குப்பிழான் ஐ. சண்முகனின் ‘உதிரிகளும்;’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய ஒரு வாசகனின் பார்வை

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

ச.இரத்தினசேகரன்



திரு குப்பிழான் ஐ. சண்முகனின் உதிரிகளும் … என்ற சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தின் முகப்பை அலங்கரிப்பது ஒரு சிங்கள யுவதியின் படமாகும். புத்தகத்தின் பின்புறத்தில் எழுத்தாளர் அ. யேசுராசா இவர் பற்றிய அறிமுகத்தைத் தந்துள்ளார். அவரது அறிமுகத்தின் இறுதியில் வரும் பந்தியை இங்கே குறிப்பிட்டுக் காட்டுவது அவசியம் எனக் கருதுகிறேன்.

“இலக்கியவாதிகளிடையே பரவலாகக் காணப்படும் சுயநலன் கருதிய தந்திர அணிசேரல்களோ ‘ஹீரோத்தன’ மேட்டிமையுணர்வோ இல்லாதவர். அடக்கமும் ஒதுங்கிய தன்மையும் கொண்டவர் என்பதும் எனக்கு முக்கியமாய்ப்படுகிறது.”

இன்று இப்படியானவர்களைப் பார்ப்பது மிக மிக அரிது. சற்று வித்தியாசமான முறையில் அறிமுகம் கிடைக்கிறது. இந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தை அலங்கரிக்கும் யுவதியின் படம் இந்த வேளையில் போடப்பட்டுள்ளதே இவர் ஏதோ வித்தியாசமான ஒருவராக இருக்கும் என நினைத்து மேலோட்டமாய் தட்டிப் பார்த்தேன்.

சமர்ப்பணம் என் கண்களுக்குப் பட்டது. தர்மம் செய்கிறபோது முகம் பாராமல் செய்யும் தர்மமே சிறந்ததாகச் சொல்லப்படுகிறது. எங்கோ பிறந்து@ இறந்து போன பிஞ்சுகளுக்காக சமர்ப்பணம் செய்யும் பெருவுள்ளத்தைக் காணும்போது கதையைப் படிக்க வேண்டுமென நினைத்து விசித்திர உலகத்திற்குள் நுழைந்தேன்.

அக்கதையானது 1966 இல் வெளிவந்த கதை. வரதர் பாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக சில வரிகளைத் தருகின்றார். நான் காரில் செல்கிறேன். அவர்கள் கொதிக்கும் வெய்யிலில் நடக்கிறார்கள். வெறுமனே ஆசிரியர் வெய்யில் என்று போட்டிருக்கலாம். கிராமத்தில் பேச்சு வழக்கோடு தொடர்புடையவராக ஆசிரியர் இருக்கிறார். அதனால் கொதிக்கும் வெய்யிலெனப் போட்டுள்ளார். இக்கதையில் முக்கிய சம்பவங்களுக்கு அருமையான விளக்கத்தைத் தந்து விசித்திர உலகத்தை மனந்நொந்து காட்டுகிறார். சுக வாழ்வைத் துறந்த பேரம்பலத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்த ஆசிரியர் வரதர் போன்ற சுயநலக்கார உத்தியோகத்தரையும் சந்தித்திருக்கிறார்.

பேரம்பலம், வரதர் போன்ற பாத்திரங்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். ஆசிரியர் கூறுவதுபோன்று இன்னும் விசித்திரமான உலகத்தில்தான் இருக்கிறோம். பன்னிரண்டு கதைகள் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன. நாம் கதையைப் படிக்கி;றோமோ இல்லையோ அவர் இச்சமுதாயத்தை நன்றாகப் படித்திருக்கிறார். வர்க்க முரண்பாடுகளைச் சாடியிருப்பதும் சாதிக் கொடுமைகளை சாகடிக்க அவர் முனைவதும் பெண் அடிமைத்தனத்தை வெளிக்கொணர்வதும் வறட்டுப் பிடிவாதக்காரர்களுக்கு நாடி பிடித்துப் பார்ப்பதும் மிகமிகப் பின்தங்கிய மக்களின் குரலாக மாறி பகுத்தறிந்து பார்த்திட சீரான விளக்;கங்கள் அவர் கதைகள் அனைத்திலும் தென்படுகிறது.

இவர் இக்கதைகளை எழுதிய காலம் முக்கியமாகத் தெரிந்து வைக்க வேண்டும். 1966 இல் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் நடைபெற்ற காலம.; இடதுசாரி இயக்கங்கள் வர்க்க ரீதியாக போராட்டங்களை நடத்திய காலம். அரசியல் ரீதியான போராட்டங்கள் நடைபெற்ற காலம். இக்;;காலப் பகுதியில் புத்தகத்தின் ஆசிரியர் இளைஞனாக பேனா பிடிக்கத் தொடங்கியுள்ளார் என்பது புலனாகின்றது. அந்த இளைஞனை காலம் நமக்குக் கொடுத்தது. அற்புதமான தமிழ் நடை. பண்டிதத்தனமில்லா நடை. யாருக்காக எழுதினாரோ அவர்கள் பார்த்து விளங்கக் கூடிய நடை. அது அவரது தனிக்கலை.

ஆசிரியரின் ஒரு சிறிய முன்னுரையில் முதல் பந்தியின் இறுதிவரிகளில் ‘நான் அப்போது தெரிவு செய்யாது விட்ட உதிரிகளும் பின்னர் எழுதிய கதைகளுமே இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.’ இவர் உதிரி என்பது முன்பு எழுதிய கதைகளின் மிச்சம். கிராமத்தில் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ‘தம்பி இவன் உருப்படாதவன் என்று நினைத்தேன் இவன் தான் இப்ப எங்களைக் காப்பாற்றுபவன்.’ இதேபோன்றுதான் உதிரிகளும்… கழித்து வைத்தவை. காலத்;தைக் காட்டும் கண்ணாடியாக மாறப்போகிறது. உதிரிகளைக் கையில் எடுப்போர் நிச்சயம் ‘கோடுகளும் கோலங்களும்’, ‘சாதாரணங்களும் அசாதாரணங்களும்’ ஆகிய ஆசிரியரின் நூல்களைத் தேடப்போகிறார்கள். வெளியீட்டாளர்களான புதிய தரிசனத்துக்கு இது ஒரு வெற்றியாகும்.

திண்ணைக்காக அனுப்பியவர்- சு. குணேஸ்வரன் (mskwaran@yahoo.com)


Series Navigation

ச.இரத்தினசேகரன்

ச.இரத்தினசேகரன்