கடக்க முடியாமையின் துயரம் -“விலகிச் செல்லும் நதி”- காலபைரவன் சிறுகதைகள்

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

பாவண்ணன்



கனவும் கற்பனையும் குழைந்த சிறுகதைகளைப் படைப்பதில் ஆர்வம் மிகுந்தவராக தன்னை முன்னிறுத்திக்கொண்ட காலபைரவன் தன் இரண்டாம் தொகுதியிலும் அதேவகையிலான சிறுகதைகளை மேலும் சிறப்பான முறையில் படைத்துள்ளார். இச்சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது ‘கடக்க முடியாமையின் துயரம்’ என்னும் பொதுஅம்சம் இக்கதையுலகில் இயங்குவதைக் காணமுடிகிறது. கடப்பது என்பதை ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி இன்னொரு புள்ளியை அடையும் புறச்செயல் என்னும் தளத்தைத்தாண்டி, எதார்த்தத்தின் அலுப்பைக் கடப்பது, காமத்தின் அழுத்தத்தைக் கடப்பது, கனவில் நீளும் பாதைகளைக் கடப்பது, சாதி உணர்வைக் கடப்பது, அச்சத்தைக் கடப்பது எனப் பல தளங்களிலும் நிகழும் நுட்பக்கூறாக காலபைரவன் பயன்படுத்துகிறார். இத்தகு தளமாற்றம் காலபைரவன் சிறுகதைகளில் இயங்கும் வசீகரத்துக்கு பெரிதும் துணைநிற்கிறது.

‘கடக்க முடியாத இரவு’ தொகுப்பின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகச் சொல்லலாம். ஆண், பெண் உறவில் உள்ள நிராகரிப்பின் துயரத்தை முன்வைத்து விரிகிறது இச்சிறுகதை. மனைவியின் தொடர்ச்சியான விலகலைத் தாங்கிக்கொள்ளவும் விலகலுக்கான முதற்காரணம் என்னவென புரிந்துகொள்ளவும் இயலாத கணவனின் தற்கொலையிலிருந்து தொடங்குகிறது சிறுகதை. ஊராரின் பார்வையிலும் அவன் நண்பர்கள் பார்வையிலும் அருவியில் குளிக்கப்போய் கால்சறுக்கி விழுந்ததால் நிகழ்ந்த மரணமாகவே அது காட்டப்படுகிறது. தொடக்கத்தில் அவன் மனைவிகூட அப்படித்தான் நம்புகிறாள். ஆனால் மறுநாள் அலுவலகத்தில் அவளுக்குத் தரப்படும் கடிதத்தின் மூலமாக அவன் தானாகவே அம்மரணத்தைத் தேடிக்கொண்டான் என்கிற உண்மை புரிகிறது. அன்பையும் உறவையும் உடலின்பத்தையும் காலமெல்லாம் யாசித்தவனுடைய மரணம் அவள் மனத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடுகிறது. அவன் கேட்டவை அனைத்தையும் வாரி வழங்கும் ஆவல் அவள் நெஞ்சில் பொங்கித் ததும்பத் தொடங்குகிறது. துரதிருஷ்டவசமாக அவற்றை ஏற்றுக்கொள்ள அவன் உயிருடன் இல்லை. உருட்டிக்கொடுத்த சோற்றுருண்டையை முகம்திருப்பி நிராகரித்தும் உடலின்பத்துக்காக நெருங்கி அணைத்தபோது விலகிப்போ எனச் சொல்லி நிராகரித்தும் தைக்கிற சொற்களை உதிர்த்தும் அவள் நடந்துகொண்டவிதம் கடக்கமுடியாத ஒன்றாக இரவுகளை மாற்றிவிடுகின்றன. அனைத்தையும் வழங்குவதற்கான மனநிலையை அவள் அடையும் தருணத்தில் அவனில்லாமல் தனித்துவிடப்பட்ட சூழலில் கடக்கமுடியாத ஒன்றாகவே மீண்டும் இரவுகள் மாறிவிடுகின்றன. ஒருபக்கம் அறியாமையின் மூர்க்கத்தாலும் அல்லது தெளிவின்மையின் குழப்பத்தாலும் கடக்கமுடியாத சுமையாக முடிந்த இறந்த கால இரவுகள். இன்னொரு பக்கம் நெகிழ்ச்சியும் விருப்பமும் கூடிவந்தபோதும் பகிர்ந்துகொள்ள துணையின்றி கடக்கமுடியாத வேதனையில் பாரமாகும் நிகழ்கால இரவுகள். மனித சமூகம் காமத்தைப் புரிந்துகொள்ள முடியாத புதிராக ஏன் சிக்கலாக்கிக்கொள்கிறது என்ற கேள்வியோடு எஞ்சும் புள்ளி சிறுகதையில் வாசக இடைவெளிக்கான முக்கியமான கட்டம்.

‘ஆற்றைக் கடத்தல்’ தொகுப்பில் குறிப்பிடத்தக்க இன்னொரு சிறுகதை. ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பிள்ளைகளுக்கு ஒரு புதிய விளையாட்டை ஆடுவதற்காகக் கற்றுத் தருகிறார். வழக்கமான விளையாட்டை ஆடிஆடிக் களைத்த பிள்ளைகளுக்கு, அந்த அலுப்பைக் கடக்கும் விதமாக கற்பனை கலந்த ஒரு புதிய விளையாட்டைக் கற்பித்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார். கட்டாந்தரையில் ஒரு வட்டத்தை வரைந்து பிள்ளைகளை அதைச் சுற்றி நிற்கச் சொல்கிறார். வட்டப்பாதைக்கு உள்ளே இருப்பதுதான் கற்பனை ஆறு. பிள்ளைகள் வட்டப்பாதையில் சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே இருக்கவேண்டும். விசில் சத்தம் எழும் தருணத்தில் கோட்டிலிருந்து விலகி ஆற்றில் நிற்பவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேறிவிடவேண்டும். இதுதான் ஆட்டத்தின் விதி. ஆற்றில் இறங்கி நிற்பவர்களை ஒவ்வொருவராக வெளியேற்றியபடி ஆட்டம் தொடர்ந்து நிகழ்ந்தபடி இருக்கிறது. இது ஆசிரியர் தொடங்கிவைத்த கற்பனை. இரண்டு மூன்று சுற்றுகளில் பிள்ளைகளும் அக்கற்பனையில் மூழ்கிவிடுகிறார்கள். நிஜமான ஆறாகவே அந்த வட்டத்தை நினைத்து அதில் பயணம் செய்யும் கற்பனையில் பிள்ளைகள் தனியே ஈடுபடும்போது கற்பனையில் சூடு பிடிக்கிறது. கற்பனைக்குள் இன்னொரு கற்பனை. அது இன்னொரு உலகமாக விரிகிறது. ஆசிரியர் கற்பனையில் மாணவர்கள் ஒவ்வொருவராக வட்டத்திலிருந்து விலகி வெளியேறியவர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகள் கற்பனையில் ஊர் மக்கள் புகாருக்கும் கோபத்துக்கும் ஆளாகி பதில்பேச இயலாத பலவீனமாக ஆளாக தலைகுனிந்து நிற்கிறார். இந்த விசித்திரம் வழங்கும் ஆனந்தம் மகத்தானது. அலுப்பின் புள்ளியிலிருந்து விந்தையும் விசித்திரமும் இணைந்த புள்ளியை நோக்கிக் கடந்துபோகிறது கதையுலகம்.

கன்னிமார்கள் பற்றிய தொன்மக் கதைக்கரு இரண்டு சிறுகதைகளில் இடம்பெறுகிறது. ‘பச்சபுள்ளாகுளம்’, ‘சாரிபோகும் கன்னிமாரர்கள்’ ஆகியவை அச்சிறுகதைகள். மானுடகுலத்தின் தீராத பசியான காமமே இக்கதைகளின் கருப்பொருள். பச்சபுள்ளாகுளம் சிறுகதையில் ஆண் பெண்ணாக மாறி குளத்திலேயே நின்றுவிடுகிறான். பெண் ஆணாக மாறி ஊரைநோக்கி திம்புவதுமான கற்பனை உற்சாகமாக திருப்பமாக உள்ளது. பேராசிரியருக்கும் கன்னிக்கும் இடையிலான நடவடிக்கைகள் ஒருவரையொருவர் வீழ்த்த கையாளும் தருணங்கள் அருகருகே முன்வைக்கப்படும்பொழுது கதை தன் உச்சத்தைநோக்கிச் செல்கிறது. உச்சத்தில் இருவரில் ஒருவருடைய மரணத்தை வாசக மனம் எதிர்பார்க்கும்போது, எதிர்பாரத திருப்பமாக மேற்சொன்ன உருவமாற்றம் நிகழ்ந்துவிடுகிறது. அச்சமும் வசீகரமும் ஒருங்கே கொண்ட அம்சம் காமம். ஊகம் செய்ய இயலாத முடிவைக் கொண்டது அது. எதிர்இணையின் விழைவுக்குத் தகுந்த முறையில் ஈடுகொடுக்க இயலாமல்போய்விடுமோ என்கிற அச்சம் ஆட்டிப்படைக்காத மனமே இல்லை. இந்த அச்சத்திலிருந்து மீளத் தெரியாத ஆண்மனம், பெண்ணை பேயாக மாற்றி ஒடுக்கும் தந்திரத்தில் இறங்கிவிட்டது. அதிகாரியாக உருமாறும் பெண் எதிர்நடவடிக்கையின் ஓர் அடையாளம் என்றே சொல்லலாம். இனிமேல், எந்தத் தந்திரதத்தில் இறங்கும் ஆண்மனம் என்பது பெரிய புதிர். மாறிமாறி நிகழ்கிற, இந்தத் தந்திர விளையாட்டுகள் நிறைந்தததாகக் காணப்படுகிறது சமூகவரலாறு.

காலபைரவனுடைய கற்பனையாற்றல் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. இல்லாததை இருப்பதுபோல நம்பும் பிள்ளைப்பருவ விளையாட்டுகளில் இருந்து இந்தக் கற்பனையை எடுத்துக்கொள்கிறார் காலபைரவன். குழந்தைகளின் உப்புவிளையாட்டு, கூட்டாஞ்சோறு, ரயில் விளையாட்டு, கப்பல் விளையாட்டு, அப்பா அம்மா விளையாட்டு ஆகியவற்றில் இடம்பெறும் கற்பனை அம்சங்களில் சில துளிகளை கனவோடும் கலையம்சத்தோடும் குழைத்து கதைக்கான கருவை அவர் கண்டடைந்துவிடுகிறார். ‘விலகிச் செல்லும் நதி’ மனிதனுடன் நிகழ்த்தும் ஆட்டம் மிகவும் உற்சாகம் தரும் ஆட்டம். புராணத்தன்மை படிந்த கோயில், காடு, நதி, தெய்வம் என்ற பின்னணியில் அந்த ஆட்டமே கதையில் இடம்பெறும்பொழுது நதி படிமத்தன்மையை அடைகிறது. மனிதனின் நம்பிக்கையையும் முயற்சிகளையும் குலைத்துவிட்டு விலகிச் செல்கிற நதி எது என்கிற கேள்வி சிறுகதையை பல கோணங்களில் விரிவடையவைக்கிறது.

கதைமொழியில் காலபைரவனுக்குள்ள கவனமும் இயல்புத்தன்மையும் அக்கறையும் அவர்மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன. புலிப்பாணி ஜோதிடர் தொகுப்பும் விலகிச்செல்லும் நதி தொகுப்பும் அதற்குச் சான்றாக உள்ளன.

(விலகிச் செல்லும் நதி – கால பைரவன், மருதா வெளியீடு, அண்ணா சாலை, குலசேகரபுரம், சின்மயா நகர், சென்னை-92. விலை. ரூ. 60)


paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்