‘நந்தகுமாரா நந்தகுமாரா:’ கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள்

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

தேவமைந்தன்



செந்தில்நாதன்(1), சிவத்தம்பி(2) ஆகியோர் தமிழில் சிறுகதையின் தேவை அறிந்துணரப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் தமது அறிவுழைப்பால் உலகச் சிறுகதை இலக்கணங்களை அலசி ஆராய்ந்து அவற்றின் பின்னணியில் வ.வே. சு. அய்யர், பாரதி முதலானோர் அந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்ட சிறுகதையையும் அதன் இலக்கண அடிப்படைகளையும் பன்முகங்களையும் சுவடிப் படுத்தினர்.

அவர்களைத் தொடர்ந்து பேராசிரியர்கள் பலர் சிறுகதை மற்றும் நெடுங்கதை வடிவங்களைக் குறித்துப் புத்தகங்கள் எழுதலாயினர். சற்றேறக்குறைய நாற்பதாண்டுகளுக்குமுன் புதுமைப்பித்தனின் ‘துன்பக் கேணி'(3) போன்ற கதைகளின் அளவைக் குறித்துப் பயன்படுத்திய ‘நெடுங்கதை’ என்ற சொல்லுக்கு ஈடான ஆங்கிலச் சொல்லாக ‘novella’ இருந்தது. நாகரத்தினம் கிருஷ்ணா ‘வணக்கம் நண்பர்களே!’ என்ற தன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் பிரெஞ்சில் ‘nouvelle’ ‘ஒருவகை சுருக்கமான இலக்கிய’க் கட்டுரைதான். இருப்பினும், ‘éditions de la connaissance’ இன் பதிப்பான பிரஞ்சு ஆங்கில அகராதியில் – நா.கி. தெரிவிப்பதுபோல் இலங்கைத் தமிழர் சொல்லும் ‘தகவல்’ அல்லது ‘செய்தி’ ‘nouvelle’க்குப் பொருளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘nouvelle’க்கு – அடுத்த பொருள் ‘சிறுகதை’ என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.(4) சான்றுகளாக, இத்தொகுப்பில் உள்ள ‘மொரீஷியஸ் கண்ணகி’யைச் சிறுகதை என்றும்; ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ கதையை நெடுங்கதை என்றும் சொல்லலாம். கதை சொல்லல்(narration)தான் அளவு அடிப்படையாக நெடுங்கதையையும் சிறுகதையையும் வேறுபடுத்துகிறது. ஆறரைப்பக்கங்கள் அச்சில் வருகின்ற அளவு சிறுகதையான ‘மொரீஷியஸ் கண்ணகி’ கதைசொல்லப்படுகையில், இருபத்திரண்டு பக்கங்கள் வருமளவு நெடுங்கதையான ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ கதைசொல்லப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

“ஒரு தேர்ந்த கதைசொல்லியாக என்னை உருவாக்கிய பெருமை அனைத்தும் பிரெஞ்சு படைப்புலகம் சார்ந்தது என்று எனது படைப்புகளை படிப்பவர் எவரும் முடிவுக்கு வரக்கூடும்” என்கிறார் நா.கி. மேம்போக்காகப் படிக்கும் பொழுதுதான் அப்படியான முடிவுக்கு வரமுடியும். வாசிப்புக்கும் மறுவாசிப்புக்கும் நா.கி. அவர்களின் இத்தொகுப்புக் கதைகளை உட்படுத்தும்பொழுது, நா.கி.’யின் கதைபுனையும் திறன்(skill) மட்டுமே பிரெஞ்சுப் படைப்புலகம் சார்ந்தது என்றும், அவர்தம் தேர்ந்த கதைசொல்லலைக் ‘குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள்’ என்று நம்பிய காலத்திலிருந்தே வாழ்க்கை ஏட்டுக்குள் பொந்தி வைத்தது – இந்தியத் தமிழ்நாட்டின் திண்டிவனம் வட்டம் ஒழிந்தியாப்பட்டின் அருகில் உள்ள கிராமத்து மண்ணும் மக்களுமே என்றும் இக்கட்டுரையாளர் சிந்தையுள் தோன்றுகிறது. இம் முடிபுக்கு(finding) ‘நந்தகுமாரா நந்தகுமாரா’ தொகுப்பிலுள்ள கடைசிக்கதையான ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்”-ஆகவும் பொருத்தமான சாட்சியம் ஆகும்.

பிரெஞ்சுப் படைப்புலகத்துக்கு மிகவும் உரியவையான குறியீட்டியமும்(symbolisme) ஆழ்மனவெளிப்பாட்டியமும்(surréalisme) கீழைத்தேயங்களுக்கேயுரிய தொன்மத்துடன்(myth) ஒன்றியும் உறழ்ந்தும் கலந்து நா.கி.யின் படைப்புகளில் வெளிப்படுகின்றன. ‘எமன் – அக்காள் – கழுதை’ சிறுகதை இதற்குச் சரியான சான்று. மேற்படிக் கலவையின் எதிர்மறையான சான்று என்றும் இக்கதையைக் கூறலாம். ஏனென்றால், இதில் வரும் ‘அக்காள்'(5) எமன் ஏறிவரும் எருமைக்கிடாவையும் கழுதைக் கிடா என்றே சாகுமுன்/எமனுடன் போகுமுன் சாதிக்கிறாள். அதற்குக் காரணமான அவள் ஆழ்மனப் பாதிப்பை நா.கி.(பக்.41-43) மிக நுட்பமாகச் சித்தரித்திருக்கிறார். சலவைத் தொழிலாளி முருகேசனின் முறைப்பாட்டுக்கு ‘அக்கா’ளின் தந்தையார் பஞ்சாட்சர நாயக்கர், “பத்து ரூபாயை விட்டெறிஞ்சி, போடா போய் வேலையைப்பாருண்ணு அவனைத் துரத்தியதும் தப்பில்லை, ஆனால் துரத்திய வேகத்தில் அக்காளைப் பார்த்து “பொட்டைக் கழுதைக்கு கொஞ்சம் அடக்கம் வேணும்” என்று சொல்லாமலிருந்திருக்கலாம்..” என்பதிலும் ஒரு மென்மையான கோரம் கரைந்திருக்கிறது.

மேற்படிக் கலவையின் உடன்பாடான சான்றாக, ‘அம்மா எனக்கொரு சிநேகிதி ‘ கதையைச் சுட்டலாம். இந்தக் கதைப்பாத்திரங்களோடு ‘ஓர் அசாதரணமான மௌன’மும் கதைப்பாத்திரமாகக் கலந்துள்ளது. கர்ணன்பால் குந்திதேவி கொண்டிருந்த வேறுபாடான தாயன்பை இக்கதையில் வரும் அம்மா கொண்டிருக்கிறார். இதில் அம்மாவுக்கும் மகனுக்கும் ஏற்படும் இருபதாண்டு இடைவெளி, குந்திக்கும் கர்ணனுக்கும் ஏற்பட்ட இடைவெளியைப் போலவே உள்ளது. குறியீட்டு நிலையில் வைத்து நோக்கினால்தான் இது புலப்படும். கதையடிப்படையில், கர்ணன் – மகன், குந்திதேவி – அம்மா கதைமுடிவு, முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. படைப்பாளர் ஒருவர் இதையெல்லாம் சிந்தித்து இவ்வாறு படைக்க வேண்டும் என்பதில்லை. அவருடைய ஆழ்மனத்தில் தைத்து, மறைவாக இயக்கம் கொள்ளும் தொன்மப் பதிவு இதைச் சாதித்துக் காட்டிவிடும். அம்மா தனக்கொரு சிநேகிதி என்று இக்கதையில் வரும் மகன் நம்பினாலும், அம்மா – தான் அவனுக்கு அம்மா என்றே உணர்வு நிலையிலும் சாதித்துவிட்டு மறைகிறார். “குந்திக்கு நேர்ந்ததுபோல என் மார்பு நிறைய அன்பு”(ப.31) என்றுதன் கடைசிக் கட்டத்தில் அவர் கூறுவது இதை மெய்ப்பிக்கும். அந்தியூரில்(கோவை மாவட்டம்), கதைசொல்லியொருவர் பாரதக் கதை சொல்லுவதில் தேர்ந்தவராயிருந்தார். அவர் இந்தக் கட்டம் குறித்துச் சொல்லுகையில், “கர்ணன் தன் மகனென அறிவிக்கக் குந்தி எத்தனிக்கும் முன்பே அவள் தாய்ப்பால் அறிவித்துவிட்டது. நாகாத்திரம், அவன் அதை அறியக் காரணம் ஆயிற்று. அருச்சுனன்மேல் ஒருமுறைக்குமேல் அந்த அத்திரத்தைப் பிரயோகிக்கலாகாது என்று கண்ணன் தன் உள்ளத்துள் கொண்ட தீர்மானமே, குந்தியிடமிருந்து தாய்ப்பால் வெளிப்பட்டுக் கர்ணன் முகம் தீண்ட ஏது ஆயிற்று” என்று சொன்னது நாற்பதாண்டுகளுக்குப் பின்னும் என் செவிகளில் ஒலிக்கிறது. ‘அம்மா எனக்கொரு சிநேகிதி,’ ‘அக்கினிகாரியம்,’ ‘அப்பா படிச்சுப் படிச்சு சொன்னார்,’ ‘எமன் – அக்காள் – கழுதை,’ ‘குஞ்சுபொரிக்கும் மயிலிறகுகள்,'(6) ‘நந்தகுமாரா நந்தகுமாரா'(7), ‘சாமி – பெரிய சாமி,’ ‘தாண்டவராயன்'(8), ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ ஆகிய கதைகள் – நா.கி. “வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தமிழ் மண்ணிலும் மறுபகுதியை பிரெஞ்சு மண்ணிலும் செலவிட்டுள்ள”(9) போதும், இவர்தம் ஆழ்நெஞ்சின் வேர்கள் தனக்கே சொந்தமானதும் பூர்விகமானதுமான அடையாளத்தைத் தேடுவதில்தான் ஊன்றியுள்ளன(10) என்பதைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.

“சொந்த மண்ணிலும், வந்த மண்ணிலும் தன்னை நிறுத்தி வதைபடும் என்னுள் உள்ள ‘வேறொருவன்’ பார்த்த அல்லது பங்கீடு செய்துகொண்ட சாட்சிகளை சார்பற்று சொல்லியிருக்கிறேன். எத்தனை நாளைக்குச் சுமப்பது? இறக்கி வைக்கவேண்டுமில்லையா? இறக்கிவைத்திருக்கிறேன்”(11) என்று நா.கி. சொல்கிறார். புலம்பெயர்வோர் காணும் கனவுகள், தங்களின் சொந்த மண் குறித்ததாகவே பெரும்பாலுமிருக்கும் என்றும், காட்சிகள் வேறுபட்டாலும் களங்கள் தம் புலத்தைச் சார்ந்தவையாகவே இருக்கும் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

அடுத்தடுத்த வீடுகளில் நிகழும் நிகழ்வுகளைச் சித்தரிப்பதான கதை, ‘38,39,40 – புல்வார் விக்தோர் யுகோ.’ சொந்த மண்ணின் வாழ்க்கை பகட்டாக இல்லை(ப.8) என்று வேர்களைத் துறந்து, தங்களைத் தாங்களே தங்கள் சொந்த மண்ணிலிருந்து பிடுங்கிக் கொண்டு, அன்னிய மண்ணில் தங்களை நட்டுக் கொள்ள முயன்றவர்களின் பிள்ளைகள் அடையும் பின்னடைவு(12), புலம்பெயர்ந்த கறுப்பின மக்கள்(13), அரபு மக்கள்[அரபினர்மேல் கடும் வெறுப்பு ப.6], புதுச்சேரித் தமிழர்கள்(14) வியத்னாம் மக்கள்(15) ஈழத்துத் தமிழ் மக்கள்(16) ஆகியோர் இந்தக் கதையில் நம் மனக்கண் முன்னே பலவகைகளில் சுயமிழந்து நொந்து நூலழிந்து போகிறார்கள்.

அறிவியல் கதைகள்(scifi) இரண்டு, இத்தொகுப்பில் உள்ளன. ‘அமலா..விமலா..கமலா,’ ‘ஆப்பரேஷன் மகா சங்காரம்’ என்பவையே அவை. முதல் கதையில், அசுரத்தனமான அறிவுபடைத்த கிழவரை அபத்தமானவர் என்று நினைக்கிறான் ‘பயோ கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் செய்யும்’ சுந்தரம். 1997இல் – முதல் குளோனிங் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்த டாக்டர் வில்மட், தன்னை முழுதாக ஏமாற்றியவர்; அவர் சாதித்தவை எல்லாமே தன்னுடைய உழைப்பு என்று அவர் சொல்லும்பொழுதும் “அதோ அந்த அறை முழுக்க எனது இருபது ஆண்டு கால உழைப்பிருக்கிறது. எல்லாமே டீ.என்.ஏ., ஆர்.என்.ஏ. பற்றிய சுவாரஸ்யமான சங்கதிகள்” என்று காட்டும்பொழுதும் அவன் நம்பவில்லை. திருமணமானவுடன், அவன் அவரைச் சகித்துக்கொண்டதற்கு ஒரே காரணமாகிய அவர் மகள் – அமலா மட்டுமல்ல, விமலா – கமலாவும்தான் என்று அறிய வரும்பொழுதுதான் அவனுக்கு உறைக்கிறது;
அதிர்ச்சியே மேலிடுகிறது. குளோனிங்கில் தொடங்கும் கதை, ‘ரீஜெனெரேஷன்’ என்று தொடர்கிறது. இரண்டாம் கதையான ‘ஆப்பரேஷன் மகா சங்காரம்,’
இலெமூரியாக் கண்டம் துண்டாடப்பட்டதுமுதல் சுனாமி என்னும் ஆழிப்பேரலை வரை எல்லாமே சிறு சிறு ‘புரொக்ராம்’கள்தாம்… உலகமனைத்தும் ஒரே காலத்தில் அழிவதற்கான ஏற்பாடுகளை ‘மகா சங்கார’த்துக்கான ‘புராஜக்ட்’டைச் சிலர் செய்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் கிளுகிளுப்பு கலந்து சொல்லியிருக்கிறார் நா.கி.

பெண்மேல் ஆழமான வெறுப்பு, மனநோய்போல் மாறும்போது அதை ‘misogyny’ என்பார்கள்.(17) இந்தத் தொகுப்பின் தலைப்புக்குரிய கதையான ‘நந்தகுமாரா நந்தகுமாரா’வும் ‘அப்பா படிச்சுப் படிச்சு சொன்னா’ரும் அத்தகைய கதைமாந்தரான ஆண்களைக் கொண்டவை. பெண்ணின் ஐரோப்பிய ஆணவத்தால் மனமுடையும் ஆணான நந்தகுமாரன் தவறான முடிவுக்கு வரும்பொழுது, தன்னின உறவை நெடுநாளாகத் தொடர்ந்திருந்தும் இவனுடன் நான்காண்டுகள் உறவுகொண்டு கருத்தரித்திருக்கும் ஐரோப்பியப்பெண் தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையை, தோழியுடன் தான் ஏலவே செய்திருக்கும் முடிவுக்கு மாறாக, இவனுடன் தான் சேர்ந்தே வளர்க்கத் தீர்மானித்திருப்பதாக – தன் ஓரினஉறவுத் தோழியிடம் சொல்கிறாள். புதுச்சேரியிலிருந்து பிரான்சுக்குப் போய் வாழும் நந்தகுமாருக்கு மனதிடம் இல்லாமல், பொறுமையாக அவளிடம் அமர்ந்துபேசத் திராணியில்லாமல் போனதற்கு சித்தியுடனான அவனது இளம் வயது அதிரடி அனுபவம் காரணமாக இருக்கலாம்.(18) ‘அப்பா படிச்சுப் படிச்சு சொன்னார்’ கதை கொஞ்சம் வித்தியாசமானது. அரசுப் பணி நிரந்தரம் என்று நம்புகிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. முதுகில் எலும்பில்லாததுகளே கடைசிவரை நீடிக்கும் அவலம் இதில் ‘அறைய’ப்பட்டிருக்கிறது. அரசுப் பணியைப் போராட்டத்தால் இழந்து தன்மானத்துடன் வாழும் ‘அவர்,’ தன் மனைவியும் தொடர்ந்து தன்னைச் சொற்களால் தாக்கிக் கேவலப்படுத்துவதைச் சகித்துக் கொண்டே வருபவர். ஒரு நாள், “திண்டிவனத்தைக் குறுக்கும் நெடுக்குமாக அளந்துவிட்டு(19) வீட்டை அடைந்தபின், வழக்கத்துக்கும் அதிகமாகப் பேசுவதுடன் அவரது ஆண் தகைமையையும் (பௌருஷம்)(20) அவர் மனையாள் தாக்கத் தொடங்குகிற போது கொதித்துப் போகிறார். அப்பா அவரை அவர் இளம்பருவத்தில் எச்சரித்த சொற்கள் நினைவுக்குள் கனலுகின்றன.(21) இதன் பிறகு கதையில் வரும் எட்டுப் பத்திகள், நீங்களே படித்துக்கொள்ள வேண்டியவை.(ப.37)

‘மொரீஷியஸ் கண்ணகி’ கதையில் காப்பியில் கலக்கும் சர்க்கரைக்கட்டிகூட ஒரு குறியீடாகி, திடமானதும் தீர்க்கமானதுமான முடிவைக் கண்ணகி என்கிற கதாபாத்திரம் மேற்கொள்ளுவதற்கான காரணியாகவும் மாறுகிறது. “கண்ணகி..உட்கார். அமைதியாகப் பேசித் தீர்க்கலாம்” என்பவனுக்கு, “இல்லை. நான் சர்க்கரைக்கட்டி இல்லை கரைந்திட மாட்டேன். கண்ணகி. மொரீஷியஸ் கண்ணகி. எழுந்து நிற்பேன். மதுரையை எரிக்கும் ரகமில்லை. கோவலனை எரிக்கும் ரகம்” என்று உறுதிப்படுத்த “கைப்பையிலிருந்த ஒரு சின்னத் துப்பாக்கியை எடுத்தாள்” என்று கதை முடிகிறது. நா.கி.’யின் ‘நீலக்கடல்’ தேவானி/தெய்வானை, நினைவுக்குள் நுழைந்து பேருரு எடுப்பதை இவ்விரண்டிலும் ஆழ்ந்தவர்கள் தவிர்க்கஇயலாது.

‘பிறகு’ என்ற கதை, ஓர் ஈழத் தமிழ்ப் பெண் தனது தமக்கையின் இரண்டு பிள்ளைகளுக்காக எடுக்கும் அழுத்தமானதும் தீர்க்கமானதுமான தீர்மானத்தையும்; அவள் ஒவ்வொரு முறையும் அதைச் சொல்ல வரும்பொழுது முழுமையாய்க்கூட அதைக்கேட்காத புதுச்சேரித் தமிழனின் அவசர புத்தியையும் மென்மையாக அலசிக் காட்டியிருக்கிறது.

பிரஞ்சிலக்கியப் படைப்பாளிகளின் உத்தியொன்றை நா.கி. பின்பற்றுவது, இரண்டு கதைகளில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. முதலாவது, ‘மொரீஷியஸ் கண்ணகி.’ அடுத்தது, இத்தொகுப்பைப் பெருமைப்படுத்துகிற ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ என்கிற கடைசிக்கதை. ‘டிஜிட்டல் காமரா’ போல – நாள், நேரத்தைப் பதிவு செய்யும் உத்தியே அது. 10-1-1994 10 மு.ப.; 11-1-1994 08 மு.ப.; 30-1-1994 10 மு.ப.; 20-2-1994 11 மு.ப.; 15-10-1994; 06-11-1994 ஆகிய நாள் நேரங்களில் ஒழிந்தியாப்பட்டுக்கு நாலு கல் தள்ளியுள்ள கிராமத்தில், அரை ஏக்கர் நஞ்சையொன்று தொடர்பாக, வந்துவிட்ட இந்தியச் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும், அதன் வெள்ளிவிழாக் காலத்தும், வரப்போகும் இந்தியச் சுதந்திரத்தின் வைரவிழாவின் பொழுதும், விபத்தில் இறந்துபோன ராமசாமியின் பாட்டன் கோவிந்தசாமி/ தந்தை சின்னசாமி/ பார்வதியின் புருசன் ராமசாமி/ ராமசாமியின் வம்சாவளியினரில்(22) எவரேனும் ஒருவர் அடையக்கூடிய நியாயமான ஆசையின் பரிணாமம் மிகவும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பார்வதியின் புருசன் ராமசாமியைச் செயற்கை கொண்டுபோனது; பார்வதியை எவ்வெவ்வாறோ சேர்ந்துவிட்ட அரை ஏக்கர் நஞ்சையை(23) இயற்கை கொண்டு போகிறது. ராமசாமியின் அநியாயமான இறப்பிலிருந்தும் ஆதாயம் பார்த்த மருத்துவமனை – காவல்துறை ஆள்களுக்குப் படியளக்கவும், அவர்கள் வாழும்போதே வாய்க்கரிசிபோடகவும் உடனடியாக உதவி, போக்கியமாகக் கொண்டு கடன்கொடுத்த காசாம்பு முதலி அதில் பயிரிட்டிருந்த ஒரு போகம் பயிருடன் ஏரியுடைந்து வெள்ளக்காடாகிக் கொண்டுபோனது – இயற்கை. இப்பொழுதெல்லாம் புதுச்சேரி – திண்டிவனம் பாதையில் காரோட்டுபவர்கள், மக்கள் மேல் தாங்கள் ஓட்டும் வண்டி பட்டுவிடும் நிலைகூட ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சும் நிலை வந்து விட்டதன் உண்மையான காரணத்தை இந்தக்கதை உணர்த்துகிறது.

‘நந்தகுமாரா நந்தகுமாரா’ தொகுப்பு, நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் சிறுகதைகளைக் கொண்டுள்ளது என்பதை சிறுகதை ஆர்வலர்கள் வாசித்துப் பார்த்தால் உணர்ந்து கொள்வார்கள்.
********
அடிக்குறிப்புகள்:
1. செந்தில்நாதன்,ச., தமிழ்ச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. 1967.
2. சிவத்தம்பி, கா., தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரிநிலையம், சென்னை, 1967.
3. முதற்பதிப்பில் 38 பக்கங்கள்.
4. nouvelle f piece of news; short story. dictionnaire: français/anglais: anglais/ français. éditions de la connaissance. 1995. pg.126.
5. பெயர், கதை முழுதும் தெரிவிக்கப்படவில்லை; ஆனால் அவள் பெற்றோர் – உற்றார் உறவினர் – எதிரிகள் ஒவ்வொருவரும் பெயர் குறிப்பிடப்படுகின்றனர்.
6. இது, வகைமாதிரிச் சான்று.[typical example]
7. சித்தியின் பாதிப்பு, அவனைப் பிரான்சிலும் விடவில்லை. – பக்.67, 69.
8. “எதற்காக ‘என்னுடைய’ அடையாளத்தின் மீது குறிவைக்கிறாள்? முடியுமா? என்னை, என் பிரதியை வயிற்றில் சுமந்து கொண்டு? நான் இல்லை என்றால் எப்படி? – நினைக்க நினைக்க ஆத்திரம்.” ப.107.
பிரான்சுக்குப் புறப்படும்போது, அவனது தாத்தா தாண்டவராயப் பிள்ளை கசந்துபோய்க் கேட்டவை. பக்.107-108. “தாத்தா சொன்னது உண்மையா? இழப்புகளுக்குப் பழகிக் கொண்டோமா?” ப.108. “…இறுதியாகப் பதிவேட்டில் குழந்தை பிறந்த நேரத்தை எழுதி முடித்து பெயரினைக் கேட்டபோது, இவன் சொன்னான்: / தாண்டவராயன்.” ப.109.
9. கடைசி அட்டைப் பக்கம்.
10.”இதைத்தான் திரும்பத் திரும்ப சொல்றீங்க. நீங்க வரலைண்ணு யாரங்கே அழுவறாங்க”
“சொந்தமண் நினைவுகள் என்பது ஜீவாத்மா பரமாத்மா உறவு மாதிரி. ஜீவாத்மாவை யாரும் அழைக்க வேண்டியதில்லை. அதுவாகத்தான் தேடிப்போகும்.”-குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள், ப.53.
11. வணக்கம் நண்பர்களே!, ப.4
12. “இவனைப் போலவே உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை படித்திருந்த எதிர்வீட்டுப் பையனுக்கு சுலபமாய் வேலை கிடைக்கிறது. அவன் பெயர் கியோம். இவன் பெயர் ரஷீத்.” – ‘38,39,40 ‘புல்வார் விக்தோர் யுகோ,’ ப.10.
13. ஆப்பிரிக்கப் பொடியனும் வெள்ளைப் பெண்ணும் பண்ணும் செயல். – ‘38,39,40 ‘புல்வார் விக்தோர் யுகோ,’ ப.9.
14. புதுச்சேரித் தமிழர்களையும் கறுப்பினமாகப் பார்க்கும் வெள்ளை மனப்பான்மை ப.12; பிரான்சில் வாழும் புதுச்சேரித் தமிழர்களுக்குத் தமிழில் பேசப் பிடிக்காது. – கதை: ‘பிறகு..’ ப.117.
15. எதற்கும் தளராத மரியம் என்கிற வியத்னாம் அம்மையார் தனது அப்பார்ட்மெண்ட்டின் படிக்கட்டுகளின் இடைவெளியிலிருந்த கூடத்தில் ஆப்பிரிக்கப் பொடியனும் வெள்ளைப் பெண்ணும் பண்ணும் செயலை எதிர்த்ததால் உயிரோடு எரித்துக் கொல்லப்படும் நிகழ்ச்சி ப.14.
16. அறுபது வயதான சந்திரானந்தம் மாஸ்டருக்கேற்பட்ட கொடுமை பக்.6-8: அவருக்கும் ஏற்படும் ஆறுதல்! – “காது மடலுக்குக் கீழே, பிடறியில் நமைச்சல் தணிந்திருந்தது. தலையணையைக் கொஞ்சம் உயர்த்திப் போடச்சொல்லிக் கேட்டு ஒருக்களித்துப் படுத்தார்.” ப.14.
17. misogyny=பெண்மேல் வெறுப்பு. பிரெஞ்சில் misogyne mf = misogynist. தொடர்புடைய சொற்கள்: misogamy =திருமணத்தின் மேல் வெறுப்பு misandry=ஆண்மேல் வெறுப்பு.
18. நந்தகுமாரனுக்கான சித்தி, பத்துத் தலைகளும், கருகருவென்ற புருவமும் பெரிய கண்களும், மூன்று வாய்களும் தொங்கும் நாக்கும், இரண்டு கால்களுமாய் கறுப்புச் சரீரத்துடன் தமிழ்ப் பஞ்சாங்கங்களில் வருகின்ற மகர சங்கராந்தி புருஷ ஸ்த்ரீ ரகம். துர்த்தேவதை. அவள் ராச்சியத்தில் அவனப்பா செய்ததெல்லாம் சேவகம்தான். அந்தச் சேவகத்தின் சூட்சுமம் அவளது பெரிய மார்புகளில் இருப்பதை ஒரு மழைநாளில் அவன் அறிந்திருக்கிறான்…… ப.67.
19. “திண்டிவனத்தில் அவரை அறிந்தவர்கள் அரசாங்க ஜீப்பில் பயணித்தே அவரைப் பார்த்திருக்கின்றார்கள். ப.35.
20. இந்தச் சொல்லை நா.கி. பயன்படுத்தவில்லை. ‘பௌருஷம்’ என்ற தலைப்பில் த. ஜெயகாந்தன் சிறுகதை உள்ளது. அதனால்தான் அடைப்புக்குள் இட்டேன்.
21. “எங்க.. அவங்கிட்டயா…வேண்டாம்டி. நான் மூர்க்கன். அப்பா படிச்சு படிச்சுச் சொன்னார். உங்களை நம்ப வேண்டாம்னு சொன்னார். அவரை மாதிரியே என்னையும் கொண்டுபோயிடாதே.” ப.37.
22. ‘ஆவளி’ என்றால் வரிசை; ‘வம்சாவளி’ என்பது பிழையல்ல; தீபாவளி போல வம்சாவளி. தீபங்களின் வரிசைபோல வம்சங்களின் வரிசை. அதேபோல, ‘கனவு'(dream state)க்கு மாற்று ‘நனவு'(reality)தான்; நினைவு(thought) அல்ல. ‘நினைவுகூர்தல்’ என்ற சரியான சொல்லையும் வாய்வந்தவழியே மேடைகளில் பேசி ‘நினைவுகூறுதல்’ என்று ஆக்கிவிட்டார்கள்.

********

புத்தகம்:

நந்தகுமாரா நந்தகுமாரா (சிறுகதைகள்)

ஆசிரியர்:

நாகரத்தினம் கிருஷ்ணா

பதிப்பகம்:

சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ்,
57 – 53ஆவது தெரு, அசோக் நகர்,
சென்னை – 600 083.
புத்தக அளவு: தெமி 1×8
பக்கங்கள்: 144. விலை: ரூ. 70/-
தொ.பே: 044 -24896979, 55855704
****
annan.pasupathy@hotmail.com
http://kalapathy.blogspot.com
http://360.yahoo.com/pasu2tamil

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்