சிவலிங்கனாரின் – உலகக் கவிதைகள் மொழியாக்கம்

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

தேவமைந்தன்


எடுத்த எடுப்பிலேயே அடக்கமாகக் குறிப்பிடுகிறார் அ. சிவலிங்கனார்: “எல்லா மொழிக் கவிதைகளும் ஆங்கிலத்திலேயே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. என்னுடைய பணியெல்லாம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்ததுதான்…”

யாருடைய படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறாரோ அவர்களைப் பற்றிய குறிப்பிடத்தக்க செய்திகளை இரத்தினச் சுருக்கமாகத் தெரிவித்துவிடுகிறார். சான்றாக, இலெனின் குறித்து அவர் தெரிவிப்பது: “புரட்சிவாதிகளும் இலக்கியத்தில் ஈடுபடுவது உண்டு. லெனினை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். அவரது நூலகத்தில் ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், பிரஞ்சில் மாப்பசான், ஜெர்மனியில் கதே, ஹீன் முதலிய நூல்கள் இருந்தன.” காரல் மார்க்ஸ் குறித்துத் தெரிவிப்பது:”…ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பலவற்றை மனப்பாடமாகக் கூறுவார். ஹீன் கவிதைகள் பல அவருக்குப் பிடிக்கும். இன்னும் டால்ஸ்டாய் போன்ற ரஷ்ய இலக்கியங்களைப் படித்திருக்கிறார்.” மாசேதுங் குறித்து: “மாசேதுங் சிறந்த கவிஞர். அவர் ‘படகு’ போன்ற கவிதைகள் இயற்கையழகைப் பாராட்டி எழுதிய கவிதைகள் உண்டு. அவர்தம் பேச்சுக்களுக்கிடையே சீனப் பழமொழிகளையும் மூதுரைகளையும் கையாளுவார்.”

மேலும் வடக்கு வியத்நாம் தலைவராக இருந்த ஹோசிமின், ரஷ்யக் கவிஞரான சுலைமான் ஸ்டால்ஸ்கி, எலியட், வால்ட் விட்மன், ரசூல் கம்சதோவ் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகளைச் சுவையாகத் தெரிவித்துள்ளார். மொழியாக்கங்கள் சிலவற்றைப் பார்ப்போம்:

அன்னை
ரோஜாமலர்களைத் தூவிச் சிந்தனையுடன் நின்றேன் நான்.
உன் குரலை அரவமற்ற சூழ்நிலையில்
நான் கேட்பதுபோல உணர்கிறேன்.
மகனே! அம்மலர்கள் அழகுள்ளவையே
ஆனால் விலை அதிகமாயிற்றே!
வயலில் மலரும் சிறுமலர்கள் எனக்குப் போதும்!
-வசீலி கஃசின்

பெண்
வளைவுக் கோட்டின் மாயத்தை நினைக்கிறேன்
பெண்ணுருவத்தில் உள்ள வளைவுகளை..
-எவ்ஜெனி வினோகுரோவ்

போரும் புத்தகங்களும்
கடும் போரில் திடீர் அமைதி!
கனவை நிகர்த்த குறுகிய ஓய்வில்
புத்தகங்கள் இரண்டை எங்களதிகாரி
பாதி எரிந்த வீட்டிலிருந்து மீட்டு வந்தார்
புரட்டினோம் பக்கங்களை மிக்க மரியாதையுடன்
உயர்ந்த எண்ணங்கள் எங்களைச் சேர்ந்தன
நாஜி டாங்குகளை நாங்கள் சுட்டபோது
எங்களணியில் டால்ஸ்டாயும் கத்தேயும்
இணைந்தே போரிட்டனர்!
-ஹபீப் யூசுஃப்

நீதி
இரும்புக் கதவுக்குப் பின்னால்
நீதி மறைந்து கொள்கிறது
வறுமையைக் கண்டால்!
தங்கச் சுத்தியால் தட்டுங்கள்
நீங்கள் நீண்ட நேரம்
தங்க வேண்டி யிராது.
-ப்ரைட்ரிஷ் வான் லோகன்

பொது மொழி
நம் கண்களிலிருந்து கண்ணீர்
தடையின்றிப் பாயும் போதும்
தளையின்றி
ஒளிவுமறைவின்றிச் சிரிக்கும் போதும்
பலவழிகளில் நிகரற்ற ஓருண்மை தெரிகிறது
உலக முழுமைக்கும் பொதுவான ஒரு
மொழியை நாமெல்லோரும் பேசுகிறோம்!
-அலிம் கெஷோகோவ்

மேலும் ‘ஜென்னிக்கு’ என்ற காரல் மார்க்ஸின் 1836ஆம் ஆண்டுக் கவிதை முதலான மிகச் சிறப்பானவையும் உருக்கமானவையுமான கவிதைகள் பல — அமெரிக்கக் கவிதைகள், இங்கிலாந்துக் கவிதைகள், இந்தியக் கவிதைகள், இலத்தீன் கவிதைகள், ருஷ்யக் கவிதைகள், கிரேக்கக் கவிதைகள், சீனக் கவிதைகள், பிரான்ஸுக் கவிதைகள், ஜெர்மனிக் கவிதைகள், பிறநாடுகளின் கவிதைகள் பற்பல இத்தொகுப்பில் சிறப்பாக மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ளன.

***
கிடைக்குமிடம்:

அ. சிவலிங்கனார்,
சி-28, தமிழ்த்தந்தி இல்லம்,
சேஷசாயி நகர்,
கலைஞர் கருணாநிதி நகர்,
திருச்சி-620021.

பக்கங்கள்:124. விலை:ரூ.40/-

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்