அது அங்கே இருக்கிறது

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

அ.முத்துலிங்கம்


சமீபத்தில் பிரபல ஈரானிய எழுத்தாளர் Nazar Afisi ரொறொன்ரோ வந்திருந்தார். இவர் ஈரான் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக கடமையாற்றியவர். தலையிலே முக்காடு போட மறுத்ததால் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர். தற்போது அமெரிக்காவில் ஆங்கிலப் பேராசிரியராக வாழும் இவர் எழுதிய Reading Lolita in Tehran என்ற நாவல் பிரசித்தமானது; 32 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவரை பத்திரிகைகள் பேட்டி கண்டபோது ஒரு விசயம் சொன்னார்.
அமெரிக்க மாணவர்கள் பேராசிரியர்களுடன் சமமாகப் பேசுவார்கள். விவாதிப்பார்கள். முரண்படுவார்கள். ஆசிரியர்களுக்கு எல்லாம் தெரியும்; அவர் சொல்வதை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் சிந்திப்பதில்லை. அவர்களாகவே சிந்தித்து சுயமான முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் ஈரானில் அப்படி இல்லை. அது ஒரு குரு சீடன் உறவுமுறை. குரு சொல்வதை அப்படியே மாணவர் ஏற்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். இதனால் மாணவர்கள் சொந்தமாக சிந்திப்பதே இல்லை. ஆசிரியரின் சிறுபதிப்பு போலவே அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.
இதில் உண்மை இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் கனடாவில் ஒரு தமிழ் கல்வியாளர் மாநாடு நடந்தது. தமிழ் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விமான்கள் என்று அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, நியூசீலந்து, இந்தியா, இலங்கை என்று பலநாடுகளில் இருந்து வந்து கலந்துகொண்டார்கள். அவர்களிலே அமெரிக்கா, கனடா, நியூசீலந்து போன்ற இடங்களில் இருந்து வந்த பேராசிரியர்கள் பொதுமக்களுடன் நிறையக் கலந்துகொண்டார்கள். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களை அணுகவே முடியவில்லை. அவர்களுடைய விமானங்கள் தரையிறங்கிய பிறகும் அவர்கள் கால்கள் தரையில் படவேயில்லை. ஒரு பேராசிரியர் சுட்டுவிரலை நீட்டிக்காட்டி ‘விளங்குதா? விளங்குதா?’ என்று கேட்டபடியே அரங்கிலே பேசினார். ஓர் எட்டாம் வகுப்பு ஆசிரியர் நாலாம் வகுப்புக்கு பாடம் எடுத்தது போலவே அது இருந்தது.
பலருக்கும் அது அதிர்ச்சியூட்டியது. ஆனால் அவர் சொன்ன விசயம் இன்னும்கூடிய அதிர்ச்சியை தந்தது. ஆராய்ச்சி என்றால் அதனால் ஏதாவது சமூக பயன்பாடு இருக்கவேண்டும் என்றார். சமூகத்துக்கு பயன்தராத ஆராய்ச்சியில் ஒருவரும் இறங்கக்கூடாது, நிதியும் ஒதுக்கக்கூடாது என்றெல்லாம் பேசினார். அது நேரத்தையும் பணத்தையும் விரயமாக்கும் முயற்சி என்பது அவர் கருத்து.
ஆதியிலிருந்து மனிதனுடைய குறிக்கோள் அறிவை விசாலமாக்குவது. அதனால் ஏற்படும் பயன்பாடு பற்றி அவன் யோசிப்பதில்லை. அப்படி யோசித்திருந்தால் மனிதன் இன்று இவ்வளவு தூரம் முன்னேறியிருக்க முடியாது. நானூறு வருடங்களுக்கு முன்னர் கலீலியோ தன் கையால் செய்த தூரக்கண்ணாடியை வியாழன் கிரகத்தை நோக்கி திருப்பினார். முதன்முறையாக அந்தக் கிரகத்தை சுற்றி நாலு சந்திரன்கள் சுழல்வதை அவர் கண்டுபிடித்தார்.
சரி, அவர் கண்டுபிடித்துவிட்டார் என்று மற்றவர்கள் சும்மா இருக்கவில்லை. அவருக்கு பின்னால் வந்தவர்களும் வானத்தை துளாவினார்கள். மேலும் மேம்படுத்தப்பட்ட தூரக்கண்ணாடிகளால் ஆராய்ந்தார்கள். கலீலியோ இறந்துபோன பின்பு வந்த 400 வருடங்களில் இன்னும் பல சந்திரன்கள் வியாழக் கிரகத்தை சுற்றுவதைக் கண்டுபிடித்தார்கள். இப்பொழுது 63 சந்திரன்கள் சுழல்வதாகக் கணக்கு. சரி, இனிமேல் விஞ்ஞானிகள் ஆராய்வதை நிறுத்திவிடுவார்களா? இல்லை, இன்னும் வானத்தை உற்றுப்பார்த்தபடியே இருக்கிறார்கள். 63 சந்திரன்கள் சுழன்றால் என்ன, 64 சந்திரன்கள் சுழன்றால் என்ன? இதை கண்டுபிடிப்பதனால் என்ன பிரயோசனம்? இப்படி அவர்கள் கேட்டு தங்கள் ஆராய்ச்சிகளை நிறுத்திவிடுவதில்லை. அங்கே இன்னுமொரு சந்திரன் இருந்தால் அதைக் கண்டுபிடிக்கவேண்டும். ஏன்? உலகத்தில் சேர்த்துவைத்த அறிவின் கூட்டுத்தொகை ஒரு துளி கூடும். அதுதான் காரணம்.
எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகொண்டது யார் என்று கேட்டால் எந்தப் பள்ளிச் சிறுமியும் உடனே பதில் கூறுவாள். ஆனால் Edmund Hillary மலை ஏறுவதற்கு முன்பே பலர் முயற்சி செய்து அந்த முயற்சியில் இறந்துபோய் இருக்கிறார்கள். George Mallory முதல் தரம் எவரெஸ்ட்டில் ஏறியபோது வெற்றிபெறவில்லை. இரண்டாவது முயற்சியிலும் தோல்வி கண்டார். அப்பொழுது பத்திரிகைக்காரர்கள் அவரிடம் கேட்டார்கள், ‘நீங்கள் எதற்காக எவரெஸ்டில் ஏறுகிறீர்கள்?’ அப்பொழுது ஜோர்ஜ் தனது உலகப் புகழ்பெற்ற பதிலைக் கூறினார். ‘Because it is there.’ ஏனென்றால் அது அங்கே இருக்கிறது. அதுதான் காரணம். அதனிலும் பெரிய காரணம் தேவையில்லை. மனித முயற்சிகளுக்கு அது சவாலாக இருக்கிறது, ஆகவே அதைக் கைப்பற்றவேண்டும். அவருடைய மூன்றாவது மலை ஏறும் முயற்சியில் அவர் இறந்துபோனார். திரும்பவும் கீழே இறங்கவில்லை. மேலும் 29 வருடங்கள் கழித்துத்தான் எட்மண்ட் ஹில்லரி எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகொள்வார்.
ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியர் ‘பாறைகளின் கீழ் பாசி’ என்ற தலைப்பில் இருபது வருடங்களாக தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகிறார். அவர் இத்தனை வருடங்களில் என்னத்தை கண்டுபிடித்தார், இனி வரப்போகும் வருடங்களில் என்னத்தை கண்டுபிடிப்பார் என்பது மர்மம்தான். ஆனாலும் அவருடைய ஆராய்ச்சிக்கு நிது ஒதுக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவரும் செய்துகொண்டே இருப்பார். அதே பல்கலைக் கழகத்தில் இன்னொரு பேராசிரியர் ஓர் ஆராய்ச்சி செய்கிறார், முப்பது வருடங்களாக. தன் வாழ்நாளையே பேராசிரியர் இந்த ஆராய்ச்சிக்காக அர்ப்பணித்துவிட்டார். என்ன ஆராய்ச்சி? 19ம் நூற்றாண்டு ஆங்கிலக் கவியான Samuel Taylor Coleridge என்பவர் தன் படைப்புகளின் ஓரங்களில் (margin) என்ன எழுதிவைத்திருக்கிறார் என்பது. இது இன்னும் முடிவு பெறவில்லை ஆனால் விரைவிலேயே அது நூலாக வெளிவரும் என்று சொல்கிறார்கள். இதனால் என்ன பிரயோசனம் என்ற கேள்விகளை யாருமே எழுப்புவதில்லை.
2006ம் ஆண்டு வழங்கிய நோபல் பரிசுகள் நல்ல உதாரணம் என்று சொல்லலாம். இயற்பியல், வேதியியல், மருத்துவம் என்ற மூன்று துறைகளிலும் வழங்கப்பட்ட பரிசுகள், இலக்கு வைத்துச் செய்யாமல் பொதுவாக செய்த ஆராய்ச்சிகளுக்கு கிடைத்தவை. அவற்றின் பயன்பாடுகள் இனிமேல்தான் தெரியும். சில பயனற்றதாகக்கூட இருக்கலாம். ஆனால் அவற்றின் நோக்கம் அறிவை விஸ்தரிப்பதுதான். நோபல் பரிசு அறிவிப்பை தொடர்ந்து சில பத்திரிகைகள் புது ஆராய்ச்சிகளுக்கு உலகத்தில் நிதி ஒதுக்குவது குறைந்துவிட்டது, இலக்கு வைத்த ஆராய்ச்சிகளுக்குத்தான் பணம் ஒதுக்கப்படுகிறது. இது இப்படியே போனால் வருங்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகள் அருகிவிடும், உண்மையை தேடும் ஆராய்ச்சிகள் நின்றுவிடும், ஆகவே நிதியை இன்னும் கூட்டவேண்டும் என்று எழுதியிருக்கின்றன. ஆராய்ச்சிகள் நின்றால் மனித அறிவு வளர்ச்சி நின்றுவிட்டது என்றுதான் அர்த்தம்.
பொது ஆராய்ச்சி என்பது இலக்கு இல்லாதது. இன்னது கிடைக்கவேண்டும் ஆகவே அதைத் தேடி ஆராய்ச்சி செய்வது பொது ஆராய்ச்சியாகாது. ஹம்ப்ரி டேவி என்பவர் சுரங்கங்களில் ஏற்படும் விபத்தை தடுப்பதற்கு ஒரு பாதுகாப்பான சுரங்க விளக்கை கண்டுபிடித்தார். அது இலக்கு வைத்த ஆராய்ச்சி; பொது ஆராய்ச்சி அல்ல. விஞ்ஞானிகள் கூட்டமாகச் செல்லும் மீனின் பாதைகளை ஆராய்ச்சி செய்தார்கள். அது பொது ஆராய்ச்சி. இப்பொழுது பார்த்தால் அந்த ஆராய்ச்சி மூலம் பங்குச் சந்தை சரிவதை முன்கூட்டியே சொல்லமுடியும் என்று கூறுகிறார்கள். எந்த ஆராய்ச்சியில் இருந்து என்ன பயன்பாடு கிடைக்கும் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது.
இலக்குவைத்த ஆராய்ச்சிகள் செய்வதில் முன்னிலையில் இருந்தவர் தோமஸ் அல்வா எடிசன்தான். பல நூறு கண்டுபிடிப்புகளுக்கு அவரே பிதாமகர். அவர் மின்சார பல்பை கண்டுபிடிப்பதற்காக ஆயிரக் கணக்கான உலோகக் கலவைகளை பரிசோதனை செய்தார். அப்பொழுது நீங்கள் இந்த ஆராய்ச்சியில் நிறைய தோல்விகளை சந்தித்திருக்கிறீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதற்கு எடிசன், ‘ யார் சொன்னது தோல்வி என்று. நான் 10,000 உலோகக் கலவைகள் வேலை செய்யாது என்றல்லவோ கண்டுபிடித்திருக்கிறேன்’ என்றாராம்.
விஞ்ஞானம் என்பது அதுதான். வெற்றி எவ்வளவுக்கு முக்கியமாகிறதோ அதே அளவுக்கு தோல்வியும் முக்கியம். எங்கேயோ மறைந்து கிடக்கும் உண்மை ஒன்றை தோண்டி எடுப்பதுதான் ஆராய்ச்சியின் குறிக்கோள். இலக்கியத்திலும் அப்படியே. பில் பிரைசன் என்ற அமெரிக்க எழுத்தாளர் பெரும் புகழ் பெற்றவர். இவர் ஒரு புத்தகத்தின் தலைப்பை அறிவித்தால் பதிப்பாளர்கள் லட்சக்கணக்கில் முன்பணம் கொடுக்கத் தயாராய் இருக்கிறார்கள். சமீபத்தில் அவர் தான் சேக்ஸ்பியரின் சரிதத்தை எழுதப்போவதாகச் சொல்லியிருக்கிறார். சேக்ஸ்பியரின் வாழ்க்கைபற்றி ஏற்கனவே எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. இவர் புதிதாக என்னத்தை எழுதப்போகிறார். ஒரு பெரும் எழுத்தாளர் தன் நேரத்தை இப்படி வீணாக்கக்கூடாது என்று பலர் ஆதங்கப்படுகிறார்கள். ஆனால் யார் கண்டது, இவர் சேக்ஸ்பியரின் ஒரு புது முகத்தை கண்டுபிடித்து எழுதலாம். அது என்னவாகவும் இருக்கலாம். சேக்ஸ்பியர் வலது பக்கம் தலைவைத்து படுக்கவில்லை; இடது பக்கம்தான் தலைவைத்து படுத்தார் என்ற சாதாரண தகவலாகக்கூட இருக்கலாம். அறிவுச் சமுத்திரத்தில் ஓர் அணு கூடும்.

இனிவரும் காலங்களில் கல்விமுறை, படிப்பு, பரீட்சை எல்லாம் எப்படி இருக்கும் என்று ஒரு விஞ்ஞானப் பேராசிரியரிடம் கேட்டார்கள். அவர் எதிர்காலத்தில் கல்வி கற்கும் முறையும், கற்பிக்கும் முறையும் நிறைய மாறிவிடும் என்று சொன்னார். இன்றைய கல்வி முறையில் பிரதானமான அம்சம் கேள்விகளுக்கு பதில் எழுதுவது. இது எதிர்காலத்தில் முற்றிலும் மாறிவிடும். உலகத்தின் நீண்ட ஆறு எது? சீனப்பெருஞ் சுவர் எப்போது எழும்பியது? 100 வருடப் போர் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது? கடைசியாக கண்டுபிடித்த தனிமம் என்ன? உலகத்தின் மிகப் பழைய இலக்கியத்தை யார் படைத்தார்? இப்படியான கேள்விகளுக்கெல்லாம் ஒரு பத்துவயதுச் சிறுமி இரண்டு நிமிடங்களில் பதில் அளித்துவிடுவாள். கையிலே கடிகாரம் கட்டுவதுபோல, இடுப்பிலே எல்லோரும் ஒரு சிறிய கம்புயூட்டரை சொருகியிருப்பார்கள். அதிலே உலகத்து கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்கும். மாணவர்கள் ஒன்றையாவது மனனம் செய்யவேண்டிய அவசியமே இல்லை. கம்பருடைய ஆரண்யகாண்டத்தில் 800வது பாடல் வேண்டுமா? உடனே கிடைக்கும். கடைசியாகக் கண்டுபிடித்த ஆகப் பெரிய வகுபடா எண் வேண்டுமா? உடனே கிடைக்கும். எதற்காக மனனம் செய்யவேண்டும்?
ஆகவே பரீட்சைகளில் கேள்விகளுக்கு பதில் எழுதுவது அல்ல மாணவர்களின் வேலை. அவர்களுடைய கடமை கேள்விகளை உருவாக்குவது. எல்லாவற்றுக்குமே பதில் கிடைக்கிறபடியால் பதில் தெரியாத கேள்விகளை எழுப்பவேண்டும். அறிவுத் துளிகளை பெருக்கிக்கொண்டே போனால் புதிய கேள்விகள் முளைக்கும். புதிய விடைகளும் பிறக்கும். பரீட்சைக்கு படிக்கத் தேவையில்லை என்பது மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டாது. காரணம் கேள்விகளை எழுப்புவது பதில்கள் எழுதுவதிலும் பார்க்க கடினமானது.

மனிதனுடைய வளர்ச்சி எதிர்காலத்தில் மிகவும் வேகமாக இருக்கும். எண்ணற்ற உண்மைகளையும், தேற்றங்களையும், தரவுகளையும் இனி வரும் சந்ததி மனனம் செய்யத் தேவையில்லை. நிமிடத்தில் அவை அவர்களுக்கு கிடைக்கும். மிகச் சிக்கலான கணிதப் புதிர்களை கணினிகள் அசுரவேகத்தில் விடுக்கும். அவர்கள் சிந்திப்பதில் முழுநேரத்தையும் செலவிடலாம். தரவுகளை வைத்து பகுத்தாயலாம். புதிய கேள்விகளை எழுப்பலாம்; புதிய கதவுகளை திறக்கலாம். புதிய உண்மைகளை கண்டுபிடிக்கலாம்.
அந்தப் புது உலகத்தில் மனிதனுக்கு என்ன செய்ய வேண்டுமென்பது தெளிவாகத் தெரியும். இமய மலைச் சிகரத்தை எட்டவேண்டும். ஏனென்றால் அது அங்கே இருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் காலடி பதிக்கவேண்டும். ஏனென்றால் அது அங்கே இருக்கிறது. தண்ணீருக்கு அடியில், 28,000 அடி ஆழத்தில் வாழும் கஸ்கில் மீனைப் பற்றி யாராவது படிக்க வேண்டும். ஏனென்றால் அது அங்கே இருக்கிறது. சங்ககாலத்து பூக்களை ஆராயவேண்டும். ஏனென்றால் அது அங்கே இருக்கிறது.


amuttu@gmail.com

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்