வெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : காலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு

This entry is part [part not set] of 41 in the series 20080221_Issue

எஸ் ஷங்கர நாராயணன்


1
எழுத்தாளர்கள் ஏ.ஏ.ஹெச்.கே. கோரி, இலங்கையில் இருந்து சாந்தன், மற்றும் நான் – மூவருமாக மாதாமாதம் தமிழில் அச்சில் வெளிவந்த கதைகளில் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்து பரிசளிக்கிறது என்றும், அதில் ஒன்றை ஆண்டின் சிறந்த கதை என அறிவித்துச் சிறப்பளிக்கிறது என்றும் ஆர்வப்பட்டோம். செலவுகள் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் கோரி சுமந்தார். ‘ஜோதி விநாயகம் நினைவு சிறுகதைப் பரிசுத் திட்டம்’ என மூணாண்டுகள் அது நன்மதிப்புடன் தமிழ்கூறும் நல்லுலகில் உலா வந்தது.

அதில் ஒருமாதம் பரிசு பெற்றவர் இந்த மீரான் மைதீன். ‘சம்மந்தக்குடி’ என்ற அந்தக் கதையும் இத்தொகுப்பில் இருக்கிறது.

2
சட்டென்ற முகப்பரிச்சய ஜோரில் மீரான் மைதீனின் கதைகள் நம்ம குடும்பத்துப் பெரியவர் ஒருவரின் குரலை ஞாபகப் படுத்துகின்றன. மிக்க பிரியத்துடன் அவர் நம்மை அருகழைத்து மடியில் அமர்த்திக்கொண்டு, தன் காலத்தைச் சீப்பால் சீவுகிறதைப்போல கோதிக்கொடுத்துக்கொண்டே, இந்தக்காலம் பற்றிய சிறு அலுப்பையும் வெளிப்படுத்துகிறார். வாழ்க்கை முழுசாய் வாழக் கிடைத்தவர் அவர். இந்தப் பதட்டமும், இழப்பின் வெருட்சியும், அவசரமும் அவர் அறியாதவராய் இருந்தார். இழப்பில் துக்கம் உண்டு. ஆனால் வாழ்க்கை நம்பிக்கையை மீட்டெடுத்துக்கொண்டு அடுத்த சுவாரஸ்யம் நோக்கி தன்னைப்போல நகர்வதாய் இருக்கிறது அவருக்கு.

அழுத பிள்ள சிரிச்சதாம், கழுதப்பால குடிச்சதாம்.

கையில் மணியைக் கட்டிக்கொண்டு அலையாதவர் அவர். கைக்கடிகாரம் எதற்கு? மணி பார்க்க அல்ல, அவருக்கு அது ஒரு பவுசு. முகப்பவுடர் போல அதும் கூட ஒரு எடுப்பு. மேல்சட்டையே அந்தஸ்தின் அடையாளம்தான். நேரம் பார்த்து எந்தக் கோட்டையைப் பிடிக்க வேண்டும்? நேரம் என்கிற உத்தேசக் கணக்கு, அதுவே போதும். அது அவருக்கு தெருவில் விழும் வெயிலில், பரவும் நிழலில் கிடைக்கிறதாய் இருக்கிறது. ஊரில் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளையும் அவர் கண்ணிலும் காதிலும் நிறைத்துக் கொள்கிறவராய் இருக்கிறார். செய்தித்தாள் செய்திகள் அவரது கற்பனைக்குள் யதார்த்த நிகழ்வுகளாகவே பதிவாகின்றன. உயிரின் அடையாளங்களைத் தொலைத்திருக்கவில்லை அவர்.

உண்மையில் நம்மில் உறங்கும் மூதாதிகளை அவர் ஒரு புன்னகையுடன் ”எழுந்திரும் ஓய்…” என உசுப்பி உட்கார்த்தி விட்டுப் போய்விடுகிறார்.

தாத்தா மடிமேல் அமர்ந்து கதைகேட்கப் பிரியப்படாத பிள்ளைகள் உண்டா? உள்ளே குழந்தை உறங்காத பெரியாட்கள் உண்டா என்ன? நம்முள் இருக்கும் பெரியவர் பாவனையில், நம் குழந்தைத்தன்மைகளை மீட்டெடுத்து, புன்னகையை மீட்டெடுத்துத் தர வல்லவை மீரான் மைதீனின் கதைகள். ஓரே மனுசனிடம் இருக்கும் பெரிய தன்மையையும் குழந்தையையும் ஒரே கதையில் கூட அவர் வெளிக்காட்டித் தருவது ரொம்ப ஆச்சர்யம்.

3
மீரான் மைதீனின் பாத்திரங்கள் அப்ராணிகள். வெளுத்த பாலாய் இருக்கிறார்கள். சில சமயம் பால் என விஷமும் அருந்தி விடுகிறார்கள் ஆசையவசரத்தில்.

சிரிப்பையும் அழுகையையும் உள்ளுக்குள் பூட்டி வைத்துக்கொண்டு மூச்சுத் திணறுகிறவர்கள் அல்ல அவர்கள். எல்லாத்துக்கும் ஊர்கூட்டிக் கொண்டாடுகிறார்கள். பம்பர ஜோரில் பரபரத்துத் திரிகிறார்கள், அல்லது பரபரத்துத் திரிய விரும்புகிறவர்களாய் இருக்கிறார்கள். வீட்டில் கல்யாணம் காதுகுத்து பிரசவம் என்றால் கூட அது பொது நிகழ்ச்சி, ஊர் நிகழ்ச்சி. அதில் கலந்துகொள்வதிலும் அதை செய்திசுவாரஸ்யமாய்ப் பரிமாறிக் கொள்வதிலும் அவர்கள் ஒரு கும்மாளக் கொந்தளிப்புடன் நடமாடுகிறார்கள். விழுந்த மழைத்துளி தெறிப்பதைப் போல உணர்ச்சிகள் வந்த வேகத்தில் உதட்டுக்கு வெளியே இறங்குகின்றன, வசைச்சொற்கள் கூட அங்கே ஒரு வெயிலின் பளீருடன், ஆலங்கட்டி மழையின் சிலீருடன். தன்நெஞ்சு அறிவதைப் பொய்க்க ஏலாத சனம். காலம் காற்றைப்போல அந்த மரங்களைக் கலைத்து ஆட்டி சிலசமயம் வேரோடு பெயர்த்தெறிந்து… என விளையாட வல்லது. இதில் பிழைத்தவன் நிமிர்ந்து கொக்கரிப்பதும், வீழ்ந்து பட்டவன் மற்றவர்முன்னால் கேலியாடப் படுவதும் என நகர்கிறது வாழ்க்கை. ஒருவிதத்தில் வீழ்த்தப்பட்டவன், இன்னொரு விதத்தில் காயம் பட்டவனைப் பார்த்து கேலியடிக்கிறான்.

வாழ்க்கை இஞ்சிமுரப்பா போல உஸ்சென்று உள்ளிழுக்க வைக்கிறது இவர்களை.

வார்த்தைகள் அல்ல, அவை மனசின் எச்சில்.

வாழ்வெனும் மகா நதி. முங்கி முங்கிக் குளித்து ஆனந்தப் படுவதல் உயிரின் பயனாக இருக்கிறது.

தனி முகம் என யாருக்கும் இங்கே இல்லை. ஊர் முகம் அது. மொத்த மனுசாள் முகம் அது. அடையாளங்கள் மகாப்பொதுத்தன்மைகள் சார்ந்து காட்டப்படுகின்றன. எனக்கு, உனக்கு என்று இல்லை – நம் எல்லாருக்குமான ஒரே முகம் அது. முப்பதுகோடி முகமுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள். கிராமத்து முகம். வெயில் வர துளிர்த்தெழுவதும், மழைவிழ சிலிர்த்துச் சிரிப்பதும், அதிகாலை வர புன்னகையுடன் பூவணிந்து கொண்டாடுவதும்… மனுசாளைவிடு, இயற்கை மொத்தத்தின் இயல்புமே அது அல்லவா? இயல்பாகவே வாழ்க்கை சந்தோசமயமானது தான் என்கிறார். சந்தோசம் தேடுகிறதுதான் வாழ்வின் பெரும் நோக்கமாக இருக்கிறது, என்கிறார் மீரான் மைதீன்.

பாத்திரங்களின் இயல்புத்தன்மை போலவே அதைச் சொல்லும் வகைமையிலும் ஆக இயல்பு, ஒரு தோளணைத்த ஆதுரத்துடன் எழுதிச் செல்லுகிறார் மீரான் மைதீன். அந்தரங்க நாட்குறிப்பு – டைரி – போன்றதொரு சுயவயமான நடை. அதில் வலிந்து தைரியமாய் ஒரு கட்டுரைத்தனமான வார்த்தைக் கோர்வைகளையைக் கூடக் கையாள்கிறார் – ‘என்பது குறிப்பிடத்தக்கது’ – ஆனாலும் கதையின் அந்தரங்கப் பேச்சுபாவனை அசலாகவே கிடைக்கிறது. நேரடி வாழ்க்கைப் பதிவுகளாக ஒரு நேர்மையின் விவரம் பெறும் பாத்திரங்கள். யாருக்கும் லட்சிய முகமோ, அதிக அறிவுமமதையோ கிடையாது.

தங்கக் கட்டிகளாய்ப் பாத்திரங்கள். கேவலப்பட்ட கழுத்தறுக்கிற சீவன் இல்லை. கடன் வாங்கிவிட்டுக் கொடுக்கத் திராணியற்ற மனுசன் உள்ளே ஒளிந்து கொள்கிறான். என்றாலும் கையில் இருந்தாலோ, அல்லது வந்ததும் எடுத்து முதல்பாடாக அடைக்கிறவன்தான்.

வெளிநாடு போய்ப் பணம் கொண்டுவந்தும் குடும்ப நிலைமையில் சீர் ஒண்ணும் பெரிசாய் இல்லை போல. அது டிராப்ட் அகமதுக்கும் சரி, கண்ணாப்பாவுக்கும் சரி.

வசதிக்கு மீறிய ஆசைகள் கோடி சுமந்து எப்பவாவது அது நிறைவேறாதா என்று காத்திருக்கிறார்கள் அவர்கள். இந்த உள்ப்படபடப்பு, ஒரு நொடியில் மேஜிக் போல வாழ்க்கை தரம்மாறிவிடும் என்கிற அசட்டுக் கனவு இல்லாதவர் இல்லை. ஆகவேதான் ஒரு விவா குடிக்கிறதை பெரிய அந்தஸ்தாகக் கொண்டாடும் மனசு. தினசரி குடிக்க ஒப்பாத, அதற்குக் கட்டுப்படியாகாத குடும்ப நிலைமை. குடிச்ச ஜோரில் வெளிய வந்து செயற்கை ஏப்பம் விட்டு, யாராவது கவனிக்கிறார்களா, கவனிக்கப்டாதா எனத் தேடும் கண்கள். குடிக்கிறது கூழ், கொப்பளிக்கிறது பன்னீர் என்பது பழமொழி. பெரு வாழ்வு வாழ்கிற பிரமை வேண்டப்பட்ட மனுசர்கள். ஆனால், தன் தகுதி என அதற்கு எதையும் காணாத, காண முடியாத கனவுக்காரர்கள்.

இந்தப் பெருவாழ்வு எப்படி சித்திக்கும்? எடே அதுக்கெல்லாம் மேல ஆண்டவன் நல்லெழுத்து எழுதீர்க்கணும். தினசரி மேலே கைதூக்கி ‘படைச்சவனே…’ என்று ஒண்ணு குரல் கொடு. எல்லாம் அவன் நல்லாக்கித் தருவான்.

நம்பிக்கைகளில் கடக்கிறது வாழ்க்கை.

வாழ்க்கை என்பது என்ன- அது நல்லதும் கெட்டதுமான கலவை. எல்லமே முன் தீர்மானிக்கப் பட்ட நிகழ்வுகள். காத்திரு. அனுபவி. இதில் எதிர்பார்க்கிறதுக்கும் எதுவும் இல்லை. அந்த லிபியை, வாழ்வின் லயத்தை மாத்த யாராலும் ஏலாது.

மீரான் மைதீன் நல்ல பக்தி சிரத்தையான ஆள் போலிருக்கிறது. மனுசாளை, தம் ஊர் மக்களை அப்படி நேசிக்கிறார். மனிதன் அல்ல, அவன் மானுடத்தைப் போற்றுகிறார். பிள்ளைப்பருவம் அற்புதமானது என்கிறார். கண்ணீர் உலருமுன் சிரிப்பு பொங்க ஆரம்பிக்கிறது. பெரியாட்களும் சட்டுச் சட்டென்று குழந்தைக்கு நிகராக ஒரு பம்பரக் கிறுகிறுப்பு கொள்கிறார்கள். யானை குழந்தைக்கு மாத்திரமா வேடிக்கை. அதைச் சாக்கிட்டு பெரியாட்களும் சிரித்து அனுபவிக்கிறார்கள். ஊருக்கு அழகு கொடியேத்தம். திருவிழாவுக்கு அழகு யானை. தெருவில் சோன்பாப்டி விற்று வந்தாலே யானை வந்துவிட்டதாய்க் கிளுகிளுத்து வாசலுக்கு விரையும் சிறுசனம் பெருசனம்.

மக்களோடு பாத்திர வார்ப்போடு சந்தனமாய்த் தன்னைக் கரைத்துக் கொண்டு எழுதுகிறார் மீரான் மைதீன். எழுத்தாளனுக்கு சவாலான இந்த வியத்தில் அவர் தேறிவிட்டதாகவே சொல்கிறேன் – வறுமையில் தத்தளிக்கும் (கவர்னர்) பெத்தாவுக்கு வாசலில் வந்து வானத்தைப் பார்த்தால், சாயம் போன சேலையாட்டம் இருக்கிறது.

ஒரு நாள்த் திருவிழா போல, திடீரென்று ஊருக்கு விஜயம் செய்யும் கவர்னர் வருகை. அதும் ஒரு பெண் கவர்னர், இஸ்லாமானவர் வருகை பெத்தாவுக்குப் பரவசமாய் இருக்கிறது. நேரில் முன்னணியில் நின்று கைகுலுக்கும் வேகம் பெறுகிறாள். ஊரில் அவள் புகழ் பரவுகிறது. அவருக்குப் பட்டம் ‘கவர்னர் பெத்தா’ என்று அடையாளமாகிறது.

ஒருதளம் உயர்ந்து விட்டதாக பெத்தா தன்னளவில் உயர்ந்ததும், ஆகா தன்னொத்த பெண்சனங்கள் படிக்க வாய்க்கவில்லையே, என ஆயாசப்பட்டு அங்கலாய்க்கிறாள். சரியான முத்தாய்ப்பு கொண்ட கவனமான கதை. இந்தத் தொகுப்பின் ஆகச் சிறந்த ‘ரெண்டாம் ஸ்தானக்’ கதை இது.

4
காயம் பட்டவன் பழிவாங்குகிற துடிப்போடு இயங்குகிறான். அதையே மனசில் போட்டுச் சுமந்து உள்க்கீறல்களை காந்தல்களை அனுபவிக்கிறான். ‘இடம்’ கதையில் அவமானப் படுத்தப்பட்ட தலைமையாசிரியர் மாங்காய், கொடுக்காப்புளி விற்கும் கிழவியைக் கில்லியாடுவது போல இடம் பெயர்த்துகிறாள். சிக்கிக்கொண்ட ரோசம்மா பீவி எரிமலைக் குழம்பு. அவள் வாழ்க்கை திரிந்து போகிறதால், சாப்பாடு உட்பட சிறிய ஆசைகளை ஆவேசத்துடன் எட்டியடைகிறாள்.

அவ்வாறல்லாது மனதுக்கு சமாதானம் இல்லை. செயற்கை நிழல்கள்.

5
அசன் கண்ணாப்பா தனக்குத் தானே சுவாரஸ்யம். அதுவரை பெருவாழ்வு வாழ்கிற பிரமை சுமந்து திரிகிறவர். பேரன் வெளிநாடு போனதில் தன் பெருமையாய் அதைக் கொண்டாடியவர். ஊருக்குத் திரும்பிவரும் பேரன் கொண்டுவந்த டி.வி. பெட்டி அதுவே கதைசொல்ல ஆரம்பித்ததில், அவரது கதைகள் பாடாவதியாகி விட்டன.

தானே கட்டிக்கொண்ட மாளிகை தனக்கே கல்லறையாகி விட்டது. வெளியே வர வழி காணாத சனங்கள்.

மோதியார் வேறு வேலை என எதையும் எண்ணியே பாராதவர். வேலைக்கு ஆபத்து எனில் அப்படியே திகைத்து நின்று விடுகிறார்.

வாழ்க்கையின் ஓட்டத்தோடு தம் பிடித்து ஓடிக் கொண்டிருக்கிற வாழ்க்கை எதாவது ஒரு கணத்தில் முட்டுச்சந்தைக் காட்டிவிடும்.

அப்படியான திகைப்பில் மீதி வாழ்க்கையை என்ன செய்ய?

காவிய சோகம்.

6
மெல்ல இருட்டுக் கொடுத்து மேகம் திரண்டு மழை பொழிகிறது என்றெல்லாம் இல்லை. திடீர் மழையான வாழ்க்கையின் சட்டென்ற முக மாற்றம். வேற்றூரில் ஒரு பிள்ளை பெட்டிக்கடையில் வாங்கிய கருப்புசிவப்பு தி.மு.க. கொடி சிறு வாழ்க்கை வட்டத்துக்கு பெரும் வெளிச்சக் கொந்தளிப்பைக் கொண்டுவருகிறது. ஓட்டெடுப்பு தேர்தல் என பசங்கள் ஊரோடு கிறங்கித் திரிகிறார்கள்.

பெரிய மனுச பாவனைக்கு ஏங்கும் பிள்ளைகளும், பிள்ளைகளா இருந்தாத் தாவலையப்பா, என ஆயாசப்படும் பெரியாட்களும்.

அப்பாவுடன் எங்கோ போயிருந்தபோது கடையில் பார்த்த ஒட்டுமீசை வளரும் பிள்ளைக்கு சிரிப்பை ஆசையை வாரித் தெளிக்கிறது. வீட்டோடு அம்மா, அக்கா என்று ஆளுக்காள் அதைப் பொருத்திப் பார்த்து மகிழ்கிறார்கள். இதில் சிறியவர் பெரியவர் பேதம் அடிபட்டுப் போகிறது.

7
மீரான் மைதீனின் உலகத்தில் கிராமத்து வாசனையைத் தக்க வைத்துக் கொள்கிற ஆவேசம் இருக்கிறது. கிராமத்து எளிமையை விட்டுவிடாதீர்கள் என மௌனமாய் அவர் வேண்டுகோள் விடுக்கிறார். அடாடா காலம் நகரம் நோக்கி எல்லாரையும் விரட்டிக் கொண்டிருக்கிறதே, என்கிற கவலை அவரில் இருக்கலாம்.

கிராமம் என்றால் தனி முகமற்ற மனிதர்கள், ஆ கூட்டுக் குடும்ப உறவு நேர்த்திகள், அதைவிட சிறு குடும்பம் என, ஒன்று ரெண்டு பிள்ளைகள்… என ஒடுக்கிக் கொள்ளும் மனிதர்களைப் பார்த்து அவர் துயருறுகிறார். இசுலாமிய சமுதாயத்தில் குழந்தைகள் அதிகம் பெற்றுக் கொள்வது நடைமுறை என்றாலும், இந்தக் காலகட்டத்தின் இந்நூல் என்கிற அளவில் இந்தப் பதிவை நான் கவனிக்கிறேன்.

நிறையப் பிள்ளைகள் இருக்கிற வீடு ஆனந்தமயமானது, என்கிறார். கூட்டுக் குடும்பப் பெரியவர்கள் பேரனைப் பேர்த்தியை பிள்ளைகளை தூக்கி வைத்துக் கொண்டே தெருவில் திரிகிறார்கள். வாழ்க்கை பரவசமாய் இருக்கிறது அவர்களுக்கு.

அவர்கள் வழியாக நமக்கு.

8
ஊரே ஒருத்தருக்கு ஒருத்தர் வேடிக்கை என்று கிடக்கிறது. ஒராள் மத்தாளுக்குப் பட்டப்பேர் வைத்து விடுகிறான். பெத்தவன் வெச்ச பேர், அது கிடக்கு. காரணப்பெயராய் நம்ம ஒண்ணு வைப்பம், எதுக்கும் இருக்கட்டும். வேடிக்கை நேரத்தில், ஆத்திரத்தில் பயன்படுத்த சவுரியம் அல்லவா-

மனுசாள் மாத்திரம் அல்ல. வீட்டில் வளரும் ஆடு அதற்கே தனி மதிப்பு உண்டு. வீட்டில் காலகாலமாய் இருக்கும் மிதி வண்டி, அதும் பிரியமான வஸ்துவாக இருக்கிறது. வாழ்க்கை பிரியமயமாய்க் கிடக்கிறது.

கால்நனைத்தோடும் நதி.

9
நேரடித்தன்மையான விவரப் பதிவுகளில் ஒரு முக்கியமான விஷயம். இந்த சம்பவங்களில் அவரது ‘இருப்பை’ அதே வீர்யத்துடன் பதிவுசெய்யும் மீரான் மைதீன். பதின வயதுகளிலான இரு மையல் விவரங்கள் கதைகளாக வருகின்றன. அந்த வயதின் பரவசம், பிற்பாடு கதையாளனாக தன்னையுணர்ந்த எழுத்தில் சித்திக்குமா? அவர் அதில் மிக்க நியாயம் செய்திருக்கிறார். பதின்வயதின் அந்த முகூர்த்தங்களின் பவித்ரத்தை நம் உள்ளங்கைக்குள் மாற்றி யிருக்கிறார். இப்போது சாதாரண விஷயங்களாக, அல்லது முக்கியத்துவம் அற்ற விஷயங்களாக தெளிவு வரப் பெற்றவர்களாக நாம் இருக்கக் கூடும், ஆனால் நிகழ்கணங்களில் நம் வயதில் அவை எத்தனை வீர்யஇறுக்கம், அழுத்தம் கொண்டவையாய் இருந்தன. கணங்களை நித்தியப் படுத்துதல் என்கிற அவரது நேர்மைக்கு வணக்கம்.

சைக்கிள் கேட்கும் சின்னப் பெண் தேவதையேதான்.

அந்த பெந்தகோஸ்துப் பெண் (முகாம்) – அவருடனான பரிச்சயம், வேறு வேறு சமூக பாவனைகளைச் சுமந்துகொண்டு மீறி முடியாமல் இருவரும் தத்தளிப்பது, யதார்த்தமானவைதாம்.

தாகூர் கதைகளை நினைவு படுத்துகிறார் மீரான் மைதீன்.

10
யதார்த்தம் என்கிற கதை விஸ்தரிப்பு கூட, அவரது பாசம், கூட்டுக்குடும்ப நடைமுறை வளம் மற்றும் காயங்களோடேயே அவர் கதைகளில் அடங்கிக் கொள்கின்றன. மோதியார் ஓதுவது தவிர வேறொன்றறியார். கடும் உழைப்பாளிகள் என வரும் ஆம்பிளைகள் பாய் விற்கிறார்கள், சைக்கிளில் போய். உழைப்பின் பாடுகள்… அவற்றை விவரப்படுத்த, மீரான் மைதீன் முன்வரவில்லை. ஆசசர்யம். ஒரு நெருக்க வட்டத்துக்குள் கதையைக் காட்சியாக்கு முனைப்பில், அதன் விவரச் செறிவைத் தரும் வெற்றிபாவனையின் முன், வாழ்க்கை சுருங்கிப் போகத்தானே செய்யும்.

சமூகச் சிக்கல்களை வெற்றி கொள்கிற பாத்திரங்களோ பாவனைகளோ தொகுதியில் இல்லை.

எழுத்து அதன் வளர்ச்சிநிலையில் முக்காலமும் காட்டும் திறன் பெற வேண்டும், என்பது என் அவா. யதார்த்தத் தளத்தில், பெரிதும் முடிவு என்று இல்லாமல், படித்துறையில் துணி துவைத்துக் குளித்துவிட்டுக் கரையேறுகிற பாவனையில் மீரான் மைதீன் கதைகளைக் கையாள்கிறார்.

வாழ்க்கை மேம்பாட்டுக்குத் தயாராகாத சனங்கள். அவர்களின் தேங்கியகுட்டை வாழ்க்கையை வாசகனுக்கு அறிவுறுத்த முடிந்தால் நலம் என்பது என் கருத்து. நிகழ் உலகத்துக்கு வராத கனவுகளால் மிஞ்சுவது துக்கம் மட்டுமே. அதற்குக் காரணம் காலம் அல்ல, அவர்களே அல்லவா- அதைச் சுட்டிக் காட்டுதல் நலம்.

நலமறிய அவா.

11
தொகுப்பின் ஆகச் சிறந்த கதையாக ‘மஜ்னூன்’. தமிழின் சிறந்த கதைகளில் ஒன்றென இதைச் சுட்டிக் காட்டுவேன். ஓர் உலகளாவிய தளத்தில் சஞ்சாரம் கொள்கிறது கதை. கதையோடு பொருந்தாதபடி வெளிநாட்டு அரசியல் விவரக் குறிப்புகள், ஒரு பிச்சைக்கார நிலைக்குத் தள்ளப்பட்டவனின் பார்வையில், விளக்கம் பெற்றாலும், முற்றிலும் நிஜம் சுமந்து நிற்கிற கதை, விளைந்து முற்றி நிற்கிற கதிர் அது. வெறுமே நெஞ்சை நெகிழ்த்துவது என்கிற, பிற கதைகளின் போக்கில் இருந்து தற்செயலாகப் போல ஆத்மாவின் அழுத்தங்களுக்கு நம்மை இட்டுச்செல்ல வல்லதாய் அமைந்திருக்கிறது ‘மஜ்னூன்’. அராபிய மொழியில் மஜ்னூன் என்றால் பைத்தியம். தமிழில் பதிவாகாத விஷயத்தை மிக அவசியமாக, பொறுப்புடன் பதிவு செய்திருக்கிறார் மீரான் மைதீன். காலமெல்லாம் இந்தக் கதை அவர் பேர் தாங்கி வாசகனிடம் சென்றடைந்துகொண்டே இருக்கும் சிரஞ்ஜீவித் தன்மை பெற்றிருக்கிறது.

·
வெயில் மற்றும் மழை – சிறுகதைகள் மீரான் மைதீன்
வெளியீடு அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை 600 011


Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்