சிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்!

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

எம்.கே.குமார்


சிங்கப்பூர், நவம்பர் 11, சிங்கப்பூரின் சையத் ஆல்வி ரோட்டில் இருக்கும் ஆனந்தபவன் ரெஸ்டாரண்டின் மாடியில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்கநிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தில் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கூட்டத்தை சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் சுப.அருணாச்சலம் நெறிப்படுத்தினார்.

மேடையில் அமர்ந்திருந்த மூவர் – புகழ்பெற்ற வழக்கறிஞர் திரு.கலாமோகன், முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனர் திரு.முஸ்தபா மற்றும் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு.ஆண்டியப்பன்.

முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நிறுவனரை வரவேற்புரை வழங்க அழைத்தார் திரு. அருணாச்சலம். தனது நீண்ட நாள் கனவை மிகுந்த அக்கறையோடு சட்டரீதியாக வடிவமைத்துத் தந்த கலாமோகன் அவர்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கிய திரு.ஆண்டியப்பன் அவர்களுக்கும் நன்றி சொன்ன திரு.முஸ்தபா அவர்கள், இவைகளைப்பற்றி பேசுமாறு அவர்களை வேண்டிவிட்டு, இந்த அறக்கட்டளை சிறப்பாகச் செயல்பட அனைவரது ஆதரவையும் வேண்டி அமர்ந்தார்.

வழக்குரைஞர் திரு. கலாமோகன், சிங்கப்பூரில் அரசு சாராது அறக்கட்டளைகள் இயங்குவதன் சிரமத்தைச் சொல்லி, அதுவும் தமிழிலேயே அதன் கொள்கைகளை வரையறுத்திருப்பதையும் சொன்னார். அடுத்துப் பேசிய திரு.ஆண்டியப்பன், முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் நோக்கங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

தஞ்சைப் பல்கலைக்கழக நூலகத்தில் சிங்கப்பூர்-மலேசிய நூல்களுக்காகவே அமையும் தனிப்பிரிவிற்கு நூல்களைப் பெற்றுக்கொள்ளும் பணி அடுத்து தொடங்கியது. முதல் நூலை கவிஞரேறு அமலதாசன் அவர்கள் வழங்க திரு.முஸ்தபா பெற்றுக்கொண்டார். அந்நூல் தமிழவேள் திரு.கோ.சாரங்கபாணி பற்றியதாக இருக்க திரு.முஸ்தபா அவர்களின் முகத்தில் திருப்தியான புன்னகை ஒன்று வெளிப்பட்டது.

கலந்துரையாடலுக்கு முப்பது நிமிடம் என்றார்கள். திரு. முஸ்தபா அவர்களை அனைவரும் புகழ்ந்தனர். சிங்கப்பூர இளையர்களை தமிழ்பக்கம் இழுக்க ஏதாவது செய்யவேண்டும் என்றார் ஒருவர். இதுபற்றி விரிவான தளத்திற்கு திட்டங்கள் செயலாக்கம் நடந்துகொண்டிருப்பதகச் சொன்னார் திரு. முஸ்தபா. இதன் பொறுப்புகளை திரு.சிவசாமி அவர்கள் செய்வதாய் சொன்னார். நாளிதழ் வெளியிடும் யோசனையைச் சொன்னாரொருவர். காலாண்டிதழ் வெளியிடும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாய்ச் சொன்னார் திரு. முஸ்தபா.
மனமும் பணமும் ஒருங்கே இருப்பதால் தமிழுக்கு மணம் கிடைப்பது உறுதி என்றார் ஒருவர். மறைந்த எழுத்தாளர் உதுமான் கனியின் கவிதை நூல்களை வெளியிட உதவி கேட்டார் அவர். உடனுக்குடன் அவைகளை ஆமோதித்து ஆவன செய்தார் திரு.முஸ்தபா. ஏதோ “ஒருநாள் முதல்வன்” படம் பார்ப்பது போலிருந்தது. உண்மையில் பெரிய மனதுதான் அவருக்கு.

சிங்கப்பூர் “சிம்” பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவுக்கும் ஏதாவது செய்யவேண்டும் என்றார் ஒருவர். கலைஞரைச் சந்தித்து தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் தபால்தலையை வெளியிட ஆவன செய்யவேண்டும் என்றார் ஒருவர். சிங்கப்பூரில் உள்ள அனைத்து எழுத்தாளர்களின் நூல்களையும் தாம் பெற்றுத்தருவதாக ஒருவர் பொறுப்பேற்றுக்கொண்டார். மலேசியாவின் நூல்களைப் பெற்றுத்தர தாம் முயற்சி செய்வதாக இன்னொருவர் சொன்னார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முருகன் என்பவர் முனைவருக்காய சிங்கப்பூர இலக்கியம் பற்றிச் செய்யும் ஆய்வுக்கு உதவும்படி கேட்டர் ஒருவர்.

திரு. முஸ்தபா அவர்களின் பல ஆண்டு கனவு இது என்றார் ஒருவர். தமிழ் வளர தமிழில் பேசுவோம் என்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னே திரு.முஸ்தபா அவர்களின் நிறுவன ரசீதுகளில் அச்சடித்திருப்பதைச் சொன்னார். சென்னையில் இருக்கும் அவரது கண்ணாடி நிறுவனத்தில் “தாய்மொழி கண் போன்றது; பிறமொழி கண்ணாடி போன்றது” என்ற புகழ்பெற்ற வாசகத்தை வடிவமைத்ததிலிருந்து அவரது ஆர்வத்தை எடுத்துச்சொன்னார்.

நிறுவனரான திரு.முஸ்தபா தலைவராய் இருந்து பல்வேறு குழுக்களை ஏற்படுத்தி மேலும் இவற்றை மேம்படுத்தவேண்டும் என்று சொன்னார் ஒருவர். இதற்கு பதில் சொன்ன திரு.கலாமோகன், ஏறக்குறைய எல்லா தமிழ் பற்றாளர்களும் ஏதாவது ஒரு முழுவில் அல்லது பல குழுவில் இருக்கின்றனர். “இருக்கின்றனர் என்றால் வெறுமனே இருக்கின்றனர்”- அப்படிப்பட்டவர்கள் தயவுசெய்து இங்கேயும் இணையவேண்டாம் என்றார். உண்மையிலே ஆக்கப்பூர்வமாய் இயங்க முனைந்தால் இணையலாம் என்றார் அவர்.

இஸ்லாம் எங்கள் வழி; தமிழ் எங்கள் மொழி என்பதாய்ச் சொன்னார் ஒருவர்.

இறுதியில் பொதுமக்களிடமிருந்து அல்லது நன்கொடையாளர்களிடமிருந்து அன்பளிப்பு வந்தால் ஏற்றுக்கொள்ளலாமே; சிறப்பாய் இயங்க அது உதவுமே என்றார் ஒருவர். பட்டென்று பதில் சொன்ன திரு. முஸ்தபா, எல்லாம் வல்ல இறைவன் எனக்கு நீண்ட ஆயுளையும் நிறைய செல்வத்தையும் அளிக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; எல்லாவற்றையும் நான் செய்கிறேன் என்றார்.

யோசனை என்றால் கேட்கவே வேண்டாம் என்ற அளவுக்கு தமிழ் மக்கள் அள்ளித்தருவார்கள் போலும். கலந்துரையாடலில் சில காமெடி டயலாக்குகளும் வெளிப்பட்டன.

எல்லாவற்றையும் விடுங்கள். இந்த அறக்கட்டளையின் துவக்கம் பற்றியும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் பற்றியும் பேசலாம் கொஞ்சம்.

சிங்கப்பூரில் அரசாங்கம் சாராது இயங்கும் அறக்கட்டளைகள் மிகவும் அரிது; சிரமமிக்கது. அதிலும் தமிழுக்காய் இயங்கும் அறக்கட்டளை இல்லவே இல்லை. இந்நிலையில் தமிழுக்காய் தனியொரு மனிதரால் புத்தம் புதியதாய் உருவெடுத்திருக்கிறது இந்த முஸ்தபா தமிழ் அறக்கட்டளை. நிறுவனரான திரு. முஸ்தபா அவர்களை நெஞ்சார பாராட்டலாம்!

முஸ்தபா தமிழ் அறக்கட்டளையானது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.

அதன்படி,

1. சிங்கப்பூர், மலேசியத்தமிழர்களின் வாழ்க்கை பற்றியும் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் பற்றியும் தமிழ்நாட்டில் ஆய்வு செய்யும் நிரைஞர், முனைவர் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்குதல்

2. தெற்காசிய, குறிப்பாக சிங்கப்பூர் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த நூலுக்கு ஆண்டுக்கொருமுறை பரிசு வழங்குதல்

3. சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்தல்.

4. சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைத் தனிப்பிரிவாக தஞ்சை பல்கலைக்கழக நூலகத்தில் உருவாக்குதல்.

இவைகளையே தற்போது ஆய்விருக்கையின் குறிக்கோள்களாகக் கொண்டு இவ்வொப்பந்தம் செயல்படும்.

தமிழ்ப்பற்றாளர்களை விட தமிழ்ச்சங்கங்கள் அதிகமாய் இருக்கும் சிங்கப்பூரில் தமிழுக்காய் தனியொரு மனிதராய் தனது சொந்த பணத்திலிருந்து இதுபோன்ற அறக்கட்டளைகளை அமைப்பது மிகுந்த சிறப்புடையது. குறிப்பாய் எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கை இத்திசையில் ஆட்சி மொழியாக்கிப் பார்த்த திரு.கோ.சாரங்கபாணி அவர்களைப்போல எந்தவித பாசாங்கும் இன்றி, தனிப்பட்ட புகழுக்காய் அன்றி மிகுந்த மன ஒன்றுதலோடு மன விருப்பத்தோடு இக்காரியத்தில் திரு. முஸ்தபா அவர்கள் இறங்கியிருப்பதாய்த் தெரிகிறது.

மேற்சொன்ன ஒப்பந்தம் மற்றும் இந்த முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தோற்றம் மூலம் என்னென்ன பயன்கள் நேரலாம் என்பதைப் பார்ப்போம்.

 தமிழக இலக்கிய உலகிற்கும் சிங்கப்பூர் இலக்கிய உலகிற்கும் பூதாகர இடைவெளி உள்ளது. அதை இவ்வொப்பந்தம் குறைக்கும். அல்லது அதற்கான தளத்தை கொஞ்சமாது நிறுவ முயலும்.

 தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் தனிப்பிரிவாக்குவதன் மூலம் சிங்கப்பூர மலேசிய இலக்கிய நிலைகளை யாவரும் எளிதில் உணரும் வாய்ப்பமையும்.

 சிங்கப்பூர மலேசிய இலக்கிய நிலைகளை ஆய்வு செய்யும் மாணவர்கள் தரும் முடிவுகள் அதன் தற்போதையை நிலையை எடுத்துச்சொல்லும்; விளைவு தரம் மேம்படலாம்.

 தமிழவேள் கோ சாரங்கபாணி பெயரில் அமையும் விருது அவரது சிறப்பை இன்னும் எடுத்துக்கூறும். தமிழுக்கென வாழ நினைக்கும் மற்றவர்களுக்கு வழிகாட்டும்.

 சிறந்த நூலுக்குப் பரிசு தருவதன் மூலம் மேலும் எழுத்தாளர்கள் உருவாவார்கள். (பரிசு கொடுக்கப்படும் நூலின் தரம் கணக்கெலெடுக்கப்பட்டால்!)

 சங்கம் அமைத்து நடிகைகளை அழைத்து டிக்கெட் அடித்து கூட்டம் போடுவதைத் தவிர்த்து தனிமனித சேவைகள் மூலமும் வருமானம் மூலமும் தமிழுக்குச் சேவை செய்யலாம் என்ற ஒரு பார்வையை விதைக்கும்.

 சிங்கப்பூர் – மலேசிய எழுத்தாளர்களின் கருத்தரங்கம் நடத்துவதன் மூலம் அடுத்த கட்டத்தை அது அடைய முற்படலாம்.

 வெறும் பேச்சு மூலமே போய்க்கொண்டிருக்கும் தமிழ் வளர்ப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் செயல்வடிவில் நிலைமாற்றம் அடைய தன்னலமற்ற இதுபோன்ற சேவைகள் உதவும்.

 பல்வேறு நபர்களை இணைத்து செயல்படும் அமைப்புகளின் செயல்பாடு திருப்திகரமாய் இல்லாதபோது இதுபோன்ற அறக்கட்டளைகள் சிறப்பாக இயங்கலாம்.

 எல்லாவற்றிற்கும் மேலாய் குழு மனப்பான்மைகளையும் சச்சரவுகளையும் இதுபோன்ற தனிநபர் சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகள் ஊக்குவிக்காது உண்மையிலேயே நல்ல மனமிருந்து ஆரம்பிக்கப்பட்டால் நல்லது நடக்க முயற்சி செய்யும்.

சிங்கப்பூர்த் தமிழ்மக்கள் இதுபோன்ற சந்தர்ப்பங்களை எடுத்துக்கொண்டு தமிழை மேம்பட்டதொரு நிலைக்கு எடுத்துச்செல்லவும் படைப்புகளில் அதன் தரத்தை உயர்த்தவும் முயலலாம். முயன்றால் நம்மால் முடியாதது என்ன?

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு- என்ற குறளுக்கேற்ப தனது வியாபாரத்தின் மூலம் அடைந்த பொருளாதார நிலையின் மூலம் தமிழுக்குத் தொண்டு செய்ய நினைக்கும் திரு.முஸ்தபா அவர்களுக்கு எல்லாம் வல்ல தமிழணங்கு நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் கொடுக்கட்டும்.

அன்பன்
எம்.கே.குமார்


yemkaykumar@yahoo.com

Series Navigation

எம்.கே.குமார்

எம்.கே.குமார்