லா. ச. ரா. வுக்கு எழுத்தாளர்கள் எடுத்த எடுப்பான விழா

This entry is part of 40 in the series 20080103_Issue

மலர் மன்னன்இதுவரை எந்த எழுத்தாளருக்கும் அமையாத விதமாகத்தான் அமைந்துவிட்டது, லா. ச. ரா. வுக்காக எழுத்தாளர் எஸ். ஷங்கர நாராயணன் எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுக்கும் விழா என்கிற பெயரில் சென்னையில் ஏற்பாடு செய்த கூட்டம். கூட்டத்தை இரங்கல் கூட்டம் என்றோ அஞ்லிக் கூட்டம் என்றோ குறிப்பிட்டு விடாமல் விழா என்று அவர் அறிவித்தது சரிதான்.

எழுத்தாளர்கள் மிகவும் உரிமையுடனும் வாஞ்சையுடனும் பழக இடமளித்தவர், லா.ச.ரா. அவரது எழுத்தைப்பற்றி அவரிடமே அவருக்கு ஒவ்வாத கருத்தைச் சொன்னாலும் அட, இதில் இப்படியொரு தொனிக்கு இடமிருக்கிறதா என்று வியப்போடு கேட்டுக் கொள்வாரேயன்றி தனது நிலைப்பாடுதான் சரி என்று தர்க்கிக்க மாட்டார். அந்த அளவுக்குப் பக்குவப்பட்டவர் லா.ச.ரா. எழுத்தாளர்கள் அவருக்கு விழாதான் எடுப்பார்கள், ஆகவே எடுத்தார்கள். அதிலும் மிகக் குறுகிய காலத்தில், மேலும் அவரது எழுத்தைப் பற்றியும் அவரோடு தமக்கிருந்த பரிச்சயம் பற்றியும் பலரும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பையும் உடனுக்குடன் வெளியிட்டு.

எழுத்தாளர் எஸ். ஷங்கர நாராயணன் சிந்தனை வளம் மிக்க எழுத்தாளர். தொகுப்பிற்கு அவர் வைத்த தலைப்பே அதனை உறுதி செய்தது: சந்நிதிகள், பிராகாரங்கள், வீதிகள்! லா. ச. ரா.வின் எழுத்தைப் பார்ப்பவர்களை இப்படித் தரம் பிரித்துக் காட்டியதும் சரிதான். தொகுப்பில் லா.ச. ரா. வின் வானொலி நேர்காணல், அவர் எழுதிய மிகச் சிறந்த சிறுகதைகளுள் முக்கியமான பாற்கடல், குருஷேத்திரம் என்னும் இரு கதைகள் ஆகியவற்றையும் சேர்த்துப் புத்தகத்தை மிகவும் கனமாக ஆக்கிவிட்டிருக்கிறார், ஷங்கர நாராயணன். அதிலும் ஒரு மாத கால அவகாசத்திற்குள்ளாக! இதில் அவருக்குக் கை கொடுத்தமைக்காக சென்னை பெரம்பூர் அன்னை ராஜேஸ்வரி பதிப்பக புரிமையாளர் உதயாவைப் பாராட்டவேண்டும்(ஞணிணிடுதஞீச்தூச்@ணூஞுஞீடிஞூஞூட்ச்டிடூ.ஞிணிட்). தொகுப்பின் விலை ரூ. 100/

மேலும், கூட்டத்தில் பங்கேற்ற எழுத்தாளர் திலகவதி, லா.ச. ரா. படைப்புகள் குறித்த தமது ஆய்வுக்கட்டுரையுடன் தாம் தொகுத்த சில லா.ச.ரா. கதைகளும் அடங்கிய சிறுநூலை மேடையில் வெளியிட்டு முதல் பிரதியை லா. ச. ரா. வின் மனைவி ஸ்ரீமதி ஹைமவதி அவர்களிடம் வழங்கி, நடைபெறுவது விழாதான் என்று மெய்ப்பித்தார். முத்துக்கள் பத்து என்ற பொதுத் தலைப்பில் பத்து எழுத்தாளர்களின் படைப்புகள் அடங்கிய பத்து சிறு தொகுப்பு நூல்களை உருவாக்கியிருக்க்கிறார், திலகவதி. ஒவ்வொரு தொகுப்பிலும் சம்பந்தப் பட்ட எழுத்தாளரின் படைப்புகள் பற்றிய தமது ஆய்வுக் கட்டுரைøயும் முன்னுரை போல இணைத்திருக்கிறார் (வெளியீடு: அம்ருதா பதிப்பகம், சக்தி நகர், போரூர், சென்னை 600 116. ஒரு தொகுப்பின் விலை ரூ. 50/ ). முத்துக்கள் பத்துதொகுப்பில் தி.ஜ.ர.வும் இருக்கிறார்.

லா. ச. ரா. ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவராக வாழ்ந்து, தற்காலத் தமிழ் இலக்கியத்திற்கும் தமது பங்களிப்பை, தாம் தரவேண்டும் எனத் தமக்குத் தாமே எல்லை வகுத்துக் கொண்டு அளிக்க முற்பட்டதையும் முழுமையாகவே அளித்த்துவிட்டுத்தான் ஸ்தூல வாழ்க்கை என்ற நிலையைக் கடந்து அடுத்த கட்டத்திற்குச் சென்றிருக்கிறார். அவரோடு அவரது படைப்புகள் மூலமாகத் தொடர்ந்து தொடர்புகொண்டிருக்க நம்மால் முடியும். முற்றிக் கனிந்த பழம் தானாக் கனிந்து உதிர்வதுபோலத்தான் அவர் தமது அடுத்த நிலைக்குச் சென்றிருக்கிறார். சில எழுத்தாளர்களைப்போல திடீரெனத் தம்மை அறுத்துக் கொண்டு தமது பங்களிப்போ குடும்பப்பொறுப்புகளோ முற்றுப் பெறாமல் அடுத்த கட்டத்திற்குச் சென்று விடவில்லை, ஆகையால் ஷங்கர நாராயணன் விழா என்று தாம் ஏற்பாடு செய்த கூட்டத்தைக் குறிப்பிட்டது சரிதான் என்று கூட்டத்தில் பேச எனக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டபோது சொன்னேன்.

புதுமைப்பித்தன் தொடங்கி, கு.அழகிரிசாமி எனப் பலருக்கும் கிட்டாத வாய்ப்பாக அப்படியொரு விழா லா..ச. ரா.வுக்குக் கிடைத்திருக்கிறது, அதிலும் வேறொரு எழுதாளரின் முயற்சியாக; குடும்ப உறுப்பினர் எவர் மூலமாகவும் அல்லாமல் என்றும் சொன்னேன்.

லா.ச. ரா .வின் மூத்த மகன் ஸப்தரிஷி மிகவும் இயற்கையாக உணர்ச்சிவசப்பட்டுத் தனக்கு நாம ரூபமாக அல்லாது ரூப ரூபமாகவே தன் தந்தை வேண்டும் என்று கண்ணீர் சொரிந்ததால், அப்பாக்கள் இறந்து போவதில்லை என்றும், வாழ்க்கை என்பது நிஜத்தில் நினைவுகளின் தொகுப்பேயன்றி வேறல்ல என்பதால் ஸப்த ரிஷி வருந்தத் தேவையே இல்லை, தன் தந்தையைப் பற்றிய நினைவுகளின் மூலமாக அவரோடு எப்போதும் உறவாடிக் கொண்டிருக்க முடியும் என்றும் ஆறுதல் சொன்னேன்.

இப்படி ஒரு மகனுக்கு ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து ஆறுதல் சொல்லவும், அதனை அந்த மகனும் புரிந்துகொண்டு ஆறுதல் பெறவும் முடிந்தமைக்காகவே என்னைப் பொருத்தவரை லா. ச. ரா.என்கிற எழுத்தாளருக்கு எழுத்தாளர் எஸ். ஷங்கர நாராயணன் மூலமாக எழுத்தாள ர்கள் எடுத்த விழா முக்கியத்துவம் பெற்றுவிட்டது.


malarmannan79@rediffmail.com

Series Navigation