ஆழியாள் கவிதைத் தொகுதி

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

றஞ்சி


சமூகத்தில் மாற்றம் விளைவிக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக கவிதை இருக்க முடியும் என்கிறார் கவிஞர் டென்னிஸ் புரூடஸ். உலகத்தை வெறுமனே விமர்சனம் செய்வதோ அல்லது அதைப் புரிந்து கொள்வதோ மட்டும் போதாது ஒரு ஆரோக்கியமான முயற்சிக்கு ஆதாரமாக கவிதை விளங்குகிறது. எழுதுதல், கற்பித்தல் எல்லாம் ஒரு ஒற்றை ஆளுமையின் பல்வேறு முகங்கள் தான். இன்னும் சற்று மேலான உலகை உருவாக்குவதை நோக்கியே கவிதைகள் இருக்க வேண்டும். கவிதை என்பது தன்னுணர்ச்சி கீதமாகவோ, அல்லது அரசியல் கீதமாகவோஈ பெண்ணிய கீதமாகவோ அல்லது வேறு விதமாகவோ இருக்க முடியும். படைப்பு என்பது எதிர்ப்பை வெளிப்படுத்துபவையாக இருக்கமுடியும்.

கவிஞர்களின் உணர்வுகள் அனைத்தும் அவர்களது கவிதைகளில் கொட்டப்படுகிறது. ஆழியாள் ஈழத்து புலம் பெயர் எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்பட்ட கவிஞர்.

ஏற்கனவே இவரது முதல் கவிதைத் தொகுதியான ” உரத்துப்பேச ” என்ற கவிதைத் தொகுதிக்கு குறிப்பாக பெண்களிடம் பலத்த வரவேற்பும் பல நல்ல விமர்சனங்களும் கிடைத்திருந்தன.

ஆண்களால் இயற்றப் பட்ட மொழி வடிவங்களில் தான் பெண்களாகிய நாமும் இன்னும் சுழன்று கொண்டிருக்கிறோம். இலக்கியங்களிலும் நாம் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறோம். எமது உறுப்புக்கள் கேவலமாக சித்தரிக்கப்படுகின்றது. எமது உணர்வுகளை, வெற்றிகளை, சோகங்களை, ஆற்றல்களை எமது மொழியில் எமக்கேயுரிய மொழியில் கவிஞை ஆழியாள் சொல்லும் ஆதித்தாயின் பெண்மொழியில் இயற்றப்படவேண்டும். என்று கூறுகின்ற பல பெண்கள் உள்ளனர். ஆனாலும் பெண்களுக்கு எதிரான மோசமான கருத்துக்களை விட்டு விடாது கட்டிக் காப்பாற்ற எமது சமூகம் வற்புறுத்துவது ஏன்??? என்ற கேள்வி என்னுள் ஏற்படுகிறது.

எட்ட ஒரு தோட்டம்

இக்கவிதை ஊடறு இதழில் வந்த போது மிகவும் விமர்சிக்கப்பட்டது. பாராட்டப்பட்டது. புது விதமான கவிதை எனக் கூறப்பட்டது. ஆழியாளின் இக்கவிதை வேறு தளங்களுக்கு இட்டுச் செல்கின்றன. தனித்துவமான கவிதைகளாக மாறிவிடுகின்றன. அவர் சொல்ல வந்த விசயத்திற்கு இவ்வரிகள் ஆழ்ந்த ஈடுபாட்டில் வந்துள்ளதைக் காணலாம்.

காமம் என்ற கவிதையில்

பள்ளங்களின்
ஆழப் புதைவில்
அலறி ஢யும் குரல்களின்
இறுதி விக்கல்களும்
உண்டு இங்கு

சுவருக்கு செவிகள் உண்டு
இருளுக்கு கூர் விழிகளும் உண்டு
பீறிச் கசியும் ரத்தமாய் மேலும்
உண்டு இன்னொன்று
அவளுக்கு…

சுய அனுபவம் சார்ந்த எதார்த்தச் சித்தரிப்புகளாகத் படிமத்தில் இவரின் கவிதைகள் விளங்குகின்றன. கவிதையின் உயிர்ப்பே அதன் இயல்பு தான். அதன் இழப்புக்களை சொல்வது மட்டுமின்றி அடக்குமுறைகளை பேசுகிற கவிதையாகவும் இருக்கின்றது.

தமிழ்மொழி வாழ்த்து என்ற கவிதையில்

வார்த்தைகளைச் கடந்த
அவ் இசை
ஞாபக அடுக்களில் படிந்த
இழப்புக்கள் அனைத்தினதும்
ஒற்றை மெட்டாக அமைந்திருந்தது.

தன் தாளக் கட்டாக
காத்திருப்பின் நம்பிக்கைகளையும்
ஏக்கங்களையும் கொண்டிருந்ததுடன் – நிகழும்
ஆன்ம வேதனைகளையும் வலிகளையும்
பிழிந்த துயரங்களின் சாரமாகவும்
அது இருந்தது…

சாமர்த்தியமாகச் சொல்லுதல் என்பதற்கு அப்பால் அவர் உணர்ச்சிகளை அவற்றின் ஆதாரமாக சொல்ல முயன்று இருக்கிறார். உடலின் மீதான வன்முறை குறித்த அரசியல் இன்று நோபல் பரிசுக் கவியான போலந்து பெண் கவி சிம்போரஸ்கா கவிதைகளில் முக்கிய இடம் பெறுகிறது.

இன்றைய வாழ்வுக்கும் சூழலுக்கும் பொருத்தமாக படிமங்களை கவிதையாக்கியிருப்பது தான் இத் தொகுப்பின் சிறப்பு அம்சம்.

பெண் – மொழி- கவிதை மொழிசார் சாலைப் பயணம்

ஈழத்துப் பெண் கவிஞர்களின் தாக்கம் தமிழகத்து இலக்கிய உலகில் உள்ளடக்கம் வெளிப்பாட்டு முறைகள் பெண்ணியச் சிந்தனைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இவர்களின் தாக்கம் தமிழகத்து பெண் கவிஞர்களிடம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பல்வேறு தளங்களில் பெண் படைப்பாளர்களின் சிந்தனைகளையும் படைப்புகளையும் பாதித்திருக்கின்றன. இனியும் இந்தப் பாதிப்புகள் தொடரும் பெண்ணியச் சிந்தனைகளைப் பற்றியும் நவீனக் கவிதைகள் பற்றியும் பேசும் எவரும் புறந்தள்ள முடியாதவை இவர்களின் கவிதைகள். என்கிறார் புதியமாதவி ( ஊடறு இணையத்தளம்)

உறவுகள் அனைத்தின் அடியிலும் உள்ள சிக்கல் பாலுணர்வு, அதீத அன்பின் வெளிப்பாடு, மறுதலிப்பு என தன்னுள் அடங்கிக்கொண்டிருக்கும் நிரந்தர சோகம் திரும்பச் திரும்பச் சிதைவுகளுக்கு வெறும் சாட்சியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவகள் கவிஞர்கள்; அல்ல கவிதைகள் முழுக்க தீhக்கமான வார்த்தைகளால் இறுக்கத்துடன் கவிதைகளாக வெளிவந்துள்ளன. முகத்தில் அறைவது போல் வீரியமாக ஆழியாளின் கவிதைகள் உள்ளன.

ranji swiss

Aug 2006

ranjani@bluewin.ch

Series Navigation

றஞ்சி

றஞ்சி