Looking for Comedy in the Muslim World – திரைப்படம்

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

மு. சுந்தரமூர்த்தி


கடந்த வியாழனன்று மாலை National Public Radio வின் Fresh Air நிகழ்ச்சியில் கேட்ட Terry Gross நடத்திய Albert Brooks உடனான நீண்ட செவ்வியும், அடுத்த நாள் காலைச் செய்திகளின்போது ஒலிபரப்பப்பட்ட ப்ரூக்ஸின் இன்னொரு குறுஞ்செவ்வியும் இந்த படத்தைப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டின. இந்த மாதிரி கணநேர ஆர்வங்கள் ஓரிரு நாட்களில் காலாவதியாகிவிடுமுன் இந்த படத்தைப் பார்த்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தது இரண்டு காரணங்களுக்காக: (1) Munich படத்திற்கு கூட்டிச் செல்கிறேன் என்று மூன்று வாரங்களாக சொல்லிக்கொண்டிருக்கும் என்மீது இன்னொருமுறை நம்பிக்கை இழந்து ‘ஆமாம் உனக்கு வேலையையும், கணினி முன் உட்கார்ந்து தமிழ் செய்திகளைப் படிப்பதைவிட்டால் வாழ்க்கையில் வேறெதுவும் தெரியாது ‘ என்று சலித்துக்கொள்ளும் மகனை ஆச்சரியப்படுத்தவேண்டும்; (2) இந்த படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதால், அவனுக்கு இந்தியாவைப் பற்றி தெரிந்துகொள்ள ஏதாவது இருக்கும். இருவருமாக ஞாயிறு மாலைக்காட்சிக்கு போனோம். இது Independent Film (எங்கள் ஊரிலேயே ஒரே ஒரு திரையரங்கில் நாளுக்கு மூன்று காட்சிகள் மட்டும் ஓடுகின்றன) வகையில் வருவதால் கூட்டம் அதிகமாக இல்லை.

* * * *

செப்டம்பர் 11, 2001 அன்று மாலை வீட்டுக்கு வரும்போது என் எதிர்வீட்டுக்காரர் தெருவில் நிறுத்தி சிறிது அக்கறையோடு விசாரித்துவிட்டு, சில நாட்களுக்கு கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கும்படியும், ஏதாவது பிரச்சினை என்றால் எந்த நேரமும் தன்னிடம் உதவி கேட்கலாம் என்றும் சொன்னார். அவர் Fort Leavenworth என்னும் இராணுவ முகாமில் Colonel ஆக இருந்த இரண்டாம் தலைமுறை இத்தாலியர்.

ஒரு வாரத்திற்கு பிறகு seminar இல் பேசவந்த பேராசிரியர் ஒருவரை இரவு உணவுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்கும், என் சகாவுக்கும் கொடுக்கப்பட்டது. அப்போது நடந்த உரையாடலின்போது என் சகாவின் மனைவி என்னைப் பார்த்து ‘Are you a Moslem ? ‘ என்று கேட்டார். அதையொட்டி நடந்த சிறு உரையாடலின் முடிவில், ‘ஆமாம், நாங்கள் வெளி உலகைப் பற்றியும், பிற கலாச்சாரங்களையும் இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும் ‘ என்ற குற்றவுணர்வு தொனிக்கக் கூறினார்.

உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட பிறகு ‘வெளி உலகை ‘ப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் சராசரி அமெரிக்கரிடமிருந்து அரசாங்கத்தின் உயர்மட்டம் வரை அதிகரித்திருக்கிறது. இந்த ஆர்வத்தை சிறிது நகைச்சுவையோடு சொல்ல முயலும் படமே இது.

* * * *

நடிகர் வேலைக்கான நேர்முகத் தேர்விற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வீட்டிற்கு வரும் ப்ரூக்ஸுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறையிலிருந்து வந்த கடிதம் காத்திருக்கிறது. அச்சத்துடன் திறந்து பார்த்தால் அவருடைய சேவையைக் கோரி வாஷிங்டனுக்கு வரப் பணிக்கும் மகிழ்ச்சியூட்டும் கடிதம். முஸ்லிம் கலாச்சாரத்தைப் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருக்கும் ஆணைய அதிகாரிகளுடன் நேர்முகம் நடக்கிறது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களுக்கு சென்று அவர்களின் நகைச்சுவையை, அவர்களை சிரிக்க வைப்பது எவை என்று கண்டுபிடித்து ஒரு 500 பக்க அறிக்கை தயாரிக்கும் வேலை கொடுக்கப்படுகிறது (இவர் ஒரு நிஜமாகவே தொழில்முறை நகைச்சுவையாளர் (stand up comedian). படத்திலும் சொந்த பெயரிலியே அதே தொழில் செய்பவராகவே நடிக்கிறார்). அதன்படி உலகில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இரண்டாம் பெரிய நாடான இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போய்வரவேண்டும். அவரது சேவைக்கு அரசாங்கம் தகுந்த வெகுமதியளிக்கும் என்பதை ‘ஜனாதிபதியின் கெளரவப் பதக்கம் ‘ கிடைக்கும் என்று மனைவி புரிந்துகொண்டு குஷியடைகிறார்.

ப்ரூக்ஸும், அவருக்கு உதவி செய்ய கோட்டுபோட்ட இரண்டு கீழ்மட்ட அதிகாரிகளும் இந்தியாவுக்கு பயணமாகிறார்கள், ஏர் இந்தியா விமானத்தில். டெல்லியில் முதல் வேலையாக ஒரே ஒரு மேசையும், ஒரு நாற்காலி மட்டுமே உள்ள ஒரு ‘ஒண்டுக் குடித்தன ‘ அலுவலகம் கண்டுபிடித்துக் கொடுக்கிறார்கள். அடுத்து அவருக்கு இந்திய உதவியாளரை அமர்த்த நேர்முகத் தேர்வு நடக்கிறது. நாலாவதாக வரும், நிமிடத்திற்கு 135 வார்த்தைகள் தட்டச்சு செய்யக்கூடிய, தூக்கத்தில் கூட சுருக்கெழுத்து எழுதக்கூடிய மாயா என்ற (இந்து) பெண் தேர்வு செய்யப்படுகிறார் (அவருக்கு முன் பர்தா போட்ட ஒரு முஸ்லிமும் நேர்முகத் தேர்வுக்கு வருகிறார்). இருவருமாக டெல்லியில் மக்கள் நடமாடும் இடங்களில் நின்று போவோர் வருவோரையெல்லாம் நிறுத்தி ‘உங்களை சிரிக்க வைப்பது எது ‘ என்று ப்ரூக்ஸ் கேட்க மாயா குறிப்பெடுத்துக்கொள்கிறார். ‘வெளிநாட்டுக்காரரிடம் பேச நான் தயாராக இல்லை ‘, ‘எனக்கு ஆங்கிலம் தெரியாது; என்னைத் தொட்டுப் பேசாதே ‘ என்ற ரீதியில் பதில்கள் வர முதல் நாள் இறுதியில் மாயாவின் குறிப்பேட்டில் அரைப் பக்கமே நிரம்பியிருக்கிறது. அடுத்த நாள் காலை யோகா பயிற்சி செய்யுமிடத்திற்கு சென்று அங்கு ஹ..ஹ..ஹா என்று உரக்கக் சிரித்து யோகாசனம் செய்பவர்களிடம் சிரிப்புக்கு காரணங்கள் கேட்கும் கேள்வித்தாள் கொடுக்கிறார்கள்.

இம்முறைகள் சரிப்பட்டு வராது என்று, தான் அமெரிக்காவில் நடத்துவது போல ஒரு ‘காமெடி காட்சி ‘ நடத்த திட்டமிட்டு ஐநூறு பேர் அமரக்கூடிய அரங்கத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க அதிகாரிகளைப் பணிக்கிறார். இவரும் மாயாவும் சேர்ந்து நிகழ்ச்சியின் அறிவிப்பை தயார் செய்து கூட்டம் அலைமோதும் பழைய டில்லி தெருக்களில் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு விநியோகிக்கிறார்கள். நிகழ்ச்சி நடக்கும் பள்ளியின் அரங்கத்தில் இவர் கேட்கும் வசதிகள் ஒன்றுமில்லை, மேடையின் பின்புற ஒப்பனையறை உட்பட. அரங்கிற்கு வெளியே டேரா போட்டு அதிலிருந்து பைஜாமா-குர்தாவோடு வெளிப்படுகிறார். அவர் வருவதை அறிவிக்க ஓர் ஆளோ, இரண்டாவது ஒலிபெருக்கியோ (மைக்) இல்லாததால் மேடையிலிருக்கும் மைக்கை இழுத்து, அவரே அறிவித்துக்கொள்ள வேண்டியதாகிறது. மேடையில் சில அமெரிக்க-இந்திய நகைச்சுவைகளை உதிர்க்கிறார் — இந்தியாவில் ஏன் ஹேலோவின் (Halloween) இல்லை ? …. ஏனென்றால் காந்தியை காலிசெய்து விட்டார்கள் (கேந்தி->கேண்டி(Candy) ); நான் காஷ்மீர் போனேன்…என்னுடைய ஸ்வெட்டரைப் பார்க்க (cashmere->ஸ்வெட்டர்) போன்ற துணுக்குகளுக்கு பார்வையாளர்களிடமிருந்து மெளனமே பதில். பிறகு தன்னைப் போலவே அலங்கரித்த ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு சில சேஷ்டைகளும், பார்வையாளர்களிடம் கேள்வி கேட்டபடி இன்னொரு நிகழ்வும் நடத்தி அசடு வழிய நிகழ்ச்சி முடிகிறது. வழக்கம் போல மாயா இதையும் ‘மிகவும் வெற்றிகரமான நிகழ்ச்சி ‘ என்று குதூகலத்துடன் சொல்கிறார்.

அடுத்த வாரத்தில் இதே போல ஒரு நிகழ்ச்சியை பாகிஸ்தானில் நடத்த ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க உதவியாளர்களிடம் கேட்க இதெல்லாம் முடியாத காரியம் என்று சொல்லிவிட்டு திருட்டுத்தனமாக லாகூர் பக்கம் இந்திய-பாகிஸ்தான் எல்லையைக் கடக்க ஏற்பாடு செய்கிறார்கள். இரவில் எல்லைக்குச் அழைத்துக்கொண்டு போய் ப்ரூக்ஸை மட்டும் அந்தப் பக்கம் காத்திருக்கும் ஒருவருடன் அனுப்ப, கண்கள் கட்டப்பட்டு ஜீப்பில் அழைத்துகொண்டு போய் வனாந்திரத்தில் தீமூட்டி குளிர் காய்ந்துக்கொண்டிருக்கும் ஒரு சிறு கூட்டத்தின் முன் நிறுத்தப்படுகிறார். ‘பயங்கரவாதிகள் ‘ மாதிரி தெரிந்தாலும் நகைச்சுவையாளர்களாக விழையும் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ப்ரூக்ஸ் அவர்களை ஏதாவது நகைச்சுவைகள் சொல்லக்கேட்க அவர்கள் இவரைச் சொல்லக் கேட்க அழைத்து சென்ற ஏஜெண்ட் மொழிபெயர்க்கிறார். கடைசியில் பயந்துபோய் ப்ரூக்ஸே டெல்லி அரங்கில் உதிர்த்த காந்தி, காஷ்மீர் நகைச்சுவைகளை உதிர்க்கிறார். இவற்றுக்கு டெல்லி அரங்கில் ஆங்கிலம் தெரிந்த பார்வையாளர்கள் சாதித்த மெளனத்திற்கு மாறாக ஏஜெண்டின் உருது மொழி பெயர்ப்பில் புரிந்துகொண்டு இவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள், துப்பாக்கியோடு விறைப்பாக நின்றுக்கொண்டிருந்தவன் உட்பட. மீண்டும் இந்தப் பக்கம் வந்து காத்திருந்த உதவியாளர்களுடன் விடுதிக்கு திரும்புகிறார்.

இந்த எல்லை தாண்டும் விஷயம் இந்திய, பாகிஸ்தான் அரசுகளால் கவனிக்கப்பட்டு இந்திய ராணுவ அமைச்சகம், டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் தூதரகம் இரண்டிலும் வெவ்வேறு விதமாக புரிந்துகொள்ளப்பட்டு ப்ரூக்ஸின் நடமாட்டங்கள், பேச்சுகள் கண்காணிக்கப்படுகின்றன. இரண்டு நாடுகளும் எல்லையில் படைபலத்தை அதிகரிக்கவேண்டுமென்று முடிவு செய்கின்றன. பிறகு இந்திய அரசாங்கம் அமெரிக்கத் தூதரகத்திடம் சொல்லி சில மணிநேரக் கெடுவில் அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டுமென்று கட்டளையிடுகிறது. வெளியேறுமுன் தன் அறிக்கைக்குத் தேவையான விஷயங்கள் எவ்வளவு சேர்ந்திருக்கின்றன என்று மாயாவிடம் கேட்க நான்கு பக்கங்கள் என்கிறார். வீட்டுக்கு வரும்போது அவர் மனைவியும், மகளும் உறவினர்கள்-நண்பர்களோடு பெரிய ‘வெற்றி வீரன் வரவேற்பு ‘க்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். குட்டி மகளுக்கு ஒரு சேலையும், தாஜ்மஹால் பொம்மையும் இந்தியாவிலிருந்து கொண்டு வந்த பரிசுகளாகக் கொடுக்கிறார். ப்ரூக்ஸைப் பற்றிய உண்மை தெரிந்தவுடன் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் குறைந்து போர் தவிர்க்கப்பட்ட செய்தியைத் தொலைக்காட்சியில் சொல்கிறார்கள்.

இவற்றுக்கிடையே தாஜ்மஹால் பார்க்க ஆக்ராவுக்கு பயணம் செய்து, தாஜ்மஹால் முன் நடந்தபடியே அதைப் பார்க்காமல் வீட்டுக்கு தொலை பேசுகிறார். அல் ஜசீரா தொலைக்காட்சி நிறுவனத்தின் டில்லி கிளை ப்ரூக்ஸை அழைத்து தொலைக்காட்சியில் யூதர்களைப் பற்றி நையாண்டி நிகழ்ச்சி தயாரிக்க முடியுமா என்று கேட்க (நிஜமாகவே) யூதரான ப்ரூக்ஸ் மறுக்கிறார். மாயாவின் ஈரானிய நண்பன் அவளிடமும், ப்ரூக்ஸிடமும் அடிக்கடி சிடுசிடுக்க, அவனை கழற்றிவிட ப்ரூக்ஸிடம் தான் காதல்வயப்பட்டதாக நடிக்கலாமா என்று மாயா ஆலோசனை கேட்கிறாள்.

கடைசியில் வெளியுறவு அமைச்சகத்திற்கு நாலுபக்க அறிக்கையை அனுப்பி வைக்கிறார். எதிர்பார்க்கும் தொலைபேசி அழைப்போ, ஜனாதிபதியின் கெளரவப் பதக்கம் பற்றி அறிவிப்போ வரவில்லை என்பதுடன் படம் முடிகிறது.

* * * *

சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடிய இந்த படத்தைப் பார்த்தது 60-70 தலைகள் இருக்கலாம். அதில் ஒன்றரை இந்தியப் பின்னணித் தலைகள்–நானும் என் மகனும். இந்த நகைச்சுவைப் படத்தில் காட்சிக்கு காட்சி சிரிப்பலைகள் இருக்குமென்று எதிர்பார்த்தால் அப்படியெதுவும் இல்லை. அமெரிக்கர்களும் சிரிக்கவில்லை; நானும் பெரிதாக சிரிக்கவில்லை. சிரிப்பு வரவழைத்த காட்சிகள் என்றால் ப்ரூக்ஸ் அவர் மனைவியோடு உரையாடும் சில காட்சிகளையும் இந்திய, பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்தும் ரகசிய விவாதங்களையும் சொல்லலாம். இந்தியர்களையோ, குறிப்பாக முஸ்லிம்களையோ சிரிக்கவைப்பது எது என்பதற்கு எந்த தடயமும் அமெரிக்கப் பார்வையாளர்களுக்கு கிடைத்திருக்காது. ஆனால் NPR செவ்வியில் இது பற்றி சொல்லிருந்தார்: ‘என் படப்பிடிப்புக் குழுவில் இந்து, சீக்கியர், முஸ்லிம் என்று பலர் இருந்தனர். இந்து சீக்கிய ஜோக் சொல்வார்; சீக்கியர் முஸ்லிம் பற்றி ஜோக் சொல்வார். எல்லோரையும் சிரிக்க வைப்பது the other guy… the guy over there ‘. இந்தியா என்னும் ‘வெளி உலகை ‘ப் பற்றி அமெரிக்கர்களுக்குள்ள பிம்பத்தின் அடையாளங்கள் சில சேர்க்கப்பட்டுள்ளன–போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நிற்கும் மாடுகள், தாஜ்மகால், யோகா போன்றவை (பாம்பாட்டியைக் காணவில்லை). படம் போரடிக்காமல் ஓடுகிறதென்றாலும் ‘முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக ‘ இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் போனால் ஏமாற்றமாக இருக்கும். ப்ரூக்ஸின் இந்திய உதவியாளரான மாயாவாக நடித்திருக்கும் ஷீதள் சேத் மிகவும் இயல்பாக, ப்ரூக்ஸைவிட சிறப்பாக, நடித்திருக்கிறார்.

msundaramoorthy@bellsouth.net

Series Navigation

மு. சுந்தரமூர்த்தி

மு. சுந்தரமூர்த்தி