நாக்குநூல்

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

தேவமைந்தன்



‘நாக்குநூல்’ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் சுரதா. அவரை உவமைக் கவிஞர் என்று மட்டுமே பலருக்குத் தெரியும். அரிய தகவல்களைத் திரட்டிப் பதிவு செய்வதில் பெருவிருப்பம் கொண்டிருந்தவர் என்று பலருக்கும் தெரியாது. பொதுவாகவே எழுத்தாளர் பலர், தங்கள் பெயர் அச்சில் வந்திருப்பதைக் கண்டு கண்டு இன்புறுவது வழக்கமாகிப் போன காலத்தில், மற்றவர்களின் எழுத்துகளையும் விரும்பி வாசிப்பதையும் கேட்பதையும் தன் வழக்கம் ஆக்கிக் கொண்டவர் அவர். தான் அத்தகையவற்றைப் பதிவு செய்ய உள்ளதாக, காரைக்கால் நகரில் அவரை ஒருமுறை சந்திக்க வாய்ப்புக் கிடைத்த பொழுது சொன்னார் அவர். சொன்னவாறே அவர் மகன் கல்லாடன் தயாரிப்பாக 1977இல் ‘சொன்னார்கள்’ என்ற தலைப்பில் கொண்டுவந்தார்.

நம் நாட்டைப் பொறுத்தவரை, 1902இல் வெளிவந்த நாகப்பட்டினம் சோ. வீரப்ப செட்டியார் அவர்களின் சொற்பொழிவு நூலே நமக்குக் கிடைத்திருக்கும் முதல் நாக்குநூல் என்றுள்ள முதல் பதிவு முதல் பல வியப்பான ‘மொழிதல்கள்.’ அவை சொன்னப்பட்ட நாள் பதிவாகியிருப்பது, கூடுதல் சிறப்பு. இன்றைக்கு முப்பது ஆண்டு எட்டு மாதங்களுக்கு முன்பு இந்தப் பதிவு வெளிவந்திருக்கிறது. சிலவற்றை இங்கே பார்ப்போம்.

“என்னை அடக்கம் செய்த பிறகு கல்லறையின்மேல், ‘நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று நீங்கள் எழுத வேண்டும்” என்று 1908ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் நாள் ஜி.யூ.போப் தன் விருப்பம் தெரிவித்தார்.

“பழைய காலத்தில் பைத்தியக்காரர்களைக் குளிர்ந்த நீரில் குளிக்கச் செய்வது வழக்கம். அதேபோல் செய்தால்தான் இப்பொழுது இருக்கும் போர் வெறியர்களின் பைத்தியம் நீங்கும்” என்று 26-6-1960 அன்றே குருஷ்சேவ் கூறினார்.

லாகூரில் 13-4-1928 அன்று மண்டிராஜா சொல்லியிருக்கிறார் – “மூன்று ஆண்டுக்கு முன்பு நான் பட்டத்துக்கு வந்ததுமுதல், குழந்தை மணத்தை நிறுத்துகிற விஷயமாய் கவனம் செலுத்தி வந்தேன். சட்டம் செய்வதுதான் ஒரே வழி என்று கண்டு எனது பிறந்தநாள் தர்பாரில் பால்ய விவாகத் தடைச் சட்டத்தை அறிவித்தேன்.”

இன்னும் பின்னால்……..

10-10-1801 அன்று மருது பாண்டியர் தூக்கிலிடப்படுவதற்கு முன் தந்த மரண வாக்குமூலம்:
“எம் வாரிசுகளைத் தருவித்து ஜமீனைக் கொடுக்க வேண்டும். ஜமீன் சொத்துகளை சந்ததிகளுக்குக் கொடுத்து விடுவதாயும், அமைத்திருக்கிற தரும நிலையங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிற பிரகாரம் ஒழுங்காக யாவும் நடத்தி வருவதாக நீங்கள் உறுதிமொழி தரவேண்டும். அத்தாட்சியாக கவர்ன்மெண்டு கத்தியைப் போட்டுத் தாண்டி சத்தியம் செய்து தர வேண்டும்.”

இராஜாராம் மோகன்ராய் மறைந்த நாளன்று பாக்ஸ் பாதிரியார் பிரிஸ்டல் நகரில் பேசியது(27-9-1833):
“கவி வர்ணனை மூளையிலிருந்து மறைந்து நீங்குவது போல, இராஜாராம் மோகன்ராய் நம் மத்தியிலிருந்து மறைந்து விட்டார். என்றாலும் அவரது சகவாசத்தால் உண்டான நற்பலன்கள் இந்த நாட்டிலும், அவரது தாய்நாடாகிய இந்தியாவிலும் என்றென்றும் அழியாமல் நிலைபெற்றிருக்கும்…”

காஞ்சிபுரம் பச்சையப்பர் என்ற பெருவள்ளளலுக்காகப் போராடிய – புகழ்மிக்க அட்வொகேட் ஜெனரல் நார்ட்டன் துரை என்னும் ஜார்ஜ் நார்ட்டன் 2-10-1846 அன்று சென்னை நீதிமன்ற வளாகத்தில் பல்லோர் முன் தெரிவித்தது:
“இந்த நல்ல நேரத்தில் என் மனப்பூர்வமான விருப்பத்தோடு உங்களுக்குச் சில செய்திகளைச் சொல்லக் கருதுகிறேன். இந்தக் கட்டிடத்தின் அருகில் வந்திருக்கும் பெருங்கூட்டத்தினரெல்லோரும் கேட்குமாறு சொற்பொழிவாற்ற வேண்டுமாயின், இடிமுழக்கம் போன்ற குரலுடன் பேச வேண்டும். ஆதலினால் என் அருகிலிருந்து கேட்பவர்கள் எல்லோரும் நான் பேசும் விஷயங்கள் அனைத்தையும் பிறருக்குச் சொல்லும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாரென்பவர் தரும எண்ணத்தோடு தம்முடைய திரண்ட பொருள்களைக் கோயில்களுக்கும் பிற தருமங்களுக்குமாகச் செலவழித்தார். அவருக்குச் சந்ததிகளாவது, வேறு உரிமையாளர்களாவது இல்லாமற் போனபடியால், அவருடைய வம்ச ஆசாரப்படி தம்பொருள்களையெல்லாம் சத்திரம் சாவடிகள் கட்டுவதற்காகவும், வறியோர்கட்கு அன்னதானம் வஸ்திரதானம் செய்வதற்காகவும் வைத்துவிட்டுக் காலமானார். அவருடைய எண்ணத்திற்கும், இந்துஜன சமூகத்தாருடைய வழக்கத்திற்கும் பொருந்தினதுபோல சுப்ரீம் கோர்ட்டாரவர்களுடைய தீர்மானத்தின்படி இந்நாட்டுக் கல்வி வளர்ச்சிக்காக நான்கு லட்ச ரூபாய் வரையிலும் தரப்பட்டது.[1846-இல் ரூ.4,00,000 என்பது பெருந்தொகை]. இவ்வளவு பெருந்தொகையை சிதைந்துபோக வொட்டாமலும் களவாட வொட்டாமலும் இந்த விஷயத்துக்காகக் காப்பாற்றுகிற நிமித்தம் நான் எவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொண்டேன்! மேற்படி முதலியார் பெயரால் தருமக்கல்விச் சாலைகள் ஏற்படுத்துவதில் எவ்வளவு என்னுடைய ஓய்வு நேரங்களைச் செலவிட்டு வந்தேன்! அது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும். இவ்வாறு நான் செய்ததைப் பற்றி சிலர் பழிச்சொற்கள் கூறும்படி இருந்தபொழுதும், அவை வெளியே வருமாயின், எனக்கு அதனால் மேன்மையும், திருப்தியும் உண்டாகும்.”

நார்ட்டன் துரை வழக்காடும்பொழுது சுருட்டுப் பிடிக்க உத்தரவு பெற்றாராம். மிகவும் சிக்கலான வழக்கொன்றின் இறுதிக் கட்டத்தில், சன்னமானதொரு கம்பியைத் தான் பிடிக்கவுள்ள நீண்ட சுருட்டின் நடுவில் நுனி முதல் அடி வரை செருகிக் கொண்டு வந்தாராம். அது யாருக்கும் தெரியவில்லை. வழக்காடுமுன் சுருட்டைப் பற்றவைத்த நார்ட்டனின் விரல் நடுவில் புகைந்த சுருட்டின் சாம்பல் கடைசிவரையிலும் விழாமல் நீட்டிக் கொண்டிருக்கவே, எதிர்வழக்காடும் வழக்கறிஞரின் கவனம் முதல் அனைவரின் கவனமும் ‘சுருட்டின் சாம்பல் எப்பொழுது விழும்?’ என்பதிலேயே இருந்ததாம். இப்படி அனைவரின் கவனத்தையும் திசை திருப்பி தீர்ப்பின் போக்கையும் மாற்றி விட்டாராம் நார்ட்டன். இப்படி ஒரு கதை நீதி மன்றங்களின் ‘லாபி’களில் வழங்கியதே தவிர, காஞ்சிபுரம் பச்சையப்பரின் நல்ல நோக்கத்தை நிறைவேற்ற அவர் பாடுபட்டது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

தமிழ்நாட்டின் வளத்தையும் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத தமிழர்களையும் பற்றி 30-1-1948இல் கூறினார்:
“தென்னை, பனை, வேர்க்கடலை, வாழை ஆகியவற்றுடன் பலவிதமான கிழங்குகளையும் இயற்கை ஏராளமாக வழங்கியிருக்கும் சென்னையைப் போன்ற ஒரு மாகாணத்தில், உணவுக்கான இயற்கை வளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மட்டும் மக்கள் அறிந்தால் அவர்கள் பட்டினி கிடக்க வேண்டியதில்லை என்றே நான் கூறுவேன்.”

இன்னும் ‘நாக்கு’ உதிர்த்த பற்பல அரிய செய்திகளைப் பதிவு செய்துள்ளார் சுரதா. தான் ‘தேன்மழை’ என்ற அழகான கவிதை த் தொகுதிக்குச் சொந்தக்காரன், திரைப்பாடல்களால் புகழ் பெற்றவன்[“விண்ணுக்கு மேலாடை” முதலானவை] என்பதெல்லாம் மறந்து, பல பூக்களில் தேன் சேகரிக்கும் தேனீ போல் உழைத்துத் திரட்டியவரின் ‘நாக்குநூல்'(‘ சொன்னார்கள்,’ பக்கம் 4) – என்றும் பாராட்டுக்குரியது.


karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்