ஞான. ராஜசேகரனின் பாரதி – சில திரைப்படத் திரிபுகள்

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

ஜடாயு


அம்ஷன் குமாரின் பாரதி ஆவணப்படம் பற்றி எழுதியற்காக திரு. மலர்மன்னனுக்கு மிக்க நன்றி. இந்தப் படம் பார்க்க மிகவும் விருப்பம், ஆனால் எப்படி என்று தெரியவில்லை.. DDயிலோ வேறு ஏதாவது சேனல்களிலோ இந்தப் படம் காட்டப்படுமா?? படத்தின் DVD/VCD கிடைக்குமா? இந்தத் தகல்வகளையும் அளித்தால் நன்றாக இருக்கும்.

பாரதியும் அவரது பாடல்களும் ஒரளவு நன்றாகவே அறியப்படிருந்தாலும் அவரது வாழ்க்கை பற்றிய தெளிவான மற்றும் ஆதாரபூர்வமான குறிப்புக்கள் இன்னும் சாமானியர்களைச் சென்றடையவில்லை.. அஞ்சா நெஞ்சர், கோபக் காரர், தேச பக்தர், பிழைக்கத் தெரியாதவர், தன் குடும்பத்தைக் கூட காப்பாற்ற இயலாதவர் என்றெல்லாம் கலந்து கட்டியதாக ஒரு கற்பனைச்சித்திரமே உள்ளது. சமீப காலத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு மாமனிதரின் சரித்திரம் இன்னும் பிரபலமாக்கப் பட்டிருக்க வேண்டும். மலர்மன்னன் கட்டுரை பழைய ‘பாரதி’ படம் குறித்து நான் எழுத எண்ணி, எழுதாமல் விட்ட சில நினைவுகளைக் கிளப்பிவிட்டுவிட்டது ! Better late than never.

ஞான. ராஜசேகரனின் பாரதி படத்தை திரையரங்குகளில் மக்கள் மத்தியில் உட்கார்ந்து பார்த்தபோது பாரதியைப் பற்றிய மிகவும் பாமரத்தனமான புரிதல்களே பெரும்பாலான மக்களிடம் இருப்பது தெரிந்தது. இத்திரைப்படம் மகாகவியின் வாழ்க்கை பற்றி ஏதும் அறியாதவர்களுக்கு அதைக் கொண்டு செல்வதில் வெற்றியடைந்தது என்பதற்காக பாராட்டுக்குரியது என்றாலும், பல இடங்களில் அப்பட்டமான, மோசமான தவறுகளைக் கொண்டிருந்தது. பாரதியின் அபின் பழக்கம் பற்றி அவரே ‘சித்தக் கடல்’ கட்டுரையில் எழுதியிருக்கிறார், அதனால் அதைக் காண்பித்தது தவறல்ல, ஆனால், அந்த இரண்டரை மணி நேரப் படத்தில், “தலை கிறுகிறுக்கிறது” என்ற அந்த வசனம் வரும்பொழுது, திரையங்கில் எழுந்த எக்கலிப்புகள், சீட்டி ஒலிகள், ஹேஹே சத்தங்கள் இவற்றை எண்ணிப் பார்த்தால் மனது வலிக்கிறது. பாரதியின் வீராவேசமும், தார்மீகக் கோபமும், தியாகசீலமும் வெளிப்படும் தருணங்களில், அரங்கில் எந்த சலசலப்பும் இல்லை! சினிமா என்கிற மீடியம், அது உருவாக்கும் தாக்கம் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு சொல்லவருவது என்ன என்பது புரிந்திருக்கும். பாரதியின் முதலிரவுக் காட்சி (சராசரி தமிழ்ப்பட தாக்கம்??) அவசியமில்லாதது. இயக்குனர் இன்னும் சூட்சுமமாக இந்தக் குறிப்புக்களை உணர்த்தியிருக்கலாம்.

இன்னொரு காட்சியில், “·பிஜித் தீவில் ஹிந்து ஸ்திரிகளின் நிலை” என்னும் “கரும்புத் தோட்டத்திலே” பாடலை பாரதி சொல்லும்போது, அவர் மனைவி செல்லம்மா “எங்கேயோ பிஜித் தீவில இருக்கற பெண்கள் கஷ்டத்தைப் பற்றியெல்லாம் பாட்டு எழுதத் தெரியறது.. நான் ஒருத்தி இங்கேயே கஷ்டப்படறது தெரியலையா.?” என்று அலுத்துக் கொள்வதாக வருகிறது.. இந்தக் காட்சியின் போதும் சிரிப்பலைகள், எள்ளல்கள். இப்படி ஒரு அப்பட்டமான பொய்யைப் படத்தில் காட்டியது ஏன்? இந்தப் பாடல் மற்றும் அதன் பின்னணி பற்றி ஸ்ரீமதி செல்லம்மாவே ஆற்றிய உரையில் குறிப்பு உள்ளது, அது ‘பாரதியார் சரித்திரம்’ நூலிலும் உள்ளது. “…என் கணவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது… செல்லம்மா இங்கே வா என்றார், சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். ‘நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்’ என்றார். கரும்புத் தோட்டத்திலே என்ற பாட்டை அவர் பாடியதைக்கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம்”. (இந்தக் கட்டுரை இணையத்திலேயே உள்ளது, பார்க்க http://tamil.sify.com/general/mahakavi/fullstory.php?id=13331651). பாரதி பற்றி இவ்வளவு ஆராய்ந்த பட இயக்குனருக்கு இந்தக் கட்டுரை கிட்டவில்லையா? இல்லை வேண்டுமென்றே காட்சியை மாற்றியமைத்தாரா? எங்கோ கடல் கடந்து வாழும் நம் நாட்டு மக்களின் துயரத்தைக் கேள்விப்பட்டு அதைத் தன் குடும்பத்துயரம் போன்று பாவித்து மனம் வருந்திய அந்த உணர்ச்சிகரமான தருணம் திரையில் கேலிக் கூத்தாகிவிட்டது .

இதே போல வேறொரு இடத்தில், சாதி பற்றிய பேச்சு வரும்போது, “என் பொண்ணு ஒரு ஆதி-திராவிட பையனையோ வேற சாதிப்பையனையோ இழுத்துட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கொண்டு , அப்பா நான் சௌக்கியமாக இருக்கிறேன் என்று கடிதாசி போட்டால் நான் சந்தோஷப் படுவேன்..” என்பதாக ஒரு வசனம் வருகிறது. பாரதி இப்படிச் சொன்னதற்கு எந்தவொரு ஆதாரமும் எங்கும் இல்லை (இருப்பதாக இயக்குனர் காண்பித்தால், என் கையை வெட்டிக் கொள்கிறேன்!). பாரதி என்கிற சரித்திர புருஷர் பேசிய, எழுதிய ஒவ்வொரு சொல்லும் சரித்திரம் ஐயா! இத்தகைய விஷயங்களை அவர் வாயில் திணிப்பது எதற்காக? பாரதி சாதிகளை வேரறுக்கப் போராடிய உண்மையான சமத்துவ வாதி. ஆனால் அவரது சமூக நீதி பற்றிய சிந்தனையின் அடித்தளம் பிராமண துவேஷ மனப்பான்மையோ, ஆரிய-திராவிட கொள்கை போன்ற புனைசுருட்டுகளோ இல்லை, ஒருவேளை அப்படி இருந்திருப்பதாகப் பாமரர்களுக்குக் காட்டும் மோசடி தானோ இது? ‘திராவிட’ என்ற சொல்லை அவர் பயன்படுத்தியாகவே தெரியவில்லை, ‘ஆரிய’ என்கிற சொல்லை ‘பாரத’ என்கிற சொல்லுக்கு ஈடாகவே எல்லா இடங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார்.. (உ-ம். “ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும் சீரிய முயற்சிகள்…. ஆரிய பூமியில் நாரியரும்… பேரிமய வெற்பு முதல் பெண்குமரி ஈடாகும் ஆரிய நாடென்றே அறி” முதலிய வரிகள்). நான் அறிந்தவரை கலப்புத் திருமணம் பற்றி பாரதி எழுதியதாகத் தெரியவில்லை, ஆனால் அதைக் கண்டிப்பாக ஆதரித்திருப்பார் என்றே எண்ணுகிறேன்.

பாரதியின் சாதி எதிர்ப்பு அவரது மனித நேய, ஆன்மீக சிந்தனைகளில் வேரூன்றியது.. தமது சமத்துவ வாதத்திற்கு ஆதாரமாக வேதம், கீதை முதலியவற்றின் உபதேசங்களையே பாரதி எடுத்தாண்டார். கடையத்துக் கட்டுப்பெட்டி பிராமணர்கள் அவரை பகிஷ்காரம் செய்து ஒதுக்கியிருக்கலாம். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அவரோடு தோளோடு தோள் சேர்ந்து நின்ற குவளைக்கண்ணன் போன்ற பல பிராமணர்களும் இருக்கவே செய்தார்கள். நீதிக் கட்சி பிராமண துவேஷத்தைப் பரப்பத் தொடங்கிய காலகட்டத்தில், அதை எதிர்த்தும் பாரதி எழுதியிருக்கிறார். “…திருநாளைப் போவார் என்ன சாதி? திருப்பாணாழ்வார் என்ன சாதி? இவர்களுடைய திருவுருவங்களை இன்னும் கோயில்களில் வைத்துப் பிராமணர் பூசை செய்யவில்லையா? ஸ்ரீரங்கத்துக் கோயில் பிராமணன் திருப்பாணாழ்வாரை முதுகில் சுமந்துகொண்டு ஊரைச் சுற்றிவரும்படி பெருமாள் கட்டளையிட்டதாக நமக்குள் கதை இல்லையா?” (‘மாறுதல் நிகழ்தல்’ கட்டுரை) என்று ஓரிடத்தில் கேட்கிறார். உண்மையான பிராமண தருமம் என்பது தன்னலம் கருதாத சமுதாயத் தொண்டு என்பதாக உருவாக்கப் பட்டு, பிற்காலத்தில் திரிந்து போனது என்ற கருத்தை ‘பிராமண தருமம்’ என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார். இந்த வகையில், பாரதி தன் தருமத்தினின்றும் வழுவாத லட்சிய பிராமணர் என்றே மதிப்பிட வேண்டும். பாரதியின் சமுதாய சீர்திருத்தம் பற்றிய கருத்துக்கள் திராவிட இயக்கக் கருத்தியலுக்கு நேர் எதிர்த் தளத்தில் இருக்கின்றன. பாரதியைக் கற்கும் இன்றைய தலைமுறையினர் குறிப்பாகத் தெரிந்து கொள்ளவேண்டியது இது.

இது தவிர, பல நன்கறிந்த சம்பவங்களைத் திரையில் காண்பித்ததிலும் தவறுகள் இருந்தன – உ-ம் பாரதியின் சிதையில் அவரால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம் கொள்ளிவைப்பது போன்றவை. இவை பற்றி ஏற்கனவே பலரும் எழுதிவிட்டதால் அவற்றை இங்கு கூறவில்லை.

jataayu_b@yahoo.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு