மழை என்னும் மாபெரும் சக்தி – சரவணன் கவிதைத்தொகுப்பு

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

பாவண்ணன்



உலகின் தீராத அதிசயங்களில் ஒன்று மழை. மழையின் இசை அதைவிட அதிசயமானது. சில சமயங்களில் மத்தளம் போல முழங்கும். இன்னும் சில சமயங்களில் கம்பி வாத்தியங்களின் அளவான இசையைப்போல மிதந்துவரும். ஓசையே எழுப்பாமல் ஈரத்துளிகளைத் து¡வியபடி அது படர்ந்து நிறையும் கணம் இசையின் ஆதிநிலை அல்லது இறுதிநிலையின் அடையாளமாக விளங்கும். ஒவ்வொருவருடைய மனத்திலும் ஒவ்வொரு விதமான எண்ண அலைகளை எழுப்புகிறது மழை. மழையைக் கண்டதும் மனிதன் நிகழ்த்தும் எதிர்வினை முழுக்கமுழுக்க அவன் அகம் சார்ந்தது. அவன் மனம் ஆனந்தத்தில் நிரம்பிவழியும்போது மழையையும் ஆனந்தமழையாக மாற்றிப் பார்க்கிறான். அவன் நெஞ்சில் துயரம் குடிகொண்டிருக்கும்போது மழையும் துயரத்தின் சாயலை ஏற்றுக்கொள்கிறது. மனத்தின் குமுறல் மழைமீது சாபமாகவும் சில சமயங்களில் படிந்துவிடுகிறது. ஆனந்தம், துக்கம், குமுறல் எல்லாமே மனித அகத்தின் உணர்வுகள். ஒரு தாய் போல இவையனைத்தையும் குழந்தைவிளையாட்டுகளாக ஏற்றுக்கொள்கிறது மழை. கருணையைத் தவிர வேறு எதையும் அறியாத மாபெரும் சக்தி மழை. மழைக்காலப் பாடகனாக தன்னை உருவகித்துக்கொள்ளும் இளம்கவிஞரான சரவணன் வெவ்வேறு மழைச் சந்தர்ப்பங்கள் தனக்குள் எழுப்பிய அனுபவங்களை சின்னச்சின்ன கவிதைகளாக எழுதிப் பார்த்திருக்கிறார். 56 கவிதைகள் கொண்ட தொகுப்பாகவும் அது மலர்ந்திருக்கிறது. எல்லாமே ஏதோ ஒரு காட்சியை முன்வைத்து மேலெழத் துடிக்கின்றன. மொழியைக் கையாள்வதில் அவருக்கிற எச்சரிக்கை உணர்வும் சித்தரிப்பில் அவர் காட்டுகிற கவனமும் அவர்மீது மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்குகிறது.

தொகுப்பின் சிறந்த கவிதைகளில் ஒன்று ”மழைநீரோடை”. மழைநாளில் நிகழ்ந்துவிட்ட ஓர் இறுதி ஊர்வலத்தைப்பற்றிய சித்தரிப்பாக இக்கவிதை முன்வைக்கப்படுகிறது. மழை ஓய்ந்து வழியெங்கும் ஓடைபோல மழைநீர் ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில்தான் அந்த ஊர்வலம் செல்கிறது. உடலைச் சுமந்துசெல்பவர்கள் சடங்காக வழியெங்கும் பூக்களை உதிர்த்தபடி நடக்கிறார்கள். ரோஜா இதழ்களும் சாமந்தி இதழ்களும் எல்லா இடங்களிலும் இறைபட்டுக்கிடக்கின்றன. உதிர்ந்த பூக்கள் ஓடையென ஓடிக்கொண்டிருக்கும் மழைநீரிலும் உதிர்ந்து மிதக்கின்றன. சித்தரிப்பாளனுக்கு பூக்களின் இறுதிஊர்வலமாக ஒருகணம் அக்காட்சி தோற்றம் தருகிறது. ஊர்வலத்தின் இறுதியில் மெல்ல நடக்கும் அவன்முன் இப்போது இரண்டு இறுதி ஊர்வலங்கள் தென்படுகின்றன. ஒன்று உயிர்நீத்த மானுட உடலைச் சுமந்துசெல்லும் இறுதிஊர்வலம். இன்னொன்று உயிரிழந்த உதிரிப்பூக்கள் மிதந்துசெல்லும் இறுதிஊர்வலம். மானுடனின் மரணம் இயற்கையில் நிகழ்கிறது. பூக்களின் மரணம் மானுடனால் நிகழ்கிறது. மானுடவாழ்வு மகத்தானதுதான். ஆனால் அது மலரைப்போல இயற்கையால் எளிதில் கிள்ளியெடுக்கத்தக்கது. வாழ்வின் நிலையாமையை அல்லது அபத்தத்தை அக்கணம் உலகத்துக்கே உணர்த்தி நிற்கிறது. சரவணன் தன் எழுத்தில் தீட்டிக்காட்டியிருக்கும் அக்காட்சி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

“மழைநீர்” இன்னொரு முக்கியமான காட்சிக்கவிதை. மழைவிழத் தொடங்கிய தார்ச்சாலைதைக் காட்டுகிறது அக்காட்சி. இதில் மூன்று சித்திரங்கள் ஒன்றிணைக்கப்படுகின்றன. மழையின் பொழிவை ஒரு பொருட்டாகவே எண்ணாத காதல் ஜோடியொன்று உல்லாசமாக நனைந்தபடி இரண்டுசக்கர வாகனத்தில் பறக்கிறது. இது முதல் சித்திரம். மழையின் வருகைக்கு முன்னர் அந்தத் தார்ச்சாலையில் உட்கார்ந்திருக்கிறான் ஒரு பிச்சைக்காரன். மழையின் வருகையால் நனைந்துவிடக்கூடாது என்கிற பதற்றத்தில் அவன் அருகிலிருந்த பேருந்து நிழற்குடையின்பக்கமாக ஒதுங்குகிறான். இது இரண்டாவது சித்திரம். உட்கார்ந்த இடத்திலேயே பிச்சைக்காரனால் கைவிடப்பட்ட வாய்நெளிந்த பாத்திரத்தில் மழைநீர் நிரம்பத் தொடங்குகிறது. இது மூன்றாவது சித்திரம். மூன்று சித்திரங்களும் ஏன் இணைந்திருக்கவேண்டும் என்றுதான் முதலில் தோன்றுகிறது. வலிமை பொருந்திய இறுதிச்சித்திரத்தில் கவித்துவத்துக்குத் தேவையான உத்வேகம் நிறைந்திருக்கிறது. அதுமட்டுமே தீட்டப்பட்டிருந்தால்கூட நல்ல கவிதையாக எஞ்சியிருக்கக்கூடும். பிறகெதற்கு மற்ற இரண்டு சித்திரங்கள் என்ற கேள்வியையொட்டி நம் மனம் பதிலைத் தேடுகிறது. முதல் சித்திரத்தில் இடம்பெற்றிருக்கும் காதலர்கள் அடிப்படையில் இன்பத்தை விழையும் நெஞ்சமுள்ளவர்கள். மழையின் வருகை அவர்கள் இன்பத்தை துளியும் குறைப்பதில்லை. அதனால் மழையின் வருகை அவர்களுக்குப் பொருட்படுத்தத்தக்கதாக இல்லை. இரண்டாவது சித்திரத்தில் இடம்பெற்றிருக்கும் பிச்சைக்காரன் அடிப்படையில் பாதுகாப்பை விழையும் நெஞ்சமுள்ளவன். மழையின் வருகை அவனுக்கு விழக்கூடிய சில சில்லறைகளின் வரவைப் பாதிக்கிறது. அதனால் மழையின் வருகை அவனுக்கு உவகையளிப்பதாக இல்லை. மழையை அமுதம் என்று சொல்வார்கள். அந்த அமுதத்தை மனம்திறந்து ஏற்றுக்கொள்ள காதலர்களுக்கு மனமில்லை. பாதுகாப்பின்மையை முன்னிட்டு தவிக்கும் பிச்சைக்காரனுக்கும் மனமில்லை. ஆனால் மழை மனிதனைப்போன்றதல்ல. அது தெய்வத்தன்மை மிகுந்தது. வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்கிற பேதமோ அல்லது நல்லவர்கள், தீயவர்கள் என்கிற பேதமோ அதனிடம் இல்லை. எல்லாருக்கும் பொதுவானது மழை. மனமுவந்து ஏற்று உள்வாங்கிக்கொள்ளும் ஆவலோடு திறந்திருக்கும் நெஞ்சை அது நிரப்புகிறது. பிச்சைப்பாத்திரத்தில் நிரம்பித் தளும்புகிற மழை அழகான ஒரு புள்ளி. மழையைவிட மிகப்பெரிய பிச்சை இந்த மண்ணுக்கு எது இருக்கமுடியும்? எந்தச் செல்வத்தாலும் ஈடுகட்ட முடியாத மாபெரும் செல்வம் மழை. இயற்கையின் கருணைதான் இந்தப் பிச்சைக்குக் காரணம். மூன்று சித்திரங்களும் ஒன்றிணைந்து முன்வைக்கப்பட்டதற்கான காரணத்தை இப்போது நம்மால் எளிதில் புரிந்துகொள்ளமுடிகிறது. இந்த மழைக்காகத்தானே உலகப்பரப்பில் உள்ள மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காலமெல்லாம் ஏங்கித் தவிக்கிறார்கள். மண்ணில் மழைவிழுந்த பிறகுதானே விவசாயியின் முகத்தில் மலர்ச்சி படரத் தொடங்குகிறது. அதற்குப் பிறகுதானே அவன் தன் முதல் விதையை மண்ணில் து¡வத் தொடங்குகிறான். இப்படி எண்ணங்கள் பல திசைகளில் விரிவடைய இப்புள்ளி ஒரு தொடக்கமாக அமைகிறது.

மழைநீரையும் காதலையும் இணைத்துக் கட்டியெழுப்பும் சித்திரங்களைப் பல கவிதைகளில் முயற்சி செய்கிறார் சரவணன். உணர்வின் வேகமும் சொல்லின் வேகமும் காட்சி நேர்த்தியும் ஒரே கோட்டில் இணையும்போது மட்டுமே அந்தச் சித்திரத்தில் பிரகாசமான ஒளி படர்கிறது. “ஒரு துளி” கவிதையை பிரகாசம் படர்ந்த ஒன்றாகச் சொல்லலாம். காதலின் தவிப்பையும் துயரத்தையும் மிகவும் சொற்சிக்கனத்தோடு இக்கவிதை முன்வைக்கிறது. வீடுநோக்கி நடக்கும் பெண்ணொருத்தியின் சித்திரம்தான் கவிதையின் மையம். குளத்திலிருந்து நீரை அள்ளுவதுபோல அவள் இரண்டு கைகளாலும் உள்ளத்தை அள்ளிக்கொண்டு செல்கிறாள். வழிநெடுக விரலிடுக்குகளின் வழியே ஆணின் உள்ளம் வழிகிறது. வீட்டையடையும்போது உள்ளங்கையில் மீதமிருப்பது உள்ளத்தின் ஒரேஒரு துளிமட்டுமே. வழிந்துவிழாமல் நெஞ்சில் நுழைந்து இடம்பிடிக்கும் வழியறியாமல் அந்தத்துளி தவித்து நிற்கிறது. கதேயின் ஜெர்மானியக் காவியத்தில் எலுமிச்சைமரத்தடியே தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரைத் துறக்கிற இளைஞன் முதல் தாஸ்தாவெஸ்கி சித்தரிக்கும் காதல் கைகூடாத இளைஞன் வரை பலரிடமும் குடிகொண்டிருந்த அதே தவிப்பு. குறுந்தொகை, ஐங்குறுநு¡று என அகப்பாடல்கள் எல்லாவற்றிலும் பெ முச்சாக வெளிப்பட்ட அதே காதல் தவிப்பு. கவிதையை வாசித்துமுடித்ததும் அது முன்வைக்கும் தவிப்பில் தன்னையே முதலில் உணர்கிறது மனம். அதே சமயத்தில் அது முன்வைக்கப்பட்டிருக்கும் விதத்தில் ஒருவித பழகிய தன்மையையும் உணர்கிறது.

கண்களிழந்த காதலி குடியிருக்கிற கண்ணாடி ஜன்னல்கள்மட்டுமே உடைய வீட்டுக்கு முன்னால் நின்று தன் வருகையை அவளுக்கு உணர்த்தத் தெரியாத ஊமைக்காதலனின் தவிப்பை முன்வைக்கும் காதல்வீடு கவிதையையும் இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம்.


(மழைக்காலப் பாடகனும் மழையிசையும் -கவிதைத்தொகுப்பு. சரவணன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோயில். விலை. ரூ40)


bbaskaran1958@gmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்