உருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை”

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

பாவண்ணன்


எண்பது கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பில் நல்ல வாசிப்பனுபவம் தரக்கூடிய பல கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படும் புகார்களின் குரலில் வலிமையும் அழுத்தமும் அடங்கியுள்ளன. சித்தரிக்கப்படும் ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் அது தன் புகார் வரிகளை உறுதியாகப் பதிவு செய்கிறது. வெறுமையும் இயலாமையும் எங்கெங்கும் படர்ந்திருக்கின்றன. தவிப்பும் பெருமூச்சும் மாறிமாறி வெளிப்பட்டபடி இருக்கின்றன. ஆழ்மனத்தில் பற்றிப் படர்ந்திருக்கும் சுதந்திரத்துக்கான வேட்கையை இப்புகார்கள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன என எடுத்துக்கொள்ளலாம்.

“எனதந்தச் சொல்” என்கிற கவிதை மின்சாரம் நீங்கிய இரவொன்றைப்பற்றிய சித்திரத்தை முன்வைக்கிறது. மின்சாரம் அணைந்த இரவு வேளையில் சிம்னிவிளக்கு ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது. அச்சுடரில் நிரம்பித் ததும்புகிறது மெளனம். வார்த்தைகளின் ஒத்த நகர்வுக்காக இருவரும் காத்திருக்கிறார்கள். எந்த ஒன்றைப்பற்றியும் ஒருமித்த கருத்தோ ஈடுபாடோ இல்லாததால் ஒத்த அலைவரிசையில் வார்த்தைகள் எழ மறுக்கின்றன. வார்த்தைகள் என எழுந்தால் அவை முரண்பட்டும் மோதலோடும்தான் இருக்கக்கூடும் என்கிற நிலைமையே நிலவுகிறது. உண்மையில் பகிர்ந்துகொள்ள எதுவுமே இல்லாதவர்கள் அவர்கள். அதனாலேயே பகிர வாய்த்த கணமொன்று தேடி சுழன்று திரிகிறது அவர்களுடைய ஞாபகப்பருந்து. உரையாடல் வழியாக மட்டுமே அக்கணத்தையும் அந்த இருளின் தவிப்பைக் கடந்து செல்வது சாத்தியம் என்கிற நிலையில் உரையாட எதுவுமேயற்று, ஒத்த எண்ணங்களாக எவை இருக்கக்கூடும் என ஒருவரையொருவர் உளவறியும் முனைப்பிலும் மெளனத்திலும் நேரம் கழிந்தபடி இருக்கிறது. ஆழ்ந்த யோசனைகளுக்குப் பிறகு ஒருவழியாக அவர்கள் உரையாடல் தொடங்குகிறது. ஆனால் அந்த உரையாடலில் ஒருவர் வெளிப்படுத்துபவை நஞ்சு வழியும் வார்த்தைகள். இன்னொருவர் தொடங்கிய உரையாடலில் தீ கனல்கிறது. வெம்மை அடங்கிய அச்சொல் எதுவாக இருக்கும் என்கிற கேள்வி எழும்பொழுதே இந்த வெம்மையைக் கக்கும் எரிமலைகளாக நம்மை நாம் வடிவமைத்துக்கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கையா என்கிற கேள்வியும் எழுகிறது. புகார் ஒரு கேள்வியாக உருமாற்றமடைகிறது.

“தீராதது” கவிதையில் புறக்கணிப்பின் வருத்தம் ஊட்டக்கூடிய வலியின் வேதனையை முன்வைக்கும் குரலை மறக்கமுடிவதில்லை. ஒருமுறை இரவின் வர்ணத்தில் தாபத்தைக் கரைத்துவிட்டு வீடு திரும்பமுடிகிறது. இன்னொருமுறை அதே தாபத்தை விசும்பல்களுக்கு நடுவே உணவுமேசைக்கடியில் ஒளித்துவைக்க முடிகிறது. இப்படி வீட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் ஏதேதோ இடங்களில் எல்லா ஏக்கங்களும் மறைத்துவைக்கப்படுகின்றன. நிறைவேறப் போவதில்லை என்று தெரிந்த நிலையிலும் ஏக்கமுறாமல் இருக்கமுடியவில்லை. நிறைவேற்றிக்கொள்ள எந்த வழியும் தெரியாத நிலையில் அந்த ஏக்கங்களை மறைத்துவைப்பதைத் தவிரவும் வேறு வழியில்லை. இறுதியில் புதையுண்ட ஏக்கங்களின் பரப்பின்மீது நாயொன்று சிறுநீர் கழித்துவிட்டுப் போகிறது. புறக்கணிக்கப்படுவது குறித்த புகார் ஒரு தனிச்சித்திரமாகத் தொடங்கி பொதுச்சித்திரமாக உருமாற்றம் பெறுகிறது. நாயின் தீடீர் வருகையும் அதன் செய்கையும் கவிதையில் நிகழும் உச்சக்கணம். காலம்காலமாகப் புறக்கணிக்கப்பட்டும்கூட அவற்றை மறைத்துவைத்ததும் புதைத்துவைத்ததும் என்றேனும் ஒருநாள் கிட்டக்கூடிய நிறைவுக்காகத்தான். அது ஒரு மாபெரும் காத்திருப்பு. அக்காத்திருப்பை அர்த்தற்றதாக்கிவிடுகிறது நாயின் வருகையும் செய்கையும். நிறைவின்மையைக் காலம்காலமாக புதைத்தும் மறைத்தும் வாழவேண்டிய நெருக்கடிக்கு ஆளாக்கிவிடுகிறது அவள் வாழ்வு. கசப்பான ஓர் உண்மையைக் கண்டடைந்ததன் குரலாகப் புகார் உருமாற்றமடைகிறது. இவ்விதம் புகார்கள் பெறும் உருமாற்றங்களைச் சல்மாவின் பல கவிதைகளில் உணரமுடிகிறது.

இந்தப் புகார்கள் கண்டடைந்த இரு முக்கியமான சித்திரங்கள் இத்தொகுப்பில் உள்ளன. ஒன்று “படிமம்” என்னும் கவிதை. இன்னொன்று “விடுபடல்” என்னும் கவிதை. படிமம் கவிதை மிதிபட்டு நசுங்கிக் கூழாகிவிட்ட ஒரு கரப்பானுடைய சித்திரம் இடம்பெறுகிறது. இருள், மிதிபடல் என்பவை முக்கியமான குறிப்புகள். தெரிந்தா அல்லது தெரியாமலா என்னும் குறிப்பு மறைக்கப்பட்டிருப்பதும் அதே அளவு முக்கியமானது. தெரிந்தும் மிதிக்கலாம், தெரியாமலும் மிதிக்கலாம் என்னும் அலட்சியமும் எல்லாமே மிதிக்கத்தக்கவையே என்னும் எண்ணமும் நிறைந்திருக்கிற மானுட மனத்தை அது அடையாளப்படுத்துகிறது. கூழான கரப்பானுடைய தசை எறும்புகளுக்கு இரையாகிவிட எஞ்சியிருப்பவை மேலெழ இயலாத சிறகுகளும் எடுத்துச் செல்ல உதவாத குச்சிக்கால்களும். என்னை எனக்குக் காட்டவென என்ற பெருமூச்சிலும் வேதனையிலும் அடங்கியிருக்கும் புகார் எத்தகையது? சிறகுகளும் கால்களும் எதைக் காட்டுகின்றன? பறக்காத சிறகுகளும் ஓடாத கால்களும் முடக்கப்பட்ட வாழ்வின் அடையாளங்களாக விளங்குகின்றன. எதற்காக இவை முடக்கப்பட்டன? இவற்றை முறித்து முடக்கிய சக்தி எது? ஓர் உயிரின் இயக்கத்தை முடக்குவதற்கான அதிகாரத்தை இன்னொரு உயிருக்கு வழங்கியதில் என்ன நியாயம் இருக்கிறது? நியாயமற்ற இந்த அதிகாரத்தை அந்த உயிர் எப்படி தனதாக்கிக்கொள்ள முடிந்தது? இப்படி ஏராளமான கேள்விகள் இச்சித்திரத்தை ஒட்டி மனத்துக்குள் சிறகடிக்கின்றன.

“விடுபடல்” கவிதையில் இடம்பெறுவது ஒரு குரங்கின் சித்திரம். அது ஒரு பிள்ளைத்தாய்ச்சிக் குரங்கு. அக்குரங்குக்கு தன் உணவைத் தானே தேடிக்கொள்வதில் எவ்விதமான வருத்தமும் இல்லை. தன் அடிவயிற்றின் கனம்பற்றிய பாதுகாப்பு குறித்தும் அதற்குக் கவலை இல்லை. எதனுடைய கருவைத் தன் வயிறு சுமக்கிறது என்கிற சலனமும் அதற்கு இல்லை. சரி, அதை இங்கே முன்வைப்பதற்கான காரணம் என்ன? சலனமில்லாத குரங்குக்கு இருக்கிற திருப்தியான வாழ்க்கை மானுடருக்கு இல்லை. அதுதான் அவலம். அதுதான் விடுபடல். எல்லாச் சலனங்களிலிருந்தும் விட்டு விடுதலையாகி நிற்கிற குரங்கைப்போல மானுடரால் விடுபட்டு நிற்கமுடியவில்லை. மானுட வாழ்க்கை வரையறைகளாலும் விதிகளாலும் நிரம்பியது. அங்கு தெளிவான அடையாளங்களும் பாதுகாப்பும் தேவைப்படுகின்றன. இந்த வாழ்வில் ஆனந்தமும் இல்லை, திருப்தியும் இல்லை என்று சொல்வதற்கில்லை. நிச்சயம் உண்டு. அவற்றை அடைவதற்கான அணுகுமுறைகளில் சிக்கல் முளைக்கும்போது அவை அடையமுடியாதவையாக மாறிவிடுகின்றன. அந்த அதிருப்தியின் ஆவேசமே விடுபட்டு நிற்கும் குரங்கின் சுதந்திரத்தைக் கண்டு பெருமூச்சாக வெளிப்படுகிறது. கரப்பானுடைய அசைவற்ற கால்களைக் கண்டு வெளிப்படும் பெருமூச்சுக்கும் குரங்கின் சலனமற்ற மனப்போக்கைக் கண்டு வெளிப்படும் பெருமூச்சுக்கும் இடையே நிச்சயமான வேறுபாடு உண்டு.

தொகுப்பில் நல்ல வாசிப்பனுவபத்தைத் தரக்கூடிய கவிதைகளாக “ஏரி”, “நானில்லாத அவனது உலகம்”, “என் பூர்வீக வீடு” ஆகியவற்றைச் சொல்லலாம். சலனமற்றிருக்கிற ஏரி ஒரு பக்கம். முதலில் காலியான மதுக்கோப்பைகள் அந்த ஏரிக்குள் விட்டெறியப்படுகின்றன. பிறகு சாம்பல் கிண்ணம் வீசியெறியப்படுகிறது. கசந்துபோன உறவை இகழ்ந்து அந்தத் தண்ணீரில் சிற்சில சமயங்களில் ஆத்திரத்தைத் தணித்துக்கொள்வதற்காக எச்சில் துப்பப்படுகிறது. கழிவுகள் கொட்டப்படுகின்றன. பிறகு ஒருநாள் எதுவுமே நிகழாததைப்போல ஏரிக்குள் இறங்கி தாகம் தணித்துக்கொள்ளவும் தயராகிறது. எதற்குமே மறுப்பை முன்வைப்பதில்லை ஏரி. ஆனால் இறுதியாக முன்வைக்கும் அதன் குரல் மிகமுக்கியமான ஒன்று. சலனமற்றுத் தேங்கிய நீர் எதையும் தொலைக்காமல் பத்திரமாகப் பாதுகாக்கும் என்று ஓர் அறிவிப்பை முன்வைக்கிறது அக்குரல். இந்த அறிவிப்புதான் இக்கவிதையை முக்கியமானதாக மாற்றுகிறது. மனம் ஒரு வற்றாத ஜீவநதியென்றும் கடலென்றும் படிமப்படுத்தியதெல்லாம் பழைய கதையாகிவிட்டது. தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொண்டும் தனக்குத்தானே புத்துணர்ச்சியூட்டிக்கொண்டும் நதியைப்போலவோ கடலைப்போலவோ அல்லாமல் தனக்குள் எறியப்படுகிற அனைத்தையும் பாதுகாக்கிற சலனமற்ற ஏரியாக இன்று மாறிவிட்டது மனம். ஏரியை நெருங்கும்பொழுது இந்த எண்ணம் மிகவும் அவசியம். இன்னொருவர் ஞாபகத்தில் எல்லாமே படிந்து சித்திரமாக மாறும் என்கிற எச்சரிக்கை உணர்வு அவசியம். கவிதையில் வெளிப்படும் குரல் இந்த எச்சரிக்கை உணர்வுக்கு அழுத்தம் கொடுக்கிறது. பல கவிதைகளில் சின்னச்சின்ன முணுமுணுப்புகளாக வெளிப்பட்டு வந்த குரல் இங்கு கூர்மை பெற்று இந்த எச்சரிக்கையை முன்வைத்து அணுகுமுறையைப் பரிசீலிக்கத் தூண்டுகிறது என எடுத்துக்கொள்ளலாம்.

காலமாற்றத்தை ஒரு தாயாக உணர்ந்து முன்வைக்கும் “நானில்லாத அவனது உலகம்” தமிழ்ப்பரப்பில் முக்கியமான ஒரு பதிவு. குழந்தைப் பருவத்தைத் துடித்துக் கடக்க முயலும் மகனையும் தன் மகளைக் குழந்தையாகவே நிறுத்தி அவன் குழந்தைமையைத் துய்த்துக் களிக்க முயற்சி செய்யும் தாயையும் மாறிமாறி உயிர்த்துடிப்புடன் சித்தரிக்கிறது கவிதை. மகனின் வேகம் காலத்தையே தாண்டிக் குதித்துத் தாவிவிட எழுச்சி கொள்கிறது. தாயின் ஆவல் காலத்தை நகரவிடாமல் உறைந்துபோகச் செய்ய விரும்புகிறது. மகனுடைய மனம் புதிய இன்பத்தையும் புதிய உலகத்தையும் விழைகிறது. தாயின் மனம் பழகிய இன்பத்தையும் அதைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் விழைவையும் வெளிப்படுத்துகிறது. காலம்காலமாக நிகழும் மனப்போராட்டத்துக்கு கவிதைவடிவம் தந்திருக்கிறார் சல்மா. என்னிடம் அறிந்துகொள்ள இனியொரு பதிலுமில்லை என்ற குரலில் வெடிக்கும் உணர்வில் வெளிப்படுவது தாய்மையின் ஏக்கம். உலகின் சகல கேள்விகளுக்கும் பதில் அறிந்தவளாகத் தெரிந்த தாய் திடீரென எதுவுமே அறியாத அப்பாவியாக ஒரே கணத்தில் மகனுடைய பார்வையில் உருமாற்றம் பெற்றுவிடுகிறாள். இந்த அதிசயத்தைக் காலம் நிகழ்த்திக் காட்டுகிறது. உதிரத்தையே பாலாக ஊட்டி வளர்த்த மகனை மார்போடு மார்பு சேர்த்து அணைத்துத் தழுவ முடியாத தாய்மையின் தவிப்பை எந்த மகனாலும் புரிந்துகொள்ள இயல்வதில்லை. குழந்தை வளர்ந்து மகனாகி, மகன் இளைஞனாகி, இளைஞன் இன்னொரு ஆணாக உலகில் தோற்றம் கொள்ளும் விந்தைக்கு நடுவே எழும் தாய்மையின் குரல் அவள் நெஞ்சிலேயே ஓங்கி ஒலித்து அவள் நெஞ்சிலேயே அடங்கிவிடுகிறது. ஒரு குழந்தை ஆணாக வளர்ந்து வெளியேற தன் மடி ஒரு அடைக்கலமாகமட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது போலும் என்று படரும் கசப்புக்கான மருந்து இவ்வுலகிலேயே இல்லை.

“என் பூர்விக வீடு” கவிதை ஒரு நினைவுச் சித்திரமாகத்தான் தொடங்குகிறது. அந்த வீடு முற்றிலுமாக தன் அடையாளங்களை இழந்து நொறுங்கிக்கிடக்கும் இடத்திலிருந்து, அந்த வீட்டை அது தன் மனத்துக்குள் கட்டியெழுப்பிக்கொள்கிறது. வீட்டுக்கும் ஓர் இளம்பெண்ணுக்கும் இடையேயுள்ள உறவை அதன் எல்லா விதமான அசைவுகளோடும் அங்கங்கே காணப்படும் உயர்திணை மற்றும் அ·றிணைப் பொருட்களோடும் பின்னிப் பிணைத்திருக்கிறது. சொந்த வீடு என்பது கட்டற்ற சுதந்திரத்துக்கும் இன்பத்துக்குமான அடையாளம். அதன் அடையாளம் ஒவ்வொன்றையும் காலம் தன் நெஞ்சில் மாறாத சித்திரங்களாகத் தீட்டிவிட்டு மறையும்போது எஞ்சிய சிதிலங்களிடையே வாழ்வின் தடயங்கள் சிற்சிலவேனும் எஞ்சியிருக்கக்கூடும் என்று நினைத்துக்கொள்கிறது மனம். சரிந்து நிற்கும் உடைந்த சுவரில் காணப்படும் கரிக்கிறுக்கல்களும் மைப்புள்ளிகளும் வாழ்வின் எச்சமல்லவா? வாழ்வின் எச்சத்தை இடிந்த சுவர்கள் சுமக்கின்றன. வீட்டின் எச்சத்தை நெஞ்சம் சுமக்கிறது. மாறிமாறிச் சுமந்துகொண்டுதான் காலத்தைக் கடந்துசெல்கிறோம் நாம். சுவரின் ஒருபுறம் தானும் மறுபுறம் ஒரு வேப்பரமும் ஒன்றாக வளர்ந்ததைப்பற்றிய அசைபோடல் மேலான வாசக அனுபவத்தை வழங்கக்கூடிய குறிப்பாக கவிதையில் எஞ்சி நிற்கிறது. சுவர் இடிந்தபின் தன் நிழல் படிந்த நிலம்பார்த்து தான் மட்டும் தவித்திருக்கிறது மரம். இப்போது வீடு இல்லை. வீட்டில் வாழ்ந்த மனிதர்களும் இல்லை. ஆனால் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒருமரம் மட்டுமே எஞ்சி நிலம்பார்த்து நின்றிருக்கிறது. மரமும் மானுடனும் இயற்கை சார்ந்த உயிர்களே என்றாலும் காலத்தைக் கடந்து நிற்கிறது மரம். காலத்தில் கரைந்துபோகிறது மானுட வாழ்வு. ஒரு மரத்துக்கு உள்ள பெரும்பேறு மானுடனுக்கு வாய்க்கவில்லை என்பது மிகப்பெரிய துரதிருஷ்டம்.

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்