நான் கண்ட சிஷெல்ஸ் – 12. மக்கள் வாழ்க்கையும் – கலாச்சாரமும்

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

வே.சபாநாயகம்


ஒரு இனத்தின், மக்களின் அடையாளங்கள் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவையாகும். சகிப்புத் தன்மை, நிதானம், பணிவு, இனப் புரிந்துணர்வு, சமாதானம் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு சிஷெல்ஸ் மக்கள் தமக்கே உரித்தான அமைதியும், ஆறுதலும் கூடிய வாழ்க்கை முறையை அமைக்துக் கொண்டுள்ளனர். அமைதியும், நிம்மதியும், மகிழ்வும் நிறைந்தவர்களாகவே அவர்கள் எப்பொழுதும் காணப்படுகிறார்கள்.

அசலான சிஷெல்ஸ்வாசியை காட்சிப் படுத்துவது இயலாதகாரியம். அவர்களது முன்னோர்கள் பலதரப்பட்டவர்கள். பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்ச் கடலோடிகள், விடுவிக்கப் பட்ட ஆப்பிரிக்க அடிமைகள், இந்திய சீன வியாபாரிகள் என்று பலருடைய வழிதோன்றல்கள் அவர்கள். அவர்களது நிறங்களும் பலவகையானவை. ஆப்பிரிக்காவை ஒட்டியிருப்பாதால் நீக்ரோக்களின் சாயலில் குட்டையான சுருள் முடியுடன் இருந்தாலும் எல்லோருமே கருப்பு இல்லை. இனக்கலப்பால், சாம்பல் கருப்பு, மாநிறம், நல்ல சிவப்பு எனப் பலநிறங்களில் இருக்கிறார்கள். கருப்பு, செம்பட்டைத் தலைமுடி- நீலம், பழுப்புக் கண்கள்- என்று எல்லா வகையிலும் இருக்கிறார்கள். எல்லோரும் மென்மையான, இனிமையான, எப்போதும் மகிழ்ச்சியான குணவியல்பு கொண்டவர்கள்.

அவர்களது பண்பாடு மனதுக்கு நிறைவளிப்பது. அவர்களது நாட்டைப் போலவே

இதமான, வரவேற்கத் தக்க இயல்புள்ளவர்கள் அவர்கள். நாங்கள் சிஷெல்ஸ் சென்ற மறுநாள் காலை 7 மணிக்கு வெளியே நடைப்பயிற்சிக்குச் சென்றபோது எதிரேயும் பக்கவாட்டிலும் சுறுசுறுப்பான எறும்புகள் போல ஆண்களும் பெண்களும் வேலைக்கு விரைந்து கொண்டிருந்தார்கள். எங்கைளைப் பார்த்ததும் சிறு புன்முறுவலுடன் அதிக சப்தமெழுப்பாமல் லேசாக உதடுகளை அசைத்து ‘போன்ஸு ‘ என்பது போல எதுவோ சொன்னார்கள். ஒருவர் பாக்கி இல்லாமல், முன்னதாகத் தெரியாதிருந்தும் நம்மிட

மிருந்து பதிலை எதிர்பாராமலே, சொல்லியபடி நடந்து கொண்டிருந்தார்கள். முதலில் புரியாது போனாலும் ஏதோ அவர்கள் மொழியில் காலை வணக்கம் சொல்கிறார்கள்

என்று புரியவே, நாங்களும் பதிலுக்கு புன்னகையுடன் ‘குட்மார்னிங் ‘ என்றபடி நடந்தோம். வீட்டுக்குத் திரும்பியதும் மகளிடம் கேட்டபோது அது அவர்களது பண்பாடு என்றும்

ஆண்கள் பெண்கள் அனைவரும்- தெரிந்தவர், தெரியாதவர் யாரைக் கண்டாலும்

தங்கள் மொழியில் வணக்கம் சொல்வார்கள் என்றும் தெரிந்தது. ‘போன்ஷு ‘ என்றால்

காலை வணக்கம் என்றும் ‘போன்ஷ்வா ‘ என்றால் மாலை வணக்கம் என்று அறிந்து கொண்டதும் நாங்களும் மறுநாள் முதல் யாரைக் கண்டாலும் அவர்கைளைப் போலவே புன்முறுவலுடன் ‘போன்ஷு ‘ சொல்ல ஆரம்பித்தோம். அது முதல் அங்கிருந்த இரண்டு மாதங்களும் தினமும் எங்கள் வழியில் பணிக்குச் செல்கிறவர்கள் எல்லோரும் மனத்தளவில் நட்புப் பூண்டவர்களாக ஆனார்கள். வாய் திறந்து பேசாது போனாலும் அவர்களது அந்த ஆரோக்கியமான பண்பு மனதில் பதிந்து போனது. யாராவது அப்படி வணக்கம்

சொல்லாமல் அலுப்பான முகத்துடன் சென்றால் அவர்கள் அந்நாட்டு மக்கள் இல்லை

என்பது நிதர்சனம்.

வீட்டு வேலைக்கு வருபவர்களும் – எல்லோரும் சமம், ஏற்றத்தாழ்வு இல்லை என்ற நிலையில் உள்ளவர்கள் என்பதால் – மரியாதையை எதிர்பார்ப்பார்கள். அவர்களை

‘போன்ஷு ‘ சொல்லி வரவேற்கவேண்டும். இல்லாவிடில் அவமதிப்பாக நினைப்பார்கள். வேலைக்கு வரும் பெண்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள். நம்பி, வீட்டு சாவியைக்

கொடுத்து விட்டுப் போகலாம். சம்பளம் கொஞ்சம் அதிகம்தான். தினமும் இரண்டுமணி

நேரம் வந்து எல்லா வேலைகளையும் – டாய்லெட் சுத்தம் செய்வது உட்பட, சலவை எந்திரத்தில் துணியைப்போட்டு எடுத்து அவற்றைப் பெட்டி போட்டு உங்கள் அறைக்குள்ளே வைப்பது வரை முகம் சுளிக்காமல் செய்கிறார்கள். சிஷெல்ஸ் ஆண்களும் பெண்களும் உழைப்புக்குச் சளைக்காதவர்கள். ஆண்கள் கூலிவேலைக்குச் சென்றால் தினமும் சீஷெல்ஸ் பணத்தில் 100ரூ ஊதியம் பெறுகிறார்கள். மாதவேலை செய்யும் பெண்கள் 1500ரூ போலப் பெறுகிறார்கள்.

நம்பிக்கைக்கு உரியவர்கள் என்பதுமட்டுமல்ல பாசத்துக்குக்கும் விசுவாசத்துக்கும்

பெயர் போனவர்கள் அந்த நாட்டுப் பெண்கள். மரியாள் என்றொரு மூதாட்டி என் மகள் வீட்டில் அவள் அங்கு போன நாளாய், பத்து ஆண்டுகளுக்கு மேலாய் வேலை செய்து

வந்தார். கணவன் மனைவி இருவரும் காலை 7 1/2 மணிக்கே பணிக்குப் புறப்பட்டு

விடுவதால் மரியாள், காலை அவர்கள் கிளம்பு முன்பே வந்து மகள் பள்ளி முடிந்து மதியம்

3 மணிக்குத் திரும்பும்வரை கைக்குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டு வேலைகளையும் முடித்து வைத்திருப்பார். சொந்த மனிதர்கள் கூட அவ்வளவு பொறுப்பாய் இருப்பார்களா என்பது சந்தேகமே. திரும்பும் போது தினமும் என் மகளுக்கு முத்தம் கொடுத்தே விடை பெறுவார். இப்போது வயது 70க்கு மேல் ஆகிவுட்டதால் ஓய்வு பெற்றுவிட்டார்.

சிஷெல்வாக்கள் எப்போதும் அவசரப்படுவதே இல்லை. நிதானம், பொறுமை, பதற்ற

மின்மை அவர்கள் இயல்பு. அலுக்காது பேசவும் எப்போதும் சிரிப்பும் கலகலப்புமாய்

இருக்கவும் அவர்களுக்கு அவகாசம் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு முறையே இதமான,

எதையும் லகுவாக எடுத்துக் கொள்ளுகிற, வெளிநாட்டாரின் பழக்கத்தால் தம் இயல்பை மாற்றிக் கொள்ளாத குணச்சித்திரம் கொண்டது. இந்தியப் பெரு நகரங்களில் காணப்

படுவது போல எந்தப் பரபரப்பையும் அங்கு காணமுடியாது.

அவர்களது உணவுப் பழக்கம் மிக எளிமையானது. காலையில் காபி அல்லது டா

குடித்துவிட்டுச் செல்பவர்கள் இடையில் எதுவும் எடுத்துக் கொள்வதில்லை. மதியம்

சமூசா போல ஏதாவது ஸ்நாக்ஸ். இரவுதான் சமையல். ஏனெனில் காலை 7 மணிக் கெல்லாம் கிளம்பிவிட வேண்டும், மதியம் இடைவேள அரைமணிதான். எனவே சாப்பிட நேரமில்லை. இரவு உணவில் மீன் நிச்சயம் இடம் பெறும். பாசுமதி அரிசிதான் சமைக்கிறார்கள். அங்கு பசு மாடுகள் இல்லாததால் பெளடர் பால்தான் காபி, டா, தயிர் எல்லாவற்றிற்கும்.

உலகம் முழுக்க மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்பது ஒரு ஓய்வு நாள், .அவ்வளவு தான். அன்று காலை அதிக நேரம் தூங்குவது, மதியம் விருப்பப்படி உண்பது என்பதுதான் நடைமுறை. ஆனால் சிசெல்ஸ் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உற்சாகமான நாள்.

அன்றைய காலையை ‘ஹேப்பி அவர்ஸ் ‘ என்று நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடு

கிறார்கள். சிஷெல்ஸ் மக்களில் அனைவரும் மது அருந்துபவர்கள். மது அருந்துவது

அவர்கள் நாட்டுக் கலாச்சாரம். எல்லா வீடுகளிலும் ஓட்கா, பிராந்தி, விஸ்கி, ஜின்

போன்றவை இருக்கும். ஏழையாக இருந்தால் பீர் பாட்டிலாவது வைத்திருப்பார்.

நமக்குத் தண்ணீர் போல அவர்களுக்கு பீர். அதுதான் தேசீய பானம். உலகில் பீர் அதிகம் குடிக்கும் 10 நாடுகளில் இது ஒன்பதாவது. ஜெர்மனி முதலாவது. இங்கு நம்மூரில்

யாராவது வீட்டுக்கு வந்தால் ‘காபி சாப்பிடுகிறீர்களா ? ‘ என்று கேட்பது போல அங்கே ‘பிராந்தி சாப்பிடுகிறீர்களா ? ‘ என்று கேட்பார்கள். இங்கு காபி, டாக்கு உள்ள மரியாதை

அங்கு பிராந்திக்கு. நம் வீட்டுக்கு அவர்கள் வரும்போது இந்தியா ஞாபகத்தில் ‘காபி சாப்பிடுகிறீர்களா ? ‘ என்று கேட்டு விட்டால் வேண்டாம் என்று மறுத்து விட்டுப் பிறகு நம் வீட்டுக்கு வரமாட்டார்களாம். அதனால் நம் வீட்டிலும் மதுவகைகள் வருபவர்களுக்காக

வைத்திருக்க வேண்டும்.

சிஷெல்ஸில் விழா என்றாலே மது தான். இப்படி மது கலாச்சாரம் சிஷெல்ஸின்

எல்லா இடங்களிலும் பரவி இருந்தாலும் இதற்கு விதி விலக்கும் உண்டு. ‘செவன்த்டே அட்வாண்டிஸ் ‘ போன்ற ஒரு சில குறிப்பிட்ட கிறிஸ்தவ அமைப்பினர் மது அருந்துவதில்லை. அவர்களது விழாக்களிலும் மது தலை காட்டுவதில்லை.

சீஷெல்ஸ் மக்கள் மதநம்பிக்கை அதிகம் உடையவர்கள். அது கிறிஸ்துவ நாடு.

95 சதவீதம் கிறிஸ்து மதத்தவர். ரோமன் கத்தோலிகர்களே அதிகம். முஸ்லிம்கள்

3 சதம். இந்துக்கள் சிறுபான்மையினர். 2 சதம். சிஷெல்ஸ் கிறிஸ்துவர்கள் குழந்தை

களுடன் ஞாயிற்றுக் கிழமைகளில் வண்ணவண்ண உடைகளில் அணிஅணியாய்த் தேவாலயத்துக்குச் செல்வதைப் பார்க்க முடிந்தது. அவர்களது ஆன்மீகம் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் மந்திர, தாந்திரிக நம்பிக்கை முதல் – மக்களிடம்

செல்வாக்கு மிக்க ரோமன் கத்தோலிக் சர்ச்சின் மீதுள்ள நம்பிக்கை என இணையாகத் தொடர்கிறது.

சிஷெல்வாக்களின் கலப்பினக் கூறுகள் அவர்களது உணவு, கலாச்சாராம், கலை அனைத்திலும் பிரதிபலிகிறது. மேனாட்டுக் களியாட்டங்களான டிஸ்கொதே நடனங்

களும் இசையும் அவர்களது வாரவிடுமுறை நாட்களில் காணப்படும். டிஸ்கோ க்ளப்கள்

ஆங்காங்கே உள்ளன. மேனாட்டு இசை அங்கு குடியேறிய ஐரோப்பியர்களால் அத்

தீவுக்கு இறக்குமதியானது. வயலின், சிதார், கிடார் ஆகியவை டிரம், மற்றும் முழவு இசைகளின் பின்னணியில் இசைக்கப் படுகின்றன. பாரம்பரிய பழங்குடி நடனங்களும்

உயிர்ப்புடன் உள்ளன.

வெளிநாட்டவர் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். கட்டுமானப் பணி

களில் அதிகமும் சீனர்களே ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். மேற்பார்வையாளர் அவசியமில்லை. இடையில் நம்மூர் போல டா குடிக்க, சிகரெட்

புகைக்க என்று வெளியே போய் நேரம் கடத்துவதை அவர்களிடம் பார்க்க முடியாது.

டா தேவைப் பட்டால் வேலை செய்யும் இடத்தில் அவர்களே போட்டுக் கொள்ளு

கிறார்கள். புல்டோசர் போல கனரக எந்திரங்கைளைக் கையாளுவதில் குஜராத்திகள் திறமையாக இருக்கிறார்கள். கான்ட்ராக்ட் வேலையிலும் அவர்களே திறமையாய்ச்

செயல் படுகிறார்கள். கூலிகள் அனைவரும் உள்ளூர் இன ஆண்கள்தாம்.

அவர்களது வீடுகளும் வித்யாசமானவை. பல அடுக்கு மாடிக்கட்டடங்கள் இல்லை.

அதிகமும் ஒரு மாடி உடையவைதாம். மேல்மாடி கேரள பாணியில் கூரை வடிவில்தான் அமைந்துள்ளன. திறந்த மொட்டைமாடி இல்லை. ஏனெனில் சுற்றிலும் கடற்பிரதேசம் என்பதால் ஈரக்காற்றால் திறந்தமாடித் தளங்களின் உள்ளிருக்கும் இரும்புக் கம்பிகள்

சீக்கிரம் துருப்பிடித்து பலமிழந்து விடுகின்றன. அதனால் நெளிநெளியான ஸ்டால்

தகடுகளால் கூரைகள் வேயப்படுகின்றன. வெப்பம் தாக்காதிருக்க உள்ளே மரப்பலகை

களாலான தளங்கள் அமைக்கப் படுகின்றன.

வாரவிடுமுறை நாட்களில் கடைவீதிகள் மக்களால் நிரம்பிவழிகின்றன. அன்று கடை

களுக்கு நல்ல வியாபாரம். மக்கள் எல்லோரும் நம்மூர் சந்தைகளைப் போல எதையாவது வாங்கித் தின்றுகொண்டோ எதையாவது குடித்துக் கொண்டோ கூட்ட நெரிசலுக்

கிடையே புகுந்து வெளி வருகிறார்கள். விக்டோரியா நகர் மைத்தில் ஒரு பெரிய அங்காடி உள்ளது. அதில் எல்லாப் பொருள்களும் கிடைக்கின்றன. காய்கறி, மளிகை, மீன் விற்பனைப் பகுதிகளில் கூட்டம் அதிகம். காய்கறிகள் புதிதாக வாங்க அதிகாலையே வந்துவிட

வேண்டும். அந்நாட்டுக் கைவினைப்பொருள்களும் அந்நாட்டு அடையாளம் காட்டும்

நினைவுப் பொருள்களும் அங்கே குவிந்து கிடக்கின்றன.

சிஷெல்ஸ் மக்கள் துக்கம், சோகம் ஆகியவற்ரை அதிகம் வெளிக் காட்டிக் கொள்வ தில்லை. மனதுக்குள்ளே கட்டுப் பாடாய் வைத்துக் கொள்வார்கள். ‘இறப்பு கொடுமை யானதுதான். ஆனால் தவிர்க்க முடியாதது. அதனால் அழுது புலம்புவதால் ஆவது

ஏதுமில்லை ‘ என்ற மனநிலை உடையவர்கள். ஒரு சிலர் கண்ணீர் வடிக்கலாம். ஆனால் இறப்பு வீடும் இறப்பு ஊர்வலமும் முழு அமைதியுடன் இருக்கும். ஆண்கள் அனைவரும்

கருப்பு சூட், கருப்பு டை அணிந்து இருப்பார்கள். பெண்கள் கருப்பு கலந்த உடை

உடுத்தி இருப்பார்கள். அனைவரும் ஒரே மாதிரியான உடையணிந்து, ஒரே மாதிரியான நடையுடன் பிணத்தின் பின்னே நடந்து போவார்கள். இறுதிக் காரியம் முடியும் வரை

அதே அமைதி தொடரும். பிறகு துக்கத்தை மறக்க அளவொடு குடிப்பார்கள். இறந்து போனவர்களின் நெருங்கிய உறவினர்கள் என்றால் ஒர் ஆண்டு வீட்டில் எந்த நல்ல

காரியமும் செய்ய மாட்டார்கள். கல்யாண நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் அங்கு விருந்துண்ண மாட்டார்கள். நடனம் ஆட மாட்டார்கள். அப்படி அவர்கள் சோகத்தைக் கடைப்பிடிப்பார்கள்.

சிஷெல்ஸ் குடிமகன் நாைளையைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. இன்றய பொழுதுதான் அவன் கையில் இருக்கும். அதை மட்டுமே அவன் நினைத்துச் செயல்

படுவான். கிடைத்ததை வைத்து அனுபவித்துக் கொண்டிருப்பான். கிடைப்பதைச் சேர்த்து

வைக்கும் மகிழ்ச்சியைவிடக் கிடைப்பதைச் செலவு செய்யும்போதுதான் அவனுக்கு அதிக மகிழ்ச்சி. ஏனெனில் நான் முன்பே குறிப்பிட்டது போல் ‘பணம் சம்பாதிப்பது மட்டுமே

வாழ்க்கையல்ல ‘ என்பது அவர்களது திடமான அபிப்பிராயம். திருடர்கள், பிச்சைக்காரர்கள் அந்நாட்டில் இல்லை என்பது போல துப்பாக்கிகளும் அங்கு இல்லை என்பதும் அவர்களது நிம்மதியான வாழ்வுக்கு ஒரு காரணம்.

-தொடரும்.

v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்