அன்பினால் ஆன உலகம் ( பாவண்ணனின் ‘தீராத பசிகொண்ட விலங்கு ‘ – நூல் அறிமுகம்)

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

க.நாகராசன்


மனம் என்னும் ஆழ்கடல் எண்ணங்களால் நிறைந்துள்ளது. அங்கே பழைய நினைவுகளும் சம்பவங்களும் எப்போதும் வெகுண்டெழுந்த அலைகளாக ஆர்ப்பரித்தவண்ணம் இருக்கின்றன. வாழ்வின் இறுதிப்புள்ளிக்கு செல்லும்போது கூட நினைவலைகளின் தாக்கம் சற்றும் குறையாமல் வேகமுடன் மோதி நம்மைக் கரைக்க முயற்சிசெய்கின்றன. அந்தக் கரைதலில் பல சமயங்களில் பரவசத்தையும் புரிதல்களையும் அடைவதோடு பயணப்படவேண்டிய பாதைகுறித்த தெளிவையும் நாம் அடைகிறோம்.

உங்கள் மனத்தில் பிடித்தவர்களைப்பற்றிய நினைவுகள் அதிகமிருக்குமா அல்லது பிடிக்காதவர்களைப்பற்றிய நினைவுகள் அதிகமிருக்குமா என்னும் எளிமையான கேள்வியைக்கொண்ட முன்னுரையோடு பாவண்ணனின் ‘தீராத பசிகொண்ட விலங்கு ‘ தொடங்குகிறது. வணிகமயமான இன்றைய மானுட வாழ்க்கை அனுபவங்களை ஆழ்ந்து பரிசீலனை செய்துபார்க்கும்போது பிடிக்காதவர்களின் நினைவுகள்தாம் அதிகமிருக்குமோ என எண்ணத் துாண்டுகிறது. இதை விவரிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பாரதக்கதையான கண்ணன்-சகுனி-மாயக்கண்ணாடி கதை முக்கியமானது. கேள்வியின் அடுத்த பகுதிக்கு விடையாகச் சொல்லப்பட்ட ‘தொடர்ந்து கொட்டிவரும் தேளை விடாமல் காப்பாற்றும் பெரியவரின் கதை ‘ அன்பினால் ஆன உலகத்துக்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது. வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் பார்த்துப் பழகிய தனக்குப் பிடித்தமானவர்களின் நினைவுகளை படைப்பாளர் 22 கட்டுரைகளாக இத்தொகுதியில் விவரித்துள்ளார்.

பொதுவாக கட்டுரை என்பது சிறுகதை, கவிதை, நாவல் என்னும் வடிவங்களில் எதையும் கையாளமுடியாமல் போகிற சூழலில் நேரடியாகச் சொல்லவேண்டிய விஷயங்களை வெளிப்படுத்த உதவும் வடிவம் என்னும் முன்முடிவை இத்தொகுப்பு மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது. மனத்தின் அடி ஆழத்தில் கனன்றுகொண்டிருக்கும் அனுபவங்களை வீரியத்தோடு பகிர்வதற்கு மற்ற எந்த வடிவத்தைக் காட்டிலும் கட்டுரையே மிகச் சிறந்த வடிவம் என்பதை தொகுப்பு எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி உணர்த்துகிறது. ஒரு சிறுகதைத் தொகுதியிலிருந்து பெறும் அனுபவத்தைவிட வலிமையான அனுபவத்தை இத்தொகுப்பு வாசகனுக்கு வழங்குகிறது.

தம் பயணங்களில் மிகப்பெரிய பரப்பை மிகஎளிதாக கட்டுரைகள் கடக்கின்றன. வெவ்வேறு காலங்கள், மனிதர்கள், இடங்கள் என இப்பயணம் எல்லாத் திசைகளிலும் நீள்கிறது. காலையில் தினமும் தன்னுடன் நடக்க வரும் நண்பர், கனவுகள் ததும்பும் கண்களைக் கொண்ட வாடகை¢ காரோட்டி பிரகாஷ், நண்பர் மனைவி சித்ராவின் மறக்கமுடியாத சின்னம்மா, எப்போது மரணம் சம்பவித்தாலும் அதை எதிர்கொள்வதற்காக சட்டைப்பையில் பணம் சுருட்டி வைத்திருக்கும் இசைரசிகரான காவல்காரர், சேஷாத்ரிபுரத்தில் நடைவண்டியில் வாழைப்பழ வியாபாரம் செய்துவரும் பெண், ஊரெங்கும் மரங்களை நட்டு வளர்த்து தான் பெற்ற குழந்தைகளைப்போல அவற்றைப் பராமரிக்கும் தம்மக்கா, சமுதாயத்தில் கைவிடப்பட்டாலும் லட்சத்தில் ஒருத்தியாக மனத்ில் என்றென்றும் வீற்றிருக்கும் இலக்கிய வாசகி, மகன்களால் உதாசீனப்படுத்தப்படாலும் வைராக்கியத்துடன் வாழ்வை எதிர்கொண்ட வர்ணக்காரரின் மனைவி, தான் நட்டுவைத்த மாமரத்துக்கும் வேப்பமரத்துக்கும் படிமமான கெம்பையா, நாவு நக்கரே பாலு சக்கரெ ( நாம் சிரித்தால் வாழ்க்கை சர்க்கரையாக இனிக்கும் ) என்று வாழ்வின் அர்த்தத்தை வார்த்தைகளால் வடித்த போக்குவரத்துக் காவலரான திம்மப்பா, தினந்தோறும் மதிய நேரத்தில் அலுவலகத்து அறைக்கு வந்துபோன புறா, சிறிய வயதில் முதல் ஓவியம் வரைய இடமளித்த மண்ணெண்ணெய் சிம்னி விளக்கு, புளியமரம், பள்ளியில் பூகோளம் நடத்திய ராமசாமி சார், நவநீதம் டாச்சர், குள்ள டாச்சர், பாவண்ணனின் அம்மா, அப்பா, மனைவி, மகன் என அனைவரும் கட்டுரைகளில் வந்துபோகின்றனர்.

ஒவ்வொரு கட்டுரைய,ம் அழகான ஒரு நினைவுகூரும் புள்ளியிலிருந்து தொடங்குகிறது. பிறகு பின்னோக்கு உத்தியில் படிப்படியாக சம்பவம் விரிவடைந்து, ஓர் உச்ச நிகழ்ச்சியிலோ, வாக்கியத்திலோ முடிகிறது. கட்டுரைகள் எளிமையான மொழியிலும் நேர்த்தியான வடிவத்திலும் புனையப்பட்டுள்ளன. பல கட்டுரைகள் காவிய நயத்தோடு முடிகின்றன. குறிப்பாக ‘மாபெரும் சக்தி ‘ என்னும் இறுதிக்கட்டுரை தாஜ்மகாலை முக்தாஜூக்காக நதிக்கரையில் காத்திருக்கும் ஷாஜகானின் குறியீடாகவும் மினார் கோபுரங்கள் அனைத்தும் காத்திருக்கும் அவனுடைய கைவிரல்கள் என்றும் குறிப்பிடுவது நெகிழவைக்கிறது. குறுந்தொகைப் பாடலின் ஒப்பீடு மிகப்பொருத்தமாக உள்ளது. துயரங்களையும் புதிர்களையும் அசாதாரண வாழ்க்கைச்சூழலில் எதிர்கொள்ளும் மறக்கமுடியாத மனிதர்களின் மனத்தைப் பிழியும் வாழ்வியல் சம்பவ்களை மிகக்கூர்மையாக முன்வைப்பதே இத்தொகுப்பின் மிகச்சிறந்த பலமாகக் கூறலாம். இத்தொகுப்பைப் படித்துமுடித்துவிட்ட பின்னரும்கூட கருவாட்டுக் குழம்பை கடைசிவரை வாங்கவராத வாழைப்பழக்கார அம்மாவையும் முருங்கைமரத்துக்குப் படிமமாகவே மாறிவிட்ட வர்ணக்காரர் மனைவியையும் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தன்னுயிரையே தந்துவிட்டு வாகனப்போக்குவரத்தை நின்று ஒழுங்குசெய்த சாலைச்சந்திப்புக்குப் பெயராக மாறி காலத்தில் கரைந்து நிற்கும் திம்மப்பாவையும் தினமும் அறைக்குவந்து எதிர்பாராத ஒரு கணத்தில் இறந்துபோன புறாவையும் நம்மால் மறக்கமுடிவதில்லை.

‘தீராத பசிகொண்ட விலங்கு ‘ என்னும் தலைப்பு ஆச்சரியமான பொருத்தத்தை இத்தொகுப்புக்குத் தருகிறது. பொங்கியெழும் கடலை தீராத பசிகொண்ட விலங்காக பாவண்ணன் குறிப்பிடுகிறார். மூன்று வெவ்வேறு கட்டுரைகளில் கடல் இடம்பெறுகிறது. எல்லா இடங்களிலும் விலங்காக அச்சத்தை ஏற்படுத்துகிறது கடல். தன் தாயின் துயரங்களின் குறியீடாக நினைக்கத் துாண்டும் கடல் தீராத வலியைத் தரும் வறுமையின் படிமமாக வார்த்தெடுக்கப்படுகிறது. சுனாமி அலைகளின் சீற்றம் வெளிப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் தீராத பசிகொண்ட விலங்கு என்னும் கடலின் படிமம் இன்னும் பல தளங்களுக்கு விரிவடைவது வியப்புக்குரிய ஒன்றாகும். 2002, 2003ல் பல்வேறு இணைய தளங்களில் வெளிவந்த இக்கட்டுரைகளுக்கு சுனாமியைப்பற்றித் தெரிந்திருக்க எவ்விதமான வாய்ப்புமில்லை. காலத்தைக் கடந்து நிற்கும் இலக்கியங்களின் வீரியத்துக்கும் படைப்பாளியின் தரிசனத்துக்கும் இதைவிட வேறென்ன சான்றாக முடியும் ? வெவ்வேறு கடல்களைப்பற்றிய பாவண்ணனின் வர்ணனைகள் மிகவும் ரசிக்கத்தக்கவை.

தரங்கம்பாடி கடல் = மிகப்பெரிய முற்றத்தைக்கொண்ட வீடு

விசாகப்பட்டணம்கடல் = கைவிலங்கை அகற்றச்சொல்லி அலறித் துடிக்கும் பைத்தியம்

பேகல் கடல்= முஷ்டி உயர்த்தி ஆர்ப்பரிக்கும் இளைஞனின் குரல் ஒலிக்கும் இடம்

கார்வார் கடல்= கதைபேசி கைகோர்த்து நடப்பதுபோல குதுாகலம் கொப்பளித்து நிற்பது

திருவனந்தபுரம் சங்குமுகக்கடல் = கலகலவென்று சிரித்தபடியும் கைவீசியபடியும் துள்ளித்துள்ளி ஓடுகிற இளம்பெண்களின் கூட்டத்தைப்போன்ற இனிய இரைச்சலைக்கொண்டது. தலைப்பையொட்டி ஓவியர் டிராட்கிமருது வரைந்துள்ள அட்டைப்பட நவீன ஓவியம் சிறப்பாக வந்துள்ளது.

பாவண்ணனின் பள்ளி வாழ்க்கையை நினைவுகூரும் பல கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சிம்னிவிளக்கில் படம்வரைந்த அனுபவம், ஐஸாக நினைத்து புளியம்பிஞ்சை ருசித்த அனுபவம், ஏரிக்கரையில் உல வந்த அனுபவம் என வெளிப்படும் காட்சிகள் படைப்பாளியின் அனுபவங்கள் என்பதையும் தாண்டி எல்லா கிராமத்து மனிதர்களின் இளமைக்கால அனுபவங்களாகவும் விரிவாக்கம் பெறுகின்றன.

கட்டுரைகளில் மிகச்சிறந்த பகுதி ‘நெருங்கமுடியாத இடைவெளி ‘. தந்தைமையை இதைவிட வலிமையாகக் கூறமுடியாது என்னும் எண்ணம் எழும்வண்ணம் கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது.

தலைதெறிக்கும் வேகத்தில் புத்தகக்கண்காட்சிக்காக தயாராகும்பொழுது ஒருசில அச்சுப்பிழைகள் தவிர்க்க முடியாதவை என்று பலமுறை அமைதிகொண்டாலும்கூட நிறைய இடங்களில் காணப்படும் பிழைகள் உறுத்துகின்றன.

தொகுப்பைப் படித்துமுடித்ததும் ஒருவித மனநிறைவு ஏற்படுகிறது. வாழ்க்கையைப்பற்றிய பல கேள்விகளை எழுப்பிக்கொள்ளும் அதே சமயத்தில் பல புரிதல்களையும் வாசகன் அடைய முடிகிறது. படைப்பாளியின் அனுபவங்களே இக்கட்டுரைகள் என்னும் நிலையைத் தாண்டி படிக்கும் வாசகனின் அனுபவங்களாகவும் விரிவடையும் சாத்தியக்கூறுகள் மேலோங்கியிருப்பதை இத்தொகுப்பின் சிறப்பம்சமாகக் குறிப்பிடலாம்.

( தீராத பசிகொண்ட விலங்கு – பாவண்ணன். புதுமைப்பித்தன் பதிப்பகம், அசோக் நகர், சென்னை-83. விலை.ரூ50)

gnagarajanpec@yahoo.co.in

Series Navigation

க.நாகராசன்

க.நாகராசன்