உயிர்ப்புள்ள மனமும் மறதிப் பெருவெளியும்

This entry is part [part not set] of 34 in the series 20061026_Issue

தேவமைந்தன்


உயிர்ப்புள்ள மனம் என்பது விழிப்புற்ற மனம். இந்த விழிப்புற்ற மனத்தை ஆங்கிலத்தில் ‘the awakened mind’ என்கிறார்கள். அப்படியானால் மற்ற மனங்களெல்லாம் உறங்கிக் கொண்டிருக்கின்ற மனங்களா என்ன? அதனால்தான் ‘உயிர்ப்புள்ள மனம்’ என்பது நம்பகமான கலைச்சொல் ஆகிறது. மிகவும் சிறந்த நினைவாற்றலைப் பெற்ற திருக்குறள் இரா. கனகசுப்புரத்தினம் போன்றவர்கள் நினவாற்றலைக் குறித்து மேடைகளில் பேசியும் புத்தகங்களை உருவாக்கியும் வருகின்றனர். இப்படியெல்லாம் நாம் இருக்கவேண்டும் என்பதில்லை.
நினைவுகளை எப்பொழுதும் உயிர்ப்புடன் வைத்திருப்பது கணினிக்கு மட்டுமே சாத்தியம். அதில்கூட, சரி செய்ய முடியாதபடி மோசமான வைரஸ் புகுந்து தாக்கினால் அதன் நினைவும் போய்விடும். எல்லா நினைவுகளையும் உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதைவிட, எதார்த்தமாக நமக்கு எந்த நினைவுகள் உருப்படியாகப் பயன்படுமோ அவற்றை மட்டும் உயிர்ப்புடன் வைத்துக் கொள்ளலாம்.
நண்பர்கள் சிலரைப் பார்த்திருக்கிறேன். தங்களுக்கு வரும் மடல்களுக்கோ மின்னஞ்சல்களுக்கோ மறுமொழியே கொடுக்க மாட்டார்கள். பல நாள்களோ, மாதங்களோ, ஆண்டுகளோ கடந்த பின்னால் நம்மைப் பார்க்க நேரும்பொழுது – எப்பொழுதோ நாம் போட்டிருந்த மடல்களுக்கும் மின்னஞ்சல்களுக்கும் தவறாமல் மறுமொழி சொல்வார்கள். அதாவது, அவ்வளவு காலம், தேவையில்லாமல் அவற்றை நீடித்த நினைவுகளாக உயிர்ப்புடன் இயங்கச் செய்து கொஞ்சமும் அவசியமில்லாமல் தங்கள் நினைவுகளின் பெட்டகத்தை(storage) வலிமை இழக்கச் செய்திருக்கிறார்கள். பிறகு என்ன செய்திருக்க வேண்டும்?
இணைப்புகளோடு(attachments) மின்னஞ்சல்கள் வந்தாலும் சரி, பக்கம் பக்கமாக மடல்கள் வந்தாலும் சரி, உடனுக்குடன் ஓரிரு வரிகள் மறுமொழி இட்டுவிடுவது நினைவுகளின் பெட்டகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்யும் நல்வழி ஆகும். (இந்தத் திட்டத்துக்கு விதிவிலக்குகளானவை உள்ளன. அவற்றுக்கு மறுமொழி தேவையில்லை. மறுமொழி எழுதக் கூடாதவையும் உள்ளன. இங்கு நான் குறிப்பிடுபவை, மறுமொழிகளுக்குத் தகுதியானவற்றை மட்டும்தான்.) விரிவான கடிதம் என்றாலும் அதற்கு மறுமொழியாக, “ஐயா! தங்கள் மடல் கிடைத்தது. தங்களைப்போல் எனக்கு விரிவாக [மறுமொழி] எழுதும் வாய்ப்பில்லை.[‘நேரமில்லை’ என்று எழுதியும் பேசியும் புண்படுத்துவோர் இருக்கிறார்கள்…] ஆகையால் தங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது நீங்கள் கேட்டிருப்பது குறித்து விரிவாகச் சொல்வேன்..” என்று ஓர் அஞ்சலட்டையிலாவது எழுதி அனுப்பிவிட வேண்டும். விரிவான மின்னஞ்சல் என்றால் இதே பாணியில் மறுமொழி விடுத்து வைக்கலாம். ஆனால் அயல்நாடுகளில் வாழும் நண்பர்களுக்கு இது பொருந்தாது. “..பிறகு வாய்ப்புக் கிடைக்கும்பொழுது விவரமாக எழுதுவேன்” என்று தெரிவித்தால் புரிந்து கொள்வார்கள். இதைத் தவிர்த்து, மறுமொழி போடுவதை ஆறப்போடுவதும் கிடப்பில் போடுவதும் உயிர்ப்புள்ள நினைவாற்றலுக்கு மிகுந்த சுமையைக் கொடுத்துவிடும்.
வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் இதே உத்தி பயன் தரும். ஒவ்வொரு பிரச்சினை வரும்பொழுதும், “பிறகு பார்த்துக் கொள்வோம்!” என்று கால இடைவெளி தந்தால், இந்த அவசரமயமான உலகத்தில், அதுவும் ஊதிப் பெருத்துவிடும். ஒவ்வொரு வகையான பிரச்சினைக்கும் ஒவ்வொரு விதமான முதலுதவி உண்டு. அது அது அதைச் செய்து விட்டால் பிரச்சினை வளராது; பூதாகரம் ஆகவும் ஆகாது.
அடுத்தது, மறதிப் பெருவெளி.(Oblivion). இதைக் குறித்து எவ்வளவோ சிந்தனைகள் உள்ளன. இங்கே ஒரு சிறிய தகவலை மட்டும் தருகிறேன். சம்பத் என்ற எழுத்தாள நண்பர் ஒருவர் இருந்தார். இளைஞர். வங்கியொன்றில் பணிபுரிந்தார். ‘இடைவெளி’ என்ற குறுநாவலொன்றை எழுதினார். அதுமட்டும்தான் அவர் படைப்பு என்று ஞாபகம். “ஒரு குட்டி என்றாலும் சிங்கக்குட்டி” என்ற ரகம் அந்தப் படைப்பு. ‘இடைவெளி’ என்பதை மரணத்தைக் குறிப்பதாக உருவகித்திருந்தார்.
“பெருவீட்டில் ஓர் அறையின் கதவுகள் மூடி, மற்றோர் அறையின் கதவுகள் திறந்ததைப் போல” என்று அசிசியின் சேந்த் பிரான்சுவா குறிப்பிட்டதுபோலவும்; “பாலூட்டும் தாய், பாலூட்டுகையில் மார்பு மாற்றிக் கொள்ளும் இடைநேரம்” என்று தாகூர், இறப்புக்கும் அதைத் தொடர்ந்து வரும் பிறப்புக்கும் இடையிலான வெளி குறித்துச் சொன்னது போலவும்; நண்பர் சம்பத், தன் நாவலின் கதைக்கருவானது இறப்பு என்ற ‘இடைவெளி’யையே ஆழ்ந்த மெளனத்துடன் சுற்றிவருவதாக அமைத்திருந்தார். “தரையிலிருந்து கூரையை நோக்கி மேலே சுழன்று செல்வது” என்று ஏ.ஜே. கிரானின் ‘ எ சாங் ஆஃப் சிக்ஸ் பென்’ஸில் படிக்கட்டு ஒன்றைக் குறித்துச் சொல்வாரே, அதேபோல் சம்பத், ‘இடைவெளி’யின் கதையை ‘ஸ்பைர’லாக நகர்த்தியிருந்தார். அதை வாசித்த அனுபவம், ‘க்றிஸ்டபெல்’லில் வருவதுபோல் ‘சொல்லக் கூடியதல்ல’(“a sight to see, not to tell”)ரகம்தான்.
இடைவெளியை சம்பத் அப்படிக் குறியீடாக்கியதுபோலவே, ‘ஒதுங்கிய நகரம்’ ஆகிய லாசாவின் ‘லமாசரி’ ஒன்றின் துறவியொருவர், “மறதியே மரணம்” என்றார். விளக்கத்தில், நாம் நம்மையே முழுமையாக மறந்துவிடும் நிலையே மரணமாகும் என்று தெரிவித்தார். “உலகமாயையிலிருந்து பிரகிருதி கழன்று கொள்வது” என்று தத்துவமும் இதைத்தானே சொல்கிறது?
பிறப்பைப் போலவே இறப்பும் கொண்டாடத் தக்கது என்று ஓஷோவும் சொல்லியிருப்பதை இங்கே நாம் நினைத்துப் பார்க்கலாம். சம்பத் அவர்களின் கருதுகோளின்படி, பிறப்புக்கு முன்னால் இருக்கும் இடைவெளியானது – இறப்புக்குப் பின்னால் இருக்கும் இடைவெளியின் பின்னொட்டு (suffix) ஆகும். இறப்புக்கு முன்னால் பிறப்புவரையுள்ள இடைவெளி, வேறு விதமாகச் சொன்னால் – பிறப்பு முதல் இறப்பு வரையிலான இடைவெளியானது மறதிப்பெருவெளியின்(Oblivion) ஆதிக்கத்தில் எப்பொழுதுமே இருப்பது. அதனால்தான், வாழ்ந்தும் வாழாமல் ‘வாழ்பவர்க’ளைப் போலவே நினைவுகள் பல, உயிர்ப்போடும் இல்லாமல் மறதிப் பெருவெளிக்குள்ளும் ஒடுங்கி மறையாமல் இடையில் கிடந்து இரண்டாட்டம் ஆடி மனித மனத்தைக் கடும் அவதிக்குள்ளாக்குகின்றன. ஒருவேளை மனிதர்களைப்போலவே அவையும் தத்தம் வினைக்கு எதிர்வினை நேரும்பொழுது, “எல்லாம் என் நேரம்’டா!” என்று வார்த்தைகளைக் கொண்டு தம் வினைவிதைப்பைத் தந்திரமாக மறைத்துக்கொண்டு புலம்புகின்றனவோ என்னவோ!?


karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்