அ.ரெங்கசாமியின் “லங்காட் நதிக்கரை” நாவல் : கொஞ்சமாய்க் கற்பனை கலந்த வரலாற்று ஆவணம்

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

ரெ.கார்த்திகேசு



அ. ரெங்கசாமி ஓய்வு பெற்ற தமிழாசிரியர். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்து வாழும் தமிழர். மலேசியாவில் ஆங்கிலக் காலனித்துவம், ஜப்பானியர் ஆட்சி, ஜப்பானியர் கட்டிய மரண ரயில் பாதை, நேத்தாஜியின் இந்திய தேசியப் படை (INA) அமைப்பு, மலாயாவில் கம்யூனிச பயங்கரவாதம், அதன் ஒடுக்கம், மலாயாவின் அமைதியான விடுதலை, மலேசியா நிர்மாணம், அதன் தற்போதைய செழிப்பு என வரலாற்றில் பல முக்கிய கட்டங்களுக்கு அவரது எழுபதுக்கு மேற்பட்ட ஆண்டுகள் வாழ்க்கை சாட்சியாக இருந்திருக்கிறது. இப்படி வரலாற்றில் வாழ்தல் ஒரு காலந்தள்ளும் நிகழ்வாக மட்டும் அமைந்து விடாமல் இவற்றின் முக்கிய பகுதிகளை அவர் நான்கு நாவல்களாக்கி தமிழ் உலகுக்குத் தந்திருக்கிறார்.

இரண்டாவது உலகப் போரின் போது மலாயாவிலிருந்து ஆங்கிலேயர்கள் தோற்றோடி ஜப்பானியர் அதனைக் கைப்பற்றி ஆண்ட காலத்தில் தமிழர்கள் இங்கு அனுபவித்த துன்பங்களைப் பின்னணியாகக் கொண்டு 1983இல் “புதியதோர் உலகம்” என்னுன் நாவலை அவர் வெளியிட்டார்.

இதே கால கட்டத்தில் ஜப்பானியர்கள் மரண ரயில்வே அமைக்கத் தமிழர்களைக் கூட்டம் கூட்டமாய்க் கொண்டு சென்ற அவலக் கதையை “நினைவுச் சின்னம்” என்னும் நாவலாக்கி 2005இல் வெளியிட்டார்.

ஜப்பானியர் காலத்தின் போதுதான் இந்திய தேசிய விடுதலைக்காக நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவுக்கு வந்து இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். இதில் மலாயா இந்தியர்கள் ஆற்றிய பங்கினை “இமயத் தியாகம்” என்னும் நாவலாக்கினார். இது 2006/7இல் தமிழினி பதிப்பாக வெளியாகியுள்ளது.

இரண்டாம் உலகப் போர் முடிவுற்றவுடன் ஜப்பானியர் படைகள் வெளியாகி ஆங்கிலேயப் படைகள் மீண்டும் வந்து ஆட்சியமைத்தபோது, கம்யூனிஸ்டு கட்சியினரின் விடுதலைப் போர் தொடங்கியது. 1945 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் மலாயாவின் வரலாற்றில் ஆங்கிலேய ஆதிக்கத்துக்கும் மலாயா கம்யூனிஸ்டுக் கட்சிக்குமான உள்நாட்டுப்போர் தீவிரமாக நடந்து முடிந்தது. இறுதியில் கம்யூனிஸ்டுக் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. இந்தக் கிளர்ச்சியின் போதும் மலாயாவில் தமிழர்கள் இரணடு தரப்புக்களுக்கிடையிலும் மாட்டிக்கொண்டு அவதிப் பட்டார்கள். அந்தக் கதையைத்தான் “லங்காட் நதிக்கரை” என்னும் இந்த 2006ஆம் ஆண்டு நாவல் கூறுகிறது.

ஒரு வகையில் “லங்காட் நதிக்கரை” ரெங்கசாமியின் சொந்தக் கதை என்றே சொல்லலாம். தாம் பிறந்து வளர்ந்த சி ஜங்காங் என்னும் கம்பத்தின் வரலாற்றுத் துண்டு ஒன்றையே இந்த நாவலில் அவர் காட்டுகின்றார். நாவலில் வரும் முத்து என்ற இளைஞன் அவரேதான் என்றும் ரெங்கசாமி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சி ஜங்காங் என்று சீனர்களும் மலாய்க்காரர்களும் அழைத்தாலும் தமிழர்கள் அதற்கு வைத்த பெயர் “எட்டாங் கட்டை”. “கிள்ளான் நகரத்திலிருந்து லங்காட் சாலையின் எட்டவது கல்லில் ஒரு கம்பம். சாலையின் ஓரமாக வலது பக்கத்தில் சுமார் மூன்று கல் தொலைவும் மேற்கே லங்காட் நதிக்கரை வரை சுமார் ஐந்து கல் தூரமும் கொண்டு பரந்து கிடந்தது அக்கம்பம்.” (பக். 12)

இனி இந்தக் கதையை ரெங்கசாமி சொல்லும் விதத்தில் அதன் மக்கள் இரத்தமும் சதையுமாகத் தோன்ற ஆரம்பிக்கிறார்கள். அவர்களின் அவலம் நிறைந்த வாழ்க்கை ஒரு இருள் மயமான கருப்பு வெள்ளைப் படமாக ஓட ஆரம்பிக்கிறது. அனைத்தும் ஒரு ஆவணப்படம் போன்ற தீவிரமான காட்சிகள். இங்கு களியாட்டத்துக்கு இடம் கிடையாது. பாத்திரங்களுக்கு ஒப்பனை கிடையாது. நகைச்சுவை கிடையாது. பயமும் துயரும் பலவகையில் அறியாமையும் கொண்டு, உயிர்பிழைக்கும் நோக்கம் ஒன்றே தலையாகக் கொண்டு வாழ்ந்து வரும் மக்களின் படப் பிடிப்பு.

சி ஜங்காங் கம்பத்து மக்கள் மலாயா நாட்டில் “உதிரி மக்கள்” என வருணிப்பது பொருந்தும் எனத் தெரிகிறது. முதலில் இங்கு வாழும் பலர் ஜாவா, சுமாத்ரா ஆகிய பிரதேசங்களைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். மலேசியாவின் தலைமைச் சமூகமான மலாய் சமூகத்தோடு ஒட்ட முடியாமல் இப்படித் தனித்து வாழுபவர்கள். அவர்களோடு சொந்தமாகச் சின்னச் சின்னத் தோட்டங்கள் போட்டு விவசாயம் புரியும் சீனர்கள். இவர்களோடு ஒட்டிக் கொண்ட சில உதிரித் தமிழர்கள். இவர்கள் உதிரிகளாக இருப்பதன் காரணம் இவர்கள் அசலாக காலனித்துவ எஜமானர்களால் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய ஒப்பந்தக் கூலிகளாகக் கொண்டு வரப்பட்டு அங்கிருந்த கொடுமைகளைத் தாங்க மாட்டாமல் தப்பி ஓடிவந்து அகதிகளாக இந்தக் கம்பத்தில் தஞ்சம் புகுந்தவர்கள். சிலர் சொந்தத் தோட்டம் போட்டுக் கொண்டார்கள். சிலர் சீனர்களின் தோட்டங்களில் வேலை செய்தார்கள். (“வெள்ளைக்காரன் தோட்டத்தில் மாடாய் உழைக்கின்ற தமிழ்ப் பாட்டாளிகளின் எஜமான விசுவாசத்தை நேரில் கண்டிருந்த சீனர்கள் தமிழ்ப் பாட்டாளிகளுக்குத் தங்கள் தோட்டங்களில் வேலை கொடுப்பதற்கு முனைப்பாக இருந்தார்கள்” பக். 14) அன்றாடம் காய்ச்சி வாழ்க்கை. வாழ்தலைத் தவிர வேறு நோக்கம், இலட்சியம் இல்லாதவர்கள்.

எனினும் மனிதர்களின் வாழ்க்கை கூட்டு வாழ்க்கை என்பதால் அங்கும் ஒரு சமுதாய ஒழுங்கு திக்கித் திணறித் தொடங்குகிறது. முதலில் இவர்களில் பெரும்பாலோர் தமிழ் நாட்டில் சிவகங்கைப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டதால் அந்த ஊர்ப்பாசம் இவர்களை இணைத்திருக்கிறது. தேவை அடிப்படையில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது. தொடர்புகள் தொடர்ந்தால் உறவுகளும் ஏற்படுகின்றன. யாரும் நியமிக்காமலேயே ஒரு தலைமைத்துவம் தலை தூக்குகிறது.

கொஞ்சம் படித்தவராக, வயதானவராக, விவேகமானவராக இருக்கின்ற வெள்ளையன்தான் இப்படி மானாவாரியாகக் கிடக்கிற தமிழ் மக்களை அன்பால் இணைக்கிற ஓர் இழையாக இருக்கிறார். நல்லது கெட்டதுக்கு அவரிடமே அனைவரும் போகிறார்கள்.

சி ஜங்காங் கம்பத்தில் சிறிய தமிழ்ப் பள்ளி ஒன்றையும் கட்டி அதற்குக் “கம்பர் தமிழ்ப் பள்ளி” என்ற அழகிய பெயரையும் சூட்டுகிறர்கள். பக்கத்தில் ஒரு கோயிலும் உண்டு.

(நாடு முழுவதிலும் மேற்கொள்ளப் பட்ட இப்படிப்பட்ட எளிய முயற்சிகள்தான் பிற்கால சுதந்திர மலேசியாவில் தமிழ்ப் பள்ளிகள் வளர்ந்து அரசாங்கத்தின் அங்கீகாரமும் பெறவும், இந்துக் கோயில்கள் இந்து சமயத்தின் அதிகார பூர்வ அடையாளங்களாகி பெரிய நிறுவனங்களாகத் தழைக்கவும் வழி வகுத்தது.)

இப்படி காலனி ஆதிக்கத்துக்குப் பயந்து அதிகம் வெளியில் தலை காட்டாமல் அந்தக் குறுகிய சி ஜங்காங் கம்பத்துக்குள் அடங்கிப்போன, முற்போக்குச் சிந்தனைகள் இல்லாத, ஆனால் அமைதியான சமுகத்துக்குள் புயலாக நுழைகிறது கம்யூனிச தலைமறைவு இயக்கம்.

கம்யூனிஸ்டுகள் பெரும்பாலும் சீனர்கள். மா சே துங்கின் சித்தாந்தத்தால் உந்தப்பட்டு காலனியாதிக்கத்தின் முடிவில் பொதுவுடமைச் சமுதாயம் அமைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கம் அவர்களிடம் இருந்தது. ஆனால் இந்தச் சித்தாந்தப் போதனைகளின் பலத்தை விட தங்கள் துப்பாக்கி முனைகளின் பலத்தையே அவர்கள் அதிகம் நம்பினார்கள். இதனால் உள்ளூர் மக்களையும் பிரச்சாரத்தால் இணங்க வைப்பதை விட துப்பாக்கி முனையில் பணிய வைப்பதையே அவர்கள் முதன்மை நோக்கமாகக் கொண்டார்கள். ஆசிய, ஆப்பிரிக்காவில் பிற இடங்களில் காமுனிச சித்தாந்தம் தற்காலிகமாகவேனும் உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றிருக்கும்போது, மலாயாவில் அது தொடக்கத்திலேயே படுதோல்வி அடைந்து அழிந்து போனதற்கு இந்த முரட்டு அணுகுமுறையே முக்கிய காரணம்.

ஆனால் ரெங்கசாமி தன் கதையை இந்தச் சித்தாந்த விவாதங்களுக்கு வெளியே நிறுத்தி வைத்து அவரது பாத்திரங்களின் எளிமையான நோக்கு நிலையிலிருந்து, அவர்கள் இந்தப் பயங்கரவாதிகளைப் பார்த்துப் பயந்து “ஆ” வென்று வாய்பிளந்து நிற்கும் கதை மட்டுமே சொல்லிச் செல்கிறார். இந்த எளிமையே இவர்கள் வாழ்க்கையை நமக்கு அணுக்கமானதாக ஆக்குகிறது. இந்த எளிமையிலும் இந்த வெள்ளாந்தித் தன்மையிலும் இந்த மக்களோடு ஒரு பரிதாப உணர்வுடன் ஒன்றிப்போக முடிகிறது. ரெங்கசாமியின் கதை சொல்லும் பாணியில் வாசகன் லயித்துப் போக முடிகிறது.

சி ஜங்காங் கம்பத்துக்கு கம்யூனிச பயங்கரவாதிகள் வருகிறார்கள். கம்பத்துவாசிகளை அவர்களுக்கு உணவு கொடுத்தும் சேவைகள் ஆற்றியும் உதவுவதற்கான சேவர்களாக மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள். முத்து என்னும் இளைஞன் ஒருவனே அங்கு கொஞ்சம் படித்தவனாகவும் உலகம் அறிந்தவனாகவும் இருக்கிறான். அவனைத் தங்கள் பக்கம் இழுக்க ஒரு அரைமனதான முயற்சி செய்து கைவிடுகிறார்கள். அறியாத முரட்டுத் தமிழ் இளைஞர்கள் ஓரிருவரைத் தங்களுடன் சேர்த்து வைத்துக் கொள்ளுகிறார்கள். மற்றபடி அங்குள்ள தமிழர்கள் எவரும் அவர்களுக்குப் பொருட்டல்ல. யாராவது அவர்களைப் பற்றி உளவு சொல்கிறார்கள் என்று தெரிந்தால் இழுத்துக் கட்டி உயிரோடு புதைப்பது பற்றி அவர்கள் தயங்குவதில்லை.

இப்படிப்பட்ட தீவிரமான நிகழ்ச்சிகள் உள்ள இந்த நாவலில் கதாநாயகன் என எவரும் இல்லை. வீர தீர ஆற்றல்கள் நிறைந்ததாக எந்தப் பாத்திரமும் படைக்கப் படவில்லை. கம்யூனிச பயங்கரவாதிகளாலும் அவர்களைத் துடைத்தொழிக்கத் துடிக்கும் அரசாங்கப் படைகளாலும் தன் மீது திணிக்கப்படும் எல்லாக் கொடுமைகளையும் அமைதியாக, வாய் மூடி ஏற்றுக் கொள்ளும் சமூகமாகவே இது இருக்கிறது.

“கீரிக்கும் பாம்புக்கும் சென்மப் பகைங்கிறது எல்லாருக்கும் தெரியும். இப்ப நாம அந்தக் கீரிக்கும் பாம்புக்கும் இடையிலே மாட்டிக்கிட்டு இருக்கிறோம். கீரியைக் கண்டா அதுக்கு நல்லபிள்ளையா நடந்துக்கணும். பாம்பப் பாத்தா அதுக்கு நல்லவுகளா நடந்துக்கணும். கீரியைப் பத்திப் பாம்புக்கும் பாம்பப் பத்திக் கீரிக்கும் எதுவுமே சொல்லாமலே வாயை பேணிக்கணும். இப்ப நாம இருக்கிற நிலைமயில நாம பிழைக்கிறதுக்கு இதுதான் நல்ல வழியாத் தோணுது. புரிஞ்சிக்கிட்டயளா?” (பக்.80) என வெள்ளையன் கூறுவதுதான் — நமக்கு மிகுந்த எரிச்சல் ஊட்டுவதாக இருந்தாலும் — இந்த சமூகத்திற்குச் சரியான போதனை என்று நமக்கும் தோன்றுகிறது. பல்வேறு சரித்திர, சமுதாய துரோகங்களால் கடைநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்ட இம்மக்கள் வேறு எவ்வாறு சிந்திக்க முடியும்?

ஆனால் இப்படிச் செயலற்றுப் போன கையறு நிலையிலும் எதிர்காலம் பற்றிய சில தூரநோக்குச் சிந்தனைகளையும் ஆசிரியர் புகுத்துவது நம்பிக்கை யூட்டுகிறது.

“இந்த நிலைமியில நாமெல்லாம் நிம்மதியா வாழறுதுன்னா அத்தை சொன்ன மாதிரி கப்பலேறுதுதான் சரியான வழி” என்கிறார் ஒருவர். அதற்குச் சூடான பதில் வருகிறது:

“சும்மாயிருங்க மச்சான். இந்தக் கம்பத்தில நம்ம சனங்கள விட சீனனுகதான் நிறைய இருக்கானுக. இந்தியாக்காரங்கள விட அந்தச் சீனனுகளத்தான் அரசாங்கம் புடிச்சிக்கிட்டிருக்கு. இருந்தாலும் அவனுக யாருமே நம்மைப்போல நினைக்கல. நாட்டுல மலாய்க்காரகதான் அதிகமாயிருக்காக. அவங்க எங்கேயும் ஓடிப்போரேன்னு சொல்லல. நாம மட்டும் ஏன் இப்படி பயங்து சாகணும்? எல்லாருக்கும் வந்தது நமக்கும் வந்திட்டுப் போகுது. சும்மா பயந்து சாகாதீய” (பக்.78).

இப்படித் தங்கள் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு ஓடாமல் இருந்த மக்களால்தான் இன்று மலேசியாவில் தமிழ்ச் சமூகம் தழைத்திருக்கிறது. ஓடியவர்கள் பலர் இங்குள்ள பல வாய்ப்புக்களை தங்கள் சந்ததிகள் இழக்கக் காரணமாக இருந்தார்கள். இந்த பயங்கரவாதக் காலத்துக்குப் பின்னரும் 1969இல் இனக் கலவரங்கள் வெடித்த பின்னர் தங்கள் சொத்துக்களை அவசரமாக வந்த விலைக்கு விற்றுவிட்டு தமிழ் நாடு திரும்பியவர்கள் பலர். இவர்களால் மலேசியத் தமிழர்கள் இழந்த வாய்ப்புக்கள் பல. ஆகவே ரெங்கசாமியின் சி ஜங்காங் கம்பத்து மக்கள் காட்டிய துணிவு அறுபது ஆண்டுகளுக்குப் பின் எண்ணிப் பார்க்கும்போது, அவர்களின் வாரிசுகளுக்குக் கொடுத்த கொடை என்றே சொல்லவேண்டும்.

காலனித்துவ அரசாங்கம் பயங்கரவாதம் மிகுந்திருந்த பிரதேசங்களைக் “கருப்புப் பிரதேசங்கள்” என அறிவித்து தீவிர ராணுவ நடவடிக்கை எடுத்தது. ஊருக்கு ஒதுக்குப் புறமாய் அமைந்திருந்த சீனர்கள், இந்தியர்கள் குடியிருப்புப் பகுதிகளை உடைத்தெறிந்தது. (பயங்கரவாதிகளின் ஆதரவு வளங்களை அழிப்பதே இதன் நோக்கம்.) அவர்களைக் குண்டுக் கட்டாய்க் கொண்டு போய் “சீனர்கள் கேம்ப்”, “இந்தியர்கள் கேம்ப்” என்று பிரித்து முள்வேலிப் பிரதேசங்களுக்குள் அடைத்தது. இந்தக் கொடுமைகளும் பயங்கரவாதிகள் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் போலத் தீவிரமானவைதாம்.

இப்படி உருவாக்கப்பட்ட கேம்ப்புகளின் பிற்காலத் தலைவிதியையும் சொல்லவேண்டும். கேம்ப்புகளில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு துண்டு அரசாங்க நிலமும் நான்கு தூண்கள் நிறுத்தி தகரத்தால் வேயப்பட்ட கூரையும் மட்டுமே கொடுக்கப் பட்டது. அதற்குள் வீட்டை உருவாக்கிக் கொள்வது குடும்பத்தாரின் திறமையைப் பொறுத்தது. நிலப் பட்டாக்கள் ஏதும் அப்போது கொடுக்கப் படவில்லை.

பிற்காலத்தில் பெரும்பாலான சீனர்கள் தங்களுக்கு வீடுகளை அங்கே அமைத்துக் கொண்டு துண்டு நிலத்தில் காய்கறி செய்து பயிரிட்டுப் பெருக்கினார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு நாடு சகஜ நிலைக்குத் திரும்பிய பிறகு நிலப்பட்டாவும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழர்களில் பலர் வீடு கட்டாமல் நகரில் உள்ள உறவினர் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் ஒண்டுக் குடித்தனம் போனார்கள். இந்த நிலத்துண்டுகள் மற்றவர்களுக்குக் கைமாறிப் போயின.

சி ஜங்காங் கிராமத்தில் இதுதான் நிகழ்ந்தது. ரெங்கசாமியின் வார்த்தைகளில்:

“லங்காட் நதிக்கரை மக்களுக்காக லங்காட் சாலை பதினான்காவது மைலிலும் (ஜென்ஜாரோம்) கோலாத் துறைமுகம் பண்டமாரானிலும் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த இரண்டு இடங்களில் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் குடியேறலாமென்று வீடு தோறும் அறிக்கை வழங்கப்பட்டது… லங்காட் நதிக்கரை கம்பம் கலையத் தொடங்கியது.”

இனிதான் தெரிகிறது இந்த மக்களின் இருதயத்துக்குள் புகுந்து விட்ட அடிமைப் புத்தி: “சீனர்கள் பதினான்காம் கட்டைக்கும் பண்டமாரானுக்கும் போய்க் கொண்டிருக்க, தமிழ் மக்களில் பெரும்பாலோர் வெள்ளைக்காரன் தோட்டங்களை நாடிச் சென்றனர்” (பக். 109).

கூடுகள் திறந்து வழிகள் சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் பழைய கூடுகள் தேடிப் பறக்கும் இந்தப் பறவைகள் பரிதாபத்துக்கு உரியன அல்லவா?

இது மலேசியாவின் தமிழ் மக்களின் கதை. அவர்களின் வாழ்வையும் தாழ்வையும் மிகக் குறைவான கற்பனை ஒப்பனையுடன் சொல்லியிருக்கிறார் ரெங்கசாமி. அதைச் சொல்ல அவருக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன. சி ஜங்காங் கம்பத்தில் பிறந்த பிள்ளை அவர். கம்பர் தமிழ்ப் பள்ளியில் படித்தவர். பின்னர் அந்தப் பிரதேசத்திலேயே ஆசிரியராகத் தொழில் தொடங்கித் தலைமை ஆசிரியராக உயர்ந்தவர். இன்று ஓய்வு பெற்று அதே பகுதியிலேயே வசித்து வருகிறார். ஆகவே இது கதை அல்ல. பெரும்பாலும் ரெங்கசாமியின் சுய சரிதை.

லங்காட் நதி இன்றும் சாட்சியாக ஓடுகிறது.

(தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ தொலைக்காட்சியும் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் இணைந்து நடத்திய முதல் நாவல் போட்டியில் (2005) பிரதானப் பரிசான “பி.பி.நாராயணன் விருது” பெற்ற “லங்காட் நதிக்கரை” நாவலை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழினி பதிப்பகத்தின் ஒத்துழைப்புடன் 2006இல் பதிப்பித்திருக்கிறது. மலேசியத் தலைநகர் குவால லும்பூரில் அண்மையில் தமிழக எழுத்தாளர் திலகவதி ஐ.பி.எஸ். முன்னிலையில் இந்த நூலுக்குச் சிறப்பான வெளியீட்டு விழாவும் செய்யப்பட்டது..)


karthigesur@gmail.com

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு