பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914- 09. 06.1981)

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

முனைவர் மு.இளங்கோவன்


தமிழிசை வளர்ச்சிக்குப் பலரும் பல வகையில் தொண்டு செய்துள்ளனர்.நூற்றாண்டுதோறும் இத்தொண்டின் தன்மை வேறுபட்டு வந்துள்ளதைத் தமிழிசை வரலாற்றைக் கற்கும்பொழுது அறியமுடிகின்றது. இளங்கோவடிகள் காலத்திலும்,காரைக்கால் அம்மையார் காலத்திலும்,நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்திலும்,சேக்கிழார் காலத்திலும்,தமிழிசை மூவர்கள் காலத்திலும் இசைத்தொண்டினை அவரவர்க்கு உகந்த வகையில் செய்தனர். ஆபிரகாம் பண்டுவர்,விபுலானந்தர்,வீ.ப.கா.சுந்தரம் காலத்தில் தமிழிசைத்தொண்டு என்பது பிறமொழி இசையிலிருந்து தமிழிசையை மீட்பது,பழந்தமிழகத்தில் வழக்கிலிருந்த தமிழிசை,இசைக்கருவிகளை அடையாளம் காட்டுவது என்று அடிப்படைக் கட்டமைப்பைச் சான்றுகளுடன் நிறுவும் பணியில் ஈடுபட்டிருந் தனர். இத்தகு அறிஞர்களின் வரிசையில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இசைத்தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர்களுள் ஒருவரான பண்ணாராய்ச்சி வித்தகர் என அனைவராலும் அழைக்கப்பெற்ற குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் வரலாற்றினை இக்கட்டுரை நினைவுகூர்கிறது.

ப.சுந்தரேசனார் இளமை வாழ்க்கை

ப.சுந்தரேசனார் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் குடந்தையில் வாழ்ந்த பஞ்சநதம் பிள்ளை,குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 28.05.1914 இல் பிறந்தவர்.(ப.சுந்தரேசனார் அவர்களின் தாயார் பிறந்த ஊர் சீர்காழி ஆகும்.இவ்வூரில்தான் ப.சுந்தரேசனார் பிறந்தார்).நான்காம் வகுப்புவரை கல்விபயின்ற இவர் வறுமை காரணமாக மேற்கொண்டு கல்வி பெற இயலாமல் போனது.பெற்றோர் இளம் அகவையில் நகைக் கடை யொன்றில் பணியில் சேர்த்தனர்.இவரிடம் இருந்த இசையார்வம் இசைத்தட்டுகளைக் கேட்டு இசையறிவு பெறும் வாய்ப்பை உண்டாக்கியது.பள்ளிப்படிப்பு இவருக்கு வாய்க்காமல் போனாலும் பல நூல்களைத் தாமே கற்று அறிவுபெற்றார்,இசையீடுபாட்டால் ஆபிரகாம் பண்டுவரின் கருணாமிர்தசாகரம்,பேராசிரியர் சாம்பமூர்த்தியின் இசைநூல்கள் கற்று இசையறிவைச் செழுமை செய்துகொண்டார்.

திருவநந்தபுரம் இலக்குமணபிள்ளை அவர்களிடம் தமக்கிருந்த இசையீடுபாட்டைச் சொல்லி இசை கற்பிக்கும்படி வேண்டினார்.ப.சுந்தரேசனாரின் இசை ஈடுபாட்டைப் பாராட்டிய இலக்குமணபிள்ளை அவர்கள் அங்குத் தங்கிப்படிக்க வாய்ப்பின்மையைச் சொல்லிக் குடந்தைக்கு அனுப்பி வைத்தார்.
ப.சுந்தரேசனார் முதன்முதல் (பிடில்)கந்தசாமி தேசிகர் என்பவரிடம் இசைபயின்றார்.பின்பு வேப்பத்தூர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் சிலகாலம் இசைபயின்றார்.அதன்பின்னர் 1935 முதல் ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக குடந்தையில் வாழ்ந்த வேதாரண்யம் இராமச்சந்திரன் அவர்களிடம் செவ்விசை பயின்றுள்ளார்.ப.சுந்தரேசனார் அவர்களுடன் சுவாமிமலை சானகிராமன்,ஐயாசாமி முதலானவர்கள் உடன் பயின்றுள்ளனர்.வி.பி.இராசேசுவரி என்பவரும் உடன்பயின்றவர்.

ப.சுந்தரேசனார் அவர்களின் இல்லறவாழ்க்கை

ப.சுந்தரேசனார் அவர்கள் 1944 இல் திருவாட்டி சொர்ணத்தம்மாளை மணந்தார் அன்புடன் வாழ்ந்த இவர்களுக்கு 1947 ஒரு குழந்தை பிறந்து, இறந்தது. அதன்பிறகு குழந்தைப்பேறு இல்லாமல் போனது. வறுமையிலும், துன்பத்திலும் ஒன்றாக வாழ்ந்த இந்தத் தமிழிசைக் குடும்பத்தினர் உலகக் குழந்தைகளைத் தம்குழந்தைகளாக எண்ணி வாழ்ந்தனர்.

ப.சுந்தரேசனார் வாழ்ந்த பேட்டை நாணயக்காரத்தெருவில் வாழ்ந்தவர்கள் பலரும் சைவசமயச் சார்பும், இசையறிவும் பெற்றவர்களாக இருந்தனர்.எனவே இவருக்கு இயல்பாகவே இசைச்சூழல் வாய்த்தது.இவர்தம் வீட்டருகே தேவாரப் பாடசாலையும்,சைவச்சார்புடைய மடத்துத் துறவியர்களின் தொடர்பும் அமைந்ததால் சைவத்திருமுறைகள்,சாத்திர நூல்களில் இவருகுப் பயிற்சி ஏற்பட்டது .தமிழ் ,தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் மொழிகளையும் அறிந்தார்.

ப.சுந்தரேசனார் அவர்கள் சிலப்பதிகாரம்,திருமுறைகள்,சிற்றிலக்கியங்கள் இவற்றில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதபடியான இசைப்பயிற்சி பெற்றவர்.இந்நூல்களின் பாடல்களை இவர்வழியாகக் கேட்கவேண்டும் என்று அறிஞர்கள் புகழும் வண்ணம் பேராற்றல் பெற்றவர்.ஓவ்வொரு ஊராகச் சென்று பெரியபுராணம், திருவிளையாடல்புராணம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களைப் பாடி விரிவுரை செய்தவர்.மூவர் தேவாரத்தை முறையுறப் பாடி அதில் அமைந்துகிடக்கும் பண்ணழகையும்,பண்ணியல்பையும் எடுத்துக்காட்டுவதில் வல்லவர். குமரகுருபரரின் தொடுக்கும் கடவுள் பழம்பாடலை இவர் குரலில் கேட்கத் தமிழையின் ஆற்றல் விளங்கும்.இவர்தம் பண்ணாராய்ச்சித் திறம் அறிந்தோர் இவருக்குப் பண்ணாராய்ச்சி வித்தகர் என்னும் சிறப்புப்பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளனர்.

ப.சுந்தரேசனார் அவர்களின் இசையில் ஈடுபாடுகொண்ட அன்பர்கள் பலரும் பல ஊர்களில் இவரை அழைத்துத் தொடர் சொற்பொழிவாற்ற வேண்டினர்.அவ்வகையில் ஆடுதுறையில் 1946 இல் அப்பர் அருள்நெறிக்கழகம் ஏற்படுத்தப்பட்டுத் தொடர் இசைப்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன.ஆடுதுறை திரு வைத்தியலிங்கம் அவர்கள் இப்பணியில் முன்னின்றார்.நாகைப்பட்டனத்தில் அந்நாள் வாழ்ந்த கவிஞர்கோ கோவை.இளஞ்சேரன் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பெற்ற நாகைத்தமிழ்ச்சங்கத்தில் ப.சுந்தரேசனார் சிலப்பதிகாரத்தை மாதந்தோறும் சொற்பொழிவாக நிகழ்த்தி அப்பகுதியில் தமிழிசை ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தினார். குறிப்பாக அனைவராலும் புறக்கணிக்கப்படும் சிலம்பின் அரங்கேற்று காதை அனைவராலும் விரும்பும்படி நடத்தப்பட்டத்து.

1949 முதல் 1952 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பு இசையாசிரியராகவும்.1952சூலை முதல் 1955 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவார இசை விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபொழுது இவர் அங்கிருந்து சிலரால் வெளியேற்றப்பட்டார்.அதன்பிறகு சிதம்பரம் சென்றாலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகழகத்தின் பக்கம் செல்வதில்லை.பணியிலிருந்து வெளியேறிய ப.சுந்தரேசனார் பல ஊர்களுக்கும் சென்றுபள்ளி, கல்லூரி, கோயில்கள்,இலக்கிய அமைப்புகளில் இசைச்சொற்பொழிவு செய்து வறுமையோடு வாழ்ந்து வரலானார்.
பொதுமக்களிடம் இசையைக்கொண்டு செல்லும் பொழுது மக்கள் விரும்பும்வண்ணம் நகைச்சுவையுடன் உரையாற்றும் திறனில் வல்லவரானார்.மிகவும் அரிய செய்திகளையும் அனைவருக்கும் புரியும்படி எளிமையாக வெளிப்படுத்தியதால் இவர்புகழ் குமரிமுதல் வடவேங்கடம் வரை பரவியது. அருட்செல்வர் நா.மகாலிங்கனார்,நீதியரசர் செங்கோட்டுவேலனார் முதலானவர்கள் ப.சுந்தரேசனார் இசையில் திளைத்தனர். இவர்தம் அருமை அந்நாள் முதலமைச்சர்கர்களாக விளங்கிய கலைஞர் கருணாநிதி. ம.கோ.இராமச்சந்திரனார் முதலானவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன.

ம.கோ.இராமச்சந்திரனார் வள்ளுவர்கோட்டத்தில் இவர்தம் பாடலைக்கேட்டு வியப்புற்றார்.மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களால் சிலகாலம் தமிழிசை ஆய்வுக்குப் பணியமர்த் தப்பட்டுள்ளார்.
ப.சுந்தரேசனார் பெற்ற பட்டங்கள்.

ப.சுந்தரேசனார் அவர்களுக்கு விபுலானந்தரின் தொடர்பு கிடைத்ததும் சிலப்பதிகார இசையாய்வில் தோய்ந்தார். குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்பூதூர்(திருக்களம்பூர்) என்ற ஊரில் 1947 இல் நடைபெற்ற விபுலானந்தரின் யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் அடிகளார் வியந்து போற்றும் வண்ணம் ப.சுந்தரேசனார் அரியவகையில் யாழ்நூலின் சிறப்பினை விளக்கியபொழுது அடிகளார் வியந்து பாராட்டினார்.தாம் தொகுத்து வைத்திருந்த 103 பண்களின் பெர்களையும் தந்து இவற்றை விரிவாக ஆராய்ந்து பண்ணாராய்ச்சி செய்யவேண்டும் என வேண்டினார். அன்று முதல் ப.சுந்தரேசனார் விபுலானந்தர் வழியில் சிலப்பதிகார ஆய்வில் ஈடுபட்டார்.

சிலப்பதிகாரத்தின் இசையழகு விளங்கும் இடங்களைப் பாடிக்காட்டும் பொழுது தமிழக மக்கள் தங்களின் அரிய பெருஞ்செல்வம் கிடைத்துவிட்டதாக உணர்ந்தனர்.சமய நூல்களைப் பண்ணோடு பாடியதாலும் பழம் பண்களின் உண்மை வரலாற்றை எடுத்துரைத்ததாலும் ப.சுந்தரேசனார்க்குப் பல்வேறு சிறப்புகளைத் தமிழக மக்கள் செய்தனர்.அவருக்குப் பல்வேறு பட்டங்களை வழங்கி மகிழ்ந்தனர்.அவற்றுள் பண்ணாராய்ச்சி வித்தகர்(மதுரை ஆதீனம்).திருமுறைக் கலாநிதி(தருமையாதீனம்), ஏழிசைத் தலைமகன்(குன்றக்குடி ஆதீனம்),இசையமுது உள்ளிட்ட பட்டங்கள் குறிப்பிடத்தக்கன. பாவாணர் தமிழ்க்குடும்பம்(நெய்வேலி) என்னும் அமைப்பு இவரை உயர்வாகப்போற்றி மதித்தது.

ப.சுந்தரேசனார் எழுத்துப்பணிகள்

ப.சுந்தரேசனார் அவர்கள் தம் எண்ணங்களை அவ்வப்பொழுது கட்டுரையாகவும், நூல்களாகவும், சொற்பொழிவு களாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.ஆனால் இவை யாவும் முறையாகத் தொகுக்கப்படாமலும், பதிவுசெய்யப் படாமலும் போனமை தமிழர்களின் பேரிழப்பாகக் கருதவேண்டும்.பதிவுசெய்து வைத்துள்ள அன்பர்கள் அவற்றை வெளியுலகிற்குக் காட்டாமல் மறைத்து வைத்துள்ளமை அவை காணாத செல்வப்பட்டியலில் இணைந்துவிடுமோ என்னும் அச்சத்தை உண்டாக்குகிறது.ப.சுந்தரேசனார் அவர்கள் பாடியுள்ள பாடல்களை வைத்திருப்பவர்கள் புவிக்குள் கிடைக்கும் பொருள்கள் அரசுக்கு உரிமையுடையது என ஒப்படைப்பதுபோல் தமிழுலகிற்கு வழங்கவேண்டும்.இவ்வகையில் இலால்குடி (திருத்தவத்துறை) ப.சு.நாடுகாண்குழு அன்பர்கள் திருமுருகாற்றுப்படை,சிவபுராணம் உள்ளிட்ட ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளமைக்கு இத்தமிழ்கூர் நல்லுலகம் என்றும் நன்றியுடன் போற்றும்.

ப.சுந்தரேசனார் பாடியுள்ளனவாகப் பல ஒலிநாடாக்கள் பற்றிய விவரம் தெரியவருகின்றன.வெளிநாட்டுஅறிஞர் ஒருவர் பரிபாடல் என்னும் இலக்கியத்தைப் ப.சுந்தரேசனார் வழியாகப் பாடச்செய்து பதிவுசெய்துள்ளதை அறியமுடிகிறது.அதுபோல் வானொலி நிலையங்களில் அவர் பாடிய ஒலிப்பதிவுகள் இருக்க வாய்ப்பு உள்ளது. கோவைப்பகுதியில் ப.சுந்தரேசனார் அவர்களை அழைத்துப் பாடச்செய்த அன்பர்களிடமும் இருக்க வாய்ப்பு உண்டு.இன்னும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல அன்பர்களிடமும் இருக்கும் ஒலிநாடாக்களத் திரட்டி வெளியிடுவது தமிழுக்கு மிகப்பெரிய ஆக்கமாக அமையும்.ப.சுந்தரேசனார் அவர்களின் வழிவழி வாரிசுகளாகச் சிலரை உருவாக்கியுள்ளார் அவர்களுள் திரு.வைத்தியலிங்கம்,திரு.கோடிலிங்கம் குறிக்கத்தக்கவர்கள்.பல ஆண்டுகள் இவர்கள் ப.சுந்தரேசனார் அவர்களிடம் பாடம் கேட்டுள்ளதால் இவர்களிடம் ஆசிரியரின் சார்பு இசையைக்கேட்டு மகிழமுடியும்.

ப.சுந்தரேசனார் அவர்கள் நித்திலம் என்னும் ஏட்டிலும்,கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களின் தமிழர்நாடு என்னும் ஏட்டிலும் எழுதியுள்ளார்.இவர் பஞ்சமரபு(1975) நூலுக்கு உரைவரைந்தமையும் குறிப்பிடத்தக்க செயலாகும்.இவருக்குப் போதிய ஒத்துழைப்போ,ஊதியமோ அமையாததால் எண்ணியவாறு பல பணிகளைச் செய்யமுடியாமல் போனது.1.இசைத்தமிழ்ப்பயிற்சி நூல்(1971) திருப்பத்தூர்(முகவை)த்தமிழ்ச்சங்க இசைத்தமிழ் வெளியீடு 2.முதல் ஐந்திசைப்பண்கள்(1956) பாரி நிலையம், 3.முதல் ஐந்திசை நிரல், 4.முதல் ஆறிசை நிரல், 5.முதல் ஏழிசை நிரல் முதலான நூல்களை எழுதியவர். மேலும் ஓரேழ்பாலை,இரண்டாம் ஐந்திசை நிரல், இரண்டாம் ஏழிசை நிரல், பரிபாடல் இசைமுறை,பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை, இசைத்தமிழ்ப் பயிற்சி நூல்,இசைத்தமிழ் அகரநிரல், வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம்,சேக்கிழார் கண்ட இசைத்தமிழ், சமையக்குரவர்கள் கைக்கொண்ட இசைத்தமிழ், பெரும் பண்கள் பதினாறு, நூற்றுமூன்று பண்கள்,தாளநூல்கள் 1 முதல் 6 வரை, கடித இலக்கிய இசைத்தமிழ்க்குறிப்புகள்,இசைத்தமிழ்-தமிழிசைப்பாடல்கள்,இசைத்தமிழ் வரலாறு முதலான இவர்தம் நூல்கள் வெளிவராமல் போயின. மதுரையில் இவர் பணியின் நிமித்தம் விடுதியில் தங்கியிருந்தபொழுது மஞ்சள்காமாலையால் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.அன்பர்களின் உதவியால் திருச்சிராப்பள்ளியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஈரல்பாதிக்கப்பட்ட காரணத்தால் மருத்துவம் பயனளிக்காது என மருத்துவர் கைவிரித்தனர்.எனவே குடந்தையில் உள்ள ப.சுந்தரேசனார் இல்லத்தில்(கடைசி வரை வாடகை வீட்டில் வாழ்ந்தவர்) அன்பர்கள் இவருக்கு விருப்பமான திருவையாற்றுப் பதிகத்தில் இடம்பெறும் பாடல்களைப் பாட, அன்னாரின் உயிர் 09.06.1981 இல் பிரிந்தது.தமிழகம் எங்கும் இசைத்தமிழைப் பரப்பிய தமிழிசைத்தென்றல் குடந்தையில் அடங்கித் தமிழுலகம் மதிக்கும்வண்ணம் புகழ்வாழ்வு வாழ்ந்துவருகிறது.

இவர்தம் தமிழிசைப்பணியைப்போற்றும் வண்ணம் அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் ப.சுந்தரேசனார் மறைவுக்குப் பிறகு அவர்தம் மனைவிக்கு நிதியுதவி செய்தமை நன்றியுடன் குறிப்பிடத்தகுந்ததது.

ப.சுந்தரேசனார் அவர்களின் தமிழிசை குறித்த சில முடிவுகள்

1.தமிழ்மக்கள் இசையை உணர்ந்தது குழற்கருவிகள் வழியாகும்.
2.முல்லை நில மக்களே குழற்கருவிகளையும், யாழ்க்கருவிகளையும் கண்டுபிடித்தனர்.
3.முதலில் குழல்கருவி ஐந்து துளைகளைக்கொண்டிருந்தது. அதுபோல் ஐந்து நரம்புகள் கொண்ட யாழ் பயன் படுத்தப்பட்டது.
4.ஐந்து துளைகளின் வழியாக எழுந்த ஐந்து இசைகளே ஆதி இசையாகும்.
5.குழற்கருவி முந்தியது எனினும் யாழ்க்கருவியின் வாயிலாகவே இசை வளர்ச்சியுற்றது.
6.இசைத்தமிழில் முதல் இசைக்குப் பெயர் தாரம்.
7.முதல் ஐந்திசைபண்ணின் இசைநிரல் முதலியன 1.தாரம், 2.குரல், 3.துத்தம், 4.உழை, 5.இளி என்பன
8.முதற்பண்ணாகிய தாரம் என்பது ஆசான் எனவும், ஆசான்திறம் எனவும், காந்தாரம் எனவும் பல பெயர்களில் வழங்கின. இன்று மோகனம் என்று வழங்கப்படுகின்றது.
9.இரண்டாவது பண் குரல் பண் என்பது செந்திறம், செந்துருதி,செந்துருத்தி என முன்பு வழங்கப்பட்டு இன்று மத்தியமாவதி எனப்படுகிறது.
10.மூன்றாவதாகிய துத்தப்பண் இந்தளம்,வடுகு எனப் பண்டு பெயர்பெற்று இன்று இந்தோளம் எனப்படுகிறது.
11.நான்காவதாகிய உழைப்பண் சாதாளி எனப்பட்டு இன்று சுத்தசாவேரி எனப்படுகிறது.
12.ஐந்தாம் பண்ணாகிய இளிப்பண் தனாசி எனும் பெயர்பெற்று, இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது. 13.தென்னிந்திய இசைக்கு அடிப்படையான இசை பழந்திழகத்தில் வழங்கப்பட்ட இசையேயாகும்.
14. பழைய பண்முறைகள் இன்றளவும் தமிழ்நாட்டில் தேவாரங்களிலும்,திருவாய்மொழியிலும் மற்றும் பிற திருமுறைகளிலும் உள்ளன.


முனைவர் மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா
மின்னஞ்சல் : muelangovan@gmail.com
இணையம் : muelangovan.blospot.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்