சிவாஜியும் சினிமா படும்பாடும்!!

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

மா.சித்திவினாயகம்



“அண்ட காகசம், அபு கா ஹுகும் திறந்திடு சீசேம்” என்று மந்திர மாயா ஜாலத்தால் புதையல் எடுத்த புரட்டுப்படந்தான் தமிழில் முதல் முதலாக வந்த வர்ணத்திரைப்படம். மாயா ஜாலங்களும்,மயக்கும் வித்தைகளும், பூச்சாண்டிகளும்,ஏமாற்றுகளும், எத்திப்
பிளைப்பதுமாய் தமிழ்ச் சினிமாவின் போக்குத் திசைதிரும்பியாயிற்று.மக்கள் மனதையும், மூளையையும் திருடி மூடக் கொள்கைகளால் அவற்றை மூடிவைத்து விட்டு,அவர்கள் சிந்திப்பதற்கான வழிகள் அனைத்தையும் அடைத்து அவர்களின் வாக்கினால் பல முதல்வர்கள் தமிழ்நாட்டை சிதைத்துச் சூறையாடி ஆண்டு அனுபவித்தார்கள். அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வகையிலே சிவாஜி எனும் மற்றுமொரு மாயா, உலகத்தமிழர்களைப் பரபரப்பாக்கி விட்டதாகவும்,திருவிழாக்கோலம் பூணவைத்ததாகவும் செய்தி. “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே”என்ற வார்த்தைச் சிலம்பத்திற்கு அணிகலனாக பெரிய எடுப்பில் முடுக்கி விடப்பட்ட விளம்பரங்களும் செய்திகளும், நேர்காணல்களும்,கிசுகிசுப்புகளும் அந்தப்படத்தை ஒரு தடவை பார்த்துவிடமாட்டோமா? என்கிற மாயயை மனத்தீயில்க் கொழுந்து விட்டெரியச் செய்திருந்தன. வீர சிவாஜின் கதையாய் இருக்குமோ?
விடுதலைப்புரட்சியின் வீச்சாய் இருக்குமோ? மானிடவிடியலின் கருவாய் இருக்குமோ? மறைந்த சிவாஜியின் வாழ்வாய் இருக்குமோ? எந்தச் சிவாஜி? எந்தச் சிவாஜி? என அடி முடி தெரியாதலைந்தவர்கள் ஏராளம். எல்லார் தலையிலும் தன்னகங்காரத்துடன் தான் சப்பிய மிளகாயைத் துப்பி மொட்டையாய் வந்திறங்கி இருக்கிறது சிவாஜி.

இதற்கிடையே “சிவாஜிராஜ்” என்கிற இயற்பெயர் கொண்டரஜினியின் தமிழருக்கெதிரான நடவடிக்கைகள் பற்றி பல இணையங்கள் பக்கம் பக்கமாய் எழுதிப் படத்தைப் பகிஸ்கரிக்குமாறு கேட்டிருந்தன. சுவிஸ்நாட்டு துர்கா மாநில வெண்திரைகளில் இப்படத்தை வெளியிடமாட்டோமெனப் பகிரங்கமாகவே அறைகூவல் விடுத்திருந்தார்கள். கறுப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றும் பயங்கரவாதிகளாக தங்களை ஆக்கிவிட்டதாக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எச்சரித்திருந்தது. இந்திய சீன யுத்தத்தின் போதும்,கார்கில் போரின் போதும் மார்தட்டிக் கொக்கரித்து, பணம் சேர்க்கும் இந்தக் கோடம்பாக்கக் குரங்காட்டிகள், தங்கள் வருவாயில் முக்கிய பங்கை செய்கிற புலம்பெயர்ந்தோரின் இரத்த உறவுகள் கொடிய அடக்குமுறைகளுள் துன்பப்படுகிற போது என்ன செய்து கிழித்தார்கள் என்கிற துண்டுப்பிரசுரங்கள் எங்கும் பறந்தன.

இத்தனைக்கு மத்தியிலும் பாற்குட அபிசேகங்களுடனும்,பன்னீர்த்தெளிப்புகளுடனும் இந்தியா,உள்ளிட்ட அனைத்து நாடுகளின் தமிழ்த்திரையரங்குகளிலெல்லாம் ஜனஅலை முட்டிமோதியது. வாகன நெரிசலில் தரிப்பிடங்கள் நிரம்பி வழிந்தன.சிதைந்து விழும் “பொப்கொர்ண்”களாலும்,சிந்திய குளிர்பானங்களாலும் திரையரங்குகள் குளிப்பாட்டப்பட்டன. அமளி துமளிப்பட்ட இந்த திரைப்பட ஆர்வலர்களின் எதிர்பார்ப்பை சிவாஜி தீர்த்து வைத்ததா? மனதளவில் ஊதிப்பெருத்த பலூன்களாட்டம் உற்சாகத்தோடு போன ஜனஅலை வெடித்துச் சிதைந்த பலூன்களாக வெளியே வந்தது ஏன்? சிவாஜி சொல்ல விளைந்தது எதை?

உப்புசப்பற்ற, ஒற்றை ரூபாக்கதைக்கு 35 கோடி செலவென்று கதை உலவுகின்றது. பல படங்கள் மூலமாக தின்று, தின்று மென்று,மென்று வீசி எறி¢ந்த அதே செய்தி. இலவச உணவு, லவக்கல்வி, இலவசமருத்துவம் என்கின்ற கோசங்களை வைத்தே இந்தியாவின் எல்லா ஆட்சிகளும் மாறி மாறி மக்கள் முதுகுகளில் சவாரி செய்தன, செய்கின்றன.அதற்கு ஒரு படி மேலே போய் புதைத்து, வைத்திருக்கிற கறுப்புப் பணத்தை எப்படி சுளுவாக வெள்ளைப் பணமாக மாற்றலாம் என்கிற செய்தியைச் சொல்கிற படந்தான் சிவாஜி. கடைத்தெருப்பெண்கள் புறக்கணிக்கப்பட்டு கற்புக்கரசியை கோவிலில் கண்டுபிடித்த ரஜினியின் கண்ணகி இறுதிவரை இடுப்பைக் காட்டும் ஆபாசத்துள் திளைத்துக்கிடக்கிறாள்.அங்கவை,சங்கவை என்று இரு தமிழ் பெண்கள் கறுப்பாக்கப்பட்டு
இலக்கியம் கொச்சைப்படுத்தப்படுகிறது. திருக்குறள் மாதிரி “பஞ்ச்” சொற்களால் ஆன படம் என்றார் “விவேக் ” சிக்ஸிற்குப் பிறகு செவண்டா சிவாஜிக்குப் பிறகு எவண்டா? என்பது தான் இவர்கள் மொழியில் திருக்குறள். வசனகர்த்தா சுஜாதா வசமாக மாட்டிக்கொண்டுள்ள படம் இது. ஆங்கில மோகத்தையும் அன்னியச் சீரழிவுகளையும் உழுத்துப் புழுத்துப் போன கருத்துகளையும் கொண்ட இப்படத்தின் பாடல் ஸ்பெயின் நாட்டில் ஒளிப்பதிவானதாம். வளைய, வளைய வரும் புகைச்சுருள்களுக்கும், எறிந்து ஏந்தும் வித்தைகளுக்கும் பிரதியுபகாரமாய் நாட்டையும், அதிகாரத்தையும் கேட்கும் அற்புதம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இரண்டரை மணிக்கு மேலாக பொறுமையைச் சோதித்த இப்படத்தின்”பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல” என்கிறார்கள். எது அதிர்கிறது என்பது தான் இப்போதைய கேள்வி?


elamraji@yahoo.ca

Series Navigation

மா.சித்திவினாயகம்

மா.சித்திவினாயகம்