வானலையில் நூல் வெளியீடு

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

சந்திரவதனா


ஒரு புத்தகத்தை வெளியிட்டு, அதற்கு சிறப்புரை, ஆய்வுரை, ஏற்புரை என எல்லாம் நடாத்தி, புத்தகத்தின் விபரங்களையும் தந்து விடுகிறார்கள். இது வழமைதானே இதில் என்ன விசேசம் இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? தொடர்ந்து வாசியுங்கள். விபரங்கள் கிடைத்துவிடும். அந்தப் புதிய நிகழ்ச்சியின் புதுமைகள் தெரிந்து விடும். இலக்கிய மாலை, அதுதான் அந்த நிகழ்ச்சிக்குப் பெயர். செவ்வாய் தோறும் ஐரோப்பிய நேரம் இரவு பத்துமணிக்கு இந் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. ஈழத்துக் கலைஞர்கள் சம்பந்தமான பல நிகழ்ச்சிகளை வழங்கும் எஸ்.கே. ராஜென் அவர்களால் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்படுகிறது.

நூல் வெளியிடுவதற்கான நாளைக் குறித்து, மண்டபம் எடுத்து, ஆய்வாளர்களை அழைத்து, முக்கியமாகப் பார்வையாளர்களை வருந்தி அழைத்து, பேச்சாளர்களின் மனம் நோகாமல் நடந்தொழுகி, “வருவீங்கள்தானே?” என்று ஒன்றுக்குப் பத்துத் தடவையாக தொலைபேசியில் அலுக்காமல் சிறப்பு விருந்தினர் வருவதை நிச்சயப் படுத்தி, வருபவர்களுக்கு விருந்து படைத்து…. இப்படி ஒருவர் தனது படைப்பை அறிமுகம் செய்வதற்குள் களைத்துப் போய் விடுகிறார். இதனால் தனது மற்றைய படைப்பைப் பற்றி சிந்திக்கவே மறந்து போகிறார். இவ்வகையான பின்னடைவுகளுக்கு படைப்பாளிகள் தள்ளப் படாமல் இருக்கும் விதமாக, சிரமமில்லாத முறையில் தளம் அமைத்திருக்கிறது ஐபிசி தமிழ். எங்களது தொகுப்புக்களை ஐபிசி தமிழிடம் கொடுத்து விட்டு அமைதியாக அடுத்த படைப்புக்களைப் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்து விடலாம். எல்லாவற்றையும் இலக்கிய மாலை பார்த்துக் கொள்ளும்.

நூல்களின் ஆய்வுகளை வெவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் ஊடாகச் செய்து வானலைகளில் தவழ விட்டு விடுகிறார்கள். அதுவும் ஒரு மேடையில் நடப்பது போன்று நேரடியாகவே கதைத்து, கருத்துக்களைப் பரிமாறி சிறப்பாகத் தருகிறார்கள்.

இனி வெயிலில் அலைந்து மழையில் நனைந்து, பனியில் குளிர்ந்து புத்தக வெளியீடுகளுக்குப் பல கிலோ மீற்றர்கள் ஓடத் தேவையில்லை. அறையில் இருந்து கொண்டே நூல் விமர்சனத்தைக் கேட்கலாம். படைப்பாளியோடு வானலையில் உறவாடலாம். ஏதாவது மேலதிகத் தகவல்கள் தேவையென்றால் வானொலி நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே.ராஜென் அவர்களைக் கேட்கலாம்.

படைப்பாளிகள், ஒவ்வொரு நாடாக அலைந்து திரிந்து தங்கள் நூல் வெளியீடுகளை நடாத்த வேண்டிய சிரமங்களில்லை. புத்தகங்களை அச்சிட்டு விட்டு சரியான முறையில் மக்களை அணுக முடியாமல், வீட்டுக்குள்ளேயே புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு சோர்ந்து போயிருப்பவர்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு வரப்பிரசாதம்.

மேலும் இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். இலக்கியமாலையில் விமர்சனம் செய்வதால் வானலையில் இலவசமாக ஒரு பெரிய விளம்பரமும் அந்த நூலுக்குக் கிடைத்து விடுகிறது.

இலக்கியம், இலக்கணம் என்று வரும்போது அது பலரிடம் போய்ச் சேருமா என்ற கேள்வி எழுந்தாலும், கண்டிப்பாக இந்தத் துறையில் உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பிக் கேட்பார்கள். இந்த நிகழ்ச்சியில் ஒரே விமர்சகர்கள் வரும்போதும், வருபவர்கள் தங்களது மேதாவித் தனங்களைக் காட்டும் போதும், நிகழ்ச்சி மெதுவாக சோம்பலைத் தரத் தொடங்கிவிடும். ஆகவே நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே. ராஜென் இந்த விடயங்களையும் கவனத்தில் கொண்டு இலக்கியமாலையை நடாத்துவாராயின், படைப்பாளிகளும் பயன் அடைவார்கள். நிகழ்ச்சியும் சிறப்புறும்.

இலக்கிய மாலை ஒரு நல்ல நோக்கோடு ஆரம்பமான நிகழ்ச்சி. அது நன்றாக நடைபெற வாழ்த்துவதோடு, ஐபிசி தமிழ் வானொலிக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எஸ்.கே. ராஜென் அவர்களுக்கும் படைப்பாளி என்ற நிலையில் இருந்து எனது நன்றி.

சந்திரவதனா
ஜேர்மனி
7.7.2006

Series Navigation

சந்திரவதனா

சந்திரவதனா