காலத்தை எரித்த சுடர் தொலைவிலிருக்கும் கவிதைகள் – சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அறிமுகம்

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

பாவண்ணன்


தமிழ்சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என எல்லாத் தளங்களிலும் தன் அழுத்தமான தடத்தைப் பதித்த சுந்தர ராமசாமி இந்தியாவின் பிறமொழிகளிலிருந்தும் உலக மொழிகளிலிருந்தும் ஆங்கிலம் வழியாக கவிதைகளை தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து வந்தார். அவருடைய முதல் கவிதை மொழிபெயர்ப்பு முயற்சி 1964 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாக புத்தகத்தில் ஒரு குறிப்பு இடம்பெறுகிறது. ஏறத்தாழ 40 ஆண்டுகளில் 101 கவிதைகளை அவரால் மொழிபெயர்க்க முடிந்திருக்கிறது. அக்கவிதைளின் தொகுப்பே ‘தொலைவிலிருக்கும் கவிதைகள் ‘ என்னும் நூலாக வெளிவந்திருக்கிறது.

சுந்தர ராமசாமி தன் கவிதைகளை பசுவய்யா என்னும் பெயரில் எழுதி வந்தார். ‘107 கவிதைகள் ‘ என்னும் தலைப்பில் அவருடைய சொந்தக் கவிதைகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தன. அவருடைய கவிதைகளில் காணப்படும் கச்சிதமும் கலைத்தன்மையும் சட்டென்று தரையிலிருந்து வானத்தை நோக்கித் தாவிவிடுகிற அழகும் அவர் தேர்ந்தெடுத்திருக்கிற மொழிபெயர்ப்புக் கவிதைகளிலும் இடம்பெற்றிருக்கின்றன. கவிதைத் தேர்வில் அவர் காட்டியிருக்கிற அக்கறை பாராட்டுக்குரியது. தொகுப்பின் இறுதியில் கவிஞர்களைப்பற்றிய குறிப்புகள் மிகச்சிறந்த முறையில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு கவிதையுமே மிகச்சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தருவதாக உள்ளது. கவிதையின் முக்கியத் தேவைகளில் ஒன்று படித்ததுமே வாசகனோடு ஒட்டி உறவாடத்தக்க ஈர்ப்புத்தன்மை. அது ஆச்சரியப்படத்தக்கவகையில் சுந்தர ராமசாமி தேர்ந்தெடுத்திருக்கிற எல்லாக் கவிதைகளிலுமே இடம்பெற்றிருக்கிறது. வழக்கமாக மொழிபெயர்ப்புக்கவிதைகளில் காணப்படுகிற உலர்தன்மை கவனமாக இத்தேர்வில் தவிர்க்கப்பட்டிருப்பதை இத்தொகுப்பின் மிகப்பெரிய வலிமை என்றே சொல்லவேண்டும். ஒவ்வொரு கவிதையும் மறக்கமுடியாத நெருக்கத்தை உணரவைக்கிறது.

படித்ததுமே சட்டென்று பதியக்கூடிய ஒரு கவிதை ராபர்ட் க்ரீலி என்னும் அமெரிக்கக் கவிஞரின் ‘அவர்கள் கூறுவதுபோல் ‘ என்னும் படைப்பாகும். எட்டே வரிகளைக் கொண்ட கவிதையிலிருந்து பிறக்கும் கேள்வி ஆழமானது. கவிதையில் ஒரு மரத்தடி இடம்பெறுகிறது. மென்மையான அப்புல்தரையில் அமர்கிறான் ஒருவன். அவ்விடத்தில் ஏற்கனவே உட்கார்ந்திருந்த இரண்டு மரங்கொத்திப் பறவைகள் அவன் வருகையால் கலவரமடைகின்றன. அதை அவனும் பார்க்கிறான். அவை கலவரமடைவதில் வியப்பேதும் இல்லை என்கிற பொருள் தொனிக்கிறவகையில் தனக்குத்தானே அவை ஏன் கலவரமடையக்கூடாது என்னும் கேள்வியை எழுப்பிக் கொள்கிறான். இதுதான் கவிதையில் காணப்படும் சித்திரம். கவிதையை வாசித்து முடித்ததும் அக்கேள்வி வாசகனுடைய கேள்வியாக மாறிவிடுகிறது. விடைகாண இயலாத ஒரு பாரத்தை இக்கேள்வி நெஞ்சில் சுமையாக ஏற்றிவிடுகிறது. பறவைகள் மானுடனையும் ஒரு பறவையாக ஏன் ஏற்றுக்கொள்வதில்லை ? கண்ட கணமே கலவரமூட்டுகிறவனாக மானுடன் எப்போது மாறினான் ? பறவைகளும் மானுடனும் ஒருபோதும் இணைந்து வாழ்ந்ததே இல்லையா ? எலக்காலத்திலேனும் அப்படி வாழ்ந்திருக்கக்கூடுமென்றால், பிறகு அந்த உறவு எப்போது அறுந்துபோனது ? எக்காலத்திலும் அப்படி வாழ்ந்ததே இல்லையென்றால் ஏன் அத்தகைய இணைந்த உறவு சாத்தியமற்றுப் போனது ? பறவையோடு இணைய விடாமல் மானுடனைத் தடுப்பது எது ? அவன் அறிவா ? அகங்காரமா ? வெறியா ? தன்னலமா ? உலகத்தையே அடக்கி ஆளப் பிறந்தவனாக தன்னைக் கருதிக்கொள்ளும் மேன்மையுணர்ச்சியா ? ஏதோ ஒரு அடுக்கு குலைந்து பாத்திரங்கள் உருள்வதைப்போல கேள்விகள் உதிர்ந்து உருள்கின்றன. பறவைக்கும் மானுடனுக்குமான உறவு என்னும் எல்லையைத் தாண்டி, இயற்கைக்கும் மானுடனுக்குமான உறவாக அதை உருமாற்றிப் பார்க்கும்போது இன்னும் பொருள் பொதிந்ததாக இருக்கிறது. இந்த இயற்கையை நடுங்கவைத்துவிட்டு மானுடன் வாழப்போகிற வாழ்க்கைக்கு என்ன பொருள் இருக்கமுடியும் என்னும் கசப்பு நெஞ்சில் பரவுவதைத் தடுக்க இயலவில்லை. சரிப்படுத்த இயலாத அளவுக்கு அந்த உறவு சீரழிந்து போயிருப்பதைப் பிரதிபலிப்பதைப்போல அக்கேள்வி கவிதையில் இருமுறை இடம்பெற்றிருப்பது பொருத்தமாக உள்ளது.

இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு என்பதைத்தாண்டி மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவும்கூட புதிரானதாகவும் விசித்திரமானதாகவும் மெளனம் அடர்ந்த ஒன்றாகவும் மாறிப்போன அவலத்தை ஃபஹ்மிதா ரயஸ் என்னும் சிந்திக் கவிஞரின் ‘உனக்கும் எனக்கும் இடையே ‘ என்னும் கவிதை முன்வைக்கிறது. ‘சுதந்தரமாக என்னால் சுவாசிக்கமுடியவில்லை, எனக்கு நிம்மதியும் இல்லை ‘ என்னும் வரிகள் கவலையோடும் சோகத்தோடும் முன்வைக்கும் ஏக்கத்துக்கு எந்தத் தலைமுறை விடையளிக்கப்போகிறதோ ?

வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் என்னும் இன்னொரு அமெரிக்கக் கவிஞரின் கவிதையும் தனது நேர்த்தியான அமைப்பின்மூலம் நம் மனத்தில் இடம்பிடிக்கக்கூடிய கவிதையாகும். ‘இவ்வளவுதான் சொல்ல ‘ என்பது அக்கவிதையின் தலைப்பு. அசைபோட அசைபோட நம் எண்ணங்கள் மீட்டப்பட்டுக்கொண்டே இருப்பதை ஒரு வாசகனால் உணரமுடியும். கவிதையில் யாரோ ஒருவனுடைய ஐஸ் பெட்டிக்குள் ப்ளம் பழங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை எடுத்து இன்னொருவன் புசித்துவிடுகிறான். அனுமதியின்றி தான் எடுத்துத் தின்றுவிட்டதை உரைக்கும் புள்ளியிலிருந்து தொடங்குகிறது கவிதை. ஒருக்கால் காலை உணவுக்காக வைத்திருந்ததோ என்னமோ என்பதால் மன்னிப்பைக் கோருகிறது அக்குரல். இறுதியில் பழத்தின் இனிப்பைப்பற்றிய ஆனந்தக் குறிப்பையும் கொடுக்கிறது. முழுக்கவிதையிலும் ஒரே ஒரு குரல்தான் இடம்பெறுகிறது என்பது கவனிக்கத்தக் அம்சம். அனுமதியில்லாமல் எடுத்துத் தின்றவனுடைய குரல். இழப்புக்காளாகிறவனுடைய குரல் அல்லது எதிர்வினை எங்கும் பதிவாகவே இல்லை. அதைச் சிறிதும் பொருட்படுத்தாத அல்லது புறக்கணிக்கிற எண்ணம் குரலுக்குரியவனிடம் படர்ந்திருப்பதை அவன் பயன்படுத்தும் வார்த்தைகள் உணர்த்துகின்றன. தின்றுமுடித்த பிறகு மன்னிப்பு கேட்க முன்வருகிற நாகரிகம் எடுத்துத் தின்னும் முன்னர் இது அடுத்தவர் சொத்து என்னும் எண்ணத்துக்கோ அனுமதி பெற்றபின்னரே தின்னவேண்டும் என்னும் எண்ணத்துக்கோ ஏன் இடம்தராமல் போனது ? உண்மையான நாகரிம் என்பது மன்னிப்பு கேட்பதல்ல, முன்அனுமதி பெறுவதல்லவா ? யாருடையதாக இருந்தால் என்ன, எடுத்து உண்போம், பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்கிற அதிகபட்ச உரிமையின் சாயல் இக்குரலில் தொனிப்பதையும் உணரலாம். மன்னிப்பு கேட்பது என்பது அதன் சகஜகுணமல்ல என்பதையும் நாடகத்தன்மை படிந்தது என்பதையும் எதிர்பாராத விதமாக இழப்புக்காளானவனை நேருக்குநேர் காணநேர்ந்து விட்டதால் ஒப்புக்குச் சொல்லப்பட்ட வார்த்தை என்பதையும் புரிந்துகொள்வது எளிது. தனக்குச் சொந்தமற்றதைக்கூடத் தொட்டெடுத்துச் சுவைக்கிற அதிகபட்ச உரிமையை மேற்கொள்வது மட்டுமே அதன் சகஜகுணம் என்பதையும் உணரமுடிகிறது. அதிகபட்ச உரிமையில் எதை வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம், சடங்குக்காக மன்னித்துக்கொள் என்னும் ஒற்றை வார்த்தையைச் சொல்லிவிட்டால் போதும். இப்படி ஒவ்வொன்றாக நம் எண்ணங்கள் தாவித்தாவிச் செல்லும்போது கவிதையின் தளம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஐஸ் பெட்டிக்குள்ளிருக்கும் பழத்தை அனுமதியின்றிச் சுவைக்கும் காட்சி ஒரு வல்லரசு தான்தோன்றித்தனமாக ஒரு சிற்றரசை ஆக்கிரமித்துத் தனதாக்கிக்கொள்கிற காட்சியாக உருமாறுகிறது. ஒரு பெரும்பான்மையினம் இன்னொரு சிறுபான்மையினத்தை சுதந்தரமாக எத்தடையும் இல்லாமல் நசுக்கி நகும் காட்சியாக மாறுகிறது. இழந்து நிற்கிறவனிடம் உண்டு முடித்த பொருளின் சுவையைப்பற்றி நாக்கைத் தட்டிக்கொண்டு கூறும் வார்த்தைகளில் தொக்கி நிற்கிற அகம்பாவத்தையும் அலட்சியத்தையும் இக்காட்சிகளோடு இணைத்துப் பார்க்கும்போது கவிதையின் பரிமாணம் மென்மேலும் உயர்ந்துகொண்டே செல்வதை உணரமுடியும். மிக எளிய சித்திரத்தில் தொடங்குகிற கவிதை மிகப்பெரிய புதிர்களின் முடிச்சை விலக்கிக் காட்டுவதாக உள்ளது.

ழாக் ப்ரெவர் என்னும் பிரெஞ்சுக் கவிஞரின் ‘மலர்ச்செண்டு ‘ என்னும் கவிதையும் நல்ல வாசக அனுபவத்தைக் கொடுக்கக்கூடிய கவிதையாகும். கவிதையில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. மலர்ச்செண்டை வைத்துக்கொண்டு என்ன செய்கிறாய் என்பதுதான் அக்கேள்வி. அக்கேள்வி முதலில் ஒரு சிறுமியிடமும் பிறகு இளம்பெண்ணொருத்தியிடமும் அதற்குப்பின்னர் அழகான மங்கையொருத்தியிடமும் இறுதியாக ஒரு மூதாட்டியிடமும் கேட்கப்படுகிறது. வெற்றி கொள்ளும் ஒருவனை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக எல்லாரும் ஒரே பதிலைச் சொல்கிறார்கள். இச்சித்திரத்தை இருவிதமாக அணுகலாம். காலத்தை வேகவேகமாக நகர்த்தி சிறுமி – இளம்பெண் – அழகான நங்கை – மூதாட்டி என பெண்ணொருத்தியின் சகலபருவங்களும் காட்டப்படுவதாக எடுத்துக்கொள்ளலாம். காலம் முழுக்க தன் கையில் மலர்ச்செண்டோடு காத்திருப்பவளாக இருந்தாலும் அதைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வெற்றி ஈட்டிய ஆண் ஒருவன்கூட அகப்படவில்லை. இது ஒரு வாசிப்பு. சிறுமி, இளம்பெண், அழகானமங்கை, மூதாட்டி ஆகியோர் அனைவருமே வெவ்வேறு பருவத்தைச் சேர்ந்த வெவ்வேறு பெண்கள். ஒவ்வொருவரும் கையில் மலர்ச்செண்டோடு காத்திருப்பவர்கள். எல்லாருமே வெற்றி பெற்ற ஆணுக்காகக் காத்திருக்கிறார்கள். மலர்ச்செண்டை வழங்கி ஆனந்தப்படும் கணத்துக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஓர் ஆணைக்கூட அவர்களால் சந்திக்கும் வாய்ப்பே பொருந்தி வரவில்லை. இது இன்னொரு வாசிப்பு. ஓர் ஆணின் பார்வையில் வெற்றி என்பதற்கு ஆயிரம் பொருள்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணின் பார்வையில் வெற்றிக்கான பொருள் வேறாக இருக்கிறது. அதனாலெயே அவளிடமிருந்து மலர்ச்செண்டைப் பெற்றுக்கொள்ள வெற்றிபெற்ற ஆண் யாருமே இல்லை. பெண்ணின் மனத்தில் என்னதான் இருக்கிறது ? வெற்றி என்னும் சொல்லுக்கு அவள் மனம் வரைந்திருக்கும் பொருளென்ன ? ஆழம் கண்டடைய முடியாத கடலாகவே அவள் மனம் இன்னும் படர்ந்திருக்கிறது.

காட்சித்தன்மையால் மனத்தில் இடம்பிடிக்கவல்ல கவிதைகளும் இத்தொகுதியில் உள்ளன. மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக ‘சூரிய வெளிச்சத்தின் நிறத்தில் ஒரு புதிய நிறம் ‘ என்னும் முனிர் நியாஸியின் கவிதையைச் சொல்லலாம். இக்காட்சியில் இடம்பெறுவது ஒரு மஞ்சள்பூ. முதலில் கவிதை அப்பூவை ஒரு மஞ்கள் கிணறு என்று குறிப்பிடுகிறது. இறுதியில் அப்பூ சூரிய ஒளியில் ஒரு விளக்கேற்றிய மாதிரி இருப்பதாகக் காட்சிப்படுத்தப்படுகிறது. அழகான சொல்லாட்சிகளால் இக்கற்பனை உடனடியாக வாசகனுடைய மனத்தில் இடம்பிடித்துவிடுகிறது. இடையில் இன்னொரு முக்கியமான குறிப்பு இடம்பெறுகிறது. அது அப்பூவுக்குள் தேனீ நகரும் குறிப்பு. தேனீ தேடுவது தேனையா அல்லது விஷத்தையா என்னும் கேள்வி நம் மனத்தை அசைத்துவிடுகிறது. தேனுக்கு நிகராக விஷத்தையும் குறிப்பிடும்போது இரண்டுக்குமான வேறுபாட்டை அழித்துவிடுகிறது கவிதை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் என்னும் உலகவழக்கில் வழங்கப்படுகிற பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு புள்ளிவரை இனிப்பானதாக இருக்கும் தேன் அப்புள்ளியைக் கடந்ததும் விஷமாகிவிடுகிறது. தேனீயைப் பார்த்து அது தேடிப்போவது தேனையா விஷத்தையா என்று கேட்கத் தெரிந்த மனிதனுக்கு நாம் ஒவ்வொன்றிலும் தேடுவது தேனையா விஷத்தையா என்று ஏன் கேட்டுக்கொள்வதில்லை என்னும் ஏக்கம் வாசகனுக்குள் எழாமலில்லை. இந்த ஏக்கம் கவிதையின் பரப்பில் இல்லையென்றாலும் கவிதையால் தூண்டப்படுகிற மனம் தாவிப்பிடிக்கிற குறைந்தபட்ட எல்லைக்குள்ளாகவே இந்த ஏக்கம் அமைந்ததுவிடுகிறது.

கிய்விக் என்னும் பிரெஞ்சுக்கவிஞரின் ‘சுடர் ‘ என்னும் கவிதை தரும் அனுபவமும் மகத்தானது. நான் சுடரைப் பார்த்திருக்கிறேன் என்று தொடங்கும் அக்கவிதை உண்மையில் சுடரைப்பற்றிச் சொல்லாமல் சுடர் பொலியும் இடங்கள் ஒவ்வொன்றைப்பற்றியும் கச்சிதமாக அடுக்கிக்கொண்டே போகிறது. படிக்கப்படிக்க அச்சுடர் நீக்கமற எங்கெங்கும் நிறைந்திருக்கும் கம்பீரமான தோற்றம் நெஞ்சில் எழுகிறது. நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் ஒளிர்ந்தபடி இருக்கும் அச்சுடரை அறிந்தும் அறியாதவர்களாக காலம் கடத்தியிரப்பதைப்பற்றிய குற்றஉணர்வும் ஏற்படுகிறது. கண்டடைந்துவிட்ட மகிழ்ச்சியும் உருவாகிறது. ஆனால் அச்சுடரை நம்மோடு எப்போதும் தக்கவைத்துக்கொள்ள இயல்வதில்லை என்னும் தோல்வியுணர்ச்சி நம்மைக் கடுமையாகத் தாக்கவும் செய்கிறது. ஆனால் அச்சுடர் நம் அறிதலைப்பற்றியோ அறியாமையைப்பற்றியோ பொருட்படுத்துவதே இல்லை. வரவிருக்கும் காலத்தை எரித்தபடி உறங்க மறுத்து தன் பணியைத் தொடர்ந்தபடி அழிவைநோக்கி விரைகிறது அச்சுடர். அச்சுடர் எது அல்லது யார் ? பெருஞ்சுடராக நம் மனத்துக்குள் எழும் இக்கேள்வி கவிதையை வாழ்க்கையாகவும் வாழ்க்கையைக் கவிதையாகவும் மாற்றி விடையைக் கண்டடையும் முயற்சியைத் தூண்டியபடியே இருக்கிறது.

ஒரு கவிதைத் தொகுப்புக்குரிய எல்லா அழகுகளோடும் இந்நூலை வெளியிட்டிருக்கும் காலச்சுவடு பதிப்பகத்துக்கு தமிழ்க்கவிதை உலகமும் வாசக உலகமும் கடமைப்பட்டிருக்கின்றன.

( தொலைவிலிருக்கும் கவிதைகள்-மொழிபெயர்ப்புக் கவிதைகள். சுந்தர ராமசாமி காலச்சுவடு பதிப்பகம். 669, கே.பி.சாலை, நாகர்கோயில்-1. விலை ரூ80 )

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்