிறுவன பத்திரிக்கை முதலீட்டிற்கு எதிரான ஒரு சிறு கலகக்குரலாக சுதிர் செந்தில் என்ற தனி மனிதனின் சேமிப்பு முதலீடும், உழைப்பும் இந்த பத்திரிக்கையில் படைப்பிலக்கிய தளத்தில் நிறுவப்பட்டிருப்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

( – சென்னையில் நடைபெற்ற “உயிர் எழுத்து” முதலாண்டு நிறைவுவிழா பேச்சு:சுப்ரபாரதிமணியன்.)

விழாவில் 8 புதிய நூல்கள்
வெளியிடப்பட்டன. எழுத்தாளர்கள் பிரபஞ்சன், இன்குலாப், முருகேசபாண்டியன்,
கரிகாலன், ஆதவன் தீட்சண்யா, மருது, சுதீர் செந்தில்,
நா முத்து குமார்,ரவிசுப்ரம­யன்,பாரதிகிருஸ்ணகுமார், சை.பீர்முகமது, பாவண்ணன்
உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
” உயிர் எழுத்து ” திருச்சியில் இருந்து வெளிவரும் இலக்கிய இதழாகும். ஆண்டு சந்தா ரூ 240/ முகவரி: 9, முதல் தளம்,
தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி 1
email: uyirezhuthu@gmailcom

==================================================================
அனுப்பியவர்: issundarakannan7@gmail.com

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்