இரு வழிப் பாதை: முத்துலிங்கத்தின் வெளி

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

மு இராமனாதன்



அ.முத்துலிங்கம் ‘உயிர்மை’ அக்டோபர் இதழில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். பொதுவாகவே முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகள் குறைவு. அதிலும் சமீப காலமாக சில சுவாரஸ்யமான பத்திகள் எழுதுகிறார். இதனால் கதைகள் இன்னும் குறைந்திருக்கலாம். அதனாலென்ன? எண்ணிக்கையிலா இருக்கிறது இலக்கியம்? உறுமீன் வரும்வரை காத்திருந்த வாசகர்களுக்கு கதை தரும் அனுபவம் அலாதியானது. கதையின் தலைப்பு: “மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள்”.

முதல் வாக்கியத்தின் நான்காவது வார்த்தையாக நாயகி பார்க்கும் வேலை வந்து விடுகிறது. பரிசாரகி. இதற்கு முன்பும் தமிழ் எழுத்தாளர்கள் Waiter/Waitress என்கிற பொருளில் பரிசாரகன்/பரிசாரகி என்கிற சொற்களைப் பயன்படுத்தி இருக்கக்கூடும். நான் படித்ததில்லை. எனில் இந்தச் சொல் இப்போதும் புழக்கத்தில் உள்ள இடம் ஒன்றை நானறிவேன். எங்கள் ஊர்ப் பெருமாள் கோயில். மடப்பள்ளி அய்யங்கார்தான் பரிசாரகர். பெருமாளுக்குப் படைக்கப்படும் புளியோதரையும் சர்க்கரைப் பொங்கலும் செய்வது அவர்தான். ஆனால் அவர் சமையல்காரர் மட்டுமில்லை. தீபாராதனைக்கு முன்பு பெருமாளுக்கு சிறிதும் பெரிதுமான சாமரங்கள் வீசப்படும். வீசுவது அர்ச்சகர். எடுத்துக் கொடுப்பது பரிசாரகர். தீபத் தட்டுக்களை எடுத்துக் கொடுப்பதும் அவரே. தீபாராதனை முடிந்ததும் சடாரி சார்த்தப்படும். பெருமாளின் பாதம் பொறித்த அந்தச் சிறிய கிரீடத்தைப் பக்தர்கள் தலையில் வைத்து ஆசீர்வதிப்பதை அர்ச்சகர் மட்டுமே செய்ய முடியும். பரிசாரகர் பின்னால் வருவார்-தீர்த்தம் வழங்க. முக்கியமானவர்களுக்கு மூன்று முறை. கோயிலுக்குள்ளேயே இருக்கும் தீர்த்த மண்டபத்தில் நீரைக் கோருவதும், அதில் வில்வமும் துளசியும் இடுவதும், பக்தர்களுக்கு வழங்குவதும் எல்லாம் பரிசாரகரின் பணியின் பாற்படும். தொடர்ந்து தானே சமைத்த பிரசாதங்களையும் வழங்குவார்.

சமையல்காரர், பரிமாறுபவர் எனும் பொருள்கள் கொண்ட பரிசாரகர் எனும் சொல்லின் பயன்பாடு, வேறு பல நல்ல தமிழ்ச் சொற்களைப் போலவே அருகி வருகிறது. நீண்ட காலமாகவே தமிழ்நாட்டு உணவகங்களில் பரிமாறுபவர் ‘சர்வர்’ எனப்படுகிறார். ‘சர்வர் சுந்தரம்’ பிரபலமான படம். கே பாலசந்தர் இப்போது அந்தப் படத்தை எடுத்திருந்தால், ஆங்கிலக் கலப்பிற்காகத் தமிழ்க் காவலர்களின் சினத்திற்கு ஆளாகியிருக்கக்கூடும். அல்லது ‘பரிசாரகன் பாபு’ என்று பெயர் வைத்து தமிழக அரசின் கேளிக்கை வரியிலிருந்து விலக்குப் பெற்றிருக்கக்கூடும்.

Server எனும் ஆங்கிலச் சொல்லுக்கு உணவு பரிமாறுபவர் என்ற பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. என்னுடைய லாங்மென் அகராதி server-க்கு தரும் பொருள்கள் நான்கு. அவையாவன: 1. குறிப்பிட்ட உணவைத் தட்டத்தில் இடுவதற்குப் பயன்படும் சிறப்பு வகைக் கரண்டி; 2. டென்னிஸ் வாலிபால் போன்ற விளையாட்டுக்களில் முதற் பந்தெறிபவர்; 3. ஒரு கணினித் தொடர்ப் பின்னலில் முக்கியமான கணினி; 4. தேவாலயத்தில் வழிபாட்டின்போது அப்பத்தையும் வைனையும் பக்தர்களுக்கு வழங்குவதில் பாதிரியாருக்கு உதவுபவர். ஆங்கில அகராதி என்ன சொன்னாலும், தமிழிலேயே இணையான சொற்கள் இருந்தபோதும், எப்படியோ சர்வர் உணவு பரிமாறுபவர் ஆகிவிட்டார்.

முத்துலிங்கம் பரிசாரகி என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு ஓர் அருகி வரும் நல்ல தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பது மட்டும் காரணமாக இருக்க முடியாது. அந்தச் சொல்லின் பொருத்தப்பாட்டையும் அது உண்டாக்கும் சித்திரத்தையும் கதையை வாசித்ததும் உணர முடிகிறது. ஆசிரியர் இந்தக் கதை வழியே வாசகனை ஓர் உரையாடலுக்கு அழைக்கிறார். அவன் உணர்ந்து கொள்ள எண்ணற்ற சாத்தியங்களையும் வைக்கிறார். பரிசாரகி என்கிற சொல் உண்டாக்கும் நுட்பமான படிமமும் அத்தகையதுதான். அவை வாசகனுக்குப் பிடிபடும்போது அவன் படைப்பாளியின் அலைவரிசையை நெருங்கி விடுகிறான். வாசகனின் பங்களிப்பைக் கோரும் இந்தக் கதையில் நான் தொட்டுணர்ந்த சில கூறுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அதற்கு முன்பாக கதையின் சாரத்தைத் தர முயற்சிக்கிறேன்.

******************

அவள் ஒரு அகதிப்பெண். இலங்கை அல்லது இந்தியப் பெண்ணாக இருக்கலாம். கயானாவாகக்கூட இருக்கலாம். கனடாவில் விருந்து மண்டபங்களுக்கு பரிசாரகிகளை அனுப்பும் நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறாள். நிறுவனம், ஊழியர்களுக்குப் பரிமாறவும் விருந்தினர்களோடு பெருமாறவும் பயிற்சி அளிக்கிறது. எல்லாவற்றுக்கும் விதிகள் உள்ளன. உணவை மேசையின் மீது எந்தப் பக்கத்திலிருந்து வைப்பது, மீதமான உணவை எந்தப் பக்கத்திலிருந்து எடுப்பது, பரிமாறிய பின் எங்கே எப்படி நிற்பது, இன்னும்-காலந் தவறாமை, சீருடை எல்லாவற்றுக்கும் விதிகள் உள்ளன. விதிகள் அவற்றின் வரிசை எண்களோடு அவளுக்கு மனப்பாடம். பயிற்சி ஆசிரியர், உணவு வகைகளின் பெயர்களையும் படிப்பிக்கிறார். சாலட், நாப்கின், சீஸ், கூகம்பர், லெட்டுஸ். எல்லாம் பெயர்ச் சொற்கள். வினைச் சொற்கள் இப்போது தேவையில்லை, அவை தானாகவே வந்து இணைந்து கொள்ளும் என்கிறார். அகதிப் பெண்ணின் ஆங்கிலம் குறைபாடுள்ளது. ஆதலால் அவள் விருந்தினர்களோடு பேசலாகாது என்பது, மேலாளர் தனிப்பட்ட முறையில் இவளுக்கு உண்டாக்கிய விதி. வினைச் சொற்கள் இல்லாமல் அவளால் எப்படிப் பேச முடியும்?

அன்றைய விருந்தை அதி செல்வந்தர் ஒருவர் ஏற்பாடு செய்திருக்கிறார். பிரதம மேசைக்கு எதிர் மேசையில் இருந்த போலந்துக் குடும்பதில் நான்கு பேர். அம்மா-அப்பா-மகன்-மகள். உற்சாகமான குடும்பம். அந்த மேசை அவள் பொறுப்பில் இருந்தது. மகனுக்கு 18 வயது இருக்கலாம். சிவப்புத் தலைமுடி. அவன் அவளைப் பார்க்கிறான். அவளை யாருமே பார்ப்பதில்லை. அவளுக்குள் குறுகுறுவென்று ஓடுகிறது. நடனம் தொடங்கியதும் அவன் பெற்றோர் மேடைக்குப் போய் விடுகிறார்கள். அவன் இவளை அழைத்து காபி கேட்கிறான்-மூன்று முறை. விருந்து முடிந்ததும் அவனுடைய தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறாள். நாப்கினுக்கு கீழே ஐந்து டாலர் நோட்டு இருக்கிறது. அவனது தொலைபேசி எண்ணும் இருக்கிறது.

அறைக்குத் திரும்புகிறாள். இடுங்கிய அறை. அதை இன்னொரு பெண்ணுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அறைச் சிநேகிதிக்கு ஒரு காதலனும் உண்டு. இவள் திரும்பும் வேளை சிநேகிதி இல்லை. இவள் மனம் அந்தரத்தில் உலவுகிறது. சிவப்பு முடிக்காரனை தொலைபேசியில் அழைக்கிறாள். மறுமுனையில் அவன் குரல் ஒலிக்கிறது. இவளுக்குப் பயத்தில் என்ன பேசுவது என்று தெரியவில்லை. தொலைபேசியைக் கீழே வைத்து விடுகிறாள். கடைசியாக வந்த எண்ணை வைத்து அவன் திரும்ப அழைக்கிறான். இவள் தொலைபேசியை எடுப்பதில்லை. பேசியது பரிசாரகியாக இருக்கும் என்பது அவனது ஊகம். இவளை அழைக்கச் சொல்லி ஒரு தகவலை விடுகிறான். இவள் அந்தக் குரலை நாள்தோறும் ஓடவிட்டுக் கேட்கிறாள். இவளை எப்போதும் இளக்காரத்துடன் நடத்தும் அறைவாசிக்கு இது தெரிந்ததும் அந்தக் குரலை அழித்து விடுகிறாள். இவள் துடித்துத்தான் போகிறாள். என்றாலும் அவனது முகத்தையும் குரலையும் நினைவில் மீட்பதை அறைச் சிநேகிதியால் எப்படித் தடுக்க முடியும்?

பின்னொருநாள் நடுநிசிக்குப் பின்னும் நீண்ட ஒரு விருந்தின் இடையில் கிட்டிய சொற்ப அவகாசத்தில் அவனை மீண்டும் அழைக்கிறாள். அவன் ஹலோ என்கிறான். என்ன பேசுவது? அவளிடம் வினைச்சொற்கள் இல்லை. சில வாரங்களுக்கு முன்னர் அவன் சாப்பிட்ட உணவு வகைகளை ஒப்பிக்கிறாள். மொஸரல்லா சாலட், லெட்டூஸ், ப்ரூஸெட், லாசன்யா. பேசியது பரிசாரகி என்பதை ஊகிப்பதில் அவனுக்குச் சிரமமில்லை. அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தையும், அவள் எந்த மண்டபத்திற்கு அனுப்பப் பட்டிருக்கிறாள் என்று கண்டறிவதிலும்தான் சிரமம் இருந்தது. என்றாலும் கண்டு பிடித்து விடுகிறான்.

“படிக்கட்டுகள் முடிவுக்கு வந்த உச்சிப் படியில் அவன் நின்றான். அகதிப் பெண் கீழே நின்றாள்….. அவள் தன் கையில் வைத்திருந்த தட்டத்தைப் பச்சை, மஞ்சள், வெள்ளை மார்போடு சேர்த்துப் பிடித்துக் கொண்டாள். சீருடையில் அவள் தேவதை போல காட்சியளித்தாள். இரண்டு இரண்டு படியாக அவன் பாய்ந்து நெருங்கியபோது அவர்களுக்கிடையில் அந்த ட்ரே இடைஞ்சலாக இருந்ததைக் கண்டான். அவள் அதை இறுக்கிப் பிடித்தாள். அவன் கீழே பார்த்தான். அவள் இரண்டு கைகளாலும் காவிய தட்டத்தில் இன்னும் சில நிமிடங்களில் யாரோ சாப்பிட்டு முடிக்கப் போகும் உணவு வகை இருந்தது. அவள் விதி 27ஐயும், 32ஐயும், 13ஐயும் ஒரே சமயத்தில் முறித்தாள்.”

******************

இது நேராகச் சொல்லப்பட்டிருக்கிற கதைதான். ஆனால் ஆசிரியர் மட்டுமே பேசிக்கொண்டு போகிற ஒரு வழிப் பாதையல்ல. ஆசிரியர் கதைப் போக்கில் கோடிட்ட இடங்களை விட்டுச் செல்கிறார். வாசகன் அவற்றை நிரப்பிக் கொள்கிறான். அப்போது கதை வெளி இரு வழிப் பாதையாகிறது.

கதை நடப்பது கனடாவில். எனில் இது ஒரு தகவலாகத் தரப்படுவதில்லை. விருந்தளிப்பவர் கனடாக்காரர் என்று ஒரு குறிப்பு வருகிறது. ஒரு ஐந்து டாலர் நோட்டு வருகிறது. “தோள் மூட்டுக்கு மேல் சூரியன் உயர எழும்பாத ஒரு பனிக்காலத்துப் பகல் வேளை” வருகிறது. எல்லாமாய்ச் சேர்ந்து கதைக்களன் சிருஷ்டிக்கப் படுகிறது.

அறைச் சிநேகிதிக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவனையும் போலந்து இளைஞனையும் ஆசிரியர் அட்டவணையிட்டு ஒப்பிடுவதில்லை. ஆனால் வாசக மனம் ஒப்பிட்டுக் கொள்கிறது. முன்னவன் “தகரக் குழாய் சத்தத்தில்” பேசுகிறான். பின்னவன் பேசும்போது “அவன் நாக்கில் தொடாமல் வார்த்தைகள் உருண்டு” விழுகின்றன. முன்னவன் இவளைப் பார்க்கும் விதம் இவளுக்குப் பிடிப்பதில்லை. போலந்துக்காரன் பார்வை துளைக்கும்படி இருக்கிறது. எனினும் அதைத் திருப்பித்தர முடியுமா என்று யோசிக்கிறாள். சிநேகிதி இல்லாத சமயங்களில் அவளது காதலன் இவளை அழைத்து ஓர் உரையாடலை உண்டாக்கப் பார்க்கிறான். இவள் தவிர்க்கிறாள். இதற்கு நேர்மாறாக போலந்து இளைஞனை இவளே தொலைபேசியில் அழைக்கிறாள். போலந்துக்காரன் மீது ஈர்ப்பு ஏற்பட அறைச் சிநேகிதியின் காதலனும் ஒரு விதத்தில் காரணமாகிறான்.

இளைஞனின் மீது அவளுக்கு ஈர்ப்பு ஏற்பட்டாலும், இருவருக்கும் உள்ள இடைவெளிகள் அதிகம். அவன் சிவப்பு முடிக்காரன். இவளுக்கு “கறுப்புத் தலைமுடி, கறுப்புச் சருமம், கறுப்புக் கண்கள்”. அவன் கனடாவில் வசிக்கும் செல்வாக்கு மிக்க போலந்துக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவன். இவள் மணிநேரத்துக்கு இவ்வளவு என்று சம்பளம் வாங்கும் அகதிப் பெண். அவன் உயர்ரக பிரெஞ்சு, இத்தாலிய உணவு வகைகளை ருசிப்பவன். இவள் அவற்றைப் பரிமாறும் பரிசாரகி. விருந்தும் நடனமும் அவனுக்குக் கேளிக்கை. இவளுக்கு ஜீவனோபாயம். பெருமாள் கோயில் பரிசாரகரால் ஒருக்கிலும் அர்ச்சகராக முடியாது. மூன்று முறை தீர்த்தம் பெறும் பிரமுகருக்கும், அதை வழங்கும் பரிசாரகருக்கும் உள்ள இடைவெளி அதிகம். பரிசாரகிக்கும் இந்த ஏற்றத் தாழ்வுகள் தெரிந்துதான் இருக்க வேண்டும். ஆனாலும் இளைஞனின் பால் ஈர்ப்பு ஏற்பட என்ன காரணம்? பருவக் கிளர்ச்சி மட்டுமா? வேறு காரணங்களும் இருக்க வேண்டும்.

பரிசாரகிக்குக் கீழ்ப்படிவதற்கு மட்டுமே பயிற்சி அளிக்கப் பட்டிருக்கிறது. அவள் விதிகளின்படி ஒழுகக் கடமைப்பட்டவள். அந்த இளைஞன் கைகளை உயர்த்தி காபி கேட்கிற போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் அவளுக்குச் சந்தேகமில்லை. விதிகள் இருக்கின்றன. ஆனால் அவள் அவனை நேராகப் பார்க்கும்போது, அந்தப் பார்வையைத் திருப்பித் தரமுடியுமா என்று அவளுக்குத் தெரியவில்லை. இதற்கு விதிகள் இல்லை. நிற்பதற்கு, நடப்பதற்கு, சிரிப்பதற்கு, பேசுவதற்கு, பேசாமல் இருப்பதற்கு- எல்லாவற்றுக்கும் விதிகள் உள்ளன. விசாரணையின்றி அவள் அவற்றைக் கைக்கொள்ள வேண்டும்.

வசிப்பிடத்தில் அவளுக்கு வேறுவிதமான இன்னல்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரு சுவர் இருக்கக் கூடிய இடுங்கிய அறையில்தான் அவளால் வசிக்க முடிகிறது. அடுத்தடுத்துக் கட்டில்கள். “கையை நீட்டினால் சிநேகிதி முகத்தில் இடிக்கும். ஆகவே சுவருடன் முட்டிக் கொண்டு”தான் படுக்க முடிகிறது. இதையெல்லாம் சகித்துக் கொண்ட பின்னும், அவள் சிநேகிதியின் அலட்சியத்தையும் அவமதிப்பையும் நேரிட வேண்டியிருக்கிறது. அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் அகதிப் பெண் வாயே திறப்பதில்லை.

பணியிடத்திலும், வசிப்பிடத்திலும் அவளது சுயமும், உணர்வுகளும் கட்டுப் படுத்தப்பட்டிருக்கின்றன. அவளை அவமானங்களும் புறக்கணிப்புகளும் சூழ்ந்திருக்கின்றன. அவள் இயல்பில் உற்சாகமான பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். விருந்து மண்டபத்திற்கு வரும்போது, “கைகளை ஒரு பறவை ஆயத்தம் செய்வது போல் விரித்து, அவள் தட்டு தட்டென்று” நடந்து வருகிறாள். ஆனால் விருந்து நடக்கும்போது “அவளைச் சுற்றியிருக்கும் காற்றைக் கலைத்து விடக்கூடாது” என்பது போல் நிற்கிறாள். அந்தக் காற்றில் விதிகளும் கலந்திருக்க வேண்டும். அவள் அவற்றையே சுவாசிக்கிறாள். மேலாளர் தவறுகளை அனுமதிப்பதில்லை. உறவையும், நட்பையும், அடையாளங்களையும் துறந்து பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். இருட்டறையில் மூச்சுத் திணறுகிறாற் போல் அவள் உணர்ந்திருக்க வேண்டும். விடுதலையை அல்ல, ஒரு ஒளிக்கீற்றையே அவள் மனம் யாசிப்பதாகத் தோன்றுகிறது. அதைப் போலந்து இளைஞன் தரக்கூடும் என்று அவள் நினைத்திருக்கலாம். அதுவே அவன் பால் ஈர்ப்பு ஏற்படவும், அவனை அழைக்கவும், கடைசியில் விதிகளை மீறவுமான துணிவையும் அவளுக்குத் தருகிறது போலும்.

இந்தக் கதை, முத்துலிங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய “அடைப்புகள்” எனும் கதையை நினைவுபடுத்துகிறது. அதன் நாயகியின் பெயர் மீனு. இலங்கைத் தந்தைக்கும் மலையாளத் தாய்க்கும் துபாயில் பிறந்தவள். இங்கிலாந்தில் படித்து அமெரிக்காவில் வேலை பார்ப்பவள். அவளுக்குத் தனது தேசம் எதுவெனத் தெரியவில்லை. எண்ணற்ற அடைப்புகள் இருக்கும் ஓர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள். பதவி உயர்வு பெற்று மேலாளரானால் அவளுக்கு ஒரு அறை கிடைக்கும். ஆனால் அவள் அதற்கு இன்னும் தயாராகவில்லை என்கிறது நிர்வாகம். பரிசாரகியைப் போலவே மீனுவும் அடைப்புகளிலிருந்து விடுபட வேண்டுமென்று விரும்புகிறாள். இருவரையும் தனிமை அழுத்துகிறது. ஆனால் மீனுவுக்கு ஒரு நல்ல வேலை இருக்கிறது. புல்தரையும் குளமும் உள்ள வீடு இருக்கிறது. கார் இருக்கிறது. மீனு அகதியல்லள். அவளுக்கு எல்லா வினைச் சொற்களும் தெரியும். இரண்டு பேரின் பிரச்சனைகளின் ஆழம் வெவ்வேறானது. மீனுவால் அடைப்புகளிலிருந்து வெளியேற முடியவில்லை. அதனால் மீனுவின் கதையில் யதார்த்தம் இருக்கிறது. பரிசாரகி கடைசியில் விதிகளை மீறி விடுகிறாள். அதனால் அவளது முடிவில் ஒரு காவியத்தன்மை இருப்பது போல் தோன்றுகிறது. இரண்டு கதைகளின் படைப்பு மொழியும் அதற்கேற்பவே வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் தோன்றுகிறது.

மீனுவுக்கும் ஒரு தோழி இருக்கிறாள். அறைத் தோழி இல்லை. வீட்டுத் தோழி. பெயர்:அமண்டா. தேசம்:வியட்நாம். அமண்டா ஒரு மர அலங்காரி(Topiarist). “மரங்களிலே யானை, கரடி, அன்னம் என்று உருவம் செதுக்குவாள். இந்தக் கலை மிகவும் சுலபமானது; தேவையற்ற திசையில் போகும் கிளையை வெட்டிவிடுவதுதான் என்பாள். தேவையற்ற கிளையை எப்படித் தீர்மானிப்பது என்று கேட்டால் அதற்குத்தான் படிக்கவேண்டும் என்று பதில் வரும்.”

முத்துலிங்கம் அந்த மர அலங்காரியைப் போலவே பரிசாரகியின் கதையையும் செதுக்கியிருக்கிறார். தேவையற்ற கிளைகளையெல்லாம் வெட்டி, சிற்பத்தைக் கச்சிதமாக்கியிருக்கிறார். என்றாலும் என் வாசக அனுபவத்தில் கதையை ஸ்பரிசிக்கும் போது, சில கிளைகள் சிற்பத்துக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றனவோ என்று தோன்றுகிறது. பரிசாரகிக்கு இளைஞன் பால் ஏற்படும் ஈர்ப்பை மெல்ல மெல்லக் கட்டவிழச் செய்திருக்கலாமோ, அவள் வசிக்கும் அறை ‘மட்டமானது’ என்று நேரடியாகச் சொல்வதைத் தவிர்த்திருக்கலாமோ, அவளது வயதை எங்கேனும் குறிப்புணர்த்தி இருக்கலாமோ…இப்படியெல்லாம் நினைத்துக் கொள்கிறேன். ஆனால் இந்த நெருடல்களையெல்லாம் மீறி கதை தரும் அனுபவம் கலாபூர்வமானது. முத்துலிங்கம் செதுக்கியிருக்கும் எல்லாக் கிளைகளும் அதன் வேர்களை- கடைசி வரிகளை- நோக்கிப் பயணிக்கின்றன. அவள் விதிகளை அங்கேதான் மீறுகிறாள். கட்டுப்படுத்தும் விதிகள் கதை நெடுகிலும் விரவி, வாசகனை கடைசி வரிகளுக்கு இட்டுச் செல்கின்றன.

கதையில், பரிசாரக வகுப்புகளில் சொல்லித் தரப்பட்ட விதிகள் 11 இடங்களில் வருகின்றன- அவற்றின் எண்களோடு. ஆனால் கடைசி வரியில் வரும் எண்களுக்குரிய விதிகள் கதையில் வருவதில்லை. அவை வாசகன் பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய இடங்களுள் ஒன்று.

அவள் புறமே, பச்சை மஞ்சள் வெள்ளை சீருடையும், உதட்டுச் சாயமும், நகப் பூச்சும், கறுப்பு ஸ்டாக்கிங்ஸ¤ம் அணிந்து அலங்காரமாய் இருக்கிறாள். ஆனால் உள்ளுக்குள் பரிதவிக்கிறாள். இந்தச் சித்திரத்தைத் தோற்றுவிப்பதில் பரிசாரகி என்கிற சொல்லுக்கும் பங்கிருக்க வேண்டும். சர்வர், வெயிட்ரஸ், பணிப்பெண், பரிமாறுபவள், சிப்பந்தி முதலான எந்தச் சொல்லைக் காட்டிலும், இந்தச் சித்திரத்தை உருவகிப்பதற்கு பரிசாரகி என்ற சொல்லே பொருத்தமாக இருப்பதாகப் படுகிறது.

கதை நெடுகிலும் அங்கதமும் எள்ளலும் பரிகாசமும் இருக்கிறது. ஆனால் அகதிப் பெண்ணின் இயலாமையும் கையறுநிலையும் கதைக்குள்ளே கனன்று கொண்டே இருக்கிறது. அவளது தவிப்பு உரத்த குரலில் சொல்லப் படுவதில்லை. எனினும் அதன் வெப்பத்தை வாசகன் உணர முடிகிறது. வாசகன் இட்டு நிரப்பிக் கொள்ளும் சாத்தியங்கள் உள்ள முத்துலிங்கத்தின் படைப்பு வெளி இதைச் சாதிக்கிறது. வாசகன் வேறொன்றையும் உய்த்து உணர முடிகிறது. அவளுக்கு மட்டுப்படுத்தப் பட்டவை வினைச்சொற்கள் மட்டுமல்ல, அவளது வினைகளும்தான், அவளது இயல்பும் இயக்கமும் கூடத்தான்.

******************
Website: http://mu.ramanathan.googlepages.com

Email: mu.ramanathan@gmail.com

Series Navigation

மு இராமனாதன்

மு இராமனாதன்