சருகுகளோடு கொஞ்ச துாரம்

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


14 02 1997

நேற்று இன்றல்ல நாளை – நாவலுக்கு

அக்னி அட்சர விருது – ஏற்புரை

—-

வாழ்க்கை பேரனுபவமாய் இருக்கிறது. வாயளவுக்கும் அதிக உணவு அது. காலத்தின் கெடுபிடியில், எதை உணர, எதை இழக்க என்கிற திணறலில் இருந்து விடுதலை என்பதே இல்லை. பேரனுபவமும், மகிழ்ச்சியும,ி அடிவண்டலாய் சிறு சோகமுமானது வாழ்க்கை.

ஆனாலும் பரவாயில்லை. சோகப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. நேரமில்லை. வாழ்க்கை என்பது குறுகிய ஒருவழிப் பாதை. மிக மிகவும் சிறுத்த இந்த வாழ்க்கைக் கையிருப்பில், அனுபவங்களை, வைரங்களை வாரியிறைத்து ஆரவாரத்துடன் முன்னே முன்னே என்று, திருப்பதி தரிசனக் கூட்டமாய் முன்னே மாத்திரம் நகர்கிறது காலம். விடுபட்டுப் பறக்கத் துடிப்பான பட்சியை, உள்ளங்கைக்குள் காபந்து பண்ணுகிற சிறுவனின் முயற்சியையே எழுத்தாளன் செய்கிறான் எனலாம்.

மணல் வீட்டைக் கலைத்துப் போகிற குறும்புக்காரக் காற்றைப் போல காலம் கனவுகளை எத்தி சிதறிடித்துச் செல்ல பிரியம் கொண்டதாய் இருக்கிறது. பள்ளிக்கூட வாத்தியார் போல எழுதி எழுதி, அழித்துக்கொண்டே போகிறது அது. உருவங்கொள்ளுமுன் ஒரு விஷயம் கைநழுவி விடுமோ என்ற ஆதங்கக் குடைச்சலில், அறிந்த கொஞ்சத்திலும் இயன்ற அளவு தக்க வைத்துக் கொள்ளும் ஆவேசம் கிளர்ந்தெழுகிறது. உணர்ந்ததில் அறிந்தது கொஞ்சம். என்றாலும் அதாவது மிஞ்ச வேண்டும். அது முக்கியம்.

சற்றுமுன்

பறந்து கொண்டிருந்த

பறவை எங்கே-

அது

சற்றுமுன்

பறந்து கொண்டிருக்கிறது

புலன் வழிப்பட்ட நிஜத்தின் தரிசனம் கைநழுவிப் போகிற இயலாமையில், நகலெடுத்துக் கொள்ளுதல் தேவையாகிறது. நகலில் இருந்து மீண்டும் மீண்டும் நிஜத்தை மனதுக்குள் கொண்டுவந்து கொள்ள முடியும் அல்லவா ?

சற்றுமுன் பறந்துபோன பறவையை, நினைவில் திரும்பக் கொண்டுவரும் பிரயத்தனத்தில், பறவைக்கு அதே நிரந்தரமான இடம் மனது கொடுத்து விடுகிறது. நிஜத்தின் பிரதி இது. நகல்.

அதை அழிக்க காலத்துக்கு சக்தி கிடையாது. புயலாய்ச் சீறி சினந்து அது வேரோடு மரத்தைப் பெயர்த்தால்தான் உண்டு. மனிதன் அப்போது சரணாகதி… என்றாலும் அது காலத்தின்- தோல்விபயத்திலான ஆத்திரம், என்று அவன் புன்னகையுடன் செத்துப் போகலாம். அவனது வாழ்க்கை போலவே, அப்போது அவனது மரணமும் அர்த்தபூர்வ மாகிவிடும். நல்ல விஷயம் அது, அல்லவா ?

மனிதனைக் கலைத்துப் போடுகிற காலத்தை, ஆனால் கலைஞனோ சிறு புன்னகையுடன் அலட்சியமாக, முன்பின்னாகப் புரட்டிக்கூட, சீட்டு விளையாட்டில் மாற்றி யடுக்கிப் பார்ப்பது போல, விளையாடுகிறான். தீராத சுவாரஸ்யமான விளையாட்டு அது அவனுக்கு. சுடரோடு விளையாடும் பூனைக்குட்டியாய் காலத்தோடு ஒரு விளையாட்டு. காலம் தொடர்ந்து நடைபோட்டுக் கொண்டே யிருக்கிறது. அது காத்திருக்குமா யாருக்காகவும் ? நிற்குமா ? தேங்குமா ?… அதுபோலவே கலைஞனுக்கும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், தொடர்ந்த வேலைக்கண்ணிகளால் அவன் பிணைக்கப் பட்டிருக்கிகறான். இந்த ஈடுபாட்டில், சராசரி மனித வாழ்வேகூட அவனுக்கு இரண்டாம்பட்சம்தான். அவனுக்கு ஏமாற்றங்கள் இல்லை. வறுமை இல்லை. தோல்விகள் இல்லை. வெற்றிகளும், அது சராசரியாகப் புரிந்து கொள்ளப் படுகிற அர்த்தத்தில், இ ல் ை ல. இப்படி நெருக்கடிகளில் இருந்து, கலைஞன், அவன் கலைஞன் ஆனதினால், தப்பிக்கிறான், எனலாம்.

வாழ்க்கை அவதானிப்பின் இடையறாத முனைப்பில், அவனது பார்வை விசாலப்படுகிறது. தரிசனம் ஆழப்படுகிறது. தளம் விகாசப் படுகிறது… என தனிமனித எல்லைகள் விரிகின்றன. நேற்றையும் இன்றையும் உறையவைத்து பதனப்படுத்துகிற பிரயத்தனத்தில், சிறு நீட்சியாக தன்னைப்போல நாளை என்கிற தொடர்-அம்சமும் அவன் கவன எல்கைக்குள் சேர்ந்து கொள்கிறது.

நாளை என்பது அடுத்த கட்டம். நாளை என்பது என்ன ? நேற்றில் இருந்து புறப்பட்டு, இன்று வழியாக நாம் போய்ச் சேரப்போகிற இடம்.

நாம்

இறந்த காலத்துள்

நடந்து சென்று

எதர்காலத்தை

அடைகிறோம்

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் முதலில் காலடி வைத்தாற்போல, நாளையின் விரிந்த தளத்துக்குள் கலைஞன் முதலடி எடுத்து வைக்கிறான். சமுதாயம் பின்னே வந்து சேர்ந்து கொள்கிறது. முகமன் கூறி, கனவோ பிரமிப்போ இல்லாமல், ஆரூடம் சொல்லாமல், தர்க்க ரீதியாய், அடுத்த கட்டம் இதுதான், என்று எடுத்துச் சொல்லுவதும், அதை துரிதப் படுத்துவதும், அதற்காக மானுடத்தைத் தயார்ப் படுத்துவதும், எச்சரிக்கைப் படுத்துவதும் என அவன் பணி அமைகிறது. மானுடம் என்பதும், சமுதாயம் என்பதும் மேன்மையை நோக்கித்தான் நகரும். முன்னோக்கித் தான் நகரும். என்றாலும் அதைத் தேங்க விடாமல் பார்த்துக் கொள்வதும், வாசகனை உணர்வெழுச்சியுடன் நாளையைச் சந்திக்கச் செய்வதும் கலைஞனின் – க ை ல ஞ ர் க ளி ன் வேலை.

நேற்றின் களைகளை

இன்று பிடுங்கி

நாளைகளைச்

செப்பனிடுவோம்

அடுத்த கட்டம் என்பது கனவு, அது இன்னும் சித்திக்காதது என்ற பொருளில். அதை பிரமிப்பை விலக்கிய தன்னம்பிக்கையுடன், மனத் திண்மையுடன், ஆர்வத்துடன் எதிர்நோக்க, வரவேற்க கலை கற்றுத் தருகிறது.

/2/

எடுத்துரைத்தல் பழக்கமாக ஆனபின் எழுத்தில் சங்கீதத்தன்மை, தாளக்கட்டு, அவரவர் பாணி என ஆகிப்போகிறது. யதார்த்தத்தின் சுருதி எல்லார்க்கும் பொது.

கூறியது கூறல் நமக்கானதல்ல. கிளிப்பிள்ளைகளுக்கு அந்த வேலையை விட்டுக் கொடுப்போம்.

காலப்போக்கில், அல்லது அடிப்படை நிலையில் வெளியே தெரியாமலும், பின் தெரிந்துமாக, தன் முகம் நிறுவிக் கொள்கிற ஆவேசம் எழுத்தின் ஊடுசரடு. ஒருவேளை எழுத்தாளனின் மூலஸ்தானமும் அதாகவே இருக்கலாம். அதனால்தான் அவன் உற்சவம் கிளம்பியும் இருக்கலாம்.

இதிலும் ஒரு வளர்ச்சி நிலை அபூர்வமான விஷயம் கலைக்கு. எங்கும் நாம், நம்மை நிறுவிக்கொள்ள வேண்டியதில்லை. எங்கெங்கும் உள்ள ஒன்று நம்முள் இருக்கிறது. நாம் இந்தப் பிரபஞ்சத்தின் துகளே… என்ற உணர்வு. ஆச்சரியகரமாக கலைஞனுக்கு ஒரு கட்டத்தில் கிடைக்கிறது. எங்கும் தன்னை இறுத்துகிற ஆவேசம் போய், எங்கெங்கிலும் தான் எற்கனவே நிறைந்திருக்கிற நிறைவு, எத்தகைய ஆனந்தம்.

காலகாலமாய் மனிதனின் போராட்டங்களும், அது சார்ந்த முடிவுகளும், தத்துவ மயக்கங்களும், தெளிவுகளும், தெளிவு தந்த மயக்கங்களும், அதனின்றும் மீளலும், என வாழ்வின் தொடர்-ஓட்டத்தில். ஒரு நிலையில் வாழ்க்கையே சிலரது கண்ணோட்டத்தில் தத்துவங்களாக கருத்துருவங்களாக இசங்களாக சுருங்கிப்போகிற அவலம் துக்ககரமானது.

எந்தக் கட்டத்திலும் ஒரு சமூகம், நவீனத்திலும் அல்ல. பழமையிலும் அல்ல, இந்த இரண்டு நிலைகளையும் இரு கரைகளாகக் கொண்டு நடுவே ஆறாகப் பெருகியோடிக் கொண்டிருக்கிறது. எனவேதான் தத்துவ தரிசன அடிப்படையில், முடிவை அல்ல, சற்று அடுத்த கட்டத்தைச் சுட்டுவதும், கவனப் படுத்துவதும், கலைஞனின் வேலையாக இருக்கிறது. அதற்கு நம்பகத்தன்மை அவசியம். சொல்வது மாத்திரமல்ல, பிறரையும் அழைத்துச் செல்கிற சிறு அக்கறையாவது இல்லாமல் எப்படி ?

கல்வியும் மதமும் அரசியலும் வாழ்க்கையை தத்துவ விசாரத்தில் சுருக்கி விடுகின்றன. நிறுத்துப் பார்க்க அவை முயல்கின்றன, சரிதான். ஆனால் யாரிடம் சரியான தராசு என்பதில்தான் சிக்கலே.

ஆ- கலை எடைபோடவில்லையா ? அது மாத்திரம் சரி என்று எப்படி நிர்ணயம் கொள்வது, என்றால் முடியாதுதான். ஆனால்….

இன்னொரு விஷயம் சொல்லி, ஆ ன ா லு க் கு ப் போவோம். அரசியல் என்ன செய்கிறது ? தனிமனித முயற்சிகளை அது ஒருமாற்று குறைத்து, கணக்கில் சேர்த்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி, சமூக முன்னேற்றம் பற்றி அது – அரசியல் – கவலைப்படுகிறது. பெரும்பான்மையின் தேவையே அதன் கவனம்.

மதமோ கல்வியோ இதற்கு எதிர்நிலைப்பாடு கொள்கின்றன. தனி மனிதனுக்கு அவை அ தி க முக்கியத்துவம் தருகின்றன. அதன்மூலம் அது சமூகத்தை, அதன் எழுச்சியை உத்வேகப் படுத்த முடியுமா என அவை கிளர்ந்தெழுகின்றன.

ஆ ன ா ல் ….

ஆனால் கலை என்ன செய்கிறது ? அது தனி மனிதப் பிரச்னைபோல, ஒரு சமூகப் பிரச்னையை வகைமாதிரி என எடுத்துக் கொண்டு, சொல்லிப் பார்க்கிறது. எழுத்தாளனின் தேர்வு அடிப்படையில் வகைமாதிரிப் பாத்திரம் ஒரு குறிப்பிட்ட தளத்தில் இயக்கப் படுகிறான். ஒரு குறிப்பிட்ட தீர்வை நோக்கி. அதாவது ஒரு தனி மனிதப் பிரச்னை தனி மனிதத் தீர்வாக முன்வைக்கப் படுகிறது. வாசிக்கிற வாசகன் அதை தன்-பிரச்னையாக உணர வேண்டியதில்லை. தன் தீர்வாகவும் கொள்ள வேண்டியதில்லை. கதை மாந்தனின் பாத்திரத்தின் தீர்வு இதுவானால், தனது தீர்வு என்ன என்று சிந்திக்க முடிவெடுக்கிற உரிமையை கலை வழங்குகிறது. அவனைத் தன்-பிரச்னையை யோசிக்கச் செய்து, அதன் தீர்வையும் /த ா னே/ முடிவெடுக்க சுதந்திரம் தந்து, இப்படியாய் அவனை யோசிக்கப் பழக்கப் படுத்த, தெளிவாக்க வல்லதாய் கலை இயங்குகிறது. ஆச்சரியமான விஷயம், அல்லவா ?

அரசியல்- கல்வி- மதம்- வாழ்விலிருந்து பெற்ற சாறு. தத்துவக்கூறு. தத்துவக் கடிவாளத்துடன் வாழ்க்கையைப் பார்க்கிறபோதே வாழ்வின் தளம் இன்னும் சிறுத்துப் போவதை உணர்வது கடினம் அல்ல. கலை வாழ்க்கைக்கு மேலதிக நியாயம் செய்கிறது.

/3/

எழுத்து-வீர்யத்தைக் காவு கொடுக்காமல், இழக்காமல், சற்று பரந்த தளத்தில் சமூகத்துக்கு அறிமுகம் ஆகிறது நல்ல விஷயந்தான். சில சமயம் அப்படி விபத்துகள், அல்லது வாய்ப்புகள் நேர்ந்துதான் விடுகின்றன. சில படைப்புகளைப் படைக்கிறபோது, இது இன்னும் விரிவான எல்லையில் அறியப்படலாமே என்கிற யோசனை வருவதும் இயல்பான ஒன்றே. ஒருவேளை பரிசுகளால் அது சாத்தியப்படவும் கூடும், என்ற கணிப்பில், அந்த விபத்தும் நிகந்ததான கணத்தில், அந்தப் படைப்பு தன்னை ஓரளவு நிறுவிக் கொண்டாற்போல மன அமைதியும் கிட்டுகிறது.

இதுவரை தனது படைப்புகளால் தன் வாசகனை கெளரவப்படுத்தி வந்த கலைஞன், தன்னையும்- அதன்மூலம் தன் வாசகரையும் ஒருசேர கெளரவம் அளிக்கிற முயற்சியை கைகுலுக்கி ஏற்றுக் கொள்கிறான்.

மானுடப் பொதுவாழ்வின் சற்று அடுத்த கட்டத்தைச் சுட்டும் பொறுப்புமிக்க கலைஞனுக்கு, பரிசுகள் சில சமயம் தனது, எழுத்தின் தீவிரத்திலும் போக்கிலுமே அடுத்த கட்டத்தைக் காட்டித் தரக் கூடும்.

முக்கியமாய்ப் படைப்புக்கான பரிசு என்பது, ஆமாம் அவனது மிகச் சிறந்த வாசகர்களால் அல்லவா நிர்ணயம் பெறுகிறது. ஒரு கலைஞனுக்கு இதைவிட வேறென்ன வேண்டும்.

—-

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்