பொ கருணாகர மூர்த்தி
<<<< >>>>
கனடிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் 2007 மார்ச் மாத தீராநதியில் ‘சுளுக்கெடுக்கிறவன்’ என்கிற கதையை எழுதியிருக்கிறார். கதையைப் படித்து முடித்தானதும் எனக்கு Anton Chekhov ன் The Kiss கதைதான் ஞாபகத்துக்கு வந்தது.
Anton Chekhov தன் கதையை இப்படித்தான் ஆரம்பிப்பார்.
அப்போது 20 மே மாலை எட்டு மணி. மேலதிக ஆயுதப்படையின் ஆறு பட்டாலியன்களும் தலைமையகத்துக்குத் திரும்பும் வழியில் Mestechki என்கிற கிராமத்தில் சற்றே இளைப்பாறிக்கொண்டிருந்தன. சிலர் சிவில் உடையில் உலாத்திக்கொண்டிருந்தார்கள், சில அதிகாரிகள் தத்தம் துப்பாக்கிகளுக்கு எண்ணைபோட்டுச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது அழகிய கழுத்துடனும் குட்டைக் கற்றைவாலுடனும் முன்னோக்கி நகர்கிறதா பக்கவாட்டில் அசைகிறதா என்று தீர்மானிக்கமுடியாதபடி விசித்திரஅசைவுகளுடன் வந்த வெள்ளைக்குதிரையொன்றில் அமர்ந்து வந்த தூதுவன் ஒருவன் தொப்பியைக்கழற்றி அவர்களுக்குச் ‘சலூட்’ வைத்துவிட்டு ” கனவான்களே ஓய்வுபெற்ற லியூட்டினெண்ட் ஜெனெரல் Von Rabbeck அவர்கள் இன்று உங்களைத் தேனீர்விருந்துக்கு அழைக்கிறார்…….. உடனேபுறப்பட்டு வர எதிர்பார்ப்பு ” என்றுவிட்டுக் குதிரையின் சேணத்தை இழுக்கவும் அது மேலும் நடனம்போன்ற சில நளின அசைவுகளுடன் சுழன்று திரும்பிவிட்டுத் பாய்ந்து சென்று நொடியில் தேவாலய வளவொன்றின் பின்னால் மறைந்துவிடும்.
முன்னொருதடவையும் இப்படித்தான் வேறோர் இடத்தில் ஒரு ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் அவர்களை விருந்துக்கு அழைத்துவிட்டு விருந்துமுடிந்த பின்னால் தன் சேமிப்பிலிருந்த கலைப்பொருட்கள், ஓவியங்கள், சிறுசிற்பங்கள், அபூர்வரகத் துப்பாக்கிகள் என்று ஒன்றும்விடாமல் காட்டி அவற்றைத்தான் எங்கெங்கே பெற்றுக்கொண்டேன் என்பதையும் தன்விரிவுரையில் சேர்த்துகொண்டுவிடுவார். தவிரவும் பழைய டிரங்பெட்டி ஒன்றில் இருந்து பல்வேறு பிரமுகர்கள் தனக்கு அவ்வப்போது அனுப்பிய (அவருக்கு) முக்கியமான பல கடிதங்களையும் கேட்போரின் கொட்டாவிகளைக் கவனத்தில் கொள்ளாது ஒவ்வொன்றாக நடுச்சாமம் வரையில் வாசித்துக்காட்டிப் போரடித்தார். இதுவும் ஏதாவது அப்படிப்பட்ட பார்ட்டியாக இருக்குமோவென அதிகாரிகள் முதலில் பயந்தனர்.
அக்கிராமத்தில் வாழும் Von Rabbeck என்பவர் ஓர் ஓய்வுபெற்ற இராணுவ ஜெனெரல். அக்கிராமத்திலுள்ள அவரது பங்களாவில் இவர்களுக்கு ஒரு விருந்துக்கு ஏற்பாடுசெய்திருந்தார். Ryabovich என்பார் ஒரு பட்டாலியனின் தலைவன், மரியாதையின் நிமித்தம் அந்த விருந்தை ஏற்றுத் தன் சகஅதிகாரிகளுடன் கலந்துகொள்கிறார். விருந்து நடந்துகொண்டிருக்கையில் Ryabovich அப்பங்களாவிலுள்ள பல அறைகளையும் கடந்து சென்று ஒருஅறையில் பில்லியர்ட் விளையாடிகொண்டிருந்த தன் சகாக்களைச் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றார். அவருக்கு அது சலித்துப்போகவும் அவ்விடத்தைவிட்டு இன்னொரு இணைப்பு அறையொன்றினூடாக பிரதான விருந்துமண்டபத்துக்குத் திரும்பி வந்துகொண்டிருக்கையில் மின்சாரம் நின்று இருள் சூழ்கிறது. இருட்டுக்குள் இவர் தடுமாறிக்கொண்டிருக்கையில் ஒரு பெண் வேகமாகவந்து இவரைக்கட்டி முத்தமிட்டுவிட்டு மறைந்துவிடுவாள்.
எனது புரிதலில் Anton Chekhov எங்கே வெளிப்படுகிறாரென்றால்……..
(1.) அவரை முத்தமிட்டது யார்? அது என்ன தினுசிலான முத்தமென்று கதையெங்கும் சொல்லவேமாட்டார்.
அதைத்தந்தது யாராக இருக்கும்? மணமானவளா குமரியா?
எதற்குத்தான் எனக்குத் தந்தாள்?
அவள் மயங்கிப்போக அப்படி என்னதான் இருக்கிறது என்னிடம் ?
இது வேறெதெற்காவது அச்சாரமா? அந்த முத்தத்துக்கான அவசரந்தான் என்ன?
வேறு யாரோவென எண்ணிக்கொண்டுதான் வைத்துத்தொலைத்தாளோ?
அல்ல வேறு எவருடையதாவது ஏற்பாட்டில் வேண்டுமென்றே வைக்கப்பட்ட முத்தமா?
எப்படியோ அந்த முத்தம் அவரால் இலகுவில் மறக்கப்படுவதாயில்லை.
அதை மீட்டு மீட்டுப்பார்கையில் தான் எதையோ சாதித்துவிட்டதுபோலவும் இருக்கிறது அவருக்கு.
முத்தத்துக்கு முன்னும் பின்னுமான நினைவுகளையே சதா அசைபோட்டபடி இருப்பது
ஒருவகையிலான சுயஇன்பம் துய்ப்பதாகிறது அவருக்கு.
தூக்கம் இல்லாமலாகிறார் மனுஷன்.
மெதுவாகத் தன்னை நோக்கிவந்த அந்தப்பெண்ணின் பாதணிகளின் அந்த ‘டொக்’ ‘டொக்’ சப்தம்.
அவர் தோளில் படர்ந்த வாசத்துடனான அவள் வெல்வெட் கைகளின் ஸ்பரிசம்.
பின் முகத்தில் உரசிச்சென்ற அவள் மஸ்லின் துணியின் மென்மை இதம் சுகம்.
இன்னும் அவர் நாசிக்குள் சுழன்றாடும் அவளின் லைலாக் லவண்டரின் மணம்.
பெப்பெர்மிண்ட் ட்றொப்ஸ்போல இன்னும் இன்னும் நினைவில் இனித்துக்கொண்டிருக்கும் அவள்
இதழ்களின் தனித்துவமான சுவையென அவர் அனுபவித்தவை ஏற்படுத்தும் பரவசத்துடன்
அவர் கண்டேயிருக்காத அவளின் இடை, கிசு கிசுப்பும் கிளர்ச்சியும் தரக்கூடிய அவள் குரல் , அவள் ‘சர”சர’த்த உடையில் அணிந்திருக்கக்கூடிய புறோச்சின் ஜொலிப்பு என்பனவற்றுக்கும் ஒரு கோலவுருவைக்கொடுக்க முனைகிறார். ஆனால் அந்தக் கற்பனைகளோ தீராத ஒரு கனவைப்போலும் மறைந்தும் மாறியும் வந்துவந்து அவருடன் நடனமிட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு இன்ப அவஸ்த்தை அது.
அவருக்கு நடனமாடவேண்டும்போலத்தோன்றுகிறது. தோட்டத்துக்கு ஓடுகிறார். அங்குள்ள செடிகள் மரங்களை அப்போதுதான் பிறந்தவர்போலப் பார்க்கிறார். அங்கு வந்த திருமதி. Von Rabbeck கிடம் அகலமாகப் புன்னகைத்து ” எனக்கு இந்த பங்களா மிகவும் பிடித்திருக்கிறது ” என்பார்.
” இது இன்னும் என் அப்பாவின் பெயரில்தான் இருக்கிறது ” என்றவர் ‘உங்களின் பெற்றோர் இன்னும் இருக்கின்றனரா ‘,
‘ எப்போது இராணுவத்தில் சேர்ந்தீர்கள் ‘, எப்படி உடலை இத்தனை கட்டாக வைத்திருக்கிறீர்கள் ‘ என்றெல்லாம் அவரையும் பதிலுக்கு விசாரித்துப் புன்னகைத்துச் செல்லவும் தான் மிக முக்கியமான அதிசயமான பிரமுகர்கள் சூழலில் இருப்பதாகப் புளகாங்கிதம் கொண்டு அங்கு அவருக்கு வழங்கப்பட்ட அனைத்தையுமே இயந்திரத்தன்மையுடன் ஏற்றுச்சாப்பிடுவார்.
அவ்விருந்துக்கு வந்திருந்த இளஞ்சீமாட்டிகளுள் தன்னை முத்தமிட்டது எவராக இருக்கும் என்கிற ஆர்வத்தேடலில் கையிலொரு வைன்கிளாசை வைத்துக்கொண்டு தன் சுபாவத்துக்குமாறாக விருந்து மண்டபம் நிறைந்திருக்கும் பெண்களை மோப்பம் பிடிக்க ஆரம்பிக்கிறார் Ryabovich.
அவரின் நடவடிக்கைகள் எல்லாமே அவர் இயல்பில் இல்லாமல் மெல்ல மாறிப்போகின்றன. தோள்களைத் தழுவிய வெல்வெற் கைகளின் கட்டிலிருந்து விடுபடவே மறுக்கிறது மனம்.
அட…… என்னைப்பிரேமிக்க , அணைக்க, என்னைச் சந்தோஷப்படுத்த , கவனித்துக்கொள்ள, என்வாழ்வில் நுழைய விருப்பமாய் ஒரு பெண் இருக்கிறாள். அதனால்த்தானே முத்தமிட்டாள் அவ்வாறெல்லாம் திரும்புகின்றன அவர் எண்ணங்கள். நம்பிக்கையுடன் அவரை நோக்கிமுன்னேறிய அவளது துணிச்சல் பிடித்துப்போகிறது. அந்தச் சிறு பெண்கள் குழாமில் அவள் எவளாக இருப்பாள் என்று ஒரு முடிவுக்கும்வர இயலாதிருக்கும்வேளை ஒரு கணம் அவள் யாரென்று தெரியாமலிருப்பதையும் விரும்புகிறது அவரது இன்னொரு மனம். அந்தப் புதிரில் இருக்கக்கூடிய சிலிர்ப்பே அவருக்கு இன்பமானதாகவும் வேண்டுவதாகவுமாகிறது. அவர் தவிப்பை வைத்தே கதையை வாசிக்கும் அனைவருக்கும் அம்முத்தத்தைக் கிடைக்கச்செய்தும் அதன் சக்தியைத் தொற்றவைத்தும் விடுகிறார் Chekov. கதை அவ்வளவுதான்.
2. அநியாயத்துக்கு இப்படித்தவிக்கிறாரே Ryabovich அவர் என்ன இளைஞரா, நடுஅகவையினரரா , இதுவரை பெண்ணின் வாசமே தெரியாத ஒரு பெண்ணை முத்தமிட்டே அறியாத ரஷ்யரா? ஒருவேளை அது அவருக்கு தவறுதலாகக் கிடைத்த முத்தமோ? ஊஹ¥ம்……..அவைகள் பற்றிப்பூடகமாகவேனும் எவ்விடத்தும் சொல்லமாட்டார் Chekhov.
இன்னும் இராணுவத்தினரின் ஏனைய அலுவல்கள், பாசறை வாழ்வின் இயக்கங்கள், ஓயாது அவர்கள் அணிவகுத்துக்கொள்ளும் விதங்கள், மேற்கொள்ளும் பயணங்கள், வழிவழியே விரியும் இயற்கைக்காட்சிகள், அருந்தும் மதுவகைகள், படிக்கும் பத்திரிகைகள், அவர்கள் குதிரைகளின் அழகு குணாதிசயங்களென வேறுவிஷயங்களின் வர்ணிப்புகளாகப்பின் கதை விரிந்தாலும், Ryabovich அந்த முத்தத்தின் சிலிர்ப்பிலிருந்தும் நினைவின் அருட்டல்களிலிருந்தும் விடுபடமுடியாமல் தவிப்பதுதான் கதையின் இறைச்சி.
அ. முத்துலிங்கத்தின் ‘சுளுக்கெடுக்கிறவன்’ கதை ஒரு வளரிளம்பருவத்து விடலைப்பையனுக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட அயலூரிலிருக்கும் சுளுக்கெடுக்கும் நாட்டுவைத்தியரிடம் அவன் செல்லத்தொடங்குவதுடன் ஆரம்பமாகும். அங்கு அவ்வைத்தியருக்கு மருந்து காய்ச்ச மற்றும் தொட்டாட்டு வேலைகளில் உதவிகள் செய்துகொண்டிருக்கும் அலர்அகவைப்பெண் கனகா. ‘கண்டநாள்முதலாய் காதல்பெருகுதடி’ என்பதாக இவனுக்கு அவள்மேலும், அவளுக்கு இவன்மேலும் ஒருவித ஈர்ப்புண்டாகிவிடுகிறது. அவ்வப்போது அவளிடம் சில நடைமுறைப் பகடிகளை எடுத்தும் விடுகிறார் இளவல்.
எ+டு:
” உவ்வளவு மயிர் சடையாய் வைத்திருக்கிறீரே……… ஈர் பேன் ஒன்றும் பிடிக்காதோ?”
” அப்ப ஒருக்கால் நீர் வந்து பார்த்து எடுத்துவிடுமன்.”
ஒருநாள் வைத்தியர் வீட்டில் வெகுநேரம் இவன்முறைவரும்வரை காத்திருந்து வைத்தியர் இவனுக்கு சுளுக்கெடுக்க ஆரம்பிக்கவும் பாம்பு கடித்துவிட்டதென்று அங்கு எடுத்துவரப்படும் ஒருவருக்கு அவசரவைத்தியம் பார்க்க எழுந்த வைத்தியர் அதிலேயே மும்முரமாகிவிட கனகாவே அவனுக்குச் சுளுக்கெடுக்க ஆரம்பிக்கிறார். அப்பப்பா அவள் தொடுகைதான்…………. என்னசுகம்….. என்னசுகம்?
அவளுடைய பத்துவிரல்களும் ஒரு மென்மையான ஒழுங்கில் அவன் கழுத்தில் ஊரத்தொடங்கவும் அவனுக்குள் அத்தொடுகையின் ஸ்பரிசசுகம் பெருக்கெடுத்தோடுகையில் தன்னுடைய கழுத்துப்போய் புதுக்கழுத்தொன்று வந்துசேர்ந்துவிட்டதாக உணர்கிறான். அவன் கழுத்தின் அத்தனை நரம்புகளும் இயங்கத்தொடங்குகின்றன. அவன் நாற்காலியில் இருந்தாலும் நாற்காலியில் இல்லை. அந்த வெளியை நிறைத்திருந்தாலும் நிறைத்திருக்கவில்லை.
கனகி கதிரைக்குப்பின்னால் நின்றநிலையில் விரல்களைக் கழுத்தில் அழுத்தியபடி அவன்மேல் தலையைக் கவிழ்ந்தாள், அவள் முகம் அணுகுமுன் கத்தையான அவள் குழல்கட்டுக்கள் அவன்மேல் விழுந்து முகத்தை மறைத்தன. கனகா அவனை முத்தமிட்டுக் கொண்டாள். அவள் முத்தத்துக்கு கணக்கு வைக்கவில்லை, தன் கைப்பிடியைத் தளர்த்தவுமில்லை.
எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத நேரத்தில் அக்குமரிவைத்த அழுத்தமான முத்தங்கள் இவனைத்தடுமாறவைக்கின்றன. அப்போது திடீரென்று வெளியே ” என்னைவிட்டிட்டுப்போயிட்டியே…………. ஐயா.” என்று பெருங்கூச்சல் கேட்கிறது. ஒரு பெண் நெஞ்சில் ‘மடால்’ ‘மடால்’ என்று அறைந்து ஒப்பாரி வைத்து அழுகிறாள். இருந்தும் பாம்புகடித்தவரையும் கூடவந்தவர்களின் அட்டகாசங்களையும் கனகா கவனித்ததாகத் தெரியவில்லை.
அவனுக்கு அந்தவலியும் இன்பமும் மட்டுமே நிஜம். மற்றதெல்லாம் அழிந்துவிடலாம். இத்தனை காலம் கடந்தும் அச்சம்பவத்தை மீட்டுயிர்க்கும் கதைசொல்லிக்கு அம்முத்தம் எப்படித்தான் மறந்துபோகும்?
சுளுக்கெடுப்பவனில் முத்தம் தரும் பெண்ணின் பெயர் கனகாவாக இருப்பது எனக்கு இன்னொரு ஆச்சர்யம்.
இந்தக் கனகாம்பிகை என்கிற பேர்வழிகள் எல்லா ஊர்களிலுமே சற்றுச் விநோதங்களாகவும் , புதிர்களாகவும் இருப்பதுகண்டு (என் பார்வையில்) நானும் ஆச்சர்யம் அடைந்திருக்கிறேன்.
1960களில் நான் அனுராதபுரத்தில் இருக்க நேர்ந்த காலத்தில் அங்கே ஒரு கனகா ஒரேவேளையில் பல அரசு அதிகாரிகளின் ஆசைநாயகியாக வாழ்ந்துகொண்டிருந்தாள். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுமளவுக்கு அவளுக்குப் படிப்பும் இருந்தது. காரிகையை கைக்குள்போட்டுகொண்டால் சாதாரண இடமாற்றங்கள் தொடங்கி, சாராயக்குதக்குத்தகை , பெற்றோல் நிரப்புநிலைய உரிமங்கள் பெறுதல், பொதுநிலத்தை வளைத்துப்போடுவது இரட்டைமாடிக் கட்டிடம் அமைத்தல்வரை அரசில் அவளால் ஆகாத காரியமில்லை. கார்களில் மட்டும் வலம்வந்துகொண்டிருந்த ஒரு Sex Bomb . பின் ஏதோவொரு பிரச்சனையில் அகப்பட்டுகொண்டு கொலை செய்யப்பட்டாள். விசாரணைக்குவந்த காவல்துறை ஆய்வாளரிடம் அவள் தன் கடைசி வாக்கியமாக “அய்யா அன்ன” (அண்ணா குத்தினவர்) என்றிருக்கிறாள். அவள் ‘அய்யா’ என்று தன் சொந்தச் சகோதரனைத்தான் குறிப்பிட்டாளாவென்று உறுதிப்படுத்தமுடியவில்லை . காரணம் பக்கத்து வீட்டுக்காரன் ஒருவனையும் ‘அய்யா’ என்பாளாம், அதனால் காவல்துறை எவரையும் கைதுபண்ணவில்லை, சந்தேகத்தின் பலன் முழுவதையும் குற்றஞ்சாட்டப்பட்டோர் வரித்துக்கொள்ள கொலையாளி தப்பித்துக்கொண்டுவிட்டான்.
வடமராட்சிப்பகுதியில் நல்ல அழகான குடும்பப்பெண் ஒருத்தி கனகா என்று இருந்தாள். அவளுக்கும் தணியாத தாகம். இயற்கைவனப்போடமைந்த அட்டகாசமான மார்புகள் அவளுக்கு. கொஞ்சம் சோஷியல்பேர்வழி, மேல்பாதியை எப்போதும் காற்றாடவைத்து நோக்குவோரின் இரத்தத் துடிப்பையும், அழுத்தத்தையும் அதிகரிக்க வைத்துக்கொண்டிருப்பாள். புருஷனுடன் எப்படியோ மாமியுடன் சதா ‘கர்’ ‘புர்’. மாலையானால் அவள் வீட்டிலிருந்து பலவகைப்பட்ட வசவுகளோடு அடிக்கடி ” கிழிச்சுக் காயப்போட்டிடுவன் கண்டியோ” என்றும் கேட்கும் . குடும்பத்தில் சதா கசாமுசாவாக அதைவெட்டிக்கொண்டு வெளியேறிச் சேலைவியாபாரம் ஆரம்பித்தாள். பின்னாளில் எப்படியோ சேலையை வீசியவள் மாணவர்கள், வியாபாரிகள், கடத்தல்காரர்களுக்குத் தானேபாவனைச் சரக்கானாள்.
கனகா என்றொரு டீச்சர், தீராத ஆஸ்துமாவென்று அவருக்குத்திருமணமே ஆகவில்லை. இப்போதைய அரசுக்குச் சாமரம் வீசும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மைத்துனி அவர். பின்னாளில் நிறைய கிசு கிசுக்களுக்கு ஊற்றுக்கண்ணாயிருந்தார்.
இன்னும் அயலூரில், கல்லூரிகளில், கூடவேலைபார்த்தவர்களென்று ஆச்சர்யங்கள் நிறைந்த பல கனகாக்கள் உண்டெனினும் இப்போது யார் எங்கே என்று அறிகிற வாய்ப்புகள் அருகிவிட்டன.
அ.முத்துலிங்கம் கதையில் ‘என்னுடைய சேர்ட் கொலர் சைஸ¤ம், என் வயதும் ஒன்றாயிருந்த வருடம்’ என்கிற வரியை நான் வெகுவாக இரசித்தேன். அ. முத்துலிங்கம் சொல்லும் உவமானங்கள் எப்போதும் தனித்துவமானவை. ஒரு முறை சொன்னார் : ‘இளமையில் யாருக்கும் காலம் புது டாய்லட் பேப்பர் சுருள் உருள்வதைப்போல மெல்ல மெல்லத்தான் உருள ஆரம்பிக்கும்…………பின் வயசாக ஆகத்தான் வேகம் பிடிக்கும்.’
பாம்பு கடித்த மனிதர் இறந்ததும் அவ்விடத்தில் எழுந்திருக்கக்கூடிய கூச்சல், ஒரு மரணத்தின் பாதிப்பு எதுவுமில்லாமல் வெட்டவெளியில் பட்டப்பகலில் ஒரு தமிழிச்சி முத்தமிடுவதென்பது சற்றே நெருடலைத் தந்தாலும் நான் ‘சுளுக்கெடுக்கிறவனை’யும் வெகுவாக இரசித்தேன்.
12.06.2007, Berlin. Po.Karunaharamoorthy
karunaharamoorthy@yahoo.ie
- முகம் கழுவாத அழகி
- சூட்டு யுகப் பிரளயம் ! உலக மாந்தர் கூடி என்ன செய்யலாம் ? – 5
- ஆய்வறிஞர் ப.அருளி அவர்களின் பத்துத் தொகைநூல்களின் வெளியீட்டு விழா
- ஹிந்துஸ்தானத்தில் முஸ்லிம்களுக்கு 100% ஒதுக்கீடு…!!!
- எழுத்தாளர் சா.கந்தசாமியுடன் ஒரு கலந்துரையாடல்
- பாண்டித்துரை கட்டுரை
- ம.இலெ.தங்கப்பாவுக்கு ‘சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது’ ‘
- திசைகள் அ வெற்றிவேல் அவர்களின் கட்டுரை
- இரண்டு முத்தங்கள்
- அரங்காடல் – 14 (2007)
- சீதையின் தனிப்புலம்பல்
- வெளியில் மழை பெய்கின்றது! – காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு
- தமிழ்ப் பேசும் ஆங்கில படம்.
- கவிதைகள்
- காதல் நாற்பது – 30 அவ்வொளி மீண்டும் வருமா ?
- யாழ் நகரம்
- இருளும். . . .வெளிச்சமும். . .
- பெண் சுரண்டலின் உச்சகட்டம் சுமங்கலி!
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 19
- ரஜாய்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பத்தொன்பது: கோஷின் காதல்!
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 10 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்
- கால நதிக்கரையில்… – அத்தியாயம் – 15
- காந்தாரி