புதியமாதவி, மும்பை
குஸ்தாவ் பிளாபெர்டின் மேடம் பவாரி (Gustave Flaubert – Madame Bovary) நாவலைப் பற்றி எழுதும்போது எஸ். ராமகிருஷ்ணன் (உயிர்மை இதழ் 40) “பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரஞ்சு இலக்கியமும் ருஷ்ய இலக்கியமும் மதமும் கலாச்சாரமும் எப்படி
மனித விருப்பங்களின்மீது தனது கெடுபிடியான ஆளுமை செலுத்தியது என்பதைப் பற்றிய விசாரணையைச் சார்ந்தே இயங்கியிருக்கிறது. மேடம் பவாரி ஒரு நாவல் மட்டுமல்ல. அது ஒரு குறியீடு. ஒரு அடையாளம், எதிர்ப்புக் குரல். பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரஞ்சு பூர்ஷ்வா வாழ்வின் மீதான விமர்சனம்” என்று குறிப்பிடுகிறார்.
இன்றைய பெண்கவிஞர்களின் கவிதைகளும் இந்த நூற்றாண்டின் ஒரு குறியீடு, ஓர் அடையாளம், ஓர் எதிர்ப்புக்குரல் என்றுதான் வரலாறு எழுதும். அதுவும் ஈழத்துப் பெண்கவிஞர்களின் கவிதைகளில் ரத்தம் தோய்ந்த யுத்தத்தின் கதறலும் அந்த அழுகையின் ஊடாக ஒரு பெண்ணாக அவளும் அவள் உடலும் காயப்பட்டு நிராயுதபாணியாக நிற்கும் காட்சியும் அழிக்க முடியாத சித்திரமாக எழுதப்பட்டுவிட்டது. அந்த வரிசையில் பெண்ணியாவின் கவிதைகளும் அணிவகுக்கின்றன. அதுவும் “என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை! ” என்று ஆணித்தரமாக தன் எதிர்ப்புக்குரலை பதிவு செய்துள்ளார்.
மணல் ஓவியங்களைக் கீற எத்தனிக்கும் காலத்தில் தொட்டுச் சென்ற சுகங்கள் அனைத்தும் பச்சைக்கனவுகளாக முகம் காட்ட தொலைந்து போன நிகழ்காலத்திற்காக உணர்வுகள் நொருங்கிச் சிதைய எதுவுமே வேண்டாம் இம்மண்ணில் என்று விரக்தி அடைகிறது.
இன்று எதைச் சிந்திப்பேன்..
தொலைந்து போன
என் சமாதானம் பற்றியதாகவா
அல்லது நான் தொலைத்து நிற்கும்
எல்லாவற்றையும் பற்றியதாகவோ
எதைச் சிந்திக்க
என்று அலைகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தை, மீறலுக்காகவே கையப்பமிடப்படும் ஒப்பந்தங்கள் இவைகளுக்கு நடுவே மரணம் பற்றிய பயம் தகர்க்கப்பட்டு அவ்விடத்தில் வாழ்க்கையின் மீதான விரக்தி மேகங்கள் சூழ்கிறது.
‘எப்பிறவியின் சாபமோ
நானும் அவர்களும் அறியோம்..
ஒரு யுகத்திலும் எறிந்துவிடாதபடி
நிலவின் கறுத்த பின்புறத்தை எம் வாசல் நோக்கி
திருப்பி பிடித்திருப்பது எவருடைய கைகளோ..!’
இவ்வரிகளில் ஓர் அற்புதமான நிலவின் காட்சி படிமமாகிறது. .படிமம் பற்றி சொல்ல வந்த சி.இ. மறைமலை – (புதுக்கவிதையில் முப்பெரும் உத்திகள் பக் 182)”இருபொருள் ஒப்பீட்டின் விளைவாகத் தெளிவானதோர் காட்சியை அளிப்பதே படிமம். ஒப்பீடு
பொருத்தமானதாக இருக்க வேண்டும். கையாளப்படும் இரண்டு பொருட்களுக்குப் பொதுவான பண்புகளையும் இயல்புகளையும் குறிப்பிடும் வகையில் அமைய வேண்டும். படிமத்தின் முக்கிய நோக்கம் இலக்கியத்தினை அழகுபடுத்துவதாக இல்லாமல் கவிஞர் கவியுள்ளத்தை வெளிப்படுத்துவதாக திகழ வேண்டும். உள்ளத்தில் பல சிந்தனைகளைத் தூண்டிவிடும் ஆற்றலுடையதாய் விளங்க வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.
இதுவரை நிலவைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் அனைத்து படிமங்களிலிருந்து பெண்ணியாவின் நிலவு படிமம் புதுமையாகவும் அறிவியலுடன் ஒட்டியதாகவும் அமைந்து கவிதைக்கும் கவிதை சொல்ல வந்த கருப்பொருளுக்கும் வீரியத்தை வழங்கியுள்ளது. பூமியிலிருந்து நிலவைப் பார்க்கும்போது நிலவின் ஒருபக்கத்தை மட்டுமே பார்க்க முடியும்.(when we look at the moon we always see the same side. this is because the moon turns once on its axis in the same time that it circles the earth.the force of gravity always keeps the same side of the moon toward the earth) இந்த அறிவியல் கருத்தை குருதிக் கறைகளால் காயப்பட்டு கிடக்கும் தங்கள் நிகழ்கால வாழ்க்கையின் இருண்ட காலத்தின் வாழ்வியலுடன் ஒப்பிட்டு சொல்லியிருக்கும் புதுமை பெண்ணியாவின் பெயர் சொல்லும் வரிகளாக இலக்கிய வானத்தில் மின்னுகிறது என்று சொல்லலாம்.
பெண்களை எப்போதும் இருபாலாரும் மலருக்கு ஒப்பிட்டு கவிதையாக வடிக்க பெண்ணியா ‘முட்களின் கதைகள்’ஆக பெண்ணின் எழுச்சியைப் பிரகடப்படுத்துகிறார்.
‘நான் நிஜங்களை நேசிக்கிறேன்
…..
சராசரி திருமணத்திலோ
உடல் உணர்தல்களிலோ
நான் திருப்தியுறுபளல்ல
என் திருப்தி என்பதும்
விடுதலை என்பதும்
உங்களுள் அடக்கப்பட முடியாதவை
உங்களுள் உணர்த்தப்பட முடியாதவை
..
நான் வாழ்தலையும் மரணித்தலையும்
எனக்காய்ப் புரிய இசைகிறேன்
தீக்கிடங்கினுள் கிடந்து
நான் உயிர்வாழ்வதாய்க் கூச்சலிட
எத்தகைய பிடிப்புகளுமில்லை எனக்கு’
இக்கவிதையை ‘மேன்மக்களே, எனை வாழவிடுங்கள்’ என்று விளிப்பதாய் படைத்துள்ளார். மேன்மக்கள், அவர்களின் நம்பிக்கைகள், குடும்ப உறவுகள், திருமணம் பெண்ணின் வாழ்வில் திணிக்கும் பண்பாட்டு சுமைகள், காலம் காலமாய் புனிதமாக கருதப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தையுமே கேள்விக்குறியாக்கி தனக்காக வாழ நினைக்கும் பெண்ணின் குரலாக பதிவு செய்துள்ளார்.
வாழ்தல் மட்டுமல்ல, போர் மேகங்கள் சூழ்ந்த மண்ணில் மரணித்தலையும் எனக்காய் புரிய இசைகிறேன் என்று சொல்வதில் வாழ்வும் வாழ்வின் தேடலும் அதை நோக்கிய பெண்ணின் பயணமும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
சமூகம் சார்ந்த சிந்தனைகளை முன் எடுத்துச் செல்லும் பெண்களின் கவிதைகள் சில நேரங்களில் தன்னிரக்கம் சார்ந்த தளத்தில் ஏறும்போது முன்னிலிருந்து சரிந்து பிறிதொரு முகமாக மாறி நிற்பதைக் காணும்போது நாமும் நம் கவிதைகளும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதை உணர்கிறோம். பெண்ணியாவின் கவிதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்றுதான் சொல்ல வேண்டும். ‘வதைபடலம்’ என்ற கவிதையில்
உனக்குத் தெரியுமா?
என் இதயத்தில்
எத்தனை கீறல்கள் இருக்கின்றன என்று?
நானும் ஒரு சராசரிப் பெண் என்பதை
எப்போதாயினும் நீ உணர்ந்ததுண்டா?
…
என்னைப் போன்றவர்கள்
எவ்வளவு இன்பமாய்
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்க
பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விடும்
அபலையாகவே நான் இன்னும்…’
பெண்ணிய விடுதலை என்று வரும்போது ‘சராசரி திருமணத்திலோ உடல் உணர்தல்களிலோ நான் திருப்தியுறுபவளல்ல ‘ என்று சொல்லும் பெண்ணால் குடும்ப உறவுகளுக்குள் நிற்கும்போது மேற்கண்டவாறு சராசரிப் பெண்ணாகவே தன்னைப் பிரகடனப்படுத்தி அபலையாக கண்ணீர் வடிக்க வைத்துவிடுகிறது இந்த சுமூகம்.
பெண்ணைப் பற்றிய உயர்வு நவிற்சியாக சொல்லப்பட்டவை, எழுதப்பட்டவை, மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் என்று சொன்னவை எல்லாம் வெறும் வார்த்தைகளால் கட்டப்பட்ட அலங்கார பீடங்கள் என்பதை யதார்த்தம் அவளுக்கு உணர்த்துகிறபோது இதுவரை அவள் கட்டியிருந்தக் கனவு பிம்பங்கள் உடைபடுகின்றன.
ஒரு பெரும் கனவுலகைக் கட்டி
நான் பதினேழு வருடங்கள் ஆண்டேன்
எல்லோமே சிதறின
நொருங்கிச் சிதைந்த கனவுகளோடும்
கண்ணீரோடும்
நான் துயிலிறுத்திருக்கிறேன்
..
மனிதத்துவத்தைத் தொலைத்த
தகப்பன்களின் மகன்களினிடையே
எனக்கான
ஒரேயரு காதலனையும் காணமுடியவில்லை
என்று வாழ்க்கையின் மீது கசப்பான அனுபவங்களை முன்வைத்தாலும் இன்றைய கவிஞர்கள் அதில் மூழ்கி தன்னை அதில் இழந்துவிட தயாராக இல்லை. இழப்புகளும் யதார்த்தமும் தரும் வலியின் ஊடாக தன்னை உணர்தலும் தனக்கான இலக்கை நோக்கி பயணித்தலும் முன் எப்போதையும் விட அதிக வலிமையுடன் எழுதலும் சாத்தியப்படும் என்பதை பெண்ணியாவின் கவிதைகள் நம்பிக்கையுடன் முன்வைக்கின்றன.
என் பயணம் ஆரம்பித்தாயிற்று
தனித்தாயினும் பயணிப்பதே இயன்றவரை
என் சிறகுகளின் மீது நீளும்
எல்லாக் கைகளுக்கெதிராகவும்
என் கனவுகளின் மீது
கொடூரங்களை வரைய நீளும்
எல்லாத் தூரிகைகளுக்கெதிராகவும்.
பயணிக்க துணிந்திருக்கும் பெண்ணியாவுக்கு வாழ்த்துகள்.
‘ஆண் அதிகாரத்தால் பாதிக்கப்படும் அனுபவங்களும் யுத்தத்தால் ஆண்களைவிட அதிகளவில் பாதிக்கப்பட்ட அனுபவங்களும் சமூகத்தின் வாழ்பனுபவங்களுமாக பெண்நிலை அனுபவங்கள் பெண்களின் படைப்புகளில் பதிவாகின்றன.” பெண்களின் அத்தகு படைப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஊடறு வெளியிட்டிருக்கும் முதல் முயற்சியாக வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுப்பு என்ற சிறப்பினையும் பெறுகிறது பெண்ணியாவின் இக்கவிதை நூல். ஊடறுவின் இம்முயற்சிக்கு வாழ்த்துகள்.
கவிதைநூல்: என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை!
ஆசிரியர் : பெண்ணியா, காத்தான்குடி, இலங்கை
வெளியீடு: ஊடறு (udaru@bluewin.ch)
விலை: ரூபாய் 100/ பக்: 48
puthiyamaadhavi@hotmail.com
- இலை போட்டாச்சு – 12 -கதம்பக் கறி
- பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாசாரப் புதிர்கள் பாகம் 2 மார்வின் ஹாரிஸ் (தமிழில்: துகாராம் கோபால்ராவ்)
- கு. அழகிரிசாமி
- சென்னை புத்தகக் கண்காட்சி
- எளிமையாக வெளியீடு கண்ட கனமான நூல்கள் – ஜெயந்தி சங்கர் நூல் வெளியீட்டு விழா
- வெ.சா. என்றொரு விமர்சகர்
- வெயில் திரைப்படம் ஒரு பார்வை
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் -5
- கடிதம்
- இலக்கிய வட்டம் ஹாங்காங் – கருத்தரஙம் – ஜனவரி 27, 2007
- தமிழ்க்கொடி 2006 – இது ஆழி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஆண்டுத்தொகுப்பு
- NFSC – அருணாசலப் பிரதேசத்திலிருந்து ஆவணப் படங்கள்
- திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு: ஒரு தமிழ்க் கருவூலம்
- மியான் மார் யாங்கோன் வரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
- ஓலோல் சர்ச், புகிஸ், சிங்கப்பூரில் பொங்கல் விழா – செய்தி
- பிரான்சு தமிழர் திருநாள் 2007
- நியூசிலாந்து பயண நினைவுகள் – 1.மண்ணும் மைந்தரும்
- ஜெயமோகனின் கொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து
- ஓர்ஹான் பாமுக் – 2
- கடித இலக்கியம் – 42
- எதிர்ப்பு அலைகளின் பச்சைக் கனவுகள்
- தமிழ் இணைய இதழ்களின் செல்நெறி
- அலாஸ்கா கடற் பிரயாணம் – 1
- சுகம்
- மடியில் நெருப்பு – 22
- நீர்வலை (8)
- கருணை மனு
- காந்தியிலிருந்து கயர்லாஞ்சிவரை
- பின்னை மார்க்சியத்தின் துவக்கங்கள்
- மார்க்க மயக்கத்தில் மார்க்ஸ்களும் மார்க்ஸியர்களும் –1
- அறுபாதி கல்யாணம் அவர்களுடன் ஒரு நேர்காணல்
- படு-களம்
- மறு நடவு
- எழுதாத உன் கவிதை – தமிழீழப் பெண்களின் கவிதைகள்-நூல் அறிமுகம்
- எனக்கானவளே!
- காதல் நாற்பது (6) காதற் கனலை மிதிக்காதே !
- உப்பானது சாரமற்றுப் போனால். . .?
- குரல்
- மனப் பால்வெளியில்
- அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962) – அணு, அணுக்கரு & பரமாணுக்கள் (1)
- “முப்பது ஏக்கர்கள்” – ரேங்கே’யின் பிரஞ்சுக் கனடியப் புதினம்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:2)