கடித இலக்கியம் – 34

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

வே.சபாநாயகம்



கடிதம் – 34
களர்பதி – முகாம்
1-4-88
அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

மலைப்பாம்பு போன்ற எனது சோம்பலை இன்று முறிக்கிறேன். தங்கள் மனம் துடிக்க நேர்ந்ததற்கு நான் வெறுமனே மன்னிப்புக் கேட்டால் போதாது. அந்தத் துடிப்பைப் பரவசத் துடிப்பாக மாற்றுவதுதான் தக்க பரிகாரம். எனவே நாங்கள்
எல்லாம் பெருங்குழுவாகப் பாப்பாவின் கல்யாணத்திற்கு வந்து மகிழப் போகிறோம் என்கிற தகவலை முன் வைக்கிறேன்.

உங்களையத்த மனிதர்களுக்கு எழுதுகிற விஷயத்தை, சம்பிரதாயத்துக்கும் சகட்டுமேனிக்கும் செய்ய என்னால் என்றும் இயன்றதே இல்லை. அதையெல்லாம் விசேஷமாகக் கற்பனை செய்தே எனக்குப் பழக்கமாகி விட்டது. எனவே, எழுத வேண்டும் என்று நான் நினைத்த ஆயிரம் வேளைகளிலும் அதை நான் ஒத்திவைத்தேன். இதுதான் உண்மை.

ஒருவரி இரண்டு வரி எழுதிப் போட்டிருக்கலாம்தான்! ஆனால் நாம் அனைவரும் இந்நிலவுலகில் வாழ்கிறோம் என்கிற உண்மை அதனினும் போதுமானது! எனது புலன் அதை எஞ்ஞான்றும் சுவைத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் கவனம் எனக்கு இல்லை என்கிற காரணத்தைத் தவிரவும், உங்களால் என் மனம் புண்பட்டி ருக்கக் கூடும் என்கிற காரணத்தை தவிரவும், வேறு காரணங்களை நான் கடிதம் எழுதாது இருந்ததற்குக் கற்பனை செய்துபாருங்கள். அவை அனைத்தும் எனக்கு அற்புதமாகப் பொருந்தும்.

ஆனால் எனக்குள் ஒரு ரகசிய விம்மல் இருக்கிறது. இத்தகைய அன்பிற்கும், இத்தகைய இடங்களின் பரிச்சயத்திற்கும், நான் எப்பொழுது எந்தப் பிறவியில் என்ன புண்ணியம் செய்தேன் என்கிற விம்மல் அது.

அப்படி ஒரு எட்டா உயரத்தில் அதை நான் வைத்ததனால், எழுதாமல் விட்ட கொடுமை எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.

அதுவுமன்றி, வாழ்வில் நான் பெறுகிற பிற தாக்கங்களை, நான், சகலத்தையும் மறந்த ஒரு மெய்ம்மறதியில், மூர்த்தாட்சண்யத்தில், ஒடுக்கத்தில், ஒரே குறியாய் இருந்து எதிர்த்துச் சமாளிக்க வேண்டியிருந்தது.

தூர தூரங்களில் என் மனசு சஞ்சரிக்கிறது! நான் எதைச் சொல்வேன்! எதை எண்ணுவேன்!

இந்த வரி எனது என்று கருதற்க! இது ரிக்வேதத்தில் ஒரு சுலோகம்!

எனவே, எக்காலத்தும் எனது மௌனத்தைப் பொருட்படுத்தாது, அதை அறவே புறக்கணித்து வீழ்த்துக.!


மகளே, நீ ஒரு தனி நபரா? ஒரு மரமே அல்லவா? எங்கள் தலைமுறைகளின் புண்ணியம் பூராவும் உன்னைச் சாரும் – என்கிற முதல்வரி என்னுள் எந்நேரமும் ஒரு மந்திர உச்சாடனம் போல் முணுமுணுக்கப் பட்டுக் கொண்டிருந்ததாலும் என்னால் கடிதம் எழுதுவதில் இவ்வளவு நிதானமாக இருக்க நேர்ந்துவிட்டது.


திருப்பத்தூர்.வ.ஆ.
7-4-88

6ஆம் தேதி புதன் இரவு ஆறுமுகம் வந்து, தங்களிடமிருந்து மேலும் ஒரு கடிதம் வந்தது என்றார். அத்ற்கு முன்பு 5ஆம் தேதி நான் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதி விட்டிருந்தேன்.

முன் பகுதியில் உள்ள கடிதம், எல்லாவற்றுற்கும் முன்பு 1-4-88ல் எழுதி நிறுத்தப்பட்டதாகும். இம்மாதிரி இவ்வருடத்தில் நான்கைந்து நிற்கின்றன. ஆறுமுகம் படித்து இதையும் அனுப்புங்கள் என்றதால் இந்தப் பழையதையும் அனுப்பத் துணிந் தேன்.

எல்லார்க்கும் ஆசியும் வாழ்த்தும் எஞ்ஞான்றும் உள!

தங்கள்,
பி.ச.குப்புசாமி.


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்