தேவமைந்தன்
இன்றைக்குச் சிறுகதை தமிழுலகில் எத்தனையோ தொலைவு பயணம் செய்து வடிவமிழந்து உருவமிழந்து அன்னியமாகி சிறுத்து பயிற்சிப் பட்டறைகளில் சான்றிதழ் மட்டுமே பெறும் அளவு ‘மவுசு’ குறைந்து தனக்கான அடையாளம் தேடி அலைகிறது. தமிழருக்குக் கரும்பு போலவும்(சீனா) மிளகாய் போலவும்(சிலி) மணிலாப் பயறு போலவும்(மணிலா) மெய்யாகவே அன்னியமான சிறுகதையின் உரைநடை வடிவம் தமிழ் இலக்கிய உலகில் புகுந்து எப்படியெல்லாம் இலக்கணப்படுத்தப்பட்டது என்பதைப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம். எந்த அளவு முன்னோக்கித் தொலைநோக்க முடியுமோ அதே அளவு சரியாகப் பின்னோக்கித் தொலைநோக்கவும் சிங்கத்துக்கு மட்டுமே முடியுமாம். இதற்கு ‘அரிமா நோக்கு’ என்று பெயரிட்டு, தமிழ் உரையாசிரியர்கள் தம் உத்திகளுள் இதைத் தலையாய உத்தியாக ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பே கொண்டார்கள். இந்த உத்தியின் ஒரு பாதியை இந்தக் கட்டுரையில் பயன்படுத்துகிறேன். தமிழுக்குப் புதுவரவாக இருந்த சிறுகதைக் குழந்தை, யார் யார் மடிகளிலெல்லாம் தவழ்ந்து ஆளானது, மறக்கப்பட்டுவிட்ட/மறக்கடிக்கப்பட்ட அவர்கள் யார் என்பதைக் கூடுமான அளவு ஒழுங்குடன் வெளிப்படுத்துவதும் இதன் அடுத்த நோக்கம்.
காவியங்களில் சிறுகதைகள் – டாக்டர் மா.இராசமாணிக்கனார் நோக்கு:
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், கவுந்தியடிகள் மாதரிக்குக் கூறிய அடைக்கலச் சிறப்புப் பற்றிய வணிகமாதின் கதை, செய்யுளில் அமைந்த சிறுகதை. மதுராபதி தெய்வம் கண்ணகிக்குக் கூறிய பொற்கைப் பாண்டியன் கதையும் சிறுகதையே ஆகும். இங்ஙனமே மணிமேகலை என்னும் காவியத்தில் கூறப்பட்டுள்ள சுதமதியின் வரலாறு, ஆபுத்திரன் வரலாறு ஆகியவற்றில் சிறுகதை நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. இவற்றை விரித்து உரைநடையில் எழுதினால் அவை இலக்கிய நயமுள்ள சிறுகதைகளாக உருவெடுக்கும். இவ்வாறே கொங்குவேள் பாடிய பெருங்கதையிலும் சீவக சிந்தாமணியிலும் சிறுகதைகள் பல செருகப் பெற்றுள்ளன. ஆயினும் இவை அனைத்தும் செய்யுள் வடிவில் அமைந்துள்ளன.(1)
தொடக்க காலத்தில் சிறுகதைகள் – டாக்டர் மா.இராசமாணிக்கனார் நோக்கு:
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாளிதழ்களும், கிழமை திங்கள் இதழ்களும் பெருகத் தொடங்கிய பொழுது, மேனாட்டுச் சிறுகதைகளைப் பின்பற்றி நம்மவர் தமிழில் சிறுகதைகளை எழுதலாயினர். பண்டித நடேச சாஸ்திரியார் (1859-1906) ‘ஈசாப் கதைகள்,’ ‘தக்காணத்து பூர்வ கதைகள்,’ ‘தக்காணத்து மத்திய காலக் கதைகள்’ என்று மூன்று கதை நூல்களை எழுதினார். இந்த நூற்றாண்டில் பேராசிரியர் செல்வக்கேசவராய முதலியார் எழுதிய ‘அபிநவ கதைகள்’ காலத்தால் முற்பட்டவை என்றும், அறிஞர் வ.வே.சு. ஐயர் அவர்கள் பாலபாரதியில் எழுதிய கதைகள் சிறுகதைகளுக்கு உயிரும் ஒளியும் கொடுத்தன என்றும் புதுமைப்பித்தன் எழுதியுள்ளார்.
கவியரசர் பாரதியாரும், இராமாநுசலு நாயடு என்பவரும் சிறுகதைகள் எழுதினர். 1930க்குப் பின்பு கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள். எஸ்.வி.வி., கொனஷ்டை, ஆகியோர் நகைச்சுவை பொருந்திய சிறுகதைகளை வரைந்து பெயர் பெற்றனர். திருவாளர்கள் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., பி.எஸ்.ராமையா, சிதம்பரம் சுப்பிரமணியன், புதுமைப்பித்தன் ஆகியோரும் சுவை மிகுந்த சிறுகதைகளை எழுதலாயினர், மௌனி என்பவர் எழுதியுள்ள ‘நட்சத்திரக் குழந்தைகள்,”சிவசைவம்,’ ‘எங்கிருந்தோ வந்தான்’ போன்ற கதைகள் உயர்ந்தவை….வை.மு.கோதைநாயகி அம்மையார் எழுதியுள்ள சிறுகதைகள் – ‘மூன்று வைரங்கள்,’ ‘கதம்ப மாலை,’ ‘பட்சமாலிகா,’ ‘சுடர் விளக்கு,’ ‘பெண் தர்மம்’ என்னும் ஐந்து [தொகுப்பு] நூல்களாக வெளிவந்துள்ளன.
வாழ்க்கை நிகழ்ச்சிகளுள் ஒன்றை மட்டும் எடுத்து, அதற்கு முதல்-இடை-கடை என்னும் மூன்று உறுப்புகளை அமைத்து, விளங்க வரைவது சிறுகதை அல்லது குறுங்கதை எனலாம். சுருங்கக் கூறின், பெருங்கதை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நிலைக் கண்ணாடி எனலாம்.
புதுமைப்பித்தனுடைய சிறுகதைகளில் பல சிறந்த உண்மைகள் காணப்படுகின்றன. அவற்றுள் இரண்டனைக் கீழே காண்க:
(அ) “பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம்; ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால், பெரிய மீன், ‘குற்றம் செய்கின்றாய்’ என்று தண்டிக்க வருகின்றது. இதுதான் சமூகம்.”
(ஆ) “உணர்ச்சி, தேவனையும் மிருகமாக்கி விடுகிறது.”(2)
விடுதலைப் போராட்டப் பின்னணி – கல்கியின் சிறுகதைச் சாதனை – கா.திரவியம் நோக்கு:
கல்கியின் சிறுகதைகள் தேசியத்துக்கு ஆற்றிய சிறப்பான தொண்டு, அக்கதைகள் பெரும்பாலானவற்றில், நாட்டுப்பற்றும் நாட்டுக்கு ஆக்கம் தேடிய நல்ல கருத்துக்களும் கதையில் இழையோடியதாகும். சிறை சென்ற தேசபக்தனைக் கதாநாயகனாகவும், சமூகசேவை ஆற்றும் பெண்ணைக் கதாநாயகியாகவும் கொண்டு பின்னப்பட்டிருந்த இக்கதைகள்,தியாகிகளையும் ஊழியர்களையும் நம் கண்முன் நிறுத்தி, அவர்கள் தொண்டினாலும் துன்பங்களினாலும் ஊழியத்தினாலும் உள்ளக் கிளர்ச்சிகளாலும் படிப்பவர்களை ஆட்கொண்டன. அரசின் அடக்குமுறைக்கும், பொதுவாகப் பலரின் அலட்சியத்துக்கும் ஆளாகியிருந்த இந்த வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் தம் கதைகள் மூலம் சமூகத்தின் ஏற்பையும் பாராட்டுதலையும் பெற்றுத் தந்தது, கல்கியின் சிறந்த சாதனைகளில் ஒன்று.(3)
விடுதலைப் போராட்டப் பின்னணி – அகிலனின் சிறுகதைச் சாதனை – கா.திரவியம் நோக்கு:
விடுதலைப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட கதைகளில், போராட்ட உணர்ச்சி பொங்கி வழிகிறது அகிலனின் ‘பொங்குமாங்கடல்’ என்ற கதையில். சிதம்பரம் பிள்ளையைச் சிறையிலே தள்ளி செக்கிழுக்க வைத்த ஆங்கிலேய அதிகாரிகளைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த புரட்சிவாதிகளை மையமாகக் கொண்டு நெய்யப்பட்ட நெஞ்சை அள்ளும் கதை இது.(4)
முதன்முதலில் தமிழில் சிறுகதை குறித்து ஆய்வுக் கண்ணோட்டத்துடன் சிந்தித்தெழுதிய டாக்டர் அ. சிதம்பரநாதன் கருத்துகள்:
“தமிழில் சிறுகதையைப் பற்றி ஆய்வுக் கண்ணோட்டத்தோடு சிந்தித்து, தரம் அறிந்து வகைப்படுத்தித் திறனாய்வு செய்த முதல் தமிழ்ப் பேரறிஞர் இவரே” என்று, “தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்”(ஏப்ரல் 1977) என்ற அரிய சிறு அளவிலான புத்தகத்தைப் பதிப்பித்த பேரா.புளோரம்மாள், ம.செ.இரபிசிங் கூறியுள்ளனர்.(5) 22+vi பக்கங்கள்; ரூபா ஒன்று மட்டுமே விலையுள்ளது இந்நூல். இது [இக்கட்டுரை எழுதும்] இப்பொழுது கிடைப்பதில்லை. மூன்றாவது அகில இந்திய எழுத்தாளர் மாநாட்டில் அ.சிதம்பரநாதன் ஆற்றிய பொழிவின் சுருக்கமும், இலக்கிய இதழ்களில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள சில முதன்மைக் கருத்துகளை – கூடுமானவரை சிதம்பரநாதனின் நடையிலேயே தருகிறேன். அந்தப் பகுதிகளில் மட்டும் காலம் வேறுபட்டிருக்கும்.
எட்கர் ஆலன் போ, ஹென்றி ஹட்சன், பெயின்(Barry Paine) ஆகியோர் கூறும் சிறுகதை இலக்கணம்:
1. சிறுகதை என்பது உட்கார்ந்து ஒரே மூச்சிலேயே படித்துவிடக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
2. 2000 அல்லது 3000 சொற்களுக்குமேல் போவதாக இருக்கக்கூடாது.
3. அரை மணி அல்லது ஒரு மணிக்குமேல் படிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளக் கூடியதல்லாததாக இருக்கவேண்டும்.
அளவு ஒன்றே சிறுகதைக்கு இலக்கணம் அல்லாவிட்டாலும், அளவும் சிறுகதையின் இலக்கணங்களுள் ஒன்றாகும்.
கவிஞர் ரவீந்தரநாத் தாகூர் எழுதிய ‘குமுதினி’ என்னும் கதை 300 பக்கமாயினும் அது சிறுகதைதான் என்று வாதிப்பார் உண்டு. ஆங்கிலத்திலும் மெரிடித் என்பார் எழுதிய ‘குளோவின் கதை'(Tale of Chloe) என்பது சிறுகதைதானா அன்றா என்ற செய்தி பற்றி இன்னும் ஆராய்ச்சி நடந்துகொண்டு இருக்கிறது.
சிறுகதை எழுத்தாளர்கள் சிக்கலான பெரிய செய்திகளைப் பொருளாக எடுத்துக்கொள்ளக் கூடாது.(“They should not saddle themselves with a complicated plot.” Paine P.38) ஆடுகின்ற பெண் ஒருத்தி தான் ஆடுகின்ற அரங்கத்தின் நீள அகலத்திற்கேற்ப தனது ஆட்டங்களைச் சுருக்கிக்கொள்ளுதல் போல, சிறுகதை ஆசிரியர்கள் தம்முடைய கதைப்பொருளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சிறுகதைகளில் ஒரே நோக்கமும் ஒரே விளைவுந்தான் எதிர்பார்க்கப்படுகின்றன.(“Singleness of aim and singleness of effect are the two great canons by which we have to try the value of a short story – as a piece of art.” Henry Hudson, Introduction To The Study Of Literature, P.445) நோக்கம் நிறைவேறும் வகையில் சிறுகதை அமைந்திருத்தல் போதுமானது. பல எழுத்தாளர்களுக்கு இது கைவரப்பெறாததால்தான் புதினங்களை[நாவல்களை] எழுதத் தலைப்படுகிறார்கள் என்று சொல்வது தவறாகமாட்டாது.
சிறுகதை எழுதுகிறவர்கள், கதை பொய் என்ற உணர்ச்சி வாசகர்கள் இடத்தில் உண்டாகும்படி எழுதுவார்களேயானால், அக்கதையில் நன்மைகள் பல உண்டு என்றாலும் அவை முழுப்பயன் அளித்தல் இல்லை.(“If a story once felt to be false, then all the virtues are of no avail”) மெழுகுவர்த்தி பார்ப்பதற்கு அழகாகவும் தொடுவதற்கு இனியதாகவும் முகருவதற்கு மனமுடையதாகவும் இருந்தாலும் அது எரியவில்லை என்றால், எவ்வாறு தக்க பயன் விளைத்தல் இல்லையோ அவ்வாறே மெய்போன்றது என்ற உணர்ச்சியை எழுப்பாத சிறுகதை முழுப்பயன் தராது என்பது நம்பிக்கை.
சிறுகதை எழுதுகிறவர்கள் நிகழ்ச்சிகளைப் படர்க்கையில் வைத்துத் தெரிவிக்கலாம்; கதைத் தலைவனோ கதைத் தலைவியோ தானே பேசுவதுபோல அமைக்கவும் செய்யலாம்; கடிதங்கள் மூலமோ, நாட்குறிப்புகள் மூலமோ, பிற பாத்திரங்கள் மூலமோ ஒன்றன்பின் ஒன்றாகச் செயல்கள் வெளிப்படுமாறு செய்யலாம். இந்த மூன்று வகைகளில் எதனை வேண்டுமானாலும் சிறுகதை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பது மரபு.
சிறுகதையில் உரையாடல் இருப்பது விரும்பத்தக்கது என்றாலும்.இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. சிலருடைய சிறுகதை உரையாடலே இல்லாமல் நிகழ்தல் கூடும்; சிலருடைய சிறுகதையிற் சிறிதளவு உரையாடல் இருத்தல் கூடும்; சிலருடைய சிறுகதையில் எல்லாம் உரையாடலாகவே அமைந்துவிடுதலும் உண்டு.
சிறுகதையின் தொடக்க வாக்கியங்களைப் படித்த அளவில் கதையின் நோக்கம் இன்னது என்று வாசகருக்குப் புலப்பட்டுவிட வேண்டும்.(“Initial sentences should bring out the aim.”-W.H.Hudson)
சிறுகதையின் முடிவு எவ்வாறிருக்க வேண்டும்? இன்பியல் முடிவினாலோ துன்பியல் முடிவினாலோ கலை அழகு பெற்றுவிடாது; கலையழகிற்கு ஏனைய பல காரணங்கள் உண்டு.(“Happiness and unhappiness have nothing to do with art; the artistic ending is the right and inevitable ending.” – Paine)
அ.சிதம்பரநாதன் ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்'(1977)நூலில் சுட்டியுள்ள சிறுகதை ஆசிரியர்களும் அவர்கள் படைத்த சிறுகதைகளும்:
1921வரை வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியார்தான் சிறுகதை எழுத்தாளர்களுக்கு விடிவெள்ளியாய் இருந்தவர்.. அவர் இயற்றிய ‘திண்டிம சாஸ்திரி,’ ‘சுவர்ண குமாரி’ போன்றவற்றின் அடிப்படையில் பின்னர்ச் சிறுகதைகள் எழுந்துள்ளன. வேதநாயகம் பிள்ளை, வ.வே.சு.ஐயர், மறைமலையடிகள் போன்றவர்களும் சிறுகதை போன்ற சிலவற்றை முன்னர் எழுதியுள்ளார்கள்…
சரியான சிறுகதை இலக்கியத்தின் தந்தையாகத் தமிழில் மதிக்கத்தக்கவர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி என்று கூறுவது பொருத்தமற்றதாகாது. அவருடைய சிறுகதைகளிற் சில நெடுங்கதைகளாக இருக்கின்றன..அவரோடு சமகாலத்திலே வேறு இரு பெரும் எழுத்தாளர்கள் தோன்றினர். கு.ப.இராசகோபாலனும் புதுமைப்பித்தன் என்ற சொ.விருத்தாசலமும் நம் சந்ததியாராலும் விரும்பிப் படிக்கத்தக்க அளவு சிறப்பும் ஆற்றலும் பெற்றிருந்த சிறுகதை ஆசிரியர்கள். அவர்கள் இருவரும் காலஞ் சென்றுவிட்டனர். புதுமைப்பித்தன், உலகச் சிறுகதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார்…அவர் மிக்க சுருக்கமாகவும், திட்பமாகவும் எழுதுதலில் வல்லவர்; வரிதோறும் தொனிப் பொருளோடு வரையும் பெற்றி படைத்தவர். கு.ப.இராசகோபாலன், உயிரோடு திகழ்வாரைப் போலப் பல பாத்திரங்களைத் தமது கதைகளில் கொடுத்துள்ளார். சாதாரணமாக நம்மால் ஒதுக்கிவிடப்படுகிற, நம் கண்ணுக்குத் தெரியாது போய்விடக் கூடிய வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு அவர் கதைகளை எழுப்பியுள்ளார். அவர் சொல்லாட்சி ஒரு தனிமதிப்புடையது. சில சொற்களில் அடங்கிக் கிடக்கும் பொருள் விரித்தால் அகன்று காட்டும். ‘காணாமலே காதல்’ ‘புனர்ஜென்மம்’ ‘கனகாம்பரம்’ முதலிய அவருடைய சிறுகதைத் தொகுதிகளாலன்றியும், ‘இரட்டை மனிதன்’ போன்ற மொழிபெயர்ப்பு நாவல்களாலும் அவர் புகழ் நிலவும் என்பது உறுதி. சமூக நோக்கில் ஜீவா* எழுதிய சிறுகதைகள், ‘வேதாந்த கேசரி’ ‘பிரதிவாதி பயங்கரம்’ முதலியவை. விந்தனின் ‘பொன்னி’ முதலிய சிறுகதைகள் சமூகப் பார்வையில் அமைந்தவை. கணையாழி எழுதிய ‘நொண்டிக் குருவி’ வெளியே ஜீவகாருண்யம் பேசி வீட்டில் அதைப் பின்பற்றாதவரை அம்பலப் படுத்தியது. “யார் குற்றவாளி?” என்ற கருத்தோடு எழுதப்படும் கதைகள் பல. இராசகோபாலாச்சாரியார் எழுதிய ‘பட்டாசு,’ அண்ணாதுரை எழுதிய ‘குற்றவாளி யார்?,’ புதுமைப்பித்தன் எழுதிய ‘பொன்னகரம்,’ ஜீவா எழுதிய ‘கொலு பொம்மை’ ஆகிய கதைகளில் வரும் பாத்திரங்கள் திருடியதாகவோ, விபசாரம் செய்ததாகவோ இருந்தன. அதற்குக் காரணம் அவ்வாறு அவர்களைச் செய்யும்படி பாழான ஏழ்மை நிலையில் விட்டுவிட்ட சமுதாயமே என்பது காட்டப்படுகிறது.
புதுமெருகு பெற்ற பழங்கதைகள்:
கு.ப.ரா. எழுதிய ‘துரோகமா?,’ கருணாநிதி எழுதிய ‘ராயசம் வெங்கண்ணா’ ஆகிய சிறுகதைகள், தஞ்சாவூர் – நாயக்கர்களிடமிருந்து மராத்தியர் கைக்குப் போகும்படி ஏற்பட்ட சரித்திரக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டவை. அவ்விரு ஆசிரியர்களும் நிகழ்ச்சியை வெவ்வேறு கோணத்திலிருந்து படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். புஷ்பத்துறை சுப்பிரமணியன் அஜாத சத்ருவைப் ‘பாடலி’ என்ற கதையில் திரும்பவும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். ‘கொனஷ்டை’ எழுதிய கதைகளில் மகனுக்கு முதுமையைக் கொடுத்து இளமையைத் தான் பெற்றுக் கொண்ட யயாதி ஒரே நாளில் பட்ட அல்லல்கள், ஆயிரம் ஆண்டுகளில் படுவதோடு சமம் என்ற அரிய கருத்து காட்டப்பட்டிருக்கிறது. ‘அகல்யை’ என்ற புதுமைப்பித்தன் கதை புத்துருவமே பெற்று நிற்கிறது.
கதையாசிரியர்களின் வாழ்க்கைநிலையை வைத்து எழுதப்பட்ட கதைகள்:
சுண்டு எழுதிய ‘சந்நியாசம்’ என்ற சிறுகதை, தன்னால் காதலிக்கப்பட்ட பெண்ணொருத்தியைத் திரைப்பட முதலாளியொருவர் தன் ஆசை நாயகியாக ஆக்கிக்கொண்டுவிட்டபடியால் எவ்வாறு படத்திலாவது சந்நியாசியாகிவிட்டார் என்பதைக் காட்டுகிறது. விந்தன் தனக்கேயுரிய பாணியில், தமிழ்நாட்டில் தம் பெருமை அறியப்படாத கதாசிரியர் ஒருவர் வடநாடு சென்று அங்கிருந்துகொண்டு ‘வக்ரநாத்ஜி’ என்ற புனைபெயரில் கதைகளெழுதித் தமிழ்நாட்டில் புகழும் செல்வமும் பெற்றார் என்பதைச் சித்தரித்தார்.
ஆண்-பெண்களின் மனநிலைகளை நன்றாகக் கவனித்து உணர்ந்து எழுதிய சிறுகதை ஆசிரியர்கள் -அரு.இராமநாதன்(‘காதல்’ இதழ்க் கதைகள்), டி.கே.சீனிவாசன்(‘துன்பக் கதை’) ஆகியோர். பெண்களின் மனநிலையை நுட்பமாக அறிந்துணர்ந்து, தெளிந்த உணர்த்தலோடு எழுதியவர் லக்ஷ்மி(திரிபுரசுந்தரி). அவர் எழுதிய ‘விசித்திரப் பெண்கள்,’ ‘முதல் வகுப்பு டிக்கெட்’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஏழைத் தொழிலாளர்களின் மனநிலையை நன்கு உணர்ந்து எழுதியவர், தானும் தொழிலாளராய் இருந்து எழுத்தாளரான விந்தன். பெ.தூரன்,மு.வரதராசன், ராஜம் கிருஷ்ணன்(‘பிஞ்சு மனம்’), கி.வா.ஜகந்நாதன்(‘பவள மல்லிகை’)ஆகியோரையும் இவருடன் குறிப்பிடலாம்.
கலைஞர் சிலருடைய முக்கிய விருப்பத்திற்குப் பாத்திரமாக இருப்பவர் கண்முன்னே இல்லாமல் மறைந்து விட்டால், அவருடைய கலைத்திறன் மங்கிவிடுகிறது என்பதை ஜீவாவின் ‘பிடில் நாதப்பிரமம்’, புஷ்பத்துறை சுப்பிரமணியத்தின் ‘ஜீவ சிலை’ என்ற சிறுகதைகள் வெளிப்படுத்தின.
சினிமாப்பட முதலாளிகளும் டைரக்டர்களும் தரும் தொல்லைகளை ஜீவாவின் ‘மிருநாளினி,’ கல்கியின் ‘சுண்டுவின் சந்நியாசம்’ புலப்படுத்தின.
சீர்திருத்த நோக்கில் படைக்கப்பட்ட சிறுகதைகள்:
கல்கியின் ‘விஷ மந்திரம்’ தீண்டாமையைப் பொசுக்கிவிடும் வகையில் அமைந்தது.
காசி நகரப் பண்டாக்களுக்கு இக்கதையை மொழி பெயர்த்துக் காட்டுதல் வேண்டும். ஏ.எஸ்.பி. ஐயர் எழுதிய ‘வான் மலர்’ என்னும் கதை, விதவை மறுமணத்தைப் பற்றியது. இது தொடர்பாக, இதைவிட மிகச் சிறந்தது புதுமைப்பித்தனுடைய ‘வழி’ என்ற சிறுகதை. சுத்தானந்த பாரதியாரின் ‘கலிமாவின் கதை’ முஸ்லிம் பக்கிரி ஒருவனின் மகள் இந்துமதம் சார்ந்தவன் ஒருவனை மணந்துகொண்டதை விவரித்தது. அண்ணாத்துரையின் ‘பேரன் பெங்களூரில்’ என்ற சிறுகதை, பிராமண விதவை ஒருத்தி முதலியார் குலத்து ஆசிரியரை மணந்து, ஒரு சூழ்ச்சியால், தந்தையின் ஆசியைப் பெற விழைவதுபோலக் காட்டுகிறது.
இலக்கிய மணம் வீசும் சிறுகதைகள்:
பொதுமக்கள் மதிப்புக்கு அதிகமாக ஆசைப்படாமல், தம்மை அறிந்து வாசித்து மகிழக்கூடிய மக்களுக்கு ஒத்ததாக மு.வரதராசனின் நடை அமைந்துள்ளது. அவர் எழுதிய ‘விடுதலையா?’ முதலிய கதைகளைக் காணலாம். ‘கட்டாயம் வேண்டும்’ என்ற தலைப்பிலே, வேலையின்மையும் வறுமையும் இரந்தும் பெறாமையும் எவ்வாறு ஓர் இளைஞனைத் தற்கொலைக்குத் தூண்டிவிட்டன என்ற கருத்துள்ளது. ஜீவாவின் ‘முல்லை,’ மகுதூம் என்பவரின் ‘திருமறையின் தீர்ப்பு’ ஆகிய கதைகளில் நல்ல இலக்கிய மணம் வீசக் காண்கிறோம்.
சிறுகதைகளைப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தலாமா?
கருணாநிதி, அண்ணாத்துரை, ஏ.எஸ்.பி.ஐயர், சுத்தானந்த பாரதியார் போன்றவர்கள் சமூகக் குறைகளைப் போக்குவதன் பொருட்டு சிறுகதைகள் படைத்தார்கள். ஐரோப்பாவில் இந்நிலை நிலவியது குறித்து “தமது கதைகளைப் படிக்கும் வாசகர்களைப் பொறுத்து, விட்டுக் கொடுக்க வேண்டிய விஷயம் இது” என்று பேர்ரி பெயின் கூறினார். அண்ணாத்துரையின் “சிறுகதைகள்” என்ற தொகுப்பில் பிரச்சாரம் இடம் பெற்ற அளவு “கற்பனைச் சித்திரம்” என்ற புத்தகத்தில் இல்லை.
தொகுப்பாக…
தொகுப்பாக இறுதியில் டாக்டர் அ. சிதம்பரநாதன் குறிப்பிடும் எழுத்தாளர்களையும் அவர்களின் சிறுகதைகளையும் சுருக்கமாக இங்கே காணலாம்.
மாயாவியின் ‘பனித்திரை’ போன்ற கதைகள், மாணவர்களுக்கு ஏற்றதாக சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் எழுதிய ‘சிறுகதைத் திரள்,’ கா.அப்பாத்துரையார் எழுதிய ‘சமூகக் கதைகள்,’ ‘நாட்டுப்புறக் கதைகள்’…பி.என்.அப்புசாமி எழுதிய ‘விஞ்ஞானக் கதைகள்,’ பாலூர் கண்ணப்ப முதலியார் எழுதிய ‘சிறுகதைக் களஞ்சியம்’ முதலியவற்றை டாக்டர் அ. சிதம்பரநாதன் இங்கே குறிப்பிடுகிறார்.
பிறமொழிச் சிறுகதைகளை மொழிபெயர்ப்பதில் வல்லவர்களாக – புதுமைப்பித்தன், கு.ப.ரா., ஆர்.வீழிநாதன், சேனாதிபதி, டி.என்.குமாரசாமி, ஏ.கே.ஜெயராமன் முதலியோரைக் குறிப்பிடுகிறார். 1946இல் எஸ்.குருசாமி ‘இந்தியச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் பல்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை மொழிபெயர்த்ததைச் சிறப்பாக நினைவுகூர்கிறார்.
இலங்கை எழுத்தாளர்களில் அரியரத்தினம், வைத்திலிங்கம், சம்பந்தம், இலங்கையர்கோன் ஆகியவர்களைப் பொதுவாகப் பாராட்டுகிறார்.
சிறுவர்க்கான கதைகள் எழுதுவதில் வல்லவர்களாக – அழ.வள்ளியப்பா, அம்புலிமாமா, தமிழ்வாணன், கண்ணன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
சிறுகதை போன்ற உரைநடைச் சித்திரங்களால் வாசகர்கள் மனங்களில் இடம் பிடித்தவர்களாக – எஸ்.வி.வி., தூரன், சுகி, நாடோடி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
இதழ்களில் வந்த சிறந்த சிறுகதைகளாக டாக்டர் அ.சிதம்பரநாதன் தேர்பவை:-
கணையாழி எழுதிய ‘நொண்டிக்குருவி’
ஜெகசிற்பியன் எழுதிய ‘ஜலசமாதி’
சோமு எழுதிய ‘கடலும் கரையும்’
ஞானாம்பாள் எழுதிய ‘தம்பியும் தமையனும்’
கே.ஆர்.கோபாலன் எழுதிய ‘அன்னபூரணி’
சோமாஸ் எழுதிய ‘அவன் ஆண்மகன்’
கெளசிகன் எழுதிய ‘அடுத்த வீடு’
எஸ்.டி.சீனிவாசன் எழுதிய ‘கனிவு’
பிற மொழிகளில் மொழிபெயர்த்தேயாக வேண்டிய சிறுகதைகளாக டாக்டர் அ.சிதம்பரநாதன் தேர்பவை:-
கு.ப.ராஜகோபாலனின் ‘காணாமலே காதல்’
புதுமைப்பித்தனின் ‘வழி ‘
கல்கியின் ‘விஷ மந்திரம்’
சுத்தானந்த பாரதியாரின் ‘கடிகாரச் சங்கிலி ‘
அகிலனின் ‘இதயச் சிறையில்’
விந்தனின் ‘முல்லைக்கொடியாள்’
லட்சுமியின் ‘வில் வண்டி’
ஜீவாவின் ‘வேதாந்த கேசரி’
டி.கே.சீனிவாசனின் ‘துன்பக் கதை’
புஷ்பத்துறை சுப்பிரமணியத்தின் ‘ஜீவ சிலை’
கணையாழியின் ‘நொண்டிக் குருவி’
தன் காலத்தில் இதழ்களில் அடிக்கடி சிறுகதை எழுதுவோராக டாக்டர் அ.சிதம்பரநாதன் குறிப்பிடும் பிறர்:-
கே.என்.சுப்பிரமணியன்
ஜி.கெளசல்யா,
இராதாமணாளன்
தில்லை வில்லாளன்
புஷ்பா மகாதேவன்
வேங்கடலட்சுமி
புரசு பாலகிருஷ்ணன்
ஜி.எஸ்.பாலகிருஷ்ணன்
‘தமிழில் சிறுகதைகள்’ என்ற இந்தக் கட்டுரை, டாக்டர் அ.சிதம்பரநாதன் மறைந்து பத்தாண்டுகள் கழித்து 1977 ஏப்ரல் பதிப்பில் வெளியானபோதும், எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட காலம் – மூன்றாவது அகில இந்திய எழுத்தாளர் மாநாடு நிகழ்ந்த காலம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதனால்தான் த.ஜெயகாந்தன் குறித்த குறிப்பு ஏதும் இக்கட்டுரையில் இல்லை. முடிவுரையில், “சிறுகதை இலக்கியம் எனப்படுவது தமிழில் அண்மையான காலத்தில்தான் எழுந்தது” என்று டாக்டர் அ.சிதம்பரநாதன் குறிப்பிட்டிருப்பதும் இதற்கு மற்றுமோர் ஆதாரம்.
***
1967 ஜூலையில், ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற இதே தலைப்பிலானதும் – இதற்கு முற்றிலும் மாறானதோர் உணர்வெழுச்சி ஊட்டியதும் – – யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இணைத்தமிழ்ப் பேராசிரியராக அப்பொழுது பணியாற்றிய டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி எழுதியதுமான கட்டுரைத் தொகுதியைத் தமிழ்ப் புத்தகாலயம் திரு கண.முத்தையா அவர்கள் பதிப்பித்தார். இலங்கை ‘தினகரன்’ வாரப்பதிப்புக்கு எழுதப்பட்ட கட்டுரைகள் அவை. தினகரன் ஆசிரியர் திரு இ.சிவகுருநாதன், திரு செ.கணேசலிங்கன், திருமதி ரூபவதி ஆகிய மூவரால்தான் இந்நூல் வெளிவந்தது என்று கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள், வல்வெட்டித்துறை நடராஜ கோட்டத்திலிலிருந்து 22-7-1967 அன்று எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். கலாநிதி க.கைலாசபதி அவர்கள் பிரதிவாசித்துதவிய பாங்கையும் குறிப்பிடுகிறார். 1980இல் வெளியான என் ‘புல்வெளி’ என்ற கவிதைத் தொகுதியை வாசித்துக் கலாநிதி க.கைலாசபதி எழுதிய விளக்கமான கடிதத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். தஞ்சையில் ஒருமுறை பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்குக்குப்பின்(அப்பொழுது சிவத்தம்பி அவர்களுக்கு ஐம்பது வயதுதானிருக்கும் என்று நினைவு) ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற கா.சிவத்தம்பியின் கட்டுரைத் தொகுப்பு, சிதம்பரநாதனின் புத்தகத்தை மட்டுமே அறிந்திருந்த ஆய்வு மாணவர்களுக்கும் தமிழ் முதுகலை மாணவர்களுக்கும் புத்துணர்ச்சியையும் எழுச்சியையும் ஊட்டியது என்று குறிப்பிட்டேன். சிரித்துக் கொண்டார். சிவத்தம்பியின் புத்தகத்தின் சிறப்புக்கு அதன் 160 பக்கங்களிலிருந்து ஒரு மிகச் சிறிய பகுதியை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்:
“ஜெயகாந்தனது இலக்கிய எதிர்காலம் எப்படியிருப்பினும், அவர் சாதித்தவை அவருக்குச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம் அளிக்கின்றன.
இலக்கியத் தரமான சிறுகதைகள், சனரஞ்சகமாக அமையமாட்டா என்ற கருத்துத் தவறானது என்பதனைச் சாதனையால் நிறுவியவர் ஜெயகாந்தன்.
சிறுகதையின் உருவ அமைதியில் ஜெயகாந்தன் கதைகள் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. பொருளமைதியில் முக்கியமான ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தின. அதுவே அவர் வெற்றிக்குக் காரணமாகவும் அமைந்தது.
கற்பித மனோரம்மிய இலக்கிய நோக்கு ஆட்சி புரிந்தவிடங்களில் யதார்த்த இலக்கிய நோக்கினைப் புகுத்தி அந்நோக்கின் சிறப்பை நன்கு உணர்த்தியமையே அப்பண்பாகும்.”(6)
**
தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளைக் குறித்து டாக்டர் இரா.தண்டாயுதம் எழுதிய புத்தகம் இவ்வரிசையில் குறிப்பிடத்தக்கது.
தமிழ்ச் சிறுகதை வரலாறு குறித்துச் சிந்தித்தும் ஆராய்ந்தும் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் க.நா.சு., தொ.மு.சி.ரகுநாதன், சிட்டி சிவபாதசுந்தரம் டொமினிக் ஜீவா,டாக்டர்கள் மா.இராமலிங்கம், இரா.மோகன், எம்.வேதசகாய குமார் முதலியவர்கள் ஆவர்.
***
அடிக்குறிப்புகள்:
* ஜீவா என்று டாக்டர் அ. சிதம்பரநாதன் கட்டுரையில் குறிப்பிடப்படுபவர் ‘உயிரோவியம்’ என்ற நாவலால் புகழ் பெற்ற நாரண துரைக்கண்ணன் ஆவார்.
(1) டாக்டர் மா.இராசமாணிக்கனார், இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி, பக்.243-244.
(2) மேலது, ப.252.
(3) கா.திரவியம், தேசியம் வளர்த்த தமிழ், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை,1974, பக்.200-201.
(4) மேலது, ப.203.
(5) டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார், தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். பதிப்பாசிரியர்: பேராசிரியர் பிளோரம்மாள், ம.செ.இரபிசிங். பிலோமினா பதிப்பகம், 5/25, புதுத்தெரு, சென்னை-600004. 1977. ப.v. இந்தப் புத்தகத்தின் கருத்துகளே தொடர்ந்து வருவதால் அடிக்குறிப்புகளிடவில்லை. மொத்தப் பக்கங்களே 22தான்.
(6)டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், தமிழ்ப் புத்தகாலயம், 58, டி.பி.கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மூன்றாம் பதிப்பு அக்டோபர், 1980. ப.139.
****
http://360.yahoo.com/pasu2tamil
http://kalapathy.blogspot.com
devamaindhan@pudhucherry.com
- தைவான் நாடோடிக் கதைகள்
- அக்கினிப் பூக்கள் !
- தாகூரின் கீதங்கள் -4 உன் திருவிளையாடல் !
- ‘ஆடலரசன்’ இரகுநாத் மனே
- பெண்கள் நுழைய மறந்த துறைகளும், மறுக்கும் துறைகளும்
- NEW EXHIBITION OF V.P. VASUHAN : PAPILLON DE PARIS 10ème
- Tamilnadu Thiraippada Iyakkam And National Folklore Support Centre – Contemporary World Cinema
- திசை எட்டும் இதழின் நான்காம் ஆண்டு விழா – நல்லி -திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா
- புதைந்து போன இரகசியம்!
- அ. முத்துலிங்கம் கதைகள் / உயிர்களின் மீதான வற்றாத கருணை
- “கிளை தாவி வரும் மின்னல்”
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! கருமைப் பிண்டம் (Dark Matter) என்றால் என்ன ? (கட்டுரை: 4)
- காந்தியின் உடலரசியல்
- நினைவுகளின் தடத்தில் (2)
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 3 அம்பாளின் தொப்புள்கொடி
- அது அங்கே இருக்கிறது
- இறுதி மரியாதை!
- தமிழில் சிறுகதை – தொடக்ககால இலக்கணங்கள்
- தமிழ்வாணன் பற்றிய திரு.மைத்ரேயனின் கட்டுரை
- ‘திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை(இன்மை) விளக்கம் பற்றி
- பன்னாட்டுக் கருத்தரங்கம்
- National Folklore Support Center – Prof Paula Richman “Folklore and Modern SHort Stories in Tamil”
- கடிதம் (ஆங்கிலம்)
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 8 – அரசியல் எழுப்பிய புயலில் முகம் மாறியது தில்லி
- பத்து வயதினிலே…
- திரைகடலோடி,..
- 49வது அகலக்கோடு
- மாத்தா ஹரி அத்தியாயம் -37
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 1
- இறந்தவன் குறிப்புகள் – 3
- குறிப்பேட்டுப் பக்கங்கள் – 2!
- படித்ததும் புரிந்ததும்..(11) இலவச ஆட்சி – கண்ணாமூச்சி ஏனடா – துக்கடா!
- கலவரப் பகுதி
- இடதுசாரி இரட்டை டம்ளர்
- தமது தரப்பு வாதம் செய்ய காரை சிபி இன்றில்லை
- ஓரம் போ!
- வாடிக்கை கவுடா, வாடிய தாமரை : கர்”நாடக” அரசியல்
- மும்பை தமிழர் அரசியலும் தாதாக்களும்
- மீன்பாடும் தேன்நாடு
- கடன்
- பேசும் யானை