சுந்தர ராமசாமி என்கிற மாமனிதர்!

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

கி.ராஜ நாராயணன்


என்னளவில், இலக்கியத்திற்கு ‘அப்பா’ யாரென்று தெரியாது. ஆனால், சித்தப்பாக்கள் சிலரை அடையாளம் கண்டுக்கொண்டிருக்கிறேன். கோபல்ல கிராமம் கி.ராஜநாராயணன் அவர்களில் விசேசமானவர். பள்ளிக்கூடம் பக்கமே போகாத இவர், இன்றைக்கு பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் மரியாதைக்குறியவர்! அந்த பல்கலைக் கழகமே இவரை அழைத்து அந்த மரியாதையைச் செய்திருக்கிறது. தகும். கரிசல் மண்காரரான இவர், தன்மண்ணின் சகலத்தையும் தன்எழுத்தில் புதைத்து வாசிப்பவர்களது மனதை மணக்கச் செய்திருக்கிறார். கரிசல் மண்ணிற்கு இன்னொருப் பிறவி உண்டென்றால்,அப்பவும் அது அவருக்கு நன்றி கடன் படும்.

கி.ரா.வின் கட்டுரை ஒன்றை கீழே பதிவு செய்திருக்கிறேன். சமீபத்தில் வாசித்தவைகளில் பிடித்தது அது. அதை கட்டுரை என்று
குறிப்பிடுகிறேன் என்றாலும், அந்த எழுத்து யாரோ எதிரில் இருந்து கேள்வி கேட்க; இவர் நினைவின் ஆழத்திற்குப் போய்
பதில் சொல்கிற தடுமாற்றத்துடன் இருக்கிறது. அந்தப் பத்திரிகையின் பதிவில், கி.ரா.விடம் எந்த நிலையில் பேட்டி எடுக்கப்பட் டது என்பதற்கோ, அல்லது அது, கட்டுரைதான் என்பதற்கோ எந்த முன்குறிப்போ, பின்குறிப்போ எதுவுமில்லை. எந்த தருணத் தில், எந்த தேதியில் இது அவரால் பெறப்பட்டது என்பதற்குகூட முன்குறிப்பு எதுவுமில்லை. அந்தப் பதிவின் முக்கியத்துவம் உணர்ந்தவனாக,அந்தப் பத்திரிகையின் பதிவில் கண்டமேனிக்கு சொல், கமா, முற்றுப்புள்ளி சுத்தமாய் தட்டச்சு செய்திருக்கிறேன்.

சு.ரா. இயற்கையெய்தி சுமார் ஒன்னறை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இத்தனைக் காலமும் அவர் குறித்த நினைவஞ்சலி கட்டுரை ஏதும் கி.ரா. எழுதியதாக நான் அறியவில்லை. அவர்கள் இருவரும் இடதுசாரி மனோபாவம் கொண்டவர்கள்.சு.ரா.க்கும், கி.ரா.வுக்கும் இடையே நல்ல நட்பும் இருந்தது. அவர்களுக்கு இடையேயான நட்பு மாதிரியே, விமர்சனமும் அன்னோன்னியம். இதனால் மட்டுமல்ல, பின் எதனாலோ சு.ரா.விற்கான அஞ்சலிகுறித்த கி.ரா.வின் எழுத்தை எதிர்ப்பார்த்தவனாக இருந்தேன். அது இப்பொழுது நடந்திருக்கிறது.

கி.ரா.வின் இந்தப் பதிவில், சு.ரா.வுக்கு ஏன் சாகித்திய அகெடமியின் பரிசு கிடைகவில்லை? என்பது குறித்து ஒரு பகுதி பேசுகிறது. இது குறித்த கி.ரா.வின் விளக்கம் ஒப்புக்கொள்ளும்படி இல்லை.

எது எப்படி என்றலும், இந்தியஅரசு சார்ந்த எந்த ஒரு இலக்கியப் பரிசும் சு.ரா.வுக்கு வழங்கப்படாத நிகழ்வு மன்னிக்க முடியாத ஒன்று. சம்மந்தப்பட்ட அக்கடெமிகளின் தேர்வுகமிட்டி அங்கத்தினர்கள் காலத்திற்கும் சம்பந்தப்பட்ட அமைப்பிற்கு இழுக்கு தேடி வைத்துவிட்டார்கள் என்பதுதான் நிஜம்!

கீழே கி.ரா.வின் கட்டுரை:

– தாஜ்

*********

என்னுடைய அனுபவத்தில் படைப்பாளி சு.ரா. என்பதைவிட, நங்கள் (கி.ரா., தீப.நடராஜன்) சுந்தர ராமசாமி என்கிற மாமனிதரைப் பார்த்து அவரோடு இணங்கி இருந்ததையே பொன்னான நாட்கள் என்று நினைக்கிறேம். தொடக்க காலத்தில் இருந்த சுந்தர ராமசாமி எங்களுக்குப் பிரியமானவர். உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். குழந்தைகளுக்குப் பிடித்தமான ஒரு மாமனார் போல கண்டவுடன் சந்தோசம் கொண்டு, கடைகளுக்கு அழைத்துக்கொண்டுபோய் விதவிதமான தின்பண்டங்களை வாங்கித் தருவதும், பல இடங்களுக்குக் கூட்டிக் கொண்டு போய் சுற்றிக் காண்பிப்பதும், நேரம் கண்டு உணவு தந்து குடும்பத்துடன் எம்மை உபசரித்து ஓய்வுகொள்ள வைப்பதுவும், பிடித்தமான கர்நாடக இசைத் தட்டுகளைப் போட்டு எங்களோடு சேர்ந்து அனுபவிப்பதும்…. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அவரோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதுவே – மணிக்கணக்கில் நாட்கணக்கில் – ஒரு சுகானுபவம். அது ஒரு ‘சேகரிப்புக்காலம்’ என்று சொல்லத் தோன்றுகிறது. இப்பொழுது; குளிர் காய்வதுக்கு முன்னால் சருகுகள் சேகரிப்பது போல. என்னைப் பேசவிட்டுக் கேட்டுக் கொண்டே இருப்பார். பேசி நிறுத்திய நேரத்தில், இவைகளை நீங்கள் எழுத்தில் பதிவு செய்யலாமே என்பார்.

முதன் முதலில் நான் அவரைப் பார்த்தது நெல்லை ஜங்ஷனில் இருந்த டெயிலர் சேவியரின் -மாடியின் -கடையில்தான். அப்போது என்னை அவருக்குத் தெரியாது; அவரை எனக்குத் தெரியும். சேவியரின் டைலரிங் கடைதான் எங்களுக்கெல்லாம் ஒரு தாப்பு. அப்போது பார்த்த சுந்தர ராமசாமி அப்படியே மனசில் இருக்கிறார். தங்க பிரேம் போட்ட மெல்லிய மூக்குக் கண்ணாடி, தாய்ப்பால் மட்டுமே உண்டு வளர்ந்த தளதளப்பான செழித்த குழந்தை முகம். சிவந்த அகலமான காதுகள். பக்கவகிடு எடுத்துச் சீவிய கிராப்பு. வெண் நிறத்தில் தைத்த நாகர்கோவில் ஜிப்பா. கரையில்லாத ரெட்டைத்துண்டு வாயில் வேட்டி. படு சுத்தமாகத் தெரிந்தார். எழுத்தாளர் ரகுநாதனும் தோழர்களும் நடத்துகிற புதுமைப்பித்தன் பற்றிய கூட்டத்துக்கு இவர் பேச வந்திருக்கிறார். அந்தக் கூட்டத்தில் சுந்தர ராமசாமி பேசிய இரண்டு சமாச்சாரங்கள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அரை நூற்றாண்டு ஆனாலும்.

1. சென்னை நகர வீதி ஒன்றில் பரபரப்பாக மக்கள் ஓடிக்கொண்டிருந்தபோது அனாதையாக ஒரு துருக்கப் பிச்சைக்காரர் செத்துக் கொண்டிருந்ததின் வர்ணனை.

2. முதுகில் மீசை வைத்துக்கொள்ள வேண்டும் என்றாலும் செய்வார்கள் இந்த பிராமணர்கள்.

முதல் விசயம், புதுமைப்பித்தன் கதையில் வரும் காட்சி. ரெண்டாவது சொன்னது, எதுக்காக வந்தது என்று நினைவில்லை. என்றா லும், ‘முதுகில் மீசை’ என்பது நன்றாகவே நினைவில் பதிந்துபோனது.

எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டதுக்குக் காரணம், பொங்கல் மலராக வெளிவந்த ‘தாமரை’யின் இரண்டாவது இதழில் எனது ‘கதவு’
கதையைப் பாராட்டி அவர் எனக்கு C/o தாமரை என்ற முகவரிக்கு எழுதிய உள்நாட்டுத் தபால் கார்டு மூலமாகத்தான்.

இப்படிக் கடிதங்கள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தால் எப்படி? எப்பொ நாம நேரில் சந்திக்கிறது, பார்க்கிறது? என்று கேட்டுக்
கொண்டே இருந்தார்.

முடிகிற மட்டும் இருந்து பார்ப்போம்.

ஏம் அப்படி?

பார்த்துட்டா இவ்வளவுதானா என்று ஆயிடும்.

அப்படி ஆகுதான்னு பார்க்கலாம்.

இப்படிக் கடிதங்களிலேயே காலம் நகர்ந்து கொண்டிருந்தது. அவருடைய தமிழ் எழுத்துக்கள் நேராக நிற்காமல் நாட்டியம்
ஆடுவதுபோல சாய்ந்து நிற்பது ஒரு அழகு. திடீரென்று ஒரு நாள் டைப்படித்த எழுத்துக்களில் அவருடைய கடிதம் வந்தது. பார்க்கச் சகிக்கலை; மீசை மழித்த முகம் போல. படிய வாரிய தலைகூட கொஞ்சம் கலைந்து இருப்பதுதாம் அழகு. எல்லாம் பார்த்துப் பழகிட்டா சரியாயிரும் என்பதுதான் அவருடைய பதில்.

எங்கள் மூவருக்குள்ளும் ஒரு மழைக்காலம் போல பாட்டம்பாட்டமாகக் கடிதப் போக்குவரத்துக்கள் நடந்துக் கொண்டே இருந்தது.

மழைக்காலம் முடிந்தது என்பதுபோல திடீரென்று நிறுத்திக்கொண்டார். என்னை அசைத்தும் பெயறவில்லை. ஜவிளிக்கடையில் உட்கார்ந்து விட்டேன் என்றுவிட்டார். கல்லாப்பெட்டி சுந்தர ராமசாமி அவர்களுக்கு ஸ்ரீல ஸ்ரீட ஸ்ரீட சுந்தர மகானந்த சுவாமிஜீ
அவர்களுக்கு என்றல்லாம் விளித்துக் கடிதங்கள் எழுதிப் பார்த்தோம்; சிணுங்கவில்லை மனுசன்! சரீ; இது ஒப்பேறாத கேஸ் என்று நாங்களும் கைவிட்டோம். கடிதங்களுக்கு இப்போது இருப்போது அப்பொ ‘கிராக்கி’ இல்லாத காலம். இதுகளை எல்லாம் பந்தோ பஸ்து பண்ணணுமெ என்று தோன்றவில்லை எங்களுக்கு. ஒருவர் எழுதிய கடிதத்தை மற்ற நண்பர்களும் பார்க்கட்டுமெ என்று, எங்கள் கடிதங்களோடு சேர்த்துவைத்து நண்பர்களுக்கு அனுப்புவதும் வழக்கமாக இருந்தது. அதனால் பல கடிதங்கள் திரும்பி வராமல் – ‘வரும்போது கொண்டு வருவேன்; நேரில் தருவேன்’ என்பது – “மறந்த ஆடு போன ஆடுதான்; மறந்த கடன் போன கடந்தான்” என்பதுபோல போனதும் தொலைந்ததும் கணக்கு வழக்கில்லை. “கடல்கொண்ட தமிழ்”தான்!

ஒன்றை மட்டும் எங்களிடம் மாறிமாறிச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள் சுந்தர ராமசாமியும் கிருஷ்ணன்நம்பியும்; கி.ரா.போலக் கடிதம் எழுத யாராலும் முடியாது, என்று.

இது கடேசியில் எதில் போய் முடிந்தது என்றால், நாங்கள் நடத்தத் தொடங்கிய ‘ஊஞ்சல்’ கடிதக் கையெழுத்துப் பத்திரிகையில்
சு.ரா. ஒரு கடிதம்கூட எழுத முடியாமல் ஆக்கிவிட்டது. அப்படி ஒரு தயக்கம் – பயம் என்றுகூடச் சொல்லலாம் – ஏற்படுத்திவிட்டது அவருக்கு. இது மிகையான வார்த்தை இல்லை. உங்களது கேள்விக்கு நான் இன்னும் சரியான பதில் சொல்லவில்லை.

படைப்பாளி சு.ரா. என்பவர் வரவர எங்களுக்கு, பிற்பாடு கொஞ்சம் வக்கிரமானவராகத் தெரிய ஆரம்பித்தார். “என்னையா இப்படி! உங்களுடைய அருமையான சொல்நடை என்ன ஆச்சி?” என்று கேட்டபோதெல்லாம் அவர் சொன்ன பதில்; கலங்க வேண்டாம்; நான் பரிசோதனை செய்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். திரும்பவும் அந்த இடத்துக்கு வருவேன் என்றார்.

கடேசியில், மிகக கடேசியாகத்தான் வந்து சேர்ந்தார். காலம் அவரைக்கொண்டு போவதற்குச் சற்று முன்னால்; கடைசிக் கதையே சாட்சி அதுக்கு. விஞ்ஞான பரிசோதனைகளுக்குச் செல்வத்தை வாரிவாரித் தரவேணும்;இலக்கியப் பரிசோதனைகளுக்கு ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வாரித்தர வேண்டும்.

ஆக, இலக்கியத்துக்கு வரவு என்ன என்பதை பதில் சொல்வதும் காலமெ.

படைப்பாளியாக மட்டுமில்லாமல் விமர்சகராகவும் இருந்ததால் சு.ரா.வுக்கு இலக்கிய விருதுகள் கிடைக்காமல் போனதாகச் சொல்ல முடியாது. மற்ற விருதுகள் எப்படியோ, சாகித்ய அகாதெமி விருது அவருக்குத் தருவதாகவே இருந்தது என்பது எனக்குத் தெரியும். அது பின்தள்ளிப் போனதுக்கு நான் நினைக்கும் காரணம், அவர் வாங்க மறுத்து விடுவாரோ என்பதுதான்.

ஏன் அப்படி நினைக்கணும் என்று கேட்டதுக்கு, சு.ரா.வுக்குத் தந்த அகதெமியின் தமிழ் ஆலோசனைக் கமிட்டியின் குழு மெம்பர்
பதவியை ஏற்றுக்கொள்ள பதிலே சொல்லாமல் புறக்கணித்ததே என்பதுதான்; “நன்றி, வேண்டாம்” என்றாவது சொல்லியிருக்கலாம்
இவர்.

தமிழ் இலக்கியத்துக்கு எந்த விருது ஏற்படுத்தப்பட்டாலும் சுந்தர ராமசாமியின் பெயரும் பரிந்துரைக்கப்படாமல் இருக்காது. ராஜ ராஜன் விருது ஏற்படுத்தியதும், யாருக்குத் தரலாம் என்று என்னிடம் கேட்டபோது சுந்தர ராமசாமிக்குத் தரலாம் என்று பரிந்துரை செய்தேன். (கடேசியில் அது ‘பாரதமாதா காவியம்’ என்ற நூலுக்குப் போய்ச் சேர்ந்தது. காரணம் அனைவருக்கும் தெரிந்ததே!)

ஒரு நல்ல படைப்பாளி என்பவன் ஒரு நல்ல விமர்சகனாகவும் இருந்துதான் ஆகணும் என்று கட்டாயமா! இவனுடைய வேலை அது இல்லை என்பதுதான் எனது பதில். இவனைப் பற்றி இவன் விமர்சித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

ரசிகமணி சொல்லுவார்; உமியை களகில் எடுத்துப்போட்டுப் பிடைத்துப் பிடைத்து, இதில் அரிசி இல்லை, அரிசியில்லை என்று
சொல்லிக்கொண்டிருப்பதுவும் ஒரு தொழிலா!

பிரமனுக்கு தொழில் படைப்பது
விஷ்ணுவுக்கு (ரசிகனுக்கு) காப்பது
சிவனுக்குத் தொழில் அழிப்பது
அவனவன் துருத்திகளை அவனவன் ஊதட்டும்.

பொதுவுடமைக் கொள்கையின்பேரில் உள்ள ஈர்ப்பு வேறெ, அந்தக்கட்சிகள் பேரில் உள்ள ஈர்ப்பு என்பதுவேறெ. அந்தக் கொள் கையில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டால் பிற்பாடு – அனேகமாய் – அது மாறவே மாறாது.

கட்சிகள் சமாச்சாரம் அப்படி இல்லை. சாரதி(ஓட்டுனர்) சரியில்லை என்றால், அப்பா நிப்பாட்டு நா இறங்கிக்கிறேம் என்று ஆகி விடுவதில்லையா, அப்படித்தாம்.

நாட்கள் தவறாமல் நாட்குறிப்பு எழுதுகிற தொடர்ந்த பழக்கம் இருந்தால் மட்டுமே இப்படியான கேள்விகளுக்குச் சரியான பதில்களை அவர்களிடமிருந்து பெற முடியும்.

சு.ரா. கட்சிக் கார்டு பெற்றவரா (வைணவர்களுக்கு முத்திரை ஸ்நானம், கிருத்துவர்களுக்கு ஞானஸ்நானம் போல) என்பது எனக்குத் தெரியவில்லை. நிச்சயமாக அவர் ஒரு “அனுதாபி” என்று சொல்லும்படியாக இருந்தது. அப்பொழுது அவருடன் பழகிய சமயத்தில். அவருக்கு இன்னொரு அதிகப்படி வாய்ப்பு மலையாள இலக்கியத்தோடும், அங்கே உள்ள இடதுசாரி அரசியலோடும்
மொழிரீதியாகவும், தனது இருப்பிடம் ரீதியாகவும் நல்ல ஒரு பழகுமுறை அமைந்தது.

அந்த மலையாள மொழி அதி இளமையும், துள்ளலும், வீச்சும் உடையது. உலகில் இன்று நடப்பதை அந்த மொழி நாளை தனதாக்கிக்கொள்ளும். சோம்பல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை அங்கே. அந்த மொழியோடு சகவாசம் வைத்துக்கொண்டாலே நமது மனசில் புதுரத்தம் ஓடுவதுபோலாகிவிடும். “ஆத்து மண்ணுக்கு வேத்து மண்ணு” என்பது விவசாயப் பழமொழி. (விளைச்சல் பெருகும் என்பது) ரெட்டைமொழி தெரிந்திருப்பவருக்கு எப்பவுமே லாபம்தான். அதனால் அவருடைய இலக்கியச் சிந்தனை அணுகு முறை எல்லாமே வித்தியாசமாக இருக்கும்.

ஆரம்பத்தில் நாங்கள் அவரோடு பழகும்போது, அவருடைய பேச்சே ஒரு மலையாளி தமிழ் பேசுவது போலத்தான் இருந்தது; பிறகு, பிறகு சுதாரித்துக் கொண்டுவிட்டார்.

இந்த உலகியலை அவர் சாவகாசமாக உட்கார்ந்து பார்க்க, கண்டுகொள்ள, யோசிக்க அவருடைய சிறுவதில் சீக்காளி நிலை பெரிதும் பயன்பட்டது. இது ஒரு அதிஸ்டமாக அமைந்தது! (என்னுடைய வாழ்க்கையில் நேர்ந்த அனுபவத்திலிருந்தும் இதைச் சொல்லுகிறேன்) “சாம்பிராணி மரம்” அடி படப்பட ரத்தம் கசிந்து உரைந்து பிசின் தருவதுபோல, அந்தப் பிசின் கங்குகளில் விழுந்து மணம் தருவது போல.

ஒருவரைக் கடேசியாகச் சந்திக்கிறோம்; இதுதாம் கடேசி என்று நமக்குத் தெரிவதில்லை. போர்களத்துக்கு வழியனுப்பும் போது வேணுமானால் ஒருவேளை அப்பத் தோன்றலாம்.

நான் இங்கே புதுவைக்கு வந்த பிறகு எங்கள் வீட்டுக்கு, அவர் மட்டும் ஒருமுறையும், அவரது பிரியமுள்ள இல்லாளு கமலாம்பா
வோடு ஒரு முறையும் வந்திருக்கிறார். (இடைசெவலுக்கு இவர் வந்ததே இல்லை) அவ்வைநகரில் நாங்கள், நாலாவதாக ஒரு வீட்டில் போக்கியத்துக்கு குடியிருக்கும்போது இவர் வந்தார். என்னைக் கண்டதும் சந்தோசமாகி “என்னையா! முகத்தில் எந்தவிதக் கலவரமோ, கவலையோ இல்லாமல் நிம்மதியாக சந்தோசமாக இருக்கிரீகள்!” என்றார். காரணம், அப்போது என்னை எதிர்த்து தமிழ்நாடு பூராவும் கோபமான ஊர்வலங்களும், ஆவேசமான கோஷங்களும் “கி.ரா.வைக் கைது செய்”, “கி.ரா.ஒழிக”, “விடாதே பிடி சிறையில் அடை” என்பதுபோல ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்த வேளை. “பயமே தோணலையா?” என்று கேட்டார். இதேபோல வேற மாதரி – முன்பும் ஒரு முறை கேட்டிருக்கிறார். சு.ரா.வின் வீட்டு மாடியில் ஒரு ‘காகங்கள்’ கூட்டத்தில் என்னு டைய ‘கோபல்ல கிராமம்’ நூலைப் பற்றி ஒரு விமர்சனக் கூட்டம். என்னையும் அழைத்திருந்தார்கள்.

பேசியவர்கள் – அவர் உட்பட – ‘இது ஒரு நாவலே கிடையாது’ என்று நார் நாராகக் கிழித்து, தோலை உரித்துத் தொங்கவிட்டார்கள். கூட்டம் முடிந்து மாடியிலிருந்து இறங்கும்போது முக்குப் படிக்கட்டில் என்னை நிறுத்தி, “என்னய்யா, ஒரு சிறுமுகக் கோணல் கூட இல்லை, வேர்க்கவில்லை, குடிக்கத் தண்ணீர் கேட்பார்கள்; அதும் இல்லை! என்றார். (நாவல் இல்லை; சரி அப்பொ இது என்னது? அதை யாரும் சொல்லவில்லை. ஒட்டகச்சிவிங்கியை முதன் முதலில் பார்த்தவன் சொன்னானாம் இது மிருகமே இல்லை என்று!)

கடேசியாக அவர் என்னிடம் தொலைபேசியில் பேசியது, அவருடைய மகள் ‘தங்கு’ இங்கே புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில்
படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவுக்குப் போனபோது. அவள் இந்தப் பல்கலைக்கழகம், தனக்கு அறிவிக்கப்பட்ட தங்கப் பதக்கத்தையும் சான்றிதழையும் பெற்றுக்கொள்ளாமல் போய்விட்டாள். அங்கே உள்ள ஒரு பணியில் சேருவதற்கு இவை உடனே தேவையாக இருந்தது. இங்கே அவ்வளவு சுலபத்தில் அவர்களால் பெறமுடியவில்லை. அதனால் என்னுடன் தொடர்புகொண்டு உதவும்படி கேட்டுக்கொண்டார். பெற்றுத் தந்தோம்.

நன்றி தெரிவித்து இரண்டாவது முறையும் பேசினார். அதுதான் எங்கள் கடேசிப் பேச்சு. நாடகத்தில் ஒரு பாத்திரம்போல் வந்தார்;
போனதுபோல் போய்விட்டார். ரயில் புறப்பட்டுப் போனபிறகு வெறிச்சோடிய பிளாட்பாரம் போல ஆகிவிட்டது மனசு.

*************
நன்றி: புதிய பார்வை, ஜூன் 1 – 15, 2007.
தட்டச்சு & வடிவம்: தாஜ்.
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

கி.ராஜ நாராயணன்

கி.ராஜ நாராயணன்