தெள்ளிய மொழியில் தெய்வீகத் தேடல்கள்: தமிழ் உபநிஷத நூல்கள் குறித்து

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

ஜடாயு



“உண்மையின் முகம் பொன்மயமான திரையால் மறைக்கப் பட்டுள்ளது. சூரியதேவா! சத்திய நிஷ்டை உடைய நான் அந்த உண்மையைக் காண்பதற்காக மறைப்பை விலக்குவாய்!”
– ஈசாவாஸ்ய உபநிஷதம் 15

“ஏவப் பட்ட மனம் யாருடைய விருப்பத்தால் செல்கிறது? முக்கியப் பிராணனைச் செலுத்துவது யார்? யாருடைய சங்கல்பத்தால் வாக்கு பேசப் படுகிறது? கண்களையும் காதுகளையும் எந்த தேவன் செயல்படுத்துகிறான்?”
– கேன உபநிஷதம் 1.1

“ நசிகேதா, தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்றவன் ஆன்ம வடிவாகவே ஆகிறான்”
– கட உபநிஷதம் 2.1.15

சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் சுவாமி ஆசுதோஷானந்தர் விளக்கவுரையுடன் பதிப்பித்திருக்கும் உபநிஷத நூல்கள் இத்தகைய தெய்வீக ஞானத் தேடல்களை தெள்ளிய தமிழில் வெளிக்கொணர்கின்றன.

“வேத காலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்” என்று நூல்களின் முன்னுரை கூறுகிறது.
பன்னரும் உபநிஷத நூலெங்கள் நூலே
பாரினில் ஏதொரு நூல் இது போலே?
என்று வியந்தார் மகாகவி பாரதி. சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, ஸ்ரீ அரவிந்தர், ஜெர்மானிய தத்துவ அறிஞர் ஷோபன்ஹேர், அறிவியல் அறிஞர் ஜகதீஷ் சந்திர போஸ், ஓஷோ ரஜனீஷ் போன்று பல்வேறுபட்ட சிந்தனையாளர்களும் உபநிஷதங்களின் சிந்தனைச் செறிவு பற்றிக் கூறிச் சென்றிருக்கிறார்கள் என்பதே இதற்குச் சான்று.

“உபநிஷத்” என்ற சொல்லுக்கு அருகில் அமர்தல் என்று பொருள். குருவும் சீடனுமாக அருகமர்ந்து ஞானத் தேடல்களை முன்னெடுத்துச் சென்ற வேத ரிஷிகளின் அனுபூதியில் வெளிப்பட்ட நூல்களே உபநிஷதங்கள். பின்னர் இவை தொக்குக்கப் பட்டு ஞான காண்டம் என்று வழங்கும் வேதப் பிரிவாக ஆயின. அடிப்படையில் இவை அற்புதமான கவிதைகள், பெரும்பாலான உபநிஷதங்களின் நடையும் கவிதை மொழியிலேயே உள்ளது.

வேதாந்த தத்துவ மரபின் அறுதிப் பிரமாணமாக அமைந்த பிரஸ்தானத் திரயம் என்ற மூன்று நூல்களில் உபநிஷதங்களே முதன்மையானவை (மற்ற இரண்டு பகவத்கீதை, பிரம்ம சூத்திரங்கள்). வேதாந்த தத்துவம் முகிழ்ச்சியடைந்த நிலையில் கீதையில் வெளிப்படுவதாகவும், அதன் பரிணாம வளர்ச்சியை (evolution) உபநிஷதங்களின் வாயிலாகவே அறிய முடியும் என்றும் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். உபநிஷதங்களின் மேன்மையைத் தன் ஆழ்ந்த உரைகள் மூலம் வெளிக்கொணர்ந்து, அவற்றை வேதாந்த ஞான மரபின் மூல நூல்களாக்கியவர் சங்கரர். அவரைத் தொடர்ந்து வேதாந்த தேசிகர், மத்வர் உள்ளிட்ட பற்பல வேதாந்த ஆசாரியார்களும் தங்கள் தத்துவப் பிரிவுகளை நிலைநாட்டும் விதமாகப் பல்வேறு உரைகளை எழுதிச் சென்றிருக்கிறார்கள்.

“வேதத் திருவிழியாள், அதில் மிக்க பல் உரையென்னும் கரு மையிட்டாள்”

என்று கலைமகள் துதியில் பாரதி கூறுகிறார். அளவோடு இடும் கண்மை கண்களின் அழகை எடுத்துக்காட்டும், ஆனால் அதிகமாகிவிட்டாலோ கண்களை பயங்கரமாக்கி விடும் அல்லவா? நம் வேதநூல்கள் விஷயத்திலும் இது பொருந்தும் என்று உணர்த்தவே பாரதி இப்படிப் பாடியிருக்கலாம் என்று தோன்றுகிறது!

உபநிஷதங்களுக்கு எழுதப் பட்ட மரபு சார்ந்த உரைகள், பெரும்பாலும் தத்துவச் சிக்கல்களையும், சிடுக்குகளையுமே முன்னிறுத்தி எழுதப் பட்டன. அதனால், பல இடங்களில், இயல்பாகவே பொருள் விளங்கும் மந்திரங்கள் கூட சுற்றி வளைத்து வரும் தர்க்கம் (convoluted logic) மூலம் உரை எழுதுபவரது தர்க்க வலைக்குள் சிக்க வைக்கப் பட்டன. “த்வைதத்திலிருந்து அத்வைதம் வரை எல்லா விதமான படிப்படியான தத்துவங்கள், கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் முதலிய யோகங்கள் எல்லாமே உபநிஷதங்களில் இருக்கின்றன. மேலும், இவை அனைத்திற்குள்ளும் இழையோடிக் கொண்டிருக்கும் ஒருமையும் உபநிஷதங்களில் இருக்கிறது” என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

மரபு சார்ந்த உரைகளில் ஒன்றிரண்டைக் கூடப் படித்து ஒப்பு நோக்குவது என்பது எந்தக் கொம்பனையும் அயர வைக்கும் சமாசாரம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலில் வரும் முழு நேர தர்க்க சாஸ்திரிகளுக்கு வேண்டுமானால் அது சாத்தியமாகலாம். ஆனாலும், எல்லாவற்றையும் கேள்வி கேட்க வேண்டும், ஆராய வேண்டும் என்ற தளையற்ற ஞானத் தேடலை முன்னெடுத்துச் செல்ல இந்த எல்லா உரைகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் முக்கியமான வரலாற்றுத் தேவை இருக்கிறது என்றே கருதுகிறேன்.

பல்வேறு பட்ட பணிகளுக்கிடையிலும் உபநிஷதங்களைக் கற்க முயன்று கொண்டிருக்கும் என் சொந்த அனுபவத்தில் உபநிஷத்துகளின் மையக் கருத்துக்களுக்கு நேராகச் செல்லும் உரைகளே தொடக்கத்தில் பெரிதும் துணை புரிந்தன. ஓரளவு சம்ஸ்கிருத ஞானம் இருந்ததால் பல மந்திரங்களின் பொருளை ஆரம்ப தளத்தில் உணர்ந்து அனுபவிப்பதற்கு எளிய பொழிபெயர்ப்புகளே போதுமானதாக இருந்தன. ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சுவாமி ப்ரபவானந்தர், சுவாமி கம்பீரானந்தர் முதலியோரது ஆங்கில உரைகள் முதன்முதலாக உபநிஷதம் படிப்பவர்களும் எளிதாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் எழுதப் பட்டவை.

சுவாமி ஆசுதோஷானந்தரின் இந்தத் தமிழ் உரைகளும் அதே வகையைச் சார்ந்தவை. “தத்துவப் பின்னல்களைக் கருத்தில் கொள்ளாமல் இறைவன் என்ற மாபெரும் சக்தியிடம் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுக்கப் பட்டுள்ளது… இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை” என்று முன்னுரையிலேயே இதைச் சொல்லி விடுகிறார். தமிழில் இதற்கு முன் வெளிவந்த உபநிஷத மொழியாக்கங்கள் பெரும்பாலும் வைதீக தமிழ் நடையிலேயே இருந்தன (“அண்ணா” உரை எழுதி ரா.கி. மடம் வெளியிட்ட பழைய “உபநிஷத் ஸாரம்” நூல்கள் ஒரு உதாரணம்). சம்ஸ்கிருத சொற்பிரயோகம் மட்டுமல்ல, பொருளை விளக்கும் முறையிலும் வைதீக தமிழ் நடை ஒரு குறிப்பிட்ட அமைப்பைப் பின்பற்றும். ஆனால், இந்த நூல்களின் தமிழ் நடை ஒரு சராசரி தமிழ் வாசகனை மனதில் கொண்டிருக்கிறது. பொருள் விளக்கங்களும் தெளிவான, அச்சுறுத்தாத மொழி நடையைப் பின்பற்றுகின்றன.

நூல் அமைப்பும் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு உபநிஷத நூலின் முன்னுரையிலும் உபநிஷதங்கள் பற்றிய பொது அறிமுகம் இணைக்கப் பட்டுள்ளது. அது தவிர, குறிப்பிட்ட உபநிஷதம் பற்றிய சிறப்பு அறிமுகமும் தரப்படுகிறது. ஒவ்வொரு மந்திரத்திற்கும் சம்ஸ்கிருத மூலம், தமிழ் வடிவம், வார்த்தைக்கு வார்த்தை பொருள், பொழிப்புரை, திரண்ட பொருள் விளக்கம் என்ற ரீதியில் நூல் அமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு உபநிஷத நூலையும் தனித் தனியாகப் படிப்பதற்கும் இது ஏதுவாகும்.

உபநிஷதங்கள் 108 என்று சம்பிரதாயமாக அறியப்பட்டாலும், வேதாந்த தத்துவத்தில் “முக்கிய உபநிஷதங்கள்” என்று அறியப்படுபவை 10. இவற்றில் 8 உபநிஷதங்கள் இந்த வரிசையில் வெளிவந்துள்ளன.

ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
கேன உபநிஷதம் (எல்லாம் யாரால்?)
கட உபநிஷதம் (மரணத்திற்குப் பின்னால்)
ப்ரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி)
முண்டக உபநிஷதம் (நிழலும் நிஜமும்)
மாண்டூக்ய உபநிஷதம் (ஒன்றென்றிரு)
ஐதரேய உபநிஷதம் (மிஞ்சும் அதிசயம்)
தைத்திரீய உபநிஷதம் (வாழ்க்கையை வாழுங்கள்)

சாந்தோக்ய உபநிஷதம், ப்ருஹதாரண்ய உபநிஷதம் – இந்த இரண்டு உபநிஷதங்களும் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்ப்போம்.

ஒவ்வோரு உபநிஷதமும் தனக்கே உரிய தனித்தன்மையையும் அழகும் கொண்டிருக்கிறது. கட உபநிஷதம் மரணதேவனிடத்திலேயே சென்று மரணத்திற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று வினவும் நசிகேதன் என்ற என்ற சிறுவனின் ஞான தாகத்தை விளக்குகிறது. முண்டக உபநிஷதம் பல தளங்களில் ஞானத் தேடலை முன்வைக்கிறது. “ஒரு மரத்தில் பொன்மயமான சிறகுகள் உள்ள ஒரே மாதிரியான இரு பறவைகள்” என்று ஜீவனுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் முண்டக உபநிஷத உவமை மிகவும் ஆழமானது. ஐதரேய உபநிஷதம் கருவில் உயிர் உருவாவது பற்றிப் பேசுகிறது. தைத்திரீய உபநிஷதம் ஐந்து படிநிலைகள் (அன்னம், ப்ராணன், மனம், விக்ஞானம், ஆனந்தம் என்கிற ஐந்து கோசங்கள்) பற்றிய தியானம், ஒவ்வொரு படிநிலையையும் தன் தவத்தால் ப்ருகு தானே உணர்தல் ஆகியவை பற்றிக் கூறுகிறது. சில உபநிஷதங்களில் அழகிய, சிறிய கதைகளும் உள்ளன.

முண்டக உபநிஷதத்தில் வேத நூலறிவு, வேதாந்த விசாரம் என்பது கூட மற்ற எல்லா உலகியல் அறிவுத் துறைகளையும் போலத் தான், இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதே மேலான ஞானம் என்று கூறுகிறது. இப்படி, தங்கள் தத்துவ அறிவின் எல்லையத் தாங்களே உணர்த்தி, மனிதன் அவற்றையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற கருத்தையும் வேத ரிஷிகள் உணர்த்தினர்.

உபநிஷதங்கள் பேசும் தத்துவ விஷயங்கள் சாதாரண, பாமர மனிதனுக்கானவையா என்று கேட்கலாம். இது உபநிஷதங்களிலேயே விவாதிக்கப் படுகிறது.

“எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ, அந்த ஆன்மாவைப்பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம், கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்”
– கட உபநிஷதம் 1.2.7

ஆனால், சுவாமி விவேகானந்தர் “உறங்கிக் கொண்டிருக்கும் பாரத நாடு முழுவதையும் விழித்தெழச் செய்யும் சக்தி உபநிஷதங்களில் உள்ளது, உலகம் முழுவதற்குமான ஆன்ம ஞானம் அவற்றில் உள்ளது” என்றார். வேதாந்த தத்துவங்கள் வெறும் புத்தக ஞானம் அல்ல, அவை நடைமுறையில் மனிதனுடைய முன்னேற்றத்திற்கும், நல்வாழ்வுக்கும் வேண்டிய வழிகாட்டுதலை அளிப்பவை என்றே சுவாமிஜி கருதினார். “உறங்கும் ஆன்மாவை விழித்தெழச் செய்யுங்கள்; பின்னர் சக்தி வரும், பெருமை வரும், உலகில் மேன்மையானவைகள் எல்லாம் தாமே வரும்” என்றார். உபநிஷதங்களைக் கற்பவர்கள் இதை மனதில் கொள்ளவேண்டும்.

நூல் முன்னுரையில் ஒரு வார்த்தை என்ற தலைப்பில் ஆசிரியர் சொல்கிறார் :
“உபநிஷதங்கள் ரிஷிகளின் அனுபவ உண்மைகள். வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான பொருளை அறீந்து கொள்வது சாத்தியம் அல்ல. உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மை பெற்று நாம் இறைவனை நோக்கி முன்னேற முன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும் மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, ஆன்மீக சாதனைகளிலிம் ஈடுபட்டால் தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்து கொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும்….. பொருள் புரியவில்லை என்பதற்காகச் சோர்ந்து விடாமல் புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளில் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்”

ஞான வாழ்க்கை வாழும் சுவாமிஜியின் இந்த அறிவுரையையும் மனதில் கொண்டு நூல்களைப் படிக்க வேண்டும். உபநிஷதங்கள் ஆன்ம நூல்கள், அறிவு நூல்கள் மட்டுமல்ல.

இவ்வளவு அழகிய இந்தப் பதிப்பு மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது (எல்லா உபநிஷத நூல்களும் சேர்த்து, ரூ. 150 சொச்சம்). புத்தகங்களை இணையம் மூலமும் பெறலாம், http://www.sriramakrishnamath.org

– ஜடாயு
http://jataayu.blogspot.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு