சீ.முத்துசாமியின் “மண்புழுக்கள்” நாவல் : செம்மண் புழுதியில் தோய்த்தெடுத்த வாழ்க்கை

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

ரெ.கார்த்திகேசு



மலேசியத் தமிழரின் வரலாற்றுக்கு அடையாளம் கூறுவது அவர்களின் தோட்டப்புற வாழ்க்கைதான். இந்த வாழ்க்கை முறை இப்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. விரைவில் தோட்டப்புற வாழ்க்கையை விட்டு அவர்கள் முற்றாக வெளி வரவும் கூடும். ஆனால் இந்த நாட்டில் நம்முடைய கலாசாரமும் மொழியும் சமயமும் ஜனனம் கொண்ட தோட்டப்புறம் தமிழர்களின் நிரந்தரமான வரலாற்று அடையாளமாக இருக்கும்.

தோட்டப்புற நினைவின் வாசம் மாறாத பலர் இன்னமும் இருக்கிறார்கள். பல மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் தோட்டப்புறப் பின்புலம் கொண்டவர்களே. தோட்டப்புறத்தில் என்றுமே வாழ்ந்திராத – இளமையை மலாய்க்காரர் கம்பங்களில் கழித்த – என்னைப் போன்றவரையும் தோட்டப்புறம் அழுத்தமாகத் தீண்டி அடையாளமிட்டிருக்கிறது. நான் தோட்டப்புறத் தமிழ்ப் பள்ளிகளில் படித்தவன். தோட்டப்புறப் பாட்டாளிக் குழந்தைகள் பலர் என் பள்ளி நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களோடு தோட்டப்புறம் சுற்றியிருக்கிறேன். அவர்கள் வீட்டில் “வறக்கோப்பியும் முட்டை ரொட்டியும்” சாப்பிட்டிருக்கிறேன். “தீம்பார்களில்” காய்ந்த ரப்பர் இலைகள் காலுக்கடியில் நொறுங்க நடந்திருக்கிறேன். ரப்பர் இலையை மடித்து தென்னங் குச்சியில் குத்தி காத்தாடி செய்திருக்கிறேன்.

தோட்டப்புற வாழ்வை கற்பனா இலக்கியத்தில் கொண்டு வரும் பல முயற்சிகள் நம் இலக்கிய உலகில் நிகழ்ந்திருக்கின்றன. நாம் போற்றும் அனேகமாக அத்தனைத் தமிழ் எழுத்தாளர்களும் தோட்டப்புற வாழ்வை எழுதியிருக்கிறார்கள். சி.வடிவேலு, சா.ஆ.அன்பானந்தன், மா.இராமையா, ஆர்.சண்முகம் போன்ற முன்னணி எழுத்தாளர்கள் நிறையச் சிறுகதைகள் வடித்திருக்கிறார்கள். புதினங்களில் தோட்டப்புற வாழ்க்கையைச் சொல்லுவனவாக எம்.குமரனின் “செம்மண்ணும் நீலமலர்களும்”, ஐ.இளவழகுவின் “இலட்சியப் பயணம்”, கா.பெருமாளின் “துயரப் பாதை” ஆகியவை செவ்விலக்கியத் தகுதி பெற்றுள்ளன.

இந்தப் பாரம்பரியத்தில் புதிதாக வந்துள்ளது சீ.முத்துசாமியின் “மண் புழுக்கள்”.

ஒரு தோட்டப்புறத்தின் வாழ்வை எவ்வளவு முழுமையாக ஒரு சிறிய நாவலில் சொல்ல முடியுமோ அவ்வளவு முழுமையாகச் சொல்லியிருக்கிறார். இது அவருடைய சொந்த வாழ்வில் இருந்து வருகிறது. தான் பிறந்து புரண்டு புழுதி படிய எழுந்து நின்ற மண்ணிலிருந்து இந்தக் கதையை நமக்கு எடுத்துக் கொடுக்கிறார். இதுவே இந்த நாவலுக்குப் பெரும் சக்தியைக் கொடுக்கிறது.

நாவல் ஒரு தோட்டப்புறத்தானின் பேச்சு மொழியிலேயே சொல்லப் படுகிறது. இது நாவலாசிரியரின் மொழித் திறமைக்குச் சவால் இடும் ஒரு முறைதான். நாவலாசிரியர் தம்மைக் கட்டிப்போட்டுவிட்டு ஒரு எளிய தோட்டப்புறத்து மனிதனின் மனதுக்குள் புகுந்து அவன் மொழியில் பேச வேண்டியுள்ளது. இதனை முத்துசாமி மிக அற்புதமாகச் செய்துள்ளார்.

இதில் மேலும் ஒரு நன்மையும் உண்டு. முத்துசாமியின் வழக்கமான மொழிநடை மிகச் சிக்கலானது. ஒரு வாக்கியத்துக்குள் பல செய்திகளைப் பின்னிப் பின்னிச் சொல்லுவது. இந்த நாவலில் அவர் இந்த தோட்டப்புறத்தான் மொழியை தத்தெடுத்த காரணத்தால் இது அவரை இந்தச் சிக்கல் நடையிலிருந்து விடுவித்து வாசிப்பை எளிமைப் படுத்தியிருக்கிறது. இருப்பினும் நாவலின் ஓட்டத்தை அனுபவிக்க வாசகனுக்கு இந்தத் தோட்டப்புற மொழியைச் சகித்துக் கொள்ளும் ஒரு மனநிலை வேண்டும்.

தமிழில் நாவல் எழுதும் கலை மிகவும் தீவிரம் அடைந்திருக்கிறது. ஒரு கதாநாயகன்/கதாநாயகியின் வாழ்வுக் கதையை முதன்மைப் படுத்தி அதன் சுவாரஸ்யங்களை வாசகனுக்குத் தரும் முறை இப்போது வெகுஜன இலக்கியத்தின் ஒரு அம்சமாக ஒதுக்கப்பட்டுவிட்டது.

தீவிர நாவல்கள் ஒரு புதிய வாசகருக்காக எழுதப்படுகின்றன. அவர் அறிவார்ந்த வாசகர். நொறுங்கு தீனி போலச் சத்தில்லாத வெறுங் கதைகள் அவருக்குப் பிடிப்பதில்லை. வெகுஜன இலக்கியத்தில் தனக்குக் கிடைக்கும் இந்த நொறுங்கு தீனி வகைகளில் சலிப்படைந்து தன் அறிவைப் பிழியும் படைப்புக்காக அவர் தீவிர இலக்கியத்தை நாடி வந்தவர். தன் நேரத்தை முதலீடு செய்யும் எந்தக் காரியத்திலும் தன் அறிவையும் சிந்தனைப் போக்கையும் செறிவு படுத்தும் விஷயங்களை அவர் நாடி நிற்கிறார்.

சீ.மு.வின் “மண்புழுக்கள்” நாவலை இந்த வகை தீவிர இலக்கியத்தில் தாராளமாகச் சேர்க்கலாம்.

மண்புழுக்களில் ஏராளமான பாத்திரங்கள் இருக்கிறார்கள். இவர்கள் தோட்டப்புற வாழ்வின் நல்லது கெட்டது என்ற எல்லா அம்சங்களையும் பிரதிபலிக்கிறார்கள். ஆனால் யாருக்குமே இங்கு கதாநாயக அந்தஸ்து இல்லை. யாரும் தங்கள் சூழலை வென்று எழுந்து நிற்பதில்லை. அனைவருமே இந்தப் புழுதி படிந்த சூழலில் கட்டுண்ட சாதாரண மனிதர்கள்தாம்.

இந்த நாவலில் முக்கிய கதை இழை என ஒன்று இல்லை. பல கதை இழைகள் உள்ளன. இவை தேவைக்கேற்ற அளவுக்கு இழுத்துச் சொல்லப்படுகின்றன. ஆனால் எந்தக் கதை இழையிலும் கதாசிரியர் விசேஷ அக்கறை ஏதும் காட்டுவதில்லை. சிலவற்றை அவர் மொட்டையாக விட்டுவிட்டு, இன்னொரு இழையைப் பற்றிக்கொண்டு இழுப்பதுமுண்டு. புது இழைகளைத் தொடங்குவதும் உண்டு. எல்லாம் தனது தோட்டத்தில் என்ன அவ்வப்போது நடக்கிறதோ, அதனைப் பொறுத்தது. கதையின் வளர்ச்சியையும் தொடர்ச்சியையும் தோட்டத்து வாழ்க்கையே நிர்ணயிக்கிறது. ஆசிரியர் அவற்றைப் பிரதிபலிக்கும் நிலைக் கண்ணாடியாக இருக்கிறார். அவ்வளவே.

“சுள்ளுனு வெயில்ல குச்சிக்காடு வெந்து கிடக்குது” என்னும் முதல் வாக்கியத்திலேயே முத்துசாமி தன் நாவலுக்கான கருப்பொருளையும் அது தாங்கி நிற்கும் உணர்வு நிலையையும் கோடி காட்டி விடுகிறார். அப்படி வெந்து கிடக்கும் குச்சிக்காட்டில் பாத்திரங்கள் ஒவ்வொருவராக தசையும் இரத்தமும் உள்ளமும் உணர்வுமாக உருப்பெற்று வெந்து கிடக்கிறார்கள். ஆட்டுக்காரச் சின்னக் கருப்பன், வெற்றிலை பயிரிடும் சாலபலத்தார், புட்டுக்கார கிழவன், ஆட்டுக்குக் கசையடிக்கும் கசியடி முனியப்பன், ரத்தினம் டிரைவர், பாம்பு பாலா, அம்மா வூட்டுக் குஞ்சான், வேட்டைக்காரர், பொன்னுசாமித் தண்டல், புடுக்கு மணியம், தொப்பை தொரைசாமி வாத்தியார், ரொட்டி வங்காளி, மசிரு மிட்டாய் இருளப்பன் இப்படியாக தோட்டப்புறத்தின் புழுதி பூசிக் கொண்ட பாத்திரங்கள் நமக்கு முன் வருகிறார்கள்.

அந்தப் புழுதி தன் மேல் படியாமல் இவர்களுக்குப் படியளக்கும் டன்லப் துரை, இவர்களை மேலாண்மை செய்யும் மேனேஜர் மேனன், பெரிய கிராணி சுப்பையா ஆகியோர் இதில் வந்தாலும் பெரும்பாலும் அவர்களைத் தன் கதைக்கு வெளியே வைத்து அவர்களைப் பற்றிக் குறைவாகவே முத்துசாமி பேசுகிறார்.

இந்த உத்தி மிகச் சரியானதே. இது தோட்டப்புறத்தில் மேலாளர்கள் தொழிலாளர்களுக்கு இழைத்த கொடுமையைச் சொல்ல வந்த கதையில்லை. காலனித்துவ அமைப்பிலும் தேசியப் பொருளாதாரத்திலும் இவர்கள் எப்படி சமுதாயத்தில் நசுக்கப்பட்டார்கள் என்ற விவாதம் எதனையும் முத்துசாமி நடத்த வரவில்லை. ஆனால் இந்த மக்களின் உள்ளார்ந்த வாழ்வு எப்படி இருக்கிறது என்ற வருணனை ஒன்றை மட்டுமே தருக்கங்கள் ஏதுமின்றி இந்த நாவலில் முன் வைக்கிறார். ஆகவே இந்த மேலாண்மைப் பாத்திரங்கள் அந்த வருணனைக்கு ஏற்ப உபபாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

பெண் பாத்திரங்கள் பின்னணியில்தான் இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு இவர் பெயர் கூடக் கொடுப்பதில்லை. கசியடி முனியப்பனின் மனைவி “முனியன் பொஞ்சாதி” ஆக மட்டுமே குறிப்பிடப்படுகிறாள். எந்தப் பெண் பாத்திரமும் இந்த நாவலின் எந்த நிகழ்வுக்கும் முக்கிய காரணமாக அமையவில்லை. இதுவும் தோட்டப்புற வாழ்வில் இயற்கையானது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் பஞ்ச இருள் படிந்த, அறியாமை நிறைந்த கிராமங்களிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆணாதிக்கச் சிந்தனைகளைச் சுமந்து கொண்டு கப்பலேறியவர்கள், அதே வாழ்க்கை முறையை இங்கும் நாட்டினார்கள். ஆட்டுக்காரனின் மனைவி பெரியதாய் முதலானோர் தங்கள் கணவன்மார்களுக்குச் சமமாக உழைப்பதிலும் அதற்கு மேல் அவர்களுக்குச் சமைத்துப் போட்டு, துணி துவைத்து, குழந்தை பெற்று, கொஞ்சம் முனுமுனுத்து, அடி வாங்கி அடங்கிப் போகிறவர்களாகவே இருக்கிறார்கள்.

இப்படி அடங்கி முடங்கிப்போன பெண் பாத்திரங்களுக்குள்ளும் ஒரு அபூர்வமான சித்திரிப்பு உண்டு. முனியனின் மனைவி அபூர்வமாகப் படம் பார்க்கப் போவது உண்டு. பாகவதர் படம் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். இனி முத்துசாமியின் வார்த்தைகளில்:

“நாறிக் கிடக்கிற தோட்டத்துப் பொழப்பு, தெனமும் புளிச்ச கள்ள ஊத்திக்கிட்டு வந்து ஒழச்சி நொந்து போயிக் கெடக்கிற ஒடம்பு, மேல நாயா உளுந்து கொதர்ர மனுஷன், கித்தா காட்டில நெரயப் பாக்க வர்ர சாக்கில பாசாவுக்குப் படுக்கக் கூப்பிட்ற கங்காணிங்க, கிராணிங்க… குடிச்சு வயிறு புண்ணாயி சாவக் கெடக்கிற அப்பங்காரன், கல்யாணங் கட்டிக்கிட்டு ரூசாவுக்குப் போயி புருஷன் புடிக்கிலென்னு அம்மா ஊட்ல வந்து வாழா வெட்டியா கிடக்கிற தங்கச்சி… எல்லாத்தையும் மறந்திட்டு, பாகவதரோட குதர மேல ஏறிப் பறக்க ஆசப்பட்டா.

“அவன் படத்தில என்ன இருக்குனிடி நீ இப்படி அலயற?’னு புருஷங்காரன் பச்சயா கேக்கறதுக்கு அவ என்னைக்கும் பதில் சொன்னதில்ல. …. ஆனா மனசுக்குள்ள பேசிக்குவா. ‘ஆமாண்டா… நா அவர புருஷனாத்தான் நெனக்கிறேன்…. நீ குடிச்சிட்டு வந்து அடிச்சி தொவச்சி நாயா உளுந்து பொரள்ரப்ப நா அவரதாண்டா நெனச்சிப் படுத்துக் கெடக்கிறேன்… ஏண்டா… அதுல என்ன குத்தம்? பொம்பளங்க மேல அவரு எத்தன மதுப்பு வச்சிருக்காரு…? அம்மா மேல எத்தன பிரியமா இருக்காரு…? அன்னக்கு பாத்தயே படம்… கட்டன பொண்டாட்டிய கண்ணு கலங்காம பாத்துக்க எத்தன கஷ்டப் பட்டாரு அதில…? நீ செய்வியாடா?”

வறுமைப் பட்ட தமிழினம் தனது கொடுமைகள் நிறைந்த நனவுலகத்தை மறந்து கனவுலகமான தமிழ் சினிமாவில் இப்படி உணர்வு நிலையில் முழுகிப் போனதன் ரகசியத்தை இந்தச் சித்திரிப்பில் அவர் காட்டி விடுகிறார்.

15 அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவலில் முதல் நான்கு அத்தியாயங்கள் பாத்திரங்களை அறிமுகப் படுத்தும் அத்தியாயங்களாகவே இருக்கின்றன. இவை முழுக்கவும் ஓர் ஓவியத்தின் பின்புலத்தை உறுதியாக அமைக்க என்றே தோன்றுகிறது.

ஐந்தாம் அத்தியாயத்தில் ஆட்டுக்காரன் கதை கொஞ்சமாக நகர ஆரம்பிக்கிறது. ஆனால் இதைத் தொடர்ந்து சில்லறை சில்லறையாக வேறு பாத்திரங்களின் கதைகளும் சொல்லப்படுகின்றன. மொத்தத்தில் – ஓர் ஒவிய மொழியிலேயே தொடர்வதானால் – ஒரு சந்தைக் காட்சி வரைந்தது போலத்தான் முடிகிறது. கொசகொசவென மக்கள் எங்கும் இருக்கிறார்கள். ஆட்டுக்காரனின் கதை கொஞ்சம் முன்னணியில் முக்கியத்துவம் கொடுத்து நிறுவப் பட்டிருப்பதைத் தவிர இதுதான் மையக் காட்சி என்று எதையும் எடுத்துக் கொள்ள முடியாது.

இதுவே இந்த நாவலின் சிறப்பு என்றும் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. இது (பெயர் குறிப்பிடப்படாத) இந்தத் தோட்டத்தின் கதையே தவிர, அந்தத் தோட்டத்தில் வசித்த எந்தப் பாத்திரத்தின் கதையும் அன்று. பாத்திரங்கள், அவர்கள் கதைகள், கிளைக் கதைகள் அனைத்தும் அந்தத் தோட்ட ஓவியத்தைச் செறிவாக்கவே வரையப் படுகின்றன.

கிளைக் கதைகள் கொண்டு வந்து நுழைப்பதை ஒரு நுணுக்கக் கலையாகவே முத்துசாமி இந்த நாவலில் ஆக்கியுள்ளார். கிளைக் கதைகளுக்குள்ளும் அவற்றைச் செறிவாக்க இடைவெட்டாகப் பல காட்சிகள் எங்கும் இறைந்து கிடக்கின்றன. காட்சிகளும் கதைகளுமாக வாசகனுள் மனப்படத்தை எழுப்ப இது ஓர் அபூர்வமான உத்தி.

ஓர் எடுத்துக்காட்டுக்கு ஏழாம் அத்தியாயத்தில் மழையுடன் தொடங்கும் நிகழ்வுகளில் மாட்டுக்காரர் கதை சொல்ல ஆரம்பிக்கிறார். மாட்டுக்காரர், ஆட்டுக்காரர் வீட்டில் அடைக்கலமாக வந்து ஆட்டுக்காரர் வீட்டு அஞ்சடியில் கயிற்றுக் கட்டிலில் கிடப்பதைச் சொல்ல வந்தவர் அங்கிருந்து அந்தக் கயிற்றுக்கட்டிலுக்கு முன்பு சொந்தக்காரர்களாக இருந்த ராமசாமிக் கவுண்டர், அவரது தந்தை தண்ணிமலைக் கவுண்டர் ஆகியவர்களின் கதைகளைச் சொல்லுகிறார். இதனுள்ளே கயிற்றுக் கட்டிலில் மூட்டைப் பூச்சிகளை எப்படிச் சமாளிப்பது என்ற இடை வெட்டுக் காட்சியும் வருகிறது. பின்னர் மாட்டுக்காரரின் பூர்வ கதை தொடருகிறது. மாட்டுக்காரர் தன் மனைவி இறந்த துயரில் கோயிலில் வந்து சோர்ந்து உட்கார்ந்து இருப்பதை, தனது காணாமல் போன ஆட்டுக் கிடாவைத் தேடி வந்த ஆட்டுக்காரர் பார்க்கிறார். இந்த இடத்தில் கிடா என்றதும் அந்தக் கிடாவின் மகிமைகள் விரிவாகக் கூறப்படுகின்றன. கிடாவைத் தேடி வந்த இடத்தில் சில சிறுவர்கள் சில்லிப்பந்து விளையாடிக் கொண்டிருப்பதால் சில்லிப்பந்து விளையாட்டும் இடை வெட்டுக் காட்சியாக விவரிக்கப் படுகிறது. அந்தச் சிறுவர்கள் மாரியம்மன் கோயில் பக்கம் கிடா போனதைப் பார்த்ததாகக் கூற அங்கிருந்து கிளைத்து அந்த இரண்டு மாரியம்மன் கோயில்கள் இருக்கும் கதை கூறப்படுகிறது.

அங்கே மாரியம்மன் கோயிலில் மவுனச் சாமியாராக இருக்கும் மாட்டுக்காரரைப் பார்த்து ஆட்டுக்காரர் பரிதாபப்பட்டுத் தன் வீட்டுக்குக் கொண்டு வருகிறார். பத்து நாள் அங்கே ஒன்றும் பேசாமல் இருந்த பின் ஒரு நாள் திடீரென்று அந்த மாட்டுக்காரர் காணாமல் போய்விட அவரை மாட்டுக் கொட்டிலில் கண்டு பிடிக்கிறார்கள். மாட்டுக் கொட்டிலில் அவர் மாடுகளிடம் பாசத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார். லட்சுமி என்ற மாட்டிற்கு பிரசவம் பார்க்கிறார். (இதனால்தான் அவருக்கு மாட்டுக்காரர் என்ற பெயர்.) இது லட்சுமிக்கு ஐந்தாம் பிரசவம். அதனுள் லட்சுமிக்கு ஒரு வருஷம் முன்னால் நாலாம் பிரசவம் நடந்த கதையும் பின்னோட்டமாக / இடை வெட்டுக் காட்சியாக சொல்லப் படுகிறது.

இதே அத்தியாயத்தின் பிற்பகுதியில் அவர் இந்த மாட்டுக்காரர் கதையை முற்றாகத் துறந்து விட்டு ஆட்டுக்காரர் குடும்பத்தின் அன்றாட வாழ்வைச் சொல்ல ஆரம்பிக்கிறார். (அத்தியாயங்கள் பிரிப்பதில் முத்துசாமிக்கு ஒரு நிலைப்படு இருப்பதாகத் தெரியவில்லை.) ஆட்டுக்காரர் மழை பெய்யும் காலைக் குளிருக்கு அடுப்பில் குளிர் காய்கிறார். அப்படியே உள்ளே பார்க்கும்போது ஆட்டுக்காரரின் மனைவி பெரியதாய், அவள் மகள் சின்னப் புள்ளைக்குப் பேன் எடுப்பது தெரிகிறது ஆகவே இங்கு பேன் எடுக்கும் இடை வெட்டுக் காட்சி. அதற்கான சீப்பின் விவரமும் பக்கக் காட்சியாக! (“பெரியதாய் கையில பேனு எடுக்கிற சீப்பு. டவுன்ல பஸ்தானுக்கு பக்கத்தில இருக்கிற சீனன் சூப்பு கடக்கி பின்னால இருக்கிற ஒஸ்மான் ஒட்டுக் கடயில வாங்கிட்டு வந்தது. சாதா சீப்பு இல்ல இது. ரெண்டு பக்கத்தில சந்து தெரியாத கூர் பல்லு வரிசை பிடிச்சி நிக்கும்”.)

இந்தக் காட்சிக்குப் பின் ஆட்டுக்காரர் குளிர் காயும் காட்சியின் தொடர்ச்சி. மழை பெரிதானவுடன் தக்கர்களை வைத்து மழைத் தண்ணீர் பிடிக்கும் காட்சி. தொடர்ந்து விறகு பிளக்கும் காட்சி. (“காஞ்ச கட்ட. அதுலயும் நாரு கட்ட. சாமானியத்தில வெட்டி இறங்காது. துள்ளி எகிறுது… பச்ச கட்ட இப்படி நோகடிக்காது. ஒத்த போட்டுல பொசுக்குன்னு எறங்கி பச்ச பால் கொப்புளிச்சி நிக்கும்… நாலு போட்டுல சின்னாங்கா துண்டா போயிடும்”.)

இதை தொடர்ந்து மழைத்திட்டியில் பாட்டாளிப் பெண்கள் பல்லாங்குழி ஆடும் கதை. அதிலே வீட்டு அந்தரங்கங்கள் செல்லமாகப் பகிர்ந்து கொள்ளப் படுதல். (“ஏய் கெழவி.. ஒனக்கு எதுக்கு அதெல்லாம்? பொழுது போனா கடவுளே ராமானு கண்ண மூடி தூங்காம எவெ எங்க எவெனோட கொஞ்சறான்னு நோட்டம் பாக்கிற வேல ஒனக்கு எதுக்கு? தாத்தா உசிரோட இருந்தா நீயும் இப்படித்தான் கொஞ்சுவ. இன்னேரம் பெத்த ஆறு பத்தாதின்னு இன்னும் ஆறு புள்ளய பெத்துப் போட்டிருப்ப…”)

அப்புறம் ஆட்டக்காரர் தோட்டத்துக்கு வந்திருக்கும் புதிய வாத்தியாரைப் பார்க்கப் புறப்படுகிறார். அந்த இடத்தில் கிளைக்கிறது ஊருக்குத் திரும்பி விட்ட பழைய தொப்பை துரைசாமி வாத்தியார் கதை. அவர் தோட்டத்து ஆற்றில் குளிக்கும் கதையும் அதற்கு உட்காட்சியாக முன்னர் அவர் ஊரில் காவிரி ஆற்றில் குளித்த காட்சியும்.

ஆட்டுக்காரர் புதிய வாத்தியாரைத் தேடி வந்த காரணம் இவர் ஆட்டுக்காரரின் அப்பாவின் ஊர்க்காரர். இங்கே பின்னோட்டமாக அப்பாவின் கதையும் அவர் தன் மனைவியை விட்டு மலாயாவுக்கு வந்து இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொண்டு வாழ்ந்த கதையும் ஆட்டுக்காரனைப் பெற்ற கதையும். அந்தக் கதையில் அப்பா டவுனுக்குப் போகும் கதை வரும்போது பஸ் டிரைவர் கொழந்தசாமி கதை. (‘ஒரு நாளக்கி அஞ்சு நடை ஓடணும், டவுனுக்கும் தோட்டத்துக்கும். ஆயிரம் குழி அங்க. சடார் சடார்னு பிரேக்கப் போடணும். மல்லுக்கட்டி கியரப் போடணும். ஒடம்பு குலுங்கிடும் சூத்து வலி எடுத்திடும்”.)

இப்போது ஆட்டுக்காரர் வாத்தியாரைத் தேடிப் போவதன் நோக்கம் ஊரிலே உள்ள பெரியம்மாவப் பற்றி வாத்தியாரிடம் ஏதாவது தகவல் இருக்குமா என்றறிய. இந்தப் பெரியம்மா பற்றிய விவரம் அவருக்குத் தெரிய வந்தது அப்பா விட்டுச் சென்ற டிரங்குப் பெட்டியின் மூலமாக. அந்த டிரங்குப் பெட்டியிலிருந்து ஆட்டுக்காரரின் தாத்தா பாட்டிக் கதை கிளைக்கிறது. பாட்டி பாம்பு கடித்துச் செத்துப் போனாள். தாத்தாவுக்குப் பித்துப் பிடித்துப் போய்விட்டது. மாரியம்மன் கோயிலில் உட்கார்ந்தவர் மாயமாய் மறைந்து விட்டார். அந்த மர்மம் இன்றும் தோட்டத்தில் கதைகதையாய்ப் பேசப்படுகிறது.

அப்புறம் அப்பா கள்ளுக்கடைக்குப் போகும் காட்சி. ஊரில் விட்டு வந்த மனைவி ஞாபகத்தில் குடித்து வெறித்து அழும் காட்சி. இந்த நினைவுகளின் பின்னணியைச் சுமந்துதான் ஆட்டுக்காரர் புதிய வாத்தியாரைப் பார்க்க வந்து, பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளின் கூச்சல் பின்னணியில் தன் பெரியம்மாவின் பேர் சொல்லி விசாரிக்கிறார்.

“ஓ அந்த அம்மாவா… எங்க ஊருதாங்க… ஆனா அவுங்க செத்து நாளாச்சே.. நல்ல மனுஷிங்க… புருஷங்காரன் கல்யாணம் கட்டி புள்ளய குடுத்திட்டு மலாயாவுக்கு வந்தவன் அவுங்கள அப்புறம் திரும்பியே பாக்கலயாம். அந்தக் கவல புடிச்செ செத்துப் போனாங்க…அவுங்க புள்ள ஒன்ணு இருந்திச்சி. பக்கத்து கிராமத்தில கட்டிக் குடுத்தாங்க… பாவம். புருஷங்காரன் குடிச்சிட்டு வந்து குடுத்த அடி ஒத தாங்காம கெணத்தில வுழுந்து செத்துப் போச்சிங்க… நீங்க யாருங்க? அவுங்களுக்கு நீங்க என்ன வேணும்?”

“ஒண்ணும் சொல்லத் தோணல. பேசாம திரும்பி நடந்து லயத்த தாண்டி கித்தாக் காட்டில கால வச்சதும் நடக்க முடியல. காலு நரம்பு சுண்டி இழுக்குது. மரத்து வேர்ல உக்காந்து நெனச்சிப் பாக்க பெரியம்மா அந்த ஊர்ல பட்ட கஷ்டம் நெஞ்சில பாரமா எறங்குது. தாங்க முடியில”

இப்படித்தான் மனதில் ஒரு சோக முத்தாய்ப்பை வைத்து முடிகிறது இந்த அத்தியாயம்.

இப்படி ஒரு கதையும் ஏராளமான கிளைக்கதைகளும் அவற்றுள் குறுக்கு வெட்டாகச் சிறு சிறு விளக்கக் காட்சிகளையும் அமைத்து வாசகனின் உணர்வையும் அறிவையும் முன்னும் பின்னும் கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்குமாக அலைக்கழித்து சுவைக்க வைக்கிறார் முத்துசாமி.

அநேகமாக எல்லா அத்தியாயங்களிலும் சொல்லுகின்ற ஒவ்வொரு நிகழ்வையும் அந்த நிகழ்வில் வருகின்ற பொருள்களையும் இப்படி நுணுக்கமான தூரிகையை வைத்தே தீட்டியிருக்கிறார். ஆகவேதான் இந்தத் தோட்ட ஓவியம் இத்தனை அடர்த்தியாகவும் செறிவாகவும் இருக்கிறது. இந்தச் சுவைகளில் ஒரு பிரதான ஒற்றை இழை இல்லாத குறை வாசகர்களுக்கு எழாது.

ஒரு நவீன நாவலில் நாம் எதிர்பார்க்கக்கூடிய பரப்பு, நுணுக்கம், செறிவு ஆகியவை அனைத்தும் இதில் இருக்கின்றன. அவை அனைத்துமே கற்பனைப் பூச்சினை ஒரு பேருக்காகப் பூசியுள்ளனவே தவிர, கண்முன் நடக்கும் யதார்த்தங்கள்தாம். என்னைக் கேட்டால் கற்பனையாக ஒன்றைக் கட்டியமைப்பதை விட இப்படி நிஜமும் யதார்த்தமும் குலையாமல் ஒரு வாழ்க்கைத் தரிசனத்தைத் தருவதே மிகச் சிரமமானது.

இது படிப்பதற்கு எளிதான நாவல் அல்ல. கதைச் சுவையில் வாசகனை அலாக்காகத் தூக்கிச் செல்லும் பறக்கும் கம்பளம் அல்ல. ஆனால் வாழ்க்கையை எத்தனைத் தீவிரத்துடனும் வலியுடனும் சோர்வுடனும் சலிப்புடனும் நாம் வாழ்கிறோமோ, அதே தீவிரத்தையும் வலியையும் சோர்வையும் சலிப்பையும் இந்த நாவலில் அனுபவிக்கிறோம். இலக்கியத்தை வாழ்க்கைக்கு அணுக்கமாகக் கொண்டு வருவதில் இதை விட வேறு ஒரு வெற்றி எங்கிருந்து வரும்?

இது தனது நீள அளவில் ஒரு கைப்பிடிக்குள் அடங்கிவிடும் நாவலாக இருக்கலாம். ஆனால் தன் கொள்ளளவில் அப்படி அடங்கக் கூடியதல்ல.

மலேசிய இலக்கியத்திற்கு இப்படி ஓர் நாவலைக் கொடுத்துள்ள முத்துசாமிக்கு நவீன மலேசிய உலகு கடமைப் பட்டுள்ளது.

(தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ தொலைக்காட்சியும் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய முதல் நாவல் போட்டியில் (2005) முதல் பரிசு பெற்ற “மண்புழுக்கள்” நாவலை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழினி பதிப்பகத்தின் ஒத்துழைப்புடன் 2006இல் பதிப்பித்திருக்கிறது. மலேசியத் தலைநகர் குவால லும்பூரில் அண்மையில் தமிழக எழுத்தாளர் திலகவதி ஐ.பி.எஸ். முன்னிலையில் இந்த நூலுக்குச் சிறப்பான வெளியீட்டு விழாவும் செய்யப்பட்டது.)


karthigesur@gmail.com

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு