தன்னலக் குரலின் எதிரொலி

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

பாவண்ணன்


மிகச்சிறந்த அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஜாக் லண்டன். அவருடைய புகழைப் பலமடங்காக்கிப் பெருக்கி உறுதிப்படுத்திய படைப்பு ‘கானகத்தின் குரல் ‘. இது ஒரு நாயைச் சுற்றிப் புனையப்பட்ட கதையே என்றாலும் படித்து முடித்ததும் மானுட வாழ்வின் அர்த்தத்தை அல்லது அர்த்தமின்மையை நோக்கித் திரண்டெழும் கேள்வி மிகமுக்கியமானது. கானகம் ஒரே சமயத்தில் கவர்ச்சியையும் அச்சத்தையும் தன்னகத்தே கொண்ட படைப்பு. ஒரு காலத்தில் உலகம் முழுதுமே காடாக இருந்து காடு திருத்தி நாடாக்கிக்கொண்டதே மானுட வரலாறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நாட்டுக்கும் காட்டுக்கும் இடையிலான கோட்டின் எல்லை விரிவாகிக்கொண்டே இருப்பதற்கான காரணம் மனிதனின் பேராசை. காட்டை ஆக்கிரமித்து அழித்து ஆளத்தக்க ஒரு பரப்பாக மனிதன் நினைத்துக்கொள்கிறான். அவன் மனத்தில் ஆழமாக ஊன்றப்பட்டுவிடும் இந்த விஷவிதை, ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு காட்டை அழிக்கத் தூண்டியபடி இருக்கிறது. தன் குலம் வாழ விவசாயத்துக்காக அழித்தது ஒரு காலம். கள்ளத்தனமாக மரங்களை வெட்டி விற்றுப் பணத்தைப் பெருக்கி அழிப்பது இன்னொரு காலம். மிகப்பெரிய பரப்பாக காடு விரிந்திருந்த சமயத்தில் அதன் தோற்றம் ஒரு மகாபுருஷனை அல்லது அரக்கனையொத்திருந்தது. கிட்டத்தட்ட ஓர் ஆதிமனிதனின் சாயல் அதற்கு இருந்தது. அதற்கென்று ஒரு குணமும் ஒரு குரலும் இருந்தன. அதை யாரும் வளர்க்கவில்லை. இயற்கையாகவே மண்டி செழிப்பாக வளர்ந்தது. அதற்குக் குழைவு தெரியும். புயலாக சீறித் தாக்கவும் தெரியும். அதீத அன்பு, அதீத ஆக்கிரமிப்பு என இரண்டு பக்கங்களே உடைய மனம் காட்டுக்குரியது. காட்டின் குணமே காட்டில் வசித்த மனிதனுக்கும் விலங்குக்கும் சொந்தமானது. பசி எந்த அளவு இயற்கையோ அதே அளவு பசிக்காக வேட்டையாடி அல்லது போராடிக் கொன்று உண்ணுவதும் இயற்கை. வெற்றி பெற்றே தீரவேண்டிய வேட்டையில் எப்படி வெறித்தனம் இல்லாமல் இருக்கமுடியும் ? நாகரித்தின் காரணமாக காட்டிலிருந்து மனிதன் விலகவிலக, வாழ்வின் தன்மைக்கேற்ப வெவ்வேறு குணங்கள் அவனிடம் படியத் தொடங்கின. காட்டின் குணம் மனஆழத்தில் சென்று உறைந்துவிட, நாகரிக வாழ்வுக்கேற்ப வெவ்வேறு குணங்கள் படிந்து அவனை வேறொரு விதமாக வார்த்தெடுக்கத் தொடங்கின. கானகத்திலிருந்து எழும் குரல் என்பது ஆதிநிலையை நோக்கித் திரும்பத் துாண்டும் குரல். அதைக் காதுகொடுத்துக் கேட்கும் அவசியம் மானுடருக்கு இல்லாமல் இருக்கக்கூடும். அவர்கள் பார்வை காட்டை வெல்லத்தக்க ஒரு ராஜ்ஜியமாக மட்டுமே பார்க்கக்கூடியது. ஆனால் காட்டிலிருந்து விலகிவந்து மானுடர்களிடையே வாழநேர்ந்த ஒரு வனமிருகத்துக்கு அந்த அவசியம் இருக்கிறது. காட்டின் குரலுடன் ஒத்திசைந்து போவதற்கான எல்லாக் காரணங்களும் அதன் வாழ்வில் உண்டு. ஒரு மாற்றுச் சூழலில் வாழநேர்ந்த மிருகத்துக்கு அக்குரலின் அழைப்பு ஒரு தேவ அழைப்புக்குச் சமமாகவே இருக்கும். கன்றை அழைக்கும் பசுவின் குரலைப்போல.

பல தலைமுறைகளுக்கு முன்பே காட்டைவிட்டு விலகி மனிதனுடன் வாழப் பழகிய விலங்கு நாய். வாலாட்டியும் குழைந்தும் நன்றி தெரிவித்தும் மனிதன் காலடியில் வாழ்ந்து மறையும் விலங்கு அது. நன்றியுள்ள விலங்காக தலைமுறைதலைமுறையாகப் பெயரெடுத்தது. தன்னை வளர்த்த எஜமானன் இறந்துவிடும் சூழலில் பட்டினிகிடந்து தன் உயிரையும் மாய்த்துக் கொள்ளும் நாய்களின் கதைகள் உலகில் உலவுவதை நாம் அறிவோம். ஆயிரமாயிரம் சிரமங்களுக்கிடையேயும் ஒரு நாய் வாழத் தேர்ந்தெடுக்கும் சூழல் மனிதர்கள் வாழும் சூழலே. இச்சூழலில் மனிதர்களை வெறுத்து ஒதுக்கி கானகத்தின் குரலுக்கு செவி சாய்த்து, காட்டைநோக்கி ஆர்வத்தோடு பாய்ந்தோடும் முடிவையெடுக்கும் அளவுக்கு மனிதன் ஏன் மாறிப் போனான் என்னும் மையத்தைத்தான் இந்த நாவலில் காண்கிறோம். நாயே நாவலின் முக்கியப் பாத்திரமென்றாலும் நாயின் மனஓட்டங்களே பல இடங்களில் சித்தரிக்கப்பட்டாலும் ஒவ்வொரு காட்சியிலும் மானுடனின் அகமே அம்பலப்படுத்தப்படுகிறது. நாயை முன்னிறுத்தி இந்த நாவல் மானுடத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

கனடாவின் வடமேற்குக் கோடியில் அலாஸ்காவின் அருகில் யூக்கான் பிரதேசம் உள்ளது. அங்கே பாய்கிற பல ஓடைகளில் தங்கத்துாள் கிடைப்பதை பத்தொன்பதாம் நுாற்றாண்டின் இறதியில் கண்டெடுக்கப்பட்டது. அதனால் உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்கள் அங்கே விரைந்தோடினார்கள். அப்பிரதேசத்தின் தட்பவெப்பநிலை மிகவும் மோசமானது. ஏறத்தாழ ஆண்டில் ஏழு மாதங்கள் கடுங்குளிர் நிலவும் இடம். தரையில் உறைபனி மூடியிருக்கும். தங்கம் தேடிப் பலரும் அந்தப் பகுதிக்குச் சென்றதால் அவர்களுக்குத் தேவையான பொருள்களை அங்கு கொண்டு செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும் அவர்களுடைய கடிதப் போக்குவரத்துக்கு வேண்டிய வசதியைக் கனடா அரசாங்கம் மேற்கொண்டது. தபால் வண்டிகளை இழுக்கவும் தங்கம் தேடிச் செல்பவர்கள் வண்டிகளில் செல்லவும் ஏராளமான நாய்கள் தேவைப்பட்டன. அதனால் நாய் வாணிகம் ஓங்கியது. நாடெங்கும் நாய்கள் ஒரு விற்பனைச் சரக்காக மாறியது. ஆற்றல் மிக்க நாய்களை வீடு புகுந்து திருடி வந்து சந்தையில் விற்கத்தொடங்கினார்கள். அப்படிப்பட்ட வழியில் பனிப்பிரதேசத்துக்கு தற்செயலாக வந்துசேர்ந்த ஒரு நாயின் கதையே நாவலாக விரிந்துள்ளது.

நாவல் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் ஒரு நீதிபதியின் வீட்டில் வளர்க்கப்படும் பக் என்ற பெயருடைய செல்லப்பிராணியான நாயின் நடவடிக்கைகள் விவரிக்கப்படுகின்றன. மனிதர்களிடமிருந்து அது பெறக்கூடிய அன்பும் மனிதர்களுக்கு அது செலுத்தக்கூடிய நன்றியும் மிகச்சிறந்த முறையில் சித்தரிக்கப்படுகின்றன. மனிதர்களை மிகஅருமையான துணையாகவும் தனது தேவையறிந்து நிறைவேற்றும் தெய்வமாகவும் அது நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் அது சில கயவர்களால் நிதிபதியின் வீட்டிலிருந்து திருடப்பட்டு உறைபனி வண்டியில் பூட்டப்படுவதற்காக பணத்துக்கு விற்கப்படுகிறது. கொஞ்சலையும் குழைவையும் மட்டுமே நீதிபதியின் குடும்பத்தினரிடையே கண்டு சுகமாக வாழ்ந்த நாய்க்கு அதட்டலும் அடிதடியும் கொண்ட மனிதர்களின் முகம் முதன்முதலாக அறிமுகமாகிறது. இதமான புல்வெளிக்கு மாறாக கடுமையான உறைபனி அறிமுகமாவதைப்போல.

இரண்டாம் பகுதியில் முழுக்கமுழுக்க வண்டியிழுக்கும் தகுதியை அடைவதற்கான பயிற்சிகளை அது பெறுகின்றது. அடக்குமுறைகளாலும் கொடுமைப்படுத்தியும் பட்டினிபோட்டு வதைத்தும் தன் வழிக்குக் கொண்டுவரத் துடிக்கும் மனிதர்களின் குரூர முகத்தைப் புரிந்துகொள்கிறது நாய். அதற்கு அது மிகப்பெரிய புதுமையான அனுபவம். கட்டாயத்தால் தன் தகுதியைத் தானே உணர்ந்துகொள்கிற தருணம். அடுத்தடுத்த பகுதிகளில் வண்டியை இழுத்துக்கொண்டு உறைபனியில் ஓடுவதில் சர்வவல்லமை மிகுந்ததாக மாறுகிறது. வண்டியோட்டும் மற்ற நாய்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று நிலைத்து நிற்பதும் நாய்க்குப் பழகிவிடுகிறது. வெற்றிகொள்ளும் வெறி இதுவரை அதனிடம் இல்லாத குணமாக இருந்தது. முதன்முதலாக அவ்வெற்றியைச் சுவைத்துப் பழகுகிறது. அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள மேலும்மெலும் வெறியை வார்த்துக்கொள்வது அதற்குத் தவிர்க்கமுடியாததாக மாறிவிடுகிறது. தாக்குதலுக்கு ஆட்படுவதும் திருப்பித் தாக்குவதும் சகஜகுணமாகி விடுகிறது. வெற்றியும் தோல்வியும் பழகிவிடுகிறது. எக்கணத்திலும் எதிர்த்துக் களத்திலிறங்கி இரண்டிலொன்று முடிவைக் காண்கிற ஆவேசமும் அலட்சியமும் அதன் ஒவ்வொரு நரம்பிலும் ரத்தத்தோடு ரத்தமாக ஓடத் தொடங்குகின்றன. முழுக்கமுழுக்க ஒரு வனவிலங்காக தன்னை தகவமைத்துக்கொள்வதில் ஒவ்வொரு கட்டமாக அது முன்னேறுகிறது. அது மீண்டும்மீண்டும் விற்கப்படுகிற பண்டமாக மாறுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் தம் தன்னலத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார்கள். மான்கூட்டத்தோடும் நாய்க்கூட்டத்தோடும் போராடிப்போராடி வெற்றி ஈட்டிப் பழகி நாயும் தன்னைக் காட்டுக்குள் வசிக்கத் தகுதியுள்ளதாக மாற்றிக்கொள்கிறது. காட்டின் குணங்கள் முழுமையாக அதன் மனத்திலும் உடலிலும் படிந்துவிடுகிறது. அத்தருணத்தில் தற்செயலாக மனிதனின் அன்பென்னும் நிழலில் தங்கிநிற்கும் வாய்ப்பு சிறிது காலம் கிடைக்கிறது. நிதிபதிக்கு அடுத்து அன்பைப் பொழியும் மனிதன் ஜான் தாண்டர்னின் அழைப்பு மானுடத்தின் அழைப்பாகவே அதற்குப் படுகிறது. ஒரு புறம் கானகத்தின் அழைப்பு. மறுபுறம் அன்பின் அழைப்பு. பல தருணங்களில் எந்தப் பக்கம் சாய்வது என்னும் தடுமாற்றம் உருவானாலும் அன்புக்கு நடுவில் புரளும்போது அன்பைப் பொழிவதாகவும் அன்பில் திளைப்பதாகவும் கானகத்துக்கு நடுவே தன்னந்தனியே திரியும்போது வெறியின் அழைப்புக்குப் பணிந்து வெற்றிக்காக மோதியும் தன்னைக் கண்டு அஞ்சிப் பின்வாங்கும் விலங்குகளைக் கண்டு பெருமிதத்தில் திளைத்தும் இரண்டு விதமாகவும் வாழ்வதில் எவ்விதப் பிரச்சனையுமின்றி உலவுகிறது நாய். ஜான் தாண்டர்னின் மரணம் அந்த இரட்டைநிலை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. முதலில் மான்களைக் கொன்றும் விரட்டியும் பிறகு ஓநாய்களைக் கொன்றும் விரட்டியும் தன் திறமையை வளர்த்து வெற்றிமேல் வெற்றி ஈட்டிய நாய் இறுதியில் நொடிப்போதில் மனிதர்கள்மீது தாவி ஒரே கணத்தில் குரல்வளையைக் கடித்துக் கொல்வதில் இலக்கு பிசகாத வெற்றியை அடைவதும் ஏறத்தாழ அதே கணத்தில் நிகழ்கிறது. அன்பின் அழைப்பை முன்வைக்க யாருமில்லாத உலகில் வாழ விருப்பமில்லாத நாய் கானகத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஓடிச்செல்கிறது.

நாவலில் மனத்தை நெகிழவைக்கும் காட்சி வெள்ளத்தில் அகப்பட்டுக்கொண்ட ஜான் தாண்டர்னை வெள்ளத்தில் நீந்திச் சென்று நாய் காப்பாற்றிக் கரைசேர்க்கும் காட்சி, அக்காட்சி முழுக்கமுழுக்க உயிர்த்துடிப்புடன் எழுதப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் அதை ஒரு நாயாகவே கற்பனை செய்துபார்க்க முடியவில்லை. ஒவ்வொரு கணமும் உயிருக்குயிரான நண்பன் ஒருவனை ஆபத்திலிருந்து மீட்டெடுக்க இடைவிடாமல் போராடும் ஒரு மகத்தான ஆளுமையாகவே உயர்ந்து நிற்கிறது. நாய் செலுத்தும் அன்புக்கு நிகரானதாக தாண்டர்னாலும் அன்பைச் செலுத்த முடியவில்லை என்பதுதான் சோகம். ஆயிரம் ராத்தல் எடையைத் தன்னந்தனியே இழுக்கும் சக்தி தன் நாய்க்கு உண்டு என்று ஆயிரத்து அறுநுாறு டாலர் பணத்துக்குப் பந்தயமிட்டு தனக்காகப் போட்டியிட வைக்கிறான். தன் அகங்காரத்துக்கு வெற்றி ஈட்டித் தரும் பொறுப்பை நாயை ஏற்கும்படி செய்கிறான் . நாயும் அவன் செலுத்தும் அன்பின் மயக்கத்தில் அசைக்கக்கூட முடியாத அந்த எடையை இழுத்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. அன்புக்காக அன்பு செலுத்துவது என்பது மானுடர்களால் முடியவே முடியாத காரியமாக அமைந்துவிடுவது மிகப்பெரிய துரதிருஷ்டம். அந்தத் துரதிருஷ்டமே கானகத்தின் குரலைச் செவிமடுக்க அதைத் துாண்டுகிறது போலும்.

கானகத்தின் குரல் ஆழ்மனத்தில் உறங்கும் வெறியுணர்வை மீட்டிமீட்டி மேலே கொண்டுவரும் குரல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அந்த மீட்டலுக்கு ஆளாகும்படி தூண்டுவது மனிதர்களின் பேராசையும் வன்முறையும் தந்திரங்களும் மண்டிய சூழலே என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். கானகத்தின் குரல் ஒருவிதத்தில் மண்ணுலகில் பெருகிப்போன தன்னலக் குரலின் எதிரொலி. நாயின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் மானுட வாழ்வின் விமர்சனமாக நாவல் உருமாறும் முக்கியமான தளம் இது. வாசக மனத்தில் எண்ணற்ற கேள்விகளை உருவாக்குவதில் ஜாக் லண்டன் பெற்றிருக்கும் கலைவெற்றி மகத்தானது.

இந்த நாவலை ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்தவர் பெ. தூரன்.

சுவை குன்றாத மொழிபெயர்ப்பைப் படிக்கப்படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதை மீண்டும் வாசகர்களின் பார்வைக்குக் கொண்டுவந்திருக்கிறது புதுமைப்பித்தன் பதிப்பகம். ஆனால் முதல் பதிப்பைப்ப்பற்றிய எவ்விதமான குறிப்பும் இல்லாமல் இருப்பதுதான் வருத்தம் தருகிறது.

( கானகத்தின் குரல்- ஜாக் லண்டன். தமிழில்: பெ. தூரன். புதுமைப்பித்தன் பதிப்பகம். அசோக் நகர், சென்னை-83. விலை: ரூ.75)

—-

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்