ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

சுமதி ரூபன்


தீர்மானிக்கப்பட்ட நிராகரிப்பினால் வாசித்தல் இன்றியே சில இலக்கியவாதிகளின் படைப்புகள் கடுமையான விமர்சனத்திற்குள்ளாவது வழக்கம். படைப்புத் தெரிதல் என்பது படைப்பாளியின் தனிப்பட்ட குணாதிசயங்களைத் தாண்டிது.

அந்த வகையில் இப்படியான “றீசனபிள் டவுட்” ஐத் தாண்டி நிராகரிக்கப்பட்டு வரும் எழுத்தாளர்களில் தற்போது முன்னணியில் நிற்பவர் ஜெயமோகன்.

ஜெயமோகனின் அனைத்துப் படைப்புக்களையும் படித்தவள் நான். அவரின் எழுத்தோட்டம் சொல்லாடல் என்பவற்றில் எனக்கு நிறம்பவே நாட்டம் இருக்கின்றது. இது வெறும் குப்பை என்று துாக்கிப் போடும் அளவிற்கு அவரின் படைப்புக்கள் எதுவும் இல்;லை. ஞுனரஞ்சகப் பாணியில் எழுதப்பட்ட “கன்னியாகுமரி” கூட ஒரு பெண்ணின் காத்திரமாக பக்கத்தைத் தொட்டுச் சென்றுள்ளது. இந்த வகையில் காரணமற்ற நிராகரிப்பு ஜெயமோகன் மேல் எனக்கில்லை.

ஏழாம் உலகம் –

அண்மையில் ஜீவனை உலுக்கும் எழுத்தோட்டம் கொண்ட இரு நாவல்களால் நித்திரை இன்றி உழன்றுள்ளேன். ஒன்று யூமா வாசுகியின் “ரெத்த உறவு” அடுத்தது ஜெயமோகனின் “ஏழாம் உலகம்”

ஏழாம் உலகம் படித்துப் பாதிக்கப்படாத வாசகர் ஒருவர் இருப்பின் அவர் திறந்த பார்வையுடன் வாசிக்கவில்லை இல்லாவிடின் மனதற்ற மனிதர். ஏழாம் உலகம் என்றால் என்ன ? நாம் – அதாவது சாதாரண வாழ்க்கையில் இயந்திரமாகச் சுழன்று கொண்டு தம்மை முழுமையானவர்களாக பிரகடனப்படுத்தியபடி இருக்கும் எம்போன்றோர் அறியாத புதிய உலகம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் இந்தியா சென்றிருந்தபோது கன்னியாகுமரியில் விவேகானந்தாகேந்திராவில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். அனேகமாக அங்கு இருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் கடற்கரைக்குச் செல்வதுண்டு. கோயில் வீதியில் வழமை போல் பல பிச்சைக்காறர்கள் இருந்தார்கள். அவர்களில் முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி காலில் மூன்று மாதக் குழந்தை அளவிற்கு கழலையுடன் இருந்தாள். என்னால் அவளை முகம் கொடுத்துப் பார்க்க முடியவில்லை. எனது பிள்ளைகளிடம் பணத்தைக் கொடுத்து அவளுக்குக் கொடுக்கும் படி சொன்னேன். அடுத்து வந்த நாட்களில் அவளைத் தவிர்ப்பதற்காகவே நான் போகும் பாதையை மாற்றிக் கொண்டேன். அந்தக் கழலையை அவளின் காலில் இருந்து அகற்றுவதற்கு எவ்வளவு பணம் செலவாகப்போகின்றது. அரசாங்க மருத்துவமனையில் இலவசமாகக் கூடச் சத்திர சிகிச்சை செய்து அகற்றி விடும் வாய்ப்பு இருக்கக் கூடும். இது பற்றி நான் எனது இந்திய நண்பனுடன் கதைத்த போது அந்தப் பெண் வாழ்க்கையை ஓட்டுவதற்கு அந்தக் கழலை முக்கிய மூலதனமாகக் கூட இருக்கலாம். உங்களைப் போல் அவள் மேல் இரக்கங்கொண்டு எத்தனையோ பேர் பணம் கொடுக்கப்போகின்றார்கள். அதனை அகற்றிவிட்டால் அவள் எப்படி வாழ்வது ? என்றார். என் நண்பனுக்கு மூளையில் ஏதோ பழுதோ என்று கூட நான் அப்போது எண்ணியதுண்டு.

உலகத்தின் அனைத்து அழுக்குகளும் நிச்சயம் அடையாளப்படுத்தப்படல் வேண்டும். “மாயா” திரைப்படம் ரொறொண்டோ சர்வதேச திரைப்படவிழாவில் காட்டப்பட்ட போது எம் நாட்டு அழுக்குகளைப் படம் பிடித்து வெளிநாட்டுக்குக் காட்டுகின்றாரே என்று இயக்குனர் திக்விஜய் மேல் சினம் கொண்ட இந்தியர்கள் அதிகம். மறைத்து மூடுவதனால் என்ன லாபம் ? இந்திய அரசு தலையிட்டு இப்படியான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லப் போகின்றதா ? வெளியில் வரும்போது தானே சில ஊடகங்களேனும் தலையிடுக் கேள்வி எழுப்புகின்றன.

அதே போன்று தெரியாத ஒரு உலகத்தை மக்களின் பார்வைக்கு வைத்துள்ளார் ஜெயமோகன். தற்போது பிச்சைக்காறர்கள் மேல் எனக்கிருந்த பார்வை நிச்சயமாக மாற்றம் கண்டு விட்டது. உடல் அங்கவீனமுற்றோர் குடும்பத்தினால் நிராகரிக்கப்பட்ட போது தமது உடலைப் பாவித்து உழைக்க முடியாத பட்சத்திலும் பிச்சை எடுக்க வருகின்றார்கள் என்பதிலிருந்து அங்கவீனமுற்றோரில் பலரை அவர்களை பிச்சை எடுக்க வைத்துப் பணம் பண்ண ஏஜெண்டுகள் உருவாக்குகின்றார்கள் எனும் கசப்பான உண்மை நெஞ்சை நெருட வைக்கின்றது. (இத்தகவல் எந்த அளவிற்கு உண்மை ?)

சுனாமி அனர்த்தத்தின் போது கன்யாகுமரியில் நான் கண்ட பிச்சைக்காறர்கள் அழிந்திருந்தால் நல்லது என்று என் மனம் எண்ணுமளவிற்கு ஏழாம் உலகத்தின் பாத்திரங்களும் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன.

மற்றைய ஜெயமோகனின் நாவல்கள் போலில்லாது ஏழாம் உலகம் மிகவும் எளிமையான எழுத்து நடையைக் கொண்டது.

குறைப்பிறவிகளை புணர வைத்து அதன் மூலம் உருவாகும் குறைப்பிறவிகளைக் கொண்டு வியாபாரம் செய்யும் பண்டாரமும் அவரது குடும்பமும் இந்தக் குறைப்பிறவிகளை மனிதர்களாகக் கூடக் கணிப்பதில்லை. இவர்கள் “உருப்படி” என்றே அழைக்கப்படுகின்றார்கள். பண்டாரம் தனது குடும்பத்தின் மேல் வைத்திருக்கும் பாசமும் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும் போது “நான் யாருங்கு என்ன தீங்கு செய்தேன் என்னை ஏன் இறைவன் இப்படிச் சோதிக்கிறான்” என்ற அவரது அறியாமை அலறலும் சினத்தை ஏற்படுத்தினும் பண்டாரத்தை முற்று முழுதாக ஒரு குரூபியாகப் படைப்பாளி சித்தரிக்கவில்லை. குறைப்பிறவிகளும் பண்டாரத்தை தமது முதலாளியாகக் கொண்டு அவர் மேலும் அவர் குடும்பத்தின் மேலும் பாசம் கொண்டவர்களாகவே காட்டப்படுகின்றார்கள்.

ஒரு கூட்டுக்குடும்பம் போல் இந்தக் குறைப்பிறவிகள் ஒன்றாகத் தமக்கான ஒரு உலகத்தை வடிவமைத்து அவர்களுக்குள் நுண்ணிய உணர்வுகளுடன் மோதுவது மிகவும் நகைச்சுவைாயாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. பொலிஸ்காறனின் வேட்கையைத் தீர்க்க இளம் பெண் உருப்படி அனுப்பப்படுவதும். பிறந்த குறைப்பிறவிக் குழந்தையை வெய்யிலுக்குள் கிடத்தி உணவின்றி அழ வைத்துப் பார்வையாளர்களின் இரக்கத்திற்குள்ளாக்கிப் பணம் பெறுவதும்> தனக்கு உபயோகப் படாது என்று எண்ணும் உருப்படிகளை வேறு ஏஜென்டிற்கு விற்று அவர்களைப் பிரிப்பதும் படிக்கும் போது ஜீரணிக்க முடியாத உணர்வலைத் தாக்கம் தரவல்ல பக்கங்கள்.

நாவலின் முடிவு தந்த அதிர்வு பல நாட்களாக மனஉளைச்சலை எனக்குள் விட்டுச் சென்றது. தொடர்ந்து குறைஜீவிகளை உருவாக்கித் தரும் முத்தம்மை எனும் பெண் பண்டாரத்தின் முக்கிய சொத்து. குறிப்பிட்ட கால இடைவெளியில் முத்தம்மையை ஒரு குறைப்பிறவியுடன் கட்டாயமாகப் புணர வைத்து குறைப்பிறவிக் குழந்தையை உருவாக்கிக் கொண்டிருக்கும் பண்டாரம் இறுதியில் அடுத்த குழந்தையை உருவாக்க வேண்டி ஒரு பாலத்தின் அடியில் இரவு நேரம் ஒரு குறைப்பிறவி இளைஞுனிற்கு மது அருந்தக் கொடுத்து முத்தம்மையை அவன் மேல் போட்டு விட்டுப் போகின்றார். அவன் அவளைத் தழுவும் போது எதிர்க்கத் திராணியற்ற நிலையில் முத்தம்மை கதறுகின்றாள் “ஓற்றை விரல் ஒற்றை விரல்” என்று. தன் பிரசவத்தில் பிறந்து பிரிக்கப்பட்ட ஓற்றை விரல் மகனுடன் இன்னுமொரு குறைப்பிறவியை உருவாக்க முத்தம்மை புணர வேண்டிய கட்டாயம். தாய் என்று அறியாத குறைப்பிறவி இளைஞுன் போதையில் தனது தாயுடன் புணருவதாக நாவல் முடிகின்றது.

விமர்சனங்கள் மிகவும் குரூரமான எழுத்து முறை என்பதாயும் இல்லாத ஒரு உலகத்தை எழுத்தாளர் கற்பனையில் கொண்டு வந்துள்ளார் என்றும் வைக்கப்பட்டிருந்தன. ஏழாம் உலகம் கற்பனை உலகமல்ல நாம் அறிந்திராத அறிய விரும்பாத அசட்டையாய் இருந்துவிட்ட உலகம்.

—-

sbalaram@ieccan.com

Series Navigation

சுமதி ரூபன்

சுமதி ரூபன்