கடித இலக்கியம் – 44

This entry is part of 37 in the series 20070208_Issue

வே.சபாநாயகம்


கடிதம் – 44

3, செங்குந்தர் தெரு,
திருப்பத்தூர்.வ.ஆ.
2 – 2 – 94
அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

தாங்கள் கோவை பாரதியார் பல்கலைக் கழக ‘குழந்தை இலக்கியக் கருத்தரங்கு’ முடிந்து திரும்பி இருப்பபீர்கள். ஜனவரி 9ஆம் தேதி இரவு புறப்பட்டு, 10ஆம் தேதி காலை 8 மணிக்கு JK வுடன் கோவை வந்து கொஞ்ச நேர அவகாசத்திலேயே கோத்தகிரி புறப்பட்டு விட்டோம். திரும்பி கோவை வரும்போது தங்களை பாரதியார் பல்கலைக் கழகத்தில் வந்து பார்க்க முடியும் என்று நம்பினேன். அது இயலாது போயிற்று.

கருத்தரங்கு பற்றியும், கருத்தரங்கில் தாங்கள் படித்த கட்டுரை பற்றியும், நண்பர் பூவண்ணன் அவர்களைச் சந்தித்தது பற்றியும், இடைக்கால எண்ணங்கள், அனுபவங்கள், முயற்சிகள் பற்றியும் எழுதுங்கள். நிறைய எழுதுங்கள். நானும் இத்தனை நாட்கள் போல் அல்லாமல் உடனுக்குடன் பதில் எழுதுகிறேன்.

பிப்ரவரி 13ஆம் தேதி JK சென்னையிலிருந்து புறப்பட்டு டில்லி செல்கிறார்.போன வருஷமே என்னையும் கூப்பிட்டார். என்னால் இயலவில்லை. இந்தமுறை, “நீ வருகிறாய்” அதட்டலாக உத்தரவு போட்டு விட்டார். எனவே போகலாம் எனத்
தீர்மானித்திருக்கிறேன்.

என்னுடைய இந்தக் கடிதம் இன்னும் கூடத் தாமதமாகி விட்டிருக்கும். திடீரென்று எனக்கொரு நினைவு வந்தது. தாங்களும் டில்லி வந்தால், JKவோடு நாமெல்லாம் ஓர் ஆறு நாட்கள் வித்தியாசமான ஓய்வில் நிறைய அனுபவிக்கலாமே
என்று தோன்றிற்று. டில்லியில், பாண்டிச்சேரி ஹவுஸ் என்கிற புதுவைஅரசு மாளிகை யில் தங்குகிறோம். ஓரிரு நாட்கள் JKவுக்கு சாஹித்ய அகாதெமி கூட்டங்கள். பிறகு ஹரித்துவார், ரிஷிகேஷ் என்றும், ஆக்ரா என்றும் சில டிரிப்புகள். ஆரணி நண்பர் ஆனந்தனும், சென்னையிலுள்ள பழனி என்கிற நண்பரும், திப்புசுல்தான் என்கிற நண்பர் ஒருவரும், நானும் – இதுவரை டில்லி செல்ல இருக்கிற நபர்கள் ஆவோம். நான் நம் வெள்ளக்குட்டை ஆறுமுகத்தையும் உடன் இழுக்கலாம் என்று இருக்கிறேன். அருணாசலம் விஷயம் இன்னும் தெரியவில்லை.

– இப்போதைய சூழ்நிலையில், தாங்கள் வருவது எளிது என்றும், தாங்கள் இதை மிக விரும்புவீர்கள் என்று கருதி, தங்களையும் அழைக்கும் எண்ணம் எனக்குத் தலையெடுத்தது. அதற்காகவே, தங்கள் திருப்பத்தூர் வருகையை ஒட்டிய எங்கள் உணர்ச்சி வர்ணனைகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, இக்கடிதத்தை எடுத்தவுடன் காரியார்த்தமாகத் தொடங்கி விட்டேன். தங்களுக்கு இது ஓய்வாகவும் இருக்கும். JKவுடனான மிகச் சிறந்த உடனிருப்பாகவும் இருக்கும். நான் உங்கள் இருவருடனும் கூட இருந்த மிகச் சிறந்த பேறு பெரூவேன். இவ்வாறு ஐந்தாறு நாட்கள் Jk, தாங்கள், நான் மற்றும் நண்பர்கள் எல்லாம் உடன் உறையும் இவ்வாய்ப்பு வாழ்வில் இனி எளிதில் நேருமா என்ன?

இது குறித்து உடனே எழுதுங்கள். உடனே எழுதுவது உத்தமம்.

– தங்கள் பி.ச.குப்புசாமி


v.sabanayagam@gmail.com

Series Navigation