‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

அ முத்துலிங்கம்


தொகுப்பின் கதை

2005 கடைசியில் ஒரு நாள் என் மகனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவன் ஒரு தகவல் சொன்னான். பில் கேட்ஸின் படுக்கை அறை மேசையில் ஐந்து புத்தகங்கள் இருக்கின்றன. அவர் தினம் அவற்றைப் படிக்கிறாராம். என்ன புத்தகங்கள் என்று கேட்க புத்தகத்தின் பட்டியலையும் தந்தான்.
The End of Poverty – Jeffrey Sachs
Collapse – Jared Diamond
Guns, Germs and Steel – Jared Diamond
The World is Flat – Thomas L Friedman
The Bottomless Well – Peter W Huber and Mark P Mills

உலகத்திலேயே முதல் பணக்காரரான இவர் ஒரே சமயத்தில் ஐந்து புத்தகங்களைப் படிக்கிறார். இன்னும் பணம் பெருக்கும் முயற்சியா? இல்லை, அறிவை வளர்க்கும், உலகத்தை மேலும் புரிந்துகொள்ளும் முயற்சிதான். பில் கேட்ஸ் மாத்திரமல்ல இன்னும் பல பிரபலர்களும் புத்தகங்கள் படிப்பதை முக்கியமாகக் கருதி அதற்காக நேரம் ஒதுக்குகிறார்கள்.
யார் இந்தப் புத்தகங்களை இவர்களுக்கு பரிந்துரை செய்கிறார்கள். உலகத்தின் முதலாவது பரிந்துரைக்காரர் ஓப்ரா வின்·பிரே. A Million Little Pieces என்ற நூல் இவருடைய பரிந்துரையில் 35 லட்சம் பிரதிகள் விற்றுத்தீர்த்தது. பரிந்துரை உச்சத்தில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் பின் லாடன். இவர் சமீபத்தில், 2000 ஆண்டில் வெளியான William Blum என்பவர் எழுதிய நூலை பரிந்துரை செய்தார். ஒருவராலும் கவனிக்கப்படாமல் அமேஸன் பட்டியலில் 209,000 க்கு கீழே அது இருந்தது. பின் லாடனின் பரிந்துரைக்குப் பின் அந்த நூல் படபடவென்று ஏறி 12வது இடத்தை பிடித்துக்கொண்டது.
அமினாட்டா என்ற ஆங்கில எழுத்தாளர் தன் நண்பர்கள் பரிந்துரைப்பதை வாங்கிப் படிப்பதாகச் சொல்கிறார். ரோபையாஸ் வூல்·ப் என்ற ஆங்கிலப் பேராசிரியரும் விமர்சனங்களைப் படிப்பதில்லை. நண்பர்கள் சொல்வதை வைத்தே புத்தகங்களை தெரிவு செய்கிறார். எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. எழுத்தாள நண்பர்கள் சிலரிடம் சமீபத்தில் அவர்களைக் கவர்ந்த புத்தகம் என்ன, அது ஏன் கவர்ந்தது என்று கேட்டு அவர்கள் பதிலை புத்தகமாகப் போடவேண்டும். இது எழுத்தாள மனங்களின் படிமமாகவும், ஒரு காலத்தின் பதிவாகவும் இருக்கும்.
உடனேயே என் திட்டத்தை செயல்படுத்த தொடங்கினேன். நான் மிகவும் மதிக்கும் எழுத்தாள நண்பர்கள் சிலரிடம் மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி மூலமும், கடிதம் மூலமும் இதே கேள்வியைக் கேட்டேன். அவர்களிடமிருந்து கிடைத்த கட்டுரை வடிவிலான பதில்களின் தொகுப்புத்தான் இந்தப் புத்தகம்.
இந்திரா பார்த்தசாரதியும், காஞ்சனா தாமோதரனும் அயல் வீட்டுக்காரர்கள். அவர்கள் அமெரிக்காவில் வசித்தது எனக்கு வசதியாகப் போய்விட்டது. அடிக்கடி தொலைபேசியில் அவர்களுடன் பேச முடிந்தது. நான் கேட்டதும், உடனேயே சம்மதம் தெரிவித்து, கட்டுரைகளை, என்னை காக்க வைக்காமல் அனுப்பிவைத்தார்கள்.
அசோகமித்திரனுடைய சுறுசுறுப்பு என்னை ஆச்சரியப்பட வைத்தது. முதலில் இரண்டு மாத காலம் அவகாசம் கேட்டார். தந்தேன். ஆனால் இரண்டு நாட்களில் கட்டுரையை எழுதி முடித்துவிட்டார். கையினால் எழுதிய அந்தக் கட்டுரையில் அடித்தலோ, திருத்தலோ கிடையாது. பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதும் மாணவனுடைய கையெழுத்துப் போல அச்சொட்டாக இருந்தது. இரண்டு நாளில் அவரிடம் இருந்து விமானத் தபால் ஒன்று கனடாவுக்கு வந்தது, கட்டுரை கிடைத்துவிட்டதா என்று விசாரித்து. எனக்கே வெட்கமாகிவிட்டது, அவருடைய வேகத்தைப் பார்த்து.
ஜெயமோகனைத் தொடர்புகொண்ட நேரம் நல்லவேளையாக 2005ம் ஆண்டு டிசெம்பர் 31ம் தேதி காலை. அவர் அடுத்த வருடத்தில் ஒன்றும் எழுதுவதில்லை என்ற சங்கல்பத்தில் இருந்தார். இதைக் கேட்டதும் எனக்கு திக்கென்றது. தொலைபேசியில் என் திட்டத்தைச் சொன்னதும், தயங்கினார், பின்பு ‘நீங்கள் கேட்டு நான் எப்படி மறுப்பது. இன்றிரவே எழுதி முடித்துவிடுகிறேன்’ என்றார். எனக்கு பெரும் ஆறுதல். ஒரு நாள் பிந்தியிருந்தால் அவருடைய கட்டுரை கிடைக்காமல் போயிருக்கும். ஜெயமோகனுடைய எழுத்து வேகம் உலகறிந்தது. சமீபத்தில், அவர் ஆறு நாளில் எழுதிமுடித்த நூல் ஒன்றைப் படித்து முடிப்பதற்கு எனக்கு எட்டு நாட்கள் பிடித்தன. சொன்னமாதிரியே ஜெயமோகன் அன்றிரவே கட்டுரையை எழுதி முடித்துவிட்டார்.
ஆனால் முதல் கட்டுரை வந்தது பாவண்ணனிடம் இருந்து. இவரும் வேகமாக எழுதக்கூடியவர். இவரிடம் எல்லாம் ஒழுங்காக இருக்கும். 90ல் எழுதிய ஒரு கட்டுரையைக் கேட்டால் அலுங்காமல் எடுத்துக் கொடுப்பார். அப்படியரு ஞாபக சக்தி.
அந்தச் சமயம் சாரு நிவேதிதா இருதய அறுவைச் சிகிக்கைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தச் சங்கதி எனக்கு தெரியாது. அவருக்கு அனுப்பிய மின்மடல்களுக்கும் பதில் இல்லை. எப்படியோ எனக்கு விசயம் தெரியவந்து அவர் வீட்டுக்கு திரும்பியபின் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அறுவை சிகிச்சை புண் ஆறாத நிலையிலும் ஏதோ மாயம் செய்து கட்டுரையை முடித்து அனுப்பிவிட்டார். ஒரு பூ கேட்ட இடத்தில் ஒரு பூக்கூடையே வந்தது. கட்டுரையைப் படித்தால் அது தெரியவரும்.
கனடா போன்ற தூர தேசத்தில் வசிப்பது ஒரு விதத்தில் வசதி. அன்றாடம் இணையத்தில்போய் செய்திகள் படிக்கும் நல்ல பழக்கம் என்னிடம் இல்லை. சண்டக்கோழி விவகாரம் பெரிதாக நடந்து கொண்டிருந்தது. இது தெரியாமல் நான் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் தகவல்கள் விட்டேன். அவர் இதுபற்றி என்னிடம் ஒன்றுமே பேசவில்லை. என்னைப்பற்றி அவர் என்ன நினைத்தாரோ, அதுவும் தெரியாது. எப்படியோ நேரம் சம்பாதித்து கட்டுரையை முதல் வேலையாக முடித்து அனுப்பிவைத்தார்.
வெங்கட் சாமிநாதன் கட்டுரை கேட்டதும் சம்மதித்து, பிப்ரவரி மாதம் முடிவற்கிடையில் அனுப்பிவைப்பதாக உறுதி கூறினார். அவர் சொன்னால் சொன்னதுதான். வாக்கு தவறுவதென்பது கிடையாது. 27ம் தேதிவரைக்கும் ஒரு தகவலும் கிடையாது. நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தேன். அதற்கும் பதில் இல்லை. 28ம் தேதி இரவு பன்னிரெண்டு மணிக்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும்போது கட்டுரை கம்புயூட்டரில் வந்து இறங்கியது. எப்படித்தான் செய்கிறாரோ அறியேன்.
சுகுமாரனுடன் நான் தொலைபேசியில் பேசியது இதுவே முதல் தடவை. குரலைக் கேட்டதும் நீண்ட நாள் பிரிந்த உற்ற நண்பர் ஒருவருடன் பேசுவதுபோல பேசினார். அவருடைய எழுத்துக்களை பல வருடங்களாகப் படித்துவருகிறேன். அவரும் நான் எழுதுவதைப் படிப்பதாகச் சொன்னார். இந்த நல்ல மனிதரை முன்பே பழக்கப்படுத்திக் கொள்ளவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது. சொன்ன காலத்துக்கு அவருடைய கட்டுரையும் வந்துசேர்ந்தது.
நாஞ்சில் நாடனை அவருடைய அலுவலகத் தொலைபேசியில் பிடித்தேன். அது டிசெம்பர் 31. ‘முத்துலிங்கம் இதுதான் என்னுடைய கடைசி நாள். நாளையிலிருந்து ஓய்வு பெறுகிறேன்’ என்றார். சுரா அவரைப் பற்றி எழுதியது உடனே ஞாபகத்துக்கு வந்தது. எப்பொழுது சுராவைச் சந்தித்தாலும் அடுத்த வருடம் ஓய்வு பெறப்போவதாக அவர் சொல்லுவாராம். ஆனால் செய்யமாட்டார். நான் பேசிய அன்று அவர் உண்மையிலேயே ஓய்வு பெற்றுவிட்டார். அவர் குரலில் காணப்பட்ட மகிழ்ச்சி அதை உறுதி செய்தது. ஒருதிருமண வீட்டுக்கு போய் திரும்பிய கையோடு இந்த தொகுப்பில் இருக்கும் கட்டுரையை எழுதினார். அது எனக்கு தொலைநகலில் வந்தது.
வாஸந்தி பயணப்பட்டுக்கொண்டே இருந்தார் ஆகையால் அவரால் கட்டுரையை தாமதமில்லாமல் எழுதியனுப்ப முடியுமோ என்ற கவலை எனக்கு. எப்படியோ எழுதி உரிய நேரத்துக்கு அனுப்பிவிட்டார். அவர் தெரிவு செய்த புத்தகம் எனக்கு 11 மாதங்களுக்கு முன்பு பரிசாகக் கிடைத்திருந்தும் அதைப் படிக்காமல் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்திருந்தேன். அவருடைய கட்டுரையைப் படித்த கையோடு அவர் சொன்ன புத்தகத்தையும் வாசித்து முடித்தேன். அதற்காகவே அவருக்கு நான் நன்றி கூறவேண்டும். ஆனால் அவர் ஐந்தாறு புகைப்படங்களை அனுப்பி என்னை திக்குமுக்காட வைத்துவிட்டார். எல்லாமே அழகாக இருந்தன. ஓர் அழகுப்போட்டி நடுவர்போல் நான் ஒன்றை கட்டுரையுடன் பிரசுரிப்பதற்கு தேர்வு செய்யவேண்டி நேர்ந்தது.
மாலனுக்கு மின்னஞ்சல் அனுப்புவது இன்பமான அனுபவம். ஒரு மின்மடல் அனுப்பிவிட்டு கம்புயூட்டரை அணைப்பதற்கு முன்னர் அவருடைய பதில் வந்துவிடும். கட்டுரை கேட்டவுடனேயே சம்மதித்ததும் அல்லாமல் அதை நேரகாலத்துக்கு அனுப்பி உதவினார். இவர் அப்பொழுதுதான் புதிய பொறுப்பான வேலை ஒன்றில் இணைந்திருந்ததால் திட்டங்கள் தயாரிப்பதிலும், சந்திப்புகளிலும், பயணங்களிலும் மும்முரமாக இருந்தார். அப்படியும் சொன்ன தேதிக்கு கட்டுரையை அனுப்பிவிட்டார். இதே மாதிரித்தான் பி.ஏ.கிருஷ்ணனும். ஓய்வெடுத்த பிறகு அவரும் புதிய வேலையன்றில் சேர்ந்திருந்தார். யூக்லிட் பற்றி எழுதப்போவதாக ஏற்கனவே கூறியிருந்தாலும் கட்டுரை வருவதாகத் தெரியவில்லை. இறுதியில் கௌரவசபையில் திரௌபதியை காப்பாற்றியதுபோல என்னையும் காப்பாற்றினார்.
சிலருடன் தொடர்பு கொள்வதே பெரும்பாடாகிவிட்டது. ஷோபாசக்தியின் முகவரி இருந்தது ஆனால் தொலைபேசி இலக்கம் மாறிவிட்டது. கணினிமயமான உலகத்தில் கடிதப் போக்குவரத்து வைத்து இந்த தொகுப்பை குறித்த நேரத்துக்கு கொண்டுவரமுடியாது. பல நண்பர்களை இம்சைப் படுத்தி அவருடைய தொலைபேசி நம்பரைக் கண்டுபிடித்து நடுநிசியில் கூப்பிட்டு என் விருப்பத்தை தெரிவித்தேன். உடனேயே சம்மதித்தார். சில நாட்கள் கழித்து கனடாவில் அகப்படாத நீண்ட சைஸ் பேப்பரில் அவருடைய கட்டுரை தபாலில் வந்து சேர்ந்தது.
பெர்லின் வாசியான பொ.கருணாகரமூர்த்தி அவருடைய இரண்டு புத்தகங்களை வெளியிடுவதற்காக சென்னை போயிருந்தார். ஆகவே தன் பெயரை நீக்கிவிடும்படி கேட்டபோது, நானும் அரை மனதுடன் சம்மதித்தேன். நல்ல காலமாக சென்னையிலிருந்து பெர்லின் திரும்பியதும் அவர் ஒரே மூச்சாக கட்டுரையை எழுதி மின்னஞ்சலில் அனுப்பிவிட்டார்.
முருகன் மயில் வாகனத்தில் பறந்து கொண்டிருப்பதுபோல இரா.முருகனும் எந்நேரமும் பறந்துகொண்டிருப்பவர். இவருக்கு அனுப்பிய மின்னஞ்சல்களுக்கு ஒருவிதமான பதிலும் இல்லை. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. இறுதியில் ஒருவாறாக தொடர்பு கிடைத்தபோது என்னுடைய மின்னஞ்சல்கள் கிடைக்கவில்லை என்றார். பார்த்தால் அது பழைய முகவரிக்கு போய் அங்கேயே ஒன்றன்மேல் ஒன்றாக கிடந்தது. நான் என்னுடைய தொகுப்பு பற்றி விளக்கியதும் உடனேயே உற்சாகமாகி எங்கேயோ பறந்தபடி எழுதிக்கொடுத்தார்.
அம்பை சொன்ன தேதிக்குள் தன்னுடைய கட்டுரையை வழக்கமாக எழுதிக் கொடுப்பவர். ஆனால் இம்முறை வேலைத் தொல்லையால் நன்றாக இழுத்துவிட்டார். மின்னஞ்சலுக்கு மேல் மின்னஞ்சலாக அனுப்பினேன். தொலைபேசியில் அழைத்தேன். ஒவ்வொரு நாளும் காலை வேளையில் கணினியை திறந்ததும் அவருடைய கட்டுரை வந்திருக்கிறதா என்று தேடினேன். கரைச்சல் பொறுக்க முடியவில்லை என்று நினைக்கிறேன். அடுத்து வந்த ஒரு ஞாயிறு கட்டுரையை இரவிரவாக எழுதி முடித்து அனுப்பிவைத்தார்.
சுஜாதாவின் அன்பை என்னால் மறக்க முடியாது. அவருக்கு எத்தனையோ தலைபோகிற காரியங்கள், இருந்தாலும் கட்டுரை அனுப்புவேன் என்று சொல்லிவிட்டார். என்னால் தொந்திரவு கொடுக்கமுடியாத ஒரே நண்பர். அவர் வேண்டும்போது எழுதி அனுப்பலாம் என்றேன். தேதி ஒன்றும் வைக்கவில்லை. அவருடைய கட்டுரை இல்லாமல் தொகுதி இல்லை என்ற முடிவில் நான் இருந்தேன். அப்படியே பொறுப்பாக, தொகுப்பு வேலையை ஒருநாள்கூட தள்ளிப்போக வைக்காமல், தன் கட்டுரையை அனுப்பிவைத்தார். ஒரு புத்தகத்தைப் பற்றித்தான் அவரிடம் கேட்டிருந்தேன், அவரோ ஒரு வாழ்க்கையையே எழுதிவிட்டார். அப்படியரு அதிர்ஷ்டம் எனக்கு. அவருடையதுதான் எனக்கு கடைசியாகக் கிடைத்த கட்டுரை.
ஒரேயரு எழுத்தாளர் மாத்திரம் ‘இதோ வருகிறது, இதோ வருகிறது’ என்று கடைசிவரை தராமலேயே இழுத்தடித்தார். ஒரு மாதகாலம் இவரால் வீணாக தாமதம் ஏற்பட்டது. ஏதோ நான் பணம் கடன் கேட்டதுபோல எனக்காக புதிது புதிதான சாட்டுகளை எல்லாம் உருவாக்கினார். இதே கற்பனையை கட்டுரையில் காட்டியிருக்கலாமே என்று பட்டது. அச்சுக்கு போகும் வரைக்கும் கட்டுரை வரவில்லை. போய் வந்தபிறகும் அந்தக் கட்டுரை இந்தப் பக்கம் வந்து சேராது என்றே நினைக்கிறேன்.

இங்கே நான் கண்ட வேடிக்கை ஒன்றையும் குறிப்பிட வேண்டும். கட்டுரை எழுத நான் கொடுத்த உச்சபட்ச வார்த்தைகள் 1200. அதிகமானோர் அதற்குட்பட்டே எழுதினார்கள். சிலபேர் இன்னும் கொஞ்சம் அவகாசம் கேட்டார்கள். அவகாசம்கேட்டு எழுதியவர்கள் 2000 வார்த்தைகள் வரைக்கும் போய்விட்டார்கள். நேரம் இல்லாதவர்களால்தான் நீண்ட கட்டுரை எழுதமுடிந்தது. அவற்றை மறுபடியும் வெட்டும் வேலையும் என்தலையில் விழுந்தது. சர்ச்சில் சொன்னது உண்மை, நேரம் குறைச்சலாக உள்ளவர்கள்தான் நீண்ட கட்டுரை எழுதுவார்கள்.
இந்த தொகுப்பு வேலையில் இறங்கிய பிறகுதான் இதற்கு செலவிட்ட நேரத்தில் ஒரு சொந்தப் புத்தகம் எழுதியிருக்கலாம் என்று பட்டது. ஒரு நாலாம் வகுப்பு மாணவர்களைக் கட்டி மேய்க்கும் ஆசிரியரைப்போல இந்த வேலை எனக்கு அலுப்பைக் கொடுத்தது. கட்டுரை அனுப்பச்சொல்லியும், சுயவிபரக் குறிப்பு அனுப்பச் சொல்லியும், படம் அனுப்பச்சொல்லியும் திருப்பி திருப்பி எழுத வேண்டி நேர்ந்தது. கட்டுரை வந்தால் படம் வராது, படம் வந்தால் சுயவிரக் குறிப்பு இருக்காது. சில சுய விபரக் குறிப்புகள் சுயபுராணங்களாக இருந்தன. சில கட்டுரைகளை அப்படியே போட்டால் அரைப் புத்தகத்தை தாண்டிவிடும். இந்த பத்தியை வெட்ட வேண்டாம், இந்த வரியை நீக்கவேண்டாம் என்ற ஆணைகள் வேறு வந்த வண்ணம் இருந்தன. ஒருவராவது இந்தக் கட்டுரை நீளம் குறைந்துவிட்டது அதைக் கொஞ்சம் நீட்டிவிடுங்கள் என்று எழுதவில்லை. அது பெரிய ஆறுதல்.
இலக்கமயமாக்கப்பட்ட இந்த உலகத்தில் கையினால் கட்டுரைகளை எழுதி அனுப்பினார்கள். பழைய கல்வெட்டுகளைப் படிப்பதுபோலவும், குறுக்கெழுத்து புதிரை பூர்த்திசெய்வது போலவும், நிரப்பி நிரப்பி படித்து முடிக்க வேண்டிய கட்டாயம். அறுபதுகளில் எடுத்த கறுப்பு வெள்ளைப் புகைப்படம் கறையான் அரித்த கரையோடு வந்து சேர்ந்தது புதிய அனுபவம். 47வது வரிக்கு பின்னர், 48வது வரிக்கு முன்னர் ‘இந்த வரியை சேர்த்துவிடுங்கள்’ என்று ஒரு கடிதம். இன்றைக்கு தமிழில் எத்தனை எழுத்துருக்கள் இருக்கின்றனவோ அத்தனையிலும் கட்டுரைகள் கம்புயூட்டரில் வந்து இறங்கின. சிலதில் ‘இ’ இல்லை. சில ஆவன்னாவை சாப்பிட்டுவிட்டன. அப்பொழுதுதான் தொகுப்பு வேலையில் உள்ள சிரமம் எனக்கு புரிய ஆரம்பித்தது. இது வெளியாகும்போது அநேகமாக என் நண்பர்களின் தொகை பாதிக்கு மேலாக குறைந்துவிடும் என்ற பயம் எனக்கு அதிகமாகிக் கொண்டே வருகிறது.
ஆனால் இந்தப் பதிவை ஒரு தொகுப்பாகப் பார்க்கும்போது எனக்குள் பெரும் பூரிப்பு ஏற்படுகிறது. ஏனிட்டிலிருந்து, The Maids நாடகத்திலிருந்து, யூக்லிட்டின் சாளரத்திலிருந்து, சோ.தர்மனனின் கூகை வரைக்கும் எத்தனை உன்னதமான புத்தகங்கள்; எத்தனை வித்தியாசமான கட்டுரைகள். அவை, ஆசிரியர்களின் பெயர்களில், ஆங்கில அகரவரிசைப்படி அடுக்கப்பட்டிருக்கின்றன. புத்தகத்திற்கு தலைப்பாக ஜெயமோகனின் கட்டுரை தலைப்பையே கடன் வாங்கலாம் என்று தோன்றியது. அவரும் சரியென்று சொல்லிவிட்டார். கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது. மிகவும் பொருத்தமான தலைப்பு. ஓயாது விரியும் காலவெளியின் நீண்ட பகுதியில் ஒரு தருணத்தின் snap shot போல, இது ஒரு பதிவு.
இறுதியில், இந்த தொகுப்பில் ஆர்வமாகப் பங்குபற்றி, என் தொலைபேசி தொந்திரவுகளை பொறுத்து, கட்டுரைகளை, மின்னஞ்சலிலும், தபாலிலும் அனுப்பிவைத்த கட்டுரையாள நண்பர்களுக்கு என் வணக்கம். ஆரம்பத்திலேயே தன் இயலாமையை சொல்லி விலகிக்கொண்ட நண்பருக்கும், ‘தருகிறேன், தருகிறேன்’ என்று கடைசிவரை கட்டுரையை கண்ணிலே காட்டாத நண்பருக்கும் என் நன்றி. இந்த தொகுப்பு வேலை நடந்துகொண்டிருந்த போது என் மனைவி இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் சுற்றுப்பயணம் போயிருந்தார். இருப்பினும் தொலைபேசியில் தினமும் விசாரித்து ஊக்குவித்துக்கொண்டே இருந்தார். அவருக்கு நன்றி.
என் உழைப்பு அளவுக்கும் மேலாக இந்த தொகுப்பிற்காக உழைத்த முகம் தெரியாத நண்பி, சென்னையில் இருக்கும் உமா பார்வதியை இந்த நேரத்தில் அன்புடன் நினைத்துக்கொள்கிறேன். குறுகிய காலத்தில் ஒரு கட்டுரை தந்ததுமட்டுமல்லாமல், உற்சாகத்துடன் இந்த தொகுப்பை வெளியிடும் மனுஷ்யபுத்திரனையும், அட்டைப்படம் அமைத்த நண்பர் சந்தோஷ், நூலை வடிவமைத்த செல்வி ஆகியோரையும் என்னால் மறக்க முடியாது.

அ.முத்துலிங்கம்
ரொறொன்ரோ, 26 மார்ச் 2006


[‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ என்ற நூலுக்கு தொகுப்பாசிரியர் அ.முத்துலிங்கம் எழுதிய முன்னுரை.
கிடைக்குமிடம் உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை – 600018, விலை ரூ85.]

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்

1 Comment

Comments are closed.