ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

வெங்கட் சாமிநாதன்


மகிழ்ச்சிதான். 35 வருடங்கள் இடைவெளிக்குப் பின்னேயே ஆகட்டும். பரவாயில்லை. நமக்கோ தமிழுக்கோ, தலை குனிவு இல்லை முன்னைப் போல. ஜெயகாந்தனை நமக்குத் தெரியுமானால், இது அவரை வந்தடைந்தது தான். அவர் தேடிச் சென்றதல்ல. முயற்சி செய்தவர்கள் இப்போது எரிச்சலும் சலிப்பும் அடையக்கூடும். சாகித்ய அகாடமி விவகாரம் என்றாலாவது, சரி இப்போ என்ன மோசம் போயிற்று, அடுத்த வருடம் இன்னும் வேறு வழியில் முயற்சி செய்து பார்க்கலாம் என்று மனது சமாதானமடையலாம். ஆனால் இது காலம் நிறைய எடுக்கும். இப்போது போல முப்பத்தைந்து வருடங்கள் ஆகாமல் இருக்கலாம். ஆனாலும் எவ்வளவு வருடங்கள் காத்திருப்பது ? என்று ஆத்திரப் படலாம். இந்த கவலைகள் எதுவுமே இல்லாது, எழுதுவது நின்று பத்து பதினைந்து வருடங்கள் ஆன போதிலும் எந்த கவலையும் இல்லாது, கேள்வி கேட்பவருக்கு தன் அகங்காரம் குறையாது, வாசாலகமும், கேட்க கவர்ச்சியான இனிய தமிழில் ஏதோ அப்போது தோன்றும் பதில் ஒன்றைச் சொல்லி வாயடைத்து விடும் சாமர்த்தியத்தோடு எப்போதும் போல் காலம் கடத்திவரும்போது, இப்படி ஒன்று தன் வாசலைத் தட்டுகிறது என்றால்….அவரது ரசிகர்கள் பக்தர்கள் எங்கும், எப்போது உண்டு. ஜெயகாந்தனுக்காக தாமே முயல்பவர்கள் உண்டு. அதில் பழுது சொல்வதற்கில்லை. ஜெயகாந்தன் எவர் வீட்டு வாசலிலும் காத்துக் கிடந்தார், ஒரு வேண்டுதலோடு, என்பதில்லை.

Colourful என்பார்களே, அந்த மாதிரியான மனிதர். எத்துறையில் கால் பதித்தாலும். தன் சுவடு பதித்தவர். அவ்வப்போது ஏன் இப்படிச் செய்கிறார் ? இது ஜெயகாந்தன் அல்லவே என்று நாம் புருவம் சுருங்கச் செய்த சமயங்கள் உண்டு. ஆனால் பின்னர் அதை மீறி எழுந்து மறுபடியும் தன் கம்பீரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டவர். சினிமா, அரசியல், பத்திரிகை, இலக்கியம் என்று எத்துறையில் தன்னை அவ்வப்போது அவர் ஈடுபடுத்திக் கொண்டாலும், கட்சிப் பிரசாரம், தேர்தல், சினிமா என்ற ஈடுபாடுகள் எல்லாம் தமிழ் நாட்டில், தனி மனிதனையும் சமூகத்தையும், இந்நாட்டின் பண்பாடு, நாகரீகம் எல்லாவற்றையும் žரழிக்கவே செய்கின்றன என்றாலும், அச்žரழிவில் அவர் பங்கு பெற்றதும் கிடையாது. அவர் தன்னைக் காத்துக் கொண்டவர். அரசியலிலும், தேர்தல் பிரசாரத்திலும் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது, பிராபல்யம் பெற அல்ல. தீய சக்திகள் என்று அவர் கண்டவற்றை தன்னால் இயன்ற அளவு எதிர்த்துக் குரல் கொடுக்கத்தான். தமிழ் நாட்டில் கழகங்களை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. எதிர்ப்புகள் எந்த வடிவிலும் எங்கும் எந்நேரமும் வரும். சொல்லிலும், செயலிலும், மிரட்டலாகவும், வன்முறையாகவும் வரும். வந்தன. காயம் பட்டதுமுண்டு. ஆனால் நாட்டின் விதிக்கப் பட்ட சரித்திரத்தை மாற்றத்தான் முடியவில்லை. எதிர்க்கப் பட்ட சக்திகள் தான் பலம் பெற்றுள்ளன. சினிமா அரசியல், கல்வி, பண்பாடு, எல்லாவற்றிலும். ஆனால் அறிவார்த்தமும், சமூக பிரக்ஞையும் கொண்ட மனிதன் குரல்

எழுப்பத்தான் முடியும், பெறுவது வெற்றியோ தோல்வியோ அது அவன் கையில் இல்லை

தனக்கென ஒரு சிந்தனையும், வாழ்முறையும், செயல் பாடும் கொண்ட மனிதன், தன் எழுத்தில், தான் சார்ந்த கலையில் தடம் பதித்துள்ளான். தன் சிந்தனையே பெரும்பாலும் தன் எழுத்துக்களாக, தான் படைத்த மனிதர்களாக, உலகமாக ஆகிவிட்டது பற்றிக் கவலையில்லை. அல்டஸ் ?க்ஸ்லி, ஜேம்ஸ் ஆர்வெல் என்று அதற்கு முன்னோடிகள் உண்டு. சிந்தனையே உருவான அவர் படைபுலக அம்மனிதர்கள், ஜெயகாந்தனைத் தான் அடையாளப்படுத்துவார்கள். முற்போக்கு அல்லது திராவிட இயக்கப் பிரசாரங்களை அல்ல. தம் சிந்தனையையே தம் குரலாக உயர்த்திப் பேசுகிறவர்கள். அது ஒரு காலத்தில் கவர்ச்சியாக இருந்தது. பிராபல்யத்தையும் புகழையும் ஒரு சேரத் தந்தது. அந்த கால கட்டம் இப்போது மாறிவிட்டது போலும். தன் செயல்பாடுகள் உச்ச கட்டத்தில் இருந்த காலத்தில், தான் தொட்ட எதிலும் அது கொண்டிருந்த பிரவா ?த்தில் மிதந்தவர் இல்லை. தொட்டவற்றின் குணத்தையும் மாற்றிக்காட்டினார். சில துறைகளில் அவர் தொடர்ந்து இயங்க முடியாது போனதற்குக் காரணம், அத்துறைகளின் பிரம்மாண்ட அசுரத் தனம்.

ஜெயகாந்தனது தீவிர செயல் பாடு என்பது சுமார் பதினைந்து வருடங்களுக்கு முந்திய கதை. அவரது குரல் இன்னமும் கம்பீரம் நிறைந்தது தான். அக்குரல் கொண்டு வரும் தமிழ், சக்தியும் தாக்கு வலுவும் கொண்டது. அவரே தன் குரலலைக் கேட்பவராகவும் இருந்து மனம் மகிழும் குணம் கொண்டது. வெற்று அலங்காரங்களால் சவமாக்கப்பட்ட தமிழ் அறுபது வருடங்களுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு கொம்மாளமிடும் காலத்தில், அலங்காரங்களால் அல்ல, சக்தி வாய்ந்த சிந்தனையாலும், சொற்களாலுமே, தமிழுக்கு உயிரூட்டும் ஒருவரை ஞான பீடம் நினைவு கொண்டு கெளரவிக்கிறது. ஜெயகாந்தனுக்கும் முன்னால், அது தி.ஜானகிராமனையும், லா.ச.ராமாம்ருதத்தையும் நினைவு கொண்டிருக்க வேண்டும். தமிழ் சமூகம் அவர்களை முன்னிருத்தவில்லை. தவறு நம்மது. மறுபடியும் இன்னொரு 1976-ம் வருடம் நிகழாதது கண்டு நாம் நிம்மதி கொள்ளலாம். யாரும் நம்மைப் பார்த்ததும் முகம் திருப்பி கேலிப் புன்னகை புரிய மாட்டார்கள்.

ஞான பீடம், ஜெயகாந்தனை தன் தளத்திற்கு எடுத்துச் செல்லும் போது, ஐம்பதுக்களிலிருந்து எழுபதுகள் வரை இலக்கிய தளத்தில் புயல் வீசிய ஜெயகாந்தனை மாத்திரமே எடுத்துச் செல்லும். மற்ற பல தளங்களில், துறைகளில், விகசித்த ஆளுமையும் சேர்த்துத் தான் ஜெயகாந்தன். அந்த ஜெயகாந்தன் அத்தளங்களில் தெரிய வராது போகலாம்.

நான் இதை முடிக்கும்போது, இப்போது சற்று முன் வந்த India Todaday (ஆங்கில பதிப்பு) வந்தது. அதில் இரண்டு தமிழ் நாட்டவர் பற்றி குறிப்புகள் தரப்பட்டுள்ளன. ஒன்று ஜெயகாந்தன் ஞானபீட பரிசு பெற்றது பற்றி. ஒரு பத்தியில் நாலைந்து வரிகள், சிறிய புகைப்படத்துடன். மற்றது, மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் பற்றி, பக்கத்தின் அனேகமாக் கால் பகுதியை நிரப்பி பெட்டி கட்டி, பெரிய அளவிலான புகைப்படத்துடன். இது இன்றைய காலத்தின் கோலம். சமூக மதிப்புகள் சரிந்துள்ளதின் அடையாளம். சமூகத்திற்கு எந்த வித பங்களிப்பும் தராது, மக்களுக்கு பாமரத்தனமான கேளிக்கைகள் காட்டித் தம்மை வளர்த்துக் கொண்டவர்கள் தமிழ் சினிமா நடிகர்கள். ஜெமினி கணேசனுக்காக நாம் கொஞ்சம் இரக்கப்படலாம். அவரதுகாலத்திய, இப்போதைய சினிமா நடிகர்களைப் போல கேளிக்கை என்று சொல்லி சமூகத்தை சாக்கடையாகிவிடவில்லை. ஆனால் ஜெயகாந்தன் தான் கண்ட சமூகத்தின் பலவீனங்களை வைத்துப் பிழைத்தவர் இல்லை. பல துறைகளில் அதன் பார்வைகளை, மதிப்பீகளை மாற்ற உயர்த்த முயன்றவர், தம் எழுத்துக் களால், சிந்தனைகளால்.

வெங்கட் சாமிநாதன்/28.3.05

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்