புலம்பெயர் சஞ்சிகைகள் ஆய்வுக்கான ஓர் அறிமுகம்

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

சு. குணேஸ்வரன்


அறிமுகம்

ஈழத்தமிழ் இலக்கியத்தில் 80 களுக்குப் பின்னரான இலக்கியப் போக்கில் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்னும் புதியதொரு இலக்கிய வகைப்பாடு முனைப்புப் பெற்றுள்ளமை தமிழ் இலக்கிய உலகு அறிந்ததொரு விடயமாகும். இந்த இலக்கிய வகையின் வளர்ச்சிக்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவந்த சஞ்சிகைகள் அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக்கின்றன. அவற்றினை நோக்குவதே இக்கட்டுரையின் பணியாகும்.

புலம்பெயர் இலக்கியம்

புலம்பெயர் இலக்கியம் என்ற வகைப்பாடு இன்று ஈழத்தமிழ் இலக்கியத்தின் இன்னொரு கட்ட வளர்ச்சியாக அமைந்துள்ளது. கடந்த 1980 களில் முனைப்புப்பெற்ற இலங்கை இனப்போராட்ட சூழலின் விளைவாக மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர்களால் மேற்கொள்ளப்படும் இலக்கிய முயற்சிகளே இன்று ‘புலம்பெயர் இலக்கியம்’ என்று அடையாளப்படுத்தி அழைக்கப்படுகின்றது.

உலகிலே பல்வேறு இன மக்களும் தமது உள்நாட்டுப்போர் காரணமாகவும் அரசியல் அச்சுறுத்தல் காரணமாகவும், பிறவற்றாலும் தமக்குத் தஞ்சம் தரும் நாடுகளை நோக்கி புலம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையிலே ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வுகளும் இன்று உலகப் பரப்பில் பேசப்படும் ஒரு பிரச்சனையாக அமைந்துள்ளது.

இலண்டன், சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, ஒல்லாந்து, டென்மார்க், சுவீடன், இத்தாலி, நோர்வே ஆகிய ஐரோப்பிய ஸ்கண்டிநேவிய நாடுகளிலும்@ வட அமெரிக்காவில் கனடாவிலும் மற்றும் அவுஸ்திரேலியாவிலும் பெருமளவான ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் இலக்கிய ஆர்வமும் அதன்பாலான ஈடுபாடும் சமூக நோக்கும் உள்ளவர்களால் இவ்வாறான இலக்கிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவற்றினூடாக தமிழர்தம் அடையாளத்தையும் தமிழின், தமிழ்ப்பண்பாட்டின் பேணுகையையும் எதிர்காலச் சந்ததிகளுக்கு கையளிக்கும் முயற்சியாகவே அவர்களின் கலை இலக்கியம் சார் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இவற்றினை வெளியுலகுக்கு கொண்டுவர புலம்பெயர் சஞ்சிகைகள், பத்திரிகைகள் உறுதுணையாக இருந்துள்ளன.

சஞ்சிகைகளின் தோற்றத்திற்கான பிரதான காரணம்

1983 யூலை கலவரங்களின் பின்னர் கூர்மையடைந்த இனப்பகைமை நிலை காரணமாக குறிப்பாக இளம்வயதினர் ஈழத்தின் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் மாத்திரமல்லாது இலங்கையின் பிற பிரதேசங்களிலும் வாழ்வது உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த காரணத்தினால் மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். அவர்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அகதிச் சமுகமாக ஆக்கப்பட்டனர். அத்தோடு புகலடைந்த தேசங்களில் தாம் அந்நியப்பட்டுப் போனதாகவும் உணரத்தலைப்பட்டனர்.

இனம், மதம், மொழி, பண்பாடு மட்டுமன்றி புவியிற் சூழலினாலும் முற்றிலும் மாறுபட்ட தேசத்தில் தமது பிரச்சனைகளைத் தாமே பேசிக் கொள்ளவும் தம் இனத்தவர்களிடம் (தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர்ந்த பிறநாடுகளிலும்) தொடர்புகளை வைத்துக் கொள்ளவும் வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையிலேயே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் சமூகத்திற்கு@ முதல்முதலில் தமது பிரச்சனைகளைத் தாமே எழுத களம் தேவைப்பட்டது. அதனாலேயே சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் தோற்றம் பெற்றன.

சஞ்சிகைகள் குறித்து…

இதுவரை நான் தேடிப்பெற்ற தகவல்களின்படி 150 ற்கும் மேற்பட்ட பத்திரிகை சஞ்சிகைகள் இன்றுவரை புலம்பெயர் இலக்கியப் பரப்பில் தடம் பதித்துள்ளமை தெரியவருகின்றது. ஆனால் அவற்றுள் எல்லாமே தற்போது வெளிவருவனவல்ல. ஆகக் குறைந்தது ஒரிரு இதழ்களுடன் தமது பயணத்தை முடித்துக்கொண்ட சஞ்சிகைகளும் உள்ளன. ஏறத்தாள 20 இலிருந்து 30 வரையிலான பத்திரிகை, சஞ்சிகைகளே சமகாலத்தில் வெளிவருவதாக அறியமுடிகின்றது.

குறிப்பாக சிறுசஞ்சிகைகளைப் பொறுத்தவரையில் அவை ஜனரஞ்சக இதழ்களாகவோ அல்லது அதிக வாசகர்களைக் கொண்ட இதழ்களாகவோ அமைய வாய்ப்பில்லை. மாறாக காத்திரமான விடயங்களைப் பரிமாறும் களங்களுக்குரிய இடமாகவே அவை அமைந்திருக்கும்.

இவற்றுள் பத்திரிகைகளும் உள்ளடக்கம். அவற்றுள் நாளாந்த வாராந்த மாதாந்த பத்திரிகைகளும் உள்ளன. அவற்றுள்ளும் வர்த்தக விளம்பரத்தை நோக்கமாகக் கொண்டு இலவசமாக வெளியிடப்படும் பத்திரிகைகளும் கணிசமானவை வெளிவருகின்றன. இவை பற்றி பேராசிரியர் இ. பாலசுந்தரம் குறிப்பிடும்போது@

“இற்றைவரை ரொறன்ரோவி;ல் வெளிவந்த பத்திரிகை, சஞ்சிகைகள் என்பவற்றின் வரிசையில் உலகத்தமிழ், செந்தாமரை, விளம்பரம், தமிழர் தகவல், தாயகம், நான்காவது பரிமாணம், ழகரம், வீணைக்கொடி, சூரியன், உதயன், தமிழர் செந்தாமரை, முழக்கம், நம்நாடு, ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி, சுதந்திரன், தென்றல், உலக தமிழோசை, அமுதம், தினத்தமிழ், வீடு, ஆத்ம ஜோதி, தேசியம், தங்கத்தீபம், பரபரப்பு முதலானவற்றைக் குறிப்பிடலாம். ஓரிரு வெளியீடுகளுடன் ஓய்ந்த பத்திரிகை களுமுள்ளன…………………… உதயன், தமிழர் செந்தாமரை, முழக்கம் ஆகிய பத்திரிகைகள் சுமார் 100 பக்கங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் வர்த்தக விளம்பரங்கள் பக்கங்களை நிரப்புகின்றன. பத்திரிகைகளில் வரும் செய்திகள் எல்லாம் ஒரே மாதிரியான தாயகச் செய்திகள், வௌ;வேறு தலையங்கங்களுடன் வெளிவருகின்றன” (1)

இதனாலேயே காத்திரமான விடயங்களைத் தாங்கி வருபவற்றுள் பத்திரிகைகளை விட சஞ்சிகைகள் முதன்மையாக அமைந்துள்ளன. அவற்றில் சில சஞ்சிகைகளை இவ்விடத்தில் எடுத்துக்காட்டுதல் பொருத்தம் என்று எண்ணுகிறேன்.

சஞ்சிகைகளைப் பொறுத்தவரையில் மாதாந்த இருமாத காலாண்டு அரையாண்டு சஞ்சிகைகளும் உண்டு. சில சஞ்சிகைகள் ஆண்டு வெளியீPடுகளாவும் வெளிவருவது உண்டு. கல்லூரிகள், சங்கங்கள், அமைப்புக்கள் என்பனவும் செய்திப் பத்திரிகைகளை வெளியிடுகின்றன. (இவற்றுள் ஆண்டு மலர்கள் கருத்திற்; கொள்ளப்படவில்லை. அவை தனித்த பார்வைக்குரியன)

1985 இல் மேற்கு ஜேர்மனியில் இருந்து வெளிவந்த ‘தூண்டில்’ என்ற சஞ்சிகையே புலம்பெயர் படைப்பாளிகளிடம் இருந்து வெளிவந்த முதலாவது சஞ்சிகையாகக் கருதப்படுகின்றது. தூண்டிலேயே ஜேர்மனியில் இருந்து பார்த்திபன் எழுதிய புலம்பெயர் ஆரம்பகால நாவல்கள் தொடர்கதையாக வெளிவந்தன. வேறும் சில சஞ்சிகைகள் நாவல் மற்றும் குறுநாவல் என்பவற்றைத் தொடராக வெளியிட்டன.

சஞ்சிகை வெளியீடுகளில் அதிகமானவையும் குழுவாக வெளியிடும் நிலைதான் உள்ளது. இலக்கிய வட்டங்கள், அமைப்புக்கள், சங்கங்கள் ஊடாகவும், பல எழுத்தாள நண்பர்கள் இணைந்து வெளிவருவனவும், தனிப்பட்ட நபர்களின் முயற்சியி;ல் வெளிவருவனவும் உள்ளன.

தற்போது கனடாவில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘காலம்’ என்ற சஞ்சிகை கவிஞர் செல்வத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகின்றது. 90 இல் இருந்து வெளிவரத் தொடங்கிய ‘காலம்’ இன்றுவரையும் வெளிவருகின்றது. ஈழ, புலம்பெயர் படைப்பாளிகள் மட்டுமன்றி ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தமிழகப்; படைப்பாளிகளும் இச்சஞ்சிகையில் எழுதி வருகின்றனர்.

பிரான்சில் இருந்து எக்ஸில் வெளியீட்டகத்திற்கு ஊடாக வெளிவந்த ‘எக்ஸில்’ என்ற சஞ்சிகை வெளிவந்து நின்றுவிட்டது. எக்ஸிலில் முன்னர் வெளிவந்த படைப்புக்கள் இணையத்தில் நஒடைiஎசந.உழஅ என்ற இணையத் தளத்தில் பார்க்கக் கிடைக்கின்றது. இந்த வெளியீட்டகத்தினூடாக பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. திருமாவளவன், கலாமோகன், சிவசேகரம், சக்கரவர்த்தி ஆகியோரின் ஒவ்வொரு நூல்களும்@ மறையாத மறுபாதி என்ற புகலிட பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பும் இவற்றுள் முக்கியமானவை.

மறைந்த கலைச்செல்வன் மற்றும் லஷ்மி ஆகியோரின் முயற்சியில் பிரான்சில் இருந்து வெளிவந்த மற்றுமொரு சஞ்சிகையே உயிர்நிழல். ‘உயிர்நிழல்’ சஞ்சிகை முதலில் வெளிவந்து நின்றுபோனது. பின்னர் கலைச்செல்வனின் மறைவுக்குப் பின்னர் இரண்டாம் கட்டமாக வெளிவந்து தனது வரவை உறுதிப்படுத்தியுள்ளது. எக்ஸில், உயிர்நிழல் ஆகிய இரண்டு சஞ்சிகைகளும் நவீன தமிழ் இலக்கியத்தின் அண்மைக்கால இலக்கியக் கோட்பாடுகளை உள்வாங்கி மிகக் காத்திரமான பணியை புலம்பெயர் படைப்புலகில் ஆற்றியுள்ளன. பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம், எதிர்ப்பிலக்கியம் ஆகியவை குறித்து தமது கவனத்தைத் திருப்பிய சஞ்சிகைகளாக இவை அமைகின்றன.

சக்தி, கண், ஊதா ஆகிய சஞ்சிகைகள் பெண்கள் அமைப்புக்களுக்கு ஊடாக வெளிவந்தவை. அதேபோன்று தற்போது பல சஞ்சிகைகள் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் மூலமே வெளி வருகின்றன. பெண்கள் சஞ்சிகைகள் பற்றி றஞ்சி அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுவது கவனத்திற்கு உரியது.

“15 வருடங்களுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவில் பல மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட சஞ்சிகைகள் வெளிவந்தன. அவற்றில் பெண்களும் எழுதினார்கள். அனேகமான சஞ்சிகைகளில் பெண்களாலும் ஆண்களாலும் பெண்ணியக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. விவாதிக்கப்பட்டன. பிரான்சிலிருந்து ‘கண்’ என்ற பெண்கள் சஞ்சிகை முதலில் கொண்டு வரப்பட்டது. இது பெண்களை ஆசிரியர் குழுவாகக் கொண்டிருந்தது. தொடர்ந்து ‘ஊதா, பெண்கள் சந்திப்பு மலர், சக்தி’ போன்ற பெண்களால் உருவாக்கப்பட்ட சஞ்சிகைகளும் இன்னும் ‘மறையாத மறுபாதி, புது உலகம் எமை நோக்கி, ஊடறு’ போன்ற தொகுப்புக்களும் வெளிவந்தன. புகலிட வாழ்வு, பெண்ணியம், விளிம்புநிலை மாந்தர்கள், தமிழ் அரசியல் குறித்த படைப்புக்கள், தாங்கிய தொகுப்புக்களாக இவை தம்மை இனங்காட்டின.” (2)

சில சஞ்சிகைகள் தனித்த பார்வைக்குரியன. பிரான்சில் இருந்து வெளிவந்த ‘அம்மா’ சஞ்சிகை சிறுகதைக்கென தனித்த இதழாக வெளிவந்து நின்று போனது. நான் அறிந்தவரையில் 13 இதழ்கள் வரையில் காணக்கிடைத்தது. 1997 பங்குனியில் ‘அம்மா’ வின் 1 வது இதழ் வெளிவந்துள்ளது. 2001 இல் இதன் 13 வது இதழ் வெளிவந்துள்ளது. வெளிவந்த இதழ்களில் சராசரியாக 5 கதைகளாவது வந்துள்ளன. அப்படிப் பார்த்தால் 75 கதைகளாவது தேறும். அதிகமான புலம்பெயர் படைப்பாளிகளின் சிறுகதைகள் இந்த இதழில் வெளிவந்து பின்னர் நூல் வடிவம் பெற்றவையே. இந்த வகையில் ‘அம்மா’ புலம்பெயர் இலக்கியப் படைப்புலகில் சிறுகதைக்கென தனித்த இதழாக வெளிவந்து பலத்த பாதிப்பை ஏற்படுத்திய சஞ்சிகையாக அமைந்துள்ளது.

‘சமர்’ பிரான்சிலிருந்து ரயாகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகை. இதில் கவிதை, சிறுகதை, எவையும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. கட்டுரை மற்றும் அரசியல்சார் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் தத்துவார்த்த புரட்சிகர விமர்சன ஏடாக வெளிவந்தது. நான் அறிந்தவரையில் 31 இதழ்கள் 2002 வரை வெளிவந்துள்ளன. இது தவிர ‘அரசியல் பொருளாதார கலாசார இதழாக’ வெளிவந்த புதுமை என்ற சஞ்சிகையும் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெளிவந்து நின்று விட்டது.

எழுத்தாளர் க. நவம் (எழுத்தாளர் தெணியானின் சகோதரர்) ஆசிரியராகப் பணியாற்றிய ‘நான்காவது பரிமாணம்’ கனடாவில் இருந்து வெளிவந்த சஞ்சிகையாகும். கலை இலக்கிய காலாண்டு இதழாக 1991 செப்ரெம்பரில் இருந்து 1994 ஏப்ரல் வரை 13 இதழ்கள் மாத்திரமே இதுவரை வெளிவந்துள்ளன. பின்னர் இதுவும் நின்றுவிட்டது. இது வெளிவந்த காலப்பகுதியில் பல நூல் வெளியீடுகளை@ குறிப்பாக ஆரம்பத்தில் வெளிவந்த கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு அவை சார்ந்த கருத்துக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனரஞ்சகமாக வெளிவந்த பல இதழ்களும் உண்டு. அத்துடன் இந்தியாருடே பாணியிலும் வெளிவந்து நின்று போன இரண்டு சஞ்சிகைகள் பார்க்கக் கிடைத்தன. லண்டனில் இருந்து வெளிவந்த ‘உலக தமிழோசை’, ‘உலகத் தமிழ்’ ஆகிய இரண்டு சஞ்சிகைகளும் கலை இலக்கியம் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளையும் உள்;ளடக்கி வெளிவந்தது. இதனாலேயே எந்தவொரு வாசக மட்டத்திலும் நிரந்தரமாக தமக்கென ஓரிடத்தை தக்க வைக்க முடியாத நிலை இவற்றுக்கு ஏற்பட்டு விட்டது. தற்போது இவை இங்கு கிடைப்பதில்லை.

புலம்பெயர் படைப்புலகில் வெளிவந்த சஞ்சிகைகள் கலை, இலக்கியம், விமர்சனம், அரசியல், பெண்ணியம், மாற்றுக்கருத்து, சிறுவர் இதழ்கள், ஆற்றுகைக்கலை, ஆண்மீகம், வர்த்தகம் என்றவாறு சிறப்புப் பண்புகளைப் பெற்று வந்துள்ளமை தெரியவருகின்றது. இந்தச் சஞ்சிகைகள் யாவும் முழுமையாக ஈழத்தில் கிடைக்காத நிலையிலே இவை பற்றிய பகுப்பாய்வினை மேற்கொள்ளுதல் மிகக் கடினமான ஒரு பணியாகவே அமைகிறது. ஈழத்தில் ஆவணப்படுத்த வேண்டிய பல்கலைக்கழக நூலகங்களுக்கோ அல்லது பொதுசன நூலகங்களுக்கோ (யாழ். பல்கலைக்கழக நூலகத்திலே எக்ஸில், அம்மா, சமர், மண், ஆகியவற்றின் சில இதழ்கள் மட்டுமே பார்க்கக் கிடைக்கின்றது) இச்சஞ்சிகைகளின் பிரதிகளை வெளியீட்டாளர்களும் படைப்பாளிகளும் பொறுப்புணர்வுடன் அனுப்பிவைக்காதது ஒரு குறைபாடே. இந்நிலை இவை பற்றிய முழுமையான ஆய்வுகளுக்கு தடையாக அமைந்துள்ளன.

இந்த வகையில் தற்போது வெளிவரும் சஞ்சிகைகளாக உயிர்நிழல், காலம், மண், நுட்பம், குவியம், இனி, உயிர்மெய், காற்றுவெளி, முற்றம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். தொடர்ச்சியாக வெளிவரும் மேலும் சில சஞ்சிகைகளும் உள்ளன. இலத்திரனியல் ஊடகமான இணையத்திற்கூடாகவும் அதிகமான இணைய சஞ்சிகைகள் தற்போது வெளிவருகின்றன.

இதுவரை புலம்பெயர் படைப்புலகில் தடம் பதித்த சஞ்சிகைகள்ஃபத்திரிகைகள்

பிரான்ஸ் (36)
அசை, அம்மா, அநிச்ச, ஆதங்கம், ஈழமுரசு, உயிர்நிழல், உறவுகள், எக்ஸில், எழில், எரிமலை, ஐரோப்பிய முரசு, ஓசை, கதலி, கண், கம்பன், குமுறல், சமர், சிந்து, சிரித்திரு, சுட்டுவிரல், தமிழன், தமிழ் முரசு, தமிழ்த் தென்றல், தாயகம், தேடல், பள்ளம், பாரிஸ் ஈழநாடு, பாரிஸ் ஈழமுரசு, பகடைக்காய்களின் அவலக்குரல், புன்னகை, புதுவெள்ளம், முற்றம், மௌனம், வடு, வண்ணை, வான்மதி.

ஜேர்மனி (30)
அக்கினி, அறுவை, இளைஞன், இரவல் தூண்டில், ஈழமணி, ஊதா, ஏலையா, கலைவிளக்கு, சிந்தனை, சிவத்தமிழ், சிறுவர் அமுதம், தமிழ் அருவி, தளிர், தாகம், தாயகம், தமிழ் நாதம், தூண்டில், தென்றல், தேன், நமது இலக்கு, நமது குரல், பாரிஸ் ஈழமுரசு, புதுமை, புதுயுகம், பூவரசு, மண், மலரும் மொட்டுக்கள், வண்ணத்துப்பூச்சி, வெளிச்சம், வெற்றிமணி.

இலண்டன் (25)
அலை ஓசை, ஈழகேசரி, உயிர்ப்பு, உலக தமிழோசை, காற்றுவெளி, சுடரொளி, தமிழ் ஒலைகள், தமிழர் தகவல், தமிழன், தமிழ் அகதி, தமிழ் உலகம், தாகம், தேசம், நாளிகை, பனிமலர், பாரிஸ் ஈழமுரசு, புதினம், புலம் ஐ.பி.சி, மீட்சி, வான்முரசு, வெளி, துழரசயெட ழக நுநடயஅ ளுவரனநைளஇ சுயஉந யனெ ஊடயளளஇ வுயஅடை வுiஅநளஇ வுயஅடை யேவழைn .

சுவிஸ் (5)
ஊசி இலை, தமிழ் ஏடு, தமிழ்நாடு, பாரிஸ் ஈழமுரசு, மனிதம்.

டென்மார்க் (5)
அரும்பு, இனி, கற்பகம், காகம், சஞ்சீவி.

நோர்வே (5)
உயிர்மெய், சுவடுகள், சக்தி, சர்வதேச தமிழர், பறை.

நெதர்லாந்து (6)
அ ஆ இ, உரிமை, சமநீதி, சுமைகள், செய்திக்கதிர், தமிழ்ஒளி.

கனடா (39)
அமுதம், ஆத்மஜோதி, ஈழநாடு, ஈழமுரசு, உதயன், உலக தமிழோசை, உலகத் தமிழர், கனடா ஈழநாடு, காலம், குவியம், சிறுவர் கதைமலர், சுதந்திரன், சூரியன், செந்தாமரை, தங்கத்தீபம், தமிழர் செந்தாமரை, தமிழர் தகவல், தாயகம், தினத்தமிழ், தேசியம், தேடல், தென்றல், நம்நாடு, நான்காவது பரிமாணம், நுட்பம், பரபரப்பு, பார்வை, புரட்சிப் பாதை , பொதிகை, மறுமொழி, முரசொலி, முழக்கம், ரோஜா, வானவில், விளம்பரம், வீடு, வீணைக்கொடி, வெற்றிமணி, ழகரம்.

அவுஸ்திரேலியா (13)
அக்கினிக்குஞ்சு, அவுஸ்திரேலிய மரபு, அவுஸ்திரேலிய முரசு, இன்பத்தமிழ், ஈழமுரசு, உணர்வு, உதயம், கதிர், கலப்பை, தமிழர் உலகம், தினமுரசு, பாரதி சிறுவர் இதழ், மரபு.

மேலும் (11)
அஞ்சல், உலகத்தமிழ், ஓலை, குருத்து, சுட்டுவிரல், திருப்பம், துளிர், பாலம், புதினம், மண், மேகம்.

சஞ்சிகைகளின் உள்ளடக்கம்

இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ள சஞ்சிகைகளில் கலை இலக்கியம் சார்ந்தனவே அதிகம். அவை கவிதை, சிறுகதை, தொடர்கதை, நூல் மதிப்பீடு, நூல் அறிமுகம், விமர்சனம், கட்டுரை, வாசகர் கருத்து, அரசியல், மாற்றுக்கருத்து, எதிர்வினை, ஆகியவற்றை பிரதானமாகவும் வேறும் சில விடயங்களை உபபிரிவுகளாகவும் கொண்டு வெளிவந்தன.

இவை ஒவ்வொரு சஞ்சிகைகளின் இலக்கிற்கு ஏற்பவும் மாறுபடும். பெண்ணியக் கருத்துக்களை முதன்மைப்படுத்தி வெளிவந்த சக்தி, கண் ஆகியவற்றின் உள்ளடக்கத்திற்கும் சமர் சஞ்சிகையின் உள்ளடக்கத்திற்கும் உயிர்நிழல் காலம் என்பவற்றின் உள்ளடக்கத்திற்கும் இடையில் பெருத்த வித்தியாசம் உண்டு. அவற்றை வெளியிடும் குழுவின் கருத்தியலுக்கு ஏற்ப அவற்றின் உள்ளடக்கம் மாற்றமுறுவதைக் கண்டு கொள்ளமுடியும்.

இவை எவற்றையும் மனங்கொள்ளாமல் தமிழகத்தின் ‘குமுதம்’, ‘ராணிமுத்து’ பாணியில் வெளிவரும் சஞ்சிகைகளும் புலம்பெயர் இலக்கிய உலகில் உண்டு. அவை பெரிதும் தமிழ்நாட்டு வெகுஜன கலாசாரத்தின் தாக்கத்திற்கு உட்பட்டிருத்தலையும் கண்டு கொள்ளலாம்.

சஞ்சிகைகளின் அமைப்பு

ஆரம்பத்தில் வெளிவந்த சில சஞ்சிகைகள் கையொழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு அவை போட்டோப்பிரதி எடுக்கப்பட்டு வெளிவந்தன. பின்னர் தட்டச்சு செய்யப்பட்டு போட்டோபிரதி எடுக்கப்பட்டும்@ அதன் பின்னர் றோணியோ செய்யப்பட்டும் பல சஞ்சிகைகள் தமது பணியைத் தொடர்ந்தன. பின்னரே அவை அச்சுவடிவம் பெற்றன. தாயகம், சக்தி, புதுமை ஆகிய சஞ்சிகைகள் எனக்குப் பார்க்கக் கிடைத்தபோது இந்த நிலையில் இருந்துதான் அவற்றின் வளர்ச்சி ஆரம்பமாகியது. இது ஆரம்பத்தில் வெளிவந்த அதிகமான சஞ்சிகைகளுக்கும் பொருந்துவதாக அமையலாயிற்று. சிறிது காலத்தின் பின்னரே அச்சுவடிவம் பெற்ற சஞ்சிகைகளை காணமுடிந்தது. தமிழகத் தொடர்புகள் கிடைத்தபோது வெளியீட்டாளர்கள் தமது சஞ்சிகைகளை தமிழகத்தில் பதிப்பிக்கவும் செய்தனர். தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் பல சஞ்சிகைகள் தமிழகத்தில் மிகச் சிறப்பாக அச்சுப்பதிக்கப்பட்டு வெளிவருகின்றன. அநிச்ச (இரண்டு இதழ்களுடன் நின்றுவிட்டது. இது பற்றிய விபரத்தை கீற்று (றறற.மநநவசர.உழஅ) இணையத்தளத்தில் பார்க்கக் கூடியதாக உள்ளது.) உயிர்நிழல், காலம், ஆகிய சஞ்சிகைகள் அண்மைக்காலத்தில் மிகுந்;த அழகுடனும் காத்திரமாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

20செ.மீ×15செ.மீ அளவுகளிலேயே ஆரம்பத்தில் வெளிவந்த அதிகமான சஞ்சிகைகள் அமைந்திருந்தன. இவை யு4 அளவுள்ள தாள்களில் போட்டோபிரதி எடுப்பதற்கு வாய்ப்பாக அமைந்ததனாலும் கைக்கு அடக்கமான அளவாதலாலும் இந்த அளவுடைய சஞ்சிகைகள் பெரிதும் விரும்பப்பட்டனவாக இருந்திருக்கலாம். சமர், தாயகம், சக்தி, ஆகிய சஞ்சிகைகள் இந்த அளவிலேயே அவை நின்றுபோகும் வரையும் வெளிவந்தன. இவை தவிர 26செ.மீ×18செ.மீ , 28செ.மீ×22செ.மீ இவற்றை அண்மிய வடிவத்திலும் பல சஞ்சிகைகள் வெளிவந்துள்ளன. மௌனம், காலம், எக்ஸில், உயிர்நிழல், நாண்காவது பரிமாணம், கண், அம்மா ஆகிய சஞ்சிகைகள் இந்த அளவுகளில் வெளிவந்ததைக்கு உதாரணமாகும்.

இன்னமும் தாண்டவேண்டியவை

சஞ்சிகைகள்; தாண்டவேண்டிய தடைகள் பல உள்ளன. குறிப்பாக எல்லா சஞ்சிகைகளும் சேரவேண்டியவர்களுக்கு போய்ச் சேருவதில்லை. என்பது முக்கிய குறைபாடாகும். ஏற்கனவே ஒரு சஞ்சிகையில் பிரசுரமான ஆக்கம் மீண்டும் மீண்டும் மறுபிரசுரம் பெறுவதும் சஞ்சிகைகளின் குறைபாடுகளுக்கு மற்றுமொரு காரணமாகும். இவற்றில் பல எடுத்த எடுப்பிலேயே நின்றுபோவதற்கு@

‘குழுவிற்கான வேலைத்திட்டம், நடைமுறைப் பிரச்சனைகள், வாழ்நிலை முரண்பாடுகள், பிரமுகர்த்தனம், போலித்தன்மையான தியாக வெளிப்பாடுகள், தலைமைக்கான போட்டி, சிலரைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற சிலரின் அதீத வேட்கை என்பவற்றை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்’ (3)

என்ற கூற்றும் சஞ்சிகைகள் தொடர்ச்சியாக வெளிவராமைக்கு ஒருசில காரணங்களாக அமைந்துள்ளன. எப்படியாயினும் ஆளற்ற தனித்த தீவுகள் போல் ஆகிவிட்ட புலம்பெயர் படைப்பாளிகளின் உணர்வுகளைப் பதிவு செய்ய இந்தச் சஞ்சிகை வெளியீடுகள் ஒரு களமாக அமைந்துள்ளன. அந்த வகையில் ஒரு இதழ் வெளிவந்து நின்று போனாலும்கூட அதற்கூடாக அவர்களின் வாழ்வு பதிவாகி காலம் தாழ்த்தியேனும் உரியவர்களுக்கு கிடைக்க ஒர் ஊடகமாகவே இவை அமைந்திருக்கின்றன. இந்த முயற்சிகள் வரவேற்க வேண்டியனவே.

அவற்றின் இன்னொரு கட்ட வளர்ச்சியாக இணைய சஞ்சிகைகள்

கடந்த ஆண்டுகளில் இந்தச் சஞ்சிகைகளின் வரவு குறைந்துவிட்ட நிலையிலே தகவல் தொழில்நுட்பத்தை புலம்பெயர் படைப்பாளிகள் மிகப் பயனுள்ளதாக பயன்படுத்துவதற்கு சான்றாக தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் இணைய சஞ்சிகைகளைக் குறிப்பிடலாம்.

‘இணைய வலைப்பதிவுகள்’ என்றதொரு புதிய அத்தியாயம் அண்மைக்காலத்தில் உலகெங்கும் வலுப்பெற்று வருகின்றது. இணையத்தில் ஒவ்வொருவரும் தத்தமக்கென தனியான வலைப்பதிவுகளை உருவாக்கி உலாவ விட்டுள்ளனர். இது இந்தியாவிலேயே மிக அதிகம் என்றும் கூறப்படுகின்றது. அவ்வாறானதொரு நிலையினை இணையத்தில் உலாவரும் சஞ்சிகைகளும் தனித்தனியான இணையத் தளங்களும் நிரூபிக்கின்றன.

இன்று இவற்றின் இன்னொரு கட்டமாக ‘இணைய சஞ்சிகைகள்’ மிக அதிகளவாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அவற்றுள் ஏற்கனவே அச்சுவடிவம் பெற்றவை தவிர அதிகமும் புதிய பெயர்களைத் தாங்கி வெளிவருகின்றன. ஏறக்குறைய நாற்பது வரையான சஞ்சிகைகள் வெளிவருகின்றன. இது மேலும் அதிகரித்துக் கொண்டு செல்கின்ற போக்குத்தான் தற்போது உள்ளது. தமிழகத்தினைச் சேர்ந்த சு துரைக்குமரன் இணைய சஞ்சிகைகளைப் பற்றி முனைவர் பட்டத்திற்காக பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆய்வு ஒன்றினையே மேற்கொண்டுள்ளார். இந்தச் செயற்பாடு இணைய சஞ்சிகைகளின் வளர்ச்சியை நாம் நினைத்துப் பார்ப்பதற்கு ஒரு மேலதிக தகவலாக அமைகின்றது.

இணைய சஞ்சிகைகளில் பல தமிழகத்திலிருந்தும் புலம்பெயர் எழுத்தாளர்களிடம் இருந்தும் வெளிவருகின்றன. இவற்றுள் இரண்டையுமே பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு படைப்பாளிகள் கலந்துறவாடுவது தெரிகின்றது. இது ஈழத்தமிழ் இலக்கியம் ‘சர்வதேசிய இலக்கிய உலகு’ என்னும் பெரும்பரப்புக்குள் கலந்துறவாடும் நிலையாகக் கொள்ளலாம். ‘திண்ணை’ இணையத்தளத்தில் தமிழகப் படைப்பாளிகளுடன் அதிகமான புலம்பெயர் படைப்பாளிகளும் எழுதிவருகின்றனர். இவை தவிர ‘மரத்தடி, ஆறாம்திணை, தோழி, அம்பலம், என இன்னமும் பல தமிழக இணைய சஞ்சிகைகள் வெளிவருகின்றன.

“உலகில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இடத்தால் வேறுபட்டு பண்பாட்டு நாகரிக மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும் தமிழால் தமிழ் இணையத்தால் இன்று ஒன்றுபட முடிகிறது. இதற்குப் பெரும் பங்காற்றி வருவன தமிழ் இணைய இதழ்கள்.”(4)

என்ற மேற்படி துரைக்குமரனின் கூற்றுக்குப் பொருந்துவதுபோல் புலம்பெயர்ந்தவர்களின் இணைய சஞ்சிகைகள் விளங்குகின்றன. புலம்பெயர் படைப்பாளிகளின் இணைய சஞ்சிகைகளாக ‘பதிவுகள், அநிச்ச (இது மேலும் பல தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது) தமிழ் அலைகள், அலைகள், எக்ஸில் லீவர், சாரல், ஊடறு, கீற்று’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை தவிர ஒவ்வொரு எழுத்தாளர்களுமே தமக்கொன புதிய தளங்களையும் ஆரம்பித்து வருகின்றார்கள். பொ. கருணாகரமூர்த்தி தனது படைப்புக்களை ‘தமிழ்க்குடில்’ என்ற தளத்தில் இணைக்கத் தொடங்கியுள்ளார். இவையெல்லாம் சஞ்சிகைகளின் தொடர்ச்சியான இன்னொரு பரிமாணம் எனலாம்.

எனினும் இணைய சஞ்சிகைகளில் வெளிவரும் படைப்புக்களின் போதாமை குறித்த கருத்துக்களும் இலக்கிய உலகில் உண்டு. இதில் ஓரளவு உண்மையும் உண்டு என்பதனை இணைய சஞ்சிகைகளை பார்வைக்கு உட்படுத்துபவர்கள் அறிவார்கள். மேலும் இணைய சஞ்சிகைகளின் அமைப்பு, அவற்றின் எழுத்துரு என்பனவும் இவற்றின் சில குறைபாடுகளாக உள்ளன. ‘யுனிகோட்’ எழுத்துருவுக்கு அதிகமானவர்கள் மாறியுள்ள போதிலும் இவற்றை இன்னமும் கருத்திற் கொள்ளாத இணைய இதழ்கள் வாசகர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றன.

தொகுப்பாக

எனவே புலம்பெயர் இலக்கியம் பற்றிய முழுமையான ஆய்வுமுயற்சிகளின்போது புலம்பெயர் சஞ்சிகைகளின் பண்பும், அவற்றின் பணியும் மதிப்பீட்டுக்கு உட்படுத்த வேண்டியனவாக அமைந்துள்ளன. அந்தவகையில் இன்று பல தடைகளையும் தாண்டி பொறுப்புணர்வுடன் வெளியிடப்படும் சஞ்சிகைகள் மூலமாகவே சமகால புலம்பெயர் படைப்புக்களின் செல்நெறியை அறிந்து கொள்ள முடியும். அவற்றின் கனதியும் தொடர்ச்சியான வருகையும் தமிழ்ச்; சூழலுக்கு மிக முக்கியமானவையாக அமைந்துள்ளன.

புலம்பெயர் சஞ்சிகை பத்திரிகைகள் புலம்பெயர் இலக்கியத்தின் தோற்றுவாய்க்கு 80 களின் நடுப்பகுதியில் இருந்து தமது பணியை ஆற்றத் தொடங்கியுள்ளன. இன்று அவற்றில் பெரும்பாலானவை நின்றுபோன பிறகும்கூட அவை பதித்துச் சென்ற தடங்கள் முக்கியமானவை. அவற்றின் படிப்படியான வளர்ச்சியினாலேயே ஈழத்தமிழர்களின் உணர்வுகள் பேசப்பட்டன. தமிழகம் தாண்டியும் அனைத்துலக மட்டத்திற்கு ஈழத்தமிழ் இலக்கியத்தை அவை கொண்டு சென்று சேர்த்துள்ளன. இவையெல்;லாம் புலம்பெயர் இலக்கியப் பரப்பில் சாதாரணமாகத் தட்டிக்கழிக்க முடியாதவை என்பதும் எதிர்காலத்தில் ஆய்வு முயற்சிகளுக்கு வழிசமைக்கக்கூடியவை என்பதும் முக்கியமான குறிப்பாகும்.

mskwaran@yahoo.com

—–
அடிக்குறிப்புக்கள்
(1) பாலசுந்தரம். இ போராசிரியர் @ 2005, ‘ரொரன்ரோவில் தமிழ்ப் பத்திரிகைகள் –
ஒரு நோக்கு’, குவியம், கனடா. ப.33
(2) றஞ்சி (சுவிஸ்) @ 2006 மார்ச், ‘புலம்பெயர் நாடுகளில் பெண்ணியக்
கருத்துக்கள்’, உயிர்நிழல், இதழ் 22, பிரான்ஸ், ப.43
(3) தயாநிதி @ 1999 செப் 2-15, சரிநிகர், கொழும்பு, ப.8

(4) துரைக்குமரன். சு @ 2006 யூலை 13, www. thinnai.com

(நான் தங்கள் இணைய சஞ்சிகையைப் பார்த்து வருபவர்களுள் ஒருவன். புலம்பெயர் படைப்புக்கள் பற்றிய ஆய்வினை ஆ. Phடை பட்டத்திற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களின் நெறியாள்கையில் மேற்கொண்டு வருகிறேன். இந்த விதத்தில் ‘திண்ணை’ எனக்கு பல ஆக்கபூர்வமான கட்டுரைகளைப் பெற்றுப் படிப்பதற்கு உதவியுள்ளதை நன்றியுடன் நினைவு கூருகிறேன். – சு. குணேஸ்வரன்)

—–

Series Navigation

சு. குணேஸ்வரன்

சு. குணேஸ்வரன்