எழுநிலை மாடம்

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

புதுவை ஞானம்


‘அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே

எல்லாம் வல்லான்றனையே யேத்து

இன்று வருமோ நாளைக்கே வருமோ மற்று

என்றென்று வருமோ அறியேன் என்கோவே

துன்று மல வெம்மாயை அற்று வெளிக்குள்

வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம்

சோறு வேண்டினும் நினை அடைந்தன்றி

மேவொணாதெனும் மேலவர் உரைக்கே

மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன்

வள்ளலே உன்றன் மனக்குறிப்பறியேன்

சாறு வேண்டிய பொழில் வடலரசே

சத்தியச் சபைத் தனிப் பெரும்பதியே ‘ என்றெல்லாம்

வள்ளலார் என அறியப்படும் சிதம்பரம்

இராமலிங்க சாமிகள் பாடினார்,

‘இரா மலிந்தார் மனதில் இராத சந்தோட நம

இராமலிங்காய நம இராமலிங்காய நம ‘ என

அவரது žடர் தொழுவூர் வேலாயுத முதலியார் பாடினார்

அரவிந்தரோ

‘ஒம் ஆனந்த மயீ சைதன் மயீ

சத்திய மயீ பரமே ‘ எனப் பாடினார்

இருவருமே சத்தியச் சபைத் தனிப்பெரும் பதியிடம் தான்

சத்தியத்திடம் தான் நம்மை ஆற்றுப்படுத்துகின்றனர்.

‘சேரநெஞ்சமே தூரம் அன்று காண்

வாரம் வைத்தியேல் சாரும முக்தியே

முக்தி வேண்டுமேல் பக்தி வேண்டுமால்

சத்தியம் இது புத்தி நெஞ்சமே ‘-வள்ளலார்,

கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக

அருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க -தெருள் நயந்த

நல்லோர் நினைத்த நலம் பெருக நன்று நினைத்

தெல்லோரும் வாழ்க இசைந்து _ என வெள்ளை

ஏகாதிபத்தியத்தைச் சாடியவர் வள்ளலார் 1823 அக்டோபர் 5

ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர் இவர். இவர் ஒதாது உணர்ந்தவர்

15,8,1872 இல் பிறந்தவர் அரவிந்தர், அரவிந்தரோ பெரும் படிப்பாளி,

மனித குல விடுதலைக்காக மேம்பாட்டுக்காகப் போராடியவர் இருவருமே,

மரணமிலாப் பெருவாழ்வு பற்றி கனவு கண்டவர்கள், முன்னவர் சாதித்துக் காட்டியவர்

பஞ்ச பூதங்களால் ஆன உடலை பஞ்ச பூதங்களுக்கும் பகிர்ந்து கொடுத்து சோதி

வடிவாய் மறைந்து உறைபவர் தமது யோகசித்தியால் Transparant எனப்படும்

ஒளி ஊடுறுவும் தன்மைவாய்ந்த பளிங்குமேனியை கற்பூரவாசம் வீசும்

பொற்பார் திருமேனியை ஈட்டியவர் அவரைப் புகைப்படம் எடுத்தால் ஒன்றுமே

படிமமாக விழுந்ததில்லை, சாதிமத பேதங்கடந்த சன்மார்க்க சங்கம் நிறுவியவர்,

அந்தக் கொடி பாதி வெண்மையும் பாதி பொன்மையும் கொண்டது,

அன்னை கண்ட Supra mental vision பாதி வெணிமையும் பாதி பொன்மையும்

கொண்ட அதிமனம், இதில் வேடிக்கை என்னவென்றால் Papal Flag எனப்படும்

போப்பாண்டவரின் கொடியும் இத்தன்மை ஆனதே,

‘Religion gives you a postdated cheque ‘

என அரவிந்தர் சொன்னதாக M.P பண்டிட் சொல்லி

நான் கேட்டிருக்கின்றேன், இதனையே வள்ளலார்

‘சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே

சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே

ஆதியிலே அபிமானித்தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணே அழிதல் அழகலவே

நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த

நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர்

வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய

மேவுகின்ற தருணமிது கூவுகின்றேன் உமையே

மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது

வருணாசிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது

கொதித்த லோகாச்சாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது

கொலையும் களவும் மற்றப் புலையும் அழிந்தது ‘

எனப்பாடி சமரச சுத்த சன்மார்க்க நெறி கண்டவர், ஆக இந்த

இருபெரும் யோக புருடர்களும் விடுதலையை சமத்துவத்தை

சாகாக் கலையை பரிணாம வளர்ச்சியில் மனிதன் செல்ல இருக்கும் அடுத்த

கட்டவளர்ச்சியை வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு மொழிகளில்

நமக்கு எடுத்து உரைத்துள்ளனர்,இந்த பரிணாம வளர்ச்சியில் படி நிலைகள் உள்ளன,

அந்தப் படிநிலைகளை வள்ளலார் ஏழு நிறங்களிலான மாயத் திறைகளாகவும்

அரவிந்தர் ஏழு வகை அறியாமை எனவும் (SEVEN FOLD IGNORANCE) எனவும்

குறிப்பிடுகின்றனர், இதே தத்துவத்தை பதஞ்சலி முனிவர் யோக நிலைகளாகவும்,

புத்தர் போதியாங்கா எனப்படும் 7 காரணிகளாகவும் கூறுகின்றனர்,

மேடம் பிளாவட்ஸ்கி அம்மையாரும் ரஷ்ய நாட்டில் பிறந்த மற்றொரு

ஞானியான குர்ட்ஜிப் அவர்களும் இவ்வெழு நிலை மாடங்கள் குறித்துநிறைய

எழுதியுள்ளனர்,இவற்றை யெல்லாம் படிக்கும் போது Although we hail from

different lands we share one earth sky and sun.

என்ற Hiren Mukharjeeயின் பாடலும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற

தமிழ் மூதுரையும் நினைவுக்கு வருகின்றன,

காலா காலமாக மனிதனின் முக்தி பற்றி பலர் பலவிதமான தத்துவ

விளக்கங்கள் அளித்த போதிலும் தத்தவத்தை நடைமுறைக்குக் கொண்டுவர

பாடுபட்டது கார்ல் மார்க்ஸ், அதைப்போலவே வள்ளலாரும் அரவிந்தரும் முயன்றனர்,

வள்ளலார் கடைவிரித்தோம் கொள்வாரில்லை கட்டிவிட்டோம் என்று காற்றிலே கலந்து

விட்டார், அரவிந்தரின் தரிசனம் அன்னையின் அருளுதவியால் ஆசிரமம் ஆக மார்க்ஸ்

கண்ட சமவுடமைச் சமுதாயமாக ஒரே உடை ஒரே உணவு ஒரே மாதிரி வாழ்க்கை

என சாதி மதம் இனம் மொழி கடந்த சமத்துவ சமூகமாக சாதகர்களாக அதிமன

வருகைக்கு சாதகம் செய்யும் சாதகப்பட்சிகளாக நம் கண் முன்னே காட்சியளிக்கிறது.

நாமும் அந்த சாதகர் வரிசையில் வாழையடி வாழையன வந்த திருக்கூட்டமதில்

யானொருவன் அன்றோ என கலந்து கொள்ள வேண்டுமென்றால் மோன

நிலையில் ஒருமைப்பட முயற்சிக்க வேண்டும், இனி அந்த 7 நிலைகள்

பற்றி சுருக்கமாக விவாதிப்போமாக. இதை எனக்கு எளிதில் புரிய வைத்தவர்

குர்சிப் எனும் ரசிய மெய்ஞானி 28,11,1877ல் பிறந்த இவர் சிக்மன்ட்

ப்ராய்டின் சம காலத்தவர் The seven levels of human development

என இவர் குறிப்பிடுவதாவது,

1.Instictive – Knowledge by imimtation and instnict wants

gratification of lusts and comfort. உணர்வு நிலை பசி தாகம் காமம்

வாழ்க்கை வசதிகள் தேடும் மிருகத்தையொத்த ஆனால் மிருகத்தையடுத்த நிலை,

2.Emotional – Knowledge of Likes and dislikes of preferances and

aversions wants something pleasant or if sick something loathsome.

உணர்ச்சி (கிளர்ச்சி) நிலை விருப்பு வெறுப்பு வேண்டுதல் வேண்டாமை மகிழ்ச்சியும்

ஆறுதலும் தேடும் நிலை,

3.Intellectual – Theories and mental construction wants proof and

systems.அறிவு நிலை (கருத்து நிலை )-தத்துவங்களையும் கருதுகோள்களையும்

கொண்டு மனக்கோலம் போடும் நிலை.

4.உயர் அறிவு – தன்னை அறிய முயற்சித்தல் நடுவு நிலை வகித்தல் குறிக்கோள் ஒன்றைத்

தேர்ந்தெடுத்தல்.

5.வடிவு பெற்ற திரட்சியான அறிவு- பழைய வளர்ச்சி நிலைகளுக்கு திரும்ப முடியாமை

மனோ வாக்கு காயங்களால் ஒருமித்த பரிபூரண அறிவு.

6,முற்றறிவு – ஆனாலும் இழந்துவிடும் ஊசலாட்ட நிலை.

7.மன உறுதி – உள் உணர்வு மாறாத தான் எனும் தனித்தன்மை.

போதியங்கா எனப்படும் புத்தரின் தத்துவம் இந்த ஏழு நிலைகளை;

1.ஸ்மிருதி -விழிப்பு நினைவாற்றல் சிரத்தை

2.தர்ம விஷயா -தருமத்தையும் அதர்மத்தையும் பிரித்தரிதல்

3.வீரியம் -சக்தி முயற்சி

4.பிரீதி -அகத்தூண்டுதல் -ஆர்வம்

5.பிரசராப்தி -அமைதி மோனம்

6.சமாதி -ஒன்றுதல்

7.உபேக்ஷா -சமரசம் நடுநிலை எனவும் குறிப்பிடுகிறது,

பதஞ்சலி யோக சூத்திரம்

1.தர்னா – மனதை ஒரு நிலைப்படுத்தல்

2.தியானா -சிந்தனை

3.சமாதி -ஒன்றினைதல்

4.பீரீதி – ஆர்வம்

5.பிரக்ஞா -ஆர்வம் சிந்தனை காண்பவரும் காட்சியும் ஒன்றாகி சங்கமித்து

ஞானமடைதல் எனவும் குறிப்பிடுகிறது.

‘கரைவின் மாயைக் கரும் பெரும் திரையால்

அரைசது மறைக்கும் அருட்பெருஞ்சோதி

பேருறு நீலப்பெருந்திரை யதனால்

ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்சோதி

பச்சைத் திரையால் பரவெளியதனை

அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்சோதி

செம்மைத் திரையால் சித்துறு வெளியை

அம்மையின் மறைக்கும் அருட்பெருங்சோதி

பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை

அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்சோதி

வெண்மைத்திரையால் மெய்ப்பெருவெளியை

அண்மையில் மறைக்கும் அருட்பெருஞ்சோதி

கலப்புத் திரையால் கருதனுபவங்களை

அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்சோதி

விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்

அடற்புற மறைத்கும் அருட்பெருஞ்சோதி

தத்துவ நிலைகளை தனித்தனித் திரையால்

அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ்சோதி

திரைமறைப்பெல்லாம் தீர்த்தாங்கே

அரைசுரக்காட்டும் அருட்பெருஞ்சோதி

தோற்ற மாயைத் தொடர்பறுத்தரளின்

ஆற்றலைக்காட்டும் அருட்பெருஞ்சோதி ‘

என இம்மாயைத்திரைகளை விளக்குகிறார் வள்ளலார்.

‘திருக்கதவம் திறவாயோ

திரைகளெலாம் தவிர்த்தே ‘ என வேண்டி இறைஞ்சுகிறார்.

Symbolic ஆக தான் கட்டிய எண்கோண ஞானபையில் இத்திரைகளை விலக்கி

ஒவ்வொரு மாதமும் கிருத்திகைக்கு ஆறாம் நாள் பூச நட்சத்திரத்தில் அருட்—ரும்சோதி

வடிவில் ஆண்டவனை வழிபடவும்,தைப்பூசத்தன்று ஏழுதிரை நீக்கி ஏழு முறை

சோதி தரிசனத்திற்கும் வழிவகுத்த இவர் யோகம் தியானம் இவற்றை

வலியுறுத்தவில்லை,பக்தியால் யோக நிலைகளில் ஏறலாம், இறைத்தன்மை

ஈட்டலாம் என்று போதித்தார்,

இந்த ஏழுதிரைகளை மகான் அரவிந்தர்

PRIMAL IGNORANCE

CONSTITUTIONAL IGNORANCE

PSYCHOLOGICAL IGNORANCE

TEMPORAL IGNORANCE

EGOISTIC IGNORANCE

COSMIC IGNORANCE

PRACTICAL IGNORANCE

என அழைக்கிறார் இவைபற்றி அவர் எழுதிய LIFE DIVINE நூலில் நீங்கள் படிக்கலாம்.

(P.325)

இந்த எழுநிலை வளர்ச்சியை KEN WILBER- ‘PHYSICS, MYSTICISM, AND THE

HOLOGRAAPHIC PARDIGM என்ற கட்டுரையில்

1.PHYSICAL -Non living matter/energy

2.BIOLOGICAL -living, pranic,Sentient matter/Energy

3.MENTAL -Ego,logic,thinking

4.SUBTLE -architypal,trans individual, intitutive

5.CASUAL -formless radiance, perfect transcendence

6.ULTIMATE -Conciousness as such, the source,and nature

of all other levels

எனவும் குறிப்பிடுகிறார். இவையெல்லாம் ஆழ்ந்த சிந்தனைக் குறியவை.

HOLOGRAPHIC PARADIGM AND OTHER PARADOXES KEN WILBER (P.159)

வள்ளலாரின் பேருபதேசம்

ஸ்ரீ முக வருஷம்,ஐப்பசி மாதம்,7ஆம் நாள்,புதவாரம், பகல் 8 மணிக்கு,மேட்டுக்குப்பம்

என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதன் முதலில் கொடி கட்டினவுடனே

நடந்த நிகழ்ச்சியின் குறிப்பு.

இங்குள்ள நீங்கள் எல்லாரும் இதுவரைக்கும் இருந்தது

போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள்,இது முதல் சாலைக்கு

ஆண்டவர் போகின்ற பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் வரையில் நீங்கள்

எல்லாரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள் அந்த விசாரணை

எது வென்றால், நம்முடைய நிலை எப்படிப்பட்டது ? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிகின்ற

தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது ? என்று விசாரிக்கவேண்டியது. அதற்குத்தக்கபடி,

நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும்

ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்யதரத்தில்

போதுமான வரையில் சொல்லுவார்-அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையிலிருங்கள்.

அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம். இவ்விசாரைணை முகத்திலிருந்தால்,

நமது ஆன்மஅறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத் திரைகளில்

அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கி விடும்.

அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிகவிரைவில் நீங்கிப்போய்விடும்.

அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான

பசுமை இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென

ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும்

இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது

இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற

முயற்சியுடனிருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம்.

அவ்விசாரம் பரம், அபரம் என்ற இரண்டு வகையாயிருக்கின்றது. இவற்றில்

பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக

விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் வி-சாரம் செய்து

கொண்டிருக்கின்றானே யென்றால்,அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை

விசாரமுமல்ல. ஏனெனில், விசார மென்கின்றதுற்குப் பொருள், வி-சாரம் என்பதில்

வி-சாதாரண உலக _விசாரத்தை மறுக்க வந்தது, அது மேலும் பரலோக

விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவது

போல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய

ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்கமுடியாது.

அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவதில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில்

உண்டு பண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம்

செய்கின்றதிலும் தெய்வத்தை நினைகின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும்.

யோகிகள் வனம், மலை, முழை முதலியவற்றிற்குப் போய்,நூறு, ஆயிரம் முதலிய

வருஷகாலம் தவஞ் செய்து, இவ்உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள்.

இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும்,

தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும், இதை விடக் கோடிப்

பங்கு, பத்துகோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.

எவ்வாறெனில், ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசார மின்றிப் பர விசாரிப்புடன்

ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம்

செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதலால், இவ்வுலகத்தில் வி-சார மென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று

வழங்கி, அதைத் துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது.

அவர்கள் பண்ணுகின்றது-துக்கமே விசார மென்கின்றது. அது தப்பு,

அவ்வர்த்தமுமன்று. சார மென்கின்றது துக்கம்.வி-சார மென்கின்றது துக்க

நிவர்த்தி. வி-உபசர்க்கம். சாரமென்கின்ற துக்கத்தை நிவர்த்தித்து ஆதலால்,

விசார மென்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது.

ஆதலால் இடைவிடாது நாம் விசார வசத்தராயிருக்க வேண்டியது. மேலும் வி-சார

மென்பது:- வி-விபத்து; சாரம் நீக்குதல், நடத்தல். ஆதலால்

இடைவிடாது நன்முயற்சியின்கண் பயிலுதல் வேண்டும்.

மேலும், சிலர் ‘இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே!

இத்தருணத்தில் முயற்சி செய்வானேன் ? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை

நாம் பெற்றுக்கொள்ளப்படாதோ ? ‘ என்று வினவலாம். ஆம், இஃது தாம் வினவியது

நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றதும் சத்தியந்தான். நம்மவர்களின் திரை

நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப்

பெற்றக்கொள்ளுகின்றதும் சத்தியந்தான். ஆனால், முன் சொன்ன ரகசம்பந்தமான

பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்:- அசுத்தமாயாதிரை,

சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்பாகத்திலொரு கூறும்

மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். இவை கீழ்ப்பாகத்திலுள்ளது

அசுத்தமாயதிரை. மேற்பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில்

அசுத்தமாயாதிரை இகலோக போக லட்சிய முடையது. சுத்தமாயாதிரை பரலோக

சாத்தியத்தையுடையது. இவற்றில் ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்ற போது,

முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்ப்பாகத்திலிருக்கின்ற அசுத்தமாயை

யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார். ஆதலால், அக்காலத்தில்

நாம் அத்திரை நீங்கியவுடன் கூடிய வரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக

இருக்கலாமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுகொள்ளுகிறதற்குக் கூடாது.

மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவயவையும்

ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே

மேலேற வேண்டும்.

மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும்

அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின.

ஆதலால் நாம் எல்லாரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே

இருந்தால், ஆண்டவர் வருகின்றபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள

அசுத்தமாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கின்ற சுத்தமாயையினுடைய பச்சைத்

திரையும் நீங்கிப்போய்விடும். கருமையிற் பச்சை வண்ண முடையது அசுத்தமாயாதிரை.

பொன்மையிற் பச்சை வண்ண முடைய சுத்தமாயாதிரை. நீங்கினபிறகு, மற்ற எட்டுத்

திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத்

திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும்,இது நீங்கினவுடனே ஒருவன்

பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப்

பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம்

வைத்துக்கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள்

எதனிலும் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது

குழுஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை

இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப் போட்டு

மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லட்சணத்தை

அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில், கைலாசபதி என்றும் வைகுண்டபதி

என்றும் சத்தியலோகாதிபதி யென்றும் பெயரிட்டு, இடம், வாகனம், ஆயுதம், வடிவம்,

ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக

இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். ‘தெய்வத்தக்குக் கை, கால் முதலியன

இருக்குமா ? ‘ என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.

இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று

பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை

மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஒர்

வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை.

அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்க வில்லை. இதுவரைக்கும்

அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில்

ஏகதேச கர்மசித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள்.அதற்காக

ஒவ்வொரு சித்திக்கும் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக்கொண்டால்,

அற்ப சித்திகளை அடையலாம். அதற்காக அவற்றில் லட்சியம் வைத்தால்,

ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கின்ற லட்சியம் போய்விடும்.

ஆண்டவரிடத்தில் வைத்த லட்சியம் போய் விட்டால் நீங்கள் அடையப்போகின்ற பெரிய

பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சிசெய்து, அவ்வளவு காலம் உழைத்து,

அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம்

அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லட்சியம்

வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லட்சியம் வைக்க வேண்டியது. முன் சொன்ன

ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெருவிண்ணப்பத்தாலும்

இயல் வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள் விளக்கமாலைப்

பாசுரத்தாலுமுணர்க. *

*இயல்வே தாகமங்கள் புராணங்கள் இதி காசம்

இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்

மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம் என அறிந்தார்

மகனே நீ நூலனைத்தும் சாலம் என அறிக

செயல் அனைத்தும் அருளொளியால் காண்கஎன எனக்கே

திருவுளம்பற்றிய ஞான தேசிகமா மணியே திரு அருட்பா 4176

மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்.

இது போல் வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம் முதலியவைகளில்

சொல்லிருக்கின்ற இலக்கணங்கள் குற்றமே. எவ்வாறெனில் தொண்ணூறு

தொள்ளாயிரம் என்கின்ற கணிதத்தின் உண்மையை நான் சொன்ன பிறகு தெரிந்து

கொண்டிர்களல்லவா ? இப்படியே ஒன்று, இரண்டு முதல் நூறு முதலான

இலக்கங்களுக்கும் உகர இறுதி வருவானேன் ? ஒருவாறு சித்தர்கள் காரணப் பெயராக

இட்டிருக்கிறார்கள். தொல்:- நூறு தொண்ணூறென்றும்,தொல்:- ஆயிரம்

தொள்ளாயிரமென்றும் வழங்குகின்றன. தொல் என்பது ஒன்று குறையத் தொக்கது.

தொன்மை தொல்லெனப் பிரிந்தது. வழக்கத்தில் தொள்ளாயிரம் தொண்ணூறு

என மருவியது. இதற்குப் பத்திடத்திற்கு ஒரிடம் குறைந்த முன் ஆயிரமென்றும்,

ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க. இப்படி நான் சொன்னது போல்

சொன்னால் சிறு குழந்தைகள் கூட அறிந்து கொள்ளும்.

இதுபோல், சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம்,

சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம். அவற்றில்

தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கின்றதே அன்றிப் புறங்கவியச்

சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால்

அவற்றில் லட்சியம் வைக்கவேண்டாம். ஏனெனில், அவைகளிலும்- அவ்வச்சமய

மதங்களிலும் அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமே யல்லாது, ஒப்பற்ற

பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக்

கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும்,

இவைகளுக்கெல்லாம் சாட்சி நானேயிருக்கின்ளறேன். நான் முதலில் சைவ

சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவுவென்று அளவு

சொல்லமுடியாது. அது பட்டணத்துச் சவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும்

இன்னும் சிலருக்கும் தெரியும். அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது.

பார்த்தீர்களா! அப்படி லட்சியம் வைத்தற்குச் சாட்சிவேறே வேண்டியதில்லை.

நான் சொல்லி யிருக்கிற-திருவருட்பாவில் அடங்கியிருக்கிற ஸ்தோத்திரங்களே

போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும்

சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாட்சி சொல்லிவிடும்.

ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதுதிருந்த தென்றால்,

அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

இப்போது ஆண்டவர் என்னை ஏறாதநிலைமேல் ஏற்றியிருக்கின்றார்.

எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.

ஆதலால் நீங்களும் விட்டு விட்டிர்களானால், என்னைப் போல்

பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக்

கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ?

பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த

லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லட்சியம்

தூக்கி விடவில்லை. என்னை இந்த இடத்தக்குத் து‘க்கிவிட்டது யாதெனில்;

அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று

வாசகப் பெரு விண்ணப்பத்தினும், ‘எத்தேவரையும் நின் சாயையாய்ப்

பார்த்ததேயன்றித் தலைவவே றெண்ணியதுண்டோ* ‘

*மாயையாற் கலங்கி வருந்திய போதும்

வள்ளல் உன் தன்னையே மதித்துன்

சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்

தலைவ வேறெண்ணிய துண்டோ

தூயபொற் பாதம் அறியநான் அறியேன்

துயர் இனிச் சிறிதும்இங் காற்றேன்

நாயகா எனது மயக்கெலாம்தவிர்த்தே

நன்றருள் புரிவதுன் கடனே, -திருவருட்பா 3635.

என, ‘தேடியதுண்டு நினதுருவுண்மை ‘ என்னும் தொடக்கமுடைய

பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப்

பெருநெறி ஒழுக்கம் யாதெனில். ‘கருணையும்

சிவமே பொருளெனக் கானும் காட்சியும் பெறுக ‘ **

** கருணையும் சிவமே பொருள்எனக் காணும்

காட்சியும் பெறுகமற் றெல்லாம்

மருள் நெறி எனநீ எனக்கறி வித்த

வண்ணமே பெற்றிருக் கின்றேன்

இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்

எய்திய தென்செய்வேன் எந்தாய்

தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்

சிறுநெறி பிடித்த தொன்றிலையே. –திருவருட்பா 3503

என்றது தான்.

என்னை யேறாநிலைமிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு.

தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

அந்தத் தயவுக்கு ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும்.

தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு

அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது.அது அந்த ஒருமையினாலேதான்

வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுட னிருங்கள். என்னிடத்தில் ஒருவன்

வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படி யிருந்தாலும், அவனுக்கு நல்ல வார்த்தை

சொல்லுவேன்; மிரட்டிச் சொல்லுவேன்;தெண்டன் விழுந்து சொல்லுவேன்;

பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்; அல்லது ஆண்டவரை நினைத்துப்

பிரார்த்தனை செய்வேன்.இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து

விடுவேன்.

நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும் இராத்திரிகூட ‘நான் இல்லாமல்

இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டர்களே என்று,என்று… ‘ ஆண்டவரிடத்தில்

விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திரம்

மல்ல. உலகத்திலிருக்கின்ற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக்

கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்

எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும்

நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்,

இப்போது நீங்கள் இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு

தாழ்ந்த மனுஷ்யர்களா யிருந்தாலும்-சாலைக்குப் போகக் கொஞ்ச தின

மிருக்கின்றது-அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு

வருவதோடுகூட,மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்வித தந்திரமாவது

செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்திற்கு

அப்படி செய்து கோண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்தில் உள்ள

எல்லா ஜ“வர்களும் நன்மையடையப் பிரார்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்

கொண்டும் வருகின்றேன். ஆதலால் நீங்கள் அப்படிச் செய்துகொண்டிருங்கள்.

சமயந் தவிர மதங்களில் உள்ள வேதாந்தி, சித்தாந்தி, யென்று

பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை அறியாது, சமயவாதிகளைப் போலவே

ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறாரக்ள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும்

நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை

‘தெய்வத்தை தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்மெனச்

சுற்றுகின்றார்கள், ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து

கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்! ‘என்று நான் உள்ளும் புறமும்

பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், ‘ இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை

ஏன் தெரிந்துகொள்ள வில்லை யென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது

அந்தப் பதார்த்ததினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை

போகாது. அதுபோல்,தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில்

பிரியம் வராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ளவேண்டு மென்கிற முக்கிய

லட்சியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.

அந்த விசாரம் செய்வது எப்படியென்றால் அண்டத்தில் சூரியன் சந்திரன் நட்சித்திரங்கள்-

இவைகள் எப்படிப்பட்டன ? இவைகளினுடைய சொரூபசுபாவம் என்ன ?

இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார் ? இத்தேகத்தின்கண்

புருவம் கைம்மூலம் இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன் ?

நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்ப தென்ன ?

கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந்நகம் வளர்தலும்-இவை போன்ற மற்றத்

தத்துபங்களினது சொரூப, ரூபசுபாவங்களும் என்ன வென்றும் பிண்ட விசாரமுஞ் செய்துகொண்டிருங்கள்.

இப்படி இடைவிடாது விசாரஞ் செய்துகொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக்

குறித்துக் ஏளனமாகச்சொல்லுவார்கள். அப்படிச் சொல்வது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில்,

அவர்களுக்கு உண்மைதெரியாது. ஆதலால் நீங்கள் அதை லட்சியம் செய்யக்கூடாது.

இப்படியே ‘காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் ஆணுக்குக் கடுக்கனிடுதலும்

பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்கு சம்மதமானால் காதிலும் மூக்கிலும்

அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா ‘ என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகின்ற

பட்சத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா ? இப்படி விசாரித்துப்

பிரபஞ்ச போதத்தின் கண் அலட்சியம் தோன்றினால், நிராசை உண்டாம், ஆதலால், சரியை,முதலிய

சாதகம் நான்கில், நான்காவது இனத்தில் சரியை, கிரியை யோகம்,ஞானம் என்கின்ற நான்கில்

மூன்றாவது படியாகி ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும் படி உண்டாகின்றது.

ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.

இவ்விசாரஞ் செய்துகொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே கண்டமாக உங்களுக்குத்

தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார்.

ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். இரண்டரை வருஷமாக நான் சொல்லிக்கொண்டு வந்தேன்.

இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். நீங்கள் இது வரைக்கும்

இருந்தது போல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம்

விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.

மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து,

அக்குறிப்பையும் வெளிப்படையாகத் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது

போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, ஆறு, எட்டு, பத்து,

பதின்மூன்று, பதினைந்து, பதினாறு இருபத்து நான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய்

அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வரகின்றது. அவ்வவ்மந்திரங்களின் அர்த்தம்

பலவாக விரியும் ஆதலால்… நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமே

யன்றி வேறில்லை. இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக

விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்கள் செய்து அற்ப பிரயோஜனத்தை பெற்று,

முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சி யெடுத்துக் கொண்டு, பின் முடிவான

சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.

இத்தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி, எல்லோரும் மேலான இன்பத்தை அடையும்

பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை

தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை–எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம்,

எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த உண்மையறிவனுபவானந்த இன்பத்தை

நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம், திரிபு, மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து

பொங்கிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன் குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன்.

நமது ஆண்டவர் கட்டளை யிட்டது யாதெனில் நமக்கு முன் சாதனம் கருணை யானதினாலே,

ஆண்டவர் முற்சாதனமாக

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை

ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். பேரறிவேயாம்.

இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத்

தடையில்லை. ‘சந்தமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும் ‘ என்னும் பிரமாணத்தால்

உணர்க.

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரியவொட்டாது, அசுத்த

மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும்

இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனபவமும்

கேட்டறியாத கேள்வியும் நாம்கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து

வந்திருப்பார்கள் ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்

தருணமே. ஆதலால் இத்தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

இதற்குச் சாட்சியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக்கொண்டது.

அக்கொடி இப்போதுதான் கட்டிக்கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்; நமது நாபி

முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடியிருக்கின்றது: அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில்

ஒர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்;

அச்சவ்வின் கீழ் ஒர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது இக்கொடி நம் அனுபவத்தின்கண்

விளங்கும். இவ்அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமான

கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண்தோன்றும்.

உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துகொள்வாரில்லை.

கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்துகொள்வார்கள். முன் உள்ளவர்கள்

உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும்

தெரிவித்தார். தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்போது நான் சொல்லிவந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்துகொண்டிருங்கள்.

அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான

உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம்,

சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.

எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி, முதலான ஆப்தர்கள் செய்யபட்ட உதவி

எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான

இடம் இந்த இடம். (சித்திவளாகம் என்கின்ற மேட்டுக்குப்பம்) இஃது ஆண்டவர்

கட்டளை.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

திருச்சிற்றம்பலம்

பேருபதேசம் முற்றிற்று.

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்